நெனச்சது ஒண்ணு

This entry is part of 24 in the series 20100108_Issue

எஸ்ஸார்சி


நான் பணி செய்யும் அதே மைய அரசுத்துறை கணக்கு அலுவலகத்தில் சங்கர் என்பவன் ஒரு ஒப்பந்தத்தொழிலாளி. அரசு வேலைகள் எல்லாம் முக்கால் வாசிக்கு ஒப்பந்தம் என்கிற மாயாவியின் கட்டுப்பாட்டிற்கு வந்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. ஒரு அறுபது ரூபாயுக்கு பகல் முச்சூடும் வேலை.. இரவுப்பணி என்றாலோ ஒரு இரவு முழுவதும் அது..
மாநிலமோ மையமோ எந்த அரசுத்துறை ஆனால் தான் என்ன இப்படி ஒப்பந்தத்தொழிலாளர்களோ எண்ணிக்கையில் .ஆங்காங்கே லட்சம் லட்சமாய்.

தான் ஒப்பந்தத்தொழிலாளி எனில் அலுவலக வருகைப்பதிவேட்டில் கையெழுத்துப்போட வேண்டாம். அந்த வருகைப்பதிவேட்டில் அவன் பெயர் எழுதப்பட்டிருந்தால்தானே அதுவும். அவன் பெயர் யாருக்கும் தெரிந்து என்ன ஆக இருக்கிறது. ஒரு ஒப்பந்தத்தொழிலாளிக்கு அரை வயிற்றுக்குச்சோறுண்டு. எத்தனை ஆண்டுகள் அங்கே அவன் பணி முடித்திருந்தால் யாருக்குத்தான் என்ன.

கை வழிய வழிய சம்பளம் பெறும் ஜீவன ரேகை பட்டையாய் நீட்டமாய் உள்ள ஊழியர்கள் கொண்ட தொழிற்சங்கங்களுக்கு அப்பப்போது நடக்கும் பொதுக்குழு செயற்குழு மாநாடு இத்யாதி பிரம்மோற்சவ வைபோகங்களுக்கு எடு பிடிவேலைகட்கு எங்கே போய் அவர்கள் ஆள் தேடிப் பிடிப்பது. இடுக்கில் அவ்வப்போது தொழிற் சங்கங்களுக்கு நல்லபடி ரொக்கமாய் வசூலித்து இருப்பு ஆரோக்கியத்திற்கும் அவர்களே ஆதாரம்.

சரி விஷயத்துக்கு வருவோம் என் அலுவலகத்து ஒப்பந்தத்தொழிலாளி சங்கருக்கு குருபகவானின் பலம் நெருங்கிப்போனதால் இல்லை நெருங்கி வந்ததால் திருமணமும் கைகூடியது. ஒரு பெண்குழந்தைக்கும் அந்த சங்கர் தந்தை ஆனான். எப்படி இவன் துணிந்து திருமணம் செய்து கொண்டான் என்று எனக்குக் கொஞ்சம் அடிமனத்தில் அச்சம்.
இவன் பெறும் இந்த சொல்ப வருமானத்துக்கு குடும்பம் நடத்துவது எல்லாம் ஆகிற காரியமா என்கிற. . யோசனைகள் அலை அலையாய் வருவதுண்டு.
நமக்கு என்றே அவதாரம் எடுத்து வரும் அன்றாட பிரச்சனைகள் நம்மைச்சூழ்ந்து கொண்டு விட்டேனேபார் உன்னை என்று கங்கணம் கட்டி நிற்கும் போது அடுத்தனைப்பற்றியெல்லாம் இப்போது நல்லபடியாய்ச் சிந்திக்க நேரம் இருப்பதில்லை. யதார்த்தத்தில் அது வாழும் ஒரு அறமாகக்கூட ஆகிப்போனதுண்மை.

‘ நானு குடி இருக்கிற வாடக வூட்டுல ஒரே ஒரு சீலிங் •பேன் இருக்கு சாரு. அது சுத்தும் ஆனா காத்து மட்டும் வராது. என் கைக்குழந்த ரொம்ப செருமப்படுது ராவுல குழந்த தூங்கவே மாட்டேங்குது கொசு தொல்ல தாங்கவே முடியல. ஒரு டேபுல் •பேன் இருந்தா கொஞ்சம் நல்லாதான் இருக்கும் ஆனா ஒண்ணும் செய்யமுடியலே’
சொல்லிக்கொண்டிருந்தான் சங்கர்

எனக்கு யோசனை வந்தது. என் வீட்டு சாமி ரூம் பரணை மேல் டேபில் •பேன் ஒன்று உறங்கிக்கொண்டிருந்தது என் திருமணத்திற்கு முன்பாய் நானே திருமுதுகுன்றத்து மும்தாஜ் எலக்ட்ரிகல் என்கிற பேர்கொண்ட பாய் கடையில் தவணைமுறையில் வாங்கியது. ஒரு இருபத்தைந்து ஆண்டுகள் ஒடி ஒடி முடித்து இன்று அதன் தேவைகூட அருகிப்போனது.
இப்போதைக்கு எனக்கு அரசு க்குடியிருப்பு என்பதால் மேல் கூரையில் சீலிங் •பேன்கள் நான்குக்கு தொங்கிய வண்ணம் இருந்தன ஆக சாமி ரூம் பரணை மேலே பள்ளி கொண்டிருந்த அந்தப் பழைய டேபில் •பேனை இந்த சங்கருக்கு கொடுத்துவிட்டால் என்ன அந்தப்பரணை மேலே தனியாய்க் கிடந்து அதுவும் மக்கித்தானே போகிறது யோசித்தேன்.

‘தம்பி சங்கரு என் வீட்டுல ஒரு •பேன் உசக்க கெடக்கு தாரேன் நீ வச்சிக’
‘நெசமாவா சாரு’ சங்கர் ஆச்சரியமாய்க்கேட்டான்.
‘ இதுல என்னசெத்த நெசம் பொய்’
‘ நான் வந்து பேனை எடுத்தும்போறேன் சாரு’ சங்கர் கூறிமுடித்தான்.

அன்றைக்கு மாலை அலுவலகம் முடிந்து சங்கர் என் வீட்டுக்கு வந்தான். தன் முன் சக்கர மட்கார்டு இல்லா மிதிவண்டி யோடுதான் வந்தான். சாமி ரூமில் பரணை மேல் பள்ளிகொண்ட அந்த வாயு பகவானை சங்கருக்குக்காட்டினேன். அதனைமெதுவாய்க் கீழே இறக்கிவைத்துத் தூசுதட்டி துடைத்து ஒட விட்டுப்பார்த்தான்.
அது அழகாய் ஒடி தான் இன்னும் ஜீவித்திருப்பதைக்காட்டியது. என்னைப்பார்த்து சங்கர் ஒரு முறை சன்னமாய் ப் புன்னகை செய்தான்.
‘ ரொம்ப நன்றி சார்’ என்றான். உடன் மிதிவண்டியின் காரியரில் அதனை அமர வைத்து ஒரு சணல் கயிற்றால் இருக்கினான். சமர்த்தாய் அமர்ந்திருந்த டேபில் •பேன் என்னைப்பார்த்துக்கொண்டே இருந்தது. அது ஒன்றும் என்னோடு பேசிவிட இல்லைதான். சங்கரின் மிதிவண்டி அந்த டேபில் •பேனோடு உருண்டு போனது.
மறுநாள் காலை எப்போதும் போல்தான் அன்றும் விடிந்தது. வழக்கம் போலவே நானும் என் அலுவலகம் சென்றேன்.
அலுவலகத்தில் சங்கருக்குப்பதிலாக இன்னொருவன் வாயிலில் நின்றுகொண்டிருந்தான். இது எப்படி யோசித்தேன்.
‘ ஏன் சங்கரு இண்ணைக்கு வல்லயா’ கேள்வி வைத்தேன்.
‘ இல்ல சாரு அவன் இனிமேலுக்கு இங்க வரமாட்டன் டிஜி எம் அய்யா அவனை வேலய வுட்டு நிப்பாட்டீட்டாரு அதுக்கு ப்பதிலாத்தான் நானு வந்திருக்கேன்’
‘ என்னப்பா இது புது சேதி அவன் குடும்பம் என்னா ஆவுறது இப்படி வேலய விட்டு சட்டுபுட்டுன்னு ஒத்தனை நிப்பாட்டிட்டா எப்படி ஆவுறது’
‘ அவன் இந்த ஆபிசுலேந்து ஒரு டேபில் •பேன் திருடிட்டுப்போனதா டி ஜி எம் ஆபிசுல அங்க அங்க எல்லாரும் பேசிக்கிட்டாங்க சாரு’ சின்னக்கதை சொன்னான்.
‘ என்ன டேபில் •பேனை திருடினானா. நான்தான் நேற்று என் பழைய டேபில் •பேனை நம்ம வீட்டுல சும்மாதானே பரணை மேல கெடக்கு, அதை வச்சிகட்டுமேன்னு என் வீட்டுக்கு அழைத்து அவனுக்குக்கொடுத்தேன்’
‘எப்ப சாரு’
‘ நேற்றுதான் கொடுத்தேன்’
‘ ஆனா அவன் அதைத்திருடிம்போனதால்ல சாரு பேசிக்குறாங்க’
எனக்கு துக்கம் துக்கமாய் வந்தது. நாம் ஒருவனுக்கு சின்னதொரு ஒத்தாசை செய்யப்போய் இப்படி விபரீதமாய் அது முடியுமா என்ன’ யோசனையில் மூழ்கித்தவித்தேன்.

அலுவலகத்தொலைப்பெசி அலறி அடித்து என்னை அழைத்தது
டெலிபோன் ரிசீவரைக்கையில் எடுத்தேன்.
‘ வணக்கம் கணக்குப்பிரிவு’ என்றேன்.
‘ நான் டிஜி எம் பேசுறேன், உங்க செக்ஷன் காண்ட்ராக்ட் வேலைக்குப்புதுசா ஒரு பையன் வந்திருக்கானா’.
‘ ஆமாம் சார்’
‘ இனி சங்கர் வரமாட்டான் அவனை வேலையிலிருந்து நிறுத்தியாச்சி.. இப்ப நான் உங்களுக்கு அனுப்பி இருக்கிறது வேற ஒரு நல்ல பையன். பாத்துகுங்க’
‘ அப்ப சங்கரு’
‘ அவன் எதுக்கு. நேற்றிக்கு சாயந்திரம் நம்ம ஆபிசல் இருந்த ஒரு டேபில் •பேனை சைக்கிள்ள வச்சி தன் வீட்டுக்குத்தள்ளிகிட்டுப்போனதா எனக்கு சேதி கெடச்சது. அப்புறம் என்ன செய்ய.’
‘ சார் நான்தான் சங்கருக்கு அந்த •பேனை’
‘ சும்மா சமாளிக்காதீரு தெரிதா எதுக்கும் ஒரு அளவு இருக்கணும் எனக்கு ஒண்ணும் இப்ப நீரு புதுசா சோடிச்சி சொல்ல வேண்டாம். அந்த அந்த சேதி அப்ப அப்ப எனக்கு வந்துகிட்டுத்தானே இருக்கு’
‘ இல்ல சார் ‘
‘ பேச்ச சுருக்கிக்கணும் யாருகிட்ட எவருகிட்டப்பேசுறம் ஒரு. யோசனை வேணும் உம்ம நல்லதுக்குத்தான் இப்ப உமக்கு ஆளை மாற்றிப் போட்டு இருக்கு நல்லவிதமாய் நீரு ரிடையர் ஆவுணும் உமக்கு அந்த நெனப்பு இருக்கட்டும். நீரு வையும் போனை’
தொலைபேசியை அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டு அப்படியே இருக்கையில் ஒய்ந்துபோய் அமர்ந்திருந்தேன்.
காலண்டரில் அழகாய் அச்சிடப்பட்டிருந்து தொங்கிய அந்த வாசகத்தையே அப்படியே வெறித்துப்பார்த்துக்கொன்டிருந்தேன்.
‘ எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ ஒருமுறை ஔங்கிப் படித்துக்கொண்டேன். மனம் ரணமாகிக் கூடுதலாகவே வலித்தது.
‘ இன்னும் உங்க •பேனை போட்டுக்காம அப்படியே சும்மா இருந்திங்கன்னா எப்படி சாரு’ புதியதாய் வந்தவன் என் பேன் சுவிட்சை க்கண்டுபித்து தட்டிவிட்டான்.
‘ உம் பேரு என்னப்பா’ புதியதாய் வந்த அவனைக்கேட்டேன்
‘ எம் பேரும் சங்கர் தான் சாரு’ அவன் எனக்கு எவ்வளவு அழகாகப் பதில் சொல்கிறான்.
————————————————————————————

Series Navigation