கே.பாலமுருகன்
மாணிக்கம் மாமா நேற்றிரவு சீனர்கள் சாப்பிட்டு மிச்சமிருந்த உணவுகளைத் தட்டிலிருந்து சேகரித்து சாக்கடையில் ஊற்றும்போதுதான் கடவுள் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சாலையோர மரங்கள் அசையவில்லை. ஓர் இலையைக்கூட சாங்கியத்திற்க்கும் உதிர்க்கவில்லை. பெரிய சைக்கிள் தாத்தா பிட்டத்தைச் சொறிந்து கொண்டே சைக்கிளிலிருந்து இறங்குகிறார். அவர் குனியும் கணத்தில் கடவுளின் சைக்கிள் அவரைக் கடந்துவிடுகிறது. பெரிய சைக்கிள் தாத்தா அதைக் கவனிக்கத் தவறுகிறார். நெற்றியிலிருந்த அகலமான குங்குமப் பொட்டை சரிப் பார்த்துக் கொண்டு மீண்டும் சைக்கிளில் ஏறி அமர்கிறார்.
முற்சந்தியில் இருக்கும் பழைய சைக்கிள் கடையோரமாகக் கடவுள் சைக்கிளுடன் காணாமல் போகிற கணம்தான் முக்கியமானது. அவ்வளவு நுட்பமாக யாரும் காணாமல் போனதில்லை. மாணிக்கம் மாமா பெரிய சைக்கிள் தாத்தா அந்தச் சைக்கிள் கடையில் அமர்ந்திருக்கும் சைக்கிள்காரர்கள் எல்லோரையும் ஏமாற்றிவிட்டு கடவுள் மறைகிறார். ஆச்சர்யம்.
“டே சிவா! டே! இப்பெ எப்படி இருக்கு? இந்தா தண்ணீ குடி”
முதலாளி போட்ட சத்தத்தில் அனேகமாக நான் மயக்கத்திலிருந்து தெளிவடைந்து எழுந்திருந்திருக்கக்கக்கூடும். சைக்கிள் கடையின் வலது புறத்தில் சாய்ந்து கிடக்கும் தோம்பின் மீதுதான் படுத்துக் கிடந்தேன். பக்கத்தில் சைக்கிள் டியுப் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.
“என்னாடா எப்படி இருக்கு இப்பெ? ஏதாச்சம் சப்டுரியா? நேரா நேரத்துக்குச் சாப்டறது இல்ல, அதான்”
எப்பொழுது அது நடந்திருக்க வேண்டும்? கடந்த வருடத்தின் முடிவில் நடந்த நிகழ்வு போல ரொம்பவும் விலகியிருந்தேன். சீனக் கிழவன் வந்து போட்ட சைக்கிளின் சக்கரத்தை மாற்றிக் கொண்டிருக்கும்போதுதான் அந்தப் பிசகல் மனநிலை எழுந்து, சைக்கிள் இரண்டாகத் தெரிய அப்படியே சாய்ந்தேன். அந்தச் சீனக் கிழவனின் சைக்கிள் அதே கோலத்தில் அங்கேயே இருந்தது.
“போய் அங்க இருக்கெ அந்தக் கடையிலெ நாசி லெமா சாப்ட்டுடு வாடா. . . அந்த சைக்கிளெ அப்படியெ போட்டு வச்சிருக்கென், வந்து டயரெ மாத்திரு”
முதலாளி கடையின் இருண்ட பகுதியிலிருந்து எதையோ தேடிக் கொண்டே மெதுவாகக் கத்தினார். உடலில் சோம்பல் தட்டியிருந்தது. எழுந்து நிமிர்ந்து பார்த்தேன். தலைச் சுற்றல் இன்னமும் இருந்தது. சைக்கிளில் வைத்திருந்த தண்ணீர் புட்டியை எடுத்து நீர் அருந்தினேன். மயக்கம் தலைக்கு மேல் அலைந்து கொண்டிருந்தது. மெதுவாக நடந்து சாலையைக் கடந்து போய் அப்போய் கடையில் மீ சூப் ஓடர் செய்து சாப்பிட்டேன். மீ சூப் எப்பொழுதாவது கிடைக்கக்கூடிய அதிர்ஷ்ட உணவு. இந்த மாதிரி மயக்கம் அடிக்கடி நிகழ்ந்திருந்தால் மீ சூப் கிடைப்பது எளிதாயிருக்கும். முதலாளி எனக்குப் பசி மயக்கம் ஏற்படும் போதெல்லாம் சம்பளப் பணத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படாத சாப்பாட்டுகென்று தனியாகப் பணம் தருவதுண்டு.
கடையில் அமர்ந்து கொண்டே மாணிக்கம் மாமா வேலைச் செய்யும் கடையைப் பார்த்தேன். மாமா கடையின் சாக்கடையோரமாக அமர்ந்து கொண்டு சாப்பாட்டுத் தட்டுகளைக் கழுவிக் கொண்டிருந்தார். அவருக்கருகில் சாப்பாட்டு மிச்சங்கள் நிறைந்திருக்கும். அவைகளைக் கறுப்பு பைகளில் கட்டிப் பெரிய குப்பைத் தொட்டியில் வீசும் போது அப்படியே கடை பக்கமாக வந்து ஒரிரு வார்த்தைகள் பேசிவிட்டுப் போவார். அப்படி அறிமுகமாகி மாமாவானவர்தான் அவர்.
மாணிக்கம் மாமாவின் சைக்கிள் அற்புதமானது என்றே சொல்லலாம். அதன் தோற்றம் விசித்திரமாக இருக்கும். சக்கரங்களில் முன் சக்கரம் சிறியதாகவும் பின் சக்கரம் அதைவிட உயரமானதாகவும் இருப்பதால், மாமா சைக்கிளில் வரும்போது மண்ணைக் கவ்வப்போகும் பாணியிலேயே தெரிவார். எல்லோரும் கேலியாகப் பார்த்துப் பழகியும் இப்பொழுதும் மாமா சைக்கிளில் வரும்போது நகைச்சுவையாகத்தான் தென்படும்.
“மாணிக்கம் மண்ணெ கவ்வப் போறான் பாரு என்னிக்காவது. . .”
“இந்த மாதிரி சைக்கிள நான் பார்த்ததெ இல்லடா”
முதலாளி பலவகையான சைக்கிள்களைப் பார்த்தவர். அவர்கூட மாமாவின் சைக்கிளின் வெளித்தோற்றத்தின் அதிசியங்களை எப்பொழுது பார்த்தாலும் அலட்டிக் கொள்ளாமல் விடமாட்டார். சைக்கிளில் மணி வழக்கமாக முன்புறத்தில் கைக்கு எட்டும் நெருக்கத்தில் இருக்கும். அப்பொழுதுதான் ஆபத்து அவசரத்தில் பயன்படுத்த எளிதாகும். மாணிக்கம் மாமாவின் சைக்கிளில் மணி சீட்டின் கீழே இருக்கும். ஆபத்து அவசரத்தில் யாராவது எதிர்புறமாக வந்துவிட்டால் மாமா பிட்டத்தில் கையை விட்டு துழாவது போல செய்வார்.
“என்னாடா இது கூத்து? மணியெ எவனாது அங்க கொண்டு வைப்பானா? என்னாடா இவன்”
மாமா எதார்த்தமாகப் பிட்டத்தைச் சொறிந்தாலும்கூட மணி அடிக்கப் போகிறார் என்றுதான் நினைக்கத் தோன்றும். எதற்காக இந்தச் சிரமம்? எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் நிகழ்த்திக் கொள்வதற்கு மாமாவிற்கு விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம் போல.
கடையிலிருந்து எழுந்து முதலாளி கண்களில் படாதவாறு மாமாவின் கடைப்பக்கமாக நடந்தேன். முதலாளி பார்த்துவிட்டால் அங்கிருந்துகொண்டே வேகமாகக் கத்தித் தொலைவார். கடையிலிருக்கும் முழுநேரத்திலும் அவர் பிறர் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. சைக்கிள் சத்தத்தில் தன்னை அமிழ்த்திக் கொண்டவர், சைக்கிள் மட்டும்தான் கதி.
“வாயா! எப்படி இருக்கெ? என்னா கடையிலெ இல்லாமெ இங்க இருக்கெ?”
மாமா முகத்தில் வெயில் பட்டு மின்னியது. சாக்லேட் வர்ணத்தில் ஒரு சிலுவார் அணிந்திருந்தார். அப்பா அடிக்கடி போடும் சிலுவார் போலவே இருந்தது. அப்பாவின் ஞாபகம் மனதில் கணத்தது. அப்பா இருந்திருந்தால் இப்படி இருந்திருக்க அவசியமில்லைதான்.
“மயக்கம்ணே! நேத்து மதியம் சாப்ட்டது! அதான்”
“என்னாப்பா இது? சொல்லிருக்க வேண்டியதுதானே, இங்கதான் சாப்பாடு மிச்சம் கெடக்குமே, என்னப்பா நீ? இப்படியா இருக்கறது, வளர்றெ பையன்”
மாமா நீல நிற வாளியிலிருந்து தட்டுகளை எடுத்து அலசி வேறொரு வாளியில் மாற்றிக் கொண்டிருந்தார். அவர் அந்தக் கண்ணாடி தட்டுகளைக் கையாளும்போது அது நழுவி கீழே விழுவது போல பார்ப்பவருக்குத் தெரிந்தாலும் அது மாமாவின் கண்கட்டி வித்தைதான். என்னைப் பார்த்துப் பேசிக் கொண்டே அவருடைய கைகள் நடத்தும் லீலையே தனித்துவமானவை. அவ்வளவு நேர்த்தியாகத் தட்டுக¨ளை இடம் மாற்றி கை மாற்றி தண்ணீரிலிருந்து காலி வாளிக்குத் தவறும்வரை எல்லாமும் பெரிய பக்குவம்தான்.
“ஒங்கப்பன் உனக்கு வச்சிட்டுப் போனது ஒரு சைக்கிள் மட்டும்தான்! பாவம் நீ என்னா பண்ணுவெ! சாப்டறியா?”
“இல்ல மாமா, இப்பத்தான் சாப்ட்டேன், முதலாளி காசு கொடுத்தாரு”
“அவன் நல்ல மனுசன்யா, பாக்க யாரையும் கவனிக்காத ஆளு மாதிரி தெரியும், ஆனா தங்கமான மனுசன். .”
மோட்டாரிலிருந்து ஒருவன் இறங்கி எங்களை நோக்கி வேகமாக வந்தான். மாமாவைப் பார்ப்பதற்காகத்தான் இருக்கும். மாமா அலட்டிக்கொள்ளவில்லை. தண்ணீர் இருந்த வாளியைக் கவிழ்த்து உதறினார். அழுக்குத் தண்ணீர் உருண்டோடி சாக்கடையில் வழியத் தொடங்கியது.
“என்னா மாணிக்கம்! ஏதோ வித்தெ காட்டிகிட்டு இருக்கியாம்? என்னா ஒன்னும் முடியலயா?”
மாமா தலையை எக்கி அவனைப் பார்த்தார். தலைக் கவசம் அணிந்திருந்தான். முரட்டுத் தேகம். வட்டமான முகம். வெயிலில் அவனைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.
“யாருப்பா நீ? என்னா?”
“என்னா தேவி அக்காகிட்ட ஏதோ வெளையாட்டுக் காட்டுறியாம், உனக்கு எதுக்கு அங்க வேல? இனிமே அங்க வர வேல வேணாம், நல்லதுக்கு இல்லெ”
அங்கிருந்து நழுவி வரும் போது மாமா ஏதோ விளக்கம் கொடுப்பது போன்ற தொனி ஒலித்துக் கொண்டிருந்தது.
“மனுசாளுங்ககூட பழககூடாதுனு சொல்ல நீங்க யாரு?” பிறகு ஒலி மங்கிய கணம் நான் தூரமாக வந்துவிட்டிருந்தேன். எப்பொழுதும் இப்படித்தான். நானாக இருந்தாலும் சரி மாமாவாக இருந்தாலும் சரி ஒருவரை ஒருவர் சடங்கு முறையில் நட்பு பாராட்டிக் கொள்ளாமல்தான் அடுத்த கட்டத்திற்கு அகன்று கொள்வோம். அவரும் சிலசமயங்களில் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே திடீரென்று கடையினுள்ளே போய்விடுவார். அவர் பேசியும் முடித்திருக்க மாட்டார். சொற்களை பாதி தனக்குள்ளே விழுங்கிக் கொண்டு மறைந்துவிடுவார். என்ன மனிதர் இவர்? இவரும் அவருடைய சைக்கிள் போலத்தான். விசித்திரமான உளவாகு.
முதலாளி இந்நேரம் சாப்பாட்டுக் கடையில் எனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மூன்றுமுறையாவது என்னைத் தேடியிருப்பார். சீனச் செலவுக் கடையின் ஓரமாகவே போய் கடைக்கு முன் இருக்கும் முச்சந்தி மரத்திலிருந்து கடைக்குள் நுழைந்துவிட்டால், முதலாளி ஏதும் சொல்லமாட்டார். மரத்திற்கு அருகில் போடப்பட்டிருக்கும் சைக்கிள்கள் பழமையான தோற்றம் கொண்டவைகள். யாருமே வாங்காமல் அப்படியே கிடக்கின்றன. தினமும் கடையைத் திறந்துவிட்டப் பிறகு முதலாளி சாமி படத்திற்கு ஊதிபத்திக் கொளுத்தி வைக்கும் தினசரி கடமைக்கு நிகராகவே அந்தச் சைக்கிள்களை உள்ளிருந்து தூக்கிக் கொண்டு வந்து மரத்தின் ஓரமாக நிற்க வைப்பார். அவைகள் வரிசையாக ஒன்றின் மேல் ஒன்று சாய்ந்து கொண்டு நெருங்கிய நண்பர்கள் போல நாள் முழுக்க முச்சந்தியை வெறித்துக் கொண்டிருக்கும்.
மதியத்தில் அந்த சைக்கிள்களின் முகத்தின் மரத்தின் நிழல் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடியும். மரத்தின் பாதி உருவம் அதன் மீது சரிந்திருக்கும். ஓய்வான நேரத்தில் அந்தச் சைக்கிள்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு மணி அடித்து விளையாடிக் கொண்டிருப்பேன். சில மணி எவ்வளவு முயன்றும் அசையாமல் இறுக மூடியிருக்கும். மழைக் காலங்களில் முதலாளி சைக்கிள்களை மீண்டும் உள்ளே தூக்கிக் கொண்டு போய் வைக்கும் போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். குறைந்தது மழை நேரத்திலேயாவது அதற்கு கூடாரமும் நிரந்திர நிழலும் கிடைக்கிறது என்று.
“என்னாடா இப்ப ஓகேவா வயிறு?”
முதலாளியின் வயிறு உப்பிக் கொண்டு வெளியே தள்ளியிருக்கும். அவர் அணிந்திருக்கும் சிலுவார் இடுப்பைக் கடந்து இலேசாக விலகி நிற்கும். அதை அவ்வப்போது எடுத்து மேலே போட்டுக் கொண்டுதான் பேசுவார்.
“பரவாலே சாரு! சீனன் சைக்கிளெ மாத்திடுறேன்?”
“சைக்கிளெ மாத்திப் புடாதடா, சீனன் ஒதைப்பான். டயரெ மாத்து! அங்க எடுத்து வச்சிறுக்கேன் பாரு”
தோம்பின் மீது மயக்க நிலையில் தள்ளாடிய காட்சிகளுடன் அமர்ந்திருந்த போதுதான் அந்தச் சீனன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தான். அவன் மனைவியுடைய சைக்கிள். முன்புறத்திலுள்ள வக்கிளும் சைக்கிளின் வடிவமைப்பும் சீனக் கிழவிகள் கம்பங்களில் பயன்படுத்தக்கூடிய சைக்கிளின் வடிவமைப்பை ஒத்திருக்கும். சைக்கிளின் கை பிடிகள் 45 டிகிரியில் வலைந்து கொண்டிருக்க, சைக்கிளின் உடல் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு சோகமாகப் பார்ப்பதைப் போன்ற வடிவமைப்பில் காட்சியளிக்கும். அது என்னவோ தள்ளாமையின் அடையாளமாகத்தான் தெரிகிறது. அதனால்தான் சீனக் கிழவிகள் அதைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் முதலாளி சொல்லியிருக்கிறார் இது போன்ற சைக்கிள்கள் 20 வருடங்களுக்கு முன்பே வெளிவருவது நின்றுவிட்டது என்றும் சீனக் கம்பங்களில் மட்டும்தான் அது இருக்கிறது என்றும்.
ஒரு தடவை ‘எருமைபாதை’ சீனக் கம்பத்திற்குப் போயிருந்தபோது, நிறைய சீனக் கிழவிகள் சைக்கிள்களைப் பார்த்திருக்கிறேன். வீட்டின் உள்புறத்திலும், வீட்டு வாசல் கதவின் அருகாமையிலும் என்று எங்கேயும் அந்தச் சைக்கிள்கள்தான். சில வீடுகளில் அது சக்கரம் இழந்து தரையைக் கவ்வி சாய்ந்திருப்பதையும் பார்த்தேன். மாணிக்கம் மாமாவின் சைக்கிளின் வடிவத்தைத் திருப்பிப் போட்டால் ஒருவேளை சீனக் கிழவிகளின் சைக்கிளின் வடிவம் கிடைக்கும் போல. அப்படியொரு முரண்பாடு.
“டயரு மாத்திட்டியா? எத்தன மணிக்கு வரேனு சொன்னான்?”
“தெரில சாரு! வந்துருவான். மாத்திட்டேன். இப்படி ஓரமா வைக்கிறேன்”
சீனனுடைய சைக்கிளை மரத்தின் ஓரமாகச் சாய்த்து வைத்தபோது, அது தலை அசைத்து சிரித்தது. அதன் முகம் அப்படித்தான் இருக்கும். சினக் கிழவிகள் முதுகு தண்டு வலைந்து கண்கள் சரிந்து பார்வை மங்கியும், எழுந்து வருமே அந்தத் தள்ளாமையைப் புறக்கணிக்க முயலும் ஒரு சிரிப்பு? அந்தச் சிரிப்பை இந்தச் சைக்கிளின் முகத்தில் பார்த்தேன். எனக்கு மட்டும் புலப்படும் சிரிப்பாகக்கூட இருந்திருக்கலாம். மௌனமாக இலேசான புன்னகையுடன் அதன் தலையைச் சரிப்படுத்தி வைக்கும்போது சீனக் கிழவன் வந்துவிட்டிருந்தான். வெயிலில் நடந்து அவன் முகம் கருவடைந்திருந்தது. தற்பொழுதுதான் முன்புறச் சாலையில் வாழ்வையும் பொழுதுகளையும் தொலைத்தவன் போல வந்து நின்றான். சுய இயல்பின் கசிவில் ஏதோ கனவு தேசத்து கார்ட்டூன் போல அவன் உடல் காற்றில் தள்ளாடியது.
“டே! சீனன் வந்துட்டான் பாரு. சைக்கிளெ எடுத்துக் கொடு, 10 ரிங்கிட் அப்பே”
முதலாளியின் சத்தத்தின் உச்சத்தில் அவன் உடல் அதிர்ந்திருக்கும் போல. அந்த அளவிற்கு மெலிதாகிப் போயிருந்தான். சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் வெளியேறிய பாணியே தனிதான். உடனே சைக்கிளின் சீட்டில் ஏறி அமர்ந்து கொள்ளாமல் சைக்கிளை கொஞ்சம் தூரம் உருட்டிக் கொண்டே போய் சைக்கிள் முன்னகர டமாரென்று அவன் ஏறும் போதுதான் அவனது உடலில் உற்சாகம் கிளர்ந்து வருவதைப் பார்த்தேன். இதுவரை இல்லாத அந்தத் துடிப்பு ஒருவேளை இவ்வளவு நாளாக அந்தச் சைக்கிள்தான் அவனுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றுகூட நினைத்துப் பார்த்தேன். அந்தச் சீனக் கிழவி சைக்கிள் விட்டுச் சென்ற இடைவெளியை மற்றுமொரு சைக்கிள் நிரப்பியிருந்தது. எப்பொழுதும் சைக்கிளுக்குப் பஞ்சம் இருந்ததில்லைதான்.
மாலை நெருங்கியதும் முதலாளி எப்பொழுது சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு “டேய் கடையெ சாத்து” என்று சொல்வார் என்று காத்திருந்தேன். பெரிய சைக்கிள் தாத்தா வேலை முடிந்து கடையைக் கடந்த அடுத்த 10-15 நிமிடங்களிலேயே முதலாளி கடையைச் சாத்த ஆய்த்தம் கொள்வார். இது என்ன உடன்படிக்கை பெரிய சைக்கிள் தாத்தாவுடன்? பெரிய சைக்கிள் தாத்தா ஏற்கனவே உயரமானவர். அவருடைய அந்தப் பெரிய சைக்கிளும் அந்தக் காலத்தில் தோட்டத்தில் இருந்தபோது வாங்கியது. உயரமாக இருக்கும். அதில் அவர் ஏறிக் கொண்டு உயரமான ஆழமரம் போல எங்களைக் கடந்து செல்வார். அவருடைய கைகள் வேர்கள் போல அடர்த்தியாக தடிப்பாக உடலில் தொங்கிக் கொண்டிருக்கும். சைக்கிளை மிதித்துக் கொண்டே இரு கைகளையும் தொங்கவிட்டுக் கொண்டு மிக அலட்சியமாக சாகசப் பாணியில் போவார். பெரிய சைக்கிள் தாத்தாவையும் அவரின் உயரமான சைக்கிளையும் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். இருவருக்குமே வயதாகவில்லை. சைக்கிளை எப்படியாவது சரிக்கட்டி இன்னமும் ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கென்று யாருமே இல்லை. இருந்த கடைசி மகனும் நகரத்திற்கு ஓடிவிட்டான்.
பெரிய சைக்கிள் தாத்தா பிட்டத்தைச் சொரிந்து கொண்டே கடையை நெருங்குவதைப் பார்த்தேன். ஆழமரம் இடம்பெயர்ந்து சைக்கிள் ஏறி வந்து கொண்டிருந்தது. அதன் கைகளில் தொங்கிக் கொண்டு சைக்கிள் பயணம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. தாத்தா கடையை நெருங்கியதும் என்னைப் பார்த்து சிரித்தார். அவருடைய முகமும் அந்தச் சீனக் கிழவனின் முகம் போலத்தான் வாடியிருந்தது. இருந்தாலும் அவர் சைக்கிளை மிதிக்கும் உற்சாகமும் ஆர்வமும் அவரை வேறுப்படுத்திக் காட்டியது.
சிறிது நேரத்திற்குப் பிறகு முதலாளி கடையின் இருளுக்குள்ளிருந்து வெளியேறி சாய்வு நாற்காலியில் வழக்கம் போல சாய்ந்தார்.
“டே தம்பி! உன் சைக்கிளு சங்கிலி ஏதோ பிரச்சனெ பண்ணுதுனு சொன்னெ, மாத்திட்டியா?”
அப்பொழுதுதான் என் சைக்கிளைப் பற்றிய பிரக்ஞை ஏற்பட்டது. தோம்புக்குப் பின்புறத்தில் சைக்கிளைச் சாய்த்து வைத்திருந்தேன். அது கீழே விலகி சரிந்திருந்தது. எட்டிப் பார்க்கும்போது அப்பா சாய்ந்து படுத்துக் கிடப்பது போல திடீர் பிரமை. சுதாரித்துக் கொண்டு சைக்கிளைத் தூக்கி நிறுத்தினேன்.
“இல்லண்ணே இப்பெ பரவாலே. கட்டிப் பாத்தேன், ஓகே ஆச்சி!”
“யேண்டா? ஒரேடியா மாத்திர வேண்டியதுதானே புதுசா?”
“இல்லண்ணே பரவாலே, ஏதாச்சம் பழைய சங்கிலி இருந்துச்சினா எடுத்து மாத்திப் பாக்கறேன்”
“என்னாடா நீ? காசுக்கு யேன் பாக்கறெ? சும்மா எடுத்துப் போட்டுக்கெ புதுசா”
கடையைச் சாத்திவிட்டு சைக்கிளைத் தள்ளிக் கொண்டே வீட்டிற்குக் கிளம்பினேன். கடையவிட்டு வெகுதூரம் வந்தும் சைக்கிளில் ஏறி அமர மனமில்லாமல் இருந்தது. அப்பா கூடவே நடந்து வருவது போல இருந்தது. அப்பா விட்டுச் என்ற இடைவெளியும் நெருக்கமும் எல்லாமும் இந்தச் சைக்கிள் மட்டும்தான் என்று தோன்றுகிறது. அதன் முனகல் ஒலிக்கும் போதெல்லாம் மனம் மேலெழும்பி ஓர் இருண்மையில் படிந்து கொள்கிறது. அப்பா என்னைக் கவனித்துக் கொண்டு என்னுடனே இருக்கிறார். உருண்டு வருகிறார், சாய்ந்து கிடக்கிறார்.
முடிவு
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
(நன்றி: வார்த்தை 2008)
bala_barathi@hotmail.com
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -37 << வறுமையும் சொத்தும் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனித விதிக்கூண்டில் சிறை >> கவிதை -9
- ஈசா விண்வெளியில் ஏவிய ஹெர்செல்-பிளாங்க் பூதத் தொலைநோக்கிகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -3
- மே 2009 வார்த்தை இதழில்…
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 1
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 2
- கடவுளிடம் இருந்த கடைசி சைக்கிள்
- திரு நாகூர் ரூமி என்கின்ற பேராசிரியர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி அவர்களுக்கு
- கலைவாணர் நூற்றாண்டு விழா/புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா
- தமிழ் வகுப்பு ஐந்தாம் ஆண்டு விழா
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
- சங்கச் சுரங்கம் — 15: ஆறடி ஆறுமுகன்
- இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்”
- நிதர்சனம் நாளை!கனவுகள் பொசுங்கிய உலகம்
- வேத வனம் -விருட்சம் 35
- ஏற்புடையதாய்…
- என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்
- புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள் !
- நினைவுகளின் தடத்தில் – (31)
- சைவம்
- பூ உதிர்ந்த ரோஜாச் செடி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – நான்காவது அத்தியாயம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தாறு