வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

தமிழ்மகன்



சொல்லப்போனால் நான்கு நாட்களும் அவர்களுக்கு ஒரு சிங்கமும் கிடைக்கவில்லை. “அசாமில் சிங்கம் இருப்பதாக யார் சொன்னார்கள்’ என்றான் ஆல்பர்ட். “ஆப்ரிக்காவைவிட்டால் குஜராத்தின் கிர் காடுகளில் சில எஞ்சியிருக்கின்றன. அசாமில் இருந்தவற்றை எப்போதோ வேட்டையாடி முடித்துவிட்டார்கள்’ என்றான். மற்ற மூவருக்கும் நப்பாசை.

கிழக்கு இமயமலை அடிவாரத்தின் அடர்த்திபற்றி கேட்டிருந்தாலும் பிரம்மபுத்ராவின் பேரிரைச்சலோடும் குளிரோடும் அதை அனுபவிக்கும்போது பிரமிப்பாகவும் அச்சுறுத்துவதாகவும் இருந்தது. துணைக்கு திஸ்பூரிலிருந்து இரண்டு பேர் வந்திருந்தார்கள். இவர்களின் காமிரா, சமையல் பாத்திரங்களை இறக்கி வைப்பதும் மீண்டும் ஏற்றுவதும் அவர்களின் வேலை. ஆங்கிலம் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. கிரிஸ்டியன் மிஷனரிகள் செய்த உருப்படியான வேலை. கீழ்படிதலுள்ள நம்பிக்கையான ஆசாமிகள். ஆனால் அதிகமாகப் புகையிலைப் பயன்படுத்தினார்கள். வந்த அன்று ஆல்பர்ட் அதை ஒரு இழு இழுத்துவிட்டு ஐந்து மணி நேரம் பிணம் போல கிடந்தான்.

கெய்தாச்சூ சோமாலியாவைச் சேர்ந்தவன். பிரெய்ன் மற்றும் வில்லியம் சிட்னியில் இருந்து வந்தவர்கள். ஆல்பர்ட்.. லண்டன். கெய்தாச்சுவுக்கு ஆப்ரிக்கக் காடுகளில் இருந்த பரிச்சயம் இங்கு பயன்படும் என்று நினைத்தது பயனளிக்கவில்லை. சமவெளி காடுகளுக்கும் மலைக்காடுகளுக்கும் அதிக வித்தியாசம் இருந்தது. எதிர்பார்த்ததைவிட அதிகக்குளிர். ஆற்றின் இரைச்சல் காட்டின் தீராத அடையாளம்போல எப்போதும் கேட்டுக் கொண்டிருந்தது. நம்பிக்கை இழந்தவனாகவும் குளிர் தாங்க முடியாதவனாகவும் வில்லியம் அடிக்கடி குடித்துக் கொண்டிருந்தான். ஜீப்பை நிறுத்திவிட்டு ஓர் உச்சிப் பகுதியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தபோது பைனாகுலரை ஆல்பர்ட்டிம் கொடுத்து அங்கே பார் என்றான். அந்த இடம் காய்ந்த புல் புதராக இருந்தது. அதன் மஞ்சள் நிற அசைவு சிங்கத்தை ஞாபகப்படுத்துவதாக இருந்தது. பைனாகுலரை எவ்வளவு சரிபடுத்திப் பார்த்தபோதும் அங்கு சிங்கம் இருப்பதற்கான அடையாளம் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் மேற்கொண்டு போனால் டாகுமென்ட்ரி எடுத்தது மாதிரிதான்.

பைனாகுலரில் பார்த்தபடி நாலாபக்கமும் சுழன்றான் ஆல்பர்ட். சற்றும் எதிர்பாராதவிதமாக அவன் கால் இடறினான். அது ஓர் அதள பாதாளம். சேற்றில் சறுக்கி மரக்கிளைகளில் சிக்கி, பாறைகளில் மோதி அவன் அந்தக் கானகத்தின் இருண்ட பகுதியில் குற்றுயிரும் குலையுயிருமாகத் தூக்கி வீசப்பட்டான். அதிகமாகக் குடித்திருந்ததாலும் நிறைய காயங்களினாலும் அவன் மூர்ச்சையாகிக் கிடந்தான். அவன் நான்கு நாட்களாக எதற்கு ஆசைப்பட்டானோ அது அவனுக்கு பத்தடி சமீபத்தில் இருந்தும் அவன் நினைவின்றிக் கிடந்தான். அவன் தூக்கி ஏறியப்பட்டது ஒரு சிங்கத்தின் குகை வாசலில். சிங்கமும் அவனுக்காகவே காத்திருந்தது போல தலையை லேசாக உயர்த்திப் பார்த்துவிட்டு அவனாக எழுந்திருக்கட்டும் என்று காத்திருந்தது.

இரவு முடிந்து பகல் பொழுது தன் கிரணங்களால் கானகத்தின் இருட்டுக்குள் நூலென நுழைந்தது. ஆல்பர்ட் முனகலோடு கண்களைத் திறந்தான். ஈரமான இடத்தில் அவன் உடல் நனைந்து பழுத்து நடுங்கிக் கொண்டிருந்தது. சற்று தள்ளி தன் கண்களைச்சற்றே திறந்து அவன் பக்கம் திரும்பியது சிங்கம். பதறிப்போய் எழுந்திருக்க நினைத்தான். அவனால் முடியவில்லை. காலிலோ, முதுகிலோ பயங்கரமான காயம் இருப்பதை உணர முடிந்தது. மார்பிலும்கூட வலித்தது. நிம்மதியாக கூவிக் கதறவேண்டும் என்று அவன் நினைத்தான். அந்த வலிக்கு அப்படி அழுதால்தான் ஆறுதலாக இருக்கும். எதிரில் இவ்வளவு பெரிய சிங்கம் உட்கார்ந்திருக்கும்போது அது எப்படிச் சாத்தியம்? நாம் மயக்கத்தில் இருந்தபோதே நம்மை இது சாப்பிட்டிருக்கலாமே என்று தோன்றியது. அப்படியே சிங்கத்தின் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது பெரிய கொட்டாவிவிட்டது. சாப்பிடத்தான் வாயைத் திறந்ததாக அஞ்சித் தரையில் சில அங்குலம் நகர்ந்தான் ஆல்பர்ட்.

சிங்கம் எழுந்து அவனை நோக்கி வந்தது. ஆறடி அகலம் இருக்கும் என்று தோன்றியது.
அருகில் வந்து “பார்த்து வரக்கூடாது?” என்றது.

பேசியது சிங்கம் தானா இல்லை பிரமையா, விழுந்த அதிர்ச்சியில் சித்தம் கலங்கிவிட்டதா என்று சந்தேகமாக நகர்ந்து குகைச்சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான்.

சிங்கம் உட்பக்கம் திரும்பி “இவருக்கு ஏதாவது சாப்பிடக் கொடு” என்றது. நிச்சயமாக பிரமையில்லை. சத்தியம். நிஜம். தெளிவாக ஆங்கிலம் பேசுகிறது சிங்கம். வாட்டிய நீர்வாத்து இறைச்சியை இழுத்து வந்து வைத்தது ஒரு பெண் சிங்கம். பெரிதும் சிறிதுமாக வேறு சில சிங்கங்கள் அங்கே இருப்பது அப்போதுதான் தெரிந்தது.

வாட்டிய இறைச்சி, கணவனுக்குக் கட்டுப்பட்ட பெண் சிங்கம், ஆங்கிலம் எல்லாமே தலைவெடிக்கும் புதுமையாக இருந்தது.

“உனக்கெப்படி ஆங்கிலம் தெரியும்?” என்றான் ஆல்பர்ட்.

“மனிதர்களின் பேராசையைப் புரிந்து கொள்ள எனக்கு வேறு வழி தெரியவில்லை. இந்தப் பாழாய் போன மொழியைக் கற்க நான்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஏதற்காக மனிதன் இவ்வளவு வெறியனாக இருக்கிறான் என்பது எங்கள் வன விலங்குகள் எதற்குமே புரியாமல் இருந்தது. ஓயாமல் மனிதன் காட்டின் மீதே குறியாக இருக்கிறான். போகிற போக்கில் எங்கள் இனத்தை வெட்டிச் சாய்க்கிறான். சுட்டுப் பொசுக்குகிறான். மரங்களை வெட்டுகிறான். காட்டு நிலங்களை அகழ்ந்து கனிம வளங்களைச் சுரண்டுகிறான். அணைகள் கட்டுகிறான். காடு, மனிதனுக்கு பைத்தியக்காரன் கையில் கிடைத்த வெடிகுண்டு போல இருக்கிறது. சாப்பிட்டுக் கொண்டே கேள்… என்னைக் காட்டு ராஜா என்று காலமெல்லாம் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கதைச் சொல்லி வருகிறீர்கள். என்ன பிரயோஜனம்? ஒரு ராஜா செய்யக் கூடிய எந்தப் பணியையும் என்னைச் செய்யவிடுவதில்லை நீங்கள். கையையும் காலையும் கட்டிப் போட்டுவிட்டு காட்டாற்றில் நீந்தச் சொல்கிறீர்கள். உங்களின் வாழ்நிலங்களில் நாங்கள் வந்தால் நீங்கள் அனுமதிப்பதில்லை. உங்கள் வாழ்நிலம் என்று சொல்வதே தவறுதான். அதுவும் எங்கள் வாழ்நிலம்தான். அதாவது நம்முடைய வாழ்நிலங்கள். என்ன நடந்தது? மெல்ல மெல்ல அவற்றை நீங்கள் உங்களுடையது என்று ஆக்கினீர்கள். இப்போது அதையும் வைத்து வாழத்தெரியாமல் அதிலும் எங்கள் நாடு.. உங்கள் நாடு என்று பிரிவினைகள். நாட்டுக்குள் என் வீடு உன் வீடு என்று பிரச்சினைகள்… பாகப் பிரிவினைக் கொலைகள். எப்படியோ உங்களுக்கான இடத்தில் வாழ்ந்துவிட்டுப் போங்கள். இங்கே ஏன் வருகிறீர்கள் என்பதுதான் என் கேள்வி. ஒரு காட்டு அரசன் இதைக்கூட கேட்கக் கூடாதா?”

நீர்வாத்தின் இறைச்சி லகுவாக உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது. உப்பில்லாதது பெரிய குறையாகத் தெரியவில்லை. சிங்கம் மிக நியாயமான கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தது. வெறுமனே தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தான்.

“அதோ தெரிகிறதே அது பாக்சைட் ஆலை. இதோ இந்தப் பக்கம் புனல் மின் நிலையம். காட்டை இப்படி வளைத்துப் போட்டுவிட்டீர்கள். நீங்கள் எங்கு போகிறீர்களோ அங்கெல்லாம் சாலை போட்டு கறுப்பு நிறத்தில் … அது என்னம்மா..? ம்ம்.. தார் சாலை போடுகிறீர்கள். சகிக்கவில்லை. அது காட்டைக் கிழிக்கிற மாதிரி இருக்கிறது. எங்கள் பாதையில் அது குறுக்கிட்டால் ஒழிய அதில் நாங்கள் காலை வைப்பதில்லை. வைக்கும்போது உடம்பே கூசுகிறது. நீங்கள் சாலை போடுவதை எங்களுக்கு உதவி செய்வதாக நினைக்கிறீர்களா இரவு நேரங்களில் நாங்களும் அதைப் பயன்படுத்திக் கொள்வோம் என்று நினைத்தால் அது தவறு. அது எங்களின் வழி அறுக்கும் இம்சை. நீங்கள் எங்கள் வலியை, எங்கள் கோரிக்கையை எப்போதும் புரிந்து கொள்ள முயற்சித்ததே இல்லை. அதனால்தான் நாங்கள் உங்களுக்குப் புரிய வைக்கிற மாதிரி உங்கள் மொழியையே கற்க நினைத்தோம். இங்குள்ள பழங்குடி மக்களுக்கு மருத்துவ சேவையும் கல்வியும் தருவதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு குழு ஒன்று வந்தது’. ஸ்டீபன் ஜார்ஜ்தான் தலைவர். நல்ல மனிதர். எங்கள் பிரச்சினையைப் புரிந்து கொண்டு எங்களுக்கு மொழியைக் கற்பித்ததோடு கடைசி வரை எங்களுடனே வாழ்ந்து மறைந்தார்”’ பேசிக் கொண்டே அது பார்த்த திசையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மண் மேடு தெரிந்தது. சிங்கக் குட்டிகள் சற்றே சினேகமாகி ஆல்பர்ட்டின் மேல் வந்து உட்கார்ந்து விளையாட ஆரம்பித்தன. அவன் கையில் கட்டியிருந்த வாட்ச், அணிந்திருந்த பூட்ஸ் போன்றவற்றை வினோதமாகப் பார்த்தன. “அவருக்கு அடிபட்டிருக்கிறது. தொந்தரவு செய்யாதீர்கள். கொஞ்சம் உடம்பு சரியானதும் நம் மூலிகைக் குளத்தில் குளிக்க வையுங்கள்” குட்டிகளுக்கு ஆணையிடுவது போலவும் அறிவுறுத்துவது போலவும் இருந்தது அது.

பரவாயில்லை இருக்கட்டும் என்று மடியில் எடுத்து வைத்துக் கொண்டான்.

“எங்களுக்கெல்லாம் பெயர் வைப்பதற்காக ஸ்டீபன் முயற்சி செய்தார். நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் அனைவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நாங்கள் வாசனைகளாலும் உருவங்களாலும் வனத்தின் ஒவ்வொரு விலங்கையும் நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம். முதலைகள், கிளிகள், யானைகள் எல்லாமே எங்களுக்கு வாசனையால் சப்தத்தால் அடையாளமாகிவிடும். பெயர் புதிய குழப்பமாக மாறிவிடும் என்று விட்டுவிட்டோம். தீயிலிட்டு உண்பதுகூட ஸ்டீபன் ஏற்படுத்திய பழக்கம்தான். பச்சையாகச் சாப்பிடுவது அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பழக்கம் அப்படியே எங்களுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது. ஆனால் நாங்கள் உப்பிடுவதில்லை. இந்த உப்புக்கு மயங்கித்தான் எங்கள் குரங்குகள் உங்கள் நகரத்துக்கு இடம் பெயர்ந்து பிச்சைக் காரனைப் போலவும் வழிப் பறிக்காரனைப் போலவும் வாழத் தொடங்கியிருக்கின்றன.”

“எங்களை சர்க்கஸ்களில் சாட்டையால் அடித்து வாயைத் திறக்கச் சொல்லி துன்புறுத்துகிறீர்களே… நியாயமா? சிங்கங்கள் வாயைத் திறந்து காட்டுவதைப் பார்ப்பதற்கு ஒரு கூட்டம். உங்கள் ரசனையும் புரியவில்லை. வாயைத் திறந்தால் வேறு என்ன இருக்கும் என்று எதிர்பார்த்து சர்க்கஸ் பார்க்க வருகிறீர்கள்? மிருகக்காட்சிச் சாலையில் இன்னொரு கொடுமை பத்துக்குப் பத்து கூடத்தில் அடைத்து வைத்து அதிலேயே நாங்கள் மூத்திரம் பெய்து அதிலேயே சாப்பிட்டு அங்கேயே இனப் பெருக்கம் செய்து… எல்லாம் கேள்விப்பட்டேன். எங்களைச் சிறைச்சாலையில் அடைத்துவைத்துப் பார்ப்பதில் என்ன சுகம் கிடைக்கிறது உங்களுக்கு? உங்களுக்குத்தான் தலையெழுத்து… எவனையாவது குற்றம் புரிந்தான் என்று சொல்லி சிறையில் அடைத்து வைப்பீர்கள். நான் கேட்கிறேன், குற்றம் என்றால் என்ன? நீங்களாக இது இவனுக்குச் சொந்தம் என்று வரையறுக்கிறீர்கள். அதன் பிறகு அதை இன்னொருத்தன் எடுத்துப் பயன்படுத்தினால் குற்றம் என்கிறீர்கள். அதற்குத் தண்டனை சிறை. இது வரைக்கும் என் நாடு என்கிறீர்கள். அதை ஒருவன் மீறினால் சிறை. நீங்கள் எங்களுடன் இருந்த காலம்வரை எல்லாம் எல்லாருக்கும் பொதுவானதென்றும் அடையும் முயற்சியுடைவர் அதைச் சாப்பிடும் உரிமையுள்ளவர்களாகவும் இருந்தோம். உங்கள் சித்தாந்தங்களால் எவ்வளவு கலவரங்கள், போர்கள், வழக்குகள், பிரச்சினைகள், படுகொலைகள், நிம்மதி இன்மைகள், நோய்கள், பித்தலாட்டங்கள், துரோகங்கள். நீங்கள் நினைத்தால் உங்களுக்கு இருக்கும் வசதிக்கு இன்னும்கூட நன்றாக வாழலாம் என்று ஏன் புரியவில்லை? ”

ஆல்பர்ட் அமைதியாக இருந்தான்.

“என்னுடைய பேச்சில் இலக்கணப் பிழை அதிகமாக இருக்கிறதா? நான் பேசுவது புரிகிறது இல்லையா?”

“நன்றாகப் புரிகிறது. பதில் சொல்ல முடியாமல்தான் அமைதியாக இருக்கிறேன். கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கம் என்று எங்கள் தலையில் சுமத்தப்பட்டதன்படி நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒழுகுகிறோம். அல்லது அதில் மாற்றம் வேண்டும் என்று போராடுகிறோம். திருமணங்கள் இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது. அதை பேணுகிறோம். அல்லது அப்படி இருக்க மாட்டோம்… இப்படித்தான் வாழ்வோம் என்று எதிர் கலாசாரம் செய்வோம். எங்களுக்குப் போதிக்கப்பட்ட மகிழ்ச்சிகளை நாங்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம். யாராவது புதிய மகிழ்ச்சிகளை அறிமுகம் செய்கிறார்கள். அப்படித்தான் மிருகக் காட்சி சாலையில் விலங்களுகளை அடைத்து வைத்துப் பார்க்கிற மகிழ்ச்சியும். நீங்கள் வருந்த வேண்டாம். காலப் போக்கில் அதை நாங்கள் உணர்ந்து அத்தகைய இடங்களை அகற்றிவிடுவோம். எங்கள் தேவைகளும், பாதுகாப்பு உணர்வும் எங்களைக் காட்டு வளங்களைத் தேடி வரச் செய்திருக்கிறது. பயமும் நல்ல நோக்கமும் அதிகமாகும்போது அது சரியாகிவிடும்” என்றான் ஆல்பர்ட்.

“எனக்கு நம்பிக்கை வரவில்லை. மனிதர்களின் ரசனை, அவர்களின் வாழ்க்கை பற்றிய பயத்தால் மேலும் சுருங்கிக் கொண்டிருக்கிறது. குயுக்தி நிரம்பியதாகவும் பொய்மை நிரம்பியதாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. இவர்கள் போகிற பாதையில் தரமான மகிழ்ச்சிக்கு வாய்ப்பே இல்லை. அப்படியொரு அனுபவத்தை அவர்களால் இனி அடையாளம் காணவும்கூட முடியாது. அது அவர்களின் முன்னால் காட்டுப் பழம்போல ஒதுக்கப்பட்டுப் புறம்தள்ளப்படும் ” சிங்கம் யோசனையில் ஆழ்ந்தது. ஆல்பர்ட் வலியால் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாகக் கண்கள் சொருகினான்.

அடுத்த இரண்டு நாட்களில் மூலிகைக் குளத்தின் குளியல் காரணமாகவோ, சிங்கங்கள் அடையாளம் காண்பித்த சில தழைகளை உண்டதாலோ வலி குறைந்து சற்றே நடமாடக் கூடியவனாக மாறியிருந்தான் ஆல்பர்ட். பிரம்மபுத்ராவின் கிளையாறு போல இருந்தது அது. அவ்வளவு ஆவேசமில்லாத நீரோட்டம். சில்லென்ற குளியலும் துவைத்துக் காயப்போட்டு புதிதாக அணிந்த உடையும் அவனைப் புத்துணர்வாக்கியது. உடன் துள்ளிகுதித்து வந்த சிங்கத்துக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும்.

“உங்களால் எப்படி ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடிந்தது?” என்றான் அவற்றிடம்.

“அதான் பெரியப்பா தெளிவாகச் சொன்னாரே… ஸ்டீபன் மாமாவைப் பற்றி…”

“இருந்தாலும் எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.”

“எங்களால் ஆங்கிலம் பேச முடியும் என்று நீங்கள் நம்பிக்கை வைத்தீர்களா? எப்போதாவது அதைக் கற்பிக்க வேண்டும் என்று விரும்பினீர்களா? என்னமோ பலமுறை சொல்லித் தந்து எங்களுக்கு வராமல் போனது போல கேட்கிறீர்களே?’. உங்களையும் பிறந்ததும் காட்டுக்குள் கொண்டு வந்து போட்டால் ஓநாய் பையன் போலத்தான் வளருவீர்கள் தெரியுமா?”
ஆல்பர்ட் சிரித்தான். “ஏற்கெனவே உங்களுக்கு சர்க்கஸில் தரும் பயிற்சியை மட்டும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?”

“வாயைத் திறந்து பற்களைக் காட்டச் சொல்வது ஒரு பயிற்சியா?”
பேசியபடி குகை வாசலை நெருங்கினர்.

சிங்கராஜா, ஆல்பர்ட்டைப் பார்த்து “இப்போது பரவாயில்லையா?” என்றது.
உள்ளே இருந்து வாட்டிய முயல் கறியை இழுத்து வந்து போட்டது ஒரு குட்டிச் சிங்கம்.
“முடி நீக்கப்படாமல் இருக்கும் பார்த்துச் சாப்பிடு” என்றபடி “ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டு வந்தீர்களே” என்று விசாரித்தது.

“எல்லாம் நம் ஆங்கிலம் பற்றித்தான்” என்று போட்டு உடைத்தது குட்டி.
“”கற்பவருக்கும் அதில் ஆர்வம் இருக்கும்பட்சத்தில் எதுவும் சாதாரணம்தான்.” சற்று சாய்ந்து படுத்துக் கொண்டு, “”ஆனால் விலங்குகள் எதுவும் எதையும் கற்க விரும்புவதில்லை. தன் முனைப்பும் விலங்குகளின் பரிணாமத்துக்கு ஒரு காரணம்தானே? தான் இப்போது இருக்கிற நிலையிலேயே இருக்க விரும்பும் விலங்குக்கு அடுத்த கட்டங்கள் அர்த்தமற்றவையாகிவிடும். ஒரு தேனீ தேனுப்பதில் அலாதி ஆனந்தம் கொள்கிறது. அது கேரட் சாப்பிட ஒருபோதும் விரும்பியதில்லை. நாங்கள் மான் சாப்பிடுகிறோம். ஒரு போதும் மான் பிரியாணி சாப்பிட விரும்பியதில்லை. அப்படி ஆசைப்பட்டவுடன் அடுத்தகட்டம் ஏற்படுகிறது. அதற்கு விலையாக நாங்கள் எங்கள் இயல்பான மகிழ்ச்சியை இழக்கிறோம். மனிதர்களின் பகுத்தறிவு அதற்கான சவால்களைத் தொடர்ந்து சந்தித்தாக வேண்டியிருக்கிறதல்லவா?”

ஆல்பர்ட்டுக்கு சிங்கம் பற்றிய பயம் சுத்தமாக இல்லை. மிகச் சரளமாக அவற்றுடன் பேசவும் பழகவும் ஆரம்பித்திருந்தான்.

சிங்கம் தொடர்ந்தது. “உங்கள் வார்த்தைகள் இன்னும் செப்பனிடப்பட வேண்டியிருக்கிறது”
ஆல்பர்ட் “உண்மைதான். ஆரம்பக் கோளாறுகள் அப்படியே தொடருகின்றன. உதாரணத்துக்கு பி.. யூ.. டி.. புட் எனப்படுகிறது. ஆனால் பி.. யூ..டி.. பட் என”

“நான் அந்த மாதிரி கோளாறுகளைச் சொல்லவில்லை. மொழியை நீங்கள் வசதிக்கேற்றவாறு வளைக்கிறீர்கள். சொல்லப் போனால் உங்கள் தவறுகளில் இருந்து தப்புவதற்காக அதை அதிகம் பயன்படுத்துகிறீர்கள். வசியம் செய்கிறீர்கள். விலங்குகளிடம் அந்தப் போலித்தனம் ஒரு போதும் இல்லை.”

ஆல்பர்ட் அமைதியாக இருந்தான். சிங்கம் முகட்டில் நின்று பருவகால சூழலை அளந்தது. திரும் வந்து, “”நாளைக்கு உன்னை இரும்பு வாராவதியில் விட்டுவிட்டு வந்துவிடுகிறேன். நீ அங்கிருந்து திஸ்பூர் செல்வதற்கு லாரிகள் கிடைக்கும்” என்றது சிங்க ராஜா.

“நான் நகருக்குச் சென்றதும் நிச்சயம் உங்கள் உரிமைக்காகப் போராடுவேன்” அவனுடைய கண்கள் பனித்திருந்தன.

“வேண்டவே வேண்டாம். இப்படியான பேசும் சிங்கங்களைப் பார்த்ததாக நீ யாரிடமும் சொல்லக் கூடாது. எங்களைப் பிடித்துப் போய் கூண்டில் அடைத்து டி.வி.கேமிரா முன் பேச வைத்து கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். அதைவிட வேறு நரகம் இருக்க முடியாது. முடிந்தால் காட்டை நம்பித்தான் காட்டு விலங்குகள் இருக்கின்றன என்பதைச் சொல். அது போதும்.”

ஏழு சிங்கங்களும் சேர்ந்து சென்று ஆல்பர்ட்டை வழியனுப்பி வைத்தன. தடுமாறி, கால்தாங்கி திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே அவன் நடந்து சென்றான். சிங்கங்களின் கண்களில் நீர் அரும்பியது முதல் முறையாக. ஆல்பர்ட் மெல்ல அவற்றின் கண்களில் இருந்து மறைந்தான். அடுத்த நாளை ஆல்பர்ட் பெரும் பட்டாளத்தோடு சிங்கங்களைப் பிடிக்க பெரும் பட்டாளத்தோடு வந்தான். ஆனால் அந்தக் குகையில் சிங்கங்கள் இல்லை. அதற்கான தடயமேகூட இல்லை. சக நண்பர்களின் பெரும் ஏளனத்தோடு ஆல்பர்ட் காட்டைவிட்டுப் போனான்.


Series Navigation

தமிழ்மகன்

தமிழ்மகன்