பொன்னம்மா

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

வே பிச்சுமணி


ராமகிருஷ்ணன் மத்தியான சாப்பாட்டு மயக்கத்தில் தூக்கம் வந்தும் வாரா நிலையில், தொலைகாட்சியின் சத்தத்தின் இடையே தூங்க முயற்சி செய்து கொண்டடிருந்த பொழுது தொலைபேசி சத்தம் போட்டது. “ஏம்மா அந்த சனியனை எடுமா” என்று தூக்கத்தை கெடுத்த கோபத்தில் ராமகிருஷ்ணன் கத்தினான். சமீபகாலமாக அவன் மனைவி அவன் பேசினாலே ஏன் கத்துகீறீர்கள் இப்போலாம் ரொம்ப கோபபட்டு கத்துகீறீர்கள் என்ற அடிக்கடி புகார் செய்வதால் ராமகிருஷ்ணன் கூட தான் கத்துவதாக நினைக்க தொடங்கி விட்டான்.

ராமகிருஷ்ணனின் மனைவி பேசியினை எடுத்து காதில் வைத்து “….ம் , எப்ப, எத்தனை மணிக்கு”……………”நாளைக்கு ஆகுமா”……… “நான் அவரிடம் சொல்லுகிறேன்” என்று பேசுவது ராமகிருஷ்ணன் காதில் அரைகுறையாக விழுந்தது. தனக்குதான் ஏதோ விசயம் வந்துள்ளது என்பதை உணர்ந்து எழுந்திருக்கலாமா வேண்டாவா என்று புரண்டு கொண்டே “என்ன விசயம் “என்றான். “உங்க பெரியம்மா காலையில் இறந்து போயிட்டாங்களாம்” என்றவுடன் கொஞ்சம் வேகமாக படுக்கை விட்டு எழுந்து “எததனை மணிக்கு”, “எப்ப எடுக்கிறாங்களாம்”. என அவனது மனைவியிடம் விசாரித்தான்“ “10 மணி பக்கம்” “நாளைக்கு ஆகுமாம்.” என்றார் ராமகிருஷ்ணனின் மனைவி.

ராமகிருஷ்ணன் எழுந்து ஆசுவாசபடுத்தி கொண்டு,குளிலறை சென்று முகம் கழுவிவிட்டு, வரவேற்பு அறையில் பழைய போர்வையை எடுத்து விரித்தான் .அடுத்த அறைக்கு சென்று பிரோவை திறந்து இருப்பதில் நல்ல மூன்று சட்டையையும் இரண்டு பேன்டையும் பிரோவின் அடியில் வைத்திருந்த அயன் பாக்ஸை எடுத்து கொண்டு போர்வை விரித்த இடத்தின் அருகில் உள்ள ப்ளக் பாயின்டில் ஒயரை சொருகி, காட்டன் பாயின்டில் வைத்து அயன் செய்ய ஆரம்பித்தான்.

அவன் மனைவி “ஏங்க என்னைக்கு திரும்ப வருவிங்க” என வினவினாள். “எப்படியும் இரண்டு நாளாகும். திங்கள் கிழமை ஆபிஸ்க்கு போனும்ல அதனால ஞாயிற்று கிழமை புறப்பட்டு திங்கள் விடிய வந்து விடுவேன்“ என்றான். “இப்ப எப்படி பஸ்ஸா ட்ரயினா“ என்றாள். “ஏதாவது பஸ்ஸில ஏறி , எடுப்பதற்குள் போனும்” என்றான். “சாப்பிட இரண்டு தோசை வைச்சு தரட்டுமா, இல்ல எடுத்துகிட்டு போறிங்களா” என்றாள். அதை வேற தூக்கிட்டு போகனுமா என்று மனதில் நினைத்து கொண்டு “சாப்பிட்டே போறேன்” என்றான். அவன் மனைவி சமையல் கட்டை நோக்கி சென்றாள். அவள் முதல் தோசை சுட்டு எடுப்பதற்குள் அயன் வேலை முடிந்து விட ராமகிருஷ்ணன் சாப்பிட உட்கார்ந்தான். தட்டில் தோசை வைத்து மிளகாய் பொடி எண்ணெய் ஊற்றி அவன் முன் வைத்து கொண்டே “பணம் எடுக்கனுமா” என்றாள். “போகும்போது ஏடிஎமில் எடுத்து கொள்கிறேன்” என்று பதிலளித்தான். “சரி போனதும் போன் பன்னுங்க” என்றாள். வாயில் தோசையை வைத்து கொண்டே” சரி சரி “என்று சற்று எரிச்சலுடன் அவன் பதில் அளித்து கொண்டே எழுந்து வாஸ்பேசினில் தட்டை போட்டு விட்டு கையை கழுவினான். “தட்டை மேலே வைச்சிட்டு கையை கழுவினால் என்ன, இந்த அசிங்க வேலையை செய்யாதிங்கனா, ஏன், கேட்க மாட்டிக்கிங்க” என்றாள் .அதை அவன் சட்டை செய்யாது அயன் செய்த ஆடைகளையும் ஒரு லுங்கி மற்றும் ஜட்டி பனியன்களையும் சூட்கேஸ்க்குள் வைத்து பூட்டினான். குளியலறை சென்று முகம் கழுவி கட்டிலில் கிடந்த துண்டை எடுத்து முகம் துடைத்தான். எண்ணை தேய்த்து தலை சிவினான். சூட்கேஸை திரும்ப திறந்து ஒரு சட்டையையும் பேன்ட்டை எடுத்து உடுத்தி கொண்டு புறப்படத் தயார் ஆனான். அதற்குள் அவன் மனைவி பயணத்ததிற்காக விற்கும் சின்ன செட் எண்ணெய். பவுடர், பற்பசை ப்ரஸ் எல்லாம் ஒரு பிளாஸ்டிக் பையிலிட்டு சூட்கேஸை முடிக்கொண்டே “ஏங்க வேறு ஏதாவது வைக்கனுமா” என்றாள் . “துண்டு வைச்சிட்டாயா” என்றான் “வைச்சிருக்கேன்” என்றாள். “ஏங்க டிவிஸ்50-ல் கொண்டு உங்களை விடட்டுமா” “வேண்டாம் நடந்தே போய் கொள்கிறேன்” என்று சொல்லியவாறு மாடிப்படியில் இறங்க ஆரம்பித்தான். “நான் கொண்டு விடுகிறேன் என்கிறேன் கேட்கமாட்டிக்கிங்க” என்று முணுமுணுத்தாள். ராமகிருஷ்ணன் காதில் வாங்கிக்கொள்ளாமல் தெருவில் இறங்கி நடந்தான். பெருங்களத்தூர் பஸ் நிறுத்தை அடைந்தான்

பெருங்களத்தூரில் மாநகர பேரூந்தை பிடித்து தாம்பரத்தில் இறங்கி ரயில் நிலையத்திலுள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்து விட்டு திருவள்ளுவர் பேரூந்து நிலையத்தை அடைந்தான் . பதிவு செய்த பயணச்சீட்டு வாங்கலாமா, வேண்டாமா என யோசித்து நின்றான். வேகமாக வீசிய காற்றில் நிறுத்தத்தின் அருகிலேயே கட்டிகிடக்கும் சிறுநீர் நாற்றம் மூக்கை தாக்கியது கொஞ்சம் தள்ளி நிக்கலாம் என நகர்ந்தான் அப்போது திருநெல்வேலி வழியாக நாகர்கோயில் செல்லும் அல்டரா டீலக்ஸ் பஸ் நிலையத்திற்குள் நுழைந்து அவனை கடந்து சென்று நின்றது. நடத்துநரிடம் “சீட் இருக்கிறதா” என்றான் அதற்கு அவர் “எந்த ஊரு போனும்” என வினவ ‘திருநெல்வேலி” என பதில் அளித்தான் . “சரி ஏறிக்கோங்க” ராமகிருஷ்ணன் பஸ்ஸில் ஏறி காலியாக இருந்த 15 நம்பர் இருக்கை அருகே சென்று மேலே இருந்த பெட்டிகளை நகட்டி அவனது சூட்கேஸை வைத்து விட்டு இருக்கையில் அமர்ந்தான். ஏற்கெனவே சன்னல் ஓரம் இருந்தவர் நடுவிலுள்ள கைவைக்கும் கட்டையில் ராமகிருஷ்ணன் கை வைக்க .இயலா வண்ணம் கையை அகட்டி வைத்தார். ராமகிருஷ்ணன் லிவரினை இழுத்து இருக்கையினை சாய்த்து படுப்பதற்கு ஏற்றவாறு வைத்து கொண்டு சாய்ந்தான். பஸ் தாம்பரம் நிலையத்தை விட்டு பைய்ய பைய்ய வெளியே வந்து ஜி.எஸ்.டி சாலையில் தனது பயணத்தை தொடங்கி வேகம் பிடித்தது. இரும்பூலியூர் பாலம் தாண்டி பெருங்களத்தூர் தாண்டும் பொழுது சன்னல் வழியாய் ஊரை ஒரு முறை ராமகிருஷ்ணன் பார்த்து கொண்டு பஸ்க்குள் பார்வையினை திருப்பபினான்

நடத்துநர் அவன் அருகே வரவும் சரியாக இருந்தது. அவரிடம் “திருநெல்வேலி” என்றான் “310 கொடுங்க சார்” என்றார். அவன் 500 ரூபாய் நோட்டை நீட்டினான. நடத்துநர் டிக்கட்டையும் மிச்ச பணத்தை கொடுத்துவிட்டு நகர்ந்தார் அதற்குள் பஸ் கூடுவாஞ்சேரியை தாண்டி இருந்தது. நடத்துநர் டிக்கட் போட்டு விட்டு பஸ் விளக்குகளை அணைத்தார். ராமகிருஷ்ணன் கண்ணை மூடினான். தூக்கம் வர வில்லை. அவனுடைய இறந்து போன பெரியம்மா பொன்னம்மாவின் நினைவு வந்தது.

பெரியம்மா ராமகிருஷ்ணனின் அமமாவோடு கூடபிறந்தவள். அவளுக்கு பொன்னம்மா ,முத்தம்மா என இரண்டு பெயர்கள்.இரணடு தடவை மணம் முடித்தும் புருஷனையும் இழந்தவள்.அந்த காலத்திலேயே மறுமணம் செய்து கொடுத்த தாத்தா பாட்டியை ராமகிருஷ்ணன் பெருமையாக நினைத்து கொண்டான். பெரியம்மாவுக்கு பிள்ளை ஒன்றும் கிடையாது அதனால் தனது தங்கை மகனான ராமகிருஷ்ணன் மீது அலாதி பிரியம். அவன் பிறந்த நேரத்தில் ராமகிருஷ்ணனின் அம்மா ரொம்ப முடியாமல் போக தனது இரண்டாவது கணவருடன சேர்ந்து ராமகிருஷணனின் அப்பாவிடம் அவனை தத்து கேட்க அவர் மறுத்துவிட்டதால் அவன் பெற்றோர் மீது ரொம்ப வருத்தம் உண்டு. இருந்தாலும் பெரியம்மாவுக்கு மட்டும் ராமகிருஷ்ணன் மீதான அன்பு குறையவே இல்லை. பெரியப்பா அதற்கு பின்பு அவனை ஒரு விரோதி போல்தான பார்த்ததார்.

ராமகிருஷ்ணனுக்கு திருநெல்வேலி டவுனில் இருக்கும் அவனது பெரியம்மா வீட்டுக்கு போக பிடிக்கும். போகும் அன்றைக்கு ட்யூஷன் போக வேண்டாம். பெரியம்மா பர்வத்சிங்ராஜா தெருவில் ஒரு ரூபாய்ககு நான்கு வடையென விற்கும் வடையினை ஐந்து ரூபாய்ககு வாங்கி கொடுப்பாள் யாருக்கும் கொடுக்காமல் மொக்கலாம். பக்கத்து வீட்டு பையனுடன் சேர்நது சந்தாஸ்பத்திரி காலி இடத்தில் போட்டிருக்கும் பெரிய குடிநீர் குழாய்கள் மீது ஏறி உருட்டி விளையாடலாம் .வாய்க்காலில் தண்ணீர் பாம்பு பிடித்து பட்டணம்பொடி அதன் மூக்கில் தேய்த்து அதனை வேடிக்கை பார்க்கலாம். வாய்க்காலில் அம்மாவுக்கு தெரியாமல் குளிக்கலாம். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சேர்ந்து நயினார் குளத்துடன் கலக்கும் வாய்க்கால் கரையில் இருக்கும் அழகிய சிறிய, அமைதியான, தங்க அரளி பூத்து குலுங்கும் குருநாதன் கோயிலுக்கு போகலாம். வெள்ள துணியால் வாயினை கட்டி மேலே பலகை மூடியால் மூடி வைத்த பழையது பானையிலிருந்து பழைய சோறு வைத்து ,தண்ணீர்கூட சுண்டி மாவு போல் மாறிய சுண்ட வைத்த பழைய கறி வைத்து பெரியம்மா தரும் பழைய சோறு சாப்பிடலாம் . அவனுக்கு அவனது பெரியம்மா அவனை இழுத்து, நெல்ஊமி சாம்பல் பொடியை கொண்டு அழுத்தி, பல் தேய்த்து விடுவது மட்டும் பிடிக்காது. ராமகிருஷ்ணனின் பல் முன்னே துறுத்தாமல் வாய்க்குள்ளே ஒழுங்காக இருப்பதற்கு பெரியம்மா தான் காரணம். இவ்வளவு பாசமான பெரியம்மா மீது ராமகிருஷ்ணனுக்கு ஏனோ பாசம் வரவே இல்லை. அதற்காக பெரியம்மா மீது வெறுப்பு என்றும் சொல்ல இயலாது என நினைத்தவாறு உறங்கி போனான்.

இடையில் விழுப்புரத்தில் மூத்திரவாசம் வீசும் மோட்டலில் பஸ் நின்றபோது சற்று கண்விழித்து மீண்டும் தூங்கி போனான். பஸ் கோவில்பட்டி தாண்டி போகும்போது முகத்தில் சுளீர் என வெயில் அடிக்க கண்விழிதது இதற்குள் திருநெல்வேலி போயிருக்கனுமே என மனதுக்குள் நினைத்து கொண்டே வெளியே சன்னல் வழியாய் பார்த்தால் 4 வழிச்சாலையாய் மாற்றுவதால் பஸ் டைவர்ஸன் பாதையில் பிரயாணித்து மீண்டும் ரோடுக்கு வந்தது .இவ்வாறு திருநெல்வேலி போகும் வரை நிறைய டைவர்ஸன் சந்திக்க வேண்டியிருந்தால் 3 மணிநேரம் காலதாமதமாக பஸ் புதிய பேரூந்து நிலையம் நோக்கி பைபாஸ் சாலையில் பயணித்தது. ராமகிருஷ்ணன் பெட்டியை எடுத்து பஸ்ஸின் முன்பக்கம் சென்று வண்ணார்பேட்டை சந்திப்பில் இறக்கி விட சொன்னான். வண்ணார்பேட்டை சந்திப்பில் பஸ் நின்றதும் இறங்கி அவன் போய் சேருவதற்குள் பெரியம்மாவை எடுத்து விடுவார்ளோ என நினைத்து கொண்டு சங்கரன்கோவில் பஸ்ஸில் ஏறி மானூருக்கு டிக்கட் ஒன்று எடுத்தான். பஸ்ஸில் கூட்டம் அதிகம் இருந்தது. நின்று கொண்டு பயணம் செய்வது ராமகிருஷ்ணனுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது . ரஸ்தா வந்ததும் உட்கார இடம் கிடைத்தது. மீண்டும் பெரியம்மா நினைவில் ராமகிருஷ்ணன் முழ்கினான் .

ராமகிருஷ்ணன் போன தடவை ஊருக்கு வந்த போது பெரியம்மாவை பார்க்க மானூர்க்கு வந்த போது பெரியம்மா தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து வீட்டு ரொம்ப கூன் விழுந்து மெலிந்து இனி ரொம்ப நாள் தாங்க மாட்டாள் என்று
எண்ணும்படி , நடக்க முடியாமால் நடந்து சென்றாள்.”பெரியம்மா” என அவளை அழைத்தும் அவனை யார் என்று தெரியாமல் கண்கள் மீது கைவைத்து பார்த்து அப்படியும் உருவம் பிடிபடாமல் “யார்” என கேட்டதும் அவன் பதில் அளிக்கும் முன் பக்கத்துவீட்டு பெண் “உன் தங்கச்சி மகன் வந்திருக்கான்“ என சொன்னாள். “இப்ப தான், உனக்கு வழி தெரிந்ததா“ என விசனித்து விட்டு ”எப்ப வந்தெ, சாப்பிடு “ என சொன்னாள். அப்ப, அவனுக்கு பெரியம்மா இறந்தா கொள்ளி போட வேறு யாரும் இல்லாததாலும்.அவன் பிறந்த போது ராமகிருஷ்ணனின் அம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாமல் போக ஆஸ்பத்திரியில் குழந்தைகளை வைத்திருக்க அனுமதியில்லாததால் அவனுக்கு தாய் பால் கொடுக்க வேண்டி வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் அவள் அலைந்துபட்ட கஷ்டத்திற்காகவாவது, அவளுக்கு கட்டாயம் அவன் வந்து கொள்ளி போட வேண்டும் எனவும், இருந்தாலும் வெளி மனது அவ பாட்டுக்கு இருந்துட்டு போகட்டும் நம்ம தலை மேலேயா உட்கார்ந்து இருக்கா எனவும் மனதுக்குள் நினைத்து கொண்டது நினைவுக்கு வந்தது.

சன்னல் வழியாக பார்த்தான், பஸ் மாவடியை தாண்டி மானூரை நெருங்கி கொண்டிருந்து. பெட்டி எடுத்து இறங்க தயார் ஆனான். மானூர் வந்தவுடன் இறங்கி பெரியம்மா வீட்டை நோக்கி நடந்தான். தெரு நெருங்க நெருங்க அவனை பார்தத சொந்தங்கள் “ இன்ன இப்பதான் வாரியா”, எனவும் “எப்ப புறப்பட்ட” என விசாரித்தவர்களுக்கு அதற்கேற்ப பதில் அளித்து வீட்டு வாசலை அடைந்தான. பத்து பதினைந்து பேர் நின்று கொண்டு இருந்தார்கள். உள்ளே நுழைந்த போது மூலையில் சாய்த்து வைத்து இருக்கும் பெரியம்மா சுற்றி உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தார்கள். யார் என்று ராமகிருஷ்ணனுக்கு தெரியாத ஒரு அம்மா “எப்ப தம்பி வந்தீங்க” என வினவ ., “இப்ப தான்” என அனிச்சையாக பதில் அளிதான். “உங்க பெரியம்மாவுக்கு நல்ல சாவுதான் . முந்த நாள், பங்குனி உத்திரத்துக்கு சாஸ்தா கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு, சொந்தங்களுட்ன் கறி சோறு சாப்பிட்டு, நேற்று இரண்டு தடவை வெளியே போயிட்டு வந்து படுத்தவ எந்திரிக்கல., சீக்கிலே விழுந்து பீ ,மூத்திரம் தொந்திரவு இல்லாமல் போய் சேர்ந்திட்ட மகராசி” என சொன்னார் அதனை கேட்டவாறே முற்றத்துக்கு வந்தான். அதற்குள் கடைக்கு போயிருந்த உறவினர்கள் வந்து இருந்தார்கள்.

ராமகிருஷ்ணனின் குடும்பத்தில் முத்த தலையான மணியாச்சாரி “கிருட்டினா இங்க வா” “என்ன அப்பா“ என்று அவன் அருகில் சென்றான். ”நீ கொள்ளி வைக்கிறயா, உன் சவுகரியம் எப்படி“ என்றார். “அதனால் என்ன, நான் வைக்கிறேன்” என்றான் ராமகிருஷ்ணன். “ கொள்ளி வைத்தால் விஷேஷம் வரை இருக்கனுமே அதான் கேட்டேன்” என்றார். பிறகு இருக்கனுமனா இருக்கத்தான் செய்யனும் என மனதில் நினைத்து கொண்டு “நான் கொள்ளி வைக்கேன்“ என்றான்.

யாரோ ஒருவர் மணியாச்சாரியை கூப்பிட அங்கே சென்றார். அதற்குள் ராமகிருஷ்ணனின் மாமாவின் பையன் வந்து நலம் விசாரித்துவிட்டு “அத்தான் நாமதான் கொள்ளி வைக்கனும், எவ்வளவு செலவு ஆனாலும், நாம பார்த்து கொள்ளலாம், இதில் விட்டு கொடுக்க வேண்டாமென“ கூறி கொண்டு இருக்கும் பொழுது, அவனருகே மணியாச்சாரி வந்து “கிருட்டினா, உங்க பெரியம்மாவின் வீட்டுகாரரின் தம்பி பையன் அவன் கொள்ளி வைக்கிறான் என்கிறான்”, “நீ என்ன சொல்லுற” என்றார். ராமகிருஷ்ணன் இது தொடர்பாக அவனது அம்மாவை கேட்கலாம் என மனதில் நினைத்து கொண்டு அருகில் இருந்த மச்சானிடம் “எங்கம்மா வரலையா” என ராமகிருஷ்ணன் மெதுவாக கேட்டான். “உங்க அப்பாவுக்கு ரொம்ப முடியாததால் உங்க அம்மா வரலை” என சொன்னான். அதற்குள் மணியாச்சாரி “என்னப்பா, என்ன செய்யலாம்” மீண்டும் கேட்டார். “எனககு ஒன்றும் தொணல , எது சரியோ அதுபடி செய்யலாம்“ என அவன் சொன்னான். “அவங்களுக்கு தான், உன்னை விட அதிக உரிமை, அவங்களே செய்யட்டும்” என்றார். ராமகிருஷணன் என்ன செய்வது என்று தெரியாமல் “என்னை வளர்தத கடனுக்கு செய்யலாம்” என நினைத்தேன் என பைய்ய சொன்னான். மணியாச்சாரி “அவனுகளே செய்யட்டும்டா” “ இதிலே போய் விவகாரம் பண்ணிகிட்டு” என்றார். வேறுவழி இல்லை, என்பதை உணர்ந்து கொண்டு “சரி நல்லபடியா நடந்த சரிதான்” என்றான் ராமகிருஷ்ணன். பெரியப்பா இறந்து போய் இருவது முப்பது ஆண்டுகள் இந்த சொந்தங்கள் எங்கிருந்தார்கள். என்று தெரியல, சாவிலும் தங்களது ஆணாதிக்க மனபாவத்தை விடாமல் கடைபிடிக்கிறார்களே , தன்னால் இந்த கடமையை கூட செய்ய முடியாமல் போயிவிட்டதே என்றும்
தன்னுடைய அடிமனதில் உள்ள ஆணாதிக்க மனப்பான்மை தான் அவாகள் கொள்ளி போடுகிறேன் என சொன்னதும் ஒப்புக் கொண்டதோ என்றும் நினைத்தவாறு,………. யாரோ கொடுத்த குடத்தை எடுத்து கொண்டு நீர்மாலைக்கு ராமகிருஷ்ணன் கூட்டத்துடன் கூட்டமாக சென்றான் .

Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி