பங்குருப்பூவின் தேன்.

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

தமிழில்:மு.குருமூர்த்தி



புது மனைவி.
மனைவியின் மடியில் பசவனின் தலை.
அடக்கமுடியாத கொட்டாவி அவனை ஆக்கிரமித்திருந்தது.
நேரம் வெளுத்துவிட்டது. காலை இளம் வெய்யிலில் அந்தக்கிராமம் சுகமாக குளித்துக் கொண்டிருந்தது.

கூரையின் துளைகளால் ஆகாயம் சதுரத்துண்டுகளாய் தரையில் சிதறிப்போயிருந்தது. கல்யாணத்திற்கு முன்பாவது கூரை வேயவேண்டும் என்பது ஊர்க்காரர்களின் வற்புறுத்தல். வேண்டிய புல்லும், ஆட்களும் அவர்கள்தான் கொடுத்தார்கள்.

இதையெல்லாம் நினைக்கும்போது பசவனுக்கு சிரிப்பு வந்தது. கூரை வேய்ந்தாலும் வேயாவிட்டாலும் சல்லி என்கிற பெண் அவனைத்தான் கட்டிக்கொள்வாள் என்பது பசவனுக்குத் தெரியும். பசவனுக்கும் நாகரிகத்திற்கும் வெகுதூரம். அது ஊரறிந்த விஷயம். சல்லியின் நடவடிக்கையில் கொஞ்சம் நாகரிகம் இருந்தது. இருந்தாலும் பசவனுடைய மனதில் சல்லிதான் குடியேறியிருந்தாள்.

சல்லியின் நீலநிற சின்னாளப்பட்டுச்சேலை காற்றில் விலகியிருந்தது. நீல நிறத்திலேயே பசவனின் பார்வையும் பதிந்திருந்தது. சல்லியின் காதுகளில் ஏதோ சொன்னான் அவன். ஆகாயத்தின் நீலநிறம் இப்போது சல்லியின் கண்களில் இறங்கியிருந்தது.

சுவரும் கதவும் இல்லாத அந்தக்குடிசை அது. வெறும் தரையில் அவர்கள் கிடந்தார்கள். பசவனின் பார்வை வயல்களுக்கப்பால் நீண்டுபோனது. வசந்தம் அங்கிருந்து அவனை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. காட்டு மரங்கள் மருதாணி பூசிய விரல்களால் அவனைக் கூவி அழைத்தன. அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசிய அழைப்பு அது.

பசவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டான். கூடவே எழுந்துபோக முயற்சி செய்த சல்லியின் சேலைத்தலைப்பை பிடித்துக்கொண்டான் பசவன்.
“உனக்கு எதற்கு இந்த நீலச்சேலை?”
சல்லிக்கு என்னசொல்வதென்று தெரியவில்லை.
அவளுடைய தகப்பன் வாங்கிக்கொடுத்த சேலை அது.
கல்யாணப்பெண்ணிற்கு மாப்பிள்ளையின் அன்பளிப்பு என்று எதுவும் இல்லை.
தொட்டு உணரக்கூடிய அன்பளிப்புகளில் பசவனுக்கு நம்பிக்கை இல்லை.
“பின்னே?…எந்த நிறச்சேலை எனக்கு நன்றாக இருக்கும்?”
“உனக்கு ஒரு சேலையும் நன்றாக இருக்காது. சேலையை சுற்றிக்கொண்டால் உன்னுடைய அழகு காணாமல் போய் விடுகிறது.”
சல்லி வாயைப்பொத்திக்கொண்டு சிரித்தாள்.
வெற்றிலை எச்சிலை துப்புவதற்காக முன்னால் இருந்த வாழைமரத்தடியை நோக்கிப்போனாள் சல்லி. அவளுடைய சேலை ஒரு நீலநிற பாம்பைப்போல தரையில் நீண்டு கிடந்தது.

பசவனுக்கு மறுபடியும்…கொட்டாவி.

கூரையின் சதுரப்பொத்தல் வழியாக ஒரு சப்தம் நுழைந்தது. அந்த சப்தம் அவனுக்குப்பக்கத்திலும் வந்தது. அது ஒரு வண்டு. ரத்தினக்கல்லைப்போல பளபளப்பான அந்த வண்டின் ரீங்காரம் குடிசையில் குடிகொண்டிருந்த அசுவாரசியத்தை விரட்டியடித்தது. அறுத்தெடுக்கும் ஒலியால் சல்லி காதுகளை பொத்திக்கொண்டாள்.
“என்ன பூச்சி இது?…”
“இதுவா?…இது பங்குருக்கொடி அனுப்பிவைத்த தூதுவன்.”
பசவனின் முகத்தில் இப்போது சூரியன் உதித்திருந்தான். அவனுடைய முகத்தைப்பார்த்த சல்லிக்கு வியப்பாக இருந்தது. இரண்டு நாட்களாக மேகமூட்டமாயிருந்தது அவனுடைய முகம். ஒரு நாழிகைக்கு நான்கு கொட்டாவிகள். இரண்டு வாரத்தில் எல்லாம் அலுத்துப்போயிற்றோ அவனுக்கு! சல்லி ஆசையோடு கேட்டாள்.
“பங்குரு எங்கே பூத்திருக்கிறது?”
“காட்டில்… போகலாம் வா. நாம் இப்போதே போகவேண்டும்.”
பசவன் வேட்டியை சரிசெய்துகொண்டான்.
“சட்டை போட்டுக்கொள்ளவில்லையா?”
“ஏன்?”
கல்யாணத்தின்போது யாரோ ஒரு கூட்டாளி அன்பளிப்பாக கொடுத்த வெள்ளைச்சட்டை மூங்கில் வளையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
“இப்போதே போகவேண்டுமா?”
“இன்னும் ஏன் இங்கே இருக்கவேண்டும்?”
பசவனின் ஒவ்வொரு அணுவிலும் உற்சாகம் பொங்கியது.
அந்தக்குடிசையின் குளிர்ச்சியான மூலைகளில் அந்த வண்டு கொஞ்சநேரம் சுற்றிப்பறந்தது. பசவனுக்கு வழிகாட்டுவதற்காக முன்னோக்கிப் பறந்தது அந்த வண்டு.

மேய்ச்சலுக்காக மாடுகள் காட்டை நோக்கிப்போய்க் கொண்டிருந்தன. கழுத்து மணிகளின் ஒலி கிராமத்தை நிறைத்திருந்தது.

காட்டைவிட்டு இறங்கிய காற்று கிராமத்துக்குள் வீசிக்கொண்டிருந்தது. கல்யாணத்திற்கு அழைப்புவைக்கும் மாப்பிள்ளையின் உற்சாகம் அதில் இருந்தது. காட்டைநோக்கிப்பாயும் மேகங்களைப்போல் பசவனும் சல்லியும் போய்க்கொண்டிருந்தார்கள்.

அந்தக்கிராமமே அவர்களைப்பார்த்து நின்றது. சல்லி பக்கத்து கிராமத்துக்காரிதான்.
இருந்தாலும் சல்லியோடு நன்றாகப்பழகக்கூட அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவளுடைய அழகின் ரகசியத்தை இன்னும் கேட்டறியவில்லை.

கிராமவாசிகளுக்கு பசவனைக்கூட நன்றாகப் பழக்கமில்லை. அந்தக்கிராமத்தில் பிறந்தவன் தான் பசவன். இருந்தாலும் கிராமத்தில் தங்குவதில்லை அவன். காட்டிற்கு ஓடிப்போய்விடுவான். கிராமத்து மக்களின் பழக்கவழக்கங்கள் அவனுக்குத்தெரியாது. கல்யாணம் செய்துவைத்தாலாவது கிராமத்திலேயே அடங்கியிருப்பான் என்று நினைத்தார்கள். ஆனால் பசவனின் போக்கு அவர்களுடைய எண்ணத்திற்குப் புறம்பாக இருந்தது. எப்போதாவது ஊர்ச் சந்தையில் பசவனைப்பார்க்கலாம். தலையில் தேன் குடுக்கை இருக்கும். கிடைத்த விலைக்கு விற்பான். காசு தீர்ந்து போகும் வரை கள்குடி. மீண்டும் காட்டிற்குள் போய்விடுவான்.

பசவன் காட்டிற்குப்போவதில் தவறு ஒன்றுமில்லை. அவன்கூட சல்லி போவதிலும் தப்பில்லை. அவள் அவனுடைய மனைவியல்லவா! அவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள்.
கிராமம் அதனுடைய வேலையை கவனிக்கத்தொடங்கியது.

கடல்போல் பரந்திருந்த இளம் வெய்யிலில் வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகள் அலைகளைப்போல குதியாட்டம் போட்டன.
கிராமத்தின் ஓரமாக இருந்த மரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பறவை பசவனைப்பார்த்து வியப்புடன் கேட்டது.
“எங்கேடா?…எங்கேடா?…”
“வீட்டுக்கு…நீயும் வருவாயா?”

இன்னொரு பறவை சொன்னது.
“போடா…போ…போடா…போ…”
பசவன் சிரித்தான்.
அந்த சிரிப்பு அவனுடைய உதடுகளில் இருந்து அதற்கப்புறம் மறையவேயில்லை.

காட்டு மரங்கள் பச்சைகுத்திய கைகளை உயர்த்திப்பிடித்திருந்தன. மருதாணி பூசிய விரல்களை ஆட்டி பசவனையும் அவனுடைய மனைவியையும் வரவேற்றன.
காட்டின் குளிர்ச்சியில் ஆயிரக்கணக்கான ஜீவன்களின் சங்கீதம் தளும்பி நின்றது. வறண்டுபோன மனம் இப்போது நிறைந்து போயிருந்தது. பசவன் நீட்டிமுழக்கி ஆலாபனம் தொடங்கினான்.
காட்டுக்குயில் அதனுடைய பாட்டை நிறுத்திவிட்டு அசையாமல் மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது.
வழியெங்கும் சிலந்திவலைகள். அதையெல்லாம் தவிர்த்துவிட்டு இருண்டுகிடந்த ஒரு மலையிடுக்கிற்கு வந்து சேர்ந்தார்கள்.
பசவன் ஒரு நிமிடம் ஆடாமல் அசையாமல் நின்று கவனித்தான்.

“ஆமாம்…பங்குரு பூத்திருக்கிறது…”

மனதிற்கினிமையான ஒரு அழகான உறைவிடம் வேண்டும் அவர்களுக்கு.
முன்னால் பசவன் சென்று கொண்டிருந்தான். சல்லி அவனைத்தொடர்ந்து சென்றாள். அவளுக்கு பாதை கடினமாக இருந்தது. அவளுடைய நீலச்சேலை காட்டுக்கொடிகளின் நகங்கள் பட்டு கிழிந்தது.
இரு புறமும் அடர்ந்திருந்த மரங்களுக்கிடையே நீண்டுபோகும் ஒரு காட்டுச்சோலை. சோலையின் ஓரத்தில் வெளிச்சம் வீசும் ஒரு பாதை. அந்த இடத்தைப்பார்த்ததும் சல்லியின் விழிகள் வியப்பால் விரிந்தன.

நெடிதுயர்ந்த தான்றி மரத்தில் பற்றிப்படர்ந்து ஏறிநிற்கும் உருண்டு திரண்ட ஒரு கொடி.
கருத்த கிளைகள்.
இலைகள் இணையும் இடமெல்லாம் பூக்குலைகள்.
பெளர்ணமிச்சந்திரனைப்போன்ற பூக்கள். ஒவ்வொரு கிளையிலும் ஒன்றோ இரண்டோ பூக்கள்.
பங்குரு…
பங்குருக்கொடி ஒரு சாதாரண காட்டுக்கொடி மாத்திரமல்ல.
அது ஏறிப்போய்க்கொண்டிருப்பது சுவர்க்கத்தை நோக்கி…
இதயம் முழுவதும் மதுவை நிறைத்த இலைக்கொத்துக்களையும் தாண்டி… காட்டின் சதுப்பு நிலத்திலிருந்து நிலவு நிறைந்த சுவர்க்கத்தை நோக்கி…
பசவனின் மனம் ஒவ்வொரு துளிர்மீதும் ஏறி உயரே உயரே சென்றது. அனேக லட்சம் தேனீக்களின் ஆர்ப்பரிப்பு அந்த வனாந்தரத்தில் எதிரொலித்தன.

“சல்லி… இதுதான் சுவர்க்கம். இதுதான் நம் வீடு… இங்கேதான் நம்முடைய குழந்தை பிறக்கப்போகிறது.”
சல்லி ஆச்சரியத்தில் மூழ்கி நின்றாள்.

பங்குருப்பூக்களின் வாசனை தாலாட்டியது. பொன்னிற தேனடைகளில் இருந்து தேனெடுத்துக்குடித்து மயக்கத்தில் மூழ்கிப்போனார்கள். போதையில் உறங்கிப்போனார்கள். மனிதனின் கஷ்டங்களையும் தோல்விகளையும் மறந்து போனார்கள். தங்களுக்கு இஷ்டமில்லாத ஒரு கிராமம் எங்கோ எப்போதோ இருந்தது என்பதுகூட அவர்களுடைய நினைவிற்கே வரவில்லை.

அருவிக்கரையில், கூவை இலைகளால் வேய்ந்த கூரையின் கீழ் மழைக்காலத்தின் மாலை வேளைகளில் உறங்கினார்கள். கோடைக்காலத்தில் சதுப்புநிலத்தின் குளிர்ச்சியை போர்த்திக் கொண்டார்கள்.

பருவமாற்றங்களை கண்ணெதிரே பார்த்துக்கொண்டிருந்த சல்லிக்கு ஆச்சரியம் தாளவில்லை. எந்த இடையூறும் இல்லாது தனித்துப்போன இரண்டு உயிர்கள் உருவத்தைப் பகிர்ந்துகொண்டன.
சல்லியின் அடிவயிற்றில் முட்டி விளையாடும் குழந்தையிடம் பசவன் சொல்லுவான்:
“சீக்கிரம் வெளியில் வா…நிலவு மாமனைப்பிடித்து விளையாடலாம். மேகத்திலேறி சவாரி செய்யலாம்.”

கோடை மழை பெய்யும் சாயங்கால வேளைகளில் பூங்குரு பூத்துக்கிடந்த அந்த அடிவாரத்திலிருந்து புல்படர்ந்த மேட்டிற்கு ஏறிக்கொண்டார்கள். ஆகாயத்தின் எல்லைகளில் பொன்னாலான பூவாடைகள் தோரணமிட்டிருந்தன. புல்தரையின் ஓரங்களில் சூரியனும் சந்திரனும் முகம் பார்த்து நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை சுட்டிக்காட்டி பசவன் கேட்டான்.
“நம்முடைய குழந்தை இவர்களில் யாரைப்போல் இருக்கவேண்டும்?”
சல்லி சூரியனின் சிவந்த முகத்திற்கு நேராக விரலைக்காட்டினாள்.

ஓடிக்களைத்த சூரியன் அவனுடைய சிவந்த முகத்தை தாயின் மடியில் அமிழ்த்தும் நேரமது. உற்சாகமிழந்த சந்திரன் எதிர் ஓரத்தில் நாணத்துடன் நிற்கும் நேரமும் அதுதான்.
சல்லி சொன்னாள்
“பாவம்.”

புல் மலையைவிட்டு அடிவாரத்திற்கு வந்தபோது சல்லி பசவனிடம் சொன்னாள்.
“குட்டன் வாசலை இடிக்கிறான்.”
“கெட்டிக்காரனாக இருந்தால் வாசலைத்திறந்து கொண்டு சீக்கிரம் வருவான்.”
பசவன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
கூவை இலைகளின் கூரையின் கீழ் களிமண்தரையில் பிறந்து வீழ்ந்த குழந்தை காடே அதிரும்படி வீரிட்டது.

கருங்குரங்குகள் மரக்கிளையில் உட்கார்ந்துகொண்டு குனிந்து பார்த்தன. பிறந்து விழும் மனிதக்குட்டியைப் பார்க்க அவைகளுக்கு பாவமாக இருந்தது. எழுந்து நிற்கவோ, புரண்டு கொடுக்கவோ முடியாத பாவப்பிறவிகள்!

குழந்தை பங்குருப்பூவின் தேனை அம்மாவின் விரல்நுனியில் சப்புக்கொட்டி சாப்பிட்டான்.
இதுவரை கேட்டிராத அந்த சப்தத்தை அந்தக்காடு அப்படியே விழுங்கிக்கொண்டது.
நீலச்சேலையின் பாதியைக்கிழித்துக்கட்டிய தொட்டிலில் குழந்தை கிடந்து உறங்கினான். எழுந்தான். அப்புறமும் உறங்கினான். தொட்டிலை விட்டிறங்கிப்போனான். உலர்ந்த சருகுகளின் மெத்தைப்பரப்பில் மண்டியிட்டான். செடிகளின் கிளைகளைப்பிடித்துக்கொண்டு நடந்தான். யாருடைய துணையும் இல்லாமல் அவன் முதன்முதலாக நடந்த அன்றுதான் சல்லியின் கண்கள் திறந்து கொண்டன.
அவை அறிவுக்கண்கள்.
“பசவா…”
“என்னது?…”
“நாம் திரும்பிப்போவோம்…”
பசவன் திடுக்கிட்டான்.
மனைவியின் கண்களை உற்றுப்பார்த்தான்.
அவள் போகவேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறாள்.

ஓர் அம்மாவின் பிடிவாதம்.

“சரி. உன்னுடைய பாத்திரங்கள் எல்லாம் எங்கே?”
மரத்தடியில் இருந்த மண்பாத்திரங்கள் மண்புற்றாகிப் போயிருந்தன. அலுமினியப்பாத்திரங்களில் எறும்புகள் புற்று கட்டியிருந்தன. அந்தப்புற்றுகளும் வெளிச்சத்தை நோக்கி உயர்ந்துகொண்டிருந்தன.
“தேவையில்லை” சல்லி சொன்னாள்.
“எதற்காகப்போகணும்?” பசவன் கேட்டான்.
“மலைக்காளியின் மடியில் வைத்து குழந்தைக்கு சோறு ஊட்டணும்.
மலைக்குப்பக்கத்தில் இருக்கிற பள்ளிக்கூடத்திற்கு அனுப்பணும்.”
பசவன் திடுக்கிட்டான்.

மொட்டைப்பாறையின் உச்சியில், எவனோ கட்டிய சிமெண்ட் கட்டிடத்தில் வறுசட்டியில் எண்ணெய்போல அவர்களுடைய குழந்தை…
“அது வேண்டுமா?”

“வேண்டும்.”
அவளல்லவா பெற்றவள்?
“சரி…”
அவர்கள் இறங்கத்தொடங்கினார்கள்.
சூரியனும் கூடவே இறங்கினான்.
மூங்கில் குடுக்கை நிறையத்தேன்.

கால் இரண்டையும் தகப்பனின் நெஞ்சில் பற்றிக்கொண்டு முதுகில் உட்கார்ந்திருந்தான் மகன்.
உற்சாகத்தில் அவன் பசவனின் குடுமியைப் பிடித்திழுத்துக் கொண்டிருந்தான்.
மேய்ச்சல் முடிந்து கிராமத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த மாட்டுக்கூட்டத்துடன் பசவனும் சல்லியும் நடந்தார்கள். வயல்களில், வைக்கோல் முட்டுகள் தீயினால் புகைந்துகொண்டிருந்தன.
கூடுகளுக்குத்திரும்பிக்கொண்டிருந்த கிளிகளின் கூச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. நடந்து தளர்ந்துபோயிருந்த மாட்டுக்காரன் எருமையின் மேல் உட்கார்ந்து சாட்டைகுச்சியால் ஓட்டிக்கொண்டு போனான்.

கிராமத்தைச்சுற்றிலும் டூரிஸ்டுகள். சாலை சந்திப்புகளில் இருந்த கடைகளில் அவர்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அங்கேயிருந்த நான்கு கடைகளும் அவர்களை கைநீட்டி அழைத்துக்கொண்டிருந்தன.
என்னவேண்டும்?
என்னவேண்டும்?
என்னவேண்டும் உங்களுக்கு?

அவர்களுக்கு எல்லாம் வேண்டும்…சாராயம், பெண், சாமி தரிசனம், இயற்கை எழில், அழகு நிலையம், சூடுதணிக்கும் குளியல், சூடேற்றும் மெத்தை, காட்டுத்தேன்.

பசவன் அப்போதுதான் அந்த இடத்திற்கு வந்தான். மூங்கில் குடுக்கையை தோளில் இருந்து இறக்கிவைத்தான். குழந்தையை தாயின் மார்பில்விட்டான்.

குத்தகைக்காரனின் கடையின் முன்னால் பசவன் நிமிர்ந்து நின்றான். பழைய லுங்கியின் ஒரு துண்டு மட்டும் இடையில் சுருண்டு கிடந்தது. வைரம் பாய்ந்த…தேக்கு மரத்தில் கடைந்தெடுத்த அந்த உடலுக்கு அந்த துண்டுத்துணி ஒரு அவமானச்சின்னமாக இருந்தது.

“என்னடா…ஆளை பார்க்கவே முடியலே…?”
குத்தகைக்காரனின் பார்வை அம்பு பசவனை விலக்கிவிட்டுப் பாய்ந்தது.
பிறந்த மேனியாக நிற்கிற சல்லியையும் அவளுடைய மார்பில் அள்ளிப்பிடித்திருந்த குழந்தையையும் பார்த்த குத்தகைக்காரனுக்கு புத்தி தடுமாறியது.
அவனுக்குப்பின்னால் டீ போட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஓடிவந்து நின்று கொண்டான்.
அவனுக்கு புத்தி தடுமாறவில்லை.
சுவையான ஒரு பழத்தை சாப்பிடுகிற பாவனையில் அவன் அங்கேயே நின்றுகொண்டான்.
தூர இருந்தும் அருகில் இருந்தும் பறந்துவந்த ஆயிரம் கண்கள் அவர்களை மொய்த்தன.

தேனடையை மூடிய தேனீக்களைப்போல.

பார்வையின் வேகம் தாக்கிய குழந்தை, தாயின் முலையைப் பிடித்திருந்த பிடியைவிட்டான். வீரிட்டு அழுதான்.

பசவன் இடுப்பில் மிச்சமிருந்த துண்டுத்துணியை எடுத்தான்.
தேன்குடுக்கையின் வெளிப்புறத்தை சுத்தமாகத்துடைத்தான்.
துணியைச்சுருட்டி எறிந்தான்.
மூங்கில் குடுக்கை பழையபடி தோளுக்கு இடம் மாறியது.
தோளில் குடுக்கையை சார்த்தும்போது யாரோ ஒருவன் கேட்டான்.
“தேன் விற்கிறதுதானே?”
“இல்லை.”
அப்போதுதான் குத்தகைக்காரனுக்கு நினைவு திரும்பியது. அவனுடைய பார்வை நிலத்தில் குத்தியது.
குத்தகைக்காரன் கேட்டான்.
“பசவா, நீ தேன் கொண்டுவந்தது எனக்குத்தானே?”
இல்லை.

மலைக்காளி உருவமெடுத்து தெருவிற்கு வந்திருப்பதாக செய்தி பரவியது. கிராமம் முழுவதும் அங்கே வரத்தொடங்கியது. நாற்சந்திப்பு நிறைந்தது. பாதைகள் நிறைந்தன. அடிவானத்திலிருந்து மேகங்கள்கூட எட்டிப்பார்த்தன.

பசவன் பூமியையும் ஆகாயத்தையும் ஒரு பார்வை பார்த்தான். அவனுடைய கையணைப்பில் ஒரு பங்குருக்கொடியைப்போல சல்லி பூத்துக்கிடந்தாள்.

அவளுடைய பார்வையில் அந்தத் தேனின் போதை இருந்தது.

மீண்டும் பசவன் கிராமத்தைவிட்டுப்புறப்பட்டுவிட்டான்.


cauverynagarwest@gmail.com
Saturday, August 09, 2008
*****************************

Series Navigation

தமிழில்: மு.குருமூர்த்தி

தமிழில்: மு.குருமூர்த்தி