மழை பெய்தாலும் பெய்யலாம்

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

அமர்நாத்



வீட்டிலிருந்து வேலைக்குக் கிளம்பிய மஞ்சுளாவின் மகிழ்ச்சிக்குப் பலகாரணங்கள். அவள் செல்லும்வழியில் ஒரு நடுநிலைப்பள்ளி. அதன் முன்னால் காலை ஆறேமுக்காலுக்கே காரின் வேகத்தைக் குறைக்கச்சொல்லி மஞ்சள் விளக்குகள் அணைந்து எரியத்தொடங்கும். அங்கே பள்ளிக்கூட பஸ்கள், கார்கள், சாலையைக் கடக்கும் குழந்தைகள், அவர்களை வழிநடத்த மஞ்சள் அங்கி அணிந்து, விசிலை ஊதும் ஆள் என்று கும்பலாக இருக்கும். அப்போது அந்த இடத்தைத் தாண்டிச்செல்ல பத்து நிமிடங்களாவது பிடிக்கும். இன்று ஆறரைக்கே காரைக் கிளப்பிவிட்டாள். பள்ளிக்குமுன் இன்னும் நெரிசல் சேரவில்லை. வீட்டில் மற்றவர்கள் இனிமேல்தான் எழுந்திருக்க வேண்டும். சுந்தருக்கு எட்டுமணிக்குப் பிறகு கிளம்பினால் போதும். அம்மாவும் அஷ்வினும் வெளியே எங்கும் போகப்போவதில்லை.
ஐந்து நிமிடங்களில் நெடுஞ்சாலை 24-இல் சேர்ந்தாள். அதன் போக்கிலும் முட்டுக்கட்டை எதுவுமில்லை. அதிலிருந்து 440க்கு மேற்கே திரும்பியபிறகும் ஊர்திகள் தடையின்றி நகர்ந்துகொண்டிருந்தன. தொலைவில் பந்துபோன்ற மேகக்கூட்டங்கள். அவைதவிர வானத்தில் எங்கும் நீலம். மக்கள் வானொலியிலும் நல்ல செய்திகள்தான். திரு புஷ் வாயைத்திறந்து விபரீதமாக எதுவும் சொல்லிவிடவில்லை. உலகெங்கும் தீவிரவாதிகளுக்கு அப்பாவி மக்களைக் கொல்வதில் கொஞ்சம் அலுப்புதட்டியிருக்க வேண்டும். டோக்யோவிலிருந்து லண்டன்வரை பங்கு மார்க்கெட்களில் சரிவில்லை. பொன் கிடைத்தாலும் புதன்கிடைக்காது என்பது அமெரிக்காவுக்கும் பொருந்தும் போலிருக்கிறது. அஷ்வினைப் பார்த்தக்கொள்வதற்காக அவள் அம்மா ஊரிலிருந்துவந்து பதினோரு மாதங்களாகிவிட்டன. விசாவில் இன்னும் ஒருமாதம் மிச்சம். இதுவரை அவள் உடம்புக்கு வந்து பெரிய மருத்துவசெலவு வைக்கவில்லை. இத்தனைக்கும் அவளுக்கு சர்க்கரை, இரத்த அழுத்தம் என்று ஏகப்பட்ட கோளாறுகள். வான்டர்பில்ட்டில் துணைப்பேராசிரியராக இருக்கும் சுந்தருக்கு டென்யூர் வழங்க அவனுடைய சேர்மன் சிபாரிசு செய்திருக்கிறார், கிடைத்தமாதிரிதான். எப்போது வேண்டுமானாலும் முடிவான செய்தி வரலாம். மூன்றுமாதங்களுக்குமுன் அவள் சேர்ந்த தற்காலிக வேலையும் நிரந்தரமாக வாய்ப்புகள் இருந்தன. நேற்றுமாலை வான்டர்பில்ட் காப்பகத்திலிருந்து அழைத்தார்கள். இரண்டு வயதுப்பிரிவில் இடம் காலியாகப்போகிறதாம். அடுத்த வாரத்தில் ஒருசில நாட்கள் அஷ்வினை அழைத்துச்சென்று பழக்கவேண்டும். அம்மா திரும்பிப்போனபிறகு எல்லாநாளும் அவனை அங்கே விடவேண்டியிருக்கும். சுந்தர் நிதானமாக ஒன்பதுமணிக்குமேல் அழைத்துவந்தால் அவள் வேலையிலிருந்து மூன்றுமணிக்குத் திரும்பிப்போகும்போது அவனைக்கூட்டிச் செல்லலாம். இவ்வளவு இருந்தாலும் மஞ்சுளாவின் அடிமனதில் ஒரு சஞ்சலம். அஷ்வினுக்கு இன்னும் சரியாகப் பேசவரவில்லை. அது வேறொரு குறைபாட்டின் அறிகுறியாக இருந்தால்…
ஏழுமணிக்கு முன்னதாகவே காரை அடுக்குமாடியில் நிறுத்திவிட்டு கைப்பை, உணவுப்பை இரண்டையும் எப்போதும்போல் எடுத்துக்கொண்டாள். பிற்பகலில் கோடைமழை வரலாம் என்று வானிலை முன்னறிவிப்பு, அதுவும் சிற்சில இடங்களில் மட்டும்தான். எதற்கும் இருக்கட்டுமென்று குடையையும் சேர்த்துக்கொண்டாள். ஆகஸ்ட் மாதத்தின் முதல்மூன்று வாரங்களில் தகித்த வெப்பம் மட்டுப்பட்டிருந்ததால் காலைவேளையில் காரிலிருந்து வான்டர்பில்ட் மருத்துவமையத்திற்கு நடப்பது இனிமையாகவே இருந்தது. வேலையில் கலந்தபோது வீட்டைப்பற்றிய எண்ணங்கள் மறந்துவிட்டன. உயிரியல் ஆய்வுக்கூடத்தில் நீண்டபெயர்கொண்ட ஓர் உபகரணத்திற்கும் அத்துடன் இணைத்த டெல் கணினிக்கும் காய், சிலநாட்களாகவே பேச்சுவார்த்தை இல்லை. இரண்டையும் தாஜாசெய்து நட்புறவோடு பேசவைப்பதற்குள் மணி பத்தரை.
நன்றிகளைப் பெற்றுக்கொண்டு கிளம்பியபோது செல்பேசி அதிர்ந்தது. எடுத்துப்பார்த்தாள், சரவணப்ரியா. அவளைப்பார்த்து பத்துநாட்களுக்கு மேலாகிவிட்டன. உடற்பயிற்சி வகுப்புகளில் தொடங்கிய பரிச்சயம். சென்றமாதம் சரவணப்ரியாவின் கணினி இயங்காமல் தொல்லைகொடுத்தபோது ஒரேநாளில் அதைச் சரிசெய்ததால் பரிச்சயம் நட்பாக நெருங்கியது. முடிந்தபோது இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டே ‘ஜிம்’மிற்கு நடப்பது வழக்கம். அதனால் ஒருத்தியின் குடும்பவிவரங்கள் மற்றவளுக்குக் கொஞ்சம் தெரியும்.
“சாரா! பாஸ்டன்லேர்ந்து எப்போ திரும்பிவந்தீங்க?”
“திங்கள் மதியம். ரெண்டுநாள் சாமியும் நானும் மாத்திமாத்தி ட்ரைவ் செஞ்சோம். நேத்து எக்சர்சைஸ_க்கு வரமுடியல. இன்னிக்கி பதினொண்ணரைமணி க்ளாஸ_க்குப் போகலாம்னு பாத்தேன். உனக்கு வேலை எப்படி இருக்கு?”
“நன்னா போயிண்டிருக்கு.”
“மத்தியானம் மூணுமணிக்கு மேலதான் மழை வரும்னாங்க. இப்பவே இருட்டியிருக்கு. நான் குடை கொண்டுவர மறந்துட்டேன். அதனால முன்னாடியே கிளம்பப்போறேன்.”
“என்னால இப்போ வரமுடியாது. செக்ரடரி ஆஃபீஸ்ல ஒரு சின்னவேலை பாக்கி இருக்கு. நீங்க போங்கோ! நான் அப்புறமா வரேன்.”
“பாக்கலாம்.”
பதினொன்றேகாலுக்கு மஞ்சுளா வெளியே பார்த்தபோது மழை ஆரம்பித்திருந்தது. ‘ஜிம்’மிற்குப் போகவேண்டாமா என்றுகூட நினைத்தாள். சரவணப்ரியாவிடம் அஷ்வினைப் பற்றி முக்கியமாக ஒன்று கேட்டாகவேண்டும் என்பதால் கிளம்பினாள். காலையில் குடை கொண்டுவந்தது நல்லதாகப் போயிற்று. வழிநடுவில் காற்றும் சேர்ந்துகொண்டு பிடித்துத்தள்ளியது. குடையோடு வேகமாக நடக்கமுடியவில்லை. பயிற்சிக்கட்டடத்தில் நுழைந்தபோது 11:35. நுழைவிடத்து மேஜைக்காரி, “குட்மார்னிங், அவசரப்படாதே! இன்னும் உன்வகுப்பு ஆசிரியை வரவில்லை. சக்கரம் தண்ணீரில் வழுக்கி அவள் கார் தெருவின் ஓரத்திற்குப் போய்விட்டதாம். மழையில் நடந்துவருகிறாள்” என்றாள்.
ஆரஞ்சுநிற ஸ்கர்ட்டிற்கும், காலர்வைத்த மஞ்சள் சட்டைக்கும் பதிலாக உலர்துணியில் நெய்யப்பட்ட டி-சட்டையையும், ஷார்ட்ஸையும் அணிந்து மஞ்சுளா உடற்பயிற்சிக்கூடத்தில் நுழைந்தாள். எதிர்பாராத மழையால் பாதிக்கும்பல்தான். எப்போதோ வருகிற இரண்டு ஆண்களையும் காணோம். ஆசிரியைக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அரட்டை. நான்கைந்து பெண்களுக்கு நடுவில் பேசிக்கொண்டிருந்த சரவணப்ரியாவின் முகத்தில் கவலையா, வருத்தமா? பதினெட்டு ஆண்டுகள் ஆசையாக வளர்த்த பையனைப் பிரிவதென்றால் கஷ்டமாகத்தான் இருக்கும். இரண்டுவயது அஷ்வினைக் காப்பகத்திற்கு அனுப்புவதே அவளுக்கு பெரிய யோசனையாக இருக்கிறது. எப்போதும் தனியாகவே விளையாடும் அவனை அங்கே மற்ற குழந்தைகள் கேலிசெய்தால்… பெண்களின் கும்பலில் கலக்காவிட்டாலும் அவர்கள் பேச்சு காதில்விழுந்தது.
சரவணப்ரியா பாஸ்டன் சென்றது ரூமா பானர்ஜிக்குத் தெரியாது போலிருக்கிறது. ரூமாதான் எல்லோரிலும் மூத்தவள், அறுபத்தைந்தைக் கடந்தபின்னும் வேலையைத் தொடர்ந்துகொண்டிருந்தாள். அவள் அனுபவ அறிவுரைகளை மற்றபெண்கள் மதிப்பதுண்டு.
“சாரா! ஏன் என்னவோபோல் இருக்கிறாய்?” என்று கேட்டாள்.
“பையனை எம்ஐடியில் விட்டுவிட்டு வந்தோம். இனி அவனைத் தாங்க்ஸ்-கிவிங்போதுதான் பார்க்கமுடியும். அதனால் கொஞ்சம் வருத்தம்.” ஏக்கம் குரலிலேயே தெரிந்தது.
“முதலில் அப்படித்தான் இருக்கும். எனக்கும் இருந்தது. ஆனால் என் பெண்ணும் பையனும் கல்லூரியில் இருந்த காலம்தான் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலம்” என்று ரூமா ஆரம்பித்தாள். “அவர்கள் இருவரும் எனக்குத் திருமணம் ஆனவுடனேயே அடுத்தடுத்துப் பிறந்துவிட்டார்கள். பள்ளிக்குத் தயார்செய்வது, கோடை விடுமுறையில் காம்ப்புக்கு அனுப்புவது, பியானோ வகுப்புகளுக்கு, சாக்கர் (ஃபுட்பால்) பயிற்சிகளுக்குக் கூட்டிச்செல்வது என்று ஓய்வில்லாமல் செய்தோம். ஒரு பெண், ஒரு பையன் என்பதால் ஒவ்வொருவரையும் தனித்தனி இடங்களுக்கு அழைத்துச்செல்ல வேண்டும். இதற்கு நடுவில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டில்வைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு காரோட்டத் தெரிந்தபிறகு ஒழுங்காக வீட்டிற்குத் திரும்பவேண்டுமே என்று மனம் அடித்துக்கொள்ளும்.” மழை அவளை மனம்விட்டுப் பேசச்செய்தது போலிருக்கிறது. “கல்லூரியில் படித்தபோது அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பிவிட வேண்டியதுதான், வேறெந்தப் பொறுப்பும் கிடையாது. அவர்கள் எந்த வகுப்புகள் எடுத்தார்கள், என்ன க்ரேட் வாங்கினார்கள் என்று எதுவும் எங்களுக்குத்தெரியாது. மேலே என்ன படிப்பது என்று அவர்கள் எங்களைக் கேட்டதுமில்லை. வருஷத்திற்கு நான்குமுறை வீட்டில் ஒருவாரம் தங்கி சோம்பேறித்தனத்தை அனுபவித்துவிட்டுப் போய்விடுவார்கள். மற்றபடி எங்களுக்கு நிறைய நேரம் கிடைத்தது. அப்போதுதான் எங்களைப்பற்றி யோசிக்கவே ஆரம்பித்தோம்.”
அவள் முடிப்பதற்குக் காத்திருந்ததுபோல் ரிபெக்கா, “உனக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். என் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை முடித்த காலம் எனக்கொரு பயங்கரக்கனவு, இன்னமும் அது தொடர்கிறது” என்றாள்.
“ஏன்?”
“பையன் கல்லூரியில் ஒரு செமிஸ்டர்கூட முடிக்கவில்லை. படிக்கப் பிடிக்கவில்லை என்று வீட்டிற்கே திரும்பிவந்துவிட்டான். இரண்டு ஆண்டுகளாக வேலைக்கும் போகவில்லை. அவனுடைய அறையில் அடைந்துகிடக்கிறான். அதை சுத்தம்செய்வதுகூடக் கிடையாது. அவன் அப்படியென்றால் அடுத்த பெண் பள்ளிப்படிப்பை முடித்தபோதே யூ.எஸ்.மரீன் ஒருவனைச் சந்தித்திருக்கிறாள். அது எங்கே, எப்போது என்பது எங்களுக்கு இன்னமும் புரியாத புதிர். இப்போது கல்யாணமும் ஆகவில்லை, கல்லூரிக்கும் போகவில்லை, ஆனால் குழந்தை மட்டும் பிறக்கப்போகிறது. இருவருக்குப் பதிலாக மூன்றுபேர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு என்தலையில். நான் டயபர் மாற்றி எவ்வளவோ காலமாகிவிட்டது.
“என் வாழ்க்கையின் பொன்னான காலம் என் பையனுக்கும் பெண்ணுக்கும் மூன்றிலிருந்து பதினைந்து வயதுவரை இருந்தகாலம். எதையும் விரும்பிச் சாப்பிடுவார்கள். எங்கே அழைத்துச்சென்றாலும் சண்டை போட்டுக்கொண்டு உற்சாகமாக வருவார்கள். மினிவானில் பக்கத்தில் உட்காரமாட்டார்கள், ஆளுக்கொரு வரிசை தரவேண்டும். பள்ளிக்கூடத்தில் சரியாக நடந்துகொள்ளவில்லை என்று ஆசிரியர்களிடமிருந்து குறிப்பு வந்ததில்லை. என் கணவனும் நானும் இளமையின் உச்சத்தில் இருந்தோம்” என்று ஏக்கத்துடன் முடித்தாள்.
பேச்சு குழந்தைகளைப்பற்றியே இருந்தது கிட்டிக்கும், லிசாவுக்கும் பொறுக்கவில்லை. இருவரும் இருபதுகளில் இருக்கலாம், பயிற்சிவகுப்புகளுக்கு இணையாக வந்துபோவார்கள். “உயர்நிலைப்பள்ளியில் படித்த நான்கு ஆண்டுகள்தான் எங்களுக்கு மிகவும் பிடித்த காலம். கவலையென்பதே கிடையாது. வகுப்பிலிருக்கும் எல்லாப்பையன்களும் எங்கள் கண்பார்வை அவர்கள்மேல் விழாதா என்று ஏங்குவார்கள்.” இப்போது யாரும் ஏங்குவதில்லை போலிருக்கிறது.
மழை வலுத்து கூரையைத் தாக்கும் சத்தம். மேஜைக்காரி உள்ளே வந்து, “ஆசிரியையால் வரமுடியாதாம். மானிடரில் டிவிடி போடுகிறேன். அதைப்பார்த்து செய்யுங்கள்!” என்றாள்.
ஏனோதானோ என்று உடற்பயிற்சியை முடித்து, பெண்களறையில் வேலைக்கான உடைகளுக்கும், காலணிகளுக்கும் மாற்றிக்கொள்ளும்போதும் மகிழ்ச்சியான காலம் பற்றிய பேச்சு தொடர்ந்தது. கட்டடத்தைவிட்டு வெளியேவந்தபோது வெறும் தூறல்தான். மஞ்சுளா குடையில் சரவணப்ரியாவுக்கு இடம்தந்தாள்.
“தாங்க்ஸ், மஞ்சு!”
“சாரா! உங்க வாழ்க்கைலே எப்போ ரொம்ப சந்தோஷமா இருந்தேள்னு நீங்க சொல்லலியே” என்று நினைவூட்டினாள்.
“மகிழ்ச்சியான காலங்கள் நிறைய. அதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லணும். மிக வருத்தமான ஒண்ணுதான் தனியா தெரியுது.”
“எப்போ நடந்தது?”
“நான் பி.எஸ்ஸி. படிக்கும்போது. அப்படின்னா மூணு மாமாங்கத்துக்கு முன்னால” என்று சரவணப்ரியா சிரித்தாள். “அப்பாவுக்குக் கொஞ்ச நாளாவே அப்பப்போ வயித்துவலி வந்துபோகும். திடீர்னு அதிகமாப் போயிட்டுது. வயத்திலே கான்சர்னு டாக்டர் சொல்லிட்டார். பாவம், கடைசி ரெண்டு மாசம் வலிலே ரொம்ப துடிச்சுப்போயிட்டார். அம்மாவுக்கு உதவியா அக்கா வந்திருந்தா. அப்போ அவ குழந்தைக்கு ஒரு வயசுக்கு மேலேயே இருக்கும். அதிகம் அழாது, பாக்கவும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். டௌன் சின்ட்ரோமா இருக்குமோன்னு எனக்கு சந்தேகம். அத்தைக்கு அது காரணமாப் போயிட்டுது. யாரோ சீனாக்காரனுக்குப் பொறந்த குழந்தையோட திரும்பிவராதேன்னு அக்காவைத் தள்ளிவச்சுட்டாங்க. பத்தாவதுக்குமேல படிக்காத அக்காவுக்கு என்ன வேலை செய்யலாம்னு தெரியலை. பணக்கஷ்டம், மனக்கஷ்டம் ரெண்டிலியும் தவிச்சுப் போயிட்டோம்.”
மனக்குறையுள்ள குழந்தையோடு தவித்த அவள் அக்காவின் மனநிலையைப் புரிந்துகொள்வது மஞ்சுளாவுக்குக் கடினமாக இல்லை. “கேக்கவே கஷ்டமா இருக்கு.”
“ஏதோ, ரிபெக்கா அவ படற கஷ்டத்தைச் சொன்னப்போ இது ஞாபகம் வந்தது. நீ எதாவது சொல்லேன்!” பொறியியல் கட்டடத்தைச் சுற்றிக்கொண்டு மருத்துமையம் நோக்கித் திரும்பினார்கள்.
“வித்தியாசமா இருக்க என் வாழ்க்கைலே சாலஞ்சிங்கா இருந்த ஒண்ணைச் சொல்லட்டுமா? ப்ளஸ்டூக்கப்புறம் நான் எஞ்சினீரிங்கிலே சேந்தப்போ…” பையிலிருந்த செல்பேசி குறுக்கிட்டது. அதை எடுத்தாள். “ஹாய் சுந்தர்! எக்சர்சைஸ் முடிச்சுட்டு உங்க கட்டடத்துக்குப் பக்கத்திலேதான் திரும்பிப்போயிண்டிருக்கேன். என்ன விஷயம்?”
மழை கிட்டத்தட்ட நின்றுவிட்டது. மஞ்சுளா தன் கணவனுடன் சரளமாகப் பேசட்டுமென்று சரவணப்ரியா குடையிலிருந்து விலகி நடந்தாள்.
“மேலிடத்து மீட்டிங்லே எனக்கு டென்யூர் தர முடிவாயிடுத்துன்னு சேர்மன் சொன்னார்.”
“கன்கிராட்ஸ்.”
“இன்னொரு சந்தோஷமான விஷயம். அடுத்த மாசம் அவர் ஊருக்குத்தள்ளி நூறுஏக்கர் நிலம் வாங்கிண்டு போகப்போறாராம். இப்ப ப்ரென்ட்வுட்லே இருக்கிற அவருடைய வீட்டை நமக்கு கமிஷன் இல்லாம கம்மிவிலைக்குத் தரேன்னு சொல்றார். நீயும் இப்ப சம்பாதிக்கிறதனாலே இன்கம்டாக்ஸ் அதிகமாயிடும். அதனாலே அந்த பெரிய வீட்டுக்குப் போயிடலாம்னு தோணறது. அதுக்குப் பக்கத்திலே அஷ்வினுக்கு ஒருநல்ல எலிமென்டரி ஸ்கூல் இருக்காம்.”
மஞ்சுளா அவ்வளவு ஆண்டுகள்தள்ளி இன்னும் யோசிக்கவில்லை. இப்போதைக்கு அவன் ஒழுங்காக ப்ரீஸ்கூல் போனாலே அவளுக்கு சந்தோஷம்தான்.
“சரி, சாயந்தரம் பாப்போம்!” என்று மஞ்சுளா செல்பேசியையும், பிறகு குடையையும் மூடினாள்.
அவர்கள் உரையாடலில் சரவணப்ரியாவுக்கு அஷ்வின் பெயர் ஒன்றுதான் காதில்விழுந்தது. மஞ்சுளாவிடம் கேட்டாள். “நாங்க பாஸ்டன் போறதுக்கு முன்னல அஷ்வினோட ப்ளட் சாம்பிளை அனுப்பிச்சோம், ஞாபகம் இருக்கா?”
மஞ்சுளாவுக்கு அதுவும், அதற்குக் காரணமாக இருந்த உரையாடலும் நினைவுக்கு வந்தன.
“சாரா! அஷ்வினுக்கு ரெண்டு வயசாப்போறது, இன்னும் அவன் ஒருவார்த்தைகூடப் பேசாதது ரொம்ப கவலையாக இருக்கு” என்றாள் மஞ்சுளா, ஒருநாள் இதேபோல ‘ஜிம்’மிலிருந்து திரும்பிநடந்தபோது.
“பையங்க பேச நாளாகத்தான் செய்யும். என் பையனுக்குக்கூட மெதுவாத்தான் பேச்சு வந்தது” என்று சமாதானம் சொன்னாள் சரவணப்ரியா.
“என்னோட ஒண்ணுவிட்ட அண்ணா பொண்ணுக்கு ஆடிசம். அவளை மந்தவெளிலே இருக்கிற ஸ்பெஷல் ஸ்கூலுக்கு அனுப்பறா. ரெண்டுவயசு வரைக்கும் எல்லா குழந்தைகளையும்போல சாதாரணமாத்தான் இருந்தா. நிதானமாப் பேசுவாளாக்கும்னு நினைச்சிண்டிருந்தோம். மூணுவயசு முடியறதுக்குள்ள ஆடிசம்னு சொல்லிட்டா. சொந்தத்திலேகூட கல்யாணம் பண்ணல. எப்படி இது வந்ததுன்னு தெரியலை.”
“அதனால அஷ்வினுக்கும் இருக்குமோன்னு கவலையா இருக்கா? ஒரே பலவீனத்தோட இருக்குற ரெண்டு ரெசஸிவ் ஜீன்ஸ் சேர்றதினால வர்ற வியாதி இல்லை ஆடிசம். பதினாறாவது க்ரோமோசோம்ல சில துண்டுகள் குறைவாகவோ, இல்லை அதிகமாகவோ இருக்கிறதால அது வரலாம்னு சிலபேர் நினைக்கிறாங்க.”
“அப்ப ஜெனிடிக் அனாலிசிஸ் பண்ணமுடியுமா?”
“அது இன்னும் ஆராய்ச்சி அளவிலதான் இருக்கு. அப்பவும், தெரிஞ்சிக்கிறதில என்ன லாபம்? மழை பெய்தாலும் பெய்யலாம் என்கிறமாதிரிதான் ஜீன் அனாலிசிஸ் வழியாச் சொல்லமுடியும்.”
“அது போருமே. மழை வரலாம்னு தெரிஞ்சா வெளிலே போகும்போது குடை எடுத்துண்டு போகலாம். பெய்யாட்டா ஒண்ணும் நஷ்டமில்லை, ஆனா குடை இல்லாம மழையிலே நனைய வேண்டாமில்லையா?”
அவளுடைய சாதுரியமான பதில் சரவணப்ரியாவுக்குப் புன்னகையை வரவழைத்தது.
“ஆடிசமா இருக்குமோ இருக்காதோன்னு மனசை அலையவிடவேண்டாம். அப்படியே ஆடிசமா இருந்தா, இந்த க்ரிடிகல் சமயத்திலே அவன்மேல முழுகவனம் வச்சா கொஞ்சம் முன்னேற்றம் இருக்கலாம்னு ‘ஆடிசம்-ப்ளாக்’ல யாரோ எழுதினதைப் படிச்சேன்.”
“நீ சொல்றது ஒருவிதத்திலே சரி. ஜீன்ஸ் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயம் செய்யறதா இருந்தா எல்லாம் விதிப்படிதான் நடக்கும்னு நம்பறமாதிரி ஆயிடும். ஜீன்ஸோட போக்கை நம்மால சிறிதாவது மாத்தமுடியணும்.”
“ஜெனிடிக் அனாலிசிஸ் பண்ணறதைப்பத்தி உங்களுக்குத் தெரியுமா?”
“என்னோட படிச்ச வனஜாவின் பெண் சுமதி அட்லான்ட்டால பீடியாட்ரிஷியன். டிஎன்ஏலே ரிசர்ச்சும் பண்ணறா. அவகிட்ட அனுப்பலாம்.”
“அதுக்கு மெடிகல் இன்ஷ_ரன்ஸ் பணம் தருமான்னு தெரியலியே.”
“பணம் எதுவும் செலவாகாது, ஆனா ஏகப்பட்ட ஃபார்ம்ல சுந்தரும் நீயும் கையெழுத்து போடவேண்டியிருக்கும். இந்த அனாலிசிஸ்லே சுமதிமேல எந்தப் பொறுப்பும் விழக்கூடாது. அஷ்வினோட சாம்பிள்லேர்ந்து வர்ற முடிவுகளை அவ பப்ளிஷ் செய்யறதுக்கு உரிமை கொடுக்கணும். அப்புறம், அஷ்வின் எப்படி வளர்றான்னு எதிர்காலத்திலே அவளுக்குத் தெரிவிக்கணும்.”
“எனக்கு சம்மதம்தான்.”
“அப்போ, ஒரு திங்கள் மதியம் அஷ்வினை அழைச்சுண்டு வந்தா, என்னோட வேலைசெய்யற ஐரீன் அவனுடைய ரத்தத்தை எடுப்பா. அதை சுமதிக்கு அனுப்பிடலாம்.”
ஒரே கட்டடத்தில் ஒரே மாடியில் இருவரும் வேலைசெய்தாலும் வௌ;வேறு பக்கங்களில் செல்லவேண்டும். பெரியபுள்ளிகள் கார் நிறுத்துமிடத்தில் விடைபெறுமுன் இருவரும் நின்றார்கள்.
“நானே கேக்கணும்னு இருந்தேன். ரிசல்ட் வந்துடுத்தா?” என்று மஞ்சுளா கவலை கலந்த ஆர்வத்துடன் கேட்டாள்.
“கிளம்பறதுக்கு முன்னலே சுமதி கூப்பிட்டு, ‘அனாலிசிஸ் முடிஞ்சுடுத்து, ரிபோர்ட்டை மதியம் ஃபாக்ஸ் பண்ணறேன்’னு சொன்னா. நீ என்னோடு வந்தா உன் கையிலேயே குடுத்துருவேன்.”
“அதைப்பத்தி எனக்கு என்ன தெரியும்? நீங்கதான் பாத்து சொல்லணும்” என்று மஞ்சுளா சரவணப்ரியாவை அவள் ஆராய்ச்சி அறைவரை பின்தொடர்ந்தாள்.
“ஃபாக்ஸ் மெஷின் காலியா இருக்கு. நீ உன் லஞ்ச்சை எடுத்துட்டு வந்தா ஒண்ணா சாப்பிடலாம். அதுக்குள்ள வந்துடும்.” மஞ்சுளா அவ்வாறே செய்தாள். சரவணப்ரியாவின் அலுவலக அறையில் சாப்பிடும்போது, “சுந்தருக்கு டென்யூர் கிடைச்சுடுத்துன்னு சேர்மன் சொன்னாராம்” என்றாள்.
“நான் எதிர்பார்த்ததுதான். கொஞ்சநாளைக்கு முன்னால இன்னொருத்தரோடு சேர்ந்து அவருக்கு அரைமில்லியன் டாலர் க்ரான்ட் கிடைச்சிருக்குன்னு படிச்சேன். உங்களுக்குப் பெரிய கவலைவிட்டது.”
‘இன்னொன்று பாக்கியிருக்கிறதே!’
சாப்பிட்டபிறகு நகல் அனுப்பும் இயந்திரத்தின் அருகே சென்றுநின்றார்கள். செய்தி வருகிறது என்று அறிவிக்க அது மெதுவாக மணிஅடித்து, செய்தியை ஏற்றுக்கொண்டிருப்பதாகக் காட்டியது.
“ரிபோர்ட்ல படம் இருக்கலாம். அதுதான் இத்தனை நேரம் எடுக்குது” என்றாள் சரவணப்ரியா.
‘டாக்டர் சுமதி ராஜாராமனிடமிருந்து டாக்டர் சாரா நாதனின் கவனத்திற்கு’ என்று கொட்டை எழுத்துக்களில் முதல்தாள் மெல்ல நகர்ந்து தரையில் விழுந்தது. அதை எடுத்துப்படித்தபோது, அதைத்தவிர இன்னும் மூன்று பக்கங்கள் வருமென்று தெரிந்தது. பிறகு வந்த படங்களை சரவணப்ரியா கையில் பிடித்துக்கொண்டாள். முதல் படத்தில் நிறைய புழுக்கள் பலதிசைகளில் நெளிந்தன. இரண்டாவதில் பட்டாம்பூச்சிகள் பறப்பதற்குத் தயாராகச் சிறகுகளை விரித்திருந்தன. மூன்றாவதில் கோடுகள் மலைச்சிகரங்களையும் சமவெளிகளையும் காட்டின. சரவணப்ரியா அவற்றை எடுத்துவந்து தன்மேஜைமேல் வைத்து, நாற்காலியில் உட்கார்ந்து அதை முன்னால் இழுத்துக்கொண்டாள். மஞ்சுளா சற்றுத்தள்ளியிருந்த உயர்நாற்காலியில் அமர்ந்தாள். “மூணாவதில இருக்கிற ரெண்டுபடங்கள்தான் எனக்கு நல்லாப்புரியும்” என்று சொல்லியபடி சரவணப்ரியா அவற்றை ஆராய்ந்தாள். குனிந்திருந்த அவள் முகத்திலிருந்து அந்தப்படத்தின் அர்த்தம் என்னவாக இருக்குமென்று ஊகிக்கமுடியவில்லை.
ஒருமுடிவுக்கு வந்தவுடன் அவள்பக்கம் திரும்பி அந்தக்காகிதத்தைக் காட்டினாள். அஷ்வினின் எதிர்காலத்தைக் கணிக்கும் ஜாதகம்போல் மஞ்சுளா அதைப் பார்த்தாள். அதில் இரண்டு படங்கள். ஒவ்வொன்றிலும் இருகோடுகள்.
“மெல்லிய கோடு ஒரு சாதாரண இரண்டுவயதுப் பையனின் பதினாறாவது க்ரோமோசோமின் பகுதி. இன்னொன்று தடியாக இருக்கும். அது அஷ்வினுடையது. இரண்டிலிருக்கும் மரபணுக்கள் பெருக்கப்பட்டு, பிறகு அளவீடு செய்யப்பட்டு இந்தப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மேல்கட்டத்தில் தடியான கோடு இரண்டு இடங்களில் மிகக்குட்டையாக இருக்கின்றன” என்று ஒரு பென்சிலால் சுட்டிக் காட்டினாள். “அந்த இடத்தில் இருக்கவேண்டிய சில டிஎன்ஏ துண்டுகள் குறைவாக இருக்கின்றன. கீழேயுள்ள கட்டத்தில் தடியான கோடு மற்றதைக்காட்டிலும் சில இடங்களில் உயரமான சிகரங்களோடு இருக்கிறது. அந்த டிஎன்ஏ பகுதிகள் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. முதல் இரண்டு படங்களிலும் இதேவிவரங்கள்தான் இருக்கும். வேறுவிதமாகக் காட்டியிருப்பாள்.”
“எல்லாத்துக்கும் என்ன அர்த்தம்? நீங்கதான் விளக்கமா சொல்லணும்!” என்றாள் மஞ்சுளா. செய்தி நல்லதல்ல என்றுமட்டும் உள்ளுணர்வு உணர்த்தியது. அவள் வார்த்தைகள் ஏற்ற இறக்கத்துடன் வெளிப்பட்டன.
“மஞ்சுளா! நாம நடந்துவரும்போது உன்வாழ்க்கைலே ஏதோ ஒரு சமயம் சால்லஞ்சிங்கா இருந்ததுன்னு சொல்ல வந்தே. இனி வரப்போற நாட்களில் அதைவிட பெரிய சவாலை நீ சந்திக்கவேண்டி வந்தாலும்வரலாம்.”

[L.A. Weiss et al. Association between microdeletion and microduplication at 16p11.2 and autism. New England Journal of Medicine, 358(2008), 667-675.]


(amarnakal@yahoo.com)

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்