பந்தல்

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



பாஸ்கர் இறந்து போனான். இன்றோடு இருபதுநாள் ஆகிறது. வீடே வெறிச்சிட்டு விட்டது. வாசலில் அவனது பைக் சிதைந்துபோய்க் கிடக்கிறது. மெக்கானிக் சீக்கிரம் வந்து எடுத்துப் போனால் நல்லது. பைக்கைப் பார்க்கும்போதெல்லாம் பாஸ்கர் ஞாபகம் உள்ளே கொந்தளித்துக் குமுறுகிறது. அவன் சாவு… அது இத்தனை மோசமாய் அமைந்திருக்க வேண்டியதில்லை. அவள் அறியாமல் அவரும், அவர் அறியாமல் அவளும் தனித்தனியே அழுது தீர்க்கிறார்கள். கண்ணைத் துடைத்து மாளவில்லை. ரப்பர் பையை அமுக்கினாற் போல கண்களைத் துடைக்குந்தோறும் கசிகிறது கண்ணீர். ரெண்டு பேர்தான் இப்போது வீட்டில். எதிர் எதிராய் உட்கார்ந்து எதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். வெயில் ஜாஸ்தி என்பது போல, வெறும் வார்த்தைப் பந்தல், உள்ளே அடிக்கும் வெயிலை மறைக்க. வறண்டு கிடந்தது உள்ளே.
”தபால்காரன் வந்துட்டுப் போயாச்சா?” என்கிற மாதிரி எதாவது. கடிதம் வருதோ இல்லையோ, தபால்காரன் வருவது சம்பிரதாய பூர்வமானது. செல்·போனும் அதில் எ·ப் எம் ஒலிபரப்புமாய் அமர்க்களமாய் வருகிற தபால்காரன். உனக்கு தபாலே வராது, என்பார் வேடிக்கையாக. எல்லாம் செல்·போன்லியே பேசிக்குவீங்க, இல்லியா? – என்று சிரிப்பார். சேதிப் பரிமாற்றத்துக்கு நவீன உத்திகள் ஏராளமாய் வந்துவிட்டன. தபாலும் தந்தியும் அதன் முக்கியத்துவம் இழந்துவிட்டதில் ஆச்சர்யம் இல்லை… இப்படி வம்படியாய் சிந்தனைகளை நீட்டித்துப் பார்ப்பார்கள் அம்மாவும் அப்பாவும். என்றாலும் இடைவெட்டி, தூக்கத்தில் ஒண்ணுக்கு நெருக்கினாப் போல சட்டென்று கண்கள் தாமே அழத் தொடங்கி விடும். அவள் அழுதால் அவர் பார்ப்பார். எதுவும் சொல்ல மாட்டார். ஆற்றித் தேற்றுகிற விஷயம் அல்ல அது. தானே பொங்கி தானே அடங்கும். அம்மா கண்ணைத் துடைத்துக் கொள்ளுவாள். ”காபிப்பொடி தீர்ந்துட்டது, வெளியபோய் வரும்போது ஞாபகமா வாங்கிட்டு வாங்க” என்பாள் பிறகு. காபிப்பொடி தீர்ந்ததற்கு ஏன் அழுகிறாள், என்பதுபோல நினைத்துக்கொள்வார். சிரிப்பு வராது. சட்டென்று அவருக்கு அழுகை வரும். துடைத்துக்கொண்டு, ”சரி” என்பார்.
அவனுக்குக் கல்யாணத்துக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மென்பொருள் வல்லுனன். படிக்கிற காலத்திலேயே வேலை கிடைத்து விடுகிறது இப்போதெல்லாம். கணினி வந்தபின் பன்னாட்டுத்தன்மை கொண்ட நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. அல்லது தனியார் நிறுவனம் என்றாலும், பன்னாட்டுத் தொடர்புகள் கிளைத்து விடுகின்றன. வேலை ஏற்றுக்கொள்கிற போதே பாஸ்போர்ட் இருக்கிறதா என்று கேட்கிறார்கள்… அழுகையை அடக்கிக் கொண்டார். பாஸ்போர்ட் இல்லை, என்று யாராவது அழுவார்களா!
நாலைந்து இடங்கள் பார்த்து, கல்யாணப்பெண் புகைப்படங்கள் கூடக் கேட்டிருந்தார்கள். ஒரு படம் வந்திருந்தது. ”தபால் இல்லியா?” என்று அவர் சிரிக்க, ”இல்லை-ன்னு சொல்ல இல்லை! இருக்கு…” என்ற தபால்காரன். உங்கள் காதலிகிட்ட முதல்ல உங்க காதலை நீங்க சொன்னீங்களா, அவங்க உங்ககிட்ட முதல்ல சொன்னாங்களா? – என்றது எ·ப் எம். உலக முக்கியப் பிரச்னைகளை யெல்லாம் எ·ப் எம்-மில் அலசுகிறார்கள்.
செளம்யா என்றிருந்தது பெண் பெயர். லட்சணமாய்த்தான் இருந்தாள். எம் பி யே – என்றது படிப்பு. பெண்களும் யப்பா, இப்பல்லாம் நிறையத்தான் படிக்கறாங்க இல்லியா? ”பெண் குட்டை, எம்பியே நம்ம பிள்ளையப் பார்க்கணும் போல!” என்றாள் அம்மா. ஆனால் அழுகை வந்துவிட்டது அதற்குள். பாஸ்கர்தான் இல்லையே. மேலும் கடிதங்கள், பெண் புகைப்படங்கள் வருமுன்னால் எல்லாருக்கும் தகவல்கூடச் சொல்லிவிடலாம் போலிருந்தது.
எப்போதும் வேகமான பாஸ்கர். சிரிப்பே வேகமாய்த்தான் இருக்கும். ”அப்பா வேலைக்குப் போயிட்டு வரேன்!” வந்து வாசல்கதவைச் சார்த்திக் கொள்ளுமுன் பைக் தடதடத்துக் கிளம்பி வெகுதூரம் போயிருக்கும். என்னவோ அலுவலகத்துக்குத் தாமதமாக ஓடுகிறாப் போல. காலதாமதம் அவனுக்குப் பிடிக்காத விஷயம். சரியான நேரத்தில் சரியாக வேலை செய்யாவிட்டால் முடிவு சரியாக இராது, என்பான். சரியாக இருந்தாலும் அது அதிர்ஷ்டம் சார்ந்தது. அதில் வெற்றியின் நியாயம் இராது, என்பான். சுய தீர்மானங்கள் நிறைந்த பிள்ளை. ஐ-பாடில் பாட்டு கேட்பான். பாடு என்றால் அது பாடும்! இப்போதெல்லாம் செல்·போன் என்றும் ஐ-பாட் என்றும் காதுக்குள் செருகல்கள் தனியே வந்து விட்டன. மற்றவரை சப்தத் தொந்தரவு செய்ய வேணாம், என்கிறாப்போல. என்றாலும் யார் செவிப்புலன் குறைவு கொண்டவர், யார் நிறைவு கண்டவர் என்றே அடையாளம் தெரியாமல் போகிறது.
தெருவோடு பேசிக்கொண்டே போகிறார்கள். பைத்தியங்கள் நின்று வேடிக்கை பார்க்கின்றன.
நல்ல வேகத்தில் ஆனால் நிதானத்தில்தான் போகிறான். பயம் சிறிதுமற்ற பிள்ளை. அதுவரை விபத்து என்று நிகழாதவன்.
மேம்பாலம் அருகில் வேகத்துடன் திரும்ப, வண்டி வளைந்து தெருவில் படுத்தாப்போலப் போகிறது. சற்றுமுன் போன லாரி கொட்டிவிட்டுப் போன டீசல் மணத்துக் கிடந்தது. திரும்பிய வேகத்தில் சக்கரங்கள் டீசலில் வழுக்கி, வண்டி சரிந்து சர்ரென்று எதிர்வந்த லாரியடியில் சிக்கிக் கொண்டது. என்பொருட்டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்…
வண்டி கலவரப்பட்டு ஓடி தார் ரோட்டுக்குக் கீழே இறங்கி மின்கம்பத்தில்மோதி உறுமி நின்றது. டிரைவர் இறங்கிப் பார்த்தபோது, விநாடிக்குள் பாஸ்கர் இறந்திருந்தான். அந்த விநாடிக்கு முன் ஊஊஊஊஊஊ என அவன் அரற்றிய அலறல் பிரதேசம் முழுதும் எதிரொலித்தது. உயிர்க்குலையை நடுக்கியது அந்த ஊளை. தள்ளாடிப் பதறி ஒடிவந்தான் டிரைவர். நெற்றியில் லாரி டயர் ஏறி…. வேண்டாம்.
உவ்வேஏ. வாந்தி வரும் உணர்வாய் இருந்தது அவருக்கு.
பையில் அடையாளஅட்டை இருந்தது.
அலுவலகத்துக்குத் தகவல் கிடைத்து, அங்கிருந்து வந்த செய்தி. அம்மா எடுத்தாள். நம்ப முடியாதிருந்தது செய்தி. போய் ஒருமணி ஒண்ணரை மணி நேரத்தில் மரணச் செய்தி. யார் பேசறீங்க?… என்று கத்தினாள். ஏன் திடீரென்று திகைத்துக் கத்துகிறாள் இவள்… அவர் தொலைபேசியை வாங்கிக் கொண்டார். என்ன? – என்று கத்தினார். உடம்பு கிடுகிடுவென்று நடுங்கியது. செய்திகள் துண்டு துணுக்குகளாகச் சிதறின. விபத்து. பாஸ்கர். மேம்பாலம். பாடி. ஜி.ஹெச்.
ஓடினார்கள். உடனே பார்க்க முடியவில்லை. உடலை அடையாளம் காட்டச் சொன்னார்கள். அவள்… ம்ஹ¤ம், நான் மாட்டேன்… என்றாள் பயந்து. அவர், வேறு வழியில்லாமல், உவ்வ்வேஏ…
தலைசுற்ற உடல் தள்ளாட வெளியே திகைத்து வந்தார். நெற்றிப் பொட்டு விண் விண்ணென்றது. வெளியே தெரிந்தது. உள்ளே யாரோ சுண்டுகிறார்கள் என்கிறாப் போல. துக்கத்தை விட அந்த அதிர்ச்சி. தாள முடியாத நெஞ்சு பாரம். பெரும் இருட்டு சூழ்ந்த கணங்கள். ”அது நம்ப பிள்ளைதானா?” என்று உலுக்கினாள். தலையாட்டினார். தானறியாமல் அழுதுகொண்டிருந்தார். சக்கரைவியாதிக்காரன் போல நீர் தானே கசிந்தபடி யிருந்தது. முகம் நசுங்கிச் சப்பளிந்திருந்தது. கண் பிதுங்… உவ். ”ஒண்ணில்ல” என்று அடக்கிக் கொண்டார்.
மாலையில் போஸ்ட்மார்ட்டம் முடிந்துதான் உடல் கிடைக்கும் என்றார்கள். வீட்டுக்குப் போங்கள் என்றார்கள். எதுவும் புரியவில்லை. பொம்மைபோல் தலையாட்டினார். திரும்பி அவளைப் பார்த்தார். அவர் தோளைப் பிடித்து எழுந்து கொண்டாள் அம்மா. மெல்ல வாசலை நோக்கி நடந்தார்கள். அவன் அலுவலக சகாக்கள் நிறையப் பேர் வந்து கூடிவிட்டார்கள். மேலதிகாரி கிட்டவந்து அவரைக் கட்டிக் கொண்டார். ஒரு குழந்தை மாதிரி கதறிக் கதறி அழ ஆவேசம் வந்தது. அழ முடியவில்லை. கண்ணாடிவழியே பார்க்க முடியவில்லை. சட்டுச் சட்டென்று கண்ணீர் பொங்கி பார்வை அற்றுப் போனது.
ஆ வீட்டின் தனிமை… பயமுறுத்தியது அது. திரும்பத் திரும்ப அவன் வாசலுக்குப் போய் – ”அப்பா வேலைக்குப் போயிட்டு வரேன்!” என்று சொல்கிற மாதிரி இருந்தது. அவர்களின் ஒரே பிள்ளை. இனி என்ன செய்ய எதுவுமே தோணவில்லை. அம்மாவுக்கு மூச்சுத் திணறல் அதிகமாகி யிருந்தது. அலுவலக சகாக்களில் சிலர்வந்து கூட இருந்தார்கள். டாக்டர் யாரோ வந்தார். ஊசிபோட்டு அவளைத் தூங்க வைத்துவிட்டுப் போனார். அவரால் நடக்கவே முடியவில்லை. ஒரு எட்டு இந்தப் பக்கம், அடுத்த எட்டு சற்று தள்ளாடி இடமோ வலமோ என்று ஒதுங்கினார்.
மூணுநாள் கழிந்து எல்லாரும் மெல்ல ஒதுங்கிக் கொள்ள ஆரம்பித்தார்கள். ”என்ன உதவி வேணும்னாலும் கேளுங்கள்” என்று மெல்ல விடைபெற ஆரம்பித்தார்கள். நாலைந்து நாளில் உறவுசனம் கிளம்பிப் போக ஆரம்பித்து அதன்பிறகுதான் உறுத்தியது அந்த வெறுமை. மகா வெறுமை அது. அவனது உடைகளையெல்லாம் மடித்து அலமாரியில் மூடி வைத்தார்கள். அவன் பெரிய படத்தை மாட்டி மேலே விளக்கு எரியவிட்டிருந்தது. அவனது படுக்கையறை சுத்தம் செய்யப்பட்டு, படுக்கை சுற்றி வைக்கப் பட்டிருந்தது.
ஹா இதையெல்லாம் இனி பழகிக்கொள்ள வேண்டும், என்று பெருமூச்சு விட்டுக்கொண்டார். வாழ்க்கை தேரோட்டம், யானையோட்டம் ஓடி அடங்கியிருக்கிறது. சின்னச் சந்தில் அவர் துரத்தியடிக்கப் பட்டு நிற்கிறாப் போலிருந்தது. தூக்கி வீசப்பட்டாப் போலிருந்தது. வார்த்தைகளே தொலைந்து போயிருந்தன. லாரிச்சக்கரத்தில் மாட்டிக் கொண்டு உயிரை விட்டிருந்தன வார்த்தைகள். வார்த்தைகள் அர்த்தபாவங்களை ஒடுக்கி அகராதிக்குள் ஒளிந்து கொண்டாற் போலிருந்தது. தொண்டை ஒலியுற்பத்தி செய்வதை மறந்து போனது. எதும் சம்பிரதாய அளவில் பேச வேண்டியிருந்தாலே கூட அலுப்பாய் இருந்தது. செருமிக் கொண்டு பேச வேண்டியிருந்தது.
பின்னிரவில் எதோ சத்தம் கேட்டு முழித்துக் கொண்டார். கதவைப் பிராண்டும் சத்தம். என்ன சத்தம் இது, தெளியவில்லை. அவள் தானறியாத அயர்ச்சியில் தூங்கிக் கொண்டிருந்தாள். மெல்ல மெம்-மெல்ல தத்-தடுமாறி எழுந்து கொண்டார். விளக்கைப் போட்டால் பாதை தெரியும். – வேண்டாம், விழித்துக் கொள்வாள், என்றிருந்தது. வேண்டாம். மெல்ல சுவரைப் பிடித்தபடி வந்தார். வெளிக் கூடத்தில் மினுக் மினுக்கென்று ஒளித்துள்ளல். அடியில் பாஸ்கர். பெரிய கூடம் என்பதால் சுவரைப் பிடிக்காமல் வந்தார். வாசலில் இப்போது அந்தப் பிராண்டல் அதிகமாய் இருந்தது. வெளியே மழை மூட்டம் போலிருந்தது. வழக்கத்தைவிட இருட்டு அப்பல் அதிகம் இருந்தாப் போல. மழை எந்நேரமும் வரலாம் என்று தோணுமுன்னால் சடசடவென்று சுள்ளி எரிகிறாப் போல மழைச் சத்தம்.
மியாவ்!
அவர் கதவைத் திறக்க உள்ளே பாய்ந்தோடி வந்தது பூனைக்குட்டி ஒன்று. அவர் மறிக்குமுன் ஒரே பாய்ச்சலில் உள்ளே வந்தது. சட்டென விலகிக்கொண்டார். எங்கிருந்து வருகிறது தெரியவில்லை. விறுவிறுவென்று உள்ளே வந்து வாலை அசைத்தது. இருட்டில் அதன் கண்களில் ஜோதி வந்திருந்தது. போ… என்று கையசைத்து விரட்டப் பார்த்தார். அறையில் இங்குமங்கும் தாவியது அது. வெளியே போகுமுகமாக அல்ல. வீட்டை அளக்கிறாப் போல. மியாவ் என்ற குரலில் இப்போது இடம் தேடிய பரிதவிப்பு இல்லை. இயல்பாய் வந்தது குரல். ஐயோ இவள் எழுந்து கொண்டுவிடப் போகிறாள் என்றிருந்தது.
மி யா வ்!
அம்மா வெளியே வந்தாள் அறையை விட்டு. அவளைப் பார்த்ததும் பூனைக்குட்டி ரொம்ப சிநேகம் போல அவளிடம் ஓடிக் காலில் உரசியது. மியாவ்…
அவர் அவளைப் பார்த்தார்.
குனிந்து அந்தப் பூனைக்குட்டியைத் தூக்கிக் கொண்டாள். ”எப்ப உள்ள வந்தது இது? கர்ப்பமா இருக்கோ என்னமோ?” என்று அவரைப் பார்த்து, வெளியே மழையைப் பார்த்- கொட்டாவி விட்டபடியே கேட்டாள்.
”வெளியே விரட்டினேன். போக மாட்டேங்குது…”
மியாவ், என அவள் முகத்தில் உரசியது பூனைக்குட்டி. அவள் ”சாப்ட்டு எவ்ள நேரமாச்சோ. பாவம்” என்றபடி சமையல் அறைக்குள் போனாள். உடம்பை வளைத்து நெளித்து அவளுடன் ஒட்டிக் கொண்டது பூனைக்குட்டி. அவள் தந்த பிஸ்கெட்டை பல்லைக் காட்டியபடி கடித்துத் தின்றது.
அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
பூனையை இறக்கி விட்டாள் அவள். மியாவ்! சர்வ சுதந்திரமாக அது உள்ளே திரிய ஆரம்பித்தது. என்ன அறிவு பாருங்க இதுக்கு… என வியந்தாள் அவள். சிறிதான அவளது புன்னகை. அவர் பார்த்தார். அவரும் புன்னகை செய்தார்.
பூனை பாஸ்கர் அறைக்குள் ஓடியது. சுருட்டி வைத்திருந்த படுக்கைமேல் போய் பூனை உருண்டு புரள ஆரம்பித்தது.
”பூனை நம்மகூடவே இருக்கட்டுமா?” என்று கேட்டார் அவர்.


கவிதை உறவு நவம்பர் 2007
storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்