மாத்தா ஹரி -அத்தியாயம் – 32

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா



என்னுடைய கவிதை காரணமாக தேவசகாயம் கோபித்துக்கொண்டு போனபிறகு இரண்டு நாட்கள் தூக்கமின்றி அவதிபட்டேன், கிருஷ்ணா. வேறொருத்தியாக இருந்தால் இப் பிரச்சினையை எப்படி அனுகியிருப்பாள் என்று யோசித்தேன். அவனுடையத் திருட்டை பத்தினிப் பெண்டிர் அடையாளத்துடன் அங்கீகரித்திருக்கலாம். நமது சமூகம் அடையாளப்படுத்துகிற மனைவியானவள், திருட்டென்று பாராமல், முதன் முதலில் கணவனுடைய கவிதை அச்சில் வந்திருக்கிற பூரிப்பில், தாலியை எடுத்து முன் கழுத்தில் போட்டுக்கொண்டு, வி.ஐ.பி. கடவுளாகத் தேர்ந்தெடுத்து, கணவன் பின்னே பணிவாக நின்று அவன் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்துவிட்டு வந்திருப்பாள். நெஞ்சு கொதிக்கிறபோது, குளியலறையில் புகுந்துகொண்டு மணிக்கனக்கில் தலையில் நீரைக் கொட்டிக்கொள்வாள். கணவனில்லாத நேரமாகப் பார்த்து வாய்விட்டு அழுதிருப்பாள். கணவன் இருக்கிற நேரங்களில் சமைக்கிறபோது கண்ணைக் கசக்கிக்கொள்வது உத்தமப் பெண்களுக்கான அடையாளம் என்கிற நளாயினி காலத்து தந்திரமும் துருபிடிக்காமல் பத்திரமாக அவளிடம் இருந்திருக்கும். அவற்றையெல்லாம் ‘பொய்யாய்க் கனவாய் பழங்கதையாய் போய்விட்டதென்று’ நம்பும் பவானியை அன்றைக்கும் சபித்தேன்.

இந்த நேரத்தில் அப்பா பக்கத்தில் இல்லையே, என்று கலங்கினேன். துன்பத்தைச் சமாதானபடுத்த அப்பா கையாளும் உத்திகள் வித்தியாசமானவை. பலரும் அப்பாவைப் பைத்தியம் என்றே நடத்தினார்கள், எனக்கு அவர் ஒரு சித்தர். திடீரென்று அழுவதும் திடீரென்று சிரிப்பதும், எதையோ அல்லது யாரையோ துரத்துவதுபோல ஓடுவதும், பின்னர் நின்று மூச்சுவாங்குவதும் அதிசயமான காட்சிகள். சீழ் பிடித்த வேதனைச் கொப்புளங்களை, இரவிற் கிள்ளுவது அவரது சுதர்மம். இரவு வேளைகளில், அதிகாலையில் நட்சத்திரமற்ற கருநீல ஆகாயம் அவருக்குப் பிடித்தமானது. ஆகாயத்தின் மூச்சுபோல வீசும் காற்று,. அருவிபோல அவர் மீது விழுவதும், தெறிப்பதுமாக இருக்குங்காட்சி இப்போதுகூட கண்ணிற் தெரிகிறது. அத்தனை துல்லியமாகப் பார்த்து ரசித்திருக்கிறேன். அந்த நேரத்தில் தெருநாய்கள் குரைப்பு இரவில் முழுதும் கரைந்துபோகாமல் திப்பியாய் மிதந்துவந்து எங்கள் காதில் இறங்கும். அதற்குச் சுரம்சேர்ப்பதுபோல சுவர்க்கோழிகள் இடும் ரீங்காரம் இரவொளியில் வழியெங்கும் கசிந்தபடி மிதந்து செல்லும்.

மனிதரற்ற வெளியில் அவர் மாத்திரம் இருப்பதாகப் பாவித்துக்கொண்டு நிர்வாணமாக நிற்பார். பனியில் நனைந்தபடி மொட்டை மாடியில் வெகுநேரம் ஆகாயத்தை உற்றுப் பார்ப்பார். புதையலைக் கண்டதுபோல அவருடையக் கண்கள் பிரகாசிக்கும். உச்சிக்கும், விளிம்புக்குமாக களைத்துபோகுவரை பார்வையை ஓடவிடுவார். டால்கம் பவுடரில் அபிஷேகித்த, நீர்ச் சொட்டும் உடம்பு அது. முதன் முதலில் நிர்வாணமாக அவரைப் பார்க்கையில் நான் பத்துவயது சிறுமி. கலகலவென்று கைகொட்டி சிரிக்கிறேன். பிறகு எதையோ புரிந்துகொண்டதுபோல அய்யய்ய இதென்ன அசிங்கம்? என்கிறேன். அவரிடத்தில் பதிலில்லை.மௌனம்..மௌனம். ‘அப்பா.. அப்பா’.. கூப்பிடுகிறேன். பதிலில்லை. என்னையறியாமல் மனதில் ஒருவித அச்சம். என் கால்கள் மெள்ள பின்வாங்குகின்றன. சட்டென்று என்னைத் தூக்கி தோளில் வைத்துக்கொண்டார். தேம்பிக் தேம்பிக் ஒரு குழைந்தையைப் போல அழுவார். காரணம் கேட்டதில்லை. ஆனால் அடர்த்தியான வேதனைகளை நிர்மலமான வெளியில் இறக்கிவைக்கிறார் என்பது மட்டும் ஓரளவு புரிந்தது. எனக்கும் அப்பாவைப்போல மொட்டைமாடிக்குச் சென்று ஆகாயத்தில் அதன் விளிம்புவரை பயணிக்க வேண்டும் போலிருக்கிறது

அன்றைக்கு நீதிமன்றப் பணிகள் முடிய நேரமாகிவிட்டது. கடற்கரையிலிருந்த ஒரு ஹோட்டலில் சுருக்கமாக மதிய உணவை முடித்துக் கொண்டு, மனம் நிதானத்திற்கு வரட்டுமென எண்ணி காந்தி சிலைக்கு நேர் எதிரே பூங்காவிற்குச் சென்று அமர்ந்தேன். எழுந்திருந்தபோது மனதிற்கு விடைகிடைத்ததுபோல இருந்தது. திரும்பிக் கிழவர் காந்தியின் முகத்தைப் பார்க்கிறேன். ஆறுதலாக இருந்தது. வீட்டிற்குத் திரும்ப பிற்பகல் மூன்று மணி. திண்ணையில் தேவசகாயம் அமர்ந்திருந்தான். பெண்குழந்தை ஒன்று தனது இருகைகளாளும் அவன் கண்களை பொத்துவதும், அவன் அவற்றை மிகுந்த சிரமத்துக்கிடையில் எடுப்பதுபோல பாவனை செய்ய, பொக்கைவாய் சிரிப்புடன் அவன் முதுகைத் தட்டிவிட்டு ஓடுவதுமாக இருக்கிறது. என்னைக் கண்டதும் தேவசகாயம் அமைதியானான். குழந்தையும் சட்டென்று தனது விளையாட்டை நிறுத்திக்கொண்டு அவன் மடியில் அமர்ந்தது. அவனுடைய முகத்தையும் என்ன்னுடைய முகத்தையும் மாறி மாறி பார்த்தபின் அவனது முகவாயைத் தொட்டு எனது பக்கம் கை காட்டுகிறது.

– சாவி கையிருக்கிறது இல்லையா? ஏன் வெளியே உட்கார்ந்து விட்டீர்கள் – நான்.

– பிறகு திருடனென்று பட்டங்கட்டவா? இரண்டு நாட்களுக்கு முன்புதான், சொந்தக்காரர் அனுமதியின்றி ஒருத்தருடைய உடமையில் பிரவேசிக்கக்கூடாதென்று சொன்ன. இது உன்னுடைய வீடு.

– சரி சரி உள்ளே வாங்க, எதற்கு திண்ணையில் உட்கார்ந்துகிட்டு.

– இல்லை. நீ எங்கூட வர. இனி இந்த வீட்டில் நான் தங்குவதாக இல்லை. எங்க வீட்டுக்குப் போவோம். அப்பா¡ கிட்டே பேசிட்டுத்தான் நேரா இங்கு வறேன். பிரான்சுக்கு நாம போகிறவரைக்கும், அங்க தங்ககிறதில் பிரச்சினைகள் ஏதுமில்லைண்ணு சொல்லி இருக்கிறார்.

– பிரான்சுக்குப் போகறது என்கிற முடிவெல்லாங்கூட எடுத்த மாதிரி தெரியுது. பரவாயில்லை. முதலில் உள்ளே வாங்க, நிதானமாகப் பேசுவோம்..

– என்னாலே உள்ளே வரமுடியாது. நீ என்கூட இப்போ வறியா இல்லையா?

– எப்படி வரச் சொல்றீங்க? இப்படி கட்டின புடவையோடா?

– ஆமாம்..கிளம்பு என்னால ஆயிரம்புடவை எடுத்துக்கொடுக்க முடியும்.

– உங்கப்பா பணத்துலேதானே? எனக்கு அதிலே விருப்பமில்லை. – சொல்லிட்டு, கதவைத் திறந்து கொண்டு நுழைந்தேன்.
உடைந்து அழவேண்டும்போலிருக்கிறது. மூச்சிரைக்க நடந்துவந்து கூடத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். பொங்கிரும் கண்ணீரை, புடைவை தலைப்பில் துடைத்தபடி இருக்கிறேன். எதிரே நிழலாடுகிறது. குழந்தையை மார்பில் சாய்த்தபடி தேவசகாயம். என்னைப் பார்ப்பதும் மீண்டும் அவன் தோளில் முகம் சாய்ப்பதுமாக குழந்தை. எந்த நேரத்திலும் அழுவதற்குத் தயாராகத் தனது முகத்தை வைத்திருக்கிறது. குழந்தையின் முகத்தை பார்க்க, எனக்குள் நிரம்பியிருந்த துயரம் சட்டென்று வடிந்ததைப்போல உணர்ந்தேன். கையை நீட்ட, அவள் என்னிடத்தில் தொற்றிக்கொள்கிறாள். தேவசகாயம் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

– சொல்லுங்கள் யாருடைய குழந்தை?

– உனக்கு நினைவில்லையா?. ஆறு மாதங்களுக்கு முன்னர், ரோடியர் மில்லில் வேலை பார்க்கிற காமாட்சி என்ற பெண்மணி தனது மகள் சிவகாமியை ஒருவன் ஏமாற்றி கெடுத்ததாகவும், நண்பர்களைச் சாட்சியாக வைத்து செய்துகொண்ட திருமணத்தையும் ஏற்கவில்லையென்றும் சொல்லிக்கொண்டு குழந்தையுடன் உன்னைப் பார்க்க வந்தது நினைவிருக்கிறதா?

– அவளை ஏமாற்றியது உங்கள் நண்பரென்று சொன்னதாக ஞாபகம்..

– அவர்கள் குழந்தைதான் இது. குழந்தை நன்றாக இருக்கிதில்லையா?

– இல்லைண்ணு நான் சொல்லலை. ஆனால் திடீரென்று நம்ம வீட்டிற்குக் இவளைத் தூக்கிக்கொண்டு வந்ததுதான் எதற்கென்று புரியலை. என்ன நடந்தது. நீங்கள் உங்கள் நண்பரிடத்தில் மறுபடி பேசிபார்த்தீர்களா? அதற்கு இணங்கிவரவில்லையென்றால் சட்டரீதியில் இந்தப் பிரச்சினையை அணுகியிருக்கலாமே.

– முடியாது பவானி. அவர்களுக்கு பணபலமுமில்லை. ஆள் பலமுமில்லை. உனக்குத் தெரியாதா? நம்ம ஊரில நீதிக்கு ரொம்பபதூரம் நடக்கணும்.. இது மாதிரியான சிவில் வழக்குகளில், சட்டம் என்ன சொல்லுகிறதென்பதுதான் முக்கியம், சாட்சிகள் முக்கியமல்லவென்று நீதானே சொன்ன.

– அதனால?

– சட்டப்படி அவளுக்கு நீதி கிடைக்காதுண்ணு நம்பறேன். நாமதான் ஏதாச்சும் செய்யணும்.

– நாம இல்லை, நீங்கண்ணு சொல்லுங்க.

– ஆமா. நாந்தான். ஏமாத்தினது என் சிநேகிதனாச்சே, ஏதாச்சும் செய்யணுமென்று நினைக்கிறேன்.

– என்ன யோசனை வச்சிருக்கீங்க?

– குழந்தையை நாம தத்து எடுத்துக்கிட்டா என்ன, அந்தக் குடும்பத்துக்கும் உதவின மாதிரி இருக்குமே?

– எனக்கு விருப்பமில்லைண்ணு சொன்னா, நீங்க குழந்தையை அவங்க வீட்டிலே விட்டுட்டு வந்திடுவீங்களா என்ன?

– இல்லை. நீ அப்படி சொல்லமாட்டேண்ணு நம்பறேன். உன்னிடத்தில் எனக்கு பிரெஞ்சு குடியுரிமை இருக்கிறதாலே, பிரெஞ்சு கான்சலேட்டுக்குப் போயிட்டு நம்முடைய திருமணத்தைப் பதிவு செய்வது அவசியமென்று உனக்குத் தெரியும்.

– அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.

– கான்சலேட்டுல நம்ம திருமணத்தை பதிவு செய்துவிட்டபிறகு, பிரெஞ்சு சட்டப்படி தத்து எடுப்பது அத்தனை சுலபமல்ல. அவர்கள் பெரும்பாலான விண்ணப்பங்களை நிராகரிக்கிறார்கள்.

– குழந்தையின் தாய் அதற்குச் சம்மதிக்கிறாளா? பேசினீர்களா?

– அவர்கள் இருக்கிற நிலமையில் சம்மதிக்காமலென்ன?

– அவர்கள் இல்லாத நிலைமையில் என்று சொல்லுங்கள்..

– என்ன சொல்ற?

– நீங்கள் ஏற்பாடு செய்திருந்த காமாட்சி, சிவகாமி நாடகமே பொய்யென்கிறேன். அப்போதே என் வக்கீல் புத்தி அந்த நாடகத்தை நம்பாதே என்றது. நான் கேட்டு நடந்திருக்கவேண்டும். நம்பியது என் தப்பு. என்ன செய்யறது பல சமயங்களில் அறிவு உணர்ச்சியிடம் அடங்கிப்போகிறது. இப்போதென்ன இந்தக் குழந்தையை தத்து எடுத்துக்கணும் அவ்வளவுதானே.

– பவானி என்னைத் தப்பாய் புரிஞ்சுகிட்டே. உண்மை என்னண்ணா?

– போதும் இதற்குமேலே உண்மையைத் தெரிஞ்சு என்ன ஆகப்போகுது. நல்லவேளை, எனக்கு ஏற்கனவே ஒருத்தி இருக்கிறாள் என்று மாத்திரம் சொல்லலை. அப்படி ஏதேனுமிருந்தா அதையும் சொல்லிடுங்க.

– இல்லை. பவானி. நீ நினைக்கிற மாதிரி இல்லை. வேண்டுமானா அவர்கள் வீட்டுக்கு உன்னை அழைச்சுபோறேன். இப்போ அந்தக் குடும்பம் மூலக்குளம் கிட்ட இருக்குது, அதுதான் உண்மை. உனக்கு விருப்பமில்லைண்ணா குழந்தையை அவர்களிடத்திலேயே திருப்பிக்கொடுக்கலாம்.

– இப்படி எடுத்ததற்கெல்லாம் கண்கலங்கினால், நீங்க சொல்வது எதையும் நம்பமாட்டேன். எங்கிட்டே அவ்வப்போது கொஞ்சம் உண்மையைப் பேசுங்க.

– பவானி, என்மீது நம்பிக்கை இல்லை. குழந்தை இப்படி மிகவும் நெருக்கமா இருக்கிறதை வச்சு எதையோ வேண்டாததைக் கற்பனை பண்ணிக்க்கிற.

– இந்தக் குழந்தை நம்மோட இருக்கணுமென்றால், வேறு ஏதாச்சும் பேசுங்க.

– எங்க வீட்டுக்கு?

– அதைப் பத்தி பிறகு பேசலாமே, மறுபடியும் எதற்கு இங்கே இன்னொரு சூராவளி.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா