நாதஸ்வாமி

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


சிறிய ஊர், என்றாலும் மடத்தினால் ஊர் பேர்பெற்றதாய் இருக்கிறது. ஜனங்கள் அமைதியானவர்கள். சாதுவானவர்கள். மடாதிபதிக்கு ஊரில் நல்ல செல்வாக்கும் சொல்வாக்கும் உண்டு. மடத்தின் பெயரில் பள்ளிக்கூடம், கல்லூரி எல்லாம் இருக்கிறது. பச்சைச் சீருடையில் சிறார்கள் காலைகளில் தெருவெங்கும் பரபரத்துத் திரிகிறார்கள். தவிர வேதபாடசாலை. ஸ்வாமிஜி அவ்வப்போது பாடசாலைக்கு வருவதும், மாணாக்கர்களுக்கு போதிப்பதும், சந்தேக நிவர்த்தி செய்வதும் உண்டு. அழகான ஊர். தூர தூரங்களில் இருந்தெல்லாம் தத்தம் குடும்பத்தின் நல்வைபவங்கள், விசேஷங்கள் என்று மடத்துக்குப் பத்திரிகைகள், நன்கொடைகள், கடிதங்கள் வருகின்றன. அவைகளைப் பிரித்து, ஸ்வாமிஜியின் பார்வைக்கு, என வகைப்படுத்தி எடுத்து வைக்கவும், பிரசாதம் அனுப்பவும், பதில்கள் எழுதிப்போடவும் அலுவலர்கள் இருக்கிறார்கள். மடத்துள் நுழையவும், வரிசையாய், பெரிய ரேழியில், டிராயர் இணைத்த சிறு சாய்தள மேஜை, உட்கார்ந்தவாக்கில் எழுத, நிறைய குறுங்கால் மேஜைகள், அதன் பின்னே சிறுகுடுமி, பெருங்குடுமி, மேற்சட்டையணியாத, வெள்ளெழுத்துக் கண்ணாடி சேவகர்கள். நீறில்லா நெற்றி பாழ். சட்டையணியாமல் இருக்கலாம், தப்பில்லை போலும். பெரும்பாலும் வரவு செலவு, கணக்கு வழக்குகள் பரபரப்பாகவே இருக்கின்றன. மடத்துக்கு நிறைய நிலபுலன்கள் உண்டு. பெரிய மாட்டுத்தொழுவம் உண்டு. இப்போதும் மடத்துக்குப் பால்மாடுகள், பசு, எருமை என்று தானமளிக்கிறார்கள். மடத்தில் பூஜை, சமையல் என்று, நெய், பால் தேவைகளுக்கு தொழுவத்தில் இருந்தே கிடைத்து விடுகிறது. ஸ்வாமியை தரிசனம் பண்ணவரும் பக்தர்களுக்கும் தர்மபோஜனம் நித்தியப்படி நியதி. வெள்ளிக்கிழமைகளில் ஸ்வாமிஜி செய்யும் கோபூஜை விசேஷமானது. எப்போதும் அவரைச்சுற்றி ஒரு பரிவாரம் காணப்படுகிறது. அது ஸ்வாமிஜிக்குச் சிலசமயம் தேவையாயும், சிலசமயம் இடைஞ்சலாயும் ஆகிப்போகிறது. இந்த வயசிலும் ஸ்வாமிஜியின் முதுகுநிமிர்வும் மிடுக்கும் தளரவில்லை. தேகம் வஜ்ரம் குறையவில்லை. என்ன வேகவேகமாய் நடக்கிறார். தண்டத்தை முன்னகர்த்தி விறுவிறுப்பான அவர் நடை, எங்கிருந்தும் பார்க்க அழகு. சிஷ்யகோடிகள் சரணம் கோஷித்தபடி பின்னால், ஓடிவர வேண்டியிருக்கிறது. கோபித்துக்கொண்டு முன்னால் முன்னால் அவர் போகிறாப் போலக்கூட சிலசமயம் தோன்றும். பற்றுக பற்றற்றான் (பலசரக்குக் கடை) பற்றினை, என்று பரிவாரம் அவர்பின் சரணடைந்தது.

அகலமெடுத்த வீதிகளில் ஒருகாலத்தில் தேர் ஓடியது. தேர் பராமரிப்பின்றி தகரமறைப்புக்குள் ஒடுங்கிக் கிடக்கிறது. சோம்பேறிகள் அதனடியில் நாய்களை விரட்டிவிட்டுப் படுத்துக் கொள்கிறார்கள். என்றாலும் ஊரில் இப்பவும் கூட பல்லக்கு, ஸ்வாமிபுறப்பாடு என்று கோவிலில் இருந்து உற்சவம் உண்டு. பூப்பல்லக்கு, ராஜராஜேஸ்வரிக்கான சிங்கமுக வாகனம், முருகருக்கான மயில், விநாயகருக்கு மூஞ்சூறு, என விதவிதமான வாகனங்கள், வணணச்சாயம் குறையாமல் பிராகார விதானங்களடியில் துணிபோட்டு மூடிக்கிடக்கும், சலூனில் ஷேவிங் செய்ய உக்காந்தாப்போல. ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில். பதிகம் பாடப்பெற்ற தலம் அது. விசேஷ நாட்களில் ஊரே கொந்தளித்துக் கிடக்கும். மாடவீதிகள், ரதவீதிகள் கோடைக்கால ஆறாய் ஒடுங்கி, சாலையின் இருபக்கமும், வளையல் ரிப்பன் பொறிகடலை, என்று கடைகள். கண்ணதாசன் காதல்பாடல்கள், கண்ணதாசன் தத்துவப்பாடல்கள், அர்த்தமுள்ள இந்துமதம் – கண்ணதாசன் எழுதாத பாகங்கள் கூட கிடைக்கும். வசந்தமாளிகை திரைக்கதை வசனம். ஆண்மைக்குறைவு, நீரிழிவு என்று பயமுறுத்தி, அவசர உதவிக்கரம் நீட்டும் புத்தகங்கள். பக்கத்தில் லேகிய விற்பனையும் சிலசமயம் நடக்கிறது. இலவச நீர்மோர் தண்ணீர்ப் பந்தல்… தண்ணி சரி, கூடவே மோரும் ஊத்துங்கப்பா. எதானாலும் ஒசிதானே, என்று வாங்கி வாயில் ஊற்றிக்கொள்ளும் ஜனம். ஆப்ரிக்கன் தலைமுடிபோல் குச்சி குச்சியாய் நிற்கிற ஊதல்களைக் குத்திய பெரிய கம்புடன், நாராச ஒலியுடன் ஊதல் ஒன்றை ஊதியபடி வியாபாரி. எங்கோ வேறிடத்தில் இருந்து குரங்கை ராவோடு ராவாய்த் தோளில் தூக்கிக் கொண்டு வந்துசேரும் வித்தைக்கார குரங்காட்டி. பசிக்கு ஓசிச்சோறு கிடைக்கும் என்று காவிகட்டிய பிச்சைக்கூட்டம், தவிர பக்தமகா ஜனம் – உள்ளூர்க்கூட்டம், வெளியூர்த்திரள், என்று ஊரே கலகலத்துக் கிடந்தது. வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் அதிகம். மனுஷாளுக்கு இதெல்லாமும் வேண்டியிருக்கிறது. அடிக்கடி ஊரே ஒன்று கூடுதல். ஆரவாரித்தல். அங்கேவந்து மொட்டைபோடவென்றே முடிவளர்த்து, மாதக்கணக்கில் வெட்டாமல் தலையில் பத்திரமாய்ப் பேனுடன் இங்கே சேர்க்கிறார்கள். பால்காவடிபோல, பேன்காவடி!… கருமுடிகண்ட மண்டைகள் இப்போது நிறம் மாறி, சீவாத இளநீர் போலும் பச்சை. சூடுதாளாமல் அவை சந்தனம் சாத்திக் கொள்கின்றன. வாழ்வின் மகத்தான காரியம் ஒன்றை குடும்பத்தோடு வந்து செய்துமுடித்தார்கள் அவர்கள். மூக்கொழுகும் குழந்தை மொட்டைகள். திருப்திசார்ந்த முகங்கள். எளிய ஜனங்கள்.

பஸ்நிலையத்தில் இருந்து பார்த்தாலே பெரிய கோபுரம் தெரிகிறது. மடத்துக்குப் போகிறவர்கள் முந்தைய நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். கண்டக்டர் நிறுத்தி, விசாரித்து, இறக்கி விடுகிறதுண்டு. அவசர அவசரமாய் இறங்கிய ஜோரில் சட்டையைக் கழற்றி அக்குளைச் சொறிந்து, பூணூலால் முதுகைத் தேய்த்து, பையில் இருந்து துண்டை எடுத்து வேஷ்டிமேல், பெல்ட்போல் கட்டிக்கொண்டு, புருஷமாரின் பவித்ர பாவனைகள். பெண்களின் குங்குமம் அப்போது ஒளிகூடித் தெரிகிறது. அவர்கள் பட்டுப்புடவைகளில் இருக்கிறார்கள் அநேகமாக. பூ என்று சொல்லாமல் புஷ்பம் என்று வார்த்தைகள் பயன்படுகின்றன. புஷ்பத்தைக் கிள்ளி ஒருத்தி கொடுக்க அடுத்தவள் கண்ணில் ஒற்றிக்கொண்டு தலையில் வைத்துக் கொள்கிறாள். ஒருத்தி பழைய வாடிய புஷ்பத்தை தெருவில் அவிழ்த்தெறிகிறாள். நீளநார் கூட தேசியக்கொடி ஏற்றினாப்போல உதிரும் சிறு மலர்கள்.

பெருங்கோவில். பிராகர விஸ்தீரணமே மயக்கவைக்கிற பிரம்மாண்டம். அழகு. உயர உயரத்துக்கும் சுற்றுச் சுவர். நெடும்பட்டைச் சிவப்பு சாத்திய சுவர். காலோடு குச்சிகட்டிக்கொண்டு, நீள்பட்டையான பெரும் பேண்ட்டு அணியும் சர்க்கஸ் கோமாளிபோலச் சுவர். அதன் மே-ஏ-லே எட்டிப்பார்த்தபடி அசுர பொம்மை. தலைல குதிச்சிராதய்யா. மரவுச்சிக் கிளையில் இருந்து சுவரில் சாடியேறும் குரங்குப்படை. பிராகார உள்ளே நந்தியாவட்டை, பன்னீர், இட்லி, தங்கரளி, வில்வ மரங்கள். செடிகள். பெரு விருட்சங்களில் காலை மாலைகளில் பட்சிஜாலங்கள். பெரும் இரைச்சல். பிரசாதம் வாங்க அர்ச்சகரை மொய்த்த பக்தக் கூட்டம் போல சப்தக்காடு. கோவில்களில் பிரம்மாண்டம் சிறைவைக்கப் பட்டிருந்தது. காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது.

ஆ கோவில் வாசலில் யானைமண்டபம். சிலசமயம் யானை சங்கிலிகட்டி நின்றிருக்கும். சிலசமயம் வெளியே எங்காவது போயிருக்கும். என்றாலும் மண்டபத்தில் அடையாளம் போல ஒருவித யானைச்சாணி நாற்றம் எப்போதும் இருக்கும். எப்போதோ போட்ட சாணியை மிதித்து கால்வெதுவெதுப்பாய் உணர்கிற சிறுவர்கள். வேறெதும் மிருகத்தின் சாணியாய் இருந்தால, ச்சீய்-யென்று கால்கழுவிக் கொள்வர். யானைகள் தொப்பி தொப்பியாய் சாணி போடுகின்றன. பெரிய யானை. மணி அதிர அதன் நடை. என்ன கம்பீரம், என்ன வேகம். ஸ்வாமிஜியைப் போல, யானை ஊரின் அழகு.

நன்னாள் விசேஷகால வைபவங்களில், உற்சவயெடுப்புகளில், முன்வரிசை என ஸ்வாமிஜி பங்கெடுத்துக் கொள்கிறார். ஸ்வாமிஜி மனுஷ பிரம்மாண்டம். அவரைச்சுற்றி பரிவாரம். ஹரஹர சம்போ. சிவசிவ சம்போ… என பாராயணம். உற்சவருக்கு வாகனம் என்றால், ஸ்வாமிஜிக்கு டயர்வண்டியில் ஆசனம். அவரைத் தொடர்ந்து யானை. விலங்கு பிரம்மாண்டம். மாவுத்தன் தலையில் முண்டாசு அணிந்து, மேற்சட்டையில்லாமல், லுங்கி கட்டி. அவன் அருகில் தீவட்டிக்காரன். பெருஞ்சுருட்டு போல தீப்பந்தம் தூக்கி அவன் கூட வருதல், யானை சுருட்டு குடிக்கிறாப் போலத் தோணும். பின்னால் நாயன்மார் சப்பரம். கூட தேவார ஓதுவோர். தோடுடைய செவியன் பற்றி, கடுக்கன் உடைய செவியர் பாடுவர். அதைக் கேட்கவிடாமல் மேள நாதஸ்வரம். நடராஜ உற்சவத்தில் அவன், அலைபாயுதே கண்ணா, வாசிக்கிறான். அவனுக்குத் தெரிந்த பாடல். ரசித்தபடி கூடவரும் ஜனம். கரகாட்டம் கூட சிலசமயம். பச்சை, சாம்பல், நீலம் என்று அவர்களின் விநோத வண்ணப்பூச்சு கண்ட முகங்கள். ரங்கோலி கோலத்தில் முகங் குப்புற விழுந்தாப் போல.

பெருந்திரள். விழாவின் பிரம்மாண்டத்தை மனசுள் மூச்சாய் உள்ளிழுத்தபடி அனுபவிக்கிற ஜனம். நேரம் போவதே தெரிகிறதில்லை. புஸ்புஸ்ஸென்று பெட்ரோமாக்ஸ் தூக்கி, கூட்டம் நகரட்டும் என்று காத்து நிற்கிறவனுக்குத் தலை வலிக்குமே, என்று கவலைப்படுவதில்லை. பெட்ரோமாக்ஸ§ம் அவனும் பெருமூச்சு விடுகிறார்கள்! இவன் தலையில் விளக்குபோல, அவள் தலையில் கரகாட்டச் சொம்பு. என்னமாய் வளைந்து நௌ¤ந்து கிளிக்கலசம் விழாமல் ஆடுகிறாள்… நாற்சந்திகளில் விசேஷ கச்சேரிகள், நடனங்கள். வாணவேடிக்கைகள். யானை மிரளாமல் இருக்கணும்… பயமாய் இருக்கிறது. கருப்பு யானைதான் என்றாலும் அதுகூட வயசாக ஆக சாயம்போய் விடுகிறது. நெற்றிப்பக்கம் உள்த்தோல் சேனைக்கிழங்காட்டம் நிறங் காட்ட ஆரம்பித்திருந்தது. சைவ யானை. நெற்றியில் பட்டை பட்டையாய் விபூதி, நடுவே சந்தன குங்குமம். யானை கூட நடந்துவரப் பிரியப்படும் சிறார்கள். யானைகாலில் கொலுசாய் இரும்புச் சங்கிலி.

யானை கொஞ்சநாளாய் ஒருநிலையில் இல்லை. மாவுத்தனுக்கு அது புரிந்தது. கொஞ்சம் பரபரப்பாய் உள்ளெரிச்சலாய் அது உணர்கிறது, என அவன் கண்டுகொண்டான். அஜீர்ணப்பட்டாப் போல ஒரு நிதானமற்ற தவிப்பு. மெல்ல ஆறுதலாய் மாவுத்தன் யானையைத் தடவிக் கொடுத்தான். பெண்யானையைத் தேடிப் போகத் தவிக்கிறதோ ஒருவேளை. ஒன்றிரண்டு வருடங்களாக அதனிடம் அந்தத் தவிப்பு, தேடல் இல்லை. காட்டில் சுதந்திரமாச் சுற்றித் திரிந்த யானை. கட்டிப்போட்டால், அடக்கிப் பார்த்தால்?… அதுசரி, எப்போது எப்படி விஷயங்கள் உள்ளே விதையாய் விழுந்து, மூர்க்கங்கொண்டு முளைத்து, வெடியாய்க் கிளம்புமோ, யாருக்குத் தெரியும்.

கோவில்களில் உற்சவர்முன் செல்லவோ என்னவோ, யானைகளைப் பராமரிக்கிறார்கள். ஆண் யானைகளையே கோவில்களில் வைத்துக் கொள்கிறார்கள். ஸ்வாமிஜிகளில் புருஷமார்போல் பெண்கள் அதிகம் இல்லை. அதும் கோவில் கைங்கர்யங்களில், புனருத்தாரண, புரோக்ஷண, கும்பாபிஷேகங்களில் மடாதிபதிகளும், ஆச்சார்யார்களுமே கலந்து கொள்கிறார்கள். பெண் முனிவர்கள் இல்லை.

விழாக்காலங்களில் ஸ்வாமிஜி முன்னால் பாடகிகள் வந்து அருமையான கச்சேரிகள் செய்வார்கள். மடத்தின் வாசலில் பெரும் பந்தல். தெருவடைத்த பந்தல். ஸ்வாமிஜியின் சங்கீத அறிவும் ரசனையும், ஜனங்களுக்கு பெரிய பெரிய கச்சேரிகளைக் கேட்க வைத்தன. ஸ்வாமிஜி அழைப்பின் பேரில் எந்தப் பெரிய பாடகியுமே தட்டாமல் உற்சவ காலங்களில், நவராத்திரி என்று தொடர்விழாக்களில், அங்கே வந்து பாடிப்போனார்கள். மடத்தின் சார்பில் பட்டு சால்வை, முடிப்பில் பணம், பிரசாதம் வழங்கப்பட்டது… ஸ்வாமியின் பாதந்தொட்டு வணங்கி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

யானை சற்று மூர்க்கங் கொள்ள ஆரம்பித்தாற் போலிருந்தது. மாவுத்தன் அடிக்கடி அதை அதட்ட வேண்டியிருந்தது. விநோதமான கடூரமான அவன் குரல் குழந்தைகளை அச்சப்படுத்தியது. அவன் நாலு முறை, ஐந்து முறை மிரட்டியதும்தான் யானை ஓரளவு பணிந்தது. அவன் யானையை வெகு கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஒரு விநாடிகூட அவன் அதைப் பிரியமுடியாதிருந்தது. சங்கிலிகளை அவன் அவிழ்க்கவே இல்லை. அடங்காமல் திமிறிக் கொண்டிருந்தது யானை. திடீர் திடீரென்று ஒரு பிளிறல். எட்டு திசைகளையும் கலக்கியது அந்தச் சத்தம். தென்னை மட்டைகளை ஆவேசத்தோடு காலில்போட்டு மிதித்துக் கிழித்தது. சில பட்டைகளை விசிறியடித்தது. உக்கிரப்பட்டு வந்தது யானை… மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் அவன் பழகவேண்டி யிருந்தது. வேறெங்கோ பார்த்தபடி இருந்தாலும், அவன் மூளையும் புலன்களும் கவனமும், எல்லாம் யானைமீதே, அதன் நடவடிக்கைகள் மீதே, மையங் கொண்டிருந்தன. கருப்பட்டி, வெல்லம், எல்லாம் சேர்த்த ஒரு நாட்டுமருந்து லேகியம், கேரள வைத்தியரிடம் வாங்கிவந்து, கொடுத்துப் பார்த்தான். விடாமல் அஞ்சுவேளை, ஆறுவேளை கொடுத்தால், ஒருவேளை யானை கட்டுக்கடங்கும் போலிருந்தது. சாணிகூட கெட்டிச்சாணியாய் இல்லாமல், நீர்த்து அமிலவாடை வந்தது. கட்டுகளை அவிழ்க்காமல், நீரைப் பீய்ச்சியடித்து, நன்றாகக் குளிரக் குளிரக் குளிப்பாட்டினான்.

விழாக் கலகலப்புகள் உள்வாங்க, இரவு முற்ற, கச்சேரி களைகட்டியது. ஒன்பது பத்து மணியளவில் கச்சேரி மேடையில் ரும்ம், என்று மைக் சரிசெய்யும்போது ஜனங்கள் புல்லரிப்புடன் காத்திருந்தார்கள். பெருங் கூட்டம். அவர்கள் இடம் கிடைப்பதற்காக ஒருமணி முன்னதாகவே வந்து உட்கார்ந்திருந்தார்கள். பட்டுப்புடவை, வைரகேசரி, பபளபளவென்று பொலிய, பாடகி மேடையேறி வணங்கியதும், கூட்டமே கலகலத்தது…

மாவுத்தன் யானையைவிட்டு நாலுநாளாய் நகரவேயில்லை. யானை அடங்குவதற்கான அறிகுறியே இல்லை. அவன் சற்று அயர்ந்த சமயம், யாரோ பெண் ஒன்று… அதன்முன் வாழைப்பழத்தை நீட்ட, விருட்டென்று அவளையே தன்பக்கமாய் தும்பிக்கையால் வலித்து விட்டது யானை. ஊ-வென அலறல் கேட்டு, மாவுத்தன் ஓடிவந்தான். விநோதமான அவனது கடூரமான குரல் அவளைக் கலவரப் படுத்தியது. யானை தலையை மறுத்தாற் போல ஆட்டி அசைத்தது. ”நீ போம்மா” என்றான் மாவுத்தன். நெஞ்சைப் பிடித்துக் கொண்டே, சிறிய மார்புகள் பொங்கிப் பொங்கித் தணிய அவள் போனாள். பிழைத்ததே புனர்ஜென்மம் என்றிருந்தது.

யானையைக் கட்டித்தான் போட்டிருந்தான். தூரத்தில் கச்சேரி கேட்டது அவனுக்கு. யானை சுவாதீனமாய் இருந்திருந்தால் அவன் வேடிக்கைபார்க்கப் போயிருப்பான். யானையை ஒரு ஓரமாய் நிறுத்தினால் ஆட்கள் வந்துவந்து காசு கொடுத்துவிட்டுப் போவார்கள். யானை, கூட இருந்தால் ஆயிரம் பொன்! யானை இல்லாட்டி, அவனை யார் சீண்டுவார்கள். எப்பவும் சின்னப்பிள்ளைகள் முன் அவன் கதாநாயகன் அந்தஸ்து கொண்டாடினான். அண்ணா அண்ணா, என்று யானையைப் பற்றி நிறையக் கேள்வி கேட்பார்கள்… அவர்கள் ரெண்டு வாழைப்பழம் கொடுத்தால், ஒண்ணு யானைக்குத் தருவான். இன்னொன்றை அவனே சாப்பிடுவான்… வருமானமும் போச். வேடிக்கையும் போச், என நினைக்கிறபோதே அந்த விபரீதம் நடந்தது. முழு ஆவேசத்துடன் கொந்தளித்தது யானை. பெரும் பிளிறல் தூர எல்லைவரை கேட்டது. யானை ஆவேசத்துடன் சங்கிலியை இழுத்து பிணைப்புகளை அறுத்தெரியப் போராட ஆரம்பித்தது. அவனது அதட்டலை அது சட்டைசெய்யவில்லை.

கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது. அந்தப் பெண்மணி ஸ்வாமிஜியின் அபிமான பாடகி. வருடா வருடம் அவரது கச்சேரி அதே திடலில் கட்டாயம் இருக்கும். ஸ்வாமிஜி கச்சேரியை வெகுவாக ரசித்தார். சாட்சாத் சரஸ்வதி தேவியேன்னா பாடறா, என்று சிலாகித்தார். ‘சுவாமிநாதா’, என அந்த அம்மையார் பாடுகையில் கையை நீட்டி, ஸ்வாமிஜியைக் காட்டி… ஸ்வாமிஜியும் அதை ரசித்தார் போலிருந்தது.

யானை திடுதிப்பென்று கட்டுகளை அறுத்தெறிந்தது. எப்படி அத்தனை ஆவேசம் வந்தது அதற்கு தெரியவில்லை. மாவுத்தன் பயந்தலறி கீச்சுக்குரலில் கத்தி ஒளிந்தான். எதிர்க்க நினைக்கிற ஒரேகணம் அவன் யானையிடம் மிதிபட்டுச் சட்னியாகிச் செத்திருப்பான்.

யானை ஆவேசமாய் ஓட ஆரம்பித்தது. இரவு. அதோ கொஞ்சதூரத்தில் விளக்குகள். ஒளிவெள்ளம். கச்சேரி. யானை பெரும் பிளிறல் பிளிறியது.

விநாடியில் ஜனங்கள் சிதறினார்கள். மைக்கில்¢ பாடிக்கொண்டிருந்த பாடகியின் அபஸ்வரமான அலறல். சட்டென்று எழுந்துகொள்ள முடியாத ஸ்வாமிஜியை நோக்கி யானை ஓடியது.


நன்றி / கனவு சிற்றிதழ்
மார்ச் 2007

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்