தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்
>>>
சிலுங்கென உடைகிறது நாள், குளிரான சாம்பல் பூத்த நாள். கடுங் குளிர். வெளிறிய அமுக்கப்பட்ட வெளிச்சம். அந்த மனிதன் பிரதான யூகோன் சதுக்கத்தில் இருந்து ஒதுங்கிய பாதையில் விலகி மேடேறி வந்தான். கீழ்ப்பக்கமாய் அழகுவரிசையிட்ட அதோ மரக்கூட்டம் நோக்கி அந்த மங்கலான, அதிகம் பயன்படுத்தப் படாத பாதை சென்றது. நல்ல செங்குத்து ஏத்தம். மூச்சு வாங்கியது. தன்னை சமாதானப் படுத்திக் கொண்டே கைக்கடிகாரத்தில் மணி பார்த்தான். மணி ஒன்பது. சூரியனே இல்லை. சூரியன் வருகிற அறிகுறியே இல்லை. ஆனால் வானம் நிர்மலமாய் இருந்தது. மேக மூட்டமற்ற நாள்தான் என்றாலும் எப்படியோ ஒரு மந்தாரத்தன்மை. கும்மென்றிருந்தது நாள். அது சூரியனைக் காணாததினால் இருக்கலாம். அதைப் பற்றி என்ன. சூரியன் வாரா நாட்கள் ஒண்ணும் புதிதல்ல. சூரியனையே அவன் பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. தென்பகுதிக்கு அந்த சூரிய கிரகம் லேசாய் எட்டிப் பார்க்கவும், உடனே உள்ளமுங்கிக் கொள்ளவும் மேலும் கொஞ்சநாள்கூட ஆகலாம்.
தான் வந்த பாதையை ஒரு நோட்டம் விட்டான். ஒரு மைல் பரப்பளவான சதுக்கம். மூணடி பாறைப்பனி மூடி இந்தப் பாளங்களின் மேலே எத்தனையோ அடியளவு பனிப் பொழிவு. து¡ய வெண்மை. உறைந்துகிடந்த பனிமேலே மெல்ல அசைந்தன புதிய பனித்துகள்கள். வடக்கிலும் தெற்கிலுமாக பார்வைக்கு எட்டியவரை இடைவெளியற்ற வெண்மை. ஊடே சிறு கருங்குறுகலான பாதை, வளைந்து அது தீவுபோன்ற மரக்கூட்ட வரிசைகளிலிருந்து தெற்கு நோக்கி… மீண்டும் வடக்காக நெளிந்து இன்னொரு தீவுக்குள் மறைகிறது. இந்த அழுத்தமான பதிவுப் பாதையே பிரதான பாதை. தென்திசையாக ஐந்நு¡று மைல் ஓடி, சிலிக்கூட்டுக் கணவாய், தையா, தாண்டியதும் தண்ணீர் உப்புக் கரிக்க ஆரம்பித்து விடும்.. வடப்பக்கமோவெனில் எழுபத்தியஞ்சு மைல்… தாஸன் வரைக்கும். அதையும் கடந்தால் ஆயிரம் மைல்க்கல் தொலைவில் நுலாடோ. மேலும், புனித மைக்கேல் ஆலயம் பெரின் கடல்ப்பக்கமாக. ஆயிரம் ஆயிரத்தைந்நு¡று மைல்வரை மேலும் விரிந்து பரந்த வளாகம்.
தி¨க்கிறாப் போல முடிவேயில்லாமல் நீண்டு போகிற பாதை. சூரியன் இன்றி வெறிச்சிட்ட வானம். கடுங்குளிர். எல்லாம் சேர்ந்த அந்த ஜிலோன்ற வெறுமை. அந்தச் சூழலின் விசித்திரம்… எதையும் அவன் சட்டைபண்ணவில்லை. இதெல்லாம் ரொம்ப காலமாப் பழகிட்டது என்கிறாப் போலவும் இல்லை. அவன் அந்தப் பகுதிக்கே புதியவன். அவன் அங்கே சந்திக்கும் முதல் குளிர்காலம் இது. சிக்கல் என்னென்னா மனுச சென்மம் கோளாறானது கிடையாது. சுதாரிப்புதான், ஆனா சூட்சுமம் பத்தாது. பூஜ்யத்துக்கும் கீழே அம்பது டிகிரின்றது, உறைபனியில் எம்பது டிகிரியாகிறது. எம்மாங் குளிரு, என்னா சங்கடம்டா இது… அப்படித்தான் நினைத்தான் அவன். மனுஷனே வெப்ப ரத்தப் பிராணி. இதமான சூடு, இதமான குளிர்னு ஒரளவுதான் மனுஷனால தாள இயலும். தாக்குப்பிடிக்கிறதும் ஆயுசை நீட்டித்துக் கொள்ளுதலுமான அம்சம்லாம் குறிப்பா மனுஷனுக்குக் கிடையாது. பிரபஞ்சத்தில் மனுஷன் அற்பாயுசுக்காரன்தான் – மைனஸ் அம்பது டிகிரி. ஆளைக் கடிக்கும் குளிர். தோல்க் கையுறைகள், காதுமறைப்புகள், வெதுவெதுப்பூட்டக்கூடிய தோலாடைகள், மற்றும் கனமான காலுறைகள்… அவையில்லாமல் எப்படி நம்மைக் காபந்து பண்ணிக் கொள்வது? மைனஸ் ஐம்பது டிகிரியை வெறும் குளிரின் அளவாக அவன் நினைத்தான். அதற்குமேல் அதைப்பற்றி அவன் பெரிதாக மூளையில் போட்டுக் கொள்ளவே யில்லை.
மேலும் முன்னேறிப் போகுமுன் நிலவரத்தை அறிகிறாப் போல அவன் காற்றில் காறித் துப்பினான். சட்டென அந்த உமிழ்நீர் கெட்டிப்பட்டு உறைகிற விநோதச் சத்தம். வெடி வெடிக்கிறாப்போல… து¡க்கிவாரிப் போட்டது.. திரும்பவும் துப்பினான். திரும்பவும் அந்த எச்சில், பனியில் விழுமுன், அந்த விசித்திரச் சத்தம். மைனஸ் அம்பதில் எச்சில் சத்தமாய் உறையும்… சரிதான். ஆனால் காற்றிலேயே அப்படி இறுகிக் கொண்டது… சந்தேகமே இல்லை – மைனஸ் அம்பதா? அதுக்கும் மேலே குளிர். எந்த அளவு அவனுக்குத் தெரியாது. அது பொருட்டும் இல்லை. பையன்கள் ஹெடர்சன் ஓடையின் இடது கரையில் இருக்கிறார்கள். அங்கிருந்துதான் அவனும் வந்தான். இந்திய நதிதீரத்தின் கிராமாந்தரம் ஊடே அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள். இவன் மாத்திரம் கால்போன போக்கில் பிரிந்து வந்து, யூகோன் திடலின் மரக் கூட்டங்களில் விறகு எதுனாச்சும் தேறுமா என்று வந்தான். திரும்பிச் செல்வதற்குள் சற்று இருட்டிவிடும், உண்மைதான். ஆனால் ஆறு மணிவாக்கில் அவன் திரும்ப அவர்களுடன் சேர்ந்துகொள்ளுவான்… அவர்கள் நெருப்பு மூட்டியிருப்பார்கள். தயாராய் இருக்கும் சூடான ராச்சாப்பாடு. இப்பசத்திக்கு, மதியப்பாட்டுக்கு… மேல்ச்சட்டைப் பையின் பொம்மிய பகுதியை அழுத்திப் பார்த்துக் கொண்டான். பொட்டலம் உள்ச்சட்டையில் பத்திரமாய் இருந்தது… ஒரு கைக்குட்டையில் சுத்தி எடுத்து வந்திருந்தான். உடம்பில் உறுத்தியது. ரொட்டி-பிஸ்கெட்டுகள் உறையாமல் இருக்க அதுதான், உள்ள்ள்ளே வைத்துக் கொள்வதுதான், ஒரே வழி. ரொட்டி நினைப்பில் தானாகவே திருப்தியாய்ப் புன்னகை வந்தது… நடுவே அழகாய் வகிர்ந்து உள்ளே வெண்ணெயும் மசாலாவுமான ரொட்டிகள். நன்கு வறுத்த, மசாலா நிறையத் திணித்த துண்டுகள்.
மரக்கூட்ட அழகான வரிசைக்குள்ளே ஊடுபாதை கிட்டத்தட்ட அழிந்திருந்தது. கடைசியாக அந்தவழியே போன ஸ்லெட்ஜ் (நாயிழுக்கும் வண்டி) தடத்தை மூடி, மேலே ஒரு அடி அளவு பனி. தான் வண்டியில் வராததற்கு சந்தோஷப்பட்டுக் கொண்டான். நடராஜா சர்வீஸ். எத்தனை எளிய பயணம் இப்போது. கையில் கூட எதுவும் எடுத்து வரவில்லை. கைக்குட்டைப் பொதிவில் உணவு, அது மாத்திரம். யாத்தாடி, செமத்தியான குளிரப்பா, வாசனை மழுங்கி மந்தமாகிப் போன தன் மூக்கைத் தேய்த்துக் கொண்டான். விலா எலும்புகளையும் தோல்க்கையுறைகளால் தேய்த்து விட்டுக் கொண்டான். பெருந்தாடிக்காரன்தான் என்றாலும் அந்தத் தாடியானது துறுத்தி நிற்கிற கன்ன எலும்புகளுக்கோ பெரிய பெரிய மூச்சுகளை வெளியேற்றும் மூக்குக்கோ எவ்வித காபந்தும் பண்ணவில்லை.
காலில் வந்து உரசியது நாய் ஒன்று. கலப்பினம். கிட்டத்தட்ட ஓநாய் போலவே யிருந்தது அது. குளிரில் திணறிக் கொண்டிருந்தது. அலைந்து கதகதப்பைத் தேடும் நேரம் அல்ல இது. மனிதர்களைப் பொறுத்த மட்டில் இந்தக் குளிர் ஜாஸ்தி என அதற்கே புரிந்தது. உக்ரக் குளிர். மைனஸ் அம்பது, அறுபது, எழுபதாகவும் இருக்கலாம். சரியாச் சொன்னால் மைனஸ் எழுபத்தியஞ்சு. தண்ணீரின் உறைவெப்பம் அல்லது உறைகுளிர் பிளஸ் 32. ஆகவே உறைபனியின் அழுத்தமான 107 டிகிரி… அதெல்லாம் நாய் அறியாது. மனிதனாட்டம் அதற்கு இந்த நோட்டம் எல்லாம் இராது. ஆனா நிலைமை சரியில்லை என உள்ளுணவர்வால் அது அறிந்திருந்தது. மனிதனைப் பார்த்ததும் ஓடிவந்து அவனை உரசியது. அவன் எப்படியும் விறகு தேடிப் போகலாம், கூடாரம் எதுவும் தட்டுப்படுதான்னு தேடலாம், எங்காவது ஒதுங்கிக் கொண்டு, நெருப்பு மூட்ட முயலலாம்… தீ! அது அறிந்த விஷயம். இப்போது தேவை நெருப்பு. அல்லது பனியில் எங்காவது குழிபறித்து உடல்சூட்டை விட்டுவிடாமல் உள்ளே சுருண்டு கிடக்க வேண்டும்.
அது விடும் மூச்சே ஈரப்பதமாகி கெட்டிப்பட்டு வெண் பனிக் கல்லாய் அதன் உரோமங்களில், உடல் உறுப்புகளிலும், கண்ணிமைகளிலுங்கூட ஒட்டிக்கொண்டு தொங்கி மினுமினுத்தன. இவனுடைய செந்தாடி மற்றும் மீசைப்பகுதிகளிலும் பனிக்கொத்துக்கள். அவன் விடும் பெரிய பெரிய அழுத்தமான வெளிமூச்சும் உடனே உடனே அடர்த்தியாய்ப் பொரிந்தது. அவன் புகையிலை குதப்பிக் கொண்டிருந்தான். மெழுகுபோல் பனி தாடையை விறைக்கச் செய்திருந்தது. புகையிலைச் சாற்றைத் துப்ப அவனால் முடியவில்லை. பனி விழுந்து உறைந்ததில் அவன் தாடியே ஊதிப் பெருத்து விட்டது. அவன் தடுக்கி விழுந்தால் அந்தத் தாடியே சிலுங்கென உடைந்து கண்ணாடித் துண்டுகளாட்டம் மினுமினுப்பாய் நொறுங்கும். ஆனால் அதைப் பத்தி அவன் அலட்டிக்கொள்ளவில்லை. புகையிலை போடுற எல்லாருக்கும் உண்டே இந்த இம்சை. அவனுக்குப் பழகிய இம்சைதான் அது. அதிலும் இந்த அடாவடிக் குளிர்!…
பல மைல் தொலைவுக்கு மரவரிசை. ஊடே கடந்தபடி பயணப்பட்டான். பனியடுக்குகள். ஒரு நதிப்படுகையின் உறைந்த பள்ளத்தாக்கு. ஹெண்டர்சன் ஓடை. பிரதான வழியைவிட்டு பத்து மைல் வந்திருந்தான். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்து. மணிக்கு நாலு மைல் என நடை. பிரதான வழியை இப்படியே குறுக்காக எட்ட மணி பன்னிரண்டு பனிரெண்டரை. நலல விஷயம்தான். தன்னையே உற்சாகப் படுத்திக் கொண்டான். சாப்பாடு மூட்டையைப் பிரிக்கலாமா…
தள்ளாடியபடி ஓடைப்படுகையில் அவன் நடக்கையில் அந்த நாய் திரும்ப வந்து குனிந்து வாலை அவநம்பிக்கையுடன் ஆட்டியபடி அவனை உரசியது. வண்டியொன்று போன பாதை இங்கே பளிச்சென்று தெரிந்தது. அந்தத் தடத்தின் மேல் நாலடி அளவு பனி விழுந்து கிடந்தது. எப்ப போனாங்களோ. அமைதியான இந்த ஓடைப்பக்கம் மாசக் கணக்கில் நடமாட்டமே இல்லைபோல. மெல்ல முன்னேறிப் போனான். ரொம்பவெல்லாம் யோசனை கிடையாது. அப்பிடி யோசிக்கவும் என்ன இருக்கிறது? திரும்ப அந்த பெரியபாதையை எட்டியதும் உணவை முடிச்சிக்கலாம். ஆறு மணிவாக்கில் பசங்களோட போய்ச் சேர்ந்துறலாம்… அவன் பேச அவனுடன் யாரும் இல்லை. இருந்தானாப்ல பேசிற முடியுமா? அவன் கன்னமே கெட்டிச்சுக் கிடக்கு. அலுப்புடன் வாயை, வாய்ப் புகையிலையைக் குதப்பி மெழுகுத் தாடியை இன்னும் பெரிசாக்கிக் கொண்டான்.
திரும்பத் திரும்ப அந்தக் குளிர் தன் விபரீதத்தை உறுத்தலாய் உணர்த்திக் கொண்டேதான் இருந்தது. செமக் குளிர். நடந்தபடியே தோல்க் கையுறைகளால் புறங்கையால் மூக்கை, தாடையெலும்புகளைத் தடவிக் கொண்டான். முதலில் இந்தக் கை, பிறகு மற்ற கை என தன்னியல்பாகத் தேய்த்தபடியே போனான். ஆனால் உரசல் நின்ற கணமே தாடையெலும்புகளோ, மூக்கோ மந்தித்து விட்டன. மூக்கின் நுனி விறைப்புதட்டி அது மெல்ல எலும்புகளுக்கும் பரவுவதாய் இருந்தது. கலவரமாய் கவலையாய் இருந்தது. மூக்குமறைப்பு என எதுவும் போட்டுக் கொண்டு வந்திருக்கலாம். அந்த மூக்கு மறைப்பு கன்னப் பகுதியையும் சற்று தடுப்புத் தருகிறாப் போல இருக்கும். இப்போ இல்லை, அதைப் பத்தி என்ன, விறைத்துப் போன தாடைகள், ஊமைவலி கொடுக்கும், சரி இருக்கட்டும்.
நினைவோட்டமாய் எதுவுமில்லை. மலைப்பாதையை, அதன் அடையாள மாற்றங்களை, அதன் வளைவு நெளிவு சுழிவுகளை, மரக்கொத்துகளை உற்று கவனித்தான். எடுத்து வைக்கிற ஒவ்வோர் அடியையும் முழு பிரக்ஞையுடன் வைக்கிறவனாய் இருந்தான். சந்து எனத் திரும்ப நேரும் ஒவ்வொரு கணமும் அவன் ஹா- என அலுத்தான். திகைத்த குதிரைபோல, பாதையைத் தவற விட்டுவிட்டாப் போல, பாதையில் இருந்து விலகிப் போகிறாப்போல அவன் உணர்ந்தான். ஓரிரு அடி பின்னால் வந்தான் யோசனையில். பாதைமேல் பனி கடுமையாக உறைந்து கிடந்தது. கீழே தரைவரை பனிதான், முழுக்க உறைந்த கெட்டிப்பனி. அந்த ஆர்டிக் குளிர்காலத்தில் இடையே தண்ணீர் கொளகொளக்க வாய்ப்பே இல்லைதான். குமிழியிட்ட மேல்புறம் காட்டியபடி குன்றுகளிலிருந்து நதியோட்டம், பனிப்பாறைகளின் கீழேயும், சிலசமயம் மேல்ப்பக்கமாயும் இருக்கிறதையும் அவன் அறிவான். எந்தக் கடுங்குளிருக்கும் அந்த நதியோட்டத்தை நிறுத்திவிட முடியாததையும் கவனித்திருக்கிறான். ஆனால் அதுதான் அதன் ஆபத்து! நொறுங்கும் அந்தப் பனியின் கிழ் மூணு அங்குலம் முதல் மூணு அடிவரையிலான குழிகள் இருக்கவும் கூடும். மேற்புறம் நெகிழ்ந்த சிறுபாறையாகவும் அடியே நீர்ப்பரப்பும், அல்லது கடினப்பாறை என்றாலுங்கூட, நொறுங்கினால் கீழே கொளகொளத்த தண்ணீர் எனவும், சில இடங்களில் பனியும், நீரும் என மாற்று அடுக்குகளாகவும் கூட அவை அமையக் கூடும். காலடியில் பனி நொறுங்க ஆரம்பித்தால். பொதுபொதுவென்று உள்ளே போய்விட நேரும், சில சமயம் இடுப்பாழம் வரை கூட.
ஆகவேதான் அலுப்பாயும் பயமாயும் அவன் உணர்ந்தான். காலடியில் பனிப்பாளம் சிலுங்கென நொறுங்கவும் அவன் பாதங்கள் சற்று மேல்வரை நனைந்தன. அந்தச் சூழலில் உடம்பில் இந்த சில்லிப்பு பிரச்னையானது. ஆபத்தானதும் கூட. குறைந்தபட்சம் அது போய்ச்சேர்கிற நேரத்தைத் தாமதம் செய்துவிடும். உடனே அங்கே தங்கி, நெருப்பு மூட்டி, சாக்ஸ் மற்றும் மேலுறைகளைக் கழற்றிக் காய வைக்க வேண்டும். நின்று அந்தப் பிரதேசத்தையும், கரைகளையும் நோட்டம் பார்த்தான். வலுதுபக்கமிருந்து புறப்படுகிறது ஆறு. தலையாட்டி அங்கீகரித்துக் கொண்டான். இடப்புறப் பாதைக்கு ஒதுங்கி, தன்னை உற்சாகப் படுத்திக் கொண்டபடி அவன், ஆனால் அடியை கவனமாய் வைத்து நடந்தான். ஆபத்தைக் கடந்துவிட்டதான பாவனை வந்தபின், அதக்கியிருந்த புகையிலையை இன்னொரு தரம் சாறுஉறிஞ்சிக்க் கொண்டான். தொடர்ந்து நாலுமைல் பாதையில் முன்னேற ஆரம்பித்தான்.
அடுத்த ரெண்டு மணிநேரப் பயணத்தில், இதேபோல பல உட்குழிகளை அவன் தாண்ட வேண்டி வந்தது. நீரடி கொண்ட பனிப்பாளங்களில் பொதுவாக ஒரு கல்கண்டுத்தனம், உம்மென்ற பளபளப்பு காணக்கிடைக்கும். அவையே எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை, என்கிறாப்போல ஆபத்தை உணர்த்திவிடும். திரும்பவும் அந்த ஆபத்து உணர்வு குபீரென மனசைச் சூழ்ந்ததும், இப்போது அவன் அந்த நாயை முன்னே போக அதட்டினான். போகாமல் சண்டித்தனம் செய்தது அது. பிடித்துத் தள்ள வேண்டியிருந்தது. உடனே அது வெண்மைப்பாடான உடையாத பகுதிகளில் விரைவாகத் தாவிச் சென்றது. திடுதிப்பென்று அது அப்படியே கவிழ்ந்து ஒருபக்கமாகச் சரிந்தது. சுதாரித்து சமாளித்துக் கடினப்பரப்பை எட்டித் தாவிக்கொண்டது. கால்கள் முழங்கால்வரை நனைந்து விட்டன அதற்கு. அதன் உடம்பில் ஒட்டியிருந்த தண்ணீர் சட்டென உறைந்து பனியானது. உடம்பெங்கும் அந்தப் பனியினை நக்கி நக்கி உருவியெடுத்தது நாய். விரல் இடுக்குகளில் உறைந்திருந்த பனியை அப்படியே உட்கார்ந்து கடித்தெடுக்க ஆரம்பித்தது. எல்லாம் தன்னியல்பான அதன் தற்காப்பு. அல்லாவிட்டால் கால் மரத்து நொந்துவிடும். இதெல்லாம் அறிந்து செய்யவில்லை அதை. உள்மனம் விழித்துக்கொண்டு அளித்த மாயக் .கட்டளைகள். மனிதனுக்கு இப்படி விஷயங்களில் பிரக்ஞைபூர்வமான கவனம், தீர்மானம் உண்டு. வலக்கை கையுறையைக் கழற்றி அவன் பனிக்கற்களை உதறிக் கொண்டான். கையால் கீறித் தறித்தெறிந்தான். ஒரு நிமிஷ அளவுக்குக் கூட கைகளை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ஸ்மரணைதான் என்னவேகமாக நழுவியது, என அவன் அதிர்ந்தான். யாத்தாடி குளிரா இது!… சடாரென்று உறையை மாட்டிக்கொண்டு நெஞ்சில் அறைந்து கொண்டான்.
மணி பன்னிரண்டு. ஆக வெளிச்சத்தில் இருந்தது நாள். என்றாலும் தொடுவானத்திலிருந்து வெகு தெற்காக இருந்தது சூரியன். ஹெண்டர்சன் ஓடைக்கு நடுவே இடைமறித்த சிறு மேடு. மதிய உச்சிவெயிலில் பிசிரற்ற வானம். அவன் நிழல்களற்று நடந்தான். அரை மணியில் அவன் ஓடையின் மடிப்புகளுக்கு வந்திருந்தா ன். மோசமில்லை, இதே சீராப் போயிட்டால் ஆறு மணிக்குப் பசங்களோடு இருக்கலாம்! – மேற்சட்டைப் பித்தான்களைக் கழற்றி உள்ளிருந்து மதிய உணவை உருவியெடுத்தான். கால் நிமிஷத்துக்குள்ளார்ந்த துரித செயல்பாடு. கைகளில் ஸ்மரணை அடங்கியது, என்றாலும் உறைகளைத் திரும்ப அணிந்து கொள்ளவில்லை அவன். கால்களில் கைவிரல்களால் படார் படாரென்று பத்துத் பன்னெண்டு தரம் மோதி உரசிக்கொண்டான். பனிமூடிய மரத்துண்டு ஒன்றில் அமர்ந்து கொண்டான். உரசலில் கூட விரல்களுக்குக் கதகதப்பு போதவில்லை, என திகைத்தான். வேறு வழியில்லை. கையை மீண்டும் உரசி அவசரமாக ஒரு கையில் உறை மாட்டிக் கொண்டான், மற்றதைக் கொண்டு பிஸ்கட்டுகளைத் தின்று கொள்ளலாம். ஒருவாய் சாப்பிட… கன்னமே இறுகிப் போய் சவைக்க லாயக்கில்லாமல் கிடந்தது. அவன் மறந்துவிட்டான், ஒரு கணப்பு உண்டாக்கி, கதகதப்பான சூழலை அவன் ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அட எழவே, எனத் தலையில் தட்டிக் கொண்ட போதே விரல்கள் கெட்டியாகி, நுனிகளின் அந்தச் சுணக்கம், மெல்ல அவை செயலிழந்து வருகின்றன. காலுறைகளுக்குள்ளே அவைகளை அசைத்துப் பார்த்துக் கொண்டான், மரத்துப் போயிருக்கு அவ்ளதான், அசைக்க முடிகிறது.
உறைகளை அவசரமாய் மூடிவிட்டுக் கொண்டு பதட்டத்துடன் எழுந்து நின்றான். இங்குமங்குமாகக் காலை உதறி அந்தச் சுணக்கமான வலி கால்களுக்குத் திரும்ப ஏற்படச் செய்ய வேண்டியிருந்தது. குளிரோ குளிர். அந்த கந்தகமலை ஆதிகுடி சொன்னது வாஸ்தவந்தான், என நினைத்தான். சிலசமயம் எக்குத் தப்பான குளிரா ஆகிப் போகிறது ஊரு. த்தா-ன்னு அவனைப் பார்த்துச் சிரிச்சேன் நான் அப்ப! எனக்கு எல்லாந் தெரியும்டான்றாப்போல! கையைக் காலை உதறி, ஒரு ஆட்டம் ஆடி கால் கையெல்லாம் கதகதப்பு வர்ற வரைக்கும் எதாவது செய்ய வேண்டியிருந்தது. சரின்னு தீக்குச்சியை வெளிய எடுத்து, நெப்பு மூட்ட வழிதேடினான். முந்தைய காலத்தில் நீரூற்றாய்க் கிடந்த இடத்தில் மானாவாரிச் சிறு செடிகள். கையால் பொத்தி சிறு நெருப்பு மூட்டிக் கொள்ள முடிந்தது. ஒருவித சத்தத்துடன் எரிந்தது நெருப்பு. முகத்தின் பனிக்கட்டிகளை வழித்துப் போட்டு உடனே பிஸ்கெட்டுகளைத் தின்று முடித்தான். அந்தப் பனிவளாகத்தை அவன் மறக்க அந்தச் சிறிது நேரம் உதவியது. நாய்க்கு நெருப்பைக் கண்டதில் திருப்தி. பக்கத்திலேயே உடம்பை நீட்டி விரித்துக் கொண்டது. நெருப்பு தெறித்து சுட்டுவிடாத து¡ரத்தில் கவனமாய்க் கிடத்தியது உடம்பை.
சாப்பிட்டபின், புகைக்குழாயை எடுத்து புகையிலையை சுகமாகப் பற்ற வைத்துக் கொண்டான். உடலை, கையுறைகளை மேலே இழுத்து விட்டுக் கொண்டபடி திரும்ப சந்தியின் இடதுபாதையில் கிளம்பினான். நாய் ஏமாற்றமாய் உணர்ந்தது. அது கதகதப்பருகிலேயே இருக்கலாமாய் நினைத்தது. இந்த மனுசனுக்குக் குளிர்னா தெரியல. குளிர்னா, அதாவது நிஜக்குளிரை மனுசனோ அதன் எந்த வம்சமோ உணர்தாரில்லை. உறைநிலையின் கிழே நு¡த்திச் சொச்ச குளிரப்பா. நாய்க்குத் தெரியும். அதன் வம்சாவளிகள் அறியும். காலங்காலமாய் அந்தக் கடுமைக் குளிரை கொடுமைக் குளிரை அதுங்கள் மனசாலேயே அறிந்தவை. இப்ப இப்பிடி வெளிய இறங்கறாதவது, பேசப்டாது! – என அவை அறிந்தவை. இப்ப செய்ய வேண்டியதெல்லாம் எதாச்சும் பொந்தில் பம்மிக் கொள்ளுதல். வானத்தில் கொஞ்சம் மேகத்திரை விலகட்டும். சரி, அதுக்கும் அந்த மனுசனுக்கும் ஒரு உறவுங் கிடையாது. எந்த மனுசனும் அதைத் தடவிக் கொடுத்ததில்லை. யாத்தாடி, சவுக்கால் விளாறுவார்கள், சவுக்கு தடவும் உடம்பை, அதைவிடக் கடுமையான எஜமானர் குரல், உறுமல். ஆக நாய் அவனிடம் தன்னபிப்ராயம் தெரிவிக்க ஏதுமில்லை. நீ எக்கேடுனா கெட்டொழி, நான் இப்டி நெருப்பாண்டை முடங்கிக்குவேன். ஆனால் அந்த மனிதன் ஒரு விசில் கொடுத்தான். அதட்டலான, சவுக்குத்தனமான ஒரு மிரட்டல். நாய் ஒரு துள்ளலில் பணிந்து பின் தொடர்ந்தது.
இன்னொரு புகையிலைக் குதப்பல். தாடிமெழுகு வளர ஆரம்பித்தது. ஈரமூச்சு பொடியாகி மீசையில் கவிகிறது. முடியெங்கிலும் பனித்தோரணம். ஹெண்டர்சன் ஓடையின் இடது பகுதியில் ஊற்றுக்கண்கள் அதிகம் இல்லை. பாதை அரைமணி து¡ரம்வரை மாற்றமின்றித் தொடர்ந்தது. அப்பறந்தான் அது நடந்தது. பார்த்தால் தெரியவேயில்லை. கீறல் இல்லாக் கெட்டிப்பனி வெளி. சிலுங். மனுசன் கால் உள்ள போயிட்டது. அதிக ஆழமில்லை. முட்டிவரை நனைத்து விட்டது. சட்னு காலைக் கெட்டிப்பாளத்தில் மாற்றிக் கொண்டான்.
தனக்கே கோபம் வந்தது. இன்னா கருமாந்திரம்டா இது, எனக் கத்தினான். ஆறு மணிக்குள்ள பசங்களோட இருக்கலாம்னு பாத்தா, ஒரு ஒருமணிநேரம் பிந்திரும் இப்ப. சப்பாத்துகளைக் காய வைக்கணும். தீ மூட்டணும். படு குளிர், அப்டியே விட்ற முடியாது. மேலேறி வந்த வழியைத் திரும்பிப் பார்த்தான். மெலிந்த கிளைகளுடன் எதோ மரம் நீட்டிக் கிடந்தது மேலே. சற்று உலர்ந்த குச்சிகளும் கொப்புகளுமான மரக்கிளைகள். உருண்டு பெருத்த மரத்தண்டுகள். கூடவே போனபருவத்திலான உலர்ந்த புல்ப்புதர். பனிமேல் பெரும் கிளைகளைப் போட்டு அதன்மேலே நெருப்பு மூட்டினான் அவன். சட்டென பனிஉருகி நெருப்புக் கொழுந்தை அமுக்கிக் கொண்டுவிடக் கூடாது. பையில் தயாராய் வைத்திருந்த பிர்ச் மரக் குச்சியில் தீக்குச்சியை உரசிப் பற்ற வைத்துக் கொண்டான். காகிதத்தைக் காட்டிலும் பிர்ச் மரக்குச்சி தேவலை. பெருமரத்திண்டைப் பனியில் மேலாகப் போட்டு அதன் மேல் சிறு புல்மண்டியைப் போட்டு, மரக்குச்சிகளைச் சின்னச் சின்னதாய்த் கோழித்தீவனமாய்ப் போட்டுத் தீ வளர்த்தான் அவன்.
கப்புனு தீ அமர்ந்து விடும், தெரியும். பொறுமையா நிதானமா எல்லாம் செய்தான். தீ மெல்ல உரு வளர்ந்தது. சற்று தடிமனான குச்சிகளை இப்ப போட்டான். பிறகு சற்று அலைந்து பெரிய கிளைகளையே எடுத்து வந்து போட ஆரம்பித்தான். அஜாக்கிரதை கூடாது. நெருப்பு முக்கியம். மைனஸ் எழுபத்தியஞ்சில் முதல் முயற்சியிலேயே நெருப்பு மூட்ட மனுசன் திண்டாடிறப்டாது. அதும் பனிக்குட்டைக்குள்ள விழுந்த கால் நனைஞ்ச மனுசன். நனையலியா, ஒரு அரைமைல் ஜிகுஜிகுன்னு நடை, கால் இரத்தவோட்டம் சுணங்காமப் பார்த்துக்கலாம். கால் நனைஞ்சி, முடங்கியாச்சின்னா நடக்கவேயேலாது, எங்க ஓட? ஓட முயற்சி பண்ணினாலும் வேகமாக் கால் மரத்துரும்.
எல்லாம் புரிகிறது. அந்த கந்தகமலை மூப்பன்…. அவனும் சொன்னான். நல்லாத்தான்யா சொன்னான். இப்போது அதை அங்கீகரித்துக் கேட்டுக் கொண்டான். கால்ல உணர்ச்சியே இராது போலுக்கேய்யா… குச்சி பொறுக்கணும் என்று கையுறைகளைக் கழட்டியிருந்தான். விரல்கள் நமத்துப் போயிருந்தன. மணிக்கு நாலு மைல் வேகம். அது இதயத்துடிப்பை நல்லா வெச்சிருந்தது. வெளிவட்டாரச் சீர்கேடுகளை மீறி உடம்பெங்கும் அது இரத்தம் செலுத்திக் கொண்டிருந்தது. ஆனா, மனுசன் எப்ப நின்னானோ, இதயத்துடிப்பும் அடங்க ஆரம்பிச்சிட்டது. பூமியின் மேல்த்தள பாதுகாப்பற்ற வழுக்கை வெளி அது. அதில் அவன். அத்தனை பனிக் கொட்டலும் அந்த உச்சிமண்டையில்தான். உடம்பு ரத்தசூடே பம்மியது உள்ளே… நாயைப் போல! அவன் அசைந்து கொண்டிருந்தவரை உடம்பு பூரா அது சுற்றி வந்தது. இப்ப மடங்கிச் சுருண்டது உள்ளேயே. அதனாலேயே நனைந்த காலும், விரல்களும் முன்னிலும் வேகமாய்ச் செயலிழக்க ஆரம்பித்தன. அந்தாக்ல விரைச்சிக்கிடாம இருக்கணும். நாசி கன்னம்லாம் எப்பவோ விரைத்து விட்டது. தோலில் கூட இரத்தம் பரவாத விரைப்பு. சில்லிட்டு வந்தது தேகம்.
ஆனாலும் பாதகம் இல்லை. கன்னமும் மூக்கும் விரல் நுனிகளும் பனியால் தொடப்படும் அவ்வளவுதான். நெருப்பு சுறுசுறுத்து விட்டது. விரல் விரலான குச்சிகளால் அவன் தீயைப் பெரிசாக்கினான். ஒரே நிமிஷம், கைத்தண்டிக் கட்டைகளைப் போட முடியும். சதுப்புநிலபூட்சுகளைக் கழற்றி விடலாம். அது காயும்போது வெறுங்காலை நெருப்பைப் பார்க்க நீட்டியபடி பரபரவெனத் தேய்த்துக் கொடுக்கலாம். ஜிவுஜிவுவென்று பத்திக்கிட்டது ஜ்வாலை. கந்தகமலை கிழடு… நல்லாத்தான் சொன்னான். சிரித்துக் கொண்டான். ”அம்பது டிகிரிக்கும் கீழ போயிட்டதா, மவனே தனியே போற ஜோலியே கூடாது, பாத்துக்க.” – ஆ ஐயா நான் வந்தேன், தனியே, ஆமாம், பத்திரமாய் இருக்கேன். ஒரு அசந்தர்ப்பம் வந்தது, வாஸ்தவம். ஆனா தப்பிச்சாச்சு. நாயினாவுக்கு வயசாயிட்டதில்லியா, கொஞ்சம் யோசனையா, பொம்பளையாளுகளாட்டம் பயந்து கையைப் பிடிச்சி மறிக்கறதுதான்… எந்தப் பிரச்னை வந்தாலும் சுதாரிப்பா செயல்படணும், அவ்ளதான் விசயம். மிடுக்கான ஆளுங்கள் தனியே வர்றதுதான்…. ஆனா ஐயோ என்ன வேக வேகமா மூக்கும் கன்னமும் விரைச்சிருது.
ச், அத்த விடு. நெருப்பு இருக்கிறது. என்ன ஜோரா நடனம் ஆடுது பார். கொறுக் மொறுக்னு குச்சி நொறுங்கும் சத்தம். உயிரின் சத்தம். மேலங்கியைக் கழற்ற ஆரம்பித்தான். ஜெர்மானிய கெட்டித்துணி சாக்ஸ், இரும்புப் பட்டையாட்டம் ஒட்டியிருந்தது. அங்கி நாடா ஒண்ணொண்ணும் எ·குக் கம்பியாட்டம் முறுக்கிக் கிறுக்கி முடிச்சானாப் போலிருந்தது. சுரண்டிப் பார்த்தான். அது வருமாடா மவனே , எட்றா கத்தியை…
ஆனால் நாடாக்களை நறுக்குமுன் அது நடந்தது. அவன் செஞ்ச கோளாறு, அல்லது தப்பு அது. ஒரு மரத்தடியில் அவன் நெருப்பு மூட்டலாமா? அத்துவான வெளியில்தானே மூட்டணும்? அட பக்கத்தில் குச்சி கிச்சி கிடக்கும், அப்டியே எடுத்து எடுத்துப் போட முடிஞ்சது. மரமானால் கிளைகளில் கெட்டி கெட்டியாய்ப் பனிப்பாளம் சுமந்து அசையாதிருந்தது. வாரக் கணக்குல அங்க காத்து கீத்து ஒண்ணுங் கிடையாது. குச்சியெடுக்க அவன் அசையுந்தோறும், மரத்தை லேசா அவன் உலுக்கினான். தானேயறியாத உலுக்கல். அந்த விபரீதத்துக்குப் போதுமான தவறு. உச்சிக்கிளை ஒண்ணு பனிச்சுமையை ஒரு உதறு உதறி கீழ்க்கிளையில் விழுந்தது. கீழ்க்கிளையின் பாரம் அதிகரித்து, இப்படியே மொத்த மரமும் திடுக்னு அவன் மேலயும் அந்த நெருப்பு மேலயும் அந்தாக்ல உட்கார்ந்தது. கப்பென்று அணைந்தது நெருப்பு. அந்த இடத்தில் இப்போது உடைந்த பனிச் சில்லுகள்.
விக்கித்துப் போனான், தானே தனக்கு மரண தண்டனை வழங்கிக்கிட்டாப் போல, ஒரு குபீர். நெருப்பு ஏத்திய இடத்தை ஒருவாட்டி பார்த்தான். மனசைக் கட்டுப் படுத்திக் கொண்டான்… தாத்தா சொன்னது சரிதான். கூட சகா யாராச்சும் இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. அவன் மூட்டியிருப்பான் நெருப்பை. சரி, அத்த விடு. இப்ப திரும்ப நெருப்பு மூட்ட வேண்டும். இந்த ரெண்டாம் முறை தவறு செய்யவே கூடாது. எப்பிடியும் இந்த விவகாரத்தில் சில கால்விரல்கள் செயல் இழந்தது இழந்ததுதான். இன்னும் நெருப்பு ஏத்துமுன் நிலைமை மேலும் மோசமாத்தானே ஆகும்…
ஆனா உட்கார்ந்து இப்படியெல்லாம் நினைக்க முடியவில்லை. வேறு இடம் பார்த்தான் நெருப்பு வைக்க. அத்துவான வெளி! மரங் கிரம் ஒண்ணுங் கிடையாது. உலர்ந்த புல், மெலிந்த குச்சிகள் து¡ரத்தில் ஊற்றுப் பிரதேசத்தில் இருந்து எடுத்து வந்தான். புல்லை குச்சிகளை உருவியிழுக்கவெல்லாம் முடியாது. கைகையாகக் கொண்டுவர வேண்டியிருந்தது. அழுகிப்போன கிளை, புல்லும் பச்சைப் புல்… பரவாயில்லை. முடிஞ்சதை எடுத்து வந்தான். பெரிய கிளைகளையும் கூட எடுத்து வந்தான், தீ பெருகியதும் பயன்படும். கவனமாய் அந்த நாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. மனுசனுக்குத்தான் நெருப்பு மூட்டத் தெரியும்.
எல்லாம் தயார் பண்ணிக் கொண்டதும், பிர்ச் குச்சிக்குப் பைக்குள் கைவிட்டான். கையில் சொரணையே இல்லியேடா. ஆ குச்சி உள்ளே புரளும் சத்தம். கையில் அதை எப்படி எடுப்பது? அட அவசரம். காலுங்கூட மரத்துட்டு வருது… ச் பதறாதே. நிதானம் பிரதானம். பல்லால் கையுறையை இழுத்து விரல்களை அசைத்தான். வேகவேகமாக உடம்பில் தட்டிக் கொடுத்தான். உட்கார்நதபடியே உதறியவன், உடனே எழுந்துகொண்டே திரும்ப உதறிக் கொண்டான். நாய் உட்கார்ந்தபடி கால்நகங்களை வாலால் மறைத்துக் கொண்டிருந்தது. காதுகளால் அந்தக் சத்தத்தைக் கூர்ந்தபடி வேடிக்கை பார்த்தது. இந்த மகாப்பனிக்கு அசராமல் தாக்குப் பிடிக்கிற பாதுகாப்புடைய அந்த ஓநாயைப் பார்த்து அவனுக்குப் பொறாமையாய் இருந்தது.
தட்டோ தட்டெனத் தட்டியதில் சிறிது நேரத்தில் உணர்வு ஊர்ந்து வந்தாப் போலிருந்தது. லேசான உள் மதமதப்பு மெல்ல ஊறிப் பெருகி சிறு சுளுக்குபோலும் தெரிய ஆரம்பித்தது… சூப்பர்! வலது கைக் கையுறையை விறுவிறுவென்று கழற்றி பிர்ச் மரக்குச்சியை பைக்குள்ளே அள்ளினான். அட அதற்குள் திறந்திருந்த விரல்கள் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்துவிட்டன. பிறகு கந்தகத்தலை தீக்குச்சிகளை வெளியே எடுத்தான். விரல்கள் இறந்திருந்தன. கொத்தான தீக்குச்சிகளில் ஒன்றில் இருந்து மற்றதைப் பிரிக்க… ஐய, அத்தனையுமே பனியில் கொட்டி விட்டன. திரும்ப அவற்றை எடுக்க… முடியவில்லை அவனால். தீக்குச்சிகளைத் தொடுவதோ, விரலால் பற்றுவதோ எதுவுமே அவனால் கூடவில்லை. ரொம்ப எச்சரிக்கையாகவே அவன் செயல்பட்டான். கையோ, காலோ, மூக்கோ, எதுவோ விரைந்து எதுவும் உறைந்து கொண்டு வரட்டும்… அவன் மனம் முழுவதையும் அந்தச் தீக்குச்சிகளில் செலுத்தினான். மனசினால் பார்வையினால் அந்தத் தீக்குச்சிகளைத் தொடுவதை கவனித்து விரல்களை இயக்கிப் பார்த், விரல்கள் அசைய மறுத்தன. கையுறையை உருவி, வலதுகை விரல்களை முட்டியில் அடியோ அடியென்று அடித்தான். பின் கையுறைகளை அணிந்துகொண்டு, இரண்டு கைகளையும் தீக்குச்சிகளுக்குக் குவித்தான். அப்படியே பனியுடன் வாரி மடியில் தீக்குச்சிகளைப் போட முயன்றான். வேறு வழி இல்லை.
என்னவெல்லாமோ செய்ததில், கால் மற்றும் கையுறைகளுக்கு நடுவே அந்தத் தீக்குச்சிக் கொத்துகள் சிக்கிக் கொண்டன. அப்படியே வாய்க்குக் கொண்டு வந்தான். வாயைத் திறக்கவுமே பெரிசாய் பனிக்கட்டி மூச்சில் நொறுங்கியது. ஒரேயொரு குச்சியை வாயால் கவ்வி… ஆ, ஒரு குச்சி! மடியில் விழுந்தது அது. பொறுக்க முடியவில்லை. வேறு வழி கிடையாது. திரும்ப வாயில் கவ்வி மடியில் உரசோ உரசென்று உரசிப் பார்த்தான். பத்து தடவை. இருபது தடவை… ஆ வெற்றி! அந்த நெருப்பை அப்படியே பல்லால் கடித்தபடி பிர்ச் குச்சிக்குக் கொண்டுபோனான். ஆனால் கந்தகப்புகையும் நெடியும் மூக்கில், சுவாசத்தில் ஏறிக் கமறி, உடனே இருமல் வந்தது. தீக்குச்சி பனியில் விழுந்து விழுந்தஜோரில் அணைந்துபோனது.
அந்த ஆதிவாசிக் கிழக்கம்னாட்டி, த்தா, சர்ரியாத்தான் சொன்னான்… ”மைனஸ் அம்பதுடா, தனியாப் போவாதே.” கைகளைத் தட்டிக்கொண்டான். ஒரு உணர்ச்சியும் இல்லை. திடுதிப்பென்று ரெண்டு கையுறையும் பல்லால் உரித்தான். விரல்களைப் பத்தியென்ன, முழங்கைவரை இன்னும் உணர்ச்சி பாக்கியிருக்கிறது. அதில் அந்தத் தீக்குச்சிக் கொத்தை, ஏறத்தாழ எழுவது குச்சிகள்… அப்படியே காலோடு தேய்த்துப் பற்ற வைக்க முயன்றான். வெற்றி! அதை அமர்த்திவிட காற்று கிடையாது. புகையடித்து விடாதபடி முகத்தை விலக்கிக் கொண்டு, பிர்ச் குச்சிக்கு அந்தத் தீயை நீட்டினான். ஆ கையில் அந்த வெதுவெதுப்பு… சதையே பற்றி எரிகிறது. உள்ளாழத்தில் அதை உணர முடிகிறது. மெல்ல வலியாகி வலி உக்ரமாகியது. என்றாலும் குச்சி பற்றிக் கொள்ளவில்லை. உடம்பே அதிகபட்ச வெப்பத்தை தனக்கு வாங்கிக் கொண்டிருந்தது.
தகிப்பு தாளமுடியாமல் கையை அவன் உதறினான். தீக்கொத்து கீழே விழுந்தபோதிலும், ஆ, பிர்ச் கிளை பற்றிக் கொண்டது! உலர்ந்த புல்கற்றைகளையும் மெலிசான குச்சிகளையும் தீயில் அப்படியே முழங்கையால் தள்ள வேண்டியிருந்தது. அழுகிய பகுதிகளை, பசுமைப் பகுதிகளை வாயால் கடித்துத் துப்ப வேண்டியிருந்தது. காரியங்கள் தனக்கே அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தன, என்றாலும் வேலை ஆச்சே! வாழ்க்கை! அது அடங்கீறப்டாதப்போவ்! உடம்பில் மேல்மட்டத்தில் இருந்து உள்பதுங்கிக் கொண்டிருந்தது இரத்தவோட்டம். ஆளை நடுக்கியது குளிர்… பெரிய பசுந்தண்டு ஒன்று அந்தச் சிறு நெருப்பில் பொத்தென விழுந்தது. தண்டைத் தள்ளுகிறேன் பேர்வழியென்று அவன் புல்கற்றையையும், சிறு குச்சிகளையும் தனித்தனியே பரசி விட்டான். திருப்பி அவற்றை ஒண்ணு சேர்க்குமுன் குச்சிகள் புகையாகி புஸ்ஸென்று நெருப்பு அமர்ந்து விட்டது. மனுசன் தோற்றுப் போனான். நொந்து தளர்ந்தவனாய் அவன் அந்த ஓநாயைப் பார்த்தான். நாய் நெருப்பு அணைந்த பகுதியில் ஓய்வற்றதாய்ச் சுற்றிச் சுழன்றபடியிருந்தது. ஒருகால் து¡க்கி மறுகால் வைத்து இப்படி அசைந்தபடி அந்த நெருப்பின் மிச்சத்தை மேய்ந்து கொண்டிருந்தது அது.
ஆ, ஒரு கதை அவன் படித்திருக்கிறான்… ஒருமுறை பனிப்புயலில் சிக்கிய மனிதன் ஒருவன், பனிக்கரடி ஒன்றைக் கொன்று அதன் உடம்பைக் கிழித்து உட்புகுந்துகொண்டு உயிர் பிழைத்த கதை! இந்த நாயைக் கொன்றுவிடலாம்! அதன் உடல்சூட்டில் விரலைச் செலுத்திக்கொள்ளலாம். பின் திரும்பவும் தீ மூட்ட முயற்சி பண்ணலாம்… அவன் அந்த நாயை அருகில் அழைத்தான். கூப்பிட முடியவில்லை. குரல் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடுங்கியது. தனக்கே அந்நியமான குரல். நாயே பயந்தது அருகில் வர. மனிதனிடமிருந்து அப்படியொரு பேதலித்த குரல்… அது கேட்டதேயில்லை. என்னவோ ஆபத்து டோய்! அது புரிந்து கொண்டது. என்ன ஆபத்து, எப்படி ஆபத்து… தெரியாது. ஆனால் அதன் சூட்சுமத்தில் அது உணர்ந்து கொண்டது. நிலைமை சரியில்லை! இந்தாளை நம்ப ஏலாது. அதுபாட்டுக்கு நெருப்பின் ஸ்மரணையைத் தொடர்ந்தது. அதே கதகதப்பில் சுற்றியடிக்க ஆரம்பித்தது, இவனை சட்டை பண்ணாமல். கையை முட்டியை ஊன்றி அவன் நாயை நோக்கி ஊர்ந்தான். அவன் நடவடிக்கையே சரியாயில்லியே… நாய் விலகி எட்டிப் போனது லேசாய்.
இருடா இரு. நிதானம். அப்படியே உட்கார்ந்து மனதைக் கட்டுப்படுத்தினான் அவன். உறைகளைப் பூராவும் மாட்டிக் கொண்டான். மெல்ல எழுந்து கொண்டான். எலேய் நிக்கறியா? ஒருதரம் குனிந்து பார்த்துக் கொண்டான். கால் மரத்திருந்ததில் தரையில் நிற்கிற பாவனையே அத்துப் போயிருந்தது. சற்று விரைந்த நிற்றல். அது கூடச் சரியா இல்லியே… என நினைத்தது நாய். ஆனாலும் அந்த அதிகாரக் குரல், அதட்டல்…. நாய் பணிந்து சற்று கிட்டத்தில் வந்தது. கைக்கிட்டத்தில் அது வந்தஜோரில் அவன் தன்வயமிழந்தான். கையை ஆவேசமாய் வீசி… அட கண்றாவிச் சனியனே, கை எப்பவோ உறைந்திருந்தது. விரலை மடக்கவோ விரலால் பிடிக்கவோ அவனால் முடியாது… ஆனால் நாய் எகிறுமுன் அதை அப்படியே வாரியணைத்துக் கொண்டான். அப்படியே பனியில் உட்கார்ந்தான். நாய் உடலை நெளித்து கீச் கிச்சென்று முனகித் தவித்தது.
முடிஞ்சது அவ்வளவுதான். நாயைக் கட்டி இறுக்கிக் கொள்ளலாம். அவனால் நாயைக் கொல்ல இயலாது. ஆடையை நெகிழ்த்த இயலாது. உள்க்கத்தியை வெளியே எடுக்க இயலாது. அப்படியே நாயை கழுத்தை நெறித்துக் கொல்லவும் வழியில்லை. அட விட்றா அதை… கப்பைக்குள் வாலைக் கொடுத்தபடி நாய் சிறு ஊளையிட்டது. பத்து நாப்பதடி தள்ளிப்போய் நின்று காது து¡க்கி அவனை ஒரு நோட்டம் பார்த்தது. அவன் தன் கைகளையே பார்த்துக் கொண்டான். அதோ. உணர்ச்சியற்ற தன் கைகளை தானே பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது, என அவன் திகைத்தான். அந்தக் கைகளைக் கையுறைகளுடன் நெஞ்சில் அறைந்து கொண்டான். ஒரு அஞ்சி நிமிஷம் விடாமல் அறைந்து கொண்டான். இதயத் துடிப்பு இப்போது அதிகரித்தது. நடுக்கம் சிறிது குறைந்தது. ஆனால் கையில் உணர்ச்சியே இல்லை. ஒரு கனமான பாரமாய்க் கைகள் தோளில் சேர்ந்தருப்பதாய் நினைத்தான். ஆனால் அதை உணரக் கூடவில்லை.
மரணத்தின் ஒருவிதமான பீதி, மங்கலான அழுத்தமான பீதி. எடேய் இது கையோ காலோ விரலோ உறைகிறதோ, விழுந்து போகிறதோ இல்லை, இது அதுக்கும் மேலே, வாழ்வா சாவா பிரச்னை. கப்பென்று ஏதோ உள்ளே அடைத்தது. திகிலுடன் அவன் அந்த மங்கிய பனிப்பாதையில் ஓடினான். நாய் கூட ஓடிவந்தது. வாழ்க்கையில் அப்படியொரு பதட்டத்தை அனுபவித்ததேயில்லை… நோக்கமின்றி ஓரு ஓட்டம். மெல்ல அவன் பார்வையில் எல்லாம் தெரியவந்தன… பாதையின் இருகரைகள். மரஅடுக்குகள். மொட்டைமரங்கள். வானம்… ஓடுவது தேவலாமாய் இருந்தது. உடல் நடுக்கமில்லை இப்போது. ஆனால் சீக்கிரமே முட்டி கலகலத்து விடும். ஒற்ற ஓட்டத்தில் திரும்பக் கூடாரத்துக்கு, பசங்களிடம் போய்ச் சேர்ந்துற முடியுமா? மூஞ்சி முகறை கைகால் விரல் அப்டியே சொரணை மரத்துக்கிட்டே வரும். ஆனால் பசங்கள் பார்த்துக்க மாட்டாங்களா அவனை? அட இதெல்லாம் நடக்கிற கதையா, என்றது இன்னொரு மனசு. உடம்பு குளிர்ந்துகொண்டே வரும். மகா பிரம்மாண்டக் குளிர். உடம்பே இறுகி ஆள் அவ்ட் ஆக வேண்டிதான். அட அப்டில்லாம் ஆவாது, என அலட்சித்தான். மற உடனே கெட்ட நினைப்புகளை மற…
காலால் ஓடுகிறதே நம்புகிறாப்போல இல்லை. இந்த உடம்புபாரத்தைத் தாங்கிக்கொண்டு இந்த பூமியில் பாதங்கள் அசைகிறதே அவனுக்குத் தெரியவில்லை. சற்று எட்டிப் பறக்கிறானா அவன்? வால் நட்த்திரம்… அதைப்போலவா என் நிலைமை?
கூடாரம் வரை, பசங்கள் வரை ஓடும் அவன் திட்டத்தில் ஒரு பிசகு. அவனால் தாக்குப் பிடித்து ஓட இயலவில்லை. அடிக்கடி தள்ளாடியது. அவனால் முடியாமல் தடுமாறி, கீழே சரிந்து, விழுந்தான். எழ முயற்சித்து, முடியவில்லை. அட உட்கார், அப்படியே ஓய்வெடு. அப்பறம் மெல்ல நடப்பம், அப்டியே நிற்காமல் கொள்ளாமல் நடப்பம். எழுந்து உட்கார்ந்து மூச்சைச் சீராக்கிக் கொண்டான். கதகதப்பு இருந்தது. பராவில்லையே என்றிருந்தது. உடல் நடுக்கம் இல்லை. நெஞ்சிலும் கழுத்திலும் ஒரு வெதுவெதுப்பு. மூக்கில் கன்னத்தில், ம்ஹ¤ம், சொரணையே இல்லை. ஓடுயதில் அவற்றில் மாற்றம் எதுவுமில்லை போல. கை காலில் கூட ஒரு நெகிழ்ச்சியும் இல்லை. அப்புறம் அவன் நினைத்தான், இந்த உறைதல்… மெல்ல உடம்பின் பிற பகுதிக்கும் பரவும்… அட அதெல்லாம் இல்லை, என அந்த நினைப்பை உதற முயன்றான். வேறெதாச்சும் நினைக்க முயன்றான். குப்பென்று அந்தப் பீதி உள்ளே கனமாய் உட்கார்ந்திருந்தது. உடம்பு முழுக்கவே உறைந்தாப்போலவே ஒரு கணம் இருந்தது அவனுக்கு. ஐயோ, எனப் பதைத்து திரும்ப ஓட ஆரம்பித்தான். கொஞ்சம் தயங்கி நடக்கலாம் என நினைத்து, உறைஞ்சு போவே சனியனே, தொடர்ந்து ஓடினான்.
நாயும் கூடவே காலடியில் ஓடிவந்தது. அவன் ரெண்டாம் முறை விழுந்தான். அது சட்டெனத் தள்ளிப்போனது. தன் முன்னங்கால்களின் மேல் அமர்ந்துகொண்டு அது அவனைக் கூர்ந்து பார்த்தவாறிருந்தது. என்னாவறான் இவன், பார்ப்பம்! அடங் ஙொக்க மக்கா, என்னா சவுரியமா இருக்கு இந்தப் பனில இது, அவனுக்கு ஆத்திரம் தாளவில்லை. அதைப் பிடித்துத் தள்ளினான். நாய் காதைக் கவிழ்த்துக் கொண்டது. குபீரென இப்போது உடம்பு சடசடவென நடுக்கங் காட்ட ஆரம்பித்து விட்டது. தாக்குப் பிடிக்க முடியாது என்றே பட்டது இப்போது. மெல்ல குளிர் எல்லாத் திசையில் இருந்தும் உள்ளே ஊடுருவியது. எழுந்திரு. ஓடு. ஒரு நு¡றடிகூட ஓடுமுன், தலைகுப்புற விழுந்தான். என்னவொரு திகில் உள்ளே. மூச்சைத் தாக்குப் பிடி. நிதானப்படு… ஆ சாவை நெஞ்சாற எதிர்கொள்ளலாம்… ஆனால் அது நினைச்சாப்போல முடியுமா? அட பைத்தாரப் பயலே, என நினைத்துக் கொண்டான். ஒரு கோழியின் தலையறுத்த முண்டம்போல சாவு தன்னைச் சுற்றி வருகிறது. மெல்ல உறைந்து, அப்டியே அடங்கீர்றது… சரி அப்டியே ஆவட்டும்னு காத்திருக்கலாம். மெல்ல மயங்கின நினைவுகள். அப்டியே து¡ங்கினாப்ல போய்ச் சேந்துறலாம்… மயக்க மருந்து முகர்ந்தாப் போல. அப்டியே உறையறது, அதொண்ணும் மோசமில்லை. அதைவிட மோசமான சாவுகள் எத்தெத்தனையோ இருக்கு.
காலைல பசங்க வந்து என் பொணத்தைப் பார்ப்பார்கள். அவர்கள் கூட நானே அந்தப் பனிப்பாதையில் தேடிவந்து என் பொணத்தையே தேடிவருகிறதாக, அப்டி ஒரு திருப்பத்தில் அவனையே அவன் பனியில் கண்டுபிடிக்கிறதாக ஒரு நினைப்பு. எனக்கு நானே சொந்தம் இல்லாமலாச்சு. அதோ நிற்கிறவன், நின்றபடி என்னையே பார்க்கிறானே அவன் யார்?… செமக் குளிரப்பா…. நாட்டுக்குத் திரும்பிப் போய், குளிர்னா என்னன்னு நான் சொல்வேன்! அந்த கந்தக மலை பெரிசு, வசதியா உட்கார்ந்து புகைக்குழாயைப் பற்ற வைத்து உட்கார்ந்திருக்கிறான். கரீட்டாச் சொல்ட்டியே பெர்சூ… நீ கில்லாடி மாமோய்…
கண் மயங்கியது, இதுதான் பெரிய வசதியான திருப்தியோ திருப்தியான உறக்கம்… எதிரில் நாய் பார்த்தபடி காத்திருந்தது. சிறு பகல் மெல்ல வெளிறி நீர்த்தது. அப்டியே உக்காந்திருக்காப்டி, அந்தக் குளிரில், இன்னும் நெருப்பு மூட்ட யோசனையே இல்லியா இந்தாளுக்கு? மெல்ல உடலை வளைத்து நெளித்து சிறு சப்தமெழுப்பி அது அவனை முடுக்கிவிடப் பார்த்தது. அவனிடம் ஒரு அசைவுமில்லை. நாய் பெரிய ஊளையாய் இட்டது. இன்னுஞ் சிறிது கழித்து அவனை நெருங்கி முகர்ந்தது. ஆத்தி, செத்துட்டாம் போலுக்கே, எனத் துள்ளிப் பின்வாங்கியது. குளிர்ந்த வானம். நட்சத்திரங்கள் வழுக்கியிறங்கின. நாய் வானத்தைப் பார்த்து ஊளையிட்டது. பின் அது திரும்பி கூடாரம் இறக்கியிருந்த பகுதிநோக்கி, அதை அது அறிந்திருந்தது, உணவும் நெருப்பும் இருக்கிறதா என்று தேடிப்போக ஆரம்பித்தது.
>>>
To build a fire/Jack London
மனுசனைச் சீக்கிரம் சாக விடாமல் அவன் போராட்டத்தை விஸ்தரிச்சிப் போறார் எழுத்தாளர். அதில் அவனைப் பார்க்க இரக்கப் பட்டாப் போலவும் இல்லை. மனுசன் மகத்தானவன், எல்லாத்தையும் சமாளிப்பான், என்கிற திமிர்க்காட்டலும் இல்லை, என்கிற ஆச்சரியமான கதை. அப்டியே நடந்ததை நடந்தாப்ல சொல்லுவேன், என்கிறார். பார்வையாளன் என ஒரு நாயைக் கூட வைக்கிறார். ஒரு தாத்தா மவனே நீ செத்துறவடா, எனவும் திரும்பத் திரும்ப ஞாபகப் படுத்துகிறான். நாய் இல்லாமல் கதையின் திரைச்சீலை இத்தனை வண்ணங்களைப் பெற்றிருக்காது என்றுதான் தோணுகிறது.
storysankar@gmail.com
- க ண ப் பு
- வலைப்பூ இலக்கியத்தின் வளமை
- காதல் நாற்பது -17 முழுமைப் படுத்தும் என்னை !
- பெரியபுராணம்- 128 43. கழறிற்றறிவார் நாயனார் புராணம்
- அறிவிப்பு
- ஈவேரா- காந்தியடிகள் உரையாடல் – எழுப்பும் சில கேள்விகளும் வெளிப்படுத்தும் சில உண்மைகளும்
- கவிஞரை விட்டுக் கொடுக்காத கவிஞர் விவேக்
- கடிதம்
- அந்த நாள் ஞாபகம்…..
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 14 – சாகச ‘ வாலிபன் ‘ !
- நம் பெண்கவிஞர்கள் கேலிக்குறியவர்களா?
- நினைவுகள் மட்டும்…
- ஏகத்துவ அரசியல் மற்றும் சமய மரபுகளின் தோற்றுவாய்
- கவிதைகள்
- புத்தாண்டு வாழ்த்துக்கள்
- உறைந்த தேவதைகள்
- பயணமுகவர்கள்
- புதிய தொழிலாளி புலம்பெயர்வு வாழ்க்கை
- மருந்தின் விலை ரூ. 1,20,000 உயிர் குடிக்க வரும் நோவார்ட்டிஸ்
- இரு காந்தீயப் போராளிகள்
- மடியில் நெருப்பு – 33
- மாத்தாஹரி – அத்தியாயம் -5
- கால நதிக்கரையில்….. – அத்தியாயம் – 2
- ஒரு தீர்ப்பு முழுமையானது