நீர்வலை (9)

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


>>>
கிருட்டிணமணியைப் பார்த்ததும் அவருக்கு உற்சாகம். ஏல எங்க உன்னை ஆளையே காணம் என்றார் மணி. வயதாகி விட்டதால் இப்போது அவர் மேற்பார்வையோடு சரி. பவுன் கண்ணாடி. தூய கதர்ச்சட்டை, கதர்வேட்டி. மீசையெடுப்பு ஓரங்களில் நரை கண்டிருந்தது. சிவப்புக்கல் மோதிரம் போட்ட விரலை ஆட்டி ஆட்டிப் பேசுவது தர்பாராய்த்தான் இருந்தது.
‘ஐயா ஒரு விண்ணப்பம்…’ என்கிறான் கிருட்டினமணி பவ்யமாய்.
‘என்னடா புதிர் போடறே… தம்பி ஆரு?’
டேய் வணக்கம் சொல்லுடா… என்று முழங்கையால் இடித்தான் கிருட்டினமணி. ‘நம்ப பையன்தாங்க. ‘திக்கு திசை தெரியாமல் திண்டாடிட்டிருந்தாப்டி. கூட்டி வந்திட்டேங்க’
‘எந்தூர்டா ஒனக்கு?’
‘அரசம்பட்டி…’
‘அப்பா அம்மா இல்லிங்க…’ என்று கிருட்டினமணி எடுத்துத் தருமுன், ‘நீ சும்மார்றா. அவன் பேசட்டும்…’
‘அப்பா அம்மா இல்லிங்க…’ என்றான் சிவாஜி. ‘அண்ணன்தான் உண்டு…’
‘அண்ணன் என்ன செய்யிறாரு…’
‘லாரிடிரைவர்’ என்றான் நெகிழ்ச்சியுடன்.
‘எலேய் நம்ப கிருட்டினனைச் சொல்றியாக்கும்…’
‘ஆமங்க ”மு த லா ளி”…’ என்றான் மேலடியாய்.
‘எலேய் என்னைச் சொல்றியா…’ என்று சிரித்தபோது மீசையின் அடர்த்திக்குள்ளிருந்து பல் தெரிகிறது.
‘சரியான ஆளைத்தான் கூட்டியாந்திருக்கே… கையைக் காலைக் கழுவிட்டுச் சாப்பிட வாங்க… ஏலேய் கூட ரெண்டாளுக்குச் சோறு கிடக்குமா?’ என்கிறார் உட்பக்கம் திரும்பி.
‘ஐய அதுக்கென்னங்க… பத்தாட்டி வெச்சிக்குவம். சாம்பார் சோறு உண்ணுங்குள்ளாற ஆக்கி இறக்கிக்கலாம்…’ என்று உள்ளிருந்து சொன்னவர் சமையல்காரர் போலிருந்தது.
பெரிய ஷெட்தான். நிறையப் பேர் பெருகியிருந்தார்கள். சின்னவரும் பெரியவருமாய். லாரிகள் பஸ்கள் என நாலைந்து நின்றன.
‘வா. கை கால் கழுவிக்கலாம்…’ என கிருட்டினமணி உள்ளே கூட்டிப் போனான். வேலை திகைந்த மாதிரித்தான் அப்பவே சாயல் தட்டியது. ‘ஐயாகிட்ட வந்திட்டா சாப்பிடாமப் போகக் கூடாது. அவருக்குக் கோபம் வந்துரும்…’ என்றான் கையைக் குழாய்த் தண்ணீரில் நீட்டியபடியே.
– கூடிய விரைவில் தேர்தல் கீர்தல் எனக் கனவுகள் முதலாளிக்குக் கிளைக்கலாம்… என்று தோன்றியது சிவாஜிக்கு. எதும் சொல்லவில்லை.
கிருட்டினமணிக்கு அங்கே நல்ல மதிப்பு இருந்தது. எல்லாரும், அவன் அழைத்துவந்த ஆள், என்று இவனிடம் பிரியத்துடன் நடந்து கொண்டார்கள். எல்லாரும் இயல்பாகவும் சுதந்திரமாகவும் நடமாடினாப் போலத்தான் தெரிந்தது. ஆனால் முதலாளியின் கண் அவர்கள் முதுகில் தொடர்ந்தாப்போலவே அடக்கமாய் அங்கே வளையவந்தது பிடித்திருந்தது. ஒரு சிறு அநாவசியச் சத்தம் கிடையாது. நடுவில் பள்ளம் விட்டு தண்ணீர்க் குழாய். ஜேக். பஸ்ஸை நிறுத்தி அடிப்பாகத்தில் கழுவ முடிந்தது… ஸ்கூல்ப் பிள்ளைகள் செட்டா வானத்தைப் பார்க்க தூ-ஊ-க்கி ஒண்ணுக்கு அடித்து விளையாடும். அதுபோல… கீழ்ப்பக்கம் இருந்து விளக்கு வெளிச்சம் பாய்ச்சி மராமத்து வேலைகள் பார்க்க முடிந்தது.
ஒரு பஸ் விபத்தாகி வந்திருந்தது போல. சப்பிய அதன் ‘பாடி’யை நெளிசல் எடுத்திருந்தார்கள். டிங்கரிங் என்ற பேரே அவன் அதுவரை கேள்விப் படாதது. பெயின்ட் உரிந்து சொறி பிடித்த தோலாய்த் தெரிந்தது பார்க்க. ஸ்பிரே முறையில் அதில் பெயின்ட் பீய்ச்சியடித்துக் கொண்டிருந்தான் ஒருவன். அவனைப் பார்த்து சிநேகிதமாய்ச் சிரித்தான். கூட நின்றிருந்த இன்னொரு பையன், ‘டேய் இவனை நம்பாதே…’ என்று விரலால் மற்றவனைக் காட்டினான்.
‘உன்னை நம்ப மாட்டேன்…’ என்று சிரித்தான் சிவாஜி.
‘அப்டிப் போடு அருவாளை…’ என்றான் முதலாமவன்.
ஆனால் மெல்லிய குரலிலேயே அதிரடியாய் இல்லாமல் அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
ஆவி பறக்க சூடான சாப்பாடு. வேலை கேட்டு வந்தவனுக்கு இந்த மரியாதை ரொம்ப அதிகம். ஒரு வேளை கிருட்டினமணி அண்ணனுடன் வந்திரா விட்டால் இவரைப் பார்த்திருக்கவும் முடியாது. வேலை எனக் கேட்டிருக்கக் கூட தனக்கு தைரியம் இராது, என்று தோன்றியது.
இந்த மதிப்பும் கௌரவமும் மரியாதை எடுப்பும் கூட கிருட்டினமணி அண்ணன் எடுத்த நற்பெயர் அல்லவா?
‘நானே உன்னை இங்க சேர்த்து விடத்தான் யோசனை வெச்சிருந்தேன்டா. நீயும் அதே சொல்லிட்டே… பரவால்ல. உழைச்சி நல்லா முன்னுக்கு வா. பொய் பித்தலாட்டம் எதும் நம்ப முதலாளிக்குப் பிடிக்காது. நேர்மையா விசுவாசமா இருந்தா மனசார நமக்குக் கைகாட்டி விடுவாரு…’ என்றபடி ரசத்தை படமெடுத்த நாகமாய் உட்குழித்த கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்தான். பாம்பு சீறினாப்போல சத்தம் வந்தது.
இன்றைக்குச் சிரிப்பாய் சுமுகமாய் மரியாதையாய்ப் பேசுகிறார் மணி. வேலைக்குச் சேர்ந்த அன்று பார்க்க எவ்வளவு பயமாய் இருந்தது. நல்லாப் பேசிட்டே இருக்காப்ல இருக்கும். திடுதிப்னு கோபம் வந்திரும். வாய்ல இன்ன வார்த்தைன்னு வராது. இவரா இப்பிடிப் பேசறார்னு திகைச்சுப்போகும். உடம்பே நடுங்கும். சில சமயம் கிருட்டினமணி அடி கூட வாங்கியிருக்கிறான்.
எலேய் எதோ ஞாபகத்துல வேலைய அரைகுறையா முடிச்சி, சரியா முடுக்காமல் கொள்ளாமல் வண்டிய அனுப்பிட்டம்னா டேஞ்ஜர்டா. பாவி எம் பேர் அம்பேல்! அதும் மட்டுமில்ல நம்மளை நம்பி வண்டில ஏறி உக்கார்றானே டிரைவர்… அவனுக்கு நாம பண்ற துரோகம் அது, என்பார்.
என் பேர் அம்பேல்!… நல்லாத்தான் இருக்கு இந்தப் பேரு!
பிரேக் இருக்கான்னு அவன் செக் பண்றான்னு வையி… எப்பிடி செக் பண்ணுவான்?… ஓட்டிப்பார்த்துத்தானே? ஓட்டிப் பார்த்து பிரேக் இல்லைன்னா என்னாவுறது? – என்பார்.
அவன் முதுகு எலும்பு பிரேக் ஆயிருமே!
அவனிடம் நிறைய விசயங்கள் முதலாளிக்குப் பிடித்திருந்தன. குறிப்பாக இவனது சுத்தம். எப்பவும் சுத்தமாய் தலையில் எண்ணெய் போட்டுச் சீவி யிருப்பான். நெத்தியில் சிறு குங்குமம் சந்தனம் வைத்திருப்பான். அடிக்கடி கை கழுவுவான். கடைல போயி எதும் உதிரிசாமான் வாங்க அனுப்பினால், சட்டை மாட்டிக் கொண்டு போய்வருவான்…
வேலைமுடித்துக் கிளம்புமுன் அங்கேயே குளித்துவிட்டு – அப்போதுதான் வேலைக்குப் போகிற அளவில் சுத்தமாய்க் கிளம்பிப் போகிற அவனை அவர் ஆச்சர்யத்துடன் மதித்தார். அந்த சுத்தம், உடம்பு அலுப்பை மறந்த உற்சாகம் தந்தது அவனுக்கு.
அவன் முன்னால் தன்னை அழுக்காய் உணர்ந்தார் மணி. சின்னப்பையன்… இருந்தால் என்ன? அவனது நல்ல விஷயங்களைத் தாமும் கைக்கொள்ள விரும்பினார். வேலைமுடித்து, அங்கேயே மீன் வறுவல் மேய்ந்தபடி பாட்டில் உடைப்பது – சாராயம்! – பையன்களை ஏவி பாட்டில் வாங்கிவரச் செய்வது… என அவரது நடவடிக்கைகள் இப்போது மாறி விட்டன.
கோபம்கூட அடங்கி சிறு நிதானம் வந்தது. வாக்கினிலே இனிமை கூடிவந்தது. கடைவாசலில் மல்லிப்பூ வைத்த பெண்கள் வந்து வந்து நிற்பார்கள். அதெல்லாம் இல்லை என்பதல்ல – பையன்கள் முன்னால் தன்னைப்போலத் தவிர்த்தார்.
வண்டியைச் சரிசெய்ததும், மேலேறி அவரே வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருநாள் கிருட்டினமணியைக் கூப்பிட்டார். ‘எலேய் பாக்கறியா?’ என்று கேட்டார். அசந்து விட்டான். சரிங்க முதலாளி, என்று ஏறி உட்கார்ந்தான்.
பஸ் டிரைவரிடம், தம்பிக்கு எல்லாஞ் சொல்லிக் குடு, என ஒரு வார்த்தை சொன்னார்.
அடுத்த முறை பஸ்சில் இராப்பயணம் கூடவே அனுப்பினார். லாரிடிரைவர் செந்தில் என ஒருவன். அவனுடன் இராப்பயணம் போய்வந்தான் கிருட்டினமணி. ரெண்டு ட்ரிப் ஆனபின் இரவில் பயந்து பயந்து தனியாக டிரைவராகி வண்டி ஓட்டிப் போனான். மெதுவாகவே ஓட்டிப் போனான். ஒருமணிநேரம் ஓட்டிப் போனதும், தைரியம் அதிகமானது. தன்னைப் போல வேகம் வந்தது.
வாயில் அப்போது பாட்டு வந்தது, என்பதைச் சொல்ல வேண்டியதில்லை!
ஊர் தாண்டி ரஸ்தாக்களில் எருமை மாடுகள் நின்றிருக்கும். திரும்பிய வேகத்தில் அடித்துவிட நேரலாம். அலட்சியமாய் மனிதர்கள் ரோட்டைக் கடப்பார்கள். பஸ்ஸை முந்த என்று ராங் சைடில் அசுரவேகத்தில் வருவார்கள். நேரா முகத்துக்கு முகம் மோதுகிறாப் போல ஆகிப்போகும்… ஆனால் கிருட்டினமணி நிதானமானவன். எளிதில் அவனை ஆத்திரப் படுத்திவிட முடியாது.
லாரி ஒன்று விபத்தாகி வந்தது. டிங்கரிங். பழுதான பகுதிகளைச் சீர் செய்வது, மாற்றுவது, புதிதாய் என்ன பெயின்ட் அடிக்கலாம்… எல்லா வேலைகளையும் அவனிடமே விட்டுவிட்டார் மணி. வண்டிய புதுக் கல்யாணப்பொண்ணு போல அலங்கரிக்கணும்டா… என்றார் உற்சாகமாய்.
அதுவரை முழுவேலையும் ஒரேஆளை நம்பி அவர் ஒப்படைத்ததே கிடையாது.
தன் பேர் கெட்டு விடக் கூடாது எனக் கவனங் காட்டி வந்தார்.
அவன் வந்தபின் மெல்ல கடையில் தன்நேரத்தையே கூட அவர் குறைத்துக் கொண்டார். வீடு, வாசல் எனப் பெருகிய வாழ்க்கை. பெரியவன் மீனாட்சிசுந்தரம். பெரியவனைப் பட்டணத்துக்குப் படிக்க அனுப்பினார். அடுத்தவன் ரத்னசபாபதி. படிப்பில் அத்தனை சூட்டிகையாய் இல்லை… அச்சகம் வைக்கிறேன், என்றான். சரி, என்று வைத்துக் கொடுத்தார்.
அடுத்தவாரம் அவரது பிறந்த நாள் வந்தது – ரெண்டாமவன் /இன்று பிறந்தநாள் காணும் எங்கள் தந்தை வைகறைவாசல் மணி அவர்களை வாழ்த்த வயதில்லை! வணங்குகிறோம்!!/ என்று பெரிதாய் நோட்டிஸ் அடித்து வீட்டு வாசலில் ஒட்டினான்.
நன்றாய்த்தான் இருந்தது அவருக்கு!
வைகறைவாசல் மணி!
பேர்கூட நல்லாத்தான் இருக்கு…
இப்போது லேசாய் அரசியலில் அவரைச் சுற்றிவளைக்க ஆட்கள் வியூகம் திரள்கிறார்கள். கூட்டங் களில் தலைமை, என அழைக்கிறார்கள். பேசக் கூப்பிடுகிறார்கள். அவர் பேரும் மாறியிருக்கிறது –
வை க றை யா ர்!
அதுவும் நல்லாத்தான் இருக்கு!
ரெண்டு பையன் ஒரு பெண் அவருக்கு. சுலோச்சனாவை அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டில் கொடுத்திருக்கிறார்.
‘அது சரி அண்ணே, நீங்க வேறஎதோ சொல்ல வந்தீங்க?’ என்கிறான் சிவாஜி.
‘ஆமாமா, கதையை எங்க விட்டேன்?’ என்று கேட்டான் கிருட்டினமணி.
எலே வண்டி சூப்பர்டா, சொன்னாப்ல புதுப் பெண்ணாட்டமா ஆக்கிட்ட, என்றவர் – கல்யாணங் கட்டிக்கிறியா?… என்று சிரிக்கிறார் முதலாளி.
புரியலங்க முதலாளி.
வண்டி உனக்குதான்…
உனக்குதான்…னா?…
எடுத்துக்க. சல்லிசா விலைக்கு வந்தது, வாங்கிட்டேன்…
அப்டிங்களா, ரொம்ப சந்தோசம் முதலாளி.
உன்னிய நம்பிதான் வாங்கியிருக்கேன் பாத்துக்க. பணம் போட்டது நான். பேருக்குதான் நான் முதலாளி. வண்டி உன்னிது…
அழுகை வந்து விட்டது அதைக் கேட்க.
அவர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். கை தன்னைப்போல மீசையை நீவி விட்டது.
எலேய் நல்ல முகூர்த்தம் பாரு. தாலி கட்டிரு… என முதலாளி சிரிக்கிறார்.
‘ஐய உங்களை நல்லவர்னு நினைச்சேனே…’ என்கிறான் சிவாஜி.
‘ஏன்?’
‘இப்ப உங்களுக்கு ரெண்டு பொண்டாட்டி!’ என்று சிரிக்கிறான்.
சற்று துணிச்சலாய் அப்புறம் கேட்கிறான் –
‘ரெண்டுதானா? ஒருவேளை மூணா?’
(தொடர்கிறது)


storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்