வணக்கம் துயரமே – 1

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


தொடர்வதற்கு முன்:

பிரான்சுவாஸ் சகன் (1935 – 2004): இவரது உண்மையான பெயர் Francoise Sagan . தமது 19 வயதில் முதல் படைப்பினைக் கொண்டுவந்தார். வணக்கம் துயரமே!(Bonjour tristesse -Hallo sadness)1954ல் ஆண்டில் வெளிவந்தபோது பெண்களின் பாலியல் பிரச்சினைகளை அப்பட்டமாக சொல்லபட்டதென்கிற காரணத்திற்காக, கடுமையான விவாதத்திற்கு உட்படுத்தபட்டது. எனினும் அதே ஆண்டில் இலக்கிய விமர்சகர்களின் பரிசுக்குறிய நூலாக தேர்வு செய்யப்பட(Le Prix des Critiques), நூலுக்கெதிராக எழுந்த கண்டனக்குரல்கள் ஓரளவிற்குக் குறைந்தன. விற்பனையில் பல சாதனைகளை முறியடித்திருக்கிறது. இயலுமெனில் திண்ணையில் ஏற்கனவே இவரைக்குறித்து வெளிவந்துள்ள கட்டுரையை நண்பர்கள் வாசித்துவிட்டுத் தொடரலாம்.

அத்தியாயம் 1

அதனை எப்படி உங்களுக்கு விளங்கவைப்பது, என்ன பெயரிட்டு அழைப்பது, படுகின்ற அவஸ்தையின் முழுபரிமாணத்தையும் விளக்க, பொருத்தமான பெயரொன்று அதற்கு வேண்டும், குழப்பத்திலிருக்கிறேன்.இதுவரை நான் அனுபவத்திராத வேதனை, அது தரும் உபத்திரவமும்; மெல்ல மெல்ல கபளீகரம் செய்ய நினைக்கும் அதன் சுபாவமும் என்னை வதைத்துக்கொண்டிருக்கின்றன. விக்கினமில்லாததும், சுயநலமற்றதுமான உணர்ச்சி, சொல்லிக்கொள்ள ஒருவகையில் அவமானமாக இருந்தபோதிலும், உண்மையில் மரியாதைக்குரியது. அதனை என்னவென்று நான் அறிந்தலில்லை, என்னை அது அறிந்திருக்கிறது, எப்படி? இம்சையும், இன்னலுமாக, ஏன் ஒரு சில வேளைகளில் நெஞ்சத்தில் சஞ்சலகமாகக்கூட. இன்றைக்கும் ஏதோவொருபெயரில், பட்டினைப்போன்று மிருதுவாக ஆனால் உறுத்தும் வகையில் என்னைச் சுற்றிக்கொண்டு, ‘அவர்களிடமிருந்து’ விலக்கிவைத்திருக்கிறது.

அதுவொரு கோடைகாலம், எனக்கு அப்போது பதினேழு வயது, வயதுக்குறிய சந்தோஷத்தில் குறையின்றி திளைத்த நேரம். நான் குறிப்பிட்ட ‘அவர்கள்’ வேறுயாருமல்ல, என்னுடைய தந்தையும் அவரது காதலி ‘எல்ஸாவும்'(Elsa). என்னோட இந்த அபத்தமான நிலைமையை காலத்தைக் கடத்தாமல் எவரிடத்திலாவது சொல்லவேண்டும். அப்பாவுக்கு அப்போது நாற்பது வயது, பதினைந்து வருடங்களாக தனித்து வாழ்ந்துகொண்டிருந்தார்; இளமை குன்றா மனிதர், ஆரோக்கியத்துடன்கூடிய சுறுசுறுப்பும், நினைத்ததைச் சாதிக்கும் குணமும் அவரது கூடுதல் பலம். விடுதி வாழ்க்கையை முடித்துக்கொண்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வெளியுலகிற்குவந்தபோது, பெண்மணி ஒருத்தியுடன் அவர் சேர்ந்து வாழ்கிறார் என்பது எனக்குத் தெரியாது, அதைப் புரிந்துகொள்ளவும் இயலாதவளாக இருந்தேன். ஆறுமாதங்களுக்கொருமுறை பெண்களை மாற்றக்கூடியவர் என்பதையும் மறுப்பதிற்கில்லை! எனினும் அதிகக் காலம் அவரிடமிருந்து விலகியிருக்க என்னால் ஆவதில்லை, முதலில் அவரது வசீகரம், ஒவ்வொருமுறையும் அவர் தேடிக்கொள்ளும் புத்தம்புது வாழ்க்கையும் அதை இலகுவாக அவர் கொண்டுசெல்லும் திறனும், பிறகு எப்போதும்போல எனது சந்தர்ப்ப சூழ்நிலைகளும் வெகுசீக்கிரத்தில் அவரிடத்திலே என்னை சேர்த்துவிடுகின்றன. வாழ்க்கையை மேம்போக்காக எடுத்துக்கொள்ளும் மனிதர், பிரச்சினைகளை அணுகுவதில் சாமர்த்தியம், எப்போதும், எதிலும் ஆர்வம், சட்டென்று விலகவும் செய்வார், இது போதாதா? வேறென்ன வேண்டும்? பெண்களை வளைத்துப்போட. எனக்கும் அவரை நேசிப்பதில் தடங்கலொன்றுமில்லை, பிரியத்துடன் நேசித்தேன்: நல்லதொரு மனிதராக இருந்ததோடு; இரக்க சுபாவமும், கலகலப்பான வாழ்க்கை முறையும், என்மீதான அவரது கட்டுக்கடங்கா அன்பும் அதற்கான காரணங்களென்று சொல்லவேண்டும். அவரினும்பார்க்க ஒரு நல்ல நண்பனையோ, அல்லது எனக்கு மகிழ்ச்சியைத் தரவல்லவர்களாகவோ வேறொரு நபரை என்னால் கற்பனைகூட செய்ய முடியாது. கோடையின் ஆரம்பத்தில், ‘இந்த விடுமுறையில் எல்சாவும்- (அதாவது அவரது சமீபத்திய காதலி) நம்மோடு இருப்பத்தில் உனக்கேதும் வருத்தமேதுமில்லையே’, என்று அன்பாய்க் கேட்டிருந்தார். எனது தந்தையின் பெண்கள் தேவையை நான் உணர்ந்தவளென்பதால், மறுப்பேதும் சொல்லவில்லை. தவிர ‘எல்சா’ வினால் எங்கள் விடுமுறைக்கு எந்தக் குந்தகமும் ஏற்படாதென்றும் நம்பினேன். அவளுக்கு வாளிப்பான தோற்றம், பொன்நிறம், ‘ஷான்ஸெலிஸே'(1) பக்கமுள்ள ‘பார்'(Bar)களிலும், கலைக்கூடங்களிலும் கண்ணிற்படுகிற முகபாவம், மேட்டிமைதனத்திலும், படைக்கபட்டவிதத்திலும் சராசரி பெண்மணி. அடக்கம், எளிமை, எதையும் மேம்போக்காக எடுத்துக்கொள்ளும் குணம். அப்பாவும், நானும் விவாதித்து பழகியவர்கள் என்ற வகையில், விடுமுறைப் பயணத்திற்கென்று சந்தோஷத்துடன் காத்திருந்தோம். ஜூன்மாதத்தில், முதல் வெப்பத்தை உணர்ந்தநாளிலிருந்தே, இந்த வருட விடுமுறைக்கு மத்தியதரைக் கடற் பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்குப்பிடித்துக் கோடையைக் கழிக்கவேண்டுமென்கிற எங்கள் கனவுக்கேற்ப அப்பா வாடகைக்கு எடுத்திருந்த ‘வில்லா’: பார்த்தமாத்திரத்தில் பரவசபடுத்தியது, கடல் நீரை உள்வாங்கி மேலே கடலுக்காய் நீண்டிருந்த நிலத்திட்டில் தனித்து இருந்தது. அடர்த்தியாகவிருந்த ஊசியிலை மரங்கள், பிரதான சாலையிலிருந்து அதனை மறைத்திருந்தன. அலைகள் தழுவலில் செம்மண் குன்றுகள் இருபுறமும் உயர்ந்து நீண்டிருக்க தங்கவண்னத்தில் ஜொலிக்கும் வளைகுடா, அதற்கென்று ஒரு வெள்ளாடுகள் பாதை.

ஆரம்பதினங்கள் வெகு சந்தோஷமாகவே கழிந்தன. மணிக்கணக்கில் கடற்கரையில், கொளுத்தும் வெயிலில் படுத்துக்கிடந்ததற்குப் பலனில்லாமலில்லை, கொஞ்சகொஞ்சமாக எங்கள் உடல் மாசுமருவற்ற பொன்னிறத்திற்கு வந்திருந்தது. ஆனால் எல்சாவின் நிலைமை ஆகப் பரிதாபம், வெயிலில் வதைபட்டு அவளது உடல் ஏதோ உரித்தெடுத்ததுபோல சிவந்திருந்தது. முன்பக்கம் சரிந்த தன்வயிற்றை குறைக்க முனைந்தவர்போல கால்களை அசைத்து அப்பா தீவிரமாக பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தார், தனக்குள்ள ‘டான் ழுவான்'(2)’ அடையாளம் சிதைந்துவிடக்கூடாதென்கிற அக்கறை. அதிகாலையிலேயே, தண்ணீரில் இறங்கிவிடுவேன், நீர் சில்லென்று, தெளிவாக இருக்கும். மெல்ல அமிழ்ந்துவிடுவேன். இப்படித்தானென்று சொல்லமுடியாதவகையில், வலமும் இடமும், முன்னும் பின்னும், எழுந்தும் அமிழ்ந்தும் களைத்துபோகும்வரை, பாரீஸ் நகர வாழ்க்கையினால் படிந்துள்ள கசடுகளையும், அழுக்குக்களையும் அலசிக் கரைப்பேன். பிறகு வெண்மனலில் அக்கடாவென்று நீட்டிப்படுப்பேன், கைகொள்ள மணலை எடுத்து விரல்களூடாக பொன்மணல்போல, பொலபொலவென்று அவை கசிவதை ரசிப்பேன். அதை நேரத்தோடு ஒத்திட்டு சிக்கலில்லாதவொரு கற்பனையில் மூழ்குவேன். அப்படியான எளிய இலகுவான கற்பனையில் மூழ்குவதும் ஒரு வகையில் சந்தோஷத்தையே தந்தது. முன்னமே குறிப்பிட்டதுபோல அதுவொரு கோடைகாலம், கற்பனைகளும் எளிதானதாக, இலகுவானதாகத்தான் இருந்தன.

அன்றைக்கு ஆறாவது தினம். ‘சிரிலை(Cyril) முதன் முதலாகப் பார்த்த தினம். சிறிய விளையாட்டு பாய்மரபடகொன்றில் நீரில் வேகமாய்ச் சென்றவன் எங்கள் திசைக்காய்த் திருப்பிக்கொண்டு வந்தான். அவனது உடமைகளை இறக்கிவைக்க நான் உதவினேன். இருவரின் சிரிப்புக்கிடையில், அவன் பெயர் ‘சிரில்’ என்று தெரிந்துகொண்டேன். சட்டக்கல்லூரி மாணவனென்பதும், விடுமுறைக்காக தனது தாயுடன் அருகிலுள்ள வில்லாவொன்றில் தங்கியிருக்கிறானென்பதும் அவனைபற்றிய உபரி செய்திகள். அவனுடைய முகத்தில் லத்தீன் இனத்தவரின் சாயல், நல்ல பழுப்பு நிறம், வெளிப்படையாக பேசினான், ஒருவகை இணக்கம் தெரிந்தது. அவனது அண்மையில் ஒருவித பாதுகாப்பு, மொத்தத்தில் எனக்கு அவனைப் பிடித்திருந்தது. உண்மையில் எனக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வெகுதூரம்: அவர்களது முரட்டுத்தனம், சதா சர்வகாலமும் தங்களைப்பற்றிய கவலையில் மூழ்கியிருப்பது, பிறகு குறிப்பாக அவர்களது இளமைப்பருவம், அதுவே அவர்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆதாரமட்டுமல்ல, ஆணிவேரென்றும் நம்புகிறேன். ஆம்..இளைஞர்களை வெறுக்கிறேன். அவர்களினும் பார்க்க நாற்பது வயதுள்ள என் தகப்பனாரின் நண்பர்கள் தேவலாம். அவர்கள் பேச்சில் ஒரு தந்தைக்குரிய கண்ணியமுமுண்டு, ஒரு காதலனுக்குரிய இனிமையுமுண்டு. மாறாக ‘சிரில்’ என்னைக் கவர்ந்தான். திடகாத்திரமான வாலிபன், சிலவேளைகளில் பார்க்க அழகாகவும் இருந்தான். அவனுடைய அந்த அழகு ஒருவகை நம்பிக்கைத் தன்மையை அவனிடத்தில் ஏற்படுத்தியிருந்தது. சில நேரங்களில் அருவருப்பான தோற்றமுள்ள அப்பாவின் நண்பர்களை அவருடன் அடிக்கடிச் சந்தித்திருக்கிறேன். அம்மனிதர்களிடமுள்ள கசப்பினை அப்பாவிடம் ஏனோ வாய்திறப்பதில்லை. அம்மாதிரியான நேரங்களில் என்வரையில் உபத்திரவம் அளிப்பதாகவும், இருப்பற்றதாககவுமே வசீகரமற்ற அம்மனிதர்களின் புறத் தோற்த்தைக் கருதினேன். அவர்களது அந்தத் ‘தாழ்மையை’ நான் வெறுக்கிறேன், தவிர அவலட்ஷணமும் என்னைப் பொறுத்தவரையில், கீழ்மைத் தன்மையுள்ள ஒருவகை உடலூனம். அது சரி நமது தேவைதான் என்ன? அல்லது சந்தோஷபடுத்தக் கூடியதுதான் எது? அதற்கான வழிமுறைகள்தான் என்ன? உங்களால் சொல்ல முடியுமா? அதனை அடைவதற்கான அதாவது சந்தோஷத்தினைப் பெறுவதற்குரிய அவாவினை நம்மிடம் தூண்டுவற்கு, லிட்டர்லிட்டராய் உயிர்சத்து தேவையோ? சந்தோஷமென்பது நினத்ததை முடிப்பதோ? பிறரறியக்கூடாதென்று நம் மனதில் பூட்டிவைத்திருக்கும் ரகசியத் தேவைகளோ, அல்லது சொல்லக்கூடாத தேவைகளோ? சம்பந்தப்பட்ட ஒருவன் அல்லது ஒருத்தியின் தார்மீக ஆதரவோடு, தன்னில் உறுதியாய் நிற்கும் செயலோ? ம்.. இதோ இந்தக்கணம் வரையிலும் என்னிடத்தில் இத்தகு கேள்விகளுக்குப்பதிலில்லை.

சிரில் என்னைவிட்டுப் புறப்பட்டு சென்றபோது, பாய்மர விளையாட்டுப் படகைச் செலுத்தும் கலையைக் கற்றுக்கொடுத்திருந்தான். மதிய உணவிற்காக நாங்கள் தங்கியிருந்த ‘வில்லா’வுக்குத் திரும்பியபொழுது சிரிலைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்த என்னால் அங்கு நடந்த உரையாடலில் வெறுமனே ஒரு பேச்சுக்குக் கலந்துகொண்டேன். உரையாடலின் போது எனது தந்தையின் பதட்டத்தை ஒருவேளை கவனிக்க நேர்ந்திருந்தால், ஒதுங்கியே இருந்திருப்பேன். மதிய உணவிற்குப்பிறகு, எப்போதும்போல மாலையில் மேல்மாடத்திற்குச் சென்று சாய்வு நாற்காலியில் இளைப்பாறினோம். வானமெங்கும் நட்சத்திரங்கள் தெளிகப்பட்டிருந்தன. நான் அவைகளை பார்த்தவண்ணமிருந்தேன், இன்றைக்கு சற்றுமுன்பாக, அவைகள் உதிர்ந்து வானத்தில் தடம்பதிக்கலாமென்பதுபோலத் தோன்றியது. அப்படியேதுமில்லை. அது ஜூலைமாதத்தின் ஆரம்பகாலம், புரிந்தோ என்னவோ நட்சத்திரங்கள் அசைவின்றி கிடந்தன. மேல்மாட சரளைக்கற்களுக்கிடையே சில்வண்டுகள் பாடுகின்றன. அவைகள் ஆயிரக்கணக்கில் இருக்கவேண்டும், கோடைவெப்பமும் குளிர் நிலவும் ஏற்படுத்திய போதை அவற்றினை இரவுமுழுக்க சத்தமிட வைத்திருந்தன. வண்டுகள் தங்கள் இறகுகளால் ஒன்று மற்றொன்றை உரசிக்கொள்வதால் எழும் ஓசையெனவும் சொல்கிறார்கள், ஆனால் எனக்கென்னவோ பூனைகள் அவைகளுக்கான காலங்களில் குரலெழுப்புவதுபோல சில்வண்டுகளும் இயற்கையாகத் தங்கள் அடித்தொண்டையிலிருந்து குரலெழுப்புமென்று எண்ணத் தோன்றுகிறது. எங்களுக்கு ச் சுகமாக இருந்தது. சட்டைக்கும் உடலுக்கும் இடையில் ஒட்டிக்கிடந்த குருமணல் பொய்யுறக்கத்தின் மென்மையானத் தாக்குதலினின்று என்னைக் காப்பாற்றியது. அந்த நேரம்பார்த்து, அப்பா மெல்ல செருமிக்கொண்டு சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.

– ” ஒருத்தர் வருகையைப் பற்றி உன்னிடத்தில் சொல்லவேண்டும்” – அப்பா.

சட்டென்று ஒருவித ஏமாற்றம் என்னைக் கவ்வியது, கண்களை மூடினேன். பிரச்சினைகளின்றி இருந்தோம், இனி அது தொடராது!

– ” சீக்கிரம் சொல்லு, யாரது?, எல்சா உலகியல் வாழ்வில் அக்கறை கொண்டவள்; தெரிந்துகொள்ளவேண்டுமென்கிற ஆர்வம் வேறு; குரல் உரத்து ஒலித்தது.

– “ஆன் லார்சென்”(Anne Larsen), என்று கூறிய அப்பா, என் பக்கம் திரும்பினார்.

நான் அவரைப் பார்க்கிறேன். அதிர்ச்சியில் என்ன பேசுவது என்கிற குழப்பம்.

– “நினைவு பொருட்களை சேகரிக்கவென்று அலைந்து களைப்புற்றதுபோதும், எங்களோடு வந்து கொஞ்ச நாட்கள் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகலாமெயென்று, அவளிடத்தில் நான் பேசினேன்..வருகிறாள்.”

நான் நினைத்து பார்க்கவில்லை. ஆன் லார்ஸன் – எனது அசட்டு அம்மாவுக்கு வெகு நாளையத் தோழி. அப்பாவுக்கும் அவளுக்குமான உறவைப் பற்றிப் பெரிதாக சொல்வதற்கில்லை. இருந்தபோதிலும், இரண்டுவருடங்களுக்கு முன்பு, நான் விடுதியைவிட்டு வெளியே வந்தபோது, எங்கேயாகிலும் யாரிடமாகிலும் என்னை விட்டுவைக்கவேண்டும் என்ற கட்டாயத்திலிருந்த அப்பா, அவளிடம் சேர்ப்பித்தார். அவளுடைய வீட்டிற்குச் சென்ற ஒருவாரத்தில், நன்கு உடுத்தவும், வாழும்வகையையும் கற்றுக்கொண்டேன். என் மனதில் சட்டென்று உயர்ந்துநின்றாள், வெறித்தனமாக நேசித்தேன். அந்த நேசத்தினை சாமர்த்தியமாக அவளுக்குத் தெரிந்த ஒர் இளைஞனுக்கென்றாக்கிவிட்டு அவள் தப்பித்துக்கொண்டாள். ஆக முதன் முதலில், நேர்த்தியாய் உடுத்தவும், அலங்கரித்துக்கொள்ளவும் மாத்திரம் அவள்காரணமல்ல, எனது முதற் காதலுக்குங்கூட அவளே காரணமானாள், நான் என்றென்றும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கவேண்டியவள். நாற்பத்திரண்டு வயதென்றாலும் எவரையும் எளிதில் வசப்படுத்திவிடுபவள், தேடிப் பெறவேண்டியவள். வடிவானமுகமென்றாலும், வாட்டமும் கர்வமும் அதிலுண்டு, பிறகு எதிலும் பற்றுதலற்ற அவளது ஏனோதனோ மனப்பான்மை. அவளிடத்தில் குறைகாண்பவர்களுக்கு, இந்தக் கடைசிப்பண்பு சாதகமாக இருந்தது. அன்பிற்குரியவளாகவும் இருந்தாள், அடையமுடியாத தூரத்திலும் இருந்தாள். அடுத்தவர்க்கு அச்சமூட்டுகிற சலனமற்ற இதயம் ஒருபக்கம், எதிலும் சுணக்கமற்ற ஆர்வமும், அக்கறையும் கொண்டவளாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்வது அவளது இன்னொரு பக்கம். விவாகரத்து செய்துகொண்டவள், தனியருத்தியாகத்தான் வாழ்ந்துவந்தாள். எங்களுக்குத் தெரிந்து காதலனென்று அவளுக்கு எவருமில்லை. அவள் நண்பர்களும், உறவினர்களும் கண்ணியமானவர்கள், புத்திசாலிகள், அமைதியானவர்கள். ஆனால் எங்கள் மனிதர்கள் அப்படியானவர்களல்லர். அவர்கள் ஆர்ப்பரிக்கின்றவர்கள், பேராசைபிடித்தவர்கள். எனது அப்பாவுக்கு ஒருவர் பார்ப்பதற்கு லட்சணமாகவும், வேடிக்கையாக நடந்துகொள்பவராகவும் இருந்தால்போதும். அப்படித்தான் எங்கள் நண்பர்கள் இருந்தனர். அப்பாவும் நானும் இப்படி உல்லாசம், பொழுதுபோக்கு, வேடிக்கைப்பேச்சு என்றிருப்பதைப் பார்த்து, எனக்கென்னவோ அவள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே எங்களிடத்தில் பழகியதாக நினைக்கிறேன். தவிர எதிலும் மிதமிஞ்சிபோய்விடக்கூடாதென்பதும் அவளது கொள்கையென்பதால், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இரு துருவமாகவிருந்த எங்களை ஒன்றுசேர்த்தது, அவரவர் பார்த்த தொழில்கள். அப்பா விளம்பரத்துறையிலும், அவள் ஆடைகள் வடிவமைப்பிலும் இருந்தனர்…பிறகு அம்மாமீதான எனது நினைவுகள், எனது பிரயத்தனங்கள், அவள் என்னைக் கொஞ்சம் கடுமையாக நடத்தியபோதும் அவளிடத்தில் எனக்கிருந்த பிரமிப்பு ஆகியவை. எல்சா எங்களோடு தங்கியிருப்பதையும், படிப்பு சம்பந்தமான விடயங்களில் ‘ஆன்'(Anne)னுக்குள்ள அபிப்ராயங்களையும் கணக்கிற் கொண்டால், அவளது திடீர்வருகைக்கு இது உகந்த நேரமல்லவென்றுதான் சொல்ல வேண்டும்.

ஆன்னைக்(Anne)க் குறித்து அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டபின் படுப்பதற்காக, எல்சா(Elsa) மாடிக்குச் சென்றாள். நான் மாத்திரம் அப்பாவுடன் தனித்துவிடப்பட, அவர் காலருகே படிகளில் வந்து அமர்ந்தேன். அவர் குனிந்து தனது இருகைகளையும் எனது தோளில் போட்டார்:

– ” செல்லம்..என்ன நடந்தது? அநியாயத்திற்கு இளைத்திருக்கிறாய்,? வீட்டில் வைத்து வளர்க்கமுடியாத புலிக்குட்டிமாதிரி. எனது ஆசையெல்லாம் என்ன தெரியுமா? என்னோட மகள் பொன்னிறக்கூந்தலும், பீங்கான்போல கண்களும்கொண்டு, அழகா, திடகாத்திரமா…

– இப்போது பிரச்சினை அது இல்லை. எதற்காக ‘ஆன்'(Anne)ஐ, அழைத்தாய்? அதற்கு ஏன் அவள் சம்மதிக்கவேண்டும்? என்பதுதான் பிரச்சினை.

– உன்னோட வயதான தகப்பனாரைப் பார்ப்பதற்காக இருக்கலாம். யாருக்கு என்ன தெரியும்.

– ஆன்(Anne)னுக்கு ஏற்ற மனிதர் நீங்களில்லையென்று எனக்குத் தெரியும். அவள் புத்திசாலிமட்டுமல்ல, நன்கு மதிக்கப்படுபவள். பிறகு எல்ஸா(Elsa)? எல்ஸா என்கிற பெண்மணி இங்கே உங்களுடன் இருப்பது நினைவில் இருக்கிறதா இல்லையா? ஆன்னுக்கும் எல்ஸாவிற்கும் இடையிலான உரையாடலை உங்களால் கற்பனைசெய்து பார்க்கமுடிகிறதா என்ன? எனக்குப் பயமாக இருக்கிறது.

– நான் மறுக்கவில்லை. கற்பனை செய்வது கடினம். செசில் (Cளூcil), என் செல்லம்! பாரீஸ¤க்கு நாம் திரும்பமுடியுமென்றால்?”

மெல்ல சிரித்தபடி, என் கழுத்தை தடவிக்கொடுத்தார். நான் திரும்பி அவரைப் பார்த்தேன். இரூண்ட அவரது கண்களில் ஒளி, இரப்பைக்குக் கீழே விநோதமான சுருக்கங்கங்கள், வாய் சின்னதாய் மேலே குவிந்து உயர, சட்டென்று விலங்காய் வடிவெடுத்ததுபோல ஒரு தோற்றம். அவர் சிக்கலைதேடிக்கொள்ளும்போதெல்லாம் அவரோடு சேர்ந்து சிரிக்கும் வழக்கப்படி அப்போதும் சிரித்துவைத்தேன்.

– “எனது எல்லாகாரியங்களுக்கும் துணை நிற்பவள் நீயென்கிறபோது, நான் மாத்திரம் தனியே எதைச் செய்யப்போகிறேன்?”

அவரது பதிலில் எனக்குப் பரமதிருப்தி, கேட்பதற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் தற்போதைக்கு அவருக்குநேரம் சரியில்லையென என்னால் அனுமானிக்கமுடிந்தது. இரவு வெகுநேரம்வரை காதலைக்குறித்தும், அதனால் ஏற்படுகிற பிரச்சினைகள் குறித்தும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்பாவை பொறுத்தவரையில் நான் பிரச்சினைகளென பேசியவை அனைத்துமே கற்பனைகளென்றார். ஆண்பெண் உறவுகளில், கடமை, விசுவாசம், நம்பிக்கை என்கிற வார்த்தைகளில் தமக்கு உடன்பாடில்லையென்றார். அவை அர்த்தமற்றவைமட்டுமல்ல, ஒருதலைபட்சமானதுங்கூட என்று விளக்கம்வேறு. அவரன்றி வேறொரு மனிதர் கூறியிருந்தால் நான் அதிர்ச்சியடைந்திருப்பேன். இப்படியெல்லாம் பேசினபோதிலும், அவரது காதல் விவகாரங்களில் பிரியமும், அளவிடற்கரிய ஈடுபாடும் விலக்கப்பட்டதல்ல என்பதை நான் அறிவேன், அவர் எதிர்பார்க்கவில்லை சொல்லிமுடித்தபோது கூடுதலாகவே உணர்ச்சிவசப்பட்டிருந்தார், அவை தற்காலிகமானதென்றும் எனக்குத் தெரியும். காதலைக்குறித்து அவர் கொண்டிருந்த மனப்பாண்மை: அதாவது சட்டென்று காதல் கொள்வதும், அதனை முரட்டுத் தனமாகக் கையாண்டு, விலகி வேறொன்றில் மனதைச் செலுத்துவதும், என்னைப் பெரிதும் ஈர்த்தது. நம்பிக்கை, விசுவாசம் போன்ற சொற்கள் மீது அக்கறை கொள்ளவேண்டிய வயசில் நானுமில்லை. காதலைக் குறித்த எனது ஞானமும் சொற்பமானதுதான், அவை ‘சந்திப்பு’, முத்தங்கள்-கலவி, பின்னர் சலிப்பு என்கிற சொற்களுக்குச் சொந்தமானவை.

—————————————————————–

1. Les Champs-Elysee – பாரீஸ் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கவர்ச்சிகரமான சாலை. திரை அரங்குகள், காப்பி பார்கள், உலகில் மிகப்பிரசித்திபெற்ற ஆடம்பரபொருள்களுக்கான பிரத்தியேகக் கடைகளென நிறைந்த இடம். பாரீஸ் நகரை அடையாளபடுத்தக்கூடிய இடங்களுலொன்று.

2. ‘Don Juan’ – Tirso de Molina என்ற ஸ்பானிய நாடக ஆசிரியரால் பதினேழாம் நூற்றாண்டில் ‘El burlador de Sevilla y convidado de piedra'(The Playboy of Seville and Guest of Ston) என்கிற நாடகத்தில் அறிமுகபடுத்தபட்ட நாயகன். ஒரு மைனர் – ஸ்த்ரீலோலன். ஐரோப்பிய எழுத்தாளர்களில் பலரும் இவனை மையமாகவைத்து எழுதியிருக்கிறார்கள்

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா