மஞ்சள் பசு

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

ஹெச்.ஜி.ரசூல்


மஞ்சள் பசு
ஹெச்.ஜி.ரசூல்

வெட்டவெளிப் பாலையிலிருந்து ஒரு கூட்டம் கால்நடைகள். விரைந்தோடி வந்தன. செம்மறியாடுகள், வெள்ளாடுகள், காளைகள், பசுக்கள், ஒட்டகங்கள் என அதன் வண்ணங்கள் பலவாக இருந்தன. நீர்நிலைப் பகுதிகளை நோக்கிய அவற்றின் பயணங்கள் முடிந்தபாடில்லை. வழிநெடுக சுட்டெரிக்கும் தீயில் ஒன்றிரண்டு சுருண்டு விழுந்து பின் எழுந்து நடந்தன.
நேற்று காட்டுப் பகுதியிலிருந்து தப்பி வந்து அந்த பாலைவனத் தீவில் பசித்துக் கொண்டிருந்த சிங்கமொன்று பச்சைமாமிசம் கேட்டு கூக்குரலிட்டது. அதன் சப்தத்தில் பயந்து போன மிருகங்கள் நடுநடுங்கின. சூரியன் மறையவிருந்த சாயங்காலம் தொட்டு இரவு முழுக்க பயத்தால் நடுநடுங்கிக் கொண்டிருந்த மிருகங்கள் உதயத்திற்கு முன்பே இருப்பிடங்களை விட்டு வெளியேறத் துவங்கின.
செம்மறியாடு தனது அடர்ந்த முடி படர்ந்த உடம்பை சிலிர்த்துக் கொண்டு சொன்னது.
என்னைப் படைத்துக் காத்த அல்லாஹ்விற்கு நன்றி சொல்ல வேண்டும் உண்மைதான். ஆனால் என்னை அடித்துக் கொன்று சாப்பிட எத்தனிக்கும் சிங்கமும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துமே.
வாய்ப் கொழுப்பு சீலையில் வடியும்னு சொல்லுறது இதுதான் கூட வந்த மஞ்சள் நிறப்பசு பதில் சொல்லி சீண்டியது.
முன்பொருதடவை இப்படித்தான் உயிர் பிடுங்கி மரணத்தை வரவழைக்க நியமிக்கப்பட்ட வானவர் மலக்குல்மெளத் மூசாநபிக்கருகே உயிர் எடுக்க சென்றபோது ஆத்திரமும். அவசரமும்பட்டு வானவரின் முகத்தில் கோபத்தால் ஓங்கி அறைந்து விட்டார். அழுதுகொண்டே மலக்குல்மெளத் இறைவனின் சந்நிதானத்தில் முறையிட்டது. உனது அடியான் கொடுத்த அறையில் நான் மூர்ச்சையாகி விட்டேன். தேவையற்றவர்களிடம் என்னை அனுப்பி எனது நிலையை இப்படி தர்மசங்கடமாகி விட்டாயே… என்ன செய்யவென்று கேவிக் கேவி நின்றபோது ஒரு பதில் கிடைத்தது.
மலக்குல்மெளத்தே.. மூசா மரணத்தை விரும்பவில்லை. நீண்டகாலம் வாழ ஆசைப்படுகிறார். எனவே அவர் விருப்பப்படி வாழ அனுமதி கொடுக்கப்போகிறேன்.
வானவர் மலக்குல்மெளத் தயங்கியபடியே சந்தேகத்தைக் கேட்டா¡. நீண்டகாலம் வாழ அனுமதி என்றால் எத்தனை ஆண்டு மூவாயிரம் வருடங்களா…? பூமியின் காலத்துக்கும் அர்ஷின் காலக்கணக்குக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உண்டே…
இறைவன் சொன்னான்… நீ திரும்பிப் போ மூசாவிடம் அங்குள்ள காளைமாடு ஒன்றின் முதுகில் அவரது கையை வைத்து பிடிக்கச் சொல். அவரது கைப்பகுதிக்குள் காளைமாட்டின் முதுகுப் பகுதியிலுள்ள எத்தனை முடிகள் அகப்படுகிறதோ அத்தனை ஆண்டுகள் அவரை உயிருடன் வாழவிடலாம்.
இப்படியானதொரு பெருமை எனக்குண்டென்று உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்கிறேன். கூட்டத்தில் வந்து கொண்டிருந்த காளைமாடு சொல்லியது.
அதுசரி மூசாவின் கைக்குள் காளைமாட்டின் எத்தனை முடிகள் சிக்கின. அவர் எத்தனை ஆண்டுகள் உயிருடன் இருந்தார்.
ஆர்வமிகுதியால் ஒட்டகக்குட்டி கேட்டது. வெள்ளையாடுகளும் செவிகளைத் தீட்டிக் கொண்டு நின்றன.
அப்போது காற்றின் வேகம் அதிகரிக்க பாலைப் புழுதி மேலெழும்பி கண்களை மறைத்தது. மிருகங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு தட்டுத் தடுமாறி நின்றன என்ன ஏதென்று யாருக்கும் புரியவில்லை.
என் பிள்ளைகளே நில்லுங்கள். மூடிய கண்களை திறந்து பாருங்கள் ஓடிக் கொண்டிருக்கும் கால்களை நிறுத்துங்கள். இரவென்றும் பகலென்றும் பாராது உங்களைத் துரத்தி கொல்லவரும் சிங்கத்திடமிருநூது காப்பாற்ற இதோ நான் ஒரு உபாயம் சொல்கின்றேன்.
அந்தரவெளியில் புழுதிப்புயலை மீறி எழுந்ததொரு சப்தத்தை பீதியும் பயமும் நிறைந்ததான சூழல் கரைத்தது. இறைவனின் குரலா, ஜிப்ரயீல் அலைகிஸ்ஸலாமிடம் வெளிப்பட்ட குரலா, சைத்தானின் குரலா எதுவென்று சொல்லத் தெரியாமல் மிருகங்கள் திகைத்து நின்றன.
எனினும் மரணத்திலிருந்து தப்பித்துக் கொள்ள அந்த குரல் சொல்லும் உபாயத்தை கேட்கலாமென நினைத்து மிருகங்களின் நாவுகள் துதி செய்தன.
யாரப்பே என்ன செய்யச் சொல்கிறாய். . . கூட்டுக்குரல்கள் ஒற்றைக் குரலாகி யாசித்து தவித்தது.
உங்களின் இறைபக்தியை மெச்சிப் பார்க்க விரும்புகிறேன். மனக்குழப்பமோ, தடுமாற்றமோ இல்லாமல் உங்களில் ஒரு உயிரை எனக்கு பலியிடுங்கள் பயமின்றி வாழலாம். சிங்கம் உங்களை அண்டாது.
அசரீரி எழும்பி முடிந்த பிறகு மிருகங்களிடையே மிகப்பெரிய பதட்டம் ஏற்பட்டது. நம் கூட்டத்தில் இறைவனுக்காக யாரைப் பலியிடுவது சிங்கத்தின் பயமுறுத்தலுக்கும் கூக்குரலுக்கும் தப்பித்து பிழைக்க நினைத்தபோது இப்படியொரு உயிர்ப்பலியா… சரி இந்த உயிர்ப்பலியைக் கேட்டது உண்மையிலேயே இறைவனா… அல்லது இறைவன் கேட்பது போல் ஷைத்தான் கேட்டதா குழப்பங்கள் தீர்ந்த பாடில்லை. மெல்ல எதையோ சொல்ல ஆரம்பித்த ஒட்டகம் தன்னைப் பலியிட யாரும் முன்மொழிந்துவிடக் கூடாது என்பதற்காக யோசனையோடு பேச்சை தொடர்ந்தது.
எல்லோரும் தாயின் வயிற்றில்தான் பிறப்பார்கள். என் தாயோ கரும்பாறையைப் பிளந்து வெளிவந்தாள். ஒரு கூட்டம் மக்கள் ஸாலிஹ் நபியை சோதிக்க வைத்த பரிட்சையால்தான் அந்த பிறப்பு கிடைத்தது.
கறுப்பு நிறத்தில் நெற்றியும், வெண்மையான உடலும், நீளமான மயிர்கற்றைகளும், நிறைமாத கர்ப்பமும் கொண்ட ஒட்டகம் ஒன்று எதிரே நிற்கும் மலைப்பாறையைப் பிளந்து வெளிவரவேண்டுமென கூடி நின்ற மக்கள் கேட்டபோது அதிசய கணத்தில் மலையை பிளந்த ஒரு பேரண்ட ஒட்டகமாய் உருவாகி வந்தாள். ஸாலிஹ் நபியின் பயபக்தியும் துஆவும் அப்படி. அதன் வடிவமும் உருவமும் இன்றைப்போல் இல்லை. கர்ப்ப வயிற்றுடன் பாறையைப் பிளந்துவந்தபோது நூற்றிஇருபது முழம் நீளமும், நூறு முழம் அகலமும், ஐம்பது முழம் உயரமுமான உருவில் இருந்தாள். பத்து முழ நீளமுள்ள பனிரெண்டு காம்புகள் பால் சுரக்க இருந்தன. பாறையிலிருந்து வெளிவந்த சிறிது நேரத்தில் ஒரு குட்டியையும் ஈன்றாள். தாகம் தீர்க்க கிணற்றிற்குள் தலை நீட்டி குடிக்க ஆரம்பித்தால் கிணற்றுநீர் வற்றிவிடும். புல்தரைகளில் மேய ஆரம்பித்தால் வேறு எந்த மிருகங்களுக்கும் ஒன்றும் கிடைக்காது.
அதிசயமாய் என் தாயைப் பார்த்தார்கள். உண்பதும், உறங்குவதும், ஓய்வெடுப்பதும், மலையடிவாரங்களில் மேய்ந்து கொண்டிருப்பதும், கோடைக்காலங்களில் சேகரித்து வைத்திருக்கும் தண்ணீர் தாகம் தணிக்க பயன்படுத்துவமாய் வாழ்ந்த அபூர்வ என்தாயை திட்டமிட்டு ஒரு நாள் கொன்றார்கள்.
அவளின் கால் நரம்புகளை வாளால் வெட்டி உடம்பை அம்புகளால் குத்தித் தொலைத்து படுகொலை செய்தார்கள். சொல்வதற்கரிய தியாகம் செய்துவிட்டதால் அவளின் வாரிசு என்னை பலியிட யாரும் முயற்சி செய்யாதீர்கள்.
இந்த குட்டி ஒட்டகத்திற்குள் இவ்வளவு துயரமிக்க சம்பவங்களா என பிறமிருகங்கள் கவலைப்பட்டன. சரி அப்படி என்றால் சிங்கத்தின் கொலை மிரட்டலிருந்து நாமெல்லாம் தப்பிக் கொள்ள ஆண்டவனுக்கு யாரை பலிகொடுப்பது… கேள்வி மீண்டும் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொண்டு நின்றது.
மஞ்சள் வண்ணத்தில் பார்க்கும் கண்களை வசீகரிக்கும் விதத்தில் கூட்டத்திடையே இருந்த பசு மெல்ல கனைத்தவாறு தலை உயர்த்திப் பார்த்தது. எல்லோருக்கும் நான் மடி நிறைய சுரக்க சுரக்க பால் கொடுத்திருக்கிறேன். குட்டிகளை ஈன்றிருக்கிறேன்.
இப்போதெல்லாம் என்னை பாருங்கள் பால்சுரக்கும் மடிவற்றிப் போய்விட்டது. காம்புகள் உலர்ந்து போயின. பூமியை உழுவதற்கோ, நீரிறைக்கவோ என்னை பயன்படுத்த முடியாது. கிழடுதட்டிப் போய்விட்டேன். என்னைப் பலிகொடுங்கள். உரத்து கூறியது மஞ்சள் பசு. திடீரென பக்கத்தில் நின்ற வெள்ளாட்டை பலீபீடத்தின் முன் தள்ளிவிட்டது. மிருகங்கள் அதிர்ந்து நின்றன. தூரத்தே ராட்சச வேகத்தில் சிங்கம் பாய்ந்து வந்து கொண்டிருந்தது.

—————————————–
mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்