லுா ஸ்

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


அவனுக்கும் இயற்பெயர் என ஒன்று உண்டுதான். தவமணி. ஆனால் எவன் அவனைச் சொந்தப்பேர் சொல்லிக் கூப்புடறான். அதது பாட்டுக்கு பட்டப்பேர் அமைந்துதான் விடுகிறது. அதன்பிறகு சொந்தப்பேர் என்னன்னே தெரியாத அளவு பட்டப்பேர் பட்டிதொட்டி யெங்கும் புகழ்பெற்று விடுகிறது. தவமணி என்று கூப்பிட்டால் அவனுக்கே அவனை அடையாளம் புரிபட மாட்டது.

‘ ‘எலே லுாஸ் ?… ‘ ‘

அவன் காது கேளாத மாதிரிப் போனாலுங்கூட விடுறாங்க இல்லை. கேலியுங் கிண்டலுஞ் ஜாஸ்தியாத்தான் ஆகிப் போகிறது. சகவயசுக்காரர்கள் கேலியடிக்கிறது பத்திக் கூட ஒரு கணக்கில் சேர்த்துக்கலாம். ஆனா நேத்துதான் டவுசர் போட ஆரம்பிச்ச விரல் சூப்புகிற பசங்கள் கூட அவனை அப்படியே அழைத்தார்கள். பெரியவர்களில் பாதிபேர் கிண்டலாகக் கூப்பிட்டாலும் அவனை அன்போடு நடத்துகிறாட்களும் உண்டுதான். சிறுவர்களில் எல்லாருமே வால் இல்லாக் குரங்குகள்.

‘ ‘அங்க பார்றா… லுாஸ் வருதுடோய்! ‘ ‘

தெருவில் அவன் விளையாட்டு ஜாமான் போல ஆகிப் போனான். பல்கடித்து ஆத்திர ஆத்திரமாய் வரும். அவன் ஆத்திரத்தில் அவர்கள் கொண்டாட்டம் இன்னும் ஜாஸ்திதான் ஆகிறது. அவர்களில் எவனாவது தனியே மாட்டிக் கொண்டால் – லுாசுக்கு, மன்னிக்கவும், தவமணிக்கு அப்பிடியொரு ஆத்திரம் வரும்… பெரிய பாறாங்கல்லைத் துாக்கி அவன் மண்டைல போடலாம்னிட்டிருக்கும். ஊ ஊ-வென அழுவார்கள். கையைப் பிடித்து இரத்தம் கட்டிப் போகும்படி இறுக்-க்-குவான்.

‘ ‘எலேய் என்னிய அடிச்சா போயி எங்கப்பா கிட்டச் சொல்லிருவேன்… அவரு ஒன்னிய நொங்கப் பிதுக்கீருவாரு… ‘ ‘

பயமாய்த்தான் இருக்கும் அப்போது. பெற்றவர்களிடம் போய், /அவன் என்னை லுாஸ் என்று அழைத்தான் – அதனால்தான் அடித்தேன்/… என்கிற நியாயம் எடுபடுவதே யில்லை. அவனுக்கு எடுத்துச் சொல்லவும் வாய் கிடையாது. பேசுமுன் மூச்சிறைக்கும். அழுகை முந்தும்… எலேய் திமிராயிட்டுதா, என அவர்கள் அவனைக் கன்னத்தோடு அறைந்தார்கள்… பயத்துடன் கையை உருவிக் கொண்டு பையங்களை விட்டுவிட வேண்டியதாய் இருக்கிறது.

‘ ‘போடாங், லுாஸ் ‘ ‘ – என்று உரக்கக் கத்திவிட்டு ஓடிப் போனார்கள்!

‘ ‘போப்போடா… நீ லுாசு. உங்கய்யா லுாசு. உங்க குடும்பமே லுாசுடா. ‘ ‘

அவர்களில் யாருக்காவது இதே போலப் பட்டப்பேர் வைக்க முடியுமா ? அவனுக்குத் தெரியவில்லை… வசவுகள் என்று கூட அவனிடம் வார்த்தைகள் – கெட்ட வார்த்தைகள் ஸ்டாக் கிடையாது. அப்பிடியே திட்டினாலும், அதற்கென்ன அர்த்தமோ அவனுக்குத் தெரியாது – மத்தவன் உச்சரிக்கிற அந்த அழுத்தம், கோபமூட்டும் ஆக்ரோஷம் அவனிடம் கிடையாது… கோவமாவது, எதையிட்டும் பயமே முன்வந்து நின்று விடுகிறது.

இருட்டைக் கண்டு பயம். நாய்களைக் கண்டால் திக்கென்றது உள்ளே. உடம்புக்குள் இதயம் அப்போது திடும் திடும் என்று நெஞ்சுக் கூட்டை மோத ஆரம்பித்து விடுகிறது. விளையாட்டாய்ச் சில சமயம் சின்னப் பையன்கள் நாயை அவன்மீது சூ – என ஏவி விடுவார்கள். பதறி அடித்து ஓட ஓட நாய்கள் குஷி அதிகமாகி உற்சாகமாக விரட்டி வரும்.

அழுதபடியே ஓடி வீடு திரும்புவான் – ‘ ‘என்னாத்துக்குடா எருமை இப்பிடிப் பயந்தலறி வர்றே ?… ‘ ‘

பின்னாடி வரும் நாயை வழிமறித்து ஐயா நிற்பார். /ஏட்டி ஒற்றைக் கல்லு… மண்டையப் பொளந்துருவேன். தேவிடியாச் சிறுக்கி…./ என்று நாயிடம் வைதபடி கல் எடுக்கிற பாவ்லாவுடன் குனிந்து கையை ஓங்கி நிமிருவார். பறந்தோடிப் போகும் நாய்..

ஐயாவைப் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரிப்பான். தலையில் அடித்துக் கொள்வார். ‘ ‘பேரைப் பாரு பேரை. குருட்டுப் பயலுக்கு நல்லகண்ணுன்னு வைச்சானுகளாம்… நாங்க பண்ணின பாவம்தாண்டா உன்னைப் பெத்தது… தவமணியாடா நீ… பாவமணி! ‘ ‘

பட்டப்பேர் என்றாலும் அதற்கு சில தகுதிகள் இருக்கின்றன. கேட்ட மாத்திரத்தில் அட என ஓர் ஆச்சர்யம். பிறகு சிரிப்பு. அந்தப் பெயருக்கும் அந்தப் பெயருக்கு உரிமையான ஆள் முக வெட்சணத்துக்கும் உள்ள பொருத்தம் பற்றி மனசு ஆராய – ஆராய்ந்து மகிழ வேண்டும். அதில் அந்தப் பெயர் பாஸ் மார்க் வாங்கியாக வேண்டும். சில சமயம் நம்ம வெச்ச பேர் ஒளிமங்கி, இன்னொர்த்தன் அதைவிட சூப்பரான பேர் வைத்து, அதுவே நிலைத்து விடுவதும் உண்டு.

லேடி சுப்ரமணி – நடையழகனாச்சே! ராமானுஜன் ஒருநாள் திருப்பதி போய் வந்ததில் மொட்டை போட்டிருந்தான். அவன் மண்டையில்தான் எத்தனை நெளிசல். டிங்கரிங் பண்ண வேண்டிய மண்டை. அதைப் பார்க்க யாரோ ஒரு கலாரசிகனுக்கு, சப்பி வீசிய மாங்கொட்டை போலத் தோணியிருக்கிறது. அன்றிலிருந்து அவன் பெயர் மாங்கொட்டை ராமானுஜன்.

சோடாபுட்டி மனோன்மணி, பூனைக்கண் ராதா, ஆட்டுத்தாடி சீதாராமன் – போன்ற வழக்கமான கற்பனைகளும் அங்கீகாரம் கண்டிருந்தன ஊரில். கற்பனை வளம் மிக்க ஊர்ப் பயல்கள். ராதாவைப் பார்த்ததும் பூனைக்கண்ணி என்று கூட அழைப்பதில்லை… அந்தப் பெயர் பழசாகிப் போய், அவள்பக்கம் போகும்போது மியாவ், என சப்தம் எடுப்பார்கள். லேடி சுப்ரமணியைத் தாண்டி சைக்கிளில் போகையில் தங்களைப் போலப் பாட்டு வரும் – ‘ ‘நடையா, இது நடையா, ஒரு நாடகம் அன்றோ நடக்குது… ‘ ‘

அட கொடுமையிலுங் கொடுமை, ஊரில் பட்டப்பேர் பெற்ற மகாத்மாக்களே அவனைக் கிண்டலடித்தார்களே…

கங்காரு நாகராஜன். ஒரு கால் சப்பை. அவன் நடையே ஒரு துள்ளல் நடை. ‘ ‘எடேய் லுாசு… என்னா இந்தப் பக்கம், கோழிமுட்டைக்கு மயிரு புடுங்க வந்தியா… ‘ ‘ சிரித்தபடி அக்குள்க்கட்டைகளுடன் நிற்கிறான். ஒற்றத் தள்ளில் கீழே விழுந்துருவான். ஆனால் என்ன எகத்தாளம்… விறுவிறுவென்று அவன் ஐயாவிடம்போய்ப் பிராது கொடுக்க நின்றான். புசுபுசுவென்று மூச்சுத் திணற நின்றான். எத்தனையோ சொல்ல நினைத்து வார்த்தை உள்ளேயே சுற்றித் தவிக்கிறது. நிமிர்ந்து பார்த்தார் அவனை. ‘ ‘எடே லுாசு, என்னா இந்தப் பக்கம் ? ‘ ‘ என்கிறார் அவரும்.

நல்லா நாலரை அடி வளர்த்தி. வயசும் கழுத வயசாச்சி. அறிவு ஒண்ணும் வளரவே காணவில்லை. எதையிட்டும் அவனிடம் முன்யோசனை கிடையாது. அதிகம் பேச்சே கிடையாது அவனிடம். சிரிப்பு. அழுகை. கோவம் – என்று உணர்ச்சிப் பிழம்பு. எல்லாமே உச்சத்தில். சிரிச்சா ஓய மாட்டான். என்னாத்துக்கு இத்தனை சிரிப்பு என்றே புரியாது. தன் பாட்டுக்குச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருப்பான். சிரிப்பு அழுகை… என்று காலம் அவனில் பொத்தான்களை இயக்கினாப் போலிருந்தது. ஓவர் சிரிப்புக்கும், அபார அழுகைக்கும் மூக்கும் கண்ணும் தன்னைப்போல ஒழுக ஆரம்பிச்சிரும். பஞ்சாயத்துத் தெருக் குழாய்!

திருநவேலிக்காரனுக்கு மூக்குல குத்தாலம்னு வசனம்!

டி.வி.ப்பெட்டியில் நல்ல படம். ஒரே சிரிப்பு. அப்பா- அம்மா- அண்ணன் சிகாமணி- அண்ணி ரத்தினம்- டாப் டக்கர் வசனங்கள் நிறைந்த படம். அவர்கள் சிரிக்கச் சிரிக்க அவர்களைப் பார்த்தபடி சிரிக்காமல் உட்கார்ந்திருந்தான். படம் பார்த்தபடியே அண்ணி எழுந்துபோய்த் தண்ணீர் டம்ளரை பானைக்குழாயடியில் நீட்டிக் கொண்டிருந்தாள். டம்ளரில் விழாமல் தண்ணீர் கீழே போய்க் கொண்டிருந்தது…. தவமணி கடகட வென்று சிரிக்க ஆரம்பித்தான். எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். ‘ ‘என்னடே லுாசு, இப்பிடிப் போட்டுச் சிரிக்கே ? ‘ ‘ என்றாள் அண்ணி கோவத்துடன்.

‘ ‘எழுந்து போ மூதேவி ‘ ‘ – என்று கத்தினாள் அம்மா. படத்தில் காட்சி மாறி, இப்போது சோகம். அவனானால் விடாமல் சிரிக்கிறான். ‘ ‘ஏல இப்ப வெளிய போறியா – மேல தண்ணிய ஊத்தட்டுமா ‘ ‘, என்றான் அண்ணன். சரியான லுாசுப்பிறவி…

எழுந்து வெளியே வர வேண்டியதாகி விட்டது. திடார் திடாரென அவன் யாருக்குமே வேண்டாதவனாகி விடுகிறான். ஜனங்களை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை… பாதிப் பயல்கள் நல்லவம் போல நடித்து அவனை அருகே வரவழைத்து சட்டென்று கேலி கிண்டல் என ஆரம்பித்து விடுகிறார்கள். அவனை இம்சித்துப் பார்ப்பதில் அப்பிடி அலாதி ருசி அவர்களுக்கு. அவன் வயசுப் பயல்கள் எல்லாம் பள்ளிக் கூடம் போகிறார்கள். இவனுக்கு இன்னும் பேச்சே திக்கினாற் போல வருகிறது. ஆர்த்திப்பட்டு அவனைப் பள்ளிக்கூடம் போ என்று விரட்ட வீட்டில் நாதி இல்லை. பிரியமாய் அவனோடு ஒரு வார்த்தை பேச யார் இருக்கிறார்கள் ? தயங்கித் தயங்கி அவன் பேச எத்தனை ஆசைப் படுகிறான். தலையை வருடி, அவன் பேசுவதை அக்கறையுடன் கேட்க ஆள் கிடையாது. அவன் பேசப் பேச சிரித்து மகிழ வேண்டும். உச்சிமுகர வேண்டும். தினசரி அவனைக் குளிக்கச் சொல்லவே அல்லவா ஆளே இல்லை. உடம்பு பூராப் புழுதியுடன் திரிகிற அவனை மூணுநாள் நாலுநாள் அப்படியே விட்டு விட்டு ஒரு அடி போட்டு பின்கட்டில் ஆத்தாக்காரி குளிக்க வைத்தாள். உடம்பே வங்கு வங்காய் விரியன் பாம்பு போல இருந்தான்…

ஒரு வாக்கியம் முழுக்கப் பேசிவிட்டால் அடுத்த வாக்கியம் நாக்குக்குள் திகைத்து விடுகிறது. அப்படித் தொடர்ந்து பேச அவனிடம் வார்த்தைகளும் இல்லை. யாரும் எதும் சொன்னால் பாதிதான் புரிகிறது.. அதற்குள் அவனைப் பார்த்துக் கேலி கிண்டல் என்று அமர்க்களங்கள் துவங்கி விடுகின்றன. குபீர் குபீரென்று மேல்க்கல்லில் இருந்து குதித்து அவனவன் ஆற்றில் கொட்டம் அடிக்கிறார்கள். ஒரே சிரிப்பு. கும்மாளம்… அவனும் போய்ச் சேர்ந்து கொள்ள ஆசையாய்க் கிடக்கிறது. குளியல் பிடிக்கா விட்டாலும் கொம்மாளம் அடிக்க ஆசை. நீச்சல் கீச்சல் தெரியாதுதான். ஆனால் பயங் கிடையாது – கழுத்தளவே அதிக பட்ச ஆழம் ஆற்றில். எங்க – அவன் வந்தாலே அவர்கள் எல்லாரும் தன் விளையாட்டை மறந்து, புது விளையாட்டு ஆரம்பித்து விடுகிறார்கள். அவனை மத்தியில் வைத்து அவனைக் கேலி செய்து விளையாட்டு!

பச்சைக்குதிரை விளையாட இஷ்டம். ஆனால் இடுப்பு உயரங் கூட அவனால் காலைத் துாக்கித் தாண்டத் தெரியவில்லை. காலை அவன் துாக்க டவுசர் உள்க்கிழிசலில் இருந்து அவன் மணி எட்டிப் பார்த்தது. பசங்கள் தீபாராதனை காட்டினாப் போல பாவனை காட்டி கன்னத்தில் போட்டுக் கொண்டு கும்பிட்டார்கள் மணியை… அவனுக்கே சிரிப்பு சிரிப்பாய் வரும் அப்போது. எப்படிக் கோவப்பட முடியும்… கோவப்பட்டால் விளையாட்டுக்கு வேணாம் என்று விடுவார்கள்.

எத்தனை சின்னப் பயல்களுடன் ஆடினாலும் அவன்தான் எப்பவும் குதிரை. முட்டி போட்டு, சிறிது உயர்ந்து, என உயரம் கூடிக் கொண்டே வரும். நெஞ்சுளவு தாண்டுகிறேன் என்று பாதி ஓடி வந்து கிட்ட வந்ததும் நின்று விடுவார்கள். ஒற்றத் தாவல் என்று வந்து மோதி அவனைக் கீழே சரிக்கிறவர்களும் உண்டு… சில சமயம் அழுவான். சில சமயம் அதே விஷயத்துக்கு விடாமல் சிரிப்பதும் உண்டு.

தவமணியா இப்பிடி, என யாருமே எதிர்பாராமல் ஊரே ஆச்சர்யப் படும்படி நிகழ்ச்சி ஒன்று நடந்ததே…

ராமானுஜம் வீட்டு நாய் ரொம்ப மோசம். எப்ப அவனைப் பார்த்தாலும் அதற்கு வெறி பிடித்து விடுகிறது. தெரு எல்லை வரை அவனை ஓட ஓட விரட்டி விட்டுத்தான் மறுவேலை பார்க்கிறது. தவமணி என்னவோ ஞாபகத்தில் அதே தெரு வழியே வர நேர்ந்தது. சட்டென்று பயத்துடன் நின்றான். அதோ! ஆனால் அயர்ந்து படுத்துக் கிடந்தாப் போலிருந்தது. அடிமேல் அடி வைத்து தாண்டிப்…. திடாரென்று அவனுக்கு அதைக் கல்லால் ஒருசாத்து சாத்தினால் என்ன என்று தோன்றி விட்டது. நல்லா துாங்கிட்டிருக்கு – இதைவிட நல் முகூர்த்தம் சாத்யப்டாது. நினைப்பே பயமாயும் சுவாரஸ்யமாயும் இருந்தது. வாயில் முட்டாய், பப்பர்மின்ட் கடிச்சாப்ல.

சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. ஆகா – அருகிலேயே கண்ணில் பட்டது சற்று பெரிய ரோடுபோடும் நீலக்கல். ஆனந்தம். தன் வாழ்வின் மிகப் பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்துவதாக அவனில் உற்சாக ஊற்று… குனிந்து கல்லைப் பார்த்தவன் நாய் விருட்டென உடலை உதறி எழுந்துகொண்டதை கவனிக்கவில்லை. சட்டென அது வேகம் பெற்று அவனை நோக்கி…. கையில் கல் – டாய்!…

ஊருக்கே தண்ணீர் தருகிற பெரிய தொட்டி – அதைச் சோதிக்க கொள்ள என்று ஏறிச்சென்று பார்க்க ஏணிப்படிகள் இருந்தன. நாய்… விறுவிறுவென்று படிகளில் ஏறினான் தவமணி. கம்பி கம்பியாய் இரும்பில் வளைத்து வளைத்து மேலேறும் படிகள். ஒரு ஆள் அகலம். நாய் கிட்டத்தட்ட எட்டி அவன் காலைக் கவ்விவிடும் நெருக்கடியில் சட்டென ஏறி, சூப்பர்! – உச்சிக்கு வந்து விட்டான். ரெண்டுமாடி உயரம். தப்பித்து விட்டான். வெற்றி! மூச்சிறைத்தது. நாய் கீழே நின்றபடி அவனைப் பார்த்தது.

‘ ‘ஏமாந்தியா ஏம்ட்டி தேவிடியாச் சிறுக்கி, இப்ப என்னா செய்வே ?… ‘ ‘

அதைக்கூடத் தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை. வாட் எ கிளைமாக்ஸ்! நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். நாய் நாக்கைத் தொங்கப்போட்டபடி மேலே பார்த்தது. குரைத்தது… குரைடி குரை!… உற்சாகமாய் இருந்தது அவனுக்கு. அது அப்படியே அங்கேயே சிறிது உட்கார்ந்து பார்த்தது. அது கிளம்பிப் போகுமா போகாதா தெரியவில்லை. கைக்கிட்டத்தில் கல் எதுங் கிடந்தால் போட்டுச் சாத்தலாம்… அடடா இல்லையே.

ஆனால் மாட்டிர்ந்தான்னா தொடைச்சதை கால்க்கிலோ அரைக்கிலோ தத்தம் கொடுத்திருக்கணும்டா..

சிறிது காத்திருந்து விட்டு நாய் ஓடிப் போனது. ஏமாற்றத்துடன்! ஆனால், பிறகுதான் பிரச்னை ஆரம்பித்தது. சிரிப்பு ஓடிப் போயிற்று. எவ்வளவு உயரம். இங்கே நான் எப்படி ஏறினேன். நாய் விரட்டவில்லை என்றால் இந்த உயரம் ஏறவே அவனுக்குத் துணிவு இருந்திருக்காது. இப்போது எப்பிடி இறங்க… ஒரு ஆள் அகலத்துக்குப் பட்டை அந்தத் தொட்டியைச் சுற்றி. அதில் இருந்தும் மேலே போக சிறு ஏணி இன்னொன்று. துருப்பிடித்த அந்த ஏணியைப் பிடித்துக் கொண்டான். உடம்பு நடுங்கியது.

மீண்டும் உற்சாகப்பட்டானே. நல்ல விஷயம் அல்லவா அது!… கீழேயிருந்து (கங்காரு) நாகராஜனின் குரல் கேட்டது –

‘ ‘ஏல லுாசு எப்பிடிடா அதுவரை ஏறினே ? ‘ ‘

‘ ‘போப்போடா – நீ லுாசு. உங்க நயினா லுாசு. உங்க தாத்தாவும் லுாசுடா! ‘ ‘

தவமணி சிரித்தான். சிறிது பெருமையாய்க் கூட இருந்தது. ‘ ‘ஏல விழுந்துறாதல ‘ ‘… என்று கத்தினான் அவன்.

‘ ‘ஏல கங்காரு, உவ்… உன்னியால ஏற முடியுமால ?… உன் சூம்பல்க் கக்-கால வெச்சிக்கிட்டு ? ‘ ‘ – திக்கித் திக்கிப் பேசினான். பேச முடியவில்லை. உள்ளம் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தது.

‘ ‘கிறுக்குப் பண்டாரம். விழுந்து வெச்சேன்னா, நீயும் என்னியப் போல நொண்டி நொண்டி நடக்க வேண்டிதானப்போவ்!. மடப்பய மவனே மெதுவ்வா கீள எறங்கி வால… ‘ ‘

மாட்டேன் – என்று தலையாட்டினான் தவமணி.

‘ ‘என்னல மாட்டே ? கீழ வர மாட்டியா ? ‘ ‘

மாட்டேன், எனத் தலையாட்டினான். தன்னைப் பார்த்து அவன் பயப்படுவது திருப்தியாய் இருந்தது.

‘ ‘இருடா லுாசு… குரங்கு கணக்கா மேல ஏறிட்டு அழும்பு பண்றே… உங்க அய்யாவுக்குதான் நீ அடங்குவ… ‘ ‘ என்று நாகராஜன் வீட்டைப் பார்க்க விலுக் விலுக்கென்று கங்காரு ஓட்டம் ஓடினான். அந்த வேக நடை சிரிக்க வைத்தாலும்… ஐயா என்றதும் பயம் கிளர்ந்தது. அவர் வருவதற்குள் இறங்கி ஓடிவிட… இறங்கும் நினைப்பே திகிலைக் கிளப்பியது. கால்கள் நடுக்கம் கண்டன.

‘ ‘மடத் தாயோ… என்னடா பண்றே அங்க ? ‘ ‘ – என்று கத்தியபடியே ஐயா ஓடி வந்தார். ‘ ‘இறங்கி வாடா நாயே ‘ ‘… என்று கத்தினார்.

‘ ‘ந்…நீ… அடிப்பே! ‘ ‘

‘ ‘இல்லாட்டி உன்னியக் கொஞ்சுவாங்களாக்கும், நீ செஞ்சிருக்கிற காரியத்துக்கு… ‘ ‘

கிடுகிடுவென்று கூட்டம் கூடிவிட்டது. அவனே எதிர்பாராத கூட்டம். எல்லாரும் ஐயாவைத் திட்டுகிறார்கள். ‘ ‘என்னய்யா நீரு, பய கோட்டிக்காரப் பய, ஒண்ணெடக்க ஒண்ணு பண்ணித் தொலைவான்ல… நீருதாங் கருத்தா… கொஞ்சம் அடக்கி வாசிக்கணும்… ‘ ‘

‘ ‘என்னாத்த அடக்கி வாசிக்கிறது. இவந் தாயோ, சாகாம எங்க அத்தனை பேரையும் சாவடிச்சிட்டுதான் சாவான் போல… ‘ ‘ என முணுமுணுத்தார் ஐயா.

அவனுக்கானால் கூட்டம் பார்த்ததும் குஷி அதிகமாகி விட்டது. ஐயாவை வேறு கண்டிக்கிறார்கள் – அவரைத் தோப்புக்கரணம் போடச் சொல்லலாமா ?… ஹி ஹியென்று தானே சிரிக்கிறான். என் சகாக்கள் எல்லாரும் வந்திருக்கிறார்களா… ராமானுஜன் எங்கே ? வரட்டும் வரட்டும்… என்ன அவசரம்!

எல்லாரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நாந்தான் இங்க நிக்கிறேன். பயந்து கெடக்கு. இவங்க கீழதானே நிக்கிறாங்க… அவங்க ஏன் பயப்படறாங்க ? … ஹி ஹி!

கங்காரு நாகராஜன், அவங்கப்பா வந்திருந்தார். ‘ ‘மூதேவி… இறங்கி வாடா ‘ ‘… என்று கத்தினார்.

நானா மூதேவி… நீதான் – சொல்லவில்லை. ஆனாலும் சிரிப்புக்குப் பஞ்சமில்லை.

பேச ஆயிரம் விஷயங்கள் அவனில் கிளம்பின. வார்த்தை புரளவில்லை நாவில். கிக் கிக் என்று அலையலையாய்ச் சிரிப்பு உள்ளே.

‘ ‘இறங்கி வால… உன்னிய அடிக்க மாட்டேன் ‘ ‘… என்று அடுத்த கட்டத்துக்கு வந்தார் ஐயா.

‘ ‘இல்ல. நீ அடிப்பே. ‘ ‘

‘ ‘ஏல இப்ப இறங்கி நீயா வாரியா, நான் ஏறி வரட்டுமா ? ‘ ‘ – என ஐயா மிரட்டினார். மெல்ல ஏறவும் முயற்சி செய்தார்.

‘ ‘ஏய் ஏறாதீரும்யா. அவன் ஒரு லுாசு. ஏடாகூடமா குதிச்சாலும் குதிச்சிருவான் ‘ ‘… என்றார் கங்காருவின் அப்பா.

நேரம் நழுவிக் கொண்டிருந்தது. அவன் கீழே இறங்குகிறாப் போல இல்லை. உண்மையில் அந்தக் குச்சி குச்சி அளவிலான இரும்புக் கம்பி ஏணியில் இறங்கிவர அவனுக்கு அபார பயமாய் இருந்தது. அத்தனை பேர் பார்க்கிற அளவில், கீழே அவனை வேடிக்கை பார்த்தபடி ஊரே காத்திருக்கிறது. அவன் இப்பசத்தைக்குக் கீழே இறங்குகிறாப்போல இல்லை. இறங்கினால் அடி நச்சி எடுத்துருவாங்க. அது நிச்சயம்!

‘ ‘ஏல ஒனக்கு என்ன பிடிக்கும்… வாழைப்பழம் பிடிக்குமா ? ‘ ‘

….

‘ ‘பிடிக்கும் பிடிக்கும். கொரங்குப்பயதானே ?… ‘ ‘ என்று சிரிக்கிறான் கங்காரு.

‘ ‘வாழைப்பழம் வாங்கித் தர்றேன். இறங்கி வா ராசா ‘ ‘ – என்றார் ஒருவர்.

அம்மா – அண்ணன் – அண்ணி எல்லாரும் ஓடி வந்தார்கள். யம்மாவ், நான் இங்கருக்கேன்… என உற்சாகமாய்க் கைகாட்டினான்.

‘ ‘அங்க ஏம்ல போனே ? கேனப்பயலே… வா எறங்கி ‘ ‘… என்றாள் அம்மா.

ம்ஹும், எனத் தலையாட்டிச் சிரித்தான். என்னைத் தைரியசாலி இல்லைன்னு நினைச்சாளே!… பேச எத்தனை ஆசைப்பட்டான் அவன். ஆனால் சிரிப்பு நுரைத்துப் பெருகியது அவனிலிருந்து.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. அவன் கீழே இறங்குகிறாப்போல இல்லை. வெயில் மேலேற ஆரம்பித்திருந்தது. அவன் உட்கார்ந்திருந்த பக்கம் இதுவரை நிழல். மெல்ல வெயில் அந்தப் பக்கமும் தலைகாட்ட ஆரம்பித்தது. விஷயம் பெரிதாகி விட்டது.

எதுனால அவன் அப்பிடி ஏறி நிற்கிறான். உங்களுக்கும் அவனுக்கும் ஏதும் தகராறா ? திட்னீங்களா ஏதாவது ?… என்றெல்லாம் ஐயாவை எல்லாரும் கேட்க ஆரம்பித்தார்கள்.

‘ ‘நீங்க யாரு ? ‘ ‘

‘ ‘தினத்தந்தி! ‘ ‘

யாரோ அவனை ஃபோட்டோ எடுத்தார்கள். பவுடர் போடாமல் இருந்தான். பரவாயில்லை. காமெராவைப் பார்த்து ஒரு சிரிப்பு.

சிரிப்பு தாளவில்லை. சிரிக்க ஆரம்பித்ததும் நடுக்கத்தில் ஏணியின் பிடியை விட்டு விடுவானோ என்று பயமாய் விட்டது. கையெங்கும் சிவப்பாய்த் துருவின் கறை.

அட போலிஸ்காரர்கள் நாலைந்து பேர் வந்து விட்டார்கள். கையில் கம்பு. இறங்கினால் நிச்சயம் அடிப்பார்கள்… அவர்களிடம் மெகாஃபோன். ‘ ‘தம்பி விளையாடாதே… மெதுலா கீழ இறங்கி வா… ‘ ‘

அவனுக்கு அந்த மெகாஃபோனை வாங்கித் தானே பேச வேண்டும் போலிருந்தது. எல்லாரிடமும் அவன் பேசினால் எத்தனை ஜோராக இருக்கும்.

‘ ‘அப்டியே இரு. நான் மேல வர்றேன் ‘ ‘… என ஒரு ஆள் மெல்லப் படிகளில் ஏறக் கால் வைத்தான்.

போ – என்றான் அவன். கையால் விரட்டினான். ‘ ‘வ் – வராதே ‘ ‘… என்று கத்தினான் தவமணி. அடிக்கத்தான் அவனைக் கூப்பிடுகிறார்கள். போ – அதைமீறி அவன் அடிமேல் அடியெடுத்து ஏறப் போனான். ‘ ‘வ்… வராதே… வராதே! ‘ ‘ – என்று வெறி வந்தாப் போல கத்தினான் தவமணி. சுவாரஸ்யங்கள் கடுமையான முடிவை நோக்கி நகர்கிறாப் போலிருந்தது. அந்த ஆத்திரம் தாளமுடியவில்லை.

ஃபோட்டோக்காரன் அதோ! தயாராய் காமெராவை மேலே துாக்கி இவனைப் படமெடுக்கக் காத்திருப்பதைப் பார்த்தான்…

திடுதிப்பென்று நிகழ்ந்தது அது. தவமணி கண்மூடி, செந்திலாண்டாவா… என்னியக் காப்பாத்து… என்று கத்தினான். கண்ணை மூடியநிலையில் அப்படியே தலைகீழாய் விழுந்தான்.

லுாசுப்பயல்… செத்துப் போனான்.

—-

storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்