விடுமுறையின் முதல் நாள்

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

இரா.இராமையா


அரசு கடைசித் தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் நேராகப்

பாட்டியிடம் தான் போனான். ‘பாட்டி, ஏழாப்புப் போறேன் ‘, என்று

கத்தினான்.

‘பரிச்ச நல்லா எளுதினியா ? ‘ என்று கேட்டாள் பாட்டி.

‘சூப்பர் ‘, என்று விட்டு வெளியே கிளம்பினான்.

தெருவில் சற்று நேரம் வெயிலில் நின்றான். சுதந்திர வெயில்.

விளையாடத் தொடங்காத ஒவ்வொரு நிமிடமும் வீண் என்று தோன்றியது.

‘அரசு, இங்க வா ‘, என்று அம்மாவின் குரல் கேட்டது.

‘என்னம்மா ? போவணும் சீக்கிரம் சொல்லு ‘, என்றான்.

‘நாடார் கடைக்குப் போய் இந்த லிஸ்டில எல்லாம் வாங்கியா. ‘

அரசு கோபத்துடன், ‘நான் போவல. படிக்கணும் ‘, என்றான். பிறகு

தான் தேர்வுகள் எல்லாம் முடிந்து விட்டன என்று நினைவு வந்தது.

நாடார் கடையில் நல்ல கூட்டம். சுற்றிப் பெரியவர்கள் இருந்ததால்

நாடார் அவனைக் கவனிக்கக் கூட இல்லை. அரசுவுக்கு கிரிக்கட் தொடங்கி

விடுமோ என்ற கவலை மிகுந்தது. பிள்ளையார் கோவில் பக்கமிருந்த கிரவுண்டில்

அவன் தெரு டாம் விளையாடுவார்கள். எல்லோரும் எட்டாவது வகுப்புக்கு மேல்.

அரசு பந்து பொறுக்கிப் போடுவான். டாம் கேப்டன் அரசுவை விடுமுறையில்

சேர்த்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தான்.

நாடாரின் கடைக்கண் பார்வை கடைசியில் அவன் மேல் பட்டது.

வீட்டில் வாங்கிய சாமான் அத்தனையும் போட்டு விட்டுக் கிரவுண்டிற்குக்

கிளம்பினான். வெளியே பக்கத்து வீட்டு லதா, ரம்யா என்று ஒரு கும்பல்,

‘கொல கொலயா முந்திரிக்கா ‘ விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

‘அரசு வாடா ‘, என்று அழைத்தார்கள்.

அரசு அவர்களை இரக்கத்துடன் பார்த்தான். பாவம், சிறுமிகள்..இன்னும்

குழந்தை விளையாட்டுக்களைத் தாண்டவில்லை. ‘நான் கிரிக்கட் விளையாடணும் ‘,

என்று விட்டுப் பெருமையுடன் போனான்.

பிள்ளையார் கோவில் கிரவுண்டில் யாருமே இல்லை. இரண்டு பேர்

கோலி ஆடிக் கொண்டிருந்தார்கள்.

அரசு சற்று நேரம் யாராவது கிரிக்கட் விளையாட வருகிறார்களா என்று

பார்த்தான். யாரும் வரவில்லை. எட்டாவது வகுப்புக்கு மேல் தேர்வுகள்

முடியவில்லை என்று தெரிந்தது.

‘கோலி இருக்கா ? விளையாடலாம் வா ‘, என்றான் ஒரு பையன்.

அரசு மறுத்து விட்டுத் திரும்பினான்.

தெருவில் பக்கத்து வீட்டுப் பெண்களின் இரைச்சல் அதிகமாக

இருந்தது. ஏகப்பட்ட பேர் ‘கொல கொலயா ‘ என்று கத்திக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுள் அவன் வயதுச் சிறுவர்களும் உண்டு.

திடாரென்று நண்பன் கைலாஷின் நினைவு வந்தது. அவன் வீட்டில் பேட்

வேறு உண்டு. கைலாஷ் வீட்டுக்கு ஓடினான். கதவு, ஜன்னல்கள் எல்லாம்

மூடியிருந்தன. கதவைத் தட்டினான்.

கதவு லேசாகத் திறந்தது. கைலாஷின் அம்மா அவனைப் பார்த்து,

‘என்ன ‘, என்றாள். உள் ரூமில் கைலாஷ் உட்கார்ந்து படித்துக்

கொண்டிருப்பது தெரிந்தது. ஹாலில் அவன் பேட்டும் தெரிந்தது.

‘கைலாஷ் வர மாட்டான். நாளைக்கு அவனுக்கு டெஸ்ட்.

சரியா ? ‘

அரசு சரி என்று தலையாட்டினான். அனாதையான அந்த பேட்டைப்

பார்த்து அவனுக்குத் தொண்டையை அடைத்தது.

தன் வீட்டு வாசலுக்கு வந்து சிறிது நேரம் நின்றான். இப்போது

எல்லோரும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

வெறுப்புடன் வீட்டுக்குள் போய் டி.வி போட்டு உட்கார்ந்தான்.

வெளியில் அப்பாவின் பைக் சத்தம் கேட்டது.

அப்பா வந்து கை,கால் கழுவி உடை மாற்றி அமர்ந்தார்.

அரசுவைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தார். அரசு அவர் பார்ப்பதை

உணர்ந்து கண் எடுக்காமல் டி.வியைக் கவனித்தான்.

‘டேய்..படிக்கல ? ‘ என்றார் அப்பா.

‘டெஸ்ட் முடிஞ்சு போச்சுப்பா. ‘

அப்பா இதைப் பற்றிச் சற்று நேரம் யோசித்தார். பிறகு, ‘டெஸ்ட்

முடிஞ்சா.. ? தெருவுல சுத்த வேண்டியதா ? ‘

அரசு, ‘இல்லப்பா ‘, என்றான்.

‘இந்த லீவுலயாவது ஹாண்ட் ரைடிங் சரி பண்ணு..என்ன ? ‘

‘சரிப்பா. ‘

‘கிரிக்கட் அது இதுனு அலையாத. ‘

‘உம். ‘

‘வாடகை சைக்கிள் எடுத்து சுத்தாத..என்ன ? ‘

‘உம். ‘

‘நீ சைக்கிள் எடுத்து ரோடுல போவ..மெயின் ரோடுல

வேற. கார்ல எவனாவது வந்து அடிச்சிட்டுப் போனா யார்ரா கேக்கறது ? ‘

அரசு இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்

விழித்தான்.

அப்பா எழுந்து பாத்ரூம் போனார். வெளியே கண்ணாமூச்சிக்

கூச்சல்கள் அதிகமாகக் கேட்டன. அரசு வெளியே வந்து

நின்றான். அவன் வீட்டுப் பக்கம் இரண்டு, மூன்று பேர் ஒளிந்திருந்-

தார்கள்.

அவன் மெதுவாக அவர்களிடம், ‘ஏய்..நானும் வரேண்டி.. ‘

என்றான்.

‘அப்ப வேணாம்னல்ல..வர வேணாம் போ. ‘

அரசு வருத்தத்துடன், ‘ப்ளீஸ்ரி.. ‘ என்றான்.

‘நீ தான் கண்ணு பொத்தணும்..சரியா ? ‘

‘சரி ‘. அரசுக்கு முகத்தில் புன்னகை மலர்ந்தது.

சற்று நேரத்தில் அவன் கண்ணைப் பொத்தி, ‘ஒண்ணு..

ரெண்டு..மூணு ‘, என்று எண்ணத் துவங்கியிருந்தான்.


arramiah1@gmail.com

Series Navigation

இரா.இராமையா

இரா.இராமையா