என் இனமே….என் சனமே….!

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

பொ.கருணாகரமூர்த்தி


பச்சை நெல் வயல்கள், தென்னந்தோப்பு , தேயிலைத் தோட்டங்கள், கடலின் அலையடிப்பு இவைகளனைத்தையும் இதுநாள் வரையில் என் பிள்ளைகளுக்குப் புத்தகங்களிலும் டிவி சானல்களிலும் சினிமாவிலுந்தான் காட்டிக்கொண்டிருந்தேன்.

‘ மத்திய மலைப்பகுதியில் ஜெர்மனியின் வசந்தத்தையும் , கரையோரமாக ஸ்பெயின் கனறித்தீவின் வெண்மணல் புரளும் கோடைகாலத்துக் கடற்கரைகளையும் ஒருசேரக்கொண்ட அழகிய தீவு இலங்கையென்று எங்கள் டாச்சர் சொல்லியிருக்கிறார். ‘ என்று தன் கனவுகளை மகள் கனிமொழி விரிக்க

‘எங்கள்( ?) பயேர்ண் மாநிலத்தை விடவும் சிறிய குட்டித்தீவாமே இலங்கை ? ‘ என்று தன் ஆச்சர்யத்தை எல்லாளன் குவிக்கவும்

‘ குட்டித்தீவென்றால் அது நிச்சயம் அழகானதாய்த்தானிருக்கும். ‘ என்று மிகவும் தெரிந்தவளைப்போல ஆமோதித்தாள் ஆறுவயது வெண்ணிலா.

பிள்ளைகளின் ஜீவிதக்கனவும் அவர்களின் பாடசாலைவிடுமுறையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னான போர் ஓய்வும் அதிசயமாய் காலப்பாட்டையில் ஒருங்குவியவும் வீட்டுக்குக் கார்பெட் போடவும் தளபாடங்கள் வாங்குவதற்காகவும் கட்டியசீட்டை அவசரமாக எடுத்து விமான டிக்கெட்டுக்கள் வாங்கிக்கொண்டு ஆரவாரமாக இலங்கைக்குப் புறப்பட்டோம்.

என்ன தோன்றிற்றோ ஐயாவுக்கு எங்கள் வீட்டை நம்மூரிலேயே குடியிருப்பு அடர்த்தி குறைவான ஒரு இடத்திலேயே கட்டியிருந்தார். சூரியக்கதிர்த்தாக்குதல்கள் இடப்பெயர்வுகளின்போது கல்லுக்கல்லாய் வீட்டையும், ஓடுகள், ஜன்னல் நிலை கதவுகள் மதில் கேற் உட்பட அனைத்தையும் ஒருவாறு இடம்பெயர்த்துவிட்ட எம் இனமும் சனமும் காலி வளவில் எதுக்கு இவங்களுக்கு இந்தப் பெரிய மரங்களென்று முற்றத்தில் நின்ற வேம்பையும் மாவையும் வேலியையும் சேர்த்துப் பெயர்த்துவிடவே வீட்டின் திறப்புகள் மட்டுமே எங்களுக்கு எஞ்சின. பெரியம்மா வீட்டில் அவர்களுடன் தங்கியிருந்த அம்மா ஏற்கெனவே எமக்கு எல்லா விபரமும் எழுதியிருந்தாராதலால் நாங்களும் பெரியம்மா வீட்டுக்கே போயிறங்கினோம். வழியில் பஸ்ஸுக்குள் கணியன் ‘ஐயோ கதவைச்சாத்தாமல் ஓடுறானுவள் நான் கீழை விழப்போறேன்…. ஐயே  சீற்றுக்குக் கீழாலை றோட்டும் தெரியுது ‘ஹில்ஃப….ஹில்ஃப ‘ என்று கத்தினான்.

எங்களைப் பார்க்கத் தினமும் வந்துபோய்க்கொண்டிருந்த உறவுகள், நண்பர்கள் செங்கரும்பு, நுங்கு, செவ்விளனிக்குலைகள், இராசவள்ளிக்கிழங்கு, வெள்ளரிப்பழம், கெக்கரிக்காய், மாம்பழம், என்று கொண்டுவந்து குவித்த வண்ணமிருந்தார்கள். பெரியம்மாவேறு ஒடியல்கூழ், மாங்காய்போட்டு வாளைமீன் குழம்பு , இறால் பொரியலென்று தினமும் சமைத்து எம்மை அசத்திக்கொண்டேயிருக்க பொழுதுகள் அங்கே சந்தோஷமாய்க் கழிந்துகொண்டிருந்தன.

அடித்த வெய்யிலுக்கும் காங்கைக்கும் போய் கடலில் இறங்கினால் நல்லாயிருக்கும் போலிருக்கவே தொண்டமானாற்றுக்குப் போனோம். எனினும் கடலில் இறங்கக் கால்கள் கூசின.

அது சுழிகள் அதிகமுள்ள கடல். திடார் திடாரென வந்து ஆட்களை இழுத்துச்சென்றுவிடும். முன்னமுமொருமுறை ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நாலு பிள்ளைகளை ஈவிரக்கமில்லாமல் ஒரேயடியாய் இழுத்துச்சென்று கொன்ற கடல். அப்போதெல்லாம் வராதபயம் இப்போது தொண்டமானாற்றுக் கடலைப்பார்க்க வந்தது.

குமுதினிப் படகினில் யார் வெட்டினார்கள்

நெடுந்தீவுக் கடலிலே யார் கொட்டினார்கள்

அமுதெனும் சிறுவனை யார் குத்தினார்கள்

அதனாலே வரும் பாவம்யார் கட்டினார்கள்

கப்பல் உலாவரும் கடலே பேசு

உப்புக் காற்றே ஊதத் தொடங்கு !

‘ஊ ஊ ஊ ஊ ‘ என்று ஊதிச்செல்கிற உப்புக்காற்று புதுவையாரின் கவிதை வரிகளைக் காதில் சொல்லிச்செல்லவும் கடல் சிவப்பாக இருப்பதுபோலவும் கடலில் வீசப்பட்ட பாலகர்கள் அலைகளோடு மிதந்து வருவது போன்றும் பிரமை தட்டியது.

எங்கள் கிராமமான புத்தூருக்கு கொய்யகம் கட்டிவிட்டதுபோலிருக்கும் குறிச்சிக்கு காளியானையென்று பெயர். அங்குதான் சரவணன் வீடு இருக்கிறது. இக்காளியானையைக் கடந்தும் சாவகச்சேரி நோக்கிய திசையில் ஒரு மைல் தள்ளித்தான் எங்கள்வீடு இருந்தது. அக் குறிச்சிக்கு அந்திரானை என்று பெயர். புத்தூருக்கும் அச்சுவேலிக்கும் இடையில் தூக்கிச் சொருகிவிட்டுள்ளதுபோலுள்ள பகுதி ஆவரங்கால். _ feவ்விநோதமான பெயர்கள் எதன் வேரிலிருந்து தோன்றியவையோ தெரியவில்லை. ஏதாவது காரணப் பெயர்களாகக்கூட இருக்கலாம். இன்னும் ஊரணி, புத்தர்கலட்டி, நாரந்தனை, அம்போடை, குஞ்சு மந்துவில், வாதரவத்தை, வீரவாணி, சிறுப்பிட்டி என்று ஒன்றுசேர்ந்த பத்தூர்கள்தான் காலப்போக்கில் மருவிப் புத்தூரானது என்றுகூட ஒரு கருத்து இருக்கிறது. சிறுப்பிட்டியில்தான் தமிழாசன் சி.வை.தாமோதரம்ப  2ள்ளை பிறந்தார்.

காளியானையின் பெரும்பான்மையர் வெள்ளாளர்கள்தான் எனினும் புத்தூர் மேற்கின் வெள்ளாளர்கள் அந்நாளில் காளியானையாரின் வீடுகளில் சம்பந்தம் கலப்பதோ, சொம்பு எடுப்பதோ இல்லை. நாட்டில் மணியம், விதானை, தொலுக்கு, உடையார் பதவிகளை வகிக்க ஒறிஜினல் வேளாளரால் மட்டுமே முடிந்த காலத்திலிருந்து மேற்கு வெள்ளாளர் மணியத்தின் மகன் மணியம், விதானையின் மகன் விதானை , ப_ beிவாளர் மகன் பதிவாளரென்று பதவிகளைப் பரம்பரைச் சொத்தாக்கி அனுபவித்தவர்களாதலால் ஒரு காலத்தில் இவர்களுக்கு ஊருக்குள் நிலபுலன்கள், தோட்டம், வாரம், எடுபிடி, படிப்பு பந்தா ஏனையோரைவிட அதிகமாகவே இருந்தன.

மேற்கு வெள்ளாளர் ஒருவருக்கு யாழ் – மின்சாரநிலைய வீதியில் மலாயா கபேயிலிருந்து ராணி தியேட்டர் உள்ளிட்ட சி.வி. பாட் கடைவரையிலான நிலமும் கட்டிடங்களும் சொந்தமாயிருந்தன. இன்னொரு குடும்பத்துக்கு யாழ் சின்னக்கடையில் பாதிக்கும் மேற்பட்ட கடைகளும் , யாழ் கச்சேரிவளவும், பழையகச்சேரியும் (பின்னால் நில அளவையாளர் அலுவலகமானது) அதனருகே மலைவேம்புகள் நிற்கும் பெரு வளவில் ஆரம்பித்து நிலங்கள் தற்போதைய புளு றிபண் ஹொட்டல்வரை சொந்தமாயிருந்தன. தங்கள் நிலபுலங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றனவென்றே சரிவரத் தெரியாதோரும், அவர்தம் வாரிசுகளும் ஊரில் இன்னும் அநேகம்பேர் இருக்கின்றனர்.

காளியானையார் பெருநிலபுலன்களோ, கோட்டை கொத்தளங்களோ வைத்து ஆண்டதாய் சரித்திரம் கிடையாது. ஆனால் யாரையாவது பிடித்துக்கேட்டால் ‘என்ரை காணிக்குள்ள வடக்குப்பக்கமா வீடு கட்டினனேயெண்டால் புத்தூர் தபாற்கந்தோரிலிருந்தும்; தெற்குப் பக்கமாகக்கட்டினால் கண்டியோ கைதடித் தபால்கந்தோரிலிருந்தும் காயிதம் வரும் ‘ என்றும் பீற்றுவார்கள்.

அவர்கள் தோம்பு இருப்பதாகச்சொல்லும் காணிகள் பலவும் ஊரி நிறைந்த தரிசுகளும், கலட்டிகளுந்தான். நடப்பில் இப்போதும் பலபேருடைய வீடுகள் மண்வீடுகள்தான், அனேகமானோரின் வளவுகளுக்குச் செப்பனான வேலிகளே கிடையாது. ஆனாலும் அக்காலிப்பெருங்காய டப்பாக்களில் இன்னும் நாங்கள் வெள்ளாளர் என்ற ஜாதியவாசனை மட்டும் விடாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

சரவணனை என் நண்பன் என்பதிலும் ‘கிளாஸ் மேட் ‘ என்று சொல்வதுதான் பொருத்தம். தமிழில் வகுப்புத்தோழன் என்றாலும் அதுவும் அவனை நண்பனென்பதற்கே அணுக்கமாக்கும். நண்பனென்றால் எமக்கு பல விஷயங்களில், கருத்துக்களில் இரசனைகளில் ஒற்றுமைகள் இருந்திருக்கும். அவனிடம் அரசியல் உலகியல் கருத்துக்களில் வேற்றுமைகளிருந்தால் பரவாயில்லை சாதியம், மனித நேயம், பெண்விடுதலை ஆகியவற்றின் நவீனசிந்தனைப் போக்குகளின் வாடையே அறியாத பூர்ஷுவாக அவனிருப்பதால் என் மனதுக்கு அணுக்கமானவனாகக் கொள்ளமுடியாமல் இன்னும் சில மனத்தடைகள் உள்ளன என்போமே.

கல்லூரி நாட்களில் ஒரு நாள் சரவணன் சொன்னான்: ‘ அரசாங்கம் புத்தர் கலட்டியில் பெளத்த பாடசாலையைக் கட்டினதுதான் கட்டிச்சு எளியான் சாதியெல்லாம் செருப்பு நடப்போடை எங்கடை ஊருக்குள்ளால முற்றத்தால திரியுதுகள். ‘

‘ மேற்குத்தெரு வேளாளர் தங்களுடைய கல்லூரியில் தாழ்த்தப்பட்டிருந்தோருக்கும் இடங்கொடுத்திருந்தால் அவர்களுக்கு ஏன் சிங்களம் படிக்க வேண்டிய நிலமை வருகுது ? சாதியம் இந்த மதத்தின் மாற்றவேமுடியாத சாபக்கேடென்றுதானே அம்பேத்கார் தானாகவே பெளத்தத்தை தழுவினார், பெரியார் ‘எல்லோரும் இஸ்லாத்துக்கப் போங்கடா ‘ என்றார். பெளத்தபாடசாலை சிங்களமெல்லாம் இங்க வந்ததுக்கே நம்மு_ a8டய ஐக்கியக்குறைவுதானே காரணம் ? ‘ என்று பதில் சொன்னேன்.

சாதியத்தை இப்படிப்பற்றியிருக்கும் சரவணன் விலங்கியலிலோ தாவரவியலிலோ சேதனப் பரிணாமம் , மரபியல் பகுதிகள் சிறப்பாகவே செய்வான். ஒரு நாயுக்கும் மனிதனுக்குமுள்ள (முலையூட்டி விலங்குகள் என்ற வகையில்) ஒற்றுமைகளைக் கேட்டால் மைல் நீளப்பட்டியலே போடுவான். அதெல்லாம் சும்மா பரீட்சைக்குப் புள்ளிகள் வாங்கத்தான்…. ஆனால் மானுஷத்துக்குள் சாதியச் சங்கதிகள் நித்தியம் _ c5ாய்ந்தவை.

மேற்குத்தெருவிலிருந்து வரும் ஒரு மாணவி நான் ஸ்கூலுக்குக் மட்டம் போடும் நாட்களில் எனக்கான நோட்ஸ்களையெல்லாம் பிரதி எடுத்துத் தருவதுடன் வகுப்பில் ஏனைய மாணவிகளைவிட என்னோடு கொஞ்சம் நெருக்கமாக இருந்தாள். என்னிடமும் அவளுக்கான மென்மையான பக்கங்கள் கொஞ்சம் இருக்கவே செய்தன. பின்னாளில் விடுதலை இயக்கப்பாசறைப் பணிகளில் என் கவனங்கள் குவிந்துவிட சங்கதி டெவலப் பண்ணுப்படாமலே போனது. அதைவிட அவளிடமும் வேறு காரணங்கள் இருந்திருக்கும். அதுவே சரவணனுக்கு உளைஞ்சிருக்கவேணும். ஒருநாள் என்னிடம் பேச்சிடையே: ‘ உவள் துண்டறச்சரியில்லை, உப்பிடித்தான் எல்லோரோடையும் குழையிறாள்…. வேசை. ‘ என்றான்.

சரவணனுக்கும் வறுமையோடான விவசாயக் குடும்பந்தான். எண்ணிக்கை சரிவரத்தெரியவில்லை சாவிச்செற் போல மில்லிமீட்டர் வித்தியாசங்களில் ஆண்களும் பெண்களுமாக ஏழெட்டுச் சகோதரங்கள். எல்லாருமே ஒருமாதிரியான மலிவான மண்ணெய் நாறும் கூப்பன்கடைப் பங்கீட்டுத் துணிகளில் நெல்லுப்பத்தாயம் மாதிரித் தொள்ளல் சட்டைகள் தைத்துப் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் வருவார்கள். அவர் களுக்கு வெங்காயம் மிளகாய் பயிர்ச்செய்யக்கூடிய தறை கொஞ்சம் அந்திரானையில் இருந்தது. அத்தோடு அவனது தந்தை ஒரு வண்டி மாடுவைத்துக்கொண்டு சீவியத்தைத் தள்ளிக்கொண்டிருந்தார்.

கல்லூரிநாட்களில் எனக்குச் சேதன இரசாயனத்தில் கொஞ்சம் சிக்கல்களிருந்தன. அதனால் நான் யாழ்ப்பாணத்தில் ரியூட்டோரியல் வகுப்புக்களில் பிரபலமாயிருந்த வி.ரி.கந்தசாமி மாஸ்டரிடம் அப்பகுதியில் பிரத்தியேகமாக டியூசன் எடுத்துக்கொண்டிருந்தேன். அக்குறிப்புகள் சிலது தனக்கும் தேவையென்று சரவணன் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்தான், அரைமணிக்கு மேலாகப் பேசிக்கொண்டிருந்த_ a2ருப்போம்.

அக்கா இருவருக்குமாகச் சூடாகத் தேனீர் கொண்டு வந்தார். எம்பேச்சு வளர்ந்துகொண்டிருந்தது. எனக்கு எப்போதும் தேனீர் கோப்பி மிதமாக சூட்டிலிருக்கையிலே குடித்துவிட வேணும்.

சரவணனோ தேநீரைத் தீண்டுவதாயில்லை. ‘தேனீர் ஆறிவிடப்போகிறது குடியப்பனே ‘ என்று இரண்டு மூன்று தடவைகள் சொல்லியிருந்திருப்பேன். நான் அதை வேறுயாருக்கோ சொல்கிறேன் போன்றதொரு பாவனையில் அவன் தேவநிஷ்டையில் இருந்தான். எனது கோப்பையைக் கையில் எடுத்துக்கொண்டு அப்பாவித்தனமாக ‘நல்ல அளவான சூடா இருக்கப்பா குடி ‘ என்றுகூடச் சொல்லிப்பார்த்தேன். அவன் அதைச் சட் டைசெய்வதாயில்லை. இனியென்ன நான் பருக்கி விடவாமுடியும் ? சிலவேளைகளில் ஆறின தேனீர்தான் அவனுக்குப் பிடிக்கும்போல, பிறகு குடிப்பானென்று கொஞ்ச நம்பிக்கையோடு இருந்தேன். கடைசி வரையில் அவன் குடிக்கவேயில்லை. நான் தேநீர் குடிப்பதில்லையென்றோ அல்ல அதைக் குடிக்காததுக்கு ‘ இன்றைக்கு நான் கெளரிவிரதம் ‘ என்றொரு காரணத்தையோகூட அவன் சொல்ல

வில்லை. தன் பாட்டுக்கு எழுந்து போனான்.

அதை அவதானித்த அம்மாவும் அக்காவையே ஏசினார்.

‘அவங்கள் எங்கள் வீடுகள்ல தேத்தண்ணியெல்லாம் குடிக்காங்கள், நீ ஏன் கொடுத்தனி ? ‘

‘ ஏனாமணை குடிக்காயினம்…. ? ‘

‘அது ஆரம்பத்தில இருந்தே அப்பிடித்தான்….! ‘

‘ தம்பியின்ரை கிளாஸ்மேற்றாச்சேயென்றுதான் கொடுத்தனான், வந்தது மூன்றாம் நூற்றாண்டுப் பிரகிருதியென்று யாருக்குத் தெரியும் ? ‘

‘ நானென்ன அவனுக்கு வெத்திலையா வைச்சன்…. தனக்கு நோட்ஸ் வேணுமெண்டான் வந்தான், தேத்தண்ணி குடிக்காட்டிப்போறான் ….எமக்கென்ன ? ‘

மறுநாள் பள்ளிக்கூடத்தில் வெகு இயல்பாக என்னிடம் பேசினான். எனக்கு அவனைத் தவிர்க்க வேணும் போலிருந்தாலும் தவிர்க்க முடியாதபடியொரு நிர்ப்பந்தம். இரசாயனவியல் செய்முறைகளில் என் ஆய்வுசாலைப் பார்ட்னர் அவன்தான், பிணைத்துவிட்டிருந்தார்கள். வட்டவட்டமான கையெழுத்தில் அவன் தயாரிக்கும் செய்முறைப்பதிவுகள் அழகாகவிருக்கும்.

அது திரு.பொ.கனகசபாபதி அவர்கள் கல்லூரி முதல்வராக இருந்த நேரம். மாணவர்களின் உயர் எண்ணிக்கைக்கேற்ப வகுப்பறைகள் போதுமானதாக இருக்கவில்லை. தேவையான நிதியை ஊர் மக்களிடமே திரட்டிக் கட்டங்களை விஸ்த்தரிப்பதென்று பெற்றார் ஆசிரியர் சங்கத்தில் முடிவுசெய்து அதிபரோடு சேர்ந்து கல்லூரி வளர்ச்சியில் ஆர்வமுள்ள ஊர்ப்பிரமுகர்களும் , பெற்றோரும் , ஆசிரியர்களும், சில பல மாணவர்களுமாக ஊருக்குள் ஒரு நாளைக்கு ஒரு பிரிவென்று வைத்துக்கொண்டு நிதிதிரட்டப் புறப்பட்டோம்.

நிதி திரட்டும் குழுவானது பிரமுகர்களின் வழிகாட்டலில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளுக்குப் போவதைத் மிகக் கவனமாகத் தவிர்த்துக்கொண்டிருந்தது எனக்கு உறுத்தலாக இருந்தது. குழுவில் எல்லோரிடமும் தமாஷாகப் பேசிப்பழகக்கூடிய பண்டிதர் சுப்பிரமணியத்திடம் என் மனக்குறையை வெளியிட்டேன். பண்டிதரோ

‘ நீயும் நல்ல விசர்க்கதை பறையிறாய்…. கறையான் புத்தெடுக்க நாகம் குடிபுகுந்த கதையாயல்லோ நாளைக்கு முடியும். ‘ என்று அலறவும் முழுக்குழுவினரும் அதுபெரும் அங்கதம்போல் கோரஸாய் சிரித்து ஓய்ந்தனர்.

ஸ்ரீசோமாஸ்கந்தக்கல்லூரிக்கு ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து ஆசிரியர்கள் நியமனமாவதைக்கூட மேற்கு வேளாளர்கள் தம் அரசியல் செல்வாக்கைப் பாவித்துத் தடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

முற்போக்குக் கருத்துக்கள் கொண்ட இவ்வதிபரோ 1972ல் தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளையும் துணிச்சலாக அனுமதித்துப் பெருமை கொண்டார்.

தியாகி சிவகுமாரன் மரணித்திருந்த நேரம். பொலீசாரைக் கண்டிக்கும் விதத்திலும் பாடசாலைகளைப் பகிஷ்கரிக்குமாறும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்த மாணவர்கள் பலர் கைதானபோது சரவணனும் அகப்பட்டு கோப்பாய் பொலீஸில் 3 நாள் றிமாண்டில் இருந்தான்.

அடுத்த நாள் நான் கோப்பாய்ச்சந்தி ஐயர்கடையில் வாங்கிப்போன இட்லி வடையையும் ஒறேஞ்பார்லியையும் சாப்பிட்டான்.

1974ல் ஏப்ரலில் பல்கலைக்கழக புதுமுகப்பரீட்சை அண்மிக்கவும் வாரவிடுமுறையில் அச்சுவேலி ரியூட்டறியொன்றில் சில பாடங்களில் இருவரும் மேலதிக வகுப்புக்கள் எடுத்துக்கொண்டிருந்தோம். ஒரு ஞாயிற்றுக்கிழமை இயற்பியல் ஆசிரியருக்கு முதனாள் ஓவராகப்போட்ட சாராயம் எழுந்திருக்க விடாமற்பண்ணியதால் வகுப்பு ‘கட் ‘ ஆகவும் கட்டப்பராய் பாலச்சந்திரனுக்கு ஐடியா வந்து சொன்னான்:

‘தொண்டமானாத்துக் கடலிலே போய் ஒரு முங்கு முங்குவோமா ? ‘

‘ உடுப்புக்கெங்கை போறது ? ‘

‘ பென்டரோடை இறங்கவேண்டியது….வெய்யில்லை பதினைஞ்சு நிமிஷத்தில காஞ்சுடும்டா. ‘

‘ காஞ்சுடும் காஞ்சுடும். ‘

அனுபவசாலிகள் வழிமொழிய எல்லாச் சைக்கிள்களும் தொண்டைமானாறு நோக்கித் திரும்பின. இடையில் புதுப்பனங்கள்ளுச் சேகரித்தோம். மதியம் திரும்பும் வரையில் கடலில் விளையாடினோம்.. கடல் குளிப்பு பசியைக்கிளப்புமென்பது தெரிந்ததுதான். குளிப்போடு பனங்கள்ளு சேர்ந்துகொண்டு கொடுமை செய்தது. திடாரென வயிற்றில் ‘பேர்ள் ஹாபர் ‘ தாக்குதலைத் தொடங்கின. எல்லோருக்குமே குளுக் கோஸ் ஏற்றினால்தான் எடுத்து மறுஅடி வைக்கலாம் போலொரு நிலமை. கண்கள் சொருகத்தொடங்க கணமும் கடலில் நிற்கமுடியவில்லை. அனைவரும் வீட்டுக்குக் கிளம்பினோம்.

இடையில் தோட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு இழுத்துக் கொண்டிருந்தனர். கிழங்கைப்பார்த்த சிவபாதம் (பின்னாள் குட்டிமணி, தங்கத்துரையுடன் வெலிக்கடையில் மடிந்தவன்) அபிப்பிராயப்பட்டான்.

‘ இந்தக் கிழங்கை டிஸுப்பேப்பர் மாதிரி மெல்லிசாய் வெட்டி மச்சான் மிளகாய்த்தூளும் உப்பும் தூவிப்பொரிச்சு அடிச்சால்…. ‘

‘ அடிச்சால்…. ? ‘

‘இந்தப்பசிக்கொரு கணிதமாயிருக்கும். ‘

‘ நான் பின்னே இருக்காதென்கிறனே…. நீயும் கனக்கத்தான் அடிச்சிட்டாய் இந்தா கையைத்துடை. ‘ என்று தன் அப்பியாசக் கொப்பியிலிருந்தொரு தாளைப் கிழித்துக்கொடுத்தான் இன்னொருவன்.

எதைப்பார்த்தலும் சாப்பிடவேணும் போலிருந்தது. பசி இப்படியெல்லாம் பண்ணுமென்று ஜீவிதத்தில் உணர்ந்தது அன்றுதான். கட்டப்பராய், இடைக்காட்டுப் பையன்கள் குறுக்குப்பாதையால் வெட்டிக்கொண்டு போய்விட, வீதி எங்களுக்கு பட்டத்துவால்போல் துடித்துக்கொண்டிருக்க நானும் சரவணனும் மட்டும் தனியாக கண்களைப் பூஞ்சிக்கொண்டு வந்துகொண்டிருந்தோம்.

அச்சுவேலியை பஸ் நிலையத்தைக் கடக்கவும் வீதியோரக்கடைகளில் கொத்துரொட்டி அடிக்கும் சத்தமும் வீதிக்கு வலம் வந்த அதன் வாசமும் சைக்கிள் சில்லுக்கிடையே அலவாங்கைச் செலுத்தியதுபோல் அவற்றை மேற்கொண்டு நகரமுடியாதபடி அழுத்திப்பிடித்தன.

‘ கொத்து அடிக்காமல் என்னால அங்கால ஒரு அடிகூடப்போகேலாது. ‘ என்றேன்.

‘நான் வேண்டாமென்கிறேனே….என்னட்டைச் சல்லிக்காசில்லை. ‘ என்றான் சரவணன்.

என்னிடம் நோட்ஸ் புத்தகங்கள் வாங்குவதற்காக அம்மா முதனாள் தந்திருந்த பத்து ரூபாய் இருந்தது. அவதிக்குதவாத காசு பிறகெதுக்கு….முதல்ல இந்தப்பிரச்சனை களைந்து உயிர்பிழைப்போம்.

‘ என்னட்டை இருக்குக்காசு , நோ புறப்ளம் அட் ஓல். ‘

நாங்கள் டியூசனுக்கு வந்து போகும்பும்போது டா குடித்து சிகரெட் புகைக்கும் வாடிக்கைக்கடை. இருவரும் அவசரமாய் உள் நுழைந்தோம்.

ஆளுக்கு டபுள் கொத்து சூடாக அடித்து நிமிர்ந்தபோதுதான் முன்னாலிருப்பவர்கள் கலங்கலில்லாமல் தெரிந்தனர்.

பின்னால் கோல்ட் லீஃபின் தீரத்துக்கு செஸ்ரோ ரொபியின் பெப்பர்மின்ட் காரக்கூட்டு திவ்யமாயிருந்தது. சரவணன் புகையெல்லாம் பிடிக்கமாட்டான். சூழஇருப்பவர்களின் அசெளகர்யங்களுக்கும் ஆரோக்கியக்குறைவுக்கும்; சூழல் மாசுபட்டுப்போவதற்கும் தான் ஏதுவாக இருப்பதைத் தாங்கமுடியாத உயர் சீலம் அவனது.

ஐந்து வருஷங்களுக்கு முன்னர் நான் தனியாக யாழ்ப்பாணம் வந்திருந்தபோது அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. இப்போது நான் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு வந்திருந்தான். நீண்ட இருபது வருஷங்கள். முன்னந்தலையில் கொஞ்சம் நரை விழுந்திருந்ததைத் தவிர அவனில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. என் தொப்பையைக் கிண்டலடித்தான்.

யாழ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளநிலைப்பட்டம் பெற்ற பின்னால் உள்ளுராட்சி சிறகத்திலே சேர்ந்தானாம் , அரச சேவையில் இருந்தவர்களெல்லாம் வெளிநாடு வெளிநாடென்று கழன்றுவிட சேவை மூப்பின் அடிப்படையில் விரைவிலேயே சிறகத்தின் உயர் அதிகாரியாகியிருந்தான்.

சர்வதேசம் – உள்ளுர் என்று பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தோம். தன் சகோதரிகள் அனைவருக்குமே திருமணமாகிவிட்டதாகவும் அவர்களில் இருவருக்கு கனடா மாப்பிள்ளைகள் கிடைத்ததால் அவர்கள் அங்கேயே போய்விட்டதாகவும் சொன்னான். மீதிக்குடும்பம் சூரியக்கதிர்த்தாக்குதலில் இடம் பெயர்ந்து போனதிலிருந்து வன்னி — பாண்டியன் குளத்திலேயே தங்கிவிட்டதாகவும் தான் கோப்பாய ில் சட்டத்தரணி பாலசிங்கத்தின் ஒரே மகளைத் திருமணஞ்செய்ததாகச் சொன்னான். பாலசிங்கம் அறுபதுகளிலேயே புது போர்ஜோ-504 இலே உலவிய பணமனிதன். சற்று இடைவெளிவிட்டு கொடுப்புக்குள் சிரிப்போடு ‘செமை சீதனம்…. அநேகமாய் அவற்றை முழுஆதனமும் ‘ என்றான்.

‘ நீ சிங்களத்தியைக் கட்டினதும் அறிஞ்சன்…. ஏன் இப்படிக் குறுக்க இழுத்தனீ…. ? ‘

நான் கார் விபத்தொன்றில் சிக்கி இடுப்பை உடைத்துக்கொண்டு ஆஸ்பத்தரியில் இரண்டு மாதங்கள் காலை மேலே தூக்கிக்கொண்டெல்லாம் அசையாமலெல்லாம் படுத்திருந்திருக்கிறேன். அதுபற்றி எவருக்குமே இங்கு தெரிந்திருக்கவில்லை. விசித்திரமாய் சிங்களத்தியைக் கட்டினேன் என்றொருசெய்தி இத்தனை கடல்கள் மலைகள் பாலைவனங்கள் தாண்டி வந்திருக்குப் பாருங்களேன்.

என் ஆயிஷா மாத்தளைத் தமிழ்ப்பெண். பத்து வயதிலேயே ஜெர்மனிக்கு வந்துவிட்டவர். இஸ்லாம் மார்க்கத்தில் நம்பிக்கையுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தவளெனினும் அவள் பெற்றுக்கொண்ட கல்வியும் , Bread for the World என்ற சேவை அமைப்பில் சேர்ந்துகொண்டு இரண்டு வருஷங்கள் எதியோப்பியாவில் புரிந்த தன்னார்வப் பணியும் அவளுக்கு எந்த மத மார்க்கத்திலுமே நம்பிக்கை இல்லாமற் செய்துவிட்டன. அவள் தேடல்க ளெல்லாம் மானுஷ , வாழ்வியல் மார்க்கத்தில்தான். பகுத்தறிவும் , இலக்கியத்தாகமும் , இசைப்பிரியமும், மானுடநேயமுமுள்ள பெண்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்க பிள்ளைகள் வந்து அவனுக்கு ‘வணக்கம் ‘ சொன்னார்கள்.

‘அட ஆச்சர்யமாயிருக்கு…. பிள்ளைகள் தமிழ் கதைக்கினமே ? ‘

‘ தமிழ்பிள்ளைகள் தமிழ்கதைக்காமல்…. ? ‘

‘ எனக்கு சிங்களமோ ஜெர்மனோ புரியாது. ஜெர்மன்காரர்கள் மொழிப்பற்று அதிகமுள்ளவர்களாம், லேசில் இங்கிலிஷ் பேசமாட்டார்களென்றும் அறிந்திருக்கிறேன். உன்னுடய வைஃபுக்கு இங்கிலிஷ் பேச வருமில்லை ? ‘

‘ எல்லாவற்றையும்விடத் தீந்தமிழ் நன்றாய் வரும்…. ‘

‘ சும்மா கதைதானே விடுகிறாய் எனக்கு. ‘

‘ பேசித்தான் பாரேன். ‘

எமது சம்பாஷணைக்கு இடையூறில்லாது தானே தேநீர் தயாரித்து எடுத்துக் கொண்டுவந்த ஆயிஷாவுக்கு

‘இது சரவணன் என் கிளாஸ்மேட். ‘ என்றே அறிமுகம் செய்து வைத்தேன்.

‘வணக்கம் ‘ நமஸ்கரித்தாள்.

‘இப்படியொரு நண்பர் உங்களுக்கு இருப்பது எனக்குத்தெரியாதே….ஏன் நீங்கள் இவருக்குக் கடிதங்களேதும் எழுதுவதாகக்கூடத் தெரியவில்லையே ? ‘ என்றவள் அவனைப்பார்த்து ‘ஏன் நீங்கள் குடும்பத்தையும் கூட்டிவந்திருக்கலாமே ? ‘ என்றாள் அப்பாவியாய்.

அப்பிடியெல்லாம் லேசில் வந்திடுவார்களா இவர்கள்….

ஒரு இடைவெளிவிட்டுத்தான் இவர்களால் பழகமுடியும் என்பதோ,

என் உயர்ந்த நண்பர்கள் வரிசையில் இவன் இல்லை என்பதோ, யாழ்ப்பாண சாதியத்தையும் அதன் உட்கட்டுமானங்களையும் அறிந்திராத அவளுக்கு எப்படிப் புரியப்போகிறது ? ஏன் இவ்வளவுகாலம் கழித்தென்னைப் பார்க்க வந்திருக்கிறானே…. என் கணிப்புகள் தவறாகக்கூட இருக்கலாம். இந்த நீண்டகால இடைவெளி நிச்சயம் அவன் சிந்தனையோட்டங்களை, கருத்துக்களைப் புடம் போட்டுமிருக்கலாம்.

‘ இவ்வளவு சரளமாய்த் தமிழ் கதைக்கிறாவே ? ‘

‘ கதைப்பா….விஷயத்தைப் பொறுத்து இதைவிட அதிகமாகவும் கதைப்பா. ‘

‘ உனக்குப் பொன்னென்ன பூவென்ன கண்ணே….ஞாபகமிருக்கா ? ‘

என்றேன். விழுந்து விழுந்து சிரித்தான்.

‘ முழுக்கத்தான் சொல்லுங்களேன்…. நானும் சிரிக்க ‘ என்று ஆர்வமானாள் ஆயிஷா.

‘அப்போ ஸ்ரீதரின் ‘அலைகள் ‘ என்றொரு படம் வந்து கலக்கிக்கொண்டிருந்த நேரம். இருவருமாகப் படத்தை மெற்னி பார்த்திட்டு சைக்கிளில் வந்துகொண்டிருந்தோம். வழிநெடுகிலும் கண்களை மூடியபடி மூக்குப்பொடி அள்ளுகிற மாதிரி கைவிரல்களைப் பிடித்துக்கொண்டு அப்படத்தில் வர்ற இந்தப்பாட்டின் பல்லவியை

‘பொன்னென்ன பூவென்ன கண்ணே

உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே

புதுக்கல்யாணப் பெண்ணாக உன்னை

புவிகாணாமப் போகாது கண்ணே…. ‘

என்று அனுபவித்து பாடிக்கொண்டு நீர்வேலிச்சந்திக்குக்கிட்ட வரும்போது இவனுக்கு பட்டப்பகல்ல முன்னால நிறுத்தியிருந்த தட்டிவான் தெரியாமப்போச்சு. ‘

‘பிறகு ? ‘

‘பிறகென்ன இடிபட்டுத் தொபுகடாரென்று விழுந்து மூக்குடைஞ்சதுதான். ‘

‘ பிறகு ? ‘

‘பிறகென்ன மூக்கால ரத்தம் ஓடத்தொடங்கிவிட்டுது. ‘

‘ பிறகு ? ‘

‘ கோப்பாய் ஆஸ்ப்பத்தரிக்குப்போய் மருந்து கட்டினதுதான். ‘

இப்படிப் பல சம்பவங்களை மீட்டுயிர்ப்பித்துச் சிரிக்கையில் கூடவே என் பிள்ளைகள் அங்கு வந்து செய்த தமாஷ்களையும் அவனுக்குச் சொன்னேன்.

‘இங்கே பெரியம்மாவிட்ட ஒரு வெள்ளைக்குட்டிப்பூனை ஒன்று இருக்கு, அங்கார்…. அதில நின்று தெண்டா எடுக்குது அதுதான். சனசந்தடியயில்லாமல் வெளிச்சுப்போயிருந்த வீட்டில் நாங்களும் போயிறங்கி அமர்க்களம் பண்ணினது அதுக்கும் குஷியை ஏற்படுத்தியிருக்க வேணும். நடையிலும் தலைவாசலிலும் குசினியிலுமாக எங்களோடு உரசிக்கொண்டு திரிஞ்சுது. குட்டிப்பூனையல்லே…. பெரியம்மா சொன்னா:

‘feந்தப்பூனையும் குறுக்கையும் மறுக்கையும் சும்மா சுத்துது, ஆற்றையன் காலுக்குள்ள அநியாயமாய் மிதிபடப்போகுது. ‘

‘அப்பிடியெண்டால் அதின்ரை பாட்டரியைக் கழற்றிவிடுங்கோவன்.சும்மா இருக்கும் ‘ என்றான் கணியன்.

பின்பொருநாள் பெரியம்மா மீன்குழம்புக்கு மிளகாய் கூட்டரைக்க அம்மியைக் கழுவிக்கொண்டிருந்தார்.

அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்த வெண்ணிலா கேட்டாள்:

‘ ‘ என்ன பாட்டி செய்யிறீங்கள் ? ‘ ‘

‘ ‘ அம்மி கழுவுறன். ‘ ‘

‘ ‘ அம்மியென்டால்…. ? ‘ ‘

‘ ‘ இதுதான் அம்மி…. இதில அரைக்கிறது கிறைண்டர். ‘ ‘

‘ ‘ அப்பிடியெண்டா எங்கை அதின்ரை பிளக் வயர் ? ‘ ‘

‘ இதுக்கு மின்சார சக்தி தேவையில்லை ‘ இப்பிடித்தான் அரைக்கிறதென்று இழுத்து அரைத்துக்காட்டினார். அவளுக்கோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம். நான் பள்ளிக்கூடத்தால் திரும்பும்வேளைகளில் வழியில் வெற்றிலை வாங்கிச் சப்பும் மாடு மேய்க்கும் மனுஷி என்னைப் பார்த்துச் சரியாக அப்பாவைப் போலவே இருக்கிறீர் என்றவர் இன்னும் என்னை எமது மூத்த அண்ணன் என்று நினைத்தே என்னிடம் பேசிக்கொண்_ caருக்கிறார். ‘

நம் பேச்சிடையே ஆயிஷா சரவணனுக்கு எத்தனை பிள்ளைகள் என்பதை விசாரித்து தன் உறவினருக்காக வாங்கிவந்த சில உடுப்புக்களை அவனுக்குக்கொடுக்க முன் வந்தாள். நானும் என் பங்குக்கு இரண்டு டா சேர்ட்டுக்களையும் இரண்டு டிரெளசர் துணிகளையும், லோஷனோடு ஒரு ஷேவிங் செட்டையும் சேர்க்க அவற்றோடு உருகிவிடாது எஞ்சியிருந்த சொக்கலேட் சட்டங்கள் சிலவற்றையும் ஒரு பையில் வைத்து ஆயிஷா ெஊ 8ாடுத்தாள். வாங்கிக்கொண்டு விடைபெற்றுச்சென்றான்.

அவன் போனபின்னால் நாங்கள் முற்றத்தில் கொஞ்சநேரம் பாட்மின்டன் விளையாடினோம். மாலையானாலும் வியர்த்தொழுகியது.

‘ ஒரு டவல் தாரும் குளிச்சிட்டு வாறேன் ‘ என்றேன். ‘இதோ ‘ என்றுவிட்டுத் தலைவாசலுக்குள் போன ஆயிஷா சரவணனுக்கு வைத்த தேநீர் தீண்டப்படாமல் இருப்பதைக்கண்டு ஆச்சர்யப்பட்டு

‘என்னப்பா உங்கள் சிநேகிதர் தேத்தண்ணி குடிக்கவேயில்லை, மறந்திட்டார். ‘ என்றாள். தேநீர் கிளாசை எட்டிப்பார்த்த எழிலியும் வருத்தத்தோடு ‘ ஓம் அப்பா…. அந்த மாமா தேத்தா குச்சேல்ல… ‘ என்றாள்.

ஆயிஷாகூடத் தன் வாழ்க்கையில் கொஞ்சம் நிறவெறி, பாசிசம், நாஷிசத்தை அனுபவித்திருந்திருக்கலாம், ஆனால் சாதியம் ?

என் பிள்ளைகளுக்கும் அவைகளை உணரும் வயது பற்றாது.

முன்னவற்றைவிடவும் சாதியம் நீண்டகால வரலாறுடையது. அறிவை விடவும் அனாதியானது. ஒரு சகமனிதனின், விருந்தோம்புவானின் உணர்வுகளைச் சட்டை செய்யாத உள்வைரம் பாரித்திட்ட வன்மம் அது. ஜென்மாந்தரங்களுக்கும் தொடர்வது.

ஜாதிய அநாகரீகங்கள், அவமானங்கள், அவமதிப்புகளின் நிழல்கூட இவர்கள் மேல் படவேண்டாம். அதன் அசிங்கமான முகத்தைக் காண புரிய நேர்ந்தால் இவர்களும் வெட்க வேண்டிவரும்.

‘ஜா…. சிநேகிதன் மறந்துவிட்டான், நீங்களும் மறந்துவிடுங்கள். ‘ என்றேன்.

‘எல்லா வெள்ளாளனையும் சந்தேகி ‘ என்ற கூற்று முதன்முதலாக மிகவும் அர்த்தம் மிக்கதாகப் பட்டது.

தேநீர் ஆடைகட்டி வெகுநேரமாகியிருந்தது.

= மல்லிகை , ஜனவரி – 2003. 38வதுஆண்டுமலர்.=

karunaharamoorthy@yahoo.ie

Series Navigation

பொ கருணாகர மூர்த்தி

பொ கருணாகர மூர்த்தி