என்னுரை

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

புதியமாதவி


புத்தகம் தயாராகிவிட்டது. என்னுரை மட்டும்தான் பாக்கி.

சிறுகதை எழுத உட்கார்ந்து அதுவே குறுநாவல் திட்டமாகி பின் எழுத எழுத 300

பக்கங்களைக் கடந்தவுடன் சரி .. இது நாவல்தான் என்று தீர்மானமாகி தெரிந்தது

கேல்விப்பட்டது எப்போதோ நடந்தது கனவில் வந்து பயமுறுத்தியது எல்லாத்தையும்

சேர்த்து 400 பக்கத்துக்கு இழுத்து முடிவு சோகத்தில் முடிக்கவா இல்லை சுபம் என்று போட்டுவிடவா என்று

இரண்டு நாள் மண்டையைக் குடைந்து ஒரு வழியா

இரண்டுக்கும் நடுவில் ஒர் வகையான ‘ட்டிரா ‘வாகிப்போன மேட்ச் மாதிரி

ஒரு முடிவைக் கொடுத்து வாசகர்களின் ஊகத்திற்கு விட்டுவிட்ட மாதிரி ஓர்

அறிவுஜீவித்தனமான மேதாவிலாசத்தைக் காட்டி.. முடிச்சாச்சு.

அத்தனையும் எழுதும் போது இல்லாதச் சங்கடம் இந்த அரைப்பக்கம் என்னுரை

எழுதும் போது எப்போதும் வந்து தொலைக்கிறது!

என்னுரையில் என்ன எழுத ? எப்போதுமே இந்தக் கேள்விக்கு எனக்குச் சரியானப்

பதில் இதுவரைக் கிடைக்கவில்லை. அப்படிப் பார்த்தாலும் இந்த என்னுரை எழுதுவது ஒன்றும் இது முதல்

தடவையும் அல்ல. இது என்னுடைய 9வது புத்தகம். ஒவ்வொரு தடவையும் என்னுரை எழுதும்போது மட்டும்

இந்த மாதிரி ஒரு சங்கடம் எனக்கு. இந்த மாதிரி எனக்கு மட்டும்தானா.. இல்ல எல்லா

எழுத்தாளர்களுக்கும் ஏற்படுமா ? எழுத்து வட்டத்திலேயே நெருங்கிய நண்பர்களிடமும்

இன்றுவரை இதைக் கேட்டதில்லை. அது என்னவோ எதைப் பற்றி வேண்டுமானாலும் மணிக்கணக்கில் பேசலாம்,

விவாதிக்கலாம் என்றெல்லாம் செயல்படும் எனக்கு இதைப் பற்றி மட்டும் எப்போதும் எவரிடமும் கேட்க

தோன்றியதில்லை.

ஆயிட்டு பதிப்பகத்தார் என்னுரையை அனுப்பச் சொல்லி கேட்டு ஒரு வாரமாகிறது.

இன்னும் என்னுரை எழுத முடியவில்லை. பிள்ளைகள் நோட்டுப் புத்தகத்தைக் கிழித்து எழுதியாச்சு.

பழைய டைரியை எடுத்து வைத்துக் கொண்டு அதிகாலையில்

சூடா டாடா கோல்ட் சாய்க் கப்புடன் உட்காந்தாச்சு. இராத்திரி பிசாசு மாதிரி எந்திரிச்சி உட்கார்ந்து

கணினி முன்னால் உட்கார்ந்து முரசு நோட் பேட் திறந்து என்னுரை 1, 2,3 என்று ஒவ்வொரு

மாதிரியும் எழுதிப்பாத்தாச்சு. ம்கூம் எதுவுமே என்னுரை மாதிரி இல்லை.

பக்கம் பக்கமாக எழுதறவளுக்கு என்னுரை எழுதுவதற்கு இவ்வளவு நாளாகிறது என்று

பதிப்பகத்தாரிடம் சொன்னால் நம்பவா போகிறார்கள். புத்தக எண்ணிக்கை கூட கூட

திமிர் அதிகமாகி விட்டது என்றுதான் நினைப்பார்கள்.

‘இந்த நாவல் என்னுடைய 9 வது புத்தகம். ‘ இப்படி ஆரம்பிக்கலாமா ?

ச்சே.. எத்தனையாவது புத்தகமாக இருந்தால் என்ன ?

ஒரே ஒரு புத்தகம் எழுதி இலக்கிய உலகில் நிலைபெற்றுவிட்டவர்கள் எத்தனையோ பேர்.

சரி வேண்டாம்.

என் சிறுகதைகளுக்கு புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் விருது கிடைத்ததை எழுதலாமா ?

ம்கூம். சரிப்படாது. புதுச்சேரிக்காராருக்கு எங்க தமிழ்ச் சங்கத்தில் விருது கொடுத்ததற்கு

அவர்கள் கொடுத்த ரிடர்ன் கிஃப்ட் தான் இது என்பது எனக்குத் தெரியும்.

அந்த வருடம் வெளிவந்த என் சிறுகதைப் புத்தகத்தில் எனக்கு ஒன்றும் அவ்வளவு

திருப்தி இல்லை. என் சிறுகதைகளை விட சிவம் எழுதிய சிறுகதைகள் உண்மையிலேயே

சிறப்பாக இருந்தது. பாவம்.. அவருக்கு ஆறுதல் பரிசு. எனக்கு முதல் பரிசு..

என் சிறுகதைகள் மலையாளத்தில், மராட்டியில், குஜராத்தியில், இந்தியில் மொழிப் பெயர்ப்பு

செய்யப்பட்டிருப்பதைப் பட்டியலிடலாமா..

மலையாளத்தில் செய்வதெல்லாம் என் நண்பர்கள். மராட்டியில் மொழி பெயர்ப்பது என்னுடன்

எங்கள் காலனியில் வசிப்பவர். குஜராத்தி, இந்தியில் மொழி பெயர்ப்பு.. அவர்களின்

எதிர்பார்ப்புகள்.. அவர்கள் சிறுகதைகளை நான் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும்.

அதற்காக அவர்கள் எனக்கு அளித்த அட்வான்ஸ் தான் அவர்களின் மொழி பெயர்ப்புகள்.

இதை எல்லாம் போய் சொல்ல வேண்டுமா என்ன ?

நான் உறுப்பினராக இருக்கும் மன்றத்திற்கும் இங்கு வந்து கொண்டிருக்கும் மாத வார இதழ்களுக்கும்

நன்றி சொல்லி இவர்கள் தான் என் எழுத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தவர்கள் என்று சொல்வோமா ?

ஆமாம்.. உறுப்பினராக வைத்திருப்பதெல்லாம் அவர்கள் கேட்டவுடன் செக் எழுதிக் கொடுக்கிற

ஒரே ஆளாக நானிருப்பதால் தானே.

இந்த வார மாத இதழ்களுக்கெல்லாம் துண்டு விழுகிற

பக்கங்களை நிரப்புவதற்கு என்னை விட்டால் சரியான அரைலூசு பேர்வழி யார்க் கிடைப்பார்கள்.

அவர்கள் போன் செய்தவுடன் எந்த மாதிரி மேட்டர் வேணும், கரெண்ட் இஸ்யுவா, சிறுகதையா,

அரசியல் நையாண்டியா, விளையாட்டு களச் செய்திகளா.. என்ன வேண்டும் என்று கேட்டு

எந்த ராத்திரியானாலும் உட்கார்ந்து எழுதி விடிந்தவுடன் ரிக்ஷாவுக்கு 10 ரூபாய் செலவு செய்து

வெளியில்போய் பக்கத்திற்கு 10 ரூபாய் கொடுத்து குறைந்தது 3 பக்கமாவது இருக்கும் 30 ரூபாய்க்கு

ஃபேக்ஸ் செலவு செய்து அனுப்பிவிட்டு நான் அனுப்பியதை அவர்கள் தலை வாலில் எல்லாம் எடிட்

செய்து முண்டமாக போட்டிருப்பதைக் கண்டு கோபம் கொண்டு இனிமேல் இவர்கள் கேட்டால்

எழுதுவதில்லை என்று சபதம் எடுத்து சபதம் செய்த இரண்டு நாட்களுக்குள் நானே என் சபதம்

மறந்து மீண்டும் எழுதி மீண்டும் ஃபேக்ஸ் செய்து.. இவ்வளவு அரைலூசுத்தனமான எழுத்தாளர்

அவர்களுக்கு யார் கிடைப்பார்கள் ? தெரியும் அவர்கள் எல்லோருமே என்னை ஏமாற்றுகிறார்கள் என்பது.

என்ன செய்வது.. இவர்களை விட்டால் வேறு யாருமில்லையே ? சகித்துக் கொள்ளத்தான் வெண்டும்.

இவர்களுக்கு என் புத்தகத்தில் நன்றி சொன்னால் நன்றி என்ற சொல் தூக்குப்போட்டுக் கொண்டு

என்னைச் சபித்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

சென்னையிலிருந்து வெளிவரும் அந்த வார இதழின் பவளவிழா மலரில் என் சிறுகதை பரிசுக்குரியதாகத்

தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிப்பிடலாமா.. வேண்டாம். அவர்கள் சரியானா ஏமாற்றுக்காரர்களாச்சே.

பரிசு ,, ஆஅ.. ஓவுனுட்டு பரிசுத்தொகையை மட்டும் இன்னும் அனுப்பவில்லையே. அந்தப் பரிசுத்தொகை

ஆயிரம் ரூபாய் வந்து ஒன்றும் நிறையப் போவதில்லைதான். ஆனால் வாக்குசுத்தம் வேண்டாமா..

அதுவும் எழுதறவனுக்கு வாக்கு சுத்தமில்லைனா அதை அரசியல்வாதிகளிடன் எப்படி எதிர்ப்பார்க்க முடியும் ?

இந்த லட்சணத்தில் அந்தப் பத்திரிகைதான் ஒவ்வொரு இலக்கியவாதி, அரசியல்வாதியின் அகமும் புறமும்

பற்றி

பிட்டு பிட்டு வச்சி எழுதற பத்திரிகை.

என் எழுத்துகளுக்கு ஆதர்ஷ சக்தியாக இருப்பது என் கணவரும் என் குழந்தைகளும் .. அவர்களின்

ஒத்துழைப்பு இல்லை என்றால் என் எழுத்துகளும் இல்லை என்று எழுதலாமா ? வாசிக்க நல்லா இருக்கும்தான்.

ஆனா ..

எல்லா வேலையும் முடிச்சிட்டு எழுத உட்காரும்போது மட்டும் எங்கிருந்து வருமோ என் காதல் கணவருக்கு

என் மீது காதல்! அது என்னவோ தெரியவில்லை நான் எழுத உட்காரும்போது மட்டும் அவருக்கு எப்படித்தான்

மூட் வருமோ.. இது காதலா இல்லை என் எழுத்துக்காதலன் மேல் அவர் நடத்தும் மரபணு தாக்குதலா ?

போகப் போக அவர் மீது நான் கொண்ட காதலும் கசந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம்தான்.

ஆனால் இதை எல்லாம் எழுத முடியுமா என்ன ?

என் பிள்ளைகள்.. அம்மானா.. சமைக்கணும்.. வீட்டை பள பளனு வச்சிருக்கனும்.

அவர்களுடன் உட்கார்ந்து மாடர்ன் மதர் மாதிரி ‘ க்கிரஷிலிருந்து டேட்டிங் விவகாரம் வரைக்கும்

பேசனும். கட்டாயம் ப்பிஷா பண்ணத்தெரிந்திருக்கனும். இங்கிலீஷ், ஹிந்தினு சரளமா உளறனும்.

அதுவும் அவர்களுக்கு போன் வரும் போது கட்டாயம் இங்கிலீஷ் வித் அமெரிக்கன் அக்ஷனில்

பேசனும். ஆனா ஒரு ஒரு மணி நேரம் தொந்திரவு இல்லாம எழுத உட்காரக்கூடாது.

அவுங்க பிராஜக்ட், பிரசண்டேஷன் எல்லாம் பண்ணும்போது இரவு முழுக்க லைட் எரியலாம்..

நாம தூங்க பழகிக்கனும். ஆனா நான் என்னிக்காவது இராத்திரி அவர்களுக்குத் தொந்தரவு

பண்ணாம டேபுல் லேம்ப் வெளிச்சத்தில் எழுத உட்கார்ந்தாலும் இரண்டுக்கும் வர்ற கோபத்தைப்

பாக்கனுமே.. அப்புறமென்ன.. விவாதம்.. ஸோ வாட் மம்மி.. யு டோண்ட் கம்பேர் திஸ் வித்

தேட்.. கடைசியில் தீர்மானிப்பார்கள்.. வி வாண்ட் அ நார்மல் மம்மி யா.. தேட்ஸ் ஆல்! என்று.

அதுக்கப்பறம் எழுத்தாவது.. நான் எழுதறதாவது.. அப்படியே அப்பாவின் மரபணுவை எடுத்துக்

கொண்டு பிறந்திருக்கும் என் குட்டிச் சாத்தான்கள்.. அதுகளுக்கு நன்றி சொல்லப் போவதில்லை!

நான் என் புத்தகங்களின் என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் நன்றி சொல்லாததை அடிக்கடி

பலர் என் புத்தக வெளியீட்டில் சொல்லிக் காட்டி இருக்கிறார்கள்.

அதுவும் ஒரு வெற்றி பெற்ற ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்! என்பார்கள்.

ஆனால் இந்தப் பெண்ணின் எழுத்து வெற்றிகளுக்குப் பின்னால் உண்மையிலேயே இருப்பது

ஓர் ஆண்தான் என்பார்கள்! அப்போது பார்க்க வேண்டுமே.. டண் டண்ணாக என் முகத்தில்

வழிகிற அசட்டுத்தனத்தை. அது என்னவோ எழுத்து என்பதையும் அந்த எழுத்தாளரின் குடும்ப உறவுகளையும்

என்னால் நேர்க்கோட்டில் பார்க்க முடிவதில்லை. அதுவும் ஒரு பெண் எழுத்தாளர் தன் எழுத்துகளுக்கும்

அதன் வெற்றிகளுக்கும் பின்னால் இருப்பது உண்மையிலேயே ஓர் ஆணாக இருந்தாலும் அதைச் சொல்ல

வேண்டிய காலம் இன்னும் வரவில்லை. அப்படிச் சொல்லும்போது என் எதிரில் இருக்கும் எழுத்துலக

மொட்டுகள் ம்ம் இவருக்கு கிடைத்திருக்கும் கணவரின் ஒத்துழைப்பு நமக்கில்லையே என்று

அரும்பாமல் போய்விடுமோ என்ற அச்சமும் ஏற்படும்..

அதிகாலையில் பேப்பர் படிக்கும்போது கைபேசியில் எஸ்.எம்.ஸ் செய்தி..

என்னுடைய என்னுரைக்காக காத்திருப்பதாக. சரி இனிமேலும் லேட் பண்ணக்கூடாது.

எதுவும் யோசிக்க வில்லை. வேகமாக என்னுரையை எழுதி அனுப்பிவிட்டேன். வழக்கம்போலத்தான்.

எல்லோரையும் திருப்திப் படுத்தற மாதிரி எல்லோருக்கும் நன்றி சொல்லி..

—-

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை