திருவண்டம் – 4

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

ஜாவா குமார்


‘ஐயா, தாங்கள் இருவரும் யார் என்று சொல்லுங்களேன். எங்கோ நான் நன்கறிந்தவர் போல் தோன்றுகிறது. ‘

‘சொல்கிறோம், சற்றே பொறுத்திருப்பீர் யோகரே. அதற்குமுன் நும் தேடலின் காரணத்தைச் சொல்லுங்கள். இதை அறிந்து கொள்வதால் என்ன பயன் உமக்கு ? ‘

‘ஐயா, இதன் பயன்கள் அளவிடற்கரியன. முதலில் ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்ற இயந்திரங்களுக்குச் செயற்கை அறிவைப் பொருத்தும் துறை; அப்படியே, ஓருடலின் ட்ரில்லியன் கணக்கிலான செல்தகவல்களைக் குவாண்டம் கணிணியில் மின்வருடிச் சேகரித்துத் தொலைதூரங்களுக்குத் தொலைநகல் அனுப்புவது போல் அனுப்பலாம். இது சாத்தியமென்றால் அண்டப்பயணம் மட்டுமின்றி, காலத்தில் பயணிக்கவும் இயலும். மேலும் க்ளோனிங் என்ற ஓருடலின் உயிர்ச்செல்களின் பிரதி மூலம் மற்றொரு உடலைத் தயாரிக்கும் துறை; வயதாகிவிட்டால், பழைய உடலின் நினைவுகளுடன் கூடிய மூளைச்செல்களின் நகலெடுத்து, மற்றொரு இளைய உடலை க்ளோனிங் செய்து பொருத்திக் கொண்டு ஆயுளை நீட்டிக்கும் துறை, பொதுவாய்ச் சொன்னால் மனிதன் சாகாமல் நீடித்திருக்க வேண்டுவதன் தூண்டுதலே இந்தத் தேடலின் இலக்கு என்று சொல்லலாம். ‘

‘சாகாமலிருப்பதும் சாத்தியம்தான். ஆயின் நும்முறையில் அல்ல. யோகத்தால் அன்றி அது நடவாது மகனே. அதுவே பவனவன் வைத்த பழவழி. அதைச் உரைத்துப் போகவே உம்மைக் காண வந்தோம். அஃதென்ன காலப்பயணம் ? அதையும் விரித்துரைக்க! ‘

‘ஐயா, இந்த ஆய்வும் ஒரு தேற்றமாகவே நிற்கிறது. இதன் பெயர் க்வாண்டம் டெலிபோர்ட்டேஷன். ஒரு நொடியின் மிகச்சிறிய பரிமாணத்தில், ஒன்றின்பின் நாற்பத்துமூன்று பூச்சிய இலக்கங்களில் ஒரு பங்கு என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த உறையும் நொடித்துளியில், குவாண்டம் ஃபோம் என்ற நுண்துகள் படுகையூடே, அண்டத்து எச்சத்தூடே, ஏற்படும் அதிநுண்துளை வழியே மின்னணுப் பரிமாற்றத்தில் கடந்து சென்றால் காலப்பயணத்தில் முன்னோக்கியும் பின்னோக்கியும் மட்டுமின்றி அண்டங்களையும் கடக்கலாம் என்ற தேற்றம். அறிவியலார் எவெரெட் எடுத்துரைத்த மல்ட்டிவெர்ஸ் என்ற முடிவிலாப் பன்னுலகக் கோட்பாடும் இதனால் சமீபத்தில் வலுவடைந்து வருகிறது. சொல்லப் போனால் இங்கே காலம் என்பதே பொருளற்றுப் போகிறது என்றும் சொல்லலாம். ‘

‘யோகரே, செல்லும் அளவில் சிந்தை செலுத்தியுள்ளீர். பரார்த்தத்தின் பரார்த்தமாய், அணுவின் அணுவாய் யோக உச்சத்தில் உம்முளே உம் மூலத்தைக் கண்டுணர்வதால் மட்டுமே அவ்வண்ணம் பயணிக்க இயலும். யாம் வந்த வழியும் அஃதே. ‘

‘நெற்றிக்கு நேரே

புருவத்து இஇடைவெளி

உற்றுற்றுப் பார்க்க

ஒளிவிடு மந்திரம்

பற்றுக்குப் பற்றாய்ப்

பரமன் இஇருந்திடம்

சிற்றம்பலமென்று

சேர்ந்து கொண்டேனே.

அடங்கு பேரண்டத்து அணு

அண்டஞ் சென்றங்கு

இடங்கொண்டதில்லை

இதுவன்றி வேறுண்டோ

கடந்தோறும் நின்ற

உயிர்கரை காணில்

திடம்பெற நின்றான்

திருவடி தானே!

– என்று பாடி, பின்னால் நின்றவரை அழைத்தார் முதியவர். ‘என்ன தோழரே, நீரும் சொல்லும்! அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கத்தை, அந்த வளப்பெரும் காட்சியைக் கண்டு அதிசயித்துப் பாடி வந்தீரே, அந்த வழியைப் பற்றி நீரே சொல்லும். ‘

‘மாலவன் மிகுதி. ஆதிசேடம் என்பர் மறையோர். அண்டங்கள் எல்லாம் அணுவாக, அணுக்கள் எல்லாம் அண்டங்களாக என்று எம் அணுக்கர் பரஞ்சோதியார் கண்டு பாடுவதுபோல் எண்ணிலி கோடி பிரம்மாக்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம், எட்டின் வடிவைப் போலொரு முடிவற்ற அரவரசின் திருவனந்தச்சுழல் ‘ என்று சொல்லி அவரும் முன்வந்து நின்றார்.

‘ஆம் மகனே! அதனூடே இப்படி ஒரு பயணமோ, சாகாமலிருப்பதோ அறிவியல் துணை கொண்டு மட்டும் சாதித்தல் இயலாது. நூலுணர்வு உணராத நுண்ணியோன் வழியது. ‘

யோகநாதன் பிரமித்து நின்றார். இது கனவேயாயினும் இவ்வளவு கோர்வையாய்த் தொடர்வது கனவில்லை போலும் தோன்றியது.

‘ஐயா, தாங்கள் சொல்லும் படுக்கவைத்த நிலையில், பாம்பு சுற்றியது போன்ற எட்டின் வடிவம், லெம்னிஸ்கத் என்ற இன்ஃபினிடியின் சின்னம். மேலும் சொன்னவை யாவும் உடன் விளங்காவிடினும் பின்னர் யோசிக்கிறேன். தாங்கள் யார் என்று இப்போதாவது சொல்லுங்கள். ‘

(தொடரும்..)

****

I maintain that the cosmic religious feeling is the strongest and

noblest motive for scientific research.

– Albert Einstein (Ideas and Opinions, 1954)

இலாடத்தே சாக்கிரத்தை எய்திய உள்ளம்

இலாடத்தே ஐந்தவத்தை எய்தும், இலாடத்தே

அவ்வவ் இந்திரியத் தத்துறைகள் கண்டதுவே

அவ்வவற்றின் நீங்கல் அது ஆங்கு.

– மெய்கண்டதேவர் – (சிவஞானபோதம் – மத்தியாலவத்தையை விளக்கவந்த நான்காம் நூற்பாவின் எ.கா. செய்யுள்)

அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டரனை

அஞ்செழுத்தால் அர்ச்சித் திதயத்தில் அஞ்செழுத்தாற்

குண்டலியில் செய்தோமம் கோதண்டம் சானிக்கில்

அண்டனாம் சேடனாம் அங்கு.

– மெய்கண்டதேவர் (சிவஞானபோதம் – புருவமத்தியில் தேனித்துத் தெளியும் பதிஞானத்தைச் சுட்டவந்த ஒன்பதாம் நூற்பாவின் எ.கா. செய்யுள்)

*

Series Navigation

ஜாவா குமார்

ஜாவா குமார்