அவளும் பெண்தானே

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

சந்திரவதனா


!

தமாரா விழித்துக் கொண்ட போது அவளோடு சேர்ந்து சோகமும் விழித்துக் கொண்டது. அவளால் தன்னுள்ளே படிந்து விட்ட சோகத்தின் சுமையை எந்த வழியிலும் இறக்க முடியாதிருந்தது. மனசு மிகவும் பாராமாக இருந்தது. பக்கத்துப் படுக்கையைப் பார்த்தாள். அது வெறுமையாகவே இருந்தது. இன்றோடு மூன்று மாதம். காந்தன் அவளை விட்டுச் சென்று மூன்று மாதங்கள் சென்று விட்டன. அவளால் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை.

காந்தனைப் பிரிவதென்பது காந்தனும் அவளுமாக முதலே பேசித் தீர்மானித்துக் கொண்ட விடயம்தான். ஆனால் ஐந்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பின்னான அந்தப் பிரிவு நியத்தில் இவ்வளவு கொடியதாக இருக்கும் என்பதை அவளால் அப்போது கணிப்பிட்டுப் பார்க்க முடியவில்லை.

கணிப்பிட்டுத் தெரிந்து கொண்டிருந்தாலும் கூட அவள் செய்வதற்கும் ஒன்றும் இருக்கவில்லை. காந்தனின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவளைப் பிடித்திருந்தாலும், அவள் யேர்மன் பெண்ணாக இருப்பதால் அவளைக் காந்தன் திருமணம் செய்து கொள்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

‘எப்பிடிப் பார்த்தாலும் யேர்மன் பொம்பிளை எங்கடை கலாச்சாரத்துக்குள்ளை ஒத்து வர மாட்டாள். ‘ இது காந்தனின் பெற்றோரின் வாய்ப்பாடம். அவர்களை மீற முடியாத காந்தன். இவர்களுக்குள் சிக்கிய தமாரா.

காந்தன் நல்லவன்தான். காந்தனை அவனது பன்னிரண்டாவது வயதிலிருந்தே தமாராவுக்குத் தெரியும். அவள் காந்தன் படிக்கும் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் போய்ச் சேர்ந்த போது, காந்தன் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.

பாடசாலை நிறைந்த வெள்ளை மாணவர்களுக்கு மத்தியில் மாநிறம் கொண்ட காந்தன் பளிச்சென்று வித்தியாசமாகத் தெரிந்தான். அவனது சுருண்ட கேசமும், அழகிய கண்களும் பார்ப்பவர்களை அவன்பால் ஈர்த்தாலும் அவன் எப்போதும் மற்றவர்களிடமிருந்து சற்று ஒதுங்கித் தனிமைப் பட்டே இருந்தான். ஏதோ ஒரு சோகம் அவன் கண்களுக்குள் எப்போதும் ஒளிந்திருந்தது. பாடசாலை வெளிகளில் அவனைக் காணும் வேளைகளில் தமாராவின் கவனத்துக்குள் இவைகள் அகப் படத் தவறவில்லை. ஆனாலும் சின்னப் பெண்ணான அவளுக்கு அப்போது அவனை நெருங்கும் துணிவோ அல்லது அவனது தனிமை பற்றி விசாரிக்கும் தைரியமோ அவ்வளவாக இருக்கவில்லை.

காலப் போக்கில் காந்தனின் திறமையும், படிப்பில் அவன் கொண்டிருந்த கெட்டித்தனமும் எல்லா மாணவர்களுக்கும் அவன் மேல் ஒரு மதிப்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்த ஆசிரியர்களிலிருந்து மாணவர்கள் வரை எல்லோருமே அவனது நிறத்தைப் பற்றி அக்கறைப் படாமல் அவனோடு சரளமாகப் பழகத் தொடங்கினார்கள். இவையெதுவும் காந்தனின் கண்களுக்குள் இருந்த சோகத்துக்கு விடுதலை கொடுக்க வில்லை.

பதினான்கு வயது வரமுன்னரே ஆளாளுக்கு சிகரெட்டும் காதலும் என்று திரிய இவன் மட்டும் தனியாக இருந்தான். இது தமாராவுக்கு இவன் மீதான ஈர்ப்பை இன்னும் அதிகமாக்கியது. மெது மெதுவாக இவனை நெருங்கத் தொடங்கினாள். பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள்.

தாயக தேசத்தின் அனர்த்தங்களை சிறு வயதிலேயே பார்த்து விட்டு வந்த பாதிப்பு அவனுள் ஆழமாகப் பதிந்திருப்பதை அவன் பேச்சில் உணர்ந்தாள்.

‘நான் என்ரை தாய்நாட்டுக்குத் திரும்போணும். என்ரை தாய்நாட்டின்ரை விடுதலைக்காகப் போராடோணும். ‘ என்ற ஒரு தீவிரத் தன்மை அவனுள் இருப்பதைக் கண்டு இப்படியும் நாட்டுப் பற்று இருக்குமா என வியந்தாள்.

அவன் பேசும் போதெல்லாம் அவனது நாடு பற்றியும் அங்குள்ள அனர்த்தங்கள் பற்றியுமே அவளுடன் பேசினான். ‘எல்லாரும் ஆளுக்கொரு பெண் நண்பிகளோடை திரிய நீ மட்டுமேன் பிரமச்சாரி மாதிரி இருக்கிறாய் ? ‘ என அவள் கேட்ட போது ‘நான் தமிழனாய் வாழோணும். தமிழ்ப் பெண்ணைக் காதலிக்கோணும். தமிழ்ப் பெண்ணையே திருமணமும் செய்யோணும். ‘ என்றான்.

இவனது இப்படியான பேச்சுக்களால் இவனை ஒரு தீவிரவாதி என்று திட்டித் தீர்த்தவர்களும் இருக்கிறார்கள்.

சொன்னது போலக் காந்தனுக்கு முதலில் ஒரு தமிழ்ப் பெண் மீதுதான் காதல் வந்தது. காதலிப்பதே உலக மகா குற்றம் எனக் கருதும் தமிழ் சமூகம் அந்தக் காதலை ஏற்றுக் கொண்ட விதம்தான் மிகவும் அநாகரீகமாக இருந்தது. கண்களால் மட்டும் கதை பேசிக் கொண்டிருந்த காந்தனும், அந்தத் தமிழ்ப் பெண்ணும் ஒரு புகையிரத நிலையத்தில் எதிர் பாராமல் சந்தித்துக் கொண்டதும் மணிக் கணக்கில் நின்று பேசியதும் எப்படியோ அவளது பெற்றோருக்குத் தெரிய வர அவர்கள் காந்தன் வீட்டுக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ‘குய்யோ முறையோ ‘ என்று கத்த… அந்நாளில் ஊரில் சைக்கிளில் பெண்களுக்குப் பின்னால் சுற்றிய காந்தனின் அப்பா கூட ‘காதல் தப்பானது ‘ என்று கூறி, காந்தனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார். காந்தனின் உணர்வுகளை மதிக்க மறந்தார். சமூகம் அவனைப் பார்த்து ‘ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்பவன் சீர் கெட்டவன் ‘ என்பது போல எள்ளி நகையாடியது.

முதற் காதல் முளையிலேயே கிள்ளியெறியப் பட்ட ஏமாற்றத்தை எங்காவது கொட்டித் தள்ள வேண்டும் என்ற நிலையில் காந்தன் முதன் முறையாக தமாராவுடன் மனம் விட்டுப் பேசினான். தமிழர் கலாச்சாரம் பற்றியும் அங்கு காதலுக்குள்ள மரியாதை பற்றியும் விளக்கினான். சங்ககாலத்தில் காதல் வரவேற்கப் பட்டாலும், இன்றைய கலாச்சாரத்தில் அவைகள் புறக்கணிக்கப் படுவதற்கான தனக்குத் தெரிந்த காரணங்களை விளக்கினான்.

தமிழ்ப் பெண்களுடன் பழகவோ, பேசவோ, சிரிக்கவோ முடியாத சூழ்நிலை மட்டுமல்லாமல், அவன் வாழும் நகரில் தமிழ் ஆண் நண்பர்களைக் கூட தேடிக் கொள்ள முடியாத நிலையில் அவனது உணர்வுகளுக்கும் கோபங்களுக்கும் வடிகாலாய் அமைந்தது பார்வைகளாலேயே வருடி விடும் தமாராவின் அன்பு ஒன்றுதான்.

அந்த அன்பும் ஆதரவும்தான் கால ஓட்டத்தில் காதலாகி, தமாரா வீட்டில் எந்த விதமான எதிர்ப்புகளும் இல்லாத காரணத்தால், காந்தனின் அப்பாவின் பலமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஆழ வேரூன்றி விட்டது.

காதல் அரும்பி விட்டதை அறிந்ததும், தமாரா காந்தனின் வீட்டுக்கு வருவதற்கு முற்று முழுதான தடை காந்தனின் அப்பாவால் விதிக்கப் பட்டது. அதனால் பாடசாலை தவிர்ந்த வேளைகளில் சந்திப்புகள் தமாரா வீட்டில் தொடர்ந்தன.

ஒரு கட்டத்தில் காந்தன் தமாராவுடன் சேர்ந்து தமாரா வீட்டிலேயே வாழத் தொடங்கி விட்டான். காதலை வேலி போட்டுத் தடுக்க முடியாது என்ற உண்மையை உணர மறந்த அப்பாவின் காட்டுக் கத்தல்களும், குத்தல் கதைகளும் அவனை நோகடித்தாலும் அம்மாவுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டான். ‘அப்பாதானே..! அவர் கோபம் அவர் நிலையில் நியாயமானதுதானே! ‘ என்று தனக்குத் தானே சமாதானமும் கூறிக் கொண்டான்.

அப்பாவின் கெட்டித்தனம் எப்போதும் அம்மாவின் அன்பை ஆயுதமாக்குவதுதான். அவர் அம்மாவை முடுக்கி விடுவார். அதன் பிரதி பலனாய் அம்மா காந்தனைச் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எந்தக் கதையில் தொடங்கினாலும் சுற்றி வளைத்துக் கடைசியில் காந்தனின் கல்யாண விடயத்துக்கே வந்து விடுவா. ‘எப்பிடிப் பார்த்தாலும் யேர்மன் பொம்பிளை எங்கடை கலாச்சாரத்துக்குள்ளை ஒத்து வர மாட்டாள். அவளை விட்டிட்டு வந்திடு… உனக்கு லட்சணமான எங்கடை நாட்டுப் பிள்ளை ஒண்டைக் கட்டித் தந்தால்தான் நான் நிம்மதியாக் கண்ணை மூடுவன்…. ‘ என்றுதான் கதையை முடிப்பா.

இப்படியான அம்மாவின் கதைகளும், அதனாலேற்படும் அம்மாவுடனான வாக்கு வாதங்களும், தனியாகச் சிந்தித்து ஒரு தீர்மானத்துக்கு வர முடியாத அளவுக்கு அழுத்தம் கொடுப்பவையாகவும் எரிச்சல் கொடுப்பவையாகவுமே காந்தனுக்கு இருந்தன. இவைகளைக் காந்தன் தமாராவுக்கும் சொல்லத் தவறுவதில்லை. ஆனாலும் என்றைக்கோ ஒரு நாள் மனம் மாறி அவர்கள் தன்னைக் காந்தனின் மனைவியாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்தான் தமாரா காத்திருந்தாள்.

‘இஞ்சரும் பார்த்துக் கொண்டிருந்தால் இவன் இப்பிடியே இருப்பான். ஊரிலை இருந்து ஒண்டைக் கூப்பிட்டிட்டம் எண்டால் பேசாமல் தாலியைக் கட்டிப் போட்டு வீட்டோடை இருந்திடுவான். ‘ அப்பா சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் துணிந்து காந்தனுக்கென்று ஒரு பெண்ணை தாயகத்திலிருந்து அழைத்தும் விட்டார். அம்மாவுக்கு காந்தனின் மனதைப் புண்படுத்த விருப்பமில்லா விட்டாலும் அப்பாவை எதிர்க்கும் தைரியமும் இல்லை.

பெண்ணைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டு திருமணம் செய்து விடும் படி வற்புறுத்தினார்கள். காந்தனுக்கு இக்கட்டான நிலை. தமாராவை மறக்கவோ, பிரியவோ மனசில்லை. ஆனால் வந்த தாயகத்துப் பெண்ணும் அழகாக, மிக இளமையாக, புத்தம் புது மலராக இருந்தாள். அது போக இவனுக்காக என்று வந்து காத்திருந்தாள்.

இவையெல்லாம் தமாராவுக்குள் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அவள் தனக்கே உரிய பெருந்தன்மையுடன் ‘காந்தன்..! நீ உன்ரை அம்மா அப்பாவை எதிர்த்து என்னைத் திருமணம் செய்யிறதை விட அவையளுக்குப் பிடித்தமான உனக்கென வரவழைக்கப் பட்ட உன்ரை நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்யிறதுதான் நல்லது. அதுதான் உன்னைப் பெற்றவையளுக்கு நீ செய்யிற நன்றிக் கடன். ‘ என்றாள். உள்ளுக்குள்ளே ‘தான் அப்படிச் சொன்னாலும் காந்தன் தன்னை விட்டு விட்டு இன்னொருத்தியை மணக்க மாட்டான் ‘ என முழுமையாக நம்பினாள்.

ஆனால் கலாச்சாரம் என்றும் தமிழர் பண்பாடு என்றும் செவிப்பறை அதிரக் கத்தும் காந்தனின் பெற்றோரிடம், தாம் ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்கிறோமே என்ற எண்ணம் ஒரு துளியும் இருக்கவில்லை. தமது மகனோடு சேர்ந்து வாழ்ந்த ஒருத்தியைத் தள்ளி வைத்து விட்டு இன்னொருத்தியை அந்த இடத்தில் அமர்த்தப் போகிறோமே என்ற குற்ற உணர்வு கூட இருக்கவில்லை.

தமது மகன் நன்றாக வாழ வேண்டும். தமது மகன் வேற்று நாட்டுக் காரியை மணம் முடித்தான் என்று ஊர் பேசாதிருக்க வேண்டும்… என்பது போன்றதான சுயநலமான, தற்பெருமை கொண்டதான எண்ணங்களும், தன்மைகளும்தான் அவர்களிடம் இருந்தன.

தமது மகனால் ஒரு ஐரோப்பியப் பெண்ணின் வாழ்வு சிதைக்கப் பட்டிருப்பதோ, மன உணர்வுகள் வதைக்கப் பட்டிருப்பதோ அவர்களுக்குப் புரியவில்லை. அல்லது புரிந்தாலும் அவர்களுக்கு அது பற்றி அக்கறை இல்லை.

ஆனாலும் குற்ற உணர்வுகள் காந்தனுக்குச் சாட்டையடி கொடுத்துக் கொண்டுதானிருந்தன. அதனால்தான் தனக்கென ஒருத்தி நாட்டிலிருந்து வந்த பின்னும் மனம் குழம்பியவனாய் தமாராவை அடிக்கடி சந்தித்தான். திருமணத்திற்கான நாட்கள் நெருங்க நெருங்கத்தான் இனியும் இப்படிச் சந்திப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்தவனாய் முடிந்தவரை ‘இனி நாம் சந்திக்காமல் இருப்போம் ‘ என்ற முடிவைத் தமாராவுடன் சேர்ந்தெடுத்தான்.

இன்று அவனுக்குத் திருமணம். தமாராவுக்கு ஒன்றையும் நம்ப முடியாமல் இருந்தது. காதல் தோல்வி என்றதும் ஒரு தமிழ்ப் பெண் போல ஓடிப்போய் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவளிடம் கோழைத்தனம் இல்லையென்றாலும், மனசு ஓவென்று அழுது கொண்டே இருந்தது. அவளும் பெண்தானே. வெள்ளைத் தோல் என்றால் மனசு என்ன கல்லாகவா இருக்கும்!

‘காந்தன் உண்மையிலேயே என்னைக் காதலிக்க வில்லையா.. ? காதலித்திருந்தால் நான் போக மாட்டேன் என்று நின்றிருப்பானே..! ‘ என்ற ஆதங்கமான எண்ணங்களும், கேள்விகளும் அவளுள் அடிக்கடி எழுந்தன.

‘அவன் என்ன செய்வான்… ? பாவம்..! ‘ என்ற சமாதானப் பதில்களும் அவளுக்குள்ளேயே இருந்தன.

கனத்த மனசுடன் கட்டிலில் இருந்து இறங்கினாள். கல்யாண வீட்டுக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்திருந்ததால் அலுமாரிக்குள்ளிருந்து சின்னச் சருகைக் கரை போட்ட வெளிர் நீலச்சேலையை எடுத்துக் கட்டிலில் வைத்து விட்டுக் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

காந்தனுடன் ஸ்ருட்கார்ட்க்குப் போய் பிருந்தா சில்க் கவுசில், அந்தச் சேலை வாங்கிய நாள் நினைவில் வந்தது. வீட்டுக்கு வந்ததும் அதை ‘உடனேயே உடுத்திக் காட்டு. ‘ என்று காந்தன் கரைச்சல் படுத்த அவள் உடுத்தத் தெரியாமல் திண்டாட, காந்தன் தனக்கேதோ தெரிந்த மாதிரி உதவி செய்கிறேனென்று சொருகிக் கிருகி…. அத்தனை சோகத்துக்குள்ளும் தமாராவுக்குச் சிரிப்பு வந்தது.

பிறகு அவள் சேலை எப்படி உடுத்துவது என்பதை VolLkshochschule யில் நடந்த ஒரு வகுப்புக்குப் போய் பழகி விட்டு வந்து காந்தனை அசத்தியது, எல்லாமே காந்தனுடன்தான் தன் வாழ்க்கை என்ற நம்பிக்கையில்தானே! இப்போ எல்லாம் வெறும் நினைவுகளில் மட்டுந்தான்.

குளிக்கும் தண்ணீரோடு கண்ணீரும் கரைந்தோடக் குளித்து விட்டு வந்தவள், சேலையை உடுத்தி, பொட்டு வைத்துக் கொண்டு கல்யாண வீட்டுக்குப் புறப்பட்டாள். போற வழியில் பூக்கடைக்குள் நுழைந்து மிகவும் அழகிய பெரியதொரு பூங்கொத்தைக் கட்டுவித்து வாங்கிச் சென்றாள்.

கல்யாண மண்டபத்துள் தமாரா நுழைந்த போது ‘இவளென்ன கிரகசாரத்துக்கு இங்கை வாறாள் ‘ என்று மனசுக்குள் முணுமுணுத்த படி காந்தனின் அம்மாவும் அப்பாவும் மலங்க மலங்க விழித்தார்கள்.

அவள் எந்த வித அலட்டலுமில்லாமல் புன்னகை பூத்த முகத்துடன் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி விட்டு, மணப்பந்தலில் அமர்ந்திருந்த காந்தனின் அருகே சென்று, காந்தனையும் அருகிருந்த தமிழ்ப் பெண்ணையும் வாழ்த்தி பூங்கொத்தையும் கொடுத்து விட்டு அவசரமாய் திரும்பினாள்.

அவள் கண்களிலிருந்து சில துளிகள் அவளையறியாமலே கன்னங்களில் வழிந்தன. அந்தத் துளிகளில் ஒரு கடலளவு சோகம் நிறைந்திருப்பதையோ, அது அவள் மனசை அழுத்துவதையோ யாரும் கண்டு கொள்ளவில்லை.

சந்திரவதனா

யேர்மனி

Series Navigation

சந்திரவதனா

சந்திரவதனா