குழந்தைத் திருமணம்

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

ஜோசப்


அலமேலு காலையில் கண்விழிக்கும்போதே தன் உடல் முழுவதும் பாரமாய் இருப்பதைப் போல் உணர்ந்தாள். நேற்று இரவு தெருக்கூத்து முடிந்து வந்து படுக்கையில் விழுந்தபோதே மணி நள்ளிரவைக் கடந்திருந்தது.

“ஏய்! ரவைக்கி ஸ்கூலுக்கு போவோனாம் ? கூத்து பாத்தது போதும். போய் படுடி.” என்று தன் தாய் மாரியம்மா கூறியதைக் கேட்டிருந்தால் இந்த பாடு இருந்திருக்காது என்று இப்போது நினைத்துப் பார்த்தாள்.

‘லேட்டாயிருக்கும்போலருக்குதே ‘ என்ற எண்ணத்துடன் படுக்கையை விட்டு எழுந்தவள் ‘ஆத்தா மணி என்னாச்சி ? ‘ என்ற தன் கேள்விக்கு தன் தாயிடமிருந்து பதில் கிடைக்காமல் போகவே, ‘ஆத்தா எங்க போயிருச்சி ? வூட்ல யாருமேயில்லையா ? ‘ என்று முனகிக்கொண்டே குடிசையிலிருந்து வெளியே வந்தாள்.

பக்கத்து குடிசை வாசலில் குந்தியிருந்த பாட்டியைக் கண்டவள், ‘பாட்டி, எங்காத்தாவ பாத்தியா பாட்டி ? ‘ என்றாள்.

கிட்டத்துப் பார்வைக் குறையுள்ள பாட்டி கண்களைச் சுருக்கிக்கொண்டு அவளைப் பார்த்தாள். ‘யாருடி ? யாரு நீ. ஒன்னும் திரியலையே ? ‘

அலமேலு தலையிலடித்துக்கொண்டாள். ‘ஐயோ பாட்டி. நாந்தேன் அலமேலு. எங்காத்தாவ வூட்ல காணம். அதான்.. நீ பாத்தியான்னு கேக்கறேன். ‘

‘நா என்னாத்த கண்டேன் ? தோ பக்கத்துல நிக்கிற உன்னையே நீ சொல்லித்தான் திரியிது. இதுல உங்காத்தா போனதை நா எங்க பாத்தேன் ? எங்க போயிருக்க போறா ? வந்துருவா. நீ ஸ்கூலுக்கு போவலியா ? எங்கூட்டு பசங்க அப்பவே போயிருச்சே ?”

‘இதோ. பல்ல தேச்சிட்டு, பழையத குடிச்சிட்டு ஓட வேண்டியதுதான். ஆத்தா வந்தா நீ சொல்லிரு பாட்டி.”

குடுகுடுவென்று குடிசைக்கு பின்னால் ஓடியவள் கூரையில் சொருகியிருந்த வேலங்குச்சியையெடுத்து வாய்க்குள் விட்டு சிறிது நேரம் இப்படியும் அப்படியுமாய் பல்லைத் தேய்ப்பதாய் பாவலா பண்ணிவிட்டு – ஆத்தா இருந்தா ‘ஏய் ஒயுங்கா பல்லைத் தேய்டி. இல்லாங்காட்டி தோ பக்கத்து வூட்டு பாட்டி கணக்கா பல்லல்லாம் கொட்டிப்பூடும். சாக்கிரதை என்று அவள் தேய்த்து முடிக்கும் வரை சொல்லிக்கொண்டேயிருப்பாள் – பக்கத்திலிருந்த சிமெண்ட் தொட்டியிலிருந்த தண்ணீரை குவளையில் மொண்டு கொப்புளித்து விட்டு பாவாடையில் துடைத்துக்கொண்டு குடிசைக்குள் ஓடினாள்.

‘ஐயையோ. டைம் ஆயிருச்சி போலருக்குதே. இந்த ஆத்தா எங்க போய் தொலைஞ்சிதோ தெரியலையே. இப்ப என் தலைய யாரு வாரிவிடறது ? ‘ என்று முனகிக்கொண்டே சுவரிலிருந்த முகக் கண்ணாடியில் தன்னை ஒருமுறை பார்த்தாள்.

‘ஐயே மூஞ்சியப்பாரு, குரங்காட்டமா. உன் பேன் புடிச்ச தலைய வாரிவிட ஒரு ஆளு வேணுமாக்கும் ? ‘ என்று தன்னைப் பார்த்து ஏளனம் செய்த தன் பிம்பத்தை சட்டைசெய்யாமல் அருகில் மேற்கூரையில் சொருகியிருந்த பல் உடைந்த சீப்பை எம்பிக் குதித்து எடுத்தாள். சடையை அவிழ்க்காமல் மேலோட்டமாய் சீவிக்கொண்டு குனிந்து நேற்று போட்ட சட்டைப் பாவாடையைப் பார்த்து, ‘எல்லாம் இது போதும், ஓடு. ‘ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, ‘நேரமாயிருச்சு. இன்னைக்கு பழையது ஒன்னும் வேணாம். ‘ என்றவாறு தினம் பள்ளிக்கு கொண்டுசெல்லும் புத்தகப் பையில் சத்துணவுக்கான தட்டு இருக்கிறதா என்று உறுதிசெய்துக்கொண்டு குடிசையின் வெளிக்கதவை முடி கொண்டியிலிருந்த கயிற்றை நிலைப்படியிலிருந்த ஆணியில் ஒரு சுற்று சுற்றிவிட்டு சிட்டாய் பறந்தாள் அலமேலு ஊரின் கோடியிலிருந்த தன் ஆரம்ப பள்ளியை நோக்கி.

**

அந்த குக்கிராமம் அடுத்திருந்த டவுணிலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. சுமார் நூறு குடும்பங்களைக்கொண்ட அந்த கிராமம் இருபத்தோராம் நூற்றாண்டின் அடிப்படைத் தேவையான மின்சாரத்தைத் தவிர – அதுவும் பஞ்சாயத்து தலைவர், பள்ளி ஆசிரியர், டவுணிலிருந்த துணிக்கடை ஓனர் என ஒரு சில வீடுகளில் மட்டும்தான் – வேறெந்தவித நவீன வசதிகளையும் கண்டிருக்கவில்லை.

வாணம் பார்த்த பூமி விவசாயத்தை மறந்து பல ஆண்டுகளாயிருந்தன. ஒரேயொரு ஆழ்கிணறும் வற்றிப்போய் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

டவுணுக்கு போய்வர இருந்த ஒரே தார் சாலையும் கடந்த ஆண்டு பெய்த மழையில் சேதமடைந்து இரு சக்கர வாகனங்களையே விழுங்கிவிடக்கூடிய குழிகளுடன் காட்சியளித்தன. பண்ணைக்காரரின் பழங்கால என்ஃபீல்ட் புல்லட் வாகனம் மற்றும் பஞ்சாயத்து தலைவரின் மகன் பாலசுந்தரத்தின் புத்தம்புது யமஹாவையும் தவிர பத்துப் பதினைந்து சைக்கிள்களே அந்த கிராமத்திலிருந்தன என்பது வேறு விஷயம்.

அதிலும் பாலசுந்தரத்தைத் தவிர அந்த குண்டும் குழியுமாயிருந்த சாலையை தினமும் உபயோகிப்பவரும் எவருமில்லையென்றே கூறலாம், நாளுக்கு இருமுறை அக்கிராமத்தின் ஒரேயொரு பேருந்து-நிறுத்தத்தில் நிறுத்தியும் நிறுத்தாமலும் சென்ற டவுண் பஸ்சை கணக்கில் எடுக்கவில்லையென்றால். அதனால்தானோ என்னவோ அந்த சாலையின் பரிதாப நிலையைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. பாலசுந்தரத்திற்கோ அந்த சாலையில் தன் யமாஹாவை வேகமாய் ஓட்டிச்செல்வது ஒரு த்ரில்லிங் அட்வென்சராக இருந்ததால் தன் தந்தையிடமே அவன் சாலையின் தரத்தைப் பற்றி முறையிட்டதில்லை.

கிராமத்திலிருந்த குடும்பங்களிலிருந்த ஆண்கள் விவசாயத்தை கைவிட்டு அருகிலிருந்த அண்டை மாநிலத்தில் கட்டட தொழிலாளர்களாகவும், கூலியாட்களாகவும் சென்றுவிட்டதால் ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை என்ற அந்த மூன்று மாதங்களைத் தவிர (அண்டை மாநிலத்தில் பருவ மழையால் கட்டுமான பணிகள் ஸ்தம்பித்துவிடுவதால்) பெரும்பாலான வீடுகளில் பெண்களும், குழந்தைகளுமே காணப்பட்டார்கள்.

இத்தகைய ஒரு குடும்பம்தான் அலமேலுவின் குடும்பம். அலமேலுவின் தந்தை காத்தையன் மற்றும் மூத்த மகன் வடிவேலு கட்டடத் தொழிலாளர்களாக அண்டை மாநிலத்தில் பணி புரிவதால் வருடத்தில் மூன்று மாதங்கள்தான் வீட்டில் தொடர்ந்து தங்குவார்கள். மற்ற மாதங்களில் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை அல்லது தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைநாட்களில் மட்டும் வந்து போவதுண்டு.

கிராமத்திலிருந்த ஆரம்ப பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் பயிலும் அலமேலு அடுத்த வருடம் படிப்பைத் தொடரவேண்டுமென்றால் ஊரிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் பயணம் செய்து டவுண் பள்ளியில் சேரவேண்டும். அலமேலு அதைப்பற்றியெல்லாம் கவலை பட்டதேயில்லை. படிப்பில் படுசூட்டிகை. வகுப்பில் எப்போதும் முதல் தான். பள்ளியிலிருந்த இரண்டே ஆசிரியர்களுக்கும் அதுவும் ஆண் ஆசிரியருக்கு அவள்தான் செல்லப்பிள்ளை.

அலமேலு பள்ளிக்கு வர அரைமணி தாமதமானாலும் இருவரும் ஒன்றும் கேட்கமாட்டார்கள். ஏனென்றால் இருவரில் ஒருவர் பள்ளிக்கு விடுப்பு கொடுக்காமலேயே வரவில்லையென்றாலும் அலமேலுவே அவர்கள் ஸ்தானத்திலிருந்து பாடங்களை நடத்தி – சில சமயங்களில் அலமேலுவே நன்றாக பாடம் நடத்துகிறாள் என்று சகமாணவர்கள் சொல்வதுண்டு – சமாளித்துவிடுவாள்.

அன்றும் அப்படித்தான். அலமேலு பள்ளி சென்றடையும்போது வகுப்புகள் துவங்கி அரை மணியளவு கடந்திருந்தது. ஆனாலும் ஒன்றிலிருந்து மூன்றாம் வகுப்புகள் வரை படித்துக்கொண்டிருந்த மாணவ மாணவியர்களை ஒரே அறையில் வைத்து மேய்த்துக்கொண்டிருந்த சரஸ்வதி டாச்சர் அலமேலு ஓட்ட ஓட்டமாய் பள்ளி வளாகத்துக்குள் நுழைவதைப் பார்த்துவிட்டு வகுப்பிலிருந்து வெளியே ஓடி வந்தாள். ‘ஏய் அலமேலு, எங்கேடி போனே ? கோபால் சார் இன்னைக்கி இல்லேடி. நீ இந்த குட்டி பிசாசுகள பாத்துக்கடி. நா உன் கிளாச பாத்துக்கறேன். சரியா ?”

அலமேலு சந்தோஷமாய் தலையாட்டினாள். ‘சரி டாச்சர். நீங்க போங்க. நா பாத்துக்கறேன். ‘ அவளுக்கு கோபால் சார் இன்றைக்கு இல்லை என்பதே சந்தோஷமாயிருந்தது.

கோபால் டாச்சர் அவளிடமும் அவளுடைய வகுப்பிலிருந்த சில மாணவிகளிடமும் கடந்த சில மாதங்களவே ஒரு விதமாக நடந்துகொள்வதை அவள் பார்த்திருக்கிறாள். மாலையில் வகுப்பு முடிந்தவுடன் அவர்களை அவருடைய அறைக்கு அழைத்து ‘சமர்த்தா படிக்கறீங்கடி நீங்கல்லாம் ‘ என்று கட்டிப்பிடித்து பாராட்டுவதும், கன்னத்தைக் கிள்ளுவதும் அலமேலுவுக்கோ மற்ற மாணவிகளுக்கோ பிடிக்கவில்லையென்றாலும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போயிருந்தார்கள். சரஸ்வதி டாச்சரிடத்தில் சொன்னாலும், ‘ஏய் போக்கிரி பசங்களா, சார் மேல சும்மாவுச்சும் ஏதாவது சொல்லிக்கிட்டிருக்காதீங்க. அவருக்கு தெரிஞ்சிது.. பஞ்சாயத்து பிரசிடண்ட் கிட்ட சொல்லி உங்க எல்லார் சீட்டயும் கிழிச்சிருவாரு. அப்புறம் தினத்துக்கு ஒரு வேளை கெடக்கிற சாப்பாடும் இல்லாம போயிடும், போங்க. ‘ என்று விரட்டி விடுவாள்.

இன்னைக்கி மாதிரி சார் தினமும் வராமல் போய்விட்டாலும் பரவாயில்லை. தானே படித்து பாஸாகிவிடலாம் என்று நினைத்துக்கொண்டே தான் கொண்டு வந்த புத்தகப் பையை தன் வகுப்பறைவாசலில் இறக்கி வைத்துவிட்டு முதல் மூன்று வகுப்பு மாணவ, மாணவியர் இருந்த அறைக்கு சென்று பாடம் நடத்தலானாள் அலமேலு.

**

‘பிரசிடண்ட் ஐயா கூப்புடறார் புள்ளே. வெரசா ஓடிவா ‘ என்று காலை ஆறு மணி வாக்கில் பஞ்சாயத்து தலைவர் வீட்டு வேலையாள் தன் வீடு தேடி வந்து கூப்பிட்டதும் கையிலிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த தன் மகள் அலமேலுவையும் எழுப்பி விடாமல் ஓடி சென்ற மாரி பஞ்சாயத்து தலைவர் வீட்டை அடைந்தபோது தலைவர் ஐயா பரபரப்புடன் காணப்பட்டார்.

‘என்னங்கய்யா ‘ என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தன் முன் வந்து நின்ற மாரியைப் பார்த்ததும் எரிந்து விழுந்தார். “உள்ற போயி அம்மாவை கேப்பியா எங்கிட்ட வந்து நின்னுகிட்டு.. போ விரசா, ஓடு.”

“மன்னிச்சிக்குங்கய்யா. இதோ போறேன்.” பரபரப்புடன் வீட்டைச் சுற்றிக்கொண்டு பின்புறம் கொல்லை பக்கம் ஓடி “அம்மா மாரி வந்திருக்கேன்.” என்று குரலெழுப்பினாள்.

“ஏய் மாரி நா இங்கேருக்கேன். திரும்பி பாருடி.” என தன் பின்னால் தோட்டத்திலிருந்து குரல் கேட்க திரும்பி பார்த்தாள்.

தோட்டக்காரர் வேலய்யன் தென்னங்கீற்றுகளை வெட்டிக்கொண்டிருக்க, சரிந்து விழுந்த தென்னை கீற்று தன் மேல் விழுந்துவிடாமல் துள்ளி ஒதுங்கும் செண்பகத்தை – தலைவரின் மனைவி – பார்த்தவள் பரபரப்புடன் ஓடிச் சென்று சந்தோஷத்துடன், “பாப்பா வயசுக்கு வந்துருச்சு. அப்படித்தானேம்மா.” என்றாள்.

வாயெல்லாம் பல்லாய் அவளைப் பார்த்து சிரித்த செண்பகம், “ஆமாண்டி. உன் பொண்ண மாதிரியே உனக்கும் அபார மூளைடி. சரி, சரி நீ இந்தால வா.” என்று அவளைச் சற்று தள்ளி கூட்டிக்கொண்டு போய் குரலைச் சற்றே தாழ்த்தி, “ நேத்தைக்கி ராத்திரியே ஆயிருக்குடி! மக்காட்டம் உன் பொண்ணோட சேந்து கூத்த பாத்துட்டு வந்து படுத்து மாடுமாதிரி தூங்கிட்டு.. காலைல நா போயி அவ படுக்கைய பாக்கறேன்.. என்னத்த சொல்ல ? வயசாயிருச்சே தவிர ஒரு கூறும் இல்லேடி. சரி சரி நா உங்கிட்ட சொன்னத ஊர்ல வேற யார்கிட்டேயும் போய் சொல்லி வைக்காதே. அவருக்கு தெரிஞ்சா கொண்ணு போட்ருவாரு.” என்றாள் வீட்டின் முன்புறம் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே.

“சேச்சே. என்னம்மா நீங்க. நா போயி.. மாரியாத்த மேல சத்தியமா இந்த ஒடம்புல உசிரு இருக்கற வரைக்கும் இத யார் கிட்டயும்..”

அவளை முடிக்கவிடாமல் கைகாட்டி அடக்கினாள் செண்பகம், “ஏய் இவளே! இதுக்கு ஏண்டி போயி மாரியாத்தாவ இழுக்கறே ? அவுரு வந்துக்கிட்டிருக்காரு. நீ போய் அவ படுத்த பாயி, தலகாணியையெல்லாம் வெளில தோட்டத்துல கொண்டு போட்டு கழுவி காயப்போடு. அப்புறம் சமையல் கட்டுலருக்கற பாத்திரத்தையெல்லாம் கொல்லைல கொண்டு போட்டு கழுவிடு. விருந்தாளிங்கல்லாம் வர நேரமாயிருச்சு. இன்னைக்கி நீ வீட்டுக்கு போயிறாதடி. நெறைய வேலையிருக்கு. அலமேலு ஸ்கூலு வுட்டு வந்ததுக்கு பொறவா போ. என்ன ?”

“சரிம்மா.” என்றவள் அலமேலு எழுந்தவுடன் தன்னைத் தேடுவாளே என்ற நினைப்பை ஒதுக்கி வைத்துவிட்டு பரபரவென்று செண்பகம் அன்று நாள் முழுவதும் சொல்லிக்கொண்டேயிருந்த வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு ‘முதுகு வலிக்குதுடா சாமி ‘ என்ற முனகலுடன் நிமிர்ந்தபோது மாலை மணி ஐந்தாகியிருந்தது.

வீட்டினுள் ஒரே விருந்தினர் கூட்டமாயிருப்பதைப் பார்த்தவள் என்ன செய்வதென்று கைகளைப் பிசைந்துகொண்டு நின்றாள் தன் மகளை நினைத்துக்கொண்டு. சிறிது நேரத்தில் வெளியே வந்த தலைவரய்யா மகன் பாலசுந்தரத்திடம், ‘சின்னய்யா நா ஒரு நடை வீடு வரைக்கும் போய்ட்டு வந்திர்றேன்யா. எம் மவ ஸ்கூல்லருந்து வந்து தனியா இருப்பா. ‘

“அம்மாக்கிட்ட சொல்லிட்டு போ.” என்று அலட்சியத்துடன் கூறிவிட்டு சென்றவனை விரோதத்துடன் பார்த்த மாரி என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுக்கொண்டேயிருந்தாள்.

**

பள்ளி இறுதி வகுப்பு மணியடித்தவுடன் பிள்ளைகளெல்லோரும் ஆளுக்கொரு திசையில் கலைந்து ஓட அலமேலு தன் வகுப்பறைக்கு சென்று தன் புத்தகப்பையை எடுத்துக்கொண்டு சரஸ்வதி டாச்சர் வகுப்பறைகளை மூடுவதைக் கண்டு ஓடிப்போய் உதவி செய்தாள்.

“பாவம் டாச்சர் நீங்க.” என்ற அலமேலுவைப் பார்த்து சிநேகத்துடன் சிரித்த சரஸ்வதி, “ஏய் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ?” என்றாள்

“என்ன டாச்சர் ?”

“நம்ம தலைவரய்யா பொண்ணு இன்னைக்கி காலைல வயசுக்கு வந்திருச்சாம். அதான் இன்னக்கி அவ ஸ்கூலுக்கு வரல. உனக்கு தெரியாதா ?”

“இல்லே டாச்சர். நேத்தைக்கி ராத்திரி கூத்துல கூட நா பாத்தேனே ?”

“அப்படியா ? சரி சரி. நீ வீட்டுக்கு ஓடு. உங்கம்மா அவுக வீட்டுலதானே வேல பாக்குது ? இன்னைக்கி எங்க வீட்டுக்கு வுட போறாங்க ? நீ போற வழியில எதுக்கும் தலைவரய்யா வீடு வழியா போ. உங்கம்மா அங்கதான் ஒருவேள இருப்பா. நீ போ. நா கேட்டை சாத்திக்கறேன்.”

அலமேலு ‘ஓ! அதான் ஆத்தாவ காலைலேயே காணலையா ? ‘ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு புத்தகப்பையை தலையில் மாட்டிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் பஞ்சாயத்து தலைவரின் வீடு இருந்த தெருவை நோக்கி சென்றாள்.

**

“ஏய் அலமு! நீ இங்க எங்கேடி வந்தே ?” தன்னைப் பார்த்து கேட்ட தன் தாயின் குரலில் இருந்த சீற்றம் அவளுடைய நடையிலிருந்த துள்ளலை நிறுத்தியது.

“ஏன் ஆத்தா, நா வரக்கூடாதா ? என் கூடத்தானே அவளும் படிக்கறா ?” பரிதாபமாய் தன்னைப் பார்த்தவளை மேலும் கடிந்துக் கொண்டாள் மாரி.

“படிச்சா ? நாமளும் அவுகளும் ஒண்ணாயிரமுடியுமா ? கூறு கெட்ட கழுதை. படிப்புலருக்குற புத்தி இதுலயும் இருக்கணுமில்ல ? நீ வீட்டுக்கு போ. நா இதோ அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன். ஓடு. ஐயா பாத்தாரு.. நீ தொலைஞ்சே.” என்றவாறு தன்னன விரட்டியடித்த தன் தாயைப் பார்த்துக்கொண்டே பின்னோக்கி நடந்த அலமேலு எதிரே வந்த அவளுடைய பள்ளி ஆசிரியர் கோபால் சார் மேல் மோதிக்கொள்ள அவளை கீழே விழுந்துவிடாமல் பிடிக்கும் சாக்கில் இறுக்கி அணைத்துக்கொண்டவரிடமிருந்து அருவருப்புடன் விடுவித்துக்கொண்டு இருவரையும் மனதுக்குள் திட்டியவாறு தன் வீட்டை நோக்கி விரைந்து ஓடினாள்.

***

“ஏய் அலமேலு! எழுந்திரிடி. வெளக்கு வைக்கற நேரத்துல பொம்பளைப் பிள்ள இப்பிடி தூங்கினா வீடு உருப்படுமா ? எழுந்திரி..”

நல்ல ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அலமேலு வாரிச்சுருட்டி எழுந்து, “என்னம்மா சொன்னே ?” என்றவாறு தன் தாயைப் பார்த்து விழித்தாள்.

“உம் ? சொரக்காய்க்கி உப்பில்லேன்னு. இருட்டிப் போய் எம்புட்டு நேரமாவுது ? இன்னும் வெளக்க கூட கொளுத்தி வைக்காம துணி கலைஞ்சி கெடக்குறது கூட தெரியாம.. மாடு மாதிரி தூங்கிக்கினு ஒரு பொம்பள புள்ளா இருந்த போற எடம் உருப்படுமா புள்ள ? ஏஞ்சி போயி மூஞ்ச கழுவிக்கினு வா. ஓடு.”

கண்களைக் கசக்கியவாறு குடிசைக்கு பின்புறம் போய் முகம், கை, கால் கழுவிக்கொண்டு வந்த அலமேலு, “நீ ஈஸ்வரிய போய் பாத்தியாம்மா ?” என்று கேட்டுக்கொண்டே தன் புத்தகப் பையிலிருந்து சத்துணவு தட்டையெடுத்து தன் தாயிடம் நீட்டினாள். “பசிக்குதுமா.. சாப்பிட ஏதாச்சும் இருக்கா ? காலீல கூட ஒண்ணும் சாப்பிடாமயே போயிட்டேன்.”

“பாத்தேன், வெளியே இருந்து. நம்மள அவுக வூட்டுக்குள்ளாற விடுவாகளாடி ? நீ பாக்கணும்னு வந்தியே உனக்கு என்னா தைரியம் ? நீ வந்த கோலத்த ஐயா மட்டும் பாத்திருந்தார்னா உன் தோலை உரிச்சிரிப்பாரு. ஏய் தோ பாருடி அந்த பொண்ணு நாளா மத்தநாளு ஸ்கூலுக்கு வந்தாலும் நீ போய் சமமா நின்னு பெரிய எடத்து பசங்கக்கிட்ட பேசிக்கினு நிக்காதே. என்ன ? செல்லிட்டேன்.”

“சரி, சரி. நா போய் பேசமாட்டேன். மிக்காவாசி நாள் அவ தான் எங்கிட்ட வந்து ஏய் உன் நோட்புக்க தாடி புத்தகத்த தாடின்னு வந்து பேசுவா. நான்தான் எங்க க்ளாஸ்லயே பர்ஸ்ட்டு. திரியுமில்லே ? பெரிய வூட்டு பசங்க இல்ல.”

“சரி சரி. ரொம்ப பீத்திக்காத. போய் அப்பிடி உக்காரு. சோத்த போட்றேன்.”

திரி விளக்கைக் கொளுத்தி கூரையிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த கம்பி கொக்கியில் பொருத்திவிட்டு குடிசையின் மூலையில் மண் அடுப்பின் மேல் வைத்திருந்த உணவு பாத்திரங்களை எடுத்து அலமேலுவின் கையிலிருந்த தட்டில் பரிமாறினாள் மாரி.

“ஐ! இது ஏதுமா ? ஐயா வூட்லருந்து கொண்டாந்தியா ? சுடு சோறா ? சுடு சோறு சாப்ட்டு எத்தினி நாளாச்சுதுமா, போடு போடு.” ஆவலுடன் கையும் வாயும் கொள்ளாத அளவுக்கு அவசர அவசரமாய் உண்ணும் தன் மகளை பாசத்துடன் பார்த்து சிரித்தாள் மாரி.

“ஆனாலும் உனக்கு இத்தினி வக்கணையான நாக்கு கூடாதுடி. வேற எடத்துல போயி வாழ போற புள்ள. பொம்பள புள்ளக்கி நாக்க அடக்க தெரிஞ்சிக்கணும்.” என்ற தன் தாயை விரோதத்துடன் பார்த்தாள் அலமேலு.

“என்னத்தா நீ! எப்ப பாத்தாலும் இத்தையே சொல்லிக்கினு இருக்கிற. பொட்ட புள்ளன்னா பசிக்கக் கூடாது இல்ல ருசியா இருந்திச்சினா ருசியா இருக்குதுன்னு சொல்லக் கூடாதா ?”

“சொல்லக் கூடாதுடி. அதான் பொட்ட புள்ளயோட லட்சணம், தெரிஞ்சிக்கோ. போற எடத்துல மாமியார்காரின்னு ஒருத்தி இருப்பாள்ள ? எல்லாரும் உங்காத்தா மாதிரியே இருந்துடுவான்னு கணா காணாத. தெரிஞ்சிதா ? சரி, சரி. சாப்டுட்டு தட்டை கழுவி வச்சிட்டு ஏதாச்சும் படிக்கறதுக்கு இருந்தா படி.”

“ஐயோ ஆத்தா. எனக்கு இன்னா வயசாச்சி ஆத்தா. எப்ப பாத்தாலும் கண்ணாலம், கண்ணாலம்னு சொல்றே ?” அலமேலுவின் குரல்லிருந்த சலிப்பை கண்ட மாரி உரக்க சிரித்தாள்.

“ஏய் பொண்ணே. பத்து முடிஞ்சி, பதினொண்ணு ஆவ போவுதேடி. போறாதா ? அஞ்சாம்பு முடிச்சிட்டேன்னா ஆறாவுதுக்கு வெளியூர் போவணும். உங்கப்பாரோ வெளியூர்லருக்காரு. நானும் சோலிய பாக்க பகல் முழுசும் வீட்ல இருக்கறதில்ல. இன்னும் ஒண்ணோ ரெண்டோ மாசத்துல வயசுக்கு வந்திட்டேன்னா உன்ன யாரு வீட்ல வச்சிக்கினு காபந்து பண்றது ? கட்டி வச்சிர வேண்டியது தான். வேற என்னா பண்றது, சொல்லு ?”

கையிலிருந்து சோற்றுக் கவளத்தை தட்டிலேயே போட்டுவிட்டு கால்களை உதைத்துக்கொண்டு கதறி அழலானாள் அலமேலு. “போ ஆத்தா. நா இதுக்கு ஒத்துக்க மாட்டேன். நா எப்பிடியும் படிச்சி பெரிய ஆளாவோணும். கோபால் சார் எனக்கு டவுண் ஸ்கூல்ல சேர்த்து விடறேன்னு சொல்லியிருக்கார். நா படிக்கோணும். கண்ணாலமெல்லாம் வாணாம் ஆத்தா.”

பதறிப்போனாள் மாரி. “ஏய், ஏய்! கடன்காரி! அழுவறத நிறுத்து. அக்கம்பக்கத்துல யாராச்சும் கேட்டா அவ்ளவ்தான். திங்கற சோத்துல மண்ண போட்டுறாத தாயி. ஏள பாளையெல்லாம் பெரியாளாயிட்டா நம்ம கதி என்னாவறதுன்னு நம்மள ஊர்லருந்தே தள்ளி வச்சிருவாங்கடி. தட்டுல வச்சிருக்கறத மருவாதையா தின்னு முடிச்சிட்டு போய் படுத்து தூங்கு. உங்கப்பாரு வர்ற மாசம் வருவாகல்லே, அப்ப பேசிக்கலாம்.”

சாப்பிட்டு முடித்து தட்டை எடுத்துக்கொண்டு குடிசைக்கு பின்புறம் சென்ற தன் மகளின் முழுப்பாவாடை முழங்காலிலேயே நின்றிருப்பதையும் வாலிபத்தின் வணப்பு தன் மகளுக்கு கூடியிருப்பதையும் பார்த்து பெருமூச்செறிந்தாள் மாரி.

மாரிக்கு திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு வந்தபோது பண்ணிரண்டு அல்லது பதிமூன்று வயதே நிரம்பியிருந்தது. அவளைவிடவும் பதினைந்து வயது கூடிய அவளுடைய தாய் மாமனைத்தான் – சின்ன வயசுல உன்ன தூக்கிக்கிட்டு அலைஞ்சவன்தாண்டி உன் புருஷன் என்று அக்கம்பக்கத்தார் திருமணத்தன்று கேலி செய்தது அவளுக்கு இப்போதும் நினைவிருந்தது – கட்டி வைத்தார்கள். ‘காப்பி தண்ணிகூட வைக்கத் தெரியாம என்னத்தடி குப்ப கொட்டப்போறே ? ‘ என்று கணவன் வீட்டுக்கு வந்த முதல் நாளே அவளுடைய கணவனின் தாய் – மாரியின் பாட்டி – தலையில் குட்டியதையும் தன் மகள் வயது பேத்தியென்றும் பாராமல் தன்னன ஒரு வேலைக்காரியைப்போல் அவள் நடத்தியதையும் நினைத்து எத்தனையோ நாள் எல்லோரும் உறங்கியபிறகு குரலெழுப்பாமல் தான் கண்ணீர் விட்டதையும் நினைத்துப் பார்த்தாள் மாரி.

தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார், கணவன் மற்றும் கொழுந்தன்மார் மூன்று பேர் என அவளையும் சேர்த்து பத்து பேருக்கும் சமையல் செய்து பாத்திரங்களையெல்லாம் கழுவி எடுக்கவே நாளெல்லாம் சரியாயிருந்தது. பிறகு எல்லோர் துணிகளையும் ஊருக்கு வெளியே இருந்த ஆற்றில் கொண்டு துவைத்து காயவைத்து.. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு இரவில் ‘ஐயா சாமி கால வலிக்குதே ‘ என்று உட்கார நினைத்தால் ‘உங்காத்தா உனக்கு சோறு கீறு போட்டாளா இல்லையாடி ? இப்பிடி ஒரு சின்ன வேலலய செஞ்சி முடிக்கறதுக்குள்ள இம்புட்டு சோர்ந்து போறே ? ‘ என்ற மாமியாரின் வசவுப் பேச்சு.. இதிலிருந்தெல்லாம் விடிவே கிடையாதா என்று நினைக்கக்கூட நேரமில்லாமல் தாத்தா, பாட்டி, மாமனார் மற்றும் மாமியார் மரிக்கும் வரை செக்கு மாடாய் உழைத்தாள் மாரி. அவளுடைய அனுதின கஷ்டத்தை கடவுள் பார்த்துத்தானோ என்னவோ அடுத்த ஊர் கோவில் திருவிழாவுக்கு போய் திரும்பும் வழியில் வருடம் முழுதும் வற்றிக்கிடந்த ஆற்றில் வந்த புதுவெள்ளம் அவளையும் அவள் கணவனையும் கொழ்ந்தன்மார்களையும் தவிர எல்லோரையும் ஒரு சேர கொண்டு போனது.

அந்த சம்பவத்துக்கு பிறகுதான் தன் கணவனோடு தாம்பத்தியம் நடத்த அவளுக்கு வாய்ப்பு கிடைத்தது. வடிவேலு பிறந்தான். ஐந்து வருடம் கழித்து பிறந்தவள்தான் அலமேலு. கொழுந்தன்மார்கள் ஒருவர் ஒருவராய் திருமணம் முடிந்து போய் தனித்தனியே சென்ற பிறகுதான் இந்த ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தனர். இதோ அதோ என பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன.

வடிவேலுவுக்கு ஆரம்ப முதலே படிப்பில் நாட்டம் இல்லை. கிராமத்தில் அப்போதுதான் துவக்கப்பட்ட ஆரம்ப பள்ளியில் மூன்றாம் வகுப்பை வெற்றியுடன் அதுவும் மூன்று வருடங்கள் கழித்து! தாண்டவே வெகு சிரமப்பட்டான். ‘போதும்டா நீ படிச்சி கிழிச்ச லச்சணம். எங்கூட விவசாய தொழிலுக்கு வந்தியானா வூட்டுக்காவது பிரோசனப்படும் ‘ என்று காத்தையன் தன் மகனுடைய படிப்பை முடிவுக்குக் கொண்டுவந்தான். விவசாயம் பொய்த்துபோய் வேலையில்லாமல் ஒருவேளைச் சோற்றுக்கே திண்டாட ஆரம்பித்தபோதுதான் டவுணிலிருந்து வந்த மேஸ்திரி ஒருவர் காத்தையனை கட்டுமான வேலைக்கு கூட்டிக்கொண்டு போனார். ஐந்தாறு மாதம் கழித்து வடிவேலுவும் அதே தொழிலுக்கு போக ஆரம்பித்ததிலிருந்து மாரியும் அலமேலுவும் ஒருவேளை உணவாவது நிம்மதியாக சாப்பிட முடிந்தது. மாரியும் வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் மற்றும் அவருடைய காய்கறி தோட்டத்தில் வேலை செய்யலானாள்.

மூவர் வருமானத்திலுமிருந்து சிறுகச் சிறுக சேமித்த பணத்தில் ஒரு சிறிய நிலத்தை வாங்கி ஒரு குடிசையும் போட்டு இதோ இரண்டு வருஷங்கள் ஓடிவிட்டன. மாதம் ஒருமுறை வந்து போகும் தன் கணவனையும் மகனையும் அவர்கள் இல்லாத நாட்களில் நினைத்துக்கொள்வாள். ‘அலமேலுவை வயசுக்கு வந்தவுடன் கட்டிக்கொடுத்துட்டா நீயும் எங்களோடே வந்துடலாம் மாரி. இனி நமக்கு இந்த ஊர்ல என்னாயிருக்குது ? இந்த எடத்த வித்துட்டு வர்ற துட்டுல அலமேலு கண்ணால சிலவு போக மீதியிருக்கற துட்டுல ஏதாச்சும் டவுண்ல வியாபாரம் பண்ணா நாலு காசு பாக்கலாம். வடிவேலு எத்தினி நாளைக்கு இந்த தொளில நம்பியிருப்பான் ? இந்த தொளில நம்பி யாரு அவனுக்கு பொண்ணு குடுப்பான் இந்த காலத்துல ? ‘ என்று தன் கணவன் கடந்த மாதம் வந்தபோது கூறியதை நினைத்துப் பார்த்தாள்.

***

“ஏய் அலமு! என்னா, நா இல்லாத நேரத்துல நல்லா துண்ணு ஒரு சுத்து பெருத்து போயிட்டே ?” வடிவேலு ஊரிலிருந்து வந்து இறங்கியவுடன் தன் தங்கையைப் பாத்து கேட்டான்.

“பாருப்பா அண்ணா கேலி பண்றத. நா குண்டாவாப்பா இருக்கேன் ?”

காத்தையன் ஊரிலிருந்து கொண்டு வந்த துணிமூட்டையைப் பிரித்து டவுணில் தன் மகளுக்கென்று வாங்கிய புது சட்டை, பாவடையை எடுத்து குடுக்க அலமேலு தன் மேல் வைத்து அழகு பார்த்தாள். “எனக்காப்பா ? பண்டிகை எதாச்சும் வருதாம்மா ? இப்ப என்னாத்துக்கு புதுச்சட்டை வாங்கியாந்துருக்குது அப்பா ?”

கண்களில் கேள்விக்குறியுடன் தன்னைப்பார்த்த மாரியைப் பார்த்து அர்த்தத்துடன் புன்னகைத்தான் காத்தையன். “சொல்றேன். ஒரு நல்ல விஷயம்தான். ஏய் வடிவு அலமேலுவைக் கூட்டிக்கினு ஆத்தங்கரை படித்துறைக்கு போய் நாம கொண்டாந்த துணிமணியெல்லாம் நல்லா அழுக்கு போவ துவச்சி எடுத்துக்கிட்டு வா. நா அம்மாண்ட ஒரு விஷயம் பேசணும்.”

வடிவேலுவுக்கு புரிந்தது. ரெண்டு நா முன்னால டவுண்ல தரகர் மாமா சொன்ன விஷயமாத்தான் இருக்கும். “ஏய் அலமு, உன் துணியும் ஏதாச்சும் இருந்தா கொண்டா. போற வளியில சினிமா கத பேசிக்கினே போலாம். டவுண்ல முந்தா நேத்து தான் போட்டான். ஐயா முத நாளே பாத்துட்டேன் திரியமா ? அம்மா வரேம்மா.”

வடிவேலு அழுக்கு துணிகளை மூட்டையாய் எடுத்துக்கொள்ள அலமேலு இடுப்பில் பிளாஸ்டிக் குடத்துடன் பேசிக்கொண்டே நடந்து போவதைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த காத்தையன் அவர்கள் சென்று மறைந்ததும் தன் அருகில் நின்றுகொண்டிருந்த மாரியை பார்த்தான்.

“இங்கே உக்காரு.”

“என்னா சொல்லு ? வேலைய முடிச்சிட்டு நா பிரசிடண்ட் வூட்டுக்கு போவோணும்.”

“அவசரப்படாத. ஒரு முக்கியமான விஷயம்.”

“என்னாது சொல்லேன்.”

“ரெண்டு நா முன்னால டவுண்ல நா தங்கிருக்கற வூட்டுக்கு பக்கத்துலருக்கற தரகர் ஒருத்தரு ஒரு விசயம் சொன்னாரு புள்ள.”

“தரகர்னா ? நிலம் சமாச்சாரமாவா ?”

“அதுவும் அவுரு பாப்பாரு போலருக்குது. ஆனா இது நம்ம அலுமேலு விசயமா ? ‘

“என்னாது அலமேலு விசயமா ? நீ என்னா சொல்றே ? கொஞ்சம் பிரியும்படியா சொல்லேன்.”

“அதாண்டி. கண்ணாலம் விசயமா. அவுருக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் மரத்தொழில் பண்றானாம். முப்பது வயசு ஆவுதாம். ஒரு கால் மட்டும் தான் லேசா ஊணம். ஒரு வயசான கிழவியும் – அந்த பையனோட பாட்டியாம், அம்மா, அப்பா சின்ன வயசுலயே செத்துட்டாங்களாம் – அந்த பையன் மட்டும்தான். ரெண்டு பேருக்கு வேணுங்கற வருமானம் இருக்குதாம். பெரிசா ஒண்ணும் செய்ய வாணாமாம். இஸ்டம்னா பேசி முடிச்சிரலாம்னார். அதான்.. உங்கிட்ட கேட்டுட்டு சொல்றேனிட்டேன். நாளைக்கி ஊருக்கு போனதும் சொல்லோணும். நீ என்னா சொல்றே ?”

“கண்ணாலமா, நம்ம அலமுவுக்கா ? என்னா சொல்றே நீ ? அது இன்னும் வயசுக்கே வரல ? அதும் முப்பது வயசு ஆம்பளையோட. கால் வேற ஊணம்ங்கிற. அதெல்லாம் வாணாம்.”

“ஏய் உனக்கென்ன பைத்தியமா ? உனக்கு கண்ணாலம் பண்றப்போ உனக்கென்னா வயசாச்சி ? நாமள்ளாம் சந்தோசமா புள்ள பெத்துக்கலையா ? இத்தினி வருசத்துல உனக்கு என்னத்துல கொறைய வச்சுப்பிட்டேன் ? கால் ஊணம்னா, நொண்டியா, முடமா ? சும்மா ஒரு கால் கட்டையா இருக்குதாம். லேசா விந்தி விந்தி நடப்பாராம். தச்சு வேலைல நல்லா வரும்படி வரும் புள்ள!”

மாரி அவனைத் திரும்பி விரோதமாக பார்த்தாள். “இங்க பாருய்யா. நம்ம காலம் வேற இப்பருக்கற காலம் வேற. புள்ள மொதல்ல வயசுக்கு வரட்டும். அது வேற அஞ்சாம்பு முடிச்சிட்டு டவுண்லருக்கற ஸ்கூல்ல படிக்க போறேங்குது. நீ வேற இந்த நேரத்துல கண்ணாலம், கருமாதிங்கற.”

காத்தையன் கோபத்துடன் அவளை அடிக்க கை ஓங்கினான். “என்னா புள்ள நல்ல காரியம் சொல்ற சமயத்துல கருமாதி கிருமாதிங்கற ? போட்டனா அப்பிடியே.”

கையை நீட்டி காத்தையனின் ஓங்கிய கையைப் பிடித்த மாரி கண்களில் வெறுப்புடன் அவனைப் பார்த்தாள். “இங்க பாருய்யா. அடிக்கற வேலைல்லாம் இங்க வச்சுக்காத. என் உசுறு இருக்கற வரைக்கும் இந்த கண்ணாலம் நடக்காது. சொல்லிப்புட்டன். ஒரு மாசம் களிச்சு வந்துருக்கற ஆம்புள புள்ளக்கி வாய்க்கு ருசியா பண்ணி போடோணும். அத கெடுத்துராத. இந்த விஷயத்த இத்தோட வுட்டுரு. புள்ள இன்னம் ரெண்டு வருஷம் படிச்சி முடிக்கட்டும். அப்புறம் பாக்கலாம். இத்தான் என் முடிவு. நா மீன் கடைக்கு போய் ஏதாச்சும் வாங்கியாரேன். நீ குளிச்சிப்புட்டு ஒரு தூக்கம் போடு, போ.”

தன் பதிலுக்கு காத்திராமல் எழுந்து நிலைப்படியில் மாட்டிவிடப்பட்டிருந்த கூடையை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் ஆத்தோர மீன் சந்தையை நோக்கி செல்லும் மாரியைப் பார்த்து ‘இவளுக்கு எங்கிருந்து இம்புட்டு தகிரியம் வந்தது ‘ என்று வியந்துபோய் அமர்ந்திருந்தான் காத்தையன்.

‘அலமு சொன்னதுதான் சரி. புள்ள படிக்கோணும். பால் மணம் மாறாத வயசுல கண்ணாலம் கட்டிக்கிட்டு நா அவஸ்தைப் பட்டாப்பில எம்புள்ளங்களும் கஸ்ட்டப் படக்கூடாது.. ‘ தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டே சந்தையை நோக்கி நடந்தாள் மாரி.

****

அடுத்த நாள் காலை.

“அடப்பாவி மனுஷா! என்ன காரியம் செஞ்சிப்புட்டே ? நா அத்தினி வாட்டி சொல்லியும் கேக்காம பச்ச புள்ளய குண்டு கட்டா தூக்கிக்கினு போயிட்டியே! இப்ப நா எங்கேன்னு போய் தேடுவேன்.” வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழும் மாரியைச் சுற்றி ஒரு கூட்டமே கூடி நின்று வேடிக்கைப் பார்த்தது.

—-

tbrjoseph@csb.co.in

Series Navigation

ஜோசப்

ஜோசப்