எஸ். ஷங்கரநாராயணன்
/1/
குடித்திருந்தான், வழக்கம்போல.
குடி பல விநோதமான உள்க் கிளர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. உள்ளிறுக்கத் தளர்ச்சிகளை குடி தருகிறது. குடித்தாலே மாப்ளைக்கு தனிகெத்துதான். அந்தஸ்துதான்!
படகுச் சவாரி தரைமீதே! ஒரு ஜோக் அவன் ஞாபகத்தில் வந்தது. குடிக்கும்போது குபீர் குபீரென்று அநேக விஷயங்கள் மேல்த்தளத்தில் வரும். சில யோசனைகள் கீழ்ி-அமுங்கிக் கொள்ளும் தன்னைப்போல. ஞாபகம் இருக்க வேண்டியது டாடா காட்டி விடும். எப்போதோ மறந்து போனது ஞாபகம் வரும்.
அது மறந்து போனதே ஞாபகத்தில் இராது. ஞாபகப் பாம்பு வழவழவென்று உள்நழுவிக் காணாமல் போய்விடும்.
எதையோ நினைத்துக் கொண்டிருந்தமடா, என்று கயிற்றைத் தளரவிட்ட பதட்டத்துடன் தேடினால் ஆப்டாது. சில வண்டிமாடுகள் வண்டியை அவிழ்க்கும்போது, மாட்டை முதலில் கட்டாமல் வண்டியைக் கீழே வைக்கிறபோது ரஸ்தாவில் விறுவிறுவென்று ராஜநடை எடுத்து விடும். அதைப் பிடித்துக் கட்டுமுன் ஒம்பாடு எம்பாடு ஆய்ப்போவும். அதைப்போல.
எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் ? ஆ, அவனாவது மறக்கிறதாவது. யார் அவன். சிங்கராஜ். ராஜா அல்லவா அவன். அவனுக்கு ஒரு மாபெரும் சந்தேகம் வந்தது. எதிரில் நடந்து வருகிறவனை நிறுத்தி நெஞ்சை நிமிர்த்தி மார்தட்டி, ‘டாய், நான் யார் ? ‘ என்று கேட்டான்.
‘பொறம்போக்கு நாய்… ‘ அவன் கடந்துபோனதைப் பார்த்து ஒருகணம் திகைத்தான்.
‘அஹ்க்… ‘ என்று அனுபவித்துச் சிரித்தான். நீதான், கேள்விக்கு பதில்தெரியாத நீதான் பொறம்போக்கு. படித்துறைத் தண்ணீர் போல அவன் நெஞ்சில் சளப் சளப் சொகமாய் இருந்தது.
தானறியாமல் தெருவின் அந்தப் பக்கத்துக்கு வந்திருந்தான். தெரு இருட்டிக் கிடந்தது. தெருவில் மனுஷாள் நடமாட்டம் இல்லை. நான் நடமாடுகிறேனே. நடனமாடுகிறேனே. நான் ஆளில்லையா. அட நான் மனுசனில்லையா… அக்ஹ்!
குடி வேண்டித்தான் இருக்கிறது. தினசரி அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அலுவலகமே பிடிக்கவில்லை. யாரும் அவனுக்கு யோசனை சொல்வது, அவனைத் தட்டிக் கேட்பது பிடிக்கவில்லை.
வரவர எதுவுமே பிடிக்காமல் போய்விட்டது. எதிலும் ஒரு சலிப்பு. ஓர் அலுப்பு. நித்தியப்படி நியதிகள், அதன் கண்ணிகளில் மாட்டிக் கொள்ள வெறுப்பாய் இருந்தது. நியதிகளுக்கு அடிபணிய மறுத்தது மனம். நான் சுதந்திரப் பறவை. பறவையா. நானா. அப்போ சிறகுகள் ? ஆ, அதுதான் விஷயம். குடிக்கும்போது திடாரென்று மனசுக்குச் சிறகுகள் முளைக்கின்றன. பட்டம்போல அப்போது மனம் படபடத்துப் பறக்கிற பரவசம். மிதக்கிற உல்லாசம். டப்பாலங்கடி கிரிகிரிகிரி. என்னா புலவன் இப்டி எளுதிப்பிட்டான். குடிச்சிப்பிட்டு எளுதிப்பிட்டானா!
குடி மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது. வயிற்றில் யாரோ பம்பரம் விடறாங்க டோய்! கோழி இறகால் காது குடைகிறாப்போல. மாப்ள… என அவன் உடம்பெங்கும் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.
அப்டித்தான் இருக்கணுங்கிறதும் இல்லை. சின்னாட்களில் குடி எத்தனை துயரத்தைக் கொண்டுவந்து விடுகிறது. தெருவில் போகும் சைக்கிளில் இருந்து சத்தம். படார். யார் வண்டிடான்னு பாத்தா, நம்ம இதுதான். ட்யூப் வெடித்து மனசில் பஞ்ச்சர். உள்ளே கலவரங்கள். அப்போது உலகே சோககோளமாகி விடும். வண்டியை பாகம் பாகமாகப் பிரித்து கழற்றிப் போட்டாப்போல ஆகிவிடும். காயலான் கடைபோல ஆகிவிடும். உள்ளம் சாக்கடைபொங்கி சூழலே நாறி நாராசமாகிப் போகும்.
வெளியேயும் இருட்டு. உள்ளேயும் இருட்டு. நடக்க ஏலாது. முன்னே கால் எடுத்து வைக்கவே கூசும். துழாவி துழாவிப் போகவேண்டும். வண்டில கீர்-பிரேக் போடுகிறாப்போல.
இன்றைக்கு நிலைமை கொஞ்சம் எச்சக்கச்ச, எக்கச்சக்கமாகி விட்டது. போதை சற்று அதிகம்தான். சாமந்தி இறந்த நாள்.
சாமந்தி நல்ல அழகு. பேரே அழகு. அவனை மாப்ளை கேட்டு துப்பு வந்தது. பெண்டாட்டி பேர் சாமந்தி. பேரைக் கேட்டதுமே அவனுக்குப் பிடிச்சிப் போச்சு. உள்ளே வாசனை பரத்தியது பெயர்! இனிம அவ பேர் சாமந்தி சிங்கராஜ்! வாய்க்கு வெளியே தெறித்து விட்டது சிரிப்பு. குச்சி ஐஸ் சாப்பிடறாப்போல எச்சிலை உள்ளிழுத்துக்கிட்டே சுத்து முத்தும் பார்த்தான். இவனை யார் கவனிச்சா. அவனவனுக்கு ஆயிரஞ் சோலி. ஒவ்வொருத்தனையும் நிறுத்தி ‘உனக்குக் கல்யாணம் ஆயிட்டுதா ? ‘ன்னு கேட்கலாமாய் இருந்தது.
கல்யாணம்லா சும்மா ஆயிருமாடா வெண்ணே. அததுக்கு ஒரு யோக்யதாம்சம் வேணும்ல. நான் சாதா ஆளா. கவர்மெண்டு ஆபிசுல பியூன். ஆபீசர்மார்லாம் அங்க டம்மி. அவங்க வருமானமும் கம்மி. அங்க பியூனுங்க வெச்சதுதான் சட்டம். வருமானமும் சாஸ்தி. பல கிளார்க்குகளுக்கு பியூன்களே வட்டிக்குக் கடன் கொடுத்து வாங்கி சமூகசேவை செய்கிறார்கள். என்னா பெரிய ஆபீசர் ? வெள்ளையுஞ் சொள்ளையுமா போட்ட்டு வந்தா ஆச்சா. ஒரு கிறுக்கல் கிறுக்க காலேஜ் படிப்பு வேற. கிறுக்குப் பயல்கள். அவங்க ஆபிசர் கையெழுத்தை அவனே போடுவான்!
சிரிப்பு வரவில்லை. மனம் கனத்துக் கிடந்தது. சாமந்தி.
உள்ளே பிள்ளையுடன் பிரசவத்துக்குப் போனவள். ஊர் போய்ச் சேரவேயில்லை. அவள் போன பஸ் விபத்துக்குள்ளாகி ஸ்பாட்லயே ஆள் அவ்ட். காலையில் தினத்தந்தி பார்த்தால் செய்தி. படம் வேறு. விபத்து நடந்த இடம் இதுதான்… என்று அம்புக்குறி. செய்தி சுவாரஸ்யமாய் இருந்தது.
வீட்டுக்கு போலீஸ் வந்தது. மாப்ளைக்கு டர்ர்ராயிட்டது. எந்தப் பொறம்போக்கு நாயாவது அவன் லஞ்சம் வாங்கினதுக்குக் காட்டி வுட்ட்டானா ? ‘வாங்க சார்! ‘ என்று அசட்டுச் சிரிப்புடன் சலாம் வைத்தான்.
முள்ளை முள்ளால் எடுக்கணும். லஞ்சத்தை லஞ்சத்தாலே மறைக்கணும்.
‘ஐயோ ‘ என்றான் சாமந்தியின் புடவை பார்த்து.
பேப்பர்க்காரர்கள் வந்து சாமந்தியின் படம் கேட்டார்கள். தனிப்படம், அவனுடன் கல்யாணப் படம் என்று விதவிதமாய்க் கொடுத்தான். கல்யாணப் படத்தில் அவன் மூஞ்சி அத்தனை எடுப்பாய் இல்லை. காரணம் அவன் முன்பல்லே கொஞ்சம் எடுப்பு. அவனைக் கத்தரித்துவிட்டு வெளியிட்டார்கள்.
கொடியில் சாமந்தியின் புடவை. உள்ளாடைகள். கண்ணாடியில் ஸ்டிக்கர் பொட்டு. ஹேர்ப்பின். பெண்ணுக்கே உரிய சமாச்சாரங்கள். ஆ சீப்பில் கூட அவள் தலைமுடி!…. எல்லாம் கையில் எடுத்துப் பார்த்துப் பார்த்து அழுதான். சினிமாக்களில் அப்படித்தான் அழுகிறார்கள். சுவரில் சிரித்தபடி சாமந்தி படம். இன்னுமாய் அழுகை.
ரெண்டு வருசம் ஆகிவிட்டது. வேற கல்யாணம் முடிக்கவேயில்லை. அதற்கே அழுகை வந்தது. சாடையாய் யாரிடமாவது பேசினால், அவன் முதுகுப்பக்கம், இந்தத் …க்கு மொதக் கல்யாணமே அதிகம்டா, என்று கேலியடிக்கிறார்கள். பொறாமைச் சன்மங்கள்.
சாமந்தி இறந்த நாள்.
காலை துாங்கி முழிச்சதில் இருந்தே ஒரு எண்ணம். அட, இன்னிலேர்ந்து குடியை நிறுத்திட்டா என்ன. சாமந்தி இறந்த நாளன்று ஒரு காரியம் நல்லகாரியம் செய்வம்! சூப்பர்.
குடியை நிறுத்துவது சுலபம். அவனே பலமுறை நிறுத்தி யிருக்கிறான்.
ஆமாமாம். நிறுத்திறலாம். கண்டிப்பா. இப்பவே. ஓகே ஓகே! நான் தயார். நெஞ்சைத் தட்டிச் சொல்லிக் கொண்டான். எத்தனை மகத்தான் நாள் இது. இன்றுமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம். குடி நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு. அதனால்தான் மதுக்கடைகளை அரசாங்கமே நடத்துகிறது.
உள்ளே மகிழ்ச்சிப் பரபரப்பு. சாமந்தி மேல் சத்த்த்தியம். இன்னிக்கு என்னடா இன்னிக்கு நான் இனி குடிக்கவே மாட்டவே மாட்டேன். போடு தம்பி சபாசு.
குடி உயிருக்கு வீட்டுக்கு நாட்டுக்குக் கேடு. ஆகவே அவன்… அதை… விட்டுறப் போறான். சமூக சேவை ரெண்டு!
அவனது முதல் சமூக சேவை முன் சொல்லியிருக்கிறது.
அலுவலகம் முடிந்து வெளியே வந்தான். தெரு பரபரப்பாய் இருந்தது. அலுவலகம் ஆரம்பிக்கும் போது வெற்றிலைப் பாக்கு சிகெரெட் தாம்பூலம்… எல்லாம் முடித்து மெதுவாய் வருகிற ஜனங்கள் யாவரும் சரியாய் அஞ்சடிக்க வீட்டுக்கு சுறுசுறுப்பாகி விடுகிறார்கள். அவனைத் தவிர.
அவனை வரவேற்க வீட்டில் யார் இருக்கிறார்கள். குப்பை சேர்ந்தால் அதைப் பெருக்கி வெளித்தள்ளக் கூட வீட்டில் ஆள் இல்லை. நுழைகையில் தானே தன்னையே குப்பையாய் உணர்வான்.
காத்திருந்தான். அவன் பஸ்ஸைத் தவிர இதர பஸ்கள் வந்தாப்போல இருந்தது. என்னாங்கடா இது… என எரிச்சலின் முதல் துளி அவனில் விழுந்தது.
சரி நடப்போம். நடையா ? வீட்டு வரையிலா ? ? ?
வேணாம்டா. நீ இப்பிடித்தான் நடந்தா தன்னைப் போல சாராயக்கடைக்குப் போயிருவே.
ஆ அதெல்லாம் வேறாள்கிட்ட. நான் வண்ணாரப் பேட்டை சிங்கராஜ். மன உறுதி மிக்க சிங்கராஜ்.
மெல்ல நடக்க ஆரம்பித்தான். ஆமாம். வீட்டை நோக்கித்தான்.
அவனைப் பார்த்ததும் பழக்கமான ஒரு நாய் ஓடி வந்தது. வழக்கமாய் சாராயக்கடை வரை அது கூட வரும். கடை வாசலில் உள்ள பெட்டிக்கடையில் பிஸ்கெட் வாங்கிப் போடுவான். ‘டைகர்! ‘ என உருகிப் பெருகினான் அவன். அவனிடமும் பிரியம் செலுத்தும் ஒரு ஜீவன். நாய்கள் நன்றியுள்ளவை.
‘டைகர் நான் முடிவு செய்துட்டேன். இனி நான் குடிக்கப் போவதில்லை. ‘
யாரைக் கேட்டு இப்படியொரு முடிவெடுத்தாய், என்கிறாப் போல அது நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தது. மனைவி இறந்த நாளன்றுகூட குடிக்காதவன் மனுசனா ?
இல்லை. இது என் இறுதி முடிவு டைகர்.
நாய் அவனுடன் ஓடி வந்தது. நாய்கள்தான் எத்தனை அறிவுள்ளவை. யாரையாவது நாயே என்று திட்டினால் அவன் அறிவுள்ளவன் என்று அர்த்தம்.
தெருவில் வரும் யாரையோ இடித்து விட்டான். ‘நாயே பாத்துப் போடா ‘ என்றபடி அவர் தாண்டிப் போனார்.
சாராயக்கடைத் தெருவின் பக்கம் வந்ததும் கா ல் க ள் தாமே நின்றன. ஒரு கணம் திகைப்பாய் இருந்தது. அறிவுள்ள நாய். அது இவனுக்கு முன் சாராயச் சந்தில் திரும்பி அவனுக்காகக் காத்திருந்தது.
அந்தத் தெரு வழியே போனால்தான் என்ன ? அவன் மனசு மாறி விடுவானாக்கும் ? ாாவம் நல்ல நாய். ஜஸ்ட் வாசல். வாசல்க் கடைவரை போவது. கடையில் நாய்க்கு பிஸ்கெட் வாங்கிப் போடுவது. அவனை நம்பிக் காத்திருக்கிறது அது. நம்பிக்கை துரோகம் மகா பாவம். அதைப் பற்றிப் பெரியவர்கள் பழமொழி மாதிரி எதாவது சொல்லி வைத்திருப்பார்கள். ஆமாம். நாய். பிஸ்கெட். அத்தோடு நேரா வீடு! ரைட்!
எதிரே ஒருவன் வேட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு தள்ளாடி வந்தான்.
டைகர் சட்டென்று அவனைப் பார்க்க ஓடியது. அவன் கையில் வடை. ஆ கட்சி மாறி விட்டது. ஒரே விநாடியில்!… துரோகி. துாத்தெறி.
எனக்கு யாருமே இல்லை. இந்த உலகத்தில் ஒரு கேடுகெட்ட தெருநாய் என்னைப் புறக்கணிக்கிறது. என்ன உலகமடா ?
நாய் அந்தக் குடிகாரன் முன் நின்று வாலை ஆட்டியது.
அதைப் பார்க்கவே அவனுக்கு விக்கலாய் அழுகை. உலகம் வடையில் இருக்கிறது. ஆ… இப்போது தானறியாமல் இடப்பக்கம் வந்திருந்தான்.
சாராயக்கடைப் பக்கம்.
அதனாலென்ன. இந்த வழியா மனுச மக்கள் போகல்லியா. போற ஆள் எல்லாவனும் குடிக்கிறார்களா ?
திடாரென அவன் காலோடு ஓர் உரசல். டைகர்.
அதானே… என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா. கண்ணே முடியுமா… அதற்கு வடையில் பங்கு கிடைத்ததா தெரியவில்லை. காக்கா நரி கதை போல, மாப்ள ஜோரா கைதட்டு என்று குடிகாரனை அது முயற்சி பண்ணிப் பார்த்திருக்கலாம்.
அவன் சட்டென்று நின்றான். மாப்ள இது டேன்ஜர் ஸோன். இதுக்குமேல் போக வேணாம். திரும்பி விடு – என்றது உட்குரல்.
நாய் ஓரடி முன்னால் போய்நின்று அவனைத் திரும்பிப் பார்த்தது.
நாயா ? மனசா ?
அட போ. தைரியமாப் போ ராசா. கடை. பிஸ்கெட். அவ்வளவுதான். திரும்பி விடு.
மனைவி தழுவித் தாங்க ஒருத்தன் சாராயக் கடையில் இருந்து வெளியே வந்தான். பாத்து ராசா… என அவனைக் கொஞ்சியபடி அழைத்து வந்தாள் அந்தப் பெரிய பொட்டுக்காரி.
எனக்கு யாரும் இல்லை. யாருமே இல்லை.
நாய் ஏமாந்தது.
சட்டென்று சாராயக் கடைக்குள் நுழைந்தான் வண்ணாரப் பேட்டை சிங்கராஜ்.
—
தொ ட ரு ம்
நன்றி – க ல் கி வார இதழ்
storysankar@rediffmail.co
- பெரியபுராணம்- 38
- விஸ்வாமித்ராவுக்குப் பதில்
- சுகுமாரனின் ‘ திசைகளும் தடங்களும் ‘ – வெளிச்சம் தரும் விளக்குகள்
- நடைமுறை வாழ்க்கை எழுப்பும் சிந்தனை அலைகள் – ( தீராத பசிகொண்ட விலங்கு- வாசிப்பனுபவம்)
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-8
- பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி
- பூரணம் எய்திய இந்தியாவின் முதல் பூதக் கனநீர் அணுமின் நிலையம் (540 MWe)
- ருசி
- எவர் மீட்பார் ?
- கீதாஞ்சலி (20) – என் பணி இந்த உலகுக்கு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- நிழல்களைத் தேடி..
- முந்தைய சூழல் ஒன்றுக்காய்
- மாமா ஞாபகங்களுக்காக
- பின் சீட்
- புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- எண்ணச் சிதறல்கள் – காஷ்மீர்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2
- மதச்சார்பின்மை என்ற அறிவியல் தன்மையற்ற அறிவியல்
- வெறும் பூக்களுடன் சில ராஜகுமாரர்கள்
- அவளும் பெண்தானே
- மழுங்கடிக்கப்பட்ட விதைகள்
- ஆத்மா
- குழந்தைத் திருமணம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தின் தழுவல் (முதல் காட்சியின் தொடர்ச்சி -2)
- புதிய தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன்