அறிவியல் கதை – (விண்வெளியில்) சமைப்பது எப்படி ? (மூலம் : எலன் க்ளேஜஸ்)

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

தமிழில் : ராமன் ராஜா


அந்த விண்வெளிக் கப்பலில் ஆனந்த ராவ் பயணிப்பதாகவே இல்லை. அவன் பவிசுக்கு சந்திரன், செவ்வாய் என்று உள்ளூர் ட்ரிப்புகளில்தான் சமையல் வேலைக்கு அனுப்புவார்கள். இது சூரியக் குடும்பத்திற்கு வெளியே போய் வரும் பிரம்மாண்ட சொகுசுக் கப்பல். உல்லாசப் பயணிகள் அனைவரும் லட்சக் கணக்கில் தந்து டிக்கெட் வாங்கியிருக்கும் பெரிய தலைகள். ஸி/1973 வால் நட்சத்திரத்தைக் கைக்கெட்டும் தூரத்தில் போய் தரிசித்துவிட்டு வருவதாக ஏற்பாடு.

ஆனால் கடைசி நேரத்தில் நிர்வாகத்துடன் தலைமை சமையற்காரருக்குத் தகறாறு ஏற்பட்டுவிட்டது. சம்பள விஷயத்தில் கருத்து வேறுபாடாக ஆரம்பித்துக் கைகலப்பாகி, கெட்ட வார்த்தைகளும் கெட்ட முட்டைகளும் பறக்க, ஆனந்த ராவுக்கு அவசரமாக வாய்ப்பு வந்தது. பெண்டாட்டியை முத்தமிடக்கூட நேரமில்லாமல், இரண்டு சைஸ் பெரிதான விண்வெளி உடையை தொளதொள என்று அணிந்து கொண்டு அசட்டுச் சிரிப்புடன் கப்பலேறினான்.

ஆனந்த ராவ் பார்ப்பதற்குத்தான் ரப்பர் செருப்பும் பட்டன் மாற்றிப் போட்ட சட்டையுமாக சற்றே பேக்கு மாதிரி இருப்பானே தவிர, வேலையில் நளன்! காலக்ஸியிலுள்ள அத்தனை உலகங்களின் உணவுப் பதார்த்தங்களும் அத்துபடி. அவன் கைவண்ணத்தில் மயங்கிய பெண்மணிகள் கிச்சனுக்கே வந்து சமையல் குறிப்புகள் கேட்டுச் செல்வார்கள்.

ஒரு மகா குண்டு பஞ்சாபி அம்மாளுக்கு மூல்கட்டானி சூப் செய்யும் விதம் பற்றி ஆனந்த ராவ் விளக்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் விண்கலம் தாக்கப் பட்டது.

‘இங்கே பாருங்கள் மேடம். விண்வெளியில் எடையே கிடையாததால் திரவங்களை ஜாக்கிரதையாகக் கையாளவேண்டும். இப்படி கண்ணாடிக் குடுவைக்குள் பிடித்து மூடியை கெட்டியாகத் திருகி வைக்க வேண்டும். கொஞ்சம் ஏமாந்தால் பாத்திரத்தை விட்டு உருண்டையாக எழும்பி மிதந்து மூக்கு வாயெல்லாம் மூல்கட்டானி! ‘

உப்பு போடுவதற்காக ஜாடியைக் கையில் எடுத்த போது விண்கலம் பயங்கரமாக அதிர்ந்தது. என்னடா இது என்று யோசிப்பதற்குள் ஒரு பக்கக் கதவையே பெயர்த்து எறிந்துவிட்டு திமுதிமு என்று நுழைந்துவிட்டார்கள் விண் கொள்ளையர்கள். ஒவ்வொருத்தனும் எட்டடி உயரம் இருப்பான். கரும் பச்சை உடம்பு, மூன்று கண், முதலை மாதிரி குட்டையாக ஒரு வால். குதிரை நெபுலாவிலிருந்து வந்தவர்களாக இருக்கும். காவலாளிகளை சுலபமாக சமாளித்துவிட்டு நம் பயணிகள் எல்லாரையும் வரிசையாக நிறுத்தி பரேடு விட்டார்கள்.

இருப்பதற்குள்ளேயே கொழுகொழுவென்று ஆரோக்கியமாக இருந்த இருபது பேரைப் பிடித்துத் தங்கள் கப்பலுக்குக் கொண்டு போனார்கள். மறுத்தவர்களை ஏதோ எலக்ட்ரிக் குச்சியால் வருடிக் கொடுத்ததில் அவர்கள் அலறிக்கொண்டு போகவேண்டியதாயிற்று. ஆனந்த ராவும் அதில் ஒருவன்.

கொள்ளையர்களின் விண்கலம் பெரிதாக இருந்தது. செயற்கைப் புவியீர்ப்பு அமைக்கப்பட்டு நேராக நடக்க முடிந்தது. எல்லாரையும் வெள்ளைக் கல் பதித்த வெளிச்சம் நிறைந்த ஒரு சமையல் அறைக்குக் கொண்டு விட்டார்கள். அங்கே ஒரு புறத்தில் பெரிய கறுப்பு அண்டா கொதித்துக் கொண்டிருந்தது. சூடு படுத்த மாக்னெட்ரான் வளையங்களும் தர்மா மீட்டர்களும் அழுத்த மானிகளும் பதித்த ஹை டெக் அண்டா. அதில் ஒரு முறை சமைத்துப் பார்க்க ஆனந்த ராவ் மிக விரும்பினான்.

கைதிகளை சுவரோரமாக ஒற்றை வரிசையில் நிறுத்தினார்கள். முதலில் ஒரு பிரபல அரசியல்வாதி. அடுத்தது ஷேர் மார்க்கெட்டில் புகுந்து விளையாடும் ஒரு கரடியார். வரிசையின் கடைசியில் ஆனந்த ராவ்.

சற்று நேரத்தில் உயரமான தொப்பி வைத்துக் கொண்டு ஒரு முதலையன் வந்தான். அரசியல்வாதியை ஒற்றைக் கையால் பற்றி இரண்டடி உயரம் தூக்கினான். அண்டாவிலிருந்து நீண்ட ஹோஸ் பைப் ஒன்றை உருவி அதன் பளபளப்பான முனையை அவர் தலையில் நச்சென்று செருகினான். தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டது; ஒரு விர்ஸ்ஸ்ஸ்ஸ் கேட்டது; பைப்பின் மறு முனை வழியே சாம்பல் நிற சங்கதி ஒன்று சொட்டுச் சொட்டாக அண்டாவுக்குள் வடிந்தது. அரசியல்வாதியை அவன் விடுவித்தபோது வாழைப்பழத் தோல் போல் சொத்தென்று விழுந்தார்.

‘மூளை சூப் செய்கிறார்கள்! ‘ கலக்கத்துடன் யோசித்தான் ஆனந்த ராவ். ஒரு புறத்தில் ‘என்ன சமையல் செய்கிறான்கள், முதலில் காய்கறிகளைப் போட்டுக் கொதிக்க விடவேண்டாமோ ? ‘ ‘ என்றது அவன் நிபுணத்துவம்.

மூளையின் மேற்புறத் தோலை நீக்கிவிட்டு நன்றாகக் கழுவித் தண்ணீரை வடிய விடவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

‘அடுத்த ஆள் வாப்பா! ‘ பயத்தில் ஷேர் மார்க்கெட்காரரின் பாண்ட் எல்லாம் நனைந்திருந்தது. அதற்குள் அந்த சூப் அண்டாவிலிருந்து காதைப் பிளக்கும் ஒரு விசில் சத்தம் புறப்பட, முதலையன் அதைக் கவனிக்கப் போனான்.

மூளையைத் துண்டு துண்டாக நறுக்கி எலுமிச்சம் பழச் சாறில் ஊற வைக்கவும். சிறிதளவு வினிகர் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கூழாக்கிக் கொள்ளவும். வெந்த காய்கறிகளுடன் சேர்த்து உப்பு போட்டுக். கொதிக்க விடவும். நன்றாகக் கொதி வந்த பிறகு…

‘ஆமாம், இவர்கள் உப்பு போடவில்லையே…. ஒரு வேளை தெரியாதோ ? ‘ ஆனந்த ராவ் மெல்ல வரிசையிலிருந்து விலகி அண்டாவின் அருகில் நெருங்கினான். அந்த முதலை சமையற்காரன் குனிந்து ஏதேதோ குமிழ்களைத் திருப்பிக் கொண்டும் டயல்களைப் பரிசோதித்துக் கொண்டும் இருந்தான்.

ஒரு வாணலியில் இரண்டு மேசைக் கரண்டி வெண்ணையை உருக்கி அதில் வெங்காயம், குடமிளகாய், துருவிய காரட் இவற்றைப் பொன் வறுவலாக வறுத்துப் போடவும். சிறிதளவு தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோள மாவைக் கரைத்து ஊற்றி நன்றாகக் கிளறவும்.

சமையற்காரன் ஒரு கரண்டியால் கொஞ்சம் சூப்பை லாந்தி எடுத்து ஊதி ருசி பார்த்த்தான். இரண்டு செகண்டு மெளனம். திடாரென்று தொண்டையைப் பிடித்துக் கொண்டு ‘ய்யீ….க்! ‘ என்று சோடாமூடியை சுவரில் தேய்த்தது போல் கதறினான். அவன் முகம் மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய நிறங்களுக்கு சட் சட்டென்று மாறியது. நாக்கை ஒரு அடி நீளம் வெளியில் எடுத்து டிஷ்யூ பேப்பரால் பரபரவென்று துடைத்துக் கொண்டான்.

சத்தம் கேட்டு மற்ற முதலையர்கள் ஓடி வர, சமையல் தடியன் அவர்கள் மொழியில் ஏதேதோ வேகமாகச் சொன்னான். இவர்களைக் காட்டி ‘ஊகூம். பிரயோசனப் படாது ‘ என்பது போல் சைகை செய்தது மட்டும்தான் புரிந்தது. கடைசியில் அவர்கள் மிச்சமிருந்த பத்தொன்பது கைதிகளை நெட்டித் தள்ளிக் கப்பலுக்கு வெளியே உதிர்த்து விட்டு சீறிப் புறப்பட்டுக் காணாமல் போனார்கள்.

ஆனந்த ராவ் அவசரத்தில் கையோடு கொண்டு போயிருந்த உப்பு ஜாடியை அவர்கள் சூப்பில் கவிழ்த்து விட்டதால், இனி சமையலுக்கு என்ன செய்வது என்று கவலைப் பட்டுக் கொண்டே தன் விண்கலத்தை நோக்கி மிதந்து நீந்தினான்.

(Ellen Klages எழுதிய Be Prepared என்ற கதையின் தழுவாக்கம்.)

r_for_raja@rediffmail.com

Series Navigation

பாலி யூர்க்ரா (தமிழில் : ராமன் ராஜா)

பாலி யூர்க்ரா (தமிழில் : ராமன் ராஜா)