து ை ண – 7 ( குறுநாவல்)

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

ம ந ராமசாமி


—-

திருமணத்துக்கான ஏற்பாடுகள் இரு பக்கமும் நடந்து கொண்டிருக்கும்போது, ஒருநாள் ராமகிருஷ்ணன் பகல் பதினோரு மணி சுமாருக்கு திடுதிப்பென்று என்முன்னே வந்து நின்றான்.

எனது ஓய்வூதியம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்குக் கடிதம் எழுதலாம் என நான் உட்கார்ந்த நேரம். அவன் வருகை எனக்கு சிறு எரிச்சலைத் தரக் கூடியதாக இருந்தது.

‘சார் ? ‘

‘ஆஃபீஸ் இல்லையா ராமகிருஷ்ணன் ? ‘

‘உண்டு! லீவு போட்டிருக்கேன் ‘

‘எதுக்கு ? ‘

‘அதைப் பத்திப் பேசத்தான் வந்தேன் ‘

சற்று மூச்சு வாங்கினாப் போலிருந்தது அவனுக்கு. பேனாவை மூடி வைத்தேன்.

‘சொல்லு ராமகிருஷ்ணன் ‘

‘சார் ‘ என்றான் நகத்தைக் கடித்தபடி.

‘என்ன ? ‘

‘கல்யாணத்தை நிறுத்திடலாம்னு இருக்கேன் ‘

துாக்கிவாரிப் போட்டது. ‘அடப்பாவி! அப்டில்லாம் செய்துறாதே… ‘

‘ஆமா சார் ‘ என்றான். ‘ச் ‘ என்றான். தலையாட்டி தன்னையே மறுத்துக் கொண்டான்.

‘என்ன ஆமா ‘

‘கல்யாணத்தை நிறுத்திடப் போறேன்! ‘

‘ஏன் ? ‘

‘கல்யாணம் பண்ணி என்ன ஆகணும் ? ‘

‘ஏன் ?… வாழ்க்கையிலே கல்யாணம் அவசியம் ராமகிருஷ்ணன்.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து தங்கள் சந்ததியைப் பெருக்க ஒன்றோ ரெண்டோ குழந்தைகளைப் பெற்று, அவங்களைச் சீராக வளர்த்து ஆளாக்கறதுதான் மானுட தர்மம்! ‘

‘ஆளாக்கி என்ன காணப் போறோம். ‘

‘ராமகிருஷ்ணன், என்ன சொல்றே ? ரொம்ப விரக்தியாப் பேசறாப்ல இருக்கு ? ‘

‘ஆமா சார். உலகத்துல என்ன இருக்கு. எதுக்கு வாழறோம். வாழ்ந்து என்ன சாதிக்கப் போறோம். குழந்தைகளைப் பெத்து, அவங்களை வளர்த்து விட்டப்பறம் அவங்க என்ன சாதிக்கப் போறாங்க ?… ‘

‘ம்…ம் ? ‘

‘வாழறதுல அர்த்தமே இல்லே சார்! ‘

‘சரி. கல்யாணம் வேணாம். அப்பறம்… ‘

‘வேலையை விட்டுடப் போறேன் ‘ என்று அடுத்த குண்டைப் போட்டான்.

‘பாவி! ‘

‘ஆமாம் சார். இப்டி கால்போன போக்குல போகப்போறேன்…

கிடைச்சால் சாப்பிடுவேன். இல்லைன்னா பட்டினி கிடப்பேன். நினைச்ச இடத்துல தங்குவேன். அவசியம் வரும்போது துாங்குவேன். அப்றம் நடப்பேன்… இப்டி என் காலம் முடியற வரைக்கும் இருப்பேன்! ‘

‘ராமகிருஷ்ணன்! ‘

‘சார் ? ‘

‘வேணாம். அப்டி எல்லாம் செய்யக் கூடாது. ‘

‘ச் ‘ என்றான். ‘என்னால குடும்பத்தோட ஒட்டி வாழ முடியாது சார் ‘ என்றான்.

‘ஏன் ? ‘

‘உலக விஷயம் ரொம்பத் தெரிஞ்சுனுட்டேன்! ‘

‘கற்றது கைம் மண் அளவு, கல்லாதது உலகளவு… என்று- உற்ற கலைமடந்தை ஓதுகிறாள்! – ஒளவையார் பாட்டு ராமகிருஷ்ணன்.

சாட்சாத் அந்தக் கலைவாணியே, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியே, தான் கற்றது தன் கைப்பிடி மண் அளவு, கற்க வேண்டியது இந்த உலக அளவு இன்னும் இருக்கிறது-ன்றாளாம். நீ என்னடான்னா… ரொம்பத் தெரிஞ்சுக்கிட்டேன்னு சொல்கிறாய். ‘

‘அப்பிடிச் சொல்லலே சார். முன்னே ஒண்ணுமே தெரிஞ்சுக்காமல் இருந்தேன்…

உங்ககூடப் பழகினாப்பறம் நிறைய சமாச்சாரம் தெரிஞ்சுனுட்டேன்! கோவிலுக்குப் போறதையே நிறுத்திட்டேன். கடவுளைக் கும்பிடறதை விட்டேன். மூட நம்பிக்கை எல்லாத்தையும் விட்டுட்டேன்… ‘

‘அதனாலே ? ‘

‘இப்ப, உலகத்ல வாழறதுல என்ன இருக்குன்னு தோணிடுத்து. வாழ்ந்து என்ன பிரயோஜனம்னு படறது…

மகாத்மா காந்தி பத்திச் சொன்னீங்க. இந்த நாட்டுக்கு அவர் சுதந்திரம் வாங்கித் தந்தார். கடைசீல என்ன ஆச்சு ?… ‘ என்று என்னைப் பார்த்தான்.

‘என்ன ஆச்சு! ‘

‘அவரை ஒருத்தன் சுட்டுக் கொன்னுட்டான்! அதான் அவர் சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததுக்குப் பரிசு! ‘

‘அப்படியில்லே ராமகிருஷ்ணன். மகாத்மா காந்தி எப்பவோ ஒருநாள் சாக வேண்டியவர்தான்!

ஒருத்தன் சுட்டதுனாலே சீக்கிரம் செத்துட்டார்! அவ்வளவுதான்!

ஆனால்…

ஆனால் இப்ப நீயும் நானும் இன்னிக்கு நம்ம சொந்த விவகாரம் காரணமாக அவர் பெயரைச் சொல்லிப் பேசிண்டிருக்கோமே, அதுதான் அவர் பெருமை! ‘

‘என்ன பிரயோஜனம் சார்! அந்தப் பெருமையைக் கேட்க அவர் இருக்காரா ? ‘

‘ராமகிருஷ்ணன். இப்ப நீ குழப்பத்துல இருக்கிறாய். நான் சொல்றதைக் கேப்பியோல்யோ… ‘

‘என்ன சார் அப்டிக் கேட்டுட்டாங்க! என்னை /இந்த அளவு/ அறிவாளியாக்கி, எனக்கு அறிவு ஊட்டினவரே நீங்கதான்! உங்ககிட்ட இதைப் பத்திப் பேசணும்னுதான் ஆஃபீஸ்லே லீவு போட்டுட்டு ஓடிவரேன். உங்க கிட்ட சொல்லாமல், உங்க யோசனையைக் கேட்காமல் ஏதும் செய்ய மாட்டேன்! ‘

‘ரொம்ப சந்தோஷம்!

வீட்டுக்குப் போய், சாப்டுட்டுட்டுத் துாங்குங்க… கல்யாணம் பத்தி இப்ப யோசிக்க வேணாம். ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சாச்சு… ‘

‘இல்ல சார் கல்யாணம்லாம் எனக்கு லாயக் படாது சார்! நிறுத்திறப் போறேன்! ‘

‘நிறுத்தறதுன்னு வந்துட்டா எப்ப நிறுத்தினா என்ன!… அதனால அதைப் பத்தி இப்ப கவலைப் பட வேணாம். பேசாமல் இருங்க. விஷயத்தை என்னாண்டை விடுங்க. நானும் யோசிக்கறேன். அப்பறமா நாம ரெண்டு பேரும் கலந்து பேசலாம். ‘

‘சரி சார்! ‘

‘இப்ப வீட்டுக்குக் கிளம்புங்க! ‘

—-

சண்பகம் வந்தாள். ‘திருப்திதானா ? ‘ என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். எங்களுடைய உரையாடலை சமையல் அறையில் இருந்து கேட்டிருக்கிறாள்.

‘தேமேனு இருந்த பிள்ளை. கோவில்- கதா காலட்சேபம்- வீடு- ஆஃபீஸ்…னு அவன் பாட்டுக்கு இருந்த பிள்ளை. அவனண்டை உண்மையைச் சொல்றேன், அறிவு புகட்டறேன்னு சொல்லி… அவனை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துட்டாங்க. ‘

‘இப்ப ஒண்ணும் மோசமாப் போகல்லே சண்பகம் ‘

‘என்ன மோசமாப் போகல்ல. கோவணத்தைக் கட்டிண்டு ஊர் ஊரா ஆண்டியா அலையப் போறேன்னு சொல்லிட்டுப் போறான். இதைவிட என்ன மோசமாப் போகணும் ? ‘

‘சண்பகம், அவன் குழப்பத்துல இருக்கிறான். அப்பிடி ஒண்ணும் ஆண்டியாவோ சித்தனாவோ அவன் போயிற மாட்டான். அதிலும் சாப்பாட்டு ரசிகன்! ‘

‘அவன் அப்பிடிப் போனா அதுக்கு நீங்கதான் காரணம்… ‘

‘அவன் மனசு மாறும் சண்பகம். இப்பிடி சட்னு ஒரு முடிவுக்கு வர்றவங்க, திரும்ப முடிவை மாத்திப்பாங்க! ‘

‘பாக்கலாம். ‘ சண்பகம் சென்றாள்.

—-

மறுநாள் மாலை ராமகிருஷ்ணன் வந்தான். தலை கலைந்து சோர்ந்து இருந்தான். தோட்டத்தில் பிரம்பு நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டோம். இருவருக்கும் சண்பகம் காபி கொண்டு தந்தாள்.

அவளே படபடப்பாய் இருந்தாள். ராமகிருஷ்ணனிடம், ‘இதோ பாருப்பா. அப்பிடியெல்லாம் கல்யாணத்தை நீ நிறுத்தக் கூடாது. அந்தப் பொண்ணோட நிலைமையை நினைச்சுப் பாரு. என்னவெல்லாம் கற்பனை பண்ணிண்டிருப்பா அவ… ‘

‘இல்ல மாமி ‘

‘என்ன இல்ல. உன் இஷ்டத்துக்குக் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறதும், கல்யாண ஏற்பாடு எல்லாம் நடந்துண்டு இருக்கும்போது, கல்யாணம் வேணாம் அது இதுன்னு ஜகா வாங்கறதும் சரி இல்ல. மத்தவா நிலையையும் யோசிச்சிப் பார்க்கணும்… ‘

‘சார் கிட்ட எல்லாம் பேசி இருக்கேன் மாமி! ‘

‘சார்தான் உன்னைக் குட்டிச் சுவரா ஆக்கி இருக்காரே! ‘ என்று என்னை முறைத்துவிட்டு அவள் உள்ளே சென்றாள்.

—-

புயலடிச்சாப் போல இருந்தது.

சற்று நேரம் நானும் ராமகிருஷ்ணனும் பேசாமல் அமர்ந்திருந்தோம். எந்த அளவுக்கு ராமகிருஷ்ணனின் மன மாற்றத்துக்கு நான் காரணம் என்பதை எண்ணிப் பார்த்தேன்.

இப்படி எதிர்பாராத இடத்தில் இருந்தெல்லாம் எதிர்ப்பு வரும், தாக்குதல் வரும் என அவன் அறிந்தே யிருக்கமாட்டான்! அவன் சிந்தனை இப்போது அந்தக் கோணத்தில் இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

‘என்ன ராமகிருஷ்ணன்… ‘

என் குரலில் இருந்த சோர்வை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அசட்டுச் சிரிப்பு சிரித்தான்!

‘சார்! வீட்ல தகராறு! ‘

கல்யாணம் வேணான்னு சொல்லிட்டியா ? ‘

‘இன்னும் இல்ல சார். அதுக்குள்ள இன்னொண்ணு… ‘

‘இன்னொண்ணா! ‘ எனக்கே தலைசுற்றும் போலிருந்தது!

‘இன்னிக்கு சம்பளம் வாங்கினேன். வழக்கம் போல அப்பா கையில கொடுத்தேன். ஏன் ஒர்ரூபா குறையறதுன்னு கேக்கறார் சார்! ‘

‘உம் ? ‘

‘ஒர் ரூபா அவருக்குப் பெரிசாப் போயிடுத்து. என் சம்பளத்தின் பேரில் அவர் குறியா இருக்காரே தவிர, இப்பிடி ஒரேயொரு ரூபாய்க்குக் கணக்கு கேட்டு பிள்ளையை நோகப் பண்ணறமே, அவன் சம்பாதிச்ச காசுதானே, அதுல ஒர்ரூபா குறைஞ்சா என்னன்னு அவரால இருக்க முடியல்ல! ‘

‘ஓகோ ‘

‘அவருக்கு வேண்டியது எல்லாம் என் சம்பளம். பாசம்- அன்பு- பிரியம்- இதெல்லாம் சுத்த பேத்தல் சார்! ‘

‘நீ தெரிஞ்சுனுட்டே! ‘

‘சிரிக்காதீங்க சார். அம்மாவும் அப்பிடி ஒண்ணும் பாசமா இருக்கறதாத் தெரியல்லே. எப்படா பரீட்சை எல்லாம் பாஸ் பண்ணப் போறே ? எப்ப உனக்கு பிரமோஷன் கிடைக்கும்னு கேக்கறாள்! ‘

‘ஏன் அவள் கேக்கக் கூடாதா ? பிள்ளைக்குக் கல்யாணம் ஆகப் போறதே,. நாளைக்கு ஒருத்தி இந்த வீட்டுக்கு வரப் போறாளே, குக்கர்ல வைக்கிற அரிசியோட இன்னும் ஒரு பிடி ரெண்டு பிடி போடணுமே… நாளைக்குக் குழந்தைன்னு பிறந்து கொண்டு வந்தாளானால், அதுக்கும் செலவுகள்னு வருமேன்னு, பொறுப்போட கேக்கறாள்! அதுல என்ன தப்பு ? ‘

‘சரிதான்! நீங்களும் அவா பக்கம் பேசறேள். நான் சொல்ல வரது என்னன்னா, தாய்ப்பாசம் என்கிறது கூட சும்மா பேச்சுதான். என் சம்பளம்தான் அம்மாவுக்குக் குறிக்கோள்! ‘

‘சரி. நீ இப்ப குழப்ப நிலையில் இருக்கிறாய் ராமகிருஷ்ணன். நான் இப்ப என்ன சொன்னாலும் இப்ப உன்னாண்ட எடுபடாது! ‘

‘ரொம்பத் தெளிவா இருக்கேன் சார்! ‘

‘நல்லது! இப்ப என்ன செய்யணுங்கறே. ‘

‘எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு சார்!… நேத்தி நான் சொன்ன மாதிரி… வேலையை உதறிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி, ஊர் ஊரா நடந்து… ‘

‘அவசரப்படாதே ராமகிருஷ்ணன்! அப்படி நீ ஏதாவது ஏடாகூடம் பண்ணிட்டேன்னா, தவறை உணர்ந்து திருந்திக்கறபோது, மீண்டும் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமப் போயிரும்…

வேலை திரும்பக் கிடைக்காது!

உங்க உணர்வை நான் மதிக்கிறேன். என்கிட்டே விட்டுட்டு வீட்டுக்குப்போய் நிம்மதியா இரு. நிம்மதியாத் துாங்கு. இப்ப உனக்கு வேண்டியது நிறையத் துாக்கம்… ‘

‘துாங்க முடியலியே சார். துாக்கம் வர மாட்டேங்கறது! ‘

‘துாக்க மாத்திரை ஒண்ணு தரேன். படுக்கறதுக்கு மின்னாடி அதை முழுங்கிட்டு, ஒருவாய்த் தண்ணி குடிச்சிட்டுப் படுத்துக்கங்க! ‘

ராமகிருஷ்ணன் எழுந்தான்.

‘காபி எப்பிடி இருந்தது ராமகிருஷ்ணன்… ‘

‘ம் ? ‘ என்று திரும்பிப் பார்த்தான். ஒரு விநாடி மெளனித்தவன், ‘மாமி கைமணம் கேக்கணுமா ? ‘ என்றான்!

—-

தொ ட ர் கி ற து …

Series Navigation

ம. ந. ராமசாமி

ம. ந. ராமசாமி