முல்லை
அவருக்கு சிவப்பு வர்ணம் என்றால் அறவே பிடிக்காது. ஆனாலும் அவர் தீட்டிய அந்த நவீன ஓவியத்தில் சிவப்பே நிரம்பியிருந்தது. இதைப்பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன். அமைதியாக அவரிடமிருந்து பதில் வந்தது.
‘இது சிவனின் உருத்திர தாண்டவம். கோபத்தையும், பார்க்கும் போது பயத்தினையும் கொடுப்பதற்கு இந்த வர்ணம்தான் சிறந்தது. போதாதற்கு சிவனின் நடனத்தை ஒரு சுடலையில் நடப்பதாக வரைந்திருக்கின்றேன். பிணம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே இங்கே சிகப்புத்தான் சிறந்தது. ஆனாலும் எனக்கு சிகப்பு பிடிக்காது. ‘
அமைதியாக ஆனாலும் விளக்கமாக அவரிடமிருந்து பதில் வந்தது. ஓவியர் ஏ.மார்க் அமைதியான மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை.
பார்க்கும் போது முட்ட வரும் காளை மாதிரியிருக்கும் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் அந்தக் காளைக்குள் ஏ.மார்க் என்ற எழுத்துக்கள் இருக்கும். A,M என்ற எழுத்துக்களின் மேற்பகுதி குத்தவரும் கொம்புகளாகவும் A யின் கீழ்ப்பகுதி இரண்டும் முன்னம் கால்களாகவும் இருக்கும். இறுதியாக வரும் K காளையின் வாலாகவும் பின்னங் கால்களாகவும் இடையில் வரும் AR இனை கச்சிதமாக அதன் உடலாகவும் அமைந்து இருக்கும். இத்தனையும் அடக்கி அற்புதமாக மரத்தில் காளை ஓவியத்திற்குள் தனது பெயரை செதுக்கியிருந்தார். அதுவே அவரின் இலச்சினையாகவும் இருந்தது. தான் வரையும் ஓவியத்தில் அந்த முத்திரையையும் அப்போ அவர் பதித்து வந்தார். தனது புத்தகங்களின் முதற்பக்கத்திலும் இந்த காளை முத்திரையை பதித்திருப்பார்.
எனது நகரில் உள்ள பிரபல்யமான பாடசாலையில்தான் அவர் ஓவிய ஆசிரியராக இருந்தார். அந்தப் பாடசாலையின் மாணவர் விடுதிக்கும் அவரே பொறுப்பாளராகவும் இருந்தார். அந்த விடுதியில் விசாலமான அறையொன்றில் மாலையில் ஆறிலிருந்து பத்துவரை அவரிடம் ஓவியம் பயில எனக்கு வாய்ப்புக் கிட்டியது. நிறைய புத்தகங்கள் வைத்திருப்பார். வாசிக்கத் தருவார். அதில் உள்ள படங்களை வரைய பயிற்சியும் தருவார். மரங்களையும், மாடுகளையும், மனிதர்களையும் அப்படியே கீறுவதில் அர்த்தமில்லை அவற்றில் நவீனங்களைப் புகுத்தி பார்ப்பவர்களுக்குப் பலவற்றைச் சொல்லவைக்கும் சித்திரங்களை வரைய வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.
அப்பொழுது தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஏற்பட்டிருந்த நேரம். அந்த கிளர்ச்சி இளைஞர்கள் கன்னத்தில் கிருதாவும் குறும் தாடியும் வைத்திருந்தார்கள். அது அந்த நேரத்து நாகரிகமாகவும் இருந்தது. தென்னிலங்கைக்கும் வடஇலங்கைக்கும் சம்பந்தமில்லாத போராட்டமது. ஆனாலும் முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டமிருக்கும். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் விடுதியில் சனி, ஞாயிறுகளில் மாணவர்கள் தங்குவதில்லை. அதனால் மார்க் மாஸ்ரரும் வார விடுமுறைக்காக தனது ஊருக்குப் போய்விடுவார்.
ஒரு சனிக்கிழமை காலை, நகரம் களை கட்டியிருந்த நேரம், நகரத்தின் மத்தியில் இருந்த பஸ் நிலையத்தில் தனது ஊருக்குப் போவதற்காக மார்க் மாஸ்ரர் காத்திருந்தார், கூடவே நானும் அவருடன் நின்றிருந்தேன். அப்பொழுது ஜீப் வண்டியொன்று பஸ் நிலையத்துக்குள் வந்து சினிமா பாணியில் கிறீச்சிட்டு நின்றது. அதன் முற்பக்கத்தில் இருந்து காவல்துறை அதிகாரி இறங்கினான். இறங்கியவன் சுற்று முற்றுப் பார்த்தான். அவனுக்குத் தன் பெருமையை யாருக்காவது காட்டவேண்டும் அல்லது யாரையேனும் பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணமிருந்திருக்க வேண்டும். சிறிது நேர நோட்டத்துக்குப் பின் எங்கள் இருவரையும் நோக்கி வந்தான். எனக்கு அவனைப் பார்க்கப் பயமாக இருந்தது. பயப்படாதையும் என்று மார்க் மாஸ்ரர் எனக்கு ஜாடை காட்டினார். நேராக வந்தவன் மார்க் மாஸ்ரரை நெருங்கி நின்றான். அப்பொழுது மார்க் மாஸ்ரர் கன்னத்தில் நீளமாகக் கிருதா வைத்திருந்தார். அதைக் காட்டி என்ன என்று கேட்டான். மார்க் மாஸ்ரர் சிரிப்பால் பதில் சொன்னார். காவலதிகாரி அலட்சியமாக அவரைப் பார்த்தான். விபரீதமொன்று நிகழ வாய்ப்பிருப்பதாக மனது அச்சப்பட்டது.
காவலதிகாரி ஜீப்பிற்குப் சென்று திரும்பி வந்தான். அவனது கையில் இப்பொழுது குறடு ஒன்று இருந்தது. மார்க் மாஸ்ரரின் நாடியைப் பிடித்து ஒரு பக்கமாகத் திருப்பினான். குறட்டையெடுத்து மார்க் மாஸ்ரரின் கன்னத்து கிருதா மயிர்களைப் பற்றி இழுக்கத் தொடங்கினான். மார்க் மாஸ்ரர் எதுவித சலனங்களையும் காட்டாது பேசாமல் இருந்தார். ஒரு மயிரை இழுத்துப் பிடுங்கும் போதே எவ்வளவு வேதனையிருக்கும்.
அந்த மிருகம் எதுவுமே செய்யாத அந்த அமைதியான மனிதனை வேதனைப் படுத்தி இன்பம் கண்டு கொண்டிருந்தது. எனக்கு ஆச்சி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்தான் நினைவில் வந்தன.
நக்கிற நாய்க்கு செக்கென்ன ? சிவலிங்கமென்ன ?
‘சேர்.. அவர் ஒரு மாஸ்ரர் ‘ என்னையறியாமல் வார்த்தைகள் வந்தன. சிறிது நேரம் எங்கள் இருவரையும் அந்தக் காவலதிகாரி பார்த்தான். பிறகு பேசாமல் போய்விட்டான்.
பஸ் வந்தது. ஒன்றுக்கும் யோசியாதையும் சொல்லிவிட்டு மார்க் மாஸ்ரர் பஸ்ஸில் ஏறினார்.
ஓவியர் ஏ.மார்க் அமைதியான மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை.
– முல்லை – 14.11.2004
kurinchi@web.de
- தமிழின் மறுமலர்ச்சி – 6
- பயங்கரவாதமும், பலதார மணமும்
- பெண்சிசுக்கொலைகளும் பிரிட்டிஷ் அரசாங்கமும்
- காஞ்சி சங்கராச்சாரியார் கைது
- ஆளுநர் பதவியும், ஒரு கேலிக்கூத்தும்
- இளித்ததாம் பித்தளை! – துக்ளக் இதழில் குருமூர்த்தி எழுதிய கட்டுரையின் தாக்கம்
- ஜெயேந்திரர் கைது – ஜெயலலிதா அரசின் தொடரும் அராஜகம்
- போரும் இஸ்லாமும்
- செயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்
- மெய்மையின் மயக்கம்-26
- காணாமல் போன கடிதங்கள்
- தமிழர்களின் அணு அறிவு
- வையாபுரிப் பிள்ளை – செய்ய வேண்டியவை
- ஜெயேந்திரர் கைது பற்றி அறிக்கை
- ஓவியப் பக்கம் ஏழு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல்
- மக்கள் தெய்வங்களின் கதை – 10
- பார்த்திபனின் அமெரிக்கத் தமிழர் பற்றிய பேச்சு
- கடிதம் நவம்பர் 18,2004
- கடிதம் நவம்பர் 18,2004
- ஒடுக்குமுறைக்கு எதிரான அரங்கு – நவம்பர் 21, 2004
- கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி
- கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா
- கடிதம் நவம்பர் 18,2004 – இயக்குனர் வான் கோவின் குறும்படம்
- ஃபோட்டோ செய்தி: தைரியலஷ்மியின் பக்தர் நேரியல் கட்டி…. கைகட்டி பணிவாக…
- ஆசாரகீனனின் ஏக்கம் தீர்ந்ததென்றால்
- அவளோட ராவுகள் -3
- எலிமருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் – அருண் கொலட்கர்
- அறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து
- செக்கென்ன ? சிவலிங்கமென்ன ?
- வெகுண்டு
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -46
- சகுந்தலா சொல்லப் போகிறாள்
- நெஞ்சுக்குள்ளே ஆசை
- நகரில் தொலைந்த நட்சத்திரங்கள்
- கவிதைகள்
- தீ தந்த மனசு
- கவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்
- ஞானப் பெண்ணே
- மீரா – அருண் கொலட்கர்
- புரூட்டஸ்
- நன்றி, சங்கரா! நன்றி!!
- பெரியபுராணம் – 18 : 2.தில்லைவாழ் அந்தணர் சருக்கம்
- கீதாஞ்சலி (4) சிறைக் கைதி! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு
- இந்தமுறை
- பாப்லோ நெரூடாவின் கவிதை : மாச்சு பிச்சுவின் மலை முகடுகள்
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்
- ஒப்புமை சைகையும், இலக்கமுறை சைகையும்
- பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (9)
- சங்கடமடமான சங்கரமடம்
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்