அஞ்சலைப் பாட்டி

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

பனசை நடராஜன்


நந்தகுமார் நின்றுக் கையசைக்கும் இடத்தைத் தவிர மற்ற எல்லாத் திசைகளிலும் திரும்பி திரும்பிப் பார்த்தாள் அஞ்சலைப் பாட்டி. சிங்கப்பூர் விமான நிலையத்தை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவளை பெட்டிகளை தள்ளிக் கொண்டு வந்த அந்த நபர்தான் ‘வாங்க, போகலாம் ‘ என்று அழைத்து வந்தார். இவர்தான் மாமாவின் நண்பராக இருக்க வேண்டும்.சென்னையிலிருந்து வரும் தன் நண்பருடன் பாட்டியை அனுப்புவதாக நேற்றிரவு நந்தகுமாரின் மாமா அவனிடம் தொலைபேசியில் அழைத்து சொல்லியிருந்தார்.

நந்தகுமார் இந்தியாவிலிருந்து சிங்கை வந்து நான்கு வருடங்களாகிறது. ஒரு நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் வேலை செய்கிறான். சிறு வயதிலேயே அம்மாவும் அப்பாவும் விபத்து ஒன்றில் இறந்து விட்டனர். அதன் பிறகு அப்பாவைப் பெற்ற அஞ்சலை பாட்டிதான் அவனுக்கு எல்லாமே என்றானது. கொஞ்ச நிலம், சிறிய தென்னந்தோப்பு இதில் வரும் வருமானத்தில்தான் அவனை படிக்க வைத்தாள். சில வருடம் சென்னையில் வேலை செய்த நந்தகுமார் மாதம் ஒரு முறையாவது கிராமத்துக்குப் போய் அஞ்சலையை பார்த்து விட்டு வருவான். சிங்கப்பூருக்கு போக இன்டர்வியு முடித்து அந்த விஷயத்தை அவளிடம் சொன்ன போதுதான்… ‘போகக் கூடாது ‘ என்று வீட்டையே அல்லோகலப் படுத்தினாள். ஊரில் உள்ள எல்லோரிடமும் நியாயம் சொல்லி அவர்கள் இவனிடம் எடுத்து சொல்லி…அப்பப்பா. நந்தகுமாருக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

அவளுக்கு இருக்கும் ஒரே சொந்தம் அவன் மட்டும்தான். அவனை பிரிவதை தாங்கி கொள்ள முடியாததால்தான் இத்தனை ஆர்ப்பாட்டம்.

சின்ன வயசிலேயே அவள் சம்மதம் கூட கேட்காமல் தாத்தாவை கல்யாணம் பண்ணி வைத்தார்களாம்..எல்லா கெட்டப் பழக்கங்களும் இருந்த அவர் சில வருடங்களிலேயே போய் சேர்ந்துட்டாராம். அதற்கப்புறம் தனியாளாக இருந்து அப்பாவை வளர்த்து அவரும் திருமணமாகி இரண்டு வருடங்களில் அம்மாவோடு இறந்து போனதும் கைகுழந்தையாக இருந்த நந்தகுமாருக்காகதான் உயிரோடு இருந்ததாக சொல்வாள். எப்போதும் கலகலப்பாக இருக்கும் அவள் இதைச் சொல்லி கண்ணீர் விடும் போது கையைப் பிடித்து கொண்டு ஆறுதல் சொல்வான் நந்தகுமார்.

அவள் ஒன்றும் பழைய பஞ்சாங்கம் அல்ல. நடைமுறை வாழ்க்கையின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவள். ‘பாட்டி ‘ என்றால் பாரதிராஜா படத்தில் வரும் ரவிக்கை போடாம கண்டாங்கி சேலை கட்டிக்கிட்டு, பாக்கு வெற்றிலை மெல்லுகிற பாட்டி அல்ல அஞ்சலை. பூனம் சேலை கட்டி பூப்போட்ட ஜாக்கெட் போட்டு அந்த ஊர் தியேட்டருக்கு வரும் இந்தக் கால படங்கள் அத்தனையும் பார்த்து விடுகிற ‘அல்ட்ரா மாடர்ன் பாட்டி ‘!.

‘மாற்றந்தாண்டி நம்மளை மனுசனாக்கியிருக்கு.. நாம சின்னப் பிள்ளையா இருந்தப்போ ஆம்பளைங்க குடுமியும் தாடியுமா திரிஞ்சாங்க..கிராப் வெட்டிகிட்டவங்களை கேலிப் பேசினாங்க.. கொஞ்ச நாள்ல எல்லோருமே கிராப்புக்கு மாறலையா ? ..எவ்வளவு நாளைக்குதான் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ ‘ வும் , ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே ‘யும் கேட்டுகிட்டு இருப்போம்.. ‘!

அஜித் படம் பார்த்துட்டு வந்தவளை புறம் பேசின சாரதாக் கிழவிக்கு அஞ்சலையின் நேரடியான அதிரடி பதில் இது. அவளுடைய பேச்சும் செய்கையும் ஆச்சர்யமாக இருக்கும் நந்தகுமாருக்கு.

“இங்கே போகாதே..இத்தனை மணிக்குள்ளே வீட்டுக்கு வந்துடணும்” என்றெல்லாம் எந்த கட்டுப்பாடும் போட்டதில்லை அவனுக்கு. உனக்கு எது சரின்னு தோணுதோ அப்படியே நட. உனக்கான முடிவுகளை நீயே எடு. இதுதான் பாட்டி சொல்லித் தந்த பாடம்.

எப்படியோ பேசிப் பேசி சிங்கப்பூர்க்கு தான் வேலைக்குப் போக அவளிடம் அனுமதி வாங்கி விட்டான். ரெண்டு வருடம் முடிந்து வந்துடணும். நான் பார்க்கிறப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டு என் கூடவே இருந்துடணும். சரியா ? என்றாள்.

ரெண்டு வருடத்துல ஒரு தடவை வந்து பார்த்துட்டு போறேன். அடுத்த ரெண்டு வருடம்ன்னு மொத்தம் நாலு வருடம் சிங்கப்பூரில் இருந்துட்டு அப்புறம் இங்கே வந்து கல்யாணம் பண்ணிகிட்டு உன் கூடவே இருந்துடறேன். போதுமா ?..

சம்பாதித்து முன்னேற வேண்டும் என்ற கனவு கண்களில் மின்ன பேசியவனின் கன்னங்களை வழித்து திருஷ்ட்டி முறித்தாள். நீ சொல்றதும் சரிதான்ப்பா. நான் இன்னும் எவ்வளவு காலம் இருக்கப் போறேனோ!..உன் எதிர் காலத்துக்கு தேவையான பணத்தை நீ சம்பாதிக்கணும் இல்லையா ? .என்றாள்.

அதன் பிறகு எல்லாமே வேகமாக நடந்தது. நிலத்தையும் தோப்பையும் அடகு வைத்து ஏஜெண்டுக்கு பணம் கட்டி சிங்கப்பூர் வந்து…சம்பாதித்து அவற்றை மீட்டு….இரண்டு வருடம் முடிந்து ஊருக்குப் போன போதுதான் , ‘ஒரு மாதம் முன்னாடி சினிமாவிலே பார்த்தேன். சிங்கப்பூர் எவ்ளோ அழகா இருக்கு. பார்க்கணும் போல இருக்குப்பா ‘ என்று மெதுவாகச் சொன்னாள் அஞ்சலை.

“அதுக்கென்ன பாட்டி.. நாலு வருசம் முடிய ஒரு மாசம் இருக்கும் போது உனக்கு டிக்கெட் எடுத்து சென்னை மாமாவுக்கு அனுப்பறேன். அவர் உன்னை சிங்கப்பூர் விமானத்தில் அனுப்பி வைப்பார் ‘ என்று சொல்லி விட்டு வந்தான். இதோ நான்கு வருடம் முடிய இன்னும் நான்கு வாரங்கள்தான் இருக்கிறது.. நாட்கள் நான்கு கால் பாய்ச்சலில் பறந்தோடி விட்டன. அவன் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் தமிழர். அவர்தான் பாட்டிக்கு ஸ்பான்சர் செய்தார். நந்தகுமார் வேலைக்கு போக வேன்டும் என்பதால் அஞ்சலைப் பாட்டியை சிங்கப்பூரை சுற்றிக் காட்டும்படி அவர் மனைவியிடம் சொல்லியிருந்தார்.

இதோ விமான நிலைய சோதனை முடிந்து வாசலுக்கு வந்த பாட்டியே அவனை அழைத்தாள். மாமாவின் நண்பர் விடைபெற்றுச் செல்ல நந்தகுமாரும் அஞ்சலையும் டாக்சி எடுத்து வீட்டுக்கு வந்தார்கள். வீட்டு உரிமையாளர் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அவர் மனைவி வசந்தியுடன் பாட்டியை இருக்கச் சொல்லி விட்டு நந்தகுமாரும் வேலைக்கு புறப்பட்டான். வசந்தி நன்றாகப் பழகினாள். அடுத்தடுத்த நாட்களில் அவள்தான் சிங்கப்பூரின் ஒவ்வொரு இடத்தையும் அஞ்சலைக்கு சுற்றிக் காண்பித்தாள். விடுமுறை நாட்களில் மட்டும் நந்தகுமார் அழைத்துச் சென்றான். அஞ்சலைக்கு வசந்தியை மிகவும் பிடித்துப் போனது. வசந்தி தன் நான்கு வயது மகள் உமாவை ‘அதைச் செய், இதைச் செய்யாதே… ‘ என்று கண்டிப்பதாய் நினைத்து கஷ்டப்படுத்துவதுதான் பிடிக்க வில்லை. தகுந்த நேரத்தில் படித்து தகுந்த நேரத்தில் விளையாடி கொஞ்ச நேரம் கதைப் பேசி, கதைக் கேட்டு..ஆரோக்கியமாக வாழ்ந்த காலமா இது ? வார்த்தெடுக்கும் பொம்மைப் போல் பிள்ளைகளை வளர்க்கும் அவசர யுகமாகி விட்டது!.. தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் அஞ்சலை.

அன்று அஞ்சலையும் வசந்தியும் செந்தோசாத் தீவுக்கு போவதாக திட்டம். பிடிவாதம் பிடித்த உமாவை அஞ்சலையின் சிபாரிசால் அழைத்துப் போகச் சம்மதித்தாள் வசந்தி. செந்தோசாவை சுற்றிப் பார்த்து விட்டு பெருவிரைவு ரயிலில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.எதையோப் பார்த்து விட்டு ஓடி வந்த உமா தாயின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். அடுத்த நொடி ‘பளார் ‘என்று மகளை அறைந்து விட்டாள் வசந்தி. ‘பொது இடத்தில் எப்படி நடந்துக்கறதுன்னு தெரியாது ? ‘. என்று வெடித்தாள். எதற்காக அம்மா அடித்தாள் என்று தெரியாமலும், அழுதால் இன்னும் அடிப்பாளோ என்ற பயத்திலும் உமா அதிர்ந்து நின்றாள். அஞ்சலைக்கு வசந்தியின் செய்கை கோபத்தை வரவழைத்தது. அதை வெளிக்காட்டாமல் உமாவை தன் மடியில் உட்கார வைத்துத் தேற்றினாள்.

இதே போலதான் ஊரில் எதிர்வீட்டு சத்யா தன் ஆறு வயது மகனை கொஞ்ச நேரம் கூட விளையாட விடாமல் ‘படி படி… ‘ என்று அடித்து உட்கார்த்தி வைப்பாள். அவனோ பேருக்கு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு தெருவில் விளையாடும் பிள்ளைகளை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பான். அஞ்சலை அது பற்றி சத்யாவிடம் கேட்டதற்கு ‘பிள்ளையை அடிச்சு வளர்க்கணும். முருங்கையை முறிச்சி வளர்க்கணும்னு சொல்வாங்க…இதிலெலெல்லாம் நீங்க தலையிடாதீங்க பாட்டி ‘ என்று முகத்திலடித்தாற் போல் பேசினாள்.

மழலைச் செல்வம் இல்லாமல் மருத்துவம் பார்த்தும், கோயில்களைச் சுற்றியுமே ஏழைகளாகிப் போன ஏராளமானோரைப் பார்த்திருக்கிறாள். ‘உற்றுப் பார்த்துதான் ரெண்டு பேருன்னு கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு பொது இடம்னு கூட பார்க்காம ஒருத்தரோட ஒருத்தர் ஒட்டி உரசிக்கிட்டு நிக்கிற காதல் ஜோடிகளை விடவா வசந்திக்கு.. குழந்தையின் முத்தம் நாகரிகக் குறைவாகி போச்சு ?! சிங்கப்பூரை விட்டுப் போறதுக்குள்ளே இதுக்கு ஏதாவது பண்ணியாணும்… ‘ தீர்மானம் செய்துக் கொண்டாள் அஞ்சலை.

ஒரு மாதம் முடிந்து நாளை நந்தகுமாரும் அஞ்சலையும் இந்தியாவுக்குப் புறப்படுகிறார்கள்.பெரும்பாலான இடங்களை அஞ்சலைக்கு சுற்றிக் காண்பித்தாகி விட்டது. பொருட்களை பேக் செய்து விட்டு ஹாலுக்கு வந்தான் நந்தகுமார். அஞ்சலை வசந்தியிடம் ஏதோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தாள்.

‘ …. நந்தகுமாரோட சித்தப்பாதான்.. சரியா படிக்காம ஊர் சுத்துறான்னு வேப்பங்குச்சியை எடுத்து வெளுத்து வாங்கிடுவேன். ‘ராட்சசி, உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன்னு ‘ சொல்லிட்டு பதினாலு வயசுல ஓடிப் போனவன்தான். அவன் அண்ணன் கல்யாணத்துக்கும் வரல.. சாவுக்கும் வரல..அவன் இருக்கிற இடம் தெரிஞ்சாதானே செய்தி சொல்ல முடியும் ?… நந்தகுமாருக்கு எட்டு வயசு இருக்கும் போது ஒரு தபால் வந்துச்சு. அண்ணா.. நான் நல்லபடியா பம்பாய்ல இருக்கேன்.. நீ எப்படி இருக்கேன்னு.. அண்ணன் செத்து போனது தெரியாம அவனை விசாரிச்சு எழுதினவனுக்கு பெத்த அம்மா என்னை பத்தி ஒரு வார்த்தை எழுத தோணலை. அந்த கோபத்துல நானும் பதில் எழுதலை. அப்போ வந்த தெளிவுதாண்டிம்மா … பிள்ளைங்களுக்கு நல்லது பண்றதா நெனைச்சு நாம அளவுக்கு அதிகமா கண்டிச்சா அவங்களுக்கு நம்ம மேல பாசம் வராது.பயமும், வெறுப்பும்தான் வரும்.. ஏதோ என் அனுபவத்தைச் சொன்னேன்.. தப்பா எடுத்துக்காதே..விடியகாலைல கிளம்பணும். போய் தூங்கட்டுமா ?… ‘என்று சொல்லி விட்டு எழுந்தாள். வசந்தியின் முகத்தில் சிந்தனை ரேகைகள்!

உருக்கமா பேசிகிட்டு இருந்த பாட்டியை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது நந்தகுமாருக்கு. இது என்ன புதுக் கதையா இருக்கு.. எனக்கு ஒரு சித்தப்பா இருக்கிறதா பாட்டி சொல்லவே இல்லை.. ஊர்க்காரங்களும் சொன்னதில்லை. இருக்கட்டும்… இன்னும் என்னென்ன விஷயங்களை மறைச்சேன்னு காலைல கேட்கணும். நினைத்தவாறே தூங்கிப் போனான்.

காலையில் உமா படித்துக் கொண்டிருந்தாளா ? அல்லது வசந்திக்கு பயந்து படிப்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாளோ ? தெரியாது.. அருகில் வந்த வசந்தி ‘உமா செல்லம்!. அம்மா இனிமே அடிக்க மாட்டேன். சரியா ? படிச்சுட்டு ஹோம்ஒர்க்கெல்லாம் முடிஞ்சதும் விளையாடிட்டு இரு. நான் சாப்பாடு கொண்டு வரேன். ‘ என்று சொல்லி விட்டு உள்ளேப் போனாள். ஒரு நாளும் இல்லாத திருநாளாய் கனிவோடு பேசும் தாயை விழிகள் விரியப் பார்த்தாள் உமா.

அஞ்சலை முகத்தில் வெற்றிப் புன்னகை. எல்லோரிடமும் சொல்லி விட்டு டாக்சியில் விமான நிலையம் வந்தனர் அஞ்சலையும் நந்தகுமாரும். சிங்கப்பூரைப் பிரிவது இருவருக்குமே மனதுக்கு சங்கடமாக இருந்தது.

விமான நிலைய சோதனை எல்லாம் முடிந்து விமானத்தில் ஏறி அமர்ந்த உடனே அஞ்சலையிடம் கேட்டு விட்டான்..

‘அதுவா…தன் பொண்ணோட எதிர்காலம் நல்லா இருக்கணும்ங்கற அக்க்கறையில வசந்தி எப்போ பார்த்தாலும் உமாவை கண்டிக்கறதா நினைச்சு அழ வைக்கிறா… அதுக்கு சொன்ன கதைதான்.. நீ கேட்டது. அதிகமான கண்டிப்பும் தப்பு. கண்டிக்காம விடுறதும் தப்பு. . இப்போ தண்ணியே மேல படலைன்னாலும் உடம்பு நாறிடும். தண்ணிக்குள்ளேயே மூழ்கிப் போனா உயிர் போயிடும் இல்லையா ? அது மாதிரிதான். எதுவா இருந்தாலும் அளவோட இருக்கணும். ‘ தெளிவாகவும் நிதானமாகவும் சொன்னாள்.

‘ இவ்வளவு தத்துவம் பேசுற.. நீ, ஏன் பாட்டி ஒரு ஆசிரமம் திறந்து ஆரூடம் சொல்லக் கூடாது ? இந்தக் காலத்துல கூட்டமும் வசூலும் குவியும் தெரியுமா ? ‘ என்று கிண்டல் பண்ணியவன்..,

‘அப்படின்னா… உன்னோட இளைய மகன்..அதான் என் சித்தப்பா..பம்பாய்க்கு ஓடிப் போனது…இதெல்லாம்… ‘ ? என்று வியப்பு மேலிடக் கேட்டான்.

‘இளைய மகனா ? எனக்கா ? வசந்தியை மாத்தறுதுக்காக நேத்துதான் பிறந்தான்! ‘…. குறும்பு கொப்பளிக்க கண்சிமிட்டி சிரித்தாள் அஞ்சலைப் பாட்டி….

(முற்றும்)

(feenix75@yahoo.co.in )

Series Navigation

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்