பழையன கழிதலும் புதியன புகுதலும்

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

புதியமாதவி, மும்பை.


‘ஏன்.. ஏன் டா இப்படி எல்லாத்தையும் எடுத்திட்டுப் போகவிட்டே ? ‘

‘போம்மா..இதெல்லாம் பார்த்தா என்னோட இமேஜ் என்ன வாகும் ? அவ்வளவுதான்..

கிரிஜாவோடா அப்பா இந்த மியுசியத்தை எல்லாம் பார்த்தா இந்த வீட்டுக்க்கா நம்ம பொண்ணைக்

கொடுக்கனும்னு யோசிக்க ஆரம்பிச்சுடுவாரு..அப்புறம் என் கதி என்னவாரது ? ‘

‘அடப்பாவி மவனே.. என் கும்பாவை எங்கேடா கொண்டு வச்சே ? ‘

‘ஆமாம் உங்கிட்டே இருந்ததிலேயே அது ஒன்னுதான் ஒருப்படி.. நல்ல செம்புனு இன்னிக்கு உள்ள

செம்பு விலைக்கு செட்டியார் பாத்திரக்கடையிலே எடுத்துக்கிட்டாரு.. ‘

அவளுக்கு அழுகை வந்தது. அவள் தன் பிறந்த வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்தச் சீதனம் அந்த

கும்பா..

கும்பா நல்ல செம்பில் அரைவட்டமாக வாய்ப்பக்கம் பெரிதாக இருக்கும் பாத்திரம். உழைக்கும் மக்கள்

கஞ்சியை ஊற்றிக் கரைத்துக் குடிப்பதற்கு ஏற்ற வகையில் குழிவாக இருக்கும். பாத்திரத்திற்கு ஸ்டாண்டு

மாதிரி அடிப்பகுதியில் வட்டமாக ஒரு செம்மாடு பிடித்து ஒட்டி வைத்திருப்பது மாதிரி இருக்கும்.

அன்று வீட்டில் புதிதாக ஃபேன் வாங்கிச் சுவர்களில் மாட்டிவைத்துச் சுற்றவிட்டான்.

நடுக்கூடத்தில் ஒரு கருநீலப் பச்சைக்கலரில் சோபா. அந்த நீண்ட சோபாவுக்கு முன்னால் ஒரு சின்ன

டாபாய். அதுவும் கண்ணாடியில்.

கொல்லைப்புறத்தில் கண்டபடி வளர்ந்து பூத்திருந்த செம்பருத்திச் செடியை அப்படியே வேருடன் பிடுங்கி

மண்தொட்டியில் வைத்து முற்றத்திலிருந்து கூடத்திற்கு ஏறிவரும் வாசலில் இரண்டு பக்கமும் வைத்தான்.

தாள்ரோசா தரையில் பூத்து கவனிப்பாரின்றிக் கிடந்தது. அதைக் கொத்தாக வெட்டி எடுத்து வந்தான்.

ஒரு சின்ன வெங்கல கிண்ணத்தில் பாதி மண் நிறைத்து இலேசா தண்ணி ஊற்றி அதில் அப்படியே

நட்டு வைத்தான்.

அடா இதை எங்கே கொண்டு போய் வைக்கப் போறான்னு அவன் பின்னாலேயே அவளும்

போனாள்.

விளக்கு மாடத்தில் வைத்துவிட்டு வந்தான்.!

அவளுக்கு எல்லாமே அதிசயமாக இருந்தது. ஏதாவது சொன்னால் காச்சுமூச்சுனு கத்துவான்.

பெரிய இடத்திலிருந்து வலிய வந்து அவர்கள் வீட்டில் சம்மந்தம் செய்ய வருகின்றார்கள்.

நாமதான் இந்த வயலு வரப்புனு அலைஞ்சு காய்ந்து போனோம். அவன் காலத்திலாவது இந்த நாய்ப்

பிழைப்பு பிழைக்காம பெரிய மனுசனா வாழ்ந்திட்டுப் போகட்டும்.

அவன் பார்க்கிற வேலையைப் பார்த்திட்டுதான் வலிய வருகின்றார்கள் என்றாலும் பெண்ணுடைய

அப்பா சொந்த ஊரையும் வீடு வாசலையும் கட்டாயம் பார்க்கனும்னு சொல்லிப்புட்டாராம்.

அவரு அப்படி சொன்னதாலேயே அவளுக்கு அவர்களைப் பார்க்காமலேயே அந்தச் சம்மந்தம் மனசுக்கு

பிடித்திருந்தது. அதவும் ஒரு காரணம்தான். அவள் மகன் பண்ர கூத்தை எல்லாம் ஒன்னும் வாயைத்

திறக்காம உட்கார்ந்து பார்க்கிறதுக்கு.

படிச்சப் பையனா.. கிடைச்சானா.. சரிதான் ஒரே அமுக்கா அமுக்கிட வேண்டியதுதான்.. கிராத்திலே

அம்மா மட்டுமா.. அவ கிடக்கா.. அவளை எல்லாம் கண்டுக்க கூடாதுனு நினைக்கிற பெண்ணைப்

பெத்தவங்க நடுவிலே மாப்பிள்ளை மட்டும் பெரிசில்லே.. பையனைப் பெத்த அம்மா, அவுங்க வீடு

வாசல் சொந்த பந்தம் எல்லாம் பார்க்கனும்னு ஒரு பெரிய மனுசன் அவ்வளவு தூரத்திலிருந்து

வரப்போகின்றார்னா நம்ம பையன் நிசமாவே கொடுத்து வச்சவன்னு நினைச்சுக்கிட்டா..

எல்லாம் நல்ல படியா நடந்து முடிந்தாச்சு.. முகூர்த்தத்திற்கு நாளும் குறிச்சாச்சு.. அவளுக்கென்ன..

நல்ல மவனைப் பெத்திருக்கா.. அதனாலே அவளுக்கென்ன குறைச்சல்..என்று சாதியும் சனமும்

சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க..எல்லா வற்றுக்கு நடுவில் சின்னதா அந்தக் குறை ..

அவள் விதைநெல் போட்டு வைக்கும் குதிலை அவன் கடைசிவரைக் கொண்டுவரவே இல்லை.

குதில்.. நீண்ட ஜாடி போலிருக்கும் மண் பாண்டம். இதில்தான் உழவர்கள் வீட்டில் தானியம். நெல்,

விதைநெல், அரிசி.. என்று எல்லாம் தனித்தனியாகப் போட்டு வைத்திருப்பார்கள். இந்தக் குதில்

இல்லாத வீட்டை யாருமே மதிக்கமாட்டார்கள். குதில் இல்லை என்றால் அவர்கள் விலைக்கு அரிசி

வாங்கிச் சாப்பிடும் பஞ்சப் பரதேசிகள் என்று கண்டு பிடித்துவிடுவார்களாம்.

தாழி போன்ற அமைப்பில்.. அதன் அடியில் ஒரு துவாரம்.. ஒவ்வொரு குதிலும் ஆளுயரத்திற்கு

இருக்கும். இதில் சின்னதா இருக்கும் குதில்களும் உண்டு.. அதிலும் சின்னதா இருக்கும் குதில்..

அவளும் அவள் வீட்டுக்காரனும் சேர்ந்து போய் வாங்கி வந்தது. அந்தப் பொங்கலன்று அவள்

உள்ளங்கையில் கோல மாவை குழைத்தெடுத்து அதன் நடுப்பகுதியில் வைத்தாள். அவனும்

அவனுடைய இடது கையை மாவில் நனைத்து அவள் கைகளுக்கு அருகில் பதித்தான்.

எவ்வலவு பெரிய கை.. என்று அவன் கைகளின் பதிவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவன் அவளருகில் வந்து உன் கை இந்தக் கைகளுக்குள் அடக்கம்னு சொல்லிட்டு சிரித்தான்.

இப்பவும் தனியா இருக்கும் போதெல்லாம் அவள் அந்தக் குதிலின் அருகில் போய அவன் பதித்திருக்கும்

கைகளில் தன் உள்ளங்கையை வைத்துவிட்டு அப்படியே அவனைத் தொட்ட நினைப்பில்

சிலிர்த்துப்போய் இருப்பாள்…

இப்போது அந்தக் குதில் இல்லாமல் அந்த வீடெ வெறிச்சோடிப் போய் இருந்தது…

**

விதை நெல்லையும் எடுத்து மக்கள் எல்லாரும் சமைக்க ஆரம்பித்து விட்டார்கள். சுத்தமா மழை

இல்லை. வானம் பார்த்த பூமி.. கிணத்துப் பாசனத்தை நம்பி நெல்லு பயிரைப் போட முடியலை..

வானம் மட்டும் பொய்க்கலை..மண்ணும் மலடாகிப் போயிடுச்சு.. நிலத்தடி நீரே இல்லாம எத்தனை

அடி குழாயை இறக்கினாலும் தண்ணி ரண்டு குடம் கூட கிடைக்காம..

மகனும் மருமகளும் எத்தனையோ தடவை சொல்லி விட்டார்கள்.. பட்டணத்திற்கு வரச்சொல்லி.

சும்மா சொல்லக்கூடாது.. மாசம் ஒன்னாம் தேதியான டாண்னு மணியார்டர் வந்திடும். போஸ்டு

மேனே கண்ணு போடுவாரு.. இந்த வருசம் அறவே குடிக்கவும் தண்ணி இல்லாம சனங்கள் படற

கஷ்டம்.. மகனும் மருமகளும் பேரனுடன் இந்த வருசம் வரலை.. தண்ணிக் கஷ்டத்தில் குளிக்கவும்

துணி துவைக்கவும் முடியாமல் அவஷ்தைப் பட வேண்டாம்தான். சரி நாம போய் பார்த்திட்டு

வந்திடலாம்னு போனவளுக்கு கண்ணைக் கட்டி காட்டிலே விட்ட மாதிரி இருந்தது.

வீடா அது.. அந்தக் காலத்து சினிமாவிலே வர்ற மாளிகை மாதிரி.. பெரிய கட்டிடம்.. ரொம்ப

உசரத்திலே வீடு. வீட்டுக்கு வரனும்னா படிக்கட்டிலே ஏறி வந்தா அவ்வளவுதான். மனசுன் மேல்மூச்சு

கீழ்மூச்சு வாங்கி மண்டையைப் போட்டிட வேண்டியதுதான். ஏறி வர்றதுக்கு ஒரு சின்ன கரண்டு

ரூமிலே போய் கதவை அடைச்சிக்கிட்டு பட்டனை அமுக்க வேண்டியதுதான். அது தானே அப்படியே

மேலே ஆடாம அசங்காம தூக்கிக்கிட்டு போயிடும். என்னவோ லிப்பிட்டுனு சொன்னான் மவன்.

எல்லாம் கரண்டிலேதான். கீழே இறங்கிட்ட கலர் கலரா காருகள். பெரிய பெரிய தோட்டம்.

ஊஞ்சல்.. ஏன் குளிக்கறதுக்கு கூட குளம் மாதிரி கட்டி விட்ருக்காங்க. அதைப் பாத்தவுடன் நம்ம ஊரு

குளத்திலே தண்ணி நிறைஞ்சி எத்தனை வருஷம் ஆயிடுச்சி.. இங்கே பாரு தண்ணி அலை

அடிச்சிக்கிட்டு.. சின்னப்பிள்ளங்க கலர் கலரா பிளாஷ்டிக் வளையத்தை மாட்டிக்கிட்டு அப்படியே

தாமரைப் பூ மாதிரி மிதந்துக்கிட்டு .. ஏம்பா துணி துவைக்க படிக்கட்டு இல்லாம குளத்தைக்

கட்டியிருக்கானேனு மகன் கிட்டே கேட்டேனா.. அவன் ஒரே சிரிப்பு சிரிச்சான். அப்படி என்ன நானு

சொல்லிப்பிட்டேன்னு இவன் இந்தச் சிரிப்பு சிரிக்கான்.. மருமகளும் பேரனும் சேர்ந்து

சிரிச்சாங்க..அப்புறம்தான் சொல்றான்.. அது குளிக்கிற குளமில்லையாம்.. சும்மா நீச்சலடிக்கிற

குளமாம்.. அதிலே நீச்சலடிச்சிட்டு வூட்டிலே வந்துதான் குளிப்பாகலாம்.

பட்டிணத்து சனங்களுக்கு அனுபவ அரிவு பத்தாதுதான். நீச்சலடிக்கிற இடத்திலேயே குளிச்சிட்டு

அப்படியே துணியையும் துவைச்சிட்டு வந்திட்டா என்ன ?

ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா அவளுக்கு விடிந்தது. மகனும் மருமகளும் வீட்டிலே சேர்ந்தாப்பிலே

இருக்கிறதில்லே.. என்னதான் அப்படி வேலையோ..கேட்கலாம். கேட்டு அவர்கள் சொன்னாலும்

என்ன நமக்குப் புரியவா போகிறது.. ? பேரன் பேசற தமிழ் அவளுக்குப் புரியலை., அவள் பேசறது

எதுவும் அவனுக்குப் புரியலை…ஆனாலும் அவன் விளையாண்டுவிட்டு வந்து அவள் மடியில்

உட்கார்ந்து அவள் மடிச் சேலையைத் தொட்டிலாக்கி ஆடும்போது..

தூக்கம் வந்தவுடன் ஓடிவந்து அவள் சேலையைப் பிடித்துக் கொண்டு தூங்கும் போது.. என்ன

சாப்பிட்டாலும் ‘நீ சாப்பிட்டியா பாட்டி ‘ என்று கேட்கும்போது..பள்ளிக்கூடத்துக்கு போகும்போது

மறக்காமல் வந்து டாடா சொல்லிட்டு போகும்போது.. ஊரெல்லாம் மழை பொழிஞ்சி குளம் குட்டை

எல்லாம் தண்ணி நிறைஞ்சிக் கிடக்கிற மாதிரி மனசு சந்தோசப்பட்டது.

அன்று மருமகள் ஏதோ கலைக்கண்காட்சிக்கு போகிறா வர்றதுக்கு லேட்டாகும்னு சொன்னா.

கலைக்கண்காட்சினா என்னா.. மகனிடம் கேட்டாள்..

அவன் சிறிது நேரம் யோசித்தான். எப்படி அவளுக்குப் புரிய வைப்பது என்று அவன் நெற்றியின்

விழுந்த சுருக்கத்தின் கோடுகள் யோசித்தன..

‘அதுவந்தும்மா.. நம்ம ராசாக்கள் காலத்திலே அவுங்க வச்சிருந்தது, அப்புறமா உலகத்திலே ரொம்பவும்

அழகா இருக்கிற பொருளு, அதிசயமா கிடைக்கிற பொருளு.. இதெல்லாம் வாங்கி வச்சிருப்பாங்க.இந்த

ஊரு சனங்களுக்கு அதெல்லாம் வாங்கி வீட்டிலே வச்சா ரொம்ப பெருமையா இருக்கும்.. வுன்

மருமவளுக்கு இந்தக் கிறுக்கு உண்டு. எதையாவது வாங்கிட்டு வந்து வைப்பா..

அன்று மருமகள் என்ன வாங்கிட்டு வர்றானு பார்க்கனும்னு உட்கார்ந்திட்டு இருந்தாள்.

தூக்கம் வரலை. மருமகள் வந்திட்டா.. மெதுவா எட்டிப் பார்த்தாள். ஏதொ பெரிசா வாங்கிட்டு

வந்திருக்கா போலிருக்கு.. ஒரு ஆள் தூக்கிட்டு வந்தான்.. அவன் கிட்டே அவள் மெதுவா பத்திரமா

தூக்கிட்டு வரச்சொல்லி சொல்லிக்கிட்டு இருந்தா..

வீட்டில் நடுவில் பெரிசா ஆளுயரத்திற்கு நிற்கும் குத்துவிளக்குப் பக்கத்தில் அதை வைக்கச் சொன்னாள்.

அவன் மெதுவாக வைத்துவிட்டு நகர்ந்தான். மெதுவாகச் சுற்றி இருந்த பிரவுன் கலர் அட்டைக்காகிதச்

சுருளை எடுத்தாள்..

இப்போது அவள், மகன், பேரன் மூவரும் அந்தப் பார்சலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்..

பார்சலில் இருந்து வெளியே வந்தவுடன்..

அங்கே உள்ளங்கைகளின் பதிவுகளுடன் குதில் அவளைப் பார்த்து சிரித்தது..

அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை. அந்தக் குதிலின் அருமை பெருமைகளை அதை வாங்குவதற்கு

எவ்வளவு போட்டி என்பதை எல்லாம் மருமகள் மகனிடன் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அப்படியே இன்னொரு சின்னப் பார்சலையும் எடுத்து டாபாயின் நடுவில் வைத்தாள்.

கும்பா.. இந்த வெங்கல ஜாரைப் பாருங்களேன்.. அப்படியே இதிலே தண்ணி ஊத்தி மேலே ரண்டு

ரோஸ் பூவை மிதக்க விட்டுட்டா வேறே எந்தப் பூச்சாடியும் வேண்டாம்.. எப்படி என் ஐடியா..

அவள் சொன்னது போலவே கும்பாவில் தண்ணீர் ஊற்றி அவள் அதற்கு என்று வாங்கி வந்திருந்த

பூக்களின் இதழ்களை அதில் மிதக்க விட்டாள்..

இரவில் தூக்கம் வரவில்லை.. எழுந்துபோய் மெதுவாக குதில் அருகில் நின்று கொண்டாள்.தன்

உள்ளங்கையை அந்தப் பெரிய உள்ளங்கையின் தடத்தில் வைத்தாள்..உடம்பும் மனசும் சிலிர்த்தது..

கும்பாவில் மிதந்து கொண்டிருந்தப் பூக்கள் அவளைப் பார்த்து நஞ்சைக் காட்டின் நடவுப் பாட்டைப்

பாடின.

அதற்குள் மருமகளின் சத்தம் கேட்டது..

லைட்டைப் போட்டுக்கிட்டு ராத்திரி நடங்க.. இன்னிக்கு புதுசா வாங்கிட்டு வந்திருக்கிறது.. மேலே

கீழே விழுந்து வச்சிடாதீங்க.. அது மண்ணால் ஆனது..உடைஞ்சுடும்.. !

அவள் கவனமாக குதில் மீது விழுந்து விடாமல் இருப்பாள்: அவளுக்கு குதில் வெறும் மண்ணால்

ஆனது மட்டும் தானா… ?

—-

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை