காத்திருந்து… காத்திருந்து….

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

நம்பி


—————————————–

ஊனமாக ஈன்ற குழந்தையின் தாயைப் போலிருந்தது நகுலனுக்கு. அன்று அவனது கதை பிரசுரமாகியிருந்தது. ஒரு சிற்பியின் நேர்த்தியுடன் செதுக்கியிருந்த கதையில் பத்திரிகை ஆசிரியர் தணிக்கை என்ற பெயரில் கொத்து பரோட்டா போட்டிருந்தார். அது புரியாமல் நண்பர்கள், ‘செத்தாதான் உன்னோட பேர் பத்திரிகையில வரும்னு நினைச்சிருந்தோம். ஆனா கதை எழுதியே வந்திருக்கு. அதுக்கு விருந்து கொடுத்தே ஆகனும் ‘ என்று கட்டாயப் படுத்தினார்கள். ஒரு வழியாக இரவு கேளிக்கை விடுதிக்கு போவதாக முடிவாயிற்று.

நகுலனுக்கு இரவு களியாட்டங்களில் இன்னமும் ஈடுபாடு வரவில்லை. லாஸ்ஏஞ்சல்ஸில் இரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறான். தற்போது சிங்கை வந்து இரண்டு வருடம் ஆகிறது. நண்பர்களுடன் இரவு கொண்டாட்டங்களுக்கு செல்வதுண்டு. ஆனாலும் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருப்பான். கல்லூரி நாட்களில் தண்ணியடித்துவிட்டு, உள்ளாடையில்லாமல் லுங்கி கட்டிகொண்டு ‘நடராஜா டாக்கீஸில் ‘ வசந்த மாளிகை, உலகம் சுற்றும் வாலிபன் இரண்டாவது ஆட்டம் பார்த்து இடைவேளையில் பீடி வலிப்பதுதான் அவனுக்கு தெரிந்த இரவு நேர கொண்டாட்டம், கேளிக்கை எல்லாம். மனதளவில் இன்னும் அந்த நாட்களில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அதற்குக் காரணம் கோமதி.

கோமதியை காதலித்த நாட்கள் சொர்க்கம். பொங்கல் சந்தை கூடியிருக்கும் மார்கழி பின்மாலைப் பொழுதில் உச்சி

பிள்ளையார் கோயிலில் பேசிப் பேசி இன்னமும் பேசியது, பட்டும் படாமல் விரல் தொட்டு வசந்த பவனில் சாப்பாடு பகிர்ந்துகொண்டது, ஒரே மாதிரியாய் ஆளுக்கொரு ‘டைட்டன் ‘ கடிகாரம் வாங்கியது,

‘நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

இன்று முதல் ஓர் நினைவு தந்தாய் ‘

என கோமதியை பாடச்சொல்லி முக்கொம்பு புல்வெளியில் உலமே மறந்திருந்தது…….

திடாரென்று ஒரு நாள் கோமதி, ‘…… நீ படிப்பு முடிச்சி பெரிய ஆளா வர்ற வரைக்கும் காத்திருக்க எனக்கு ஆசைதான். ஆனா எதார்த்த வாழ்க்கை அப்படி இல்லையே. எனக்கு கீழ இன்னும் மூனு தங்கச்சிங்க. இப்ப எனக்கு பார்த்திருக்கிறது இரண்டாம் தாரம்தான். ஆனா பணம் இருக்கு. இத வச்சி இன்னும் ரெண்டு தங்கச்சிங்கள அப்பா கரையேத்திடுவார். கிட்டதட்ட விபச்சாரம்தான். இதெல்லாம் தெரிஞ்சும் ஏன் காதலிச்சேன்னு கேக்காத. என் மனச என்னால ஏமத்த முடியல. என்ன மன்னிச்சிடுன்னோ, மறந்திடுன்னோ சொல்ல எனக்கு எந்த அருகதையும் இல்ல….. ‘என்று பிள்ளாயாருக்கு பதில் நகுலனை கும்பிட்டுவிட்டு போய்விட்டாள்.

உட்கார்ந்தபடியே அரை தூக்கத்தில் பழைய நினைவுகளுள் மூழ்கியிருந்த நகுலனை நண்பர்கள் எழுப்பினார்கள். ‘மச்சி கிளம்புடா. இப்ப புறப்பட்டாதான் தேக்கா போயிட்டு பப்புக்கு போறதுக்கு நேரம் சரியா இருக்கும் ‘. வாடகை வண்டியில் வந்திறங்கி குட்டி இந்தியா கடைத்தொகுதிகளை சுற்றிவிட்டு, ‘புலிப்பாலை ‘ ஒரு மப்பு ஏற்றிவிட்டு கேளிக்கை விடுதிக்கு போனபொழுது இருட்டாகியிருந்தது.

கேளிக்கை விடுதியில் வேண்டா விருந்தாளியைப்போலத்தான் நடத்தினார்கள். ஒருவேளை முடியை ஒட்டவெட்டி காதில் கடுக்கன் போட்டிருந்தால் உபசரிப்பு நன்றாக இருக்கலாம். நகுலனுக்கும் நண்பர்களுக்கும் அப்படி செய்ய ஆசைதான். ஆனால் மென்பொறியாளர்களுக்கு இன்னும் அந்தச் சலுகைகள் கிட்டவில்லை. விடுதியில் வண்ண விளக்குகள் மின்ன இளஞைர்களும் யுவதிகளும் கும்பல் கும்பலாக கூடினார்கள். சாராயமும் புகை மண்டலமும் கலந்த மக்கிப்போன நாற்றம் மூக்கடைத்தது. உற்சாகம் ஏறிய குடிபடைகள் மேடைக்கு எதிரே சென்று இடுப்பை வளைத்து ஆட்டம் காட்டின. ஐம்பது கடந்த விடலை சந்தடி சாக்கில் யுவதிகளை கட்டியணைத்து ஆட்டம் போட்டது. இவர்களது ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து மேடையில் இசைக்குழு ‘அள்ளு….. அள்ளு ‘ என்று அடித்தொண்டையில் அலறியது. நகுலன் ஆட்டத்தையும் கண்ணசைத்து காசுக்கு ஆட அழைக்கும் அணங்குகளையும் பார்த்தபடி பாணம் ஏற்றி கழிப்பறையில் இறக்கினான். நண்பர்கள் சிலர் போதை ஏறி விரும்பிய பாடல் கேட்டு ஆடி அசத்தினர். நேரம் ஏற ஏற ஆட்டமும் அரவணைப்பும் கூடியது. உச்சகட்டம் நெருங்குகிறது என்பதை விட்டு விட்டு அணையும் விளக்குகள் உணர்த்தின. பாயும் தலையனையும் இன்றி நின்ற நிலையில் படுக்கக்காத்திருந்த கூட்டத்தில் நகுலன் மட்டும் எதிலும் ஒட்டமால் வேடிக்கை பார்த்தான். ‘அடி வாடி…. வாடி நாட்டுக்கட்டை…. ‘ என வருந்தி அழைத்து சூடேற்றி முடித்தபோது விளக்குகள் அணைந்து போனது. சரியாக ஒரு நிமிடம் கழித்து, இருளில் கிளம்பியது அந்தக் குரல். ‘கண்ணாளனே…. ‘ என சிலிர்த்து விளித்தது.

தாகம் தணிந்த கூட்டம் இருக்கைக்குத் திரும்ப அமைதியான குரலில் அரங்கத்தின் சூழலையே மாற்றினாள் கோமதி. நகுலனுக்கு நம்ப முடியவில்லை. இவள்…. இவள்…. எப்படி இங்கே ?. வசதியான வரனுக்காக காதலையே உதறிப் போனவள் கேளிக்கை விடுதியில் நாடு கடந்து வந்து ஏன் பாடுகிறாள் ?. தட்டுத்தடுமாறி விசாரித்தான்.

சென்னையைச் சேர்ந்த இசைக்குழு ஆறுமாதமாக இந்த மதுக்கூடத்தில் பாடுகிறதாம். கோமதியும் அதில் ஒருத்தியாம். இன்று உடல் நலமில்லாததால் தாமதமாக வந்தாளாம்.

மணி நடு சாமம் இரண்டு. நேரம் முடிய காத்திருந்து கோமதியைப் பிடித்தான்.

‘ரெண்டு தங்கச்சிய கழ்யாணம் கட்டிகொடுத்துடழாம்னு போன…. இங்க வந்து நிக்கழ ‘ என்றான்.

கோமதிக்கு நகுலனை பார்த்ததில் அதிர்ச்சி.

‘எல்லாம் தெளிவா நாளைக்குச் சொல்றேன் ‘

‘அதெழ்ழாம் முழியாது. சொல்லுழி இப்ப ‘

‘என் விதி. முதல் தாரத்து பசங்க ரெண்டாம் கல்யாணம் செல்லாதுன்னு கேஸ் போட்டுட்டாங்க. கடைசில அவர நான் காப்பாத்துற நிலமை. அப்பா ஏக்கத்துல போயிட்டாரு. பின்னாடியே அவரும்…..ரெண்டு வயச மகளோட எதோ வாழனுமேன்னு இருக்கேன் ‘

நகுலன் ‘கோ…. ‘வென்று அழுதான். நன்பர்கள் சொல்லியும் கேட்கவில்லை.

‘நீ இப்பவே என்னோழ வா…. நான் இன்னமும் உனக்காகத்தான் வாழ்றேன். என்னக்காச்சும் நீ வருவன்னு தெழியும்…. ‘

‘சரி நீ போ. நான் நாளக்கு உன்னோட வர்றேன் ‘

‘இப்பவே ‘

‘காலையில துணியெல்லாம் எடுத்துகிட்டு வர்றேன் ‘ ஒரு சின்னக் குழந்தைக்கு சமாதானம் சொல்வது போல் சொன்னாள்.

‘சரி… இந்தா என்னோட முகவழி… நாழைக்கு கண்டிப்பா வழனும்….. ‘

இரண்டடி நடந்தவன் திரும்ப வந்து எதிர்பாராமல் கட்டிப்பிடித்து முத்தமிட்டான். கோமதி அதிர்ந்தாலும் ஒன்றும் செய்யவில்லை. அவள் கண்களிலும் நீர். அவள் வாழ்க்கையில் ஆடவன் கொடுக்கும் கடைசி முத்தமாக இருக்கலாம்.

நாளைக்கு சென்னை சென்றுவிட்டால் அவளுக்கு அவள் இரண்டு வயது மகள் மட்டுமே துணை.

***

nambi_ca@yahoo.com

Series Navigation

நம்பி

நம்பி