வீசும் வரை……

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

சுஜல்


நாளை நடக்க இருக்கும் சீனு மாமாவின் அறுபதாம் கல்யாணத்திற்காக வீடு

மொத்தமும் நெருங்கிய உறவுகள் கூடி இருந்தன.

ஆனாலும் அத்தனை பேர் நிரம்பி கூடத்தில் என்றுமில்லாத ஒரு அமைதி! மாமா ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சலின் ‘கீரீச் ‘ ஒலி மட்டுமே பூதாகரமாய் செவிகளில் அறைந்து கொண்டிருக்க, சித்தி தான் முதலில் பேசினாள்.

‘உனக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு லாவண்யா.எனக்கு வேற ஒண்ணும் சொல்ல

தெரியலை ஆமாம்! ‘

அவர் முடிப்பதற்குள் எப்பொழுதும் போல் சிதம்பரம் பெரியப்பாவிற்கு மூக்கின் மேல் கோபம் வந்துவிட்டது.

‘நீயும் நானும் என்ன கிரிஜா சொல்றது. அவதான் நம்ம பேச்சு எதையுமே காதுல வாங்கிக்க கூட தயாராயில்லையே.நீ பாட்டுக்கு என்னவோ….பழைய லாவண்யான்னு நினைச்சுட்டு பேசறயா,அவ இப்போ ஆபீசர் லாவண்யா தெரிஞ்சுக்கோ ‘ வேகமாக மேல் துண்டை நாற்காலியின் கைப்பிடியில் உதரி தன் தோளின் மேல் தானே எறிந்தார்.

எனக்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை.எல்லோரும் கோபப்படும்படி நான் அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டேன்! மாமா எனக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை வேண்டாம் என சொன்னதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா!! எல்லோர் முகத்திலும் ஒரு அக்கறைக்கோபம் வேதனையோடு தெரிக்க, கூடமே என்னை பார்த்து கொண்டிருந்தது போல இருந்தது.

‘ஏன் வேண்டாங்கறாளாம் ? ‘ அப்பொழுதுதான் திருச்சியில் இருந்து வந்திறங்கிய சுந்தரி அத்தை எல்லோருக்கும் கேட்கும்படி கிசுகிசுத்தாள்.

‘அவளுக்கு இந்த மாதிரி வசதியான இடத்து பையனை கல்யாணம் பண்ணிக்க கசக்கறதாம். இவ கல்யாணம் பண்ணிண்டு போய்ட்டா அப்புறம் நாமெல்லாம் அவ அம்மாவை பட்டினி போட்டுடுவோம் பாருங்கோ,அதுதான் பயப்படறா ‘ மீண்டும் சிதம்பரம் பெரியப்பா!

இந்த முறை அவருடைய பேச்சு மனதை வலிக்க செய்தது.சிறு வயது முதல், எனக்கு அப்பா என சொல்லப்படுபவர் என்னையும் அம்மாவையும் நடு வீதியில் நிறுத்தி விட்டு போனதிலிருந்து,சீனு மாமா குடும்பம்தான் எங்களுக்கு சகலமும்.என் படிப்பு,அம்மாவின் தையல் வடாம் பிசினஸ்,வீட்டு வாடகை, மாத கடைசியில் மளிகை சாமான்

முதற்கொண்டு எல்லாம் சீனு மாமா தயவில்தான்.

தன் மகள் ரம்யாவிற்கு ஒரு குண்டுமணி வாங்கினால் கூட அதே போல் எனக்கும் வாங்கி வராமல் இருக்கமாட்டார்.நானும் ரம்யாவும் படித்த பள்ளி,உடுத்திய பாவாடை,ஏன் கையில் போட்டிருந்த இரப்பர் வளையலில் கூட எங்களிடையே வித்தியாசம் இருந்ததில்லை.மாமியும் அதற்குமேல்தான்,ஒரு லேக்கியம் காய்ச்சினால் கூட முதலில் எங்களுக்கு கொடுத்து விட்டுதான் தன் தொண்டை குழியை நினைப்பாள்.

பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மேல் ரம்யா படிக்க விருப்பமில்லை என மாலை கல்லுரெியில் பி.ஏ சேர,என்னை மட்டும் இஞ்சீனியரிங் சேர்த்து, பீஸ் கட்டி,நோட்டு புத்தகம் லேப் என நாலு வருடம் பணத்தை தண்ணீராய் செலவழித்து,இன்று நான் ஐந்து இலக்க சம்பளம் வாங்குகிறேன் என்றால் கட்டாயம் அது சீனு மாமா போட்ட பிச்சை தான்.

‘எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நாம பட்ட நன்றிக் கடன் தீராதுடா லாவண்யா ‘ அம்மா அடிக்கடி சொல்லி கண்ணீர் வடிப்பாள்.

திடாரென போன வருடம் ரம்யாவிற்கு கல்யாணம் கூடி வர,நல்ல இடம் என்பதால் மாமா உடனடியாக முடித்து விட்டார்.ஆனாலும் அவருக்கு மனதுள் வருத்தம்.

‘ம்ம் ரெண்டு கல்யாணமும் ஒண்ணா செய்யணும்னு இருந்தேன்.என்னவோ அது நிறைவேறலையேன்னு ஒரு குறை ‘

கல்யாணத்திற்கு வந்திருந்தவர்களிடமெல்லாம் சொல்லி கொண்டிருந்தார்.

திருமணம் முடிந்து ரம்யா அமெரிக்காவிற்கு பறந்துவிட,அவளது தொலைபேசிக் குரலும்,இெமெயிலும்,தபாலில் வரும் புகைப்படங்களுமே எங்களது உலகம் ஆயின.

ஒவ்வொரு கடிதத்திலும் ‘லாவண்யா,நீயும் இங்கு இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன்.உன்னுடனே இருந்து பழகி விட்டதால்,நீ இல்லாமல் ரொம்பவும் கஷ்டமாய் இருக்கிறது.திரும்பும் இடம் எல்லாம் எனக்கு உன் குரல் கேட்கிறது ‘ இப்படியெல்லாம் ரம்யா எழுதியது தான் மாமாவை துணெ¢டி விட்டதோ!

போன வெள்ளிகிழமை எல்லோருமாக உட்கார்ந்து அறுபதாம் கல்யாணத்திற்கு வாங்க வேண்டிய சாமான்கள் லிஸ்ட் போட்டு கொண்டிருந்தபொழுதுதான் மாமா ஆரம்பித்தார்,

‘நம்ம மாப்பிளையின் நெருங்கிய சொந்தத்தில் ஒரு பையனாம்.அவரோட

கம்பெனியிலேயே வேலை பார்க்கிறானாம்.கெட்ட வழக்கம் ஒண்ணு கிடையாது,நல்ல இடம்.நீ என்ன சொல்ற விசாலம் ? ‘

கீழே உட்கார்ந்து பூக்களை தொடுத்து கொண்டிருந்த அம்மா, ‘என்ன அண்ணா இது புதுசா கேட்டுண்டு, உங்களுக்கு தெரியாததா ? நான் என்ன சொல்றது ? ‘

‘அதற்கில்லை, நம்ம ரம்யாவும் அங்கே இருக்கா.குழந்தேள் ஒண்ணுக்கு ஒண்ணு துணையா இருக்கட்டுமேன்னு பார்க்கறேன்.அப்புறம் இவ வேலைக்கெல்லாம் போய்க் கூட கஷ்டப்பட வேண்டாம். அவா பொண்ணு குடும்பத்திற்கு அனுசரனையா வீட்டோட இருந்தா போதும்னு சொல்லிட்டா. ‘

மாமா கிட்டதட்ட முடிவு செய்துவிட்ட தொனியில் பேசிக் கொண்டு போக என்னால் அந்த நேரத்தில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

இரவு அம்மாவிடம் தனியே எனக்கு இதில் விருப்பம் இல்லாததை சொன்னபொழுது

ரொம்பவும் அதிர்ந்து போய்விட்டாள்.ஏன் எதற்கு என ஆயிரம் கேள்விகள்.

‘எனக்கு உன்னை, மாமா மாமியை விட்டுட்டு,எல்லாம் போக முடியாதும்மா ‘

‘அது சரி.எத்தனை நாளைக்கு எங்களோடையே இருக்க முடியும் ?உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா ? ‘

‘நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேனா ?இந்த இடம் வேண்டாம்.அதோட இப்ப இருக்கிற உத்தியோகத்தை உதறிட்டு போக விருப்பமில்லை ‘

‘அது ஏண்டா ? ‘

‘எனக்கு இது பிடிச்சிருக்கும்மா. நம்ம உழைப்புல நாம சாப்பிடறோம்ங்கற நினைப்பு. உனக்கு மாமா மாமிக்கு ஏதோ என்னால முடிஞ்சதை செய்யறேங்கற ஒரு நிறைவு .

இந்த விஷயத்தில் என்னை கட்டாயப்படுத்தாதீங்கோ!ப்ளீஸ் ‘

அதற்கு மேல் அம்மா ஒன்றும் கேட்கவில்லை.நேரம் பார்த்து மாமியிடம் விஷயத்தை எடுத்து சொல்வதாக சொன்னாள்.ஆனால் அந்த தாமதம்தான் தவறாகி விட்டது!

அதற்குள் மாப்பிள்ளை வீட்டார், ‘மாமாவின் அற்பதாம் கல்யாணத்தை முன்னிட்டு தாங்கள் அங்கு வர இருப்பதாகவும்,அப்பொழுது கூடவே கல்யாணம் பேசி முடிவெடுக்கலாம் ‘ எனவும் செய்தி அனுப்பிவிட்டனர்.

இதோ எந்த நேரத்திலும் அவர்கள் வந்து இறங்கலாம்!

நான் இந்த திருமணத்திற்கு சம்மதிக்காதது எல்லோரையும் ஒரு விதத்தில் வியப்பிலும்,அதை விட கோபத்திலும் ஆழ்த்தி இருக்கிறது.சித்தி,பெரியப்பாவின் வசவுகள் எல்லாம் அதன் வெளிப்பாடே! ஆனால் சீனு மாமா மட்டும் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் இன்னும் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார்.

எல்லோரும் என்னை ஒன்றாக சாடுவது மாமிக்கு வருத்தம் அளித்திருக்க வேண்டும். மிகவும் சின்னமான குரலில்,

‘ அப்படி இல்லை, இப்பத்தானே வேலைக்கு போய் இருக்கா, இன்னும் கொஞ்சம் வருஷமாவது வேலையில் இருக்கணும்மு நினைக்கறா. உங்களையெல்லாம் விட்டு நான் மட்டும் எங்கேயோ கண் காணாம சந்தோஷமா இருக்க முடியாதுங்கறா ‘ அந்த நேரத்தில் எனக்காக ஒரு ஜீவன் பேசியது சற்று ஆறுதலாக இருந்தது.

‘ ஏண்டி உன் சின்ன வயசில் இருந்து நீ பட்ட கஷ்டம் போதாதா ? திரும்பியும் ஏன் வேலைக்கு போய் வேற கஷ்டப்படுவேங்கற ? அதை விட்டுட்டு சொகுசு காரும்,பங்களாவுமா ஏசி ரூமும்ல கால் மேல கால் போட்டுண்டு வீட்டுல இருக்க என்ன வலிக்கறதா ? நீ இன்னும் பத்து வருஷம் சம்பாதிச்சு வாங்கப்போறது எல்லாம் ஒண்ணா தேடிண்டு வருது. அதை போய் வேண்டாங்கற ?இப்படி எப்பவும் சிரமம்தான் படுவேன்னு ஒரு பொண்ணு இருப்பியோ ? எல்லாத்துக்கும் குடுப்பினை இருக்கனும்.ஹும்ம்ம் ‘

தனக்கு கொடுக்க பெண் இல்லையே என்ற பெருமூச்சுடன் சுந்தரி அத்தை.

கடைசியாக சிதம்பரம் பெரியப்பா எழுந்தார், என்னை நேரே பார்க்காமல் முகத்தை வேறு திசையில் வெறித்தபடி , ‘ஒண்ணு சொல்லிடு லாவண்யா,நாங்க பார்க்கிற இந்த பையன் வேண்டாமா,இல்லை எந்த பையனுமே வேண்டாமா ?அப்படி இல்லை என்றால் நீயே எதாவது முடிவு பண்ணி … ? ‘

அவர் முடிப்பதற்குள் மாமா அவரை கையமர்த்தினார், ‘கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த போறது அவ.எப்ப அவ விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாளோ,மேலே பேசறதுல அர்த்தம் இல்லை.நான் சம்மந்தி வீட்டில் சொல்லிக்கறேன்.எல்லோரும் மேலே ஆகப் போற வேலையை கவனிங்கோ ‘ சொல்லிவிட்டு எழுந்து போய் விட்டார்.

பரபரப்பான வழக்கு தீர்ப்பு சொல்லாமல் முடிந்தால் எப்படி இருக்குமோ,அது போல் ஒரு சலசலப்பு கூடத்தில் எழுந்து அடங்கியது.பின் ஒவ்வொருவராக கூடத்தை விட்டு வெளியேற,அம்மாவும் கண்ணை புடவை தலைப்பால் ஒற்றிக் கொண்டு சமையல் அறைக்குள் சென்று விட்டாள்.

அதன் பின்னர் அறுபதாம் கல்யாண வேலைகளின் பரபரப்பில் இதை பற்றி பேச யாருக்கும் நேரம் இருந்ததாக தெரியவில்லை அல்லது என் காதுபட யாரும் பேசவில்லை.அதுவே எனக்கு பெரும் நிம்மதியாக இருந்தாலும்,அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை நிராகரிப்பது போன்ற ஒரு உணர்வு தோன்றி மனதை அழுத்தியது.

காலையில் கல்யாணம் நல்லபடியாக முடிய, ஒவ்வொருவராக மாமா மாமியின் காலில் விழுந்து ஆசி பெற்று கொண்டிருந்தனர்.என் முறை வந்த பொழுது,மனதில் பாரத்துடனும்,கண்ணில் முட்டிய நீருடனும் நான் வணங்கியபொழுது,மாமா

எப்பொழுதும் போன்ற ஒரு புன்னகையுடன்,

‘ரொம்ப நன்னா இருக்கனும்.சீக்கிரம் உன் மனசுக்கு ஏத்தபடி நல்ல ஒரு வரன் அமையட்டும் ‘ அட்சதையை துவெினார்.

அவரது இயல்பான சிரிப்பை காண மகிழ்ச்சியாய் இருந்தது.ஒருவேளை கோபம் போய்விட்டதோ ?! ?

மத்தியத்திற்கு மேல் உறவுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக விடை பெற்றுச்

செல்ல,எஞ்சியது எங்கள் குடும்பமும்,சுந்தரி அத்தை மட்டுமே!

திடாரென அத்தைக்கு பழனி சென்று முருகனை தரிசிக்க ஆசை வந்தது.இங்கிருந்து அரை மணி நேர பயணம் என்பதால் எல்லோருமாக கிளம்பினோம்.அன்று முகூர்த்த நாள் என்பதால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.நாங்கள் எல்லோருமாக மலை ஏறி செல்லவே இரண்டு மணி நேரம் போல் ஆகிவிட்டது.நடுவில் சுந்தரி அத்தையும் அம்மாவும் இரண்டு முறை இளைப்பாற உட்கார்ந்து பின்னால் மெதுவே ஏறி வந்தனர்.

முருகனை தரிசித்து விட்டு, பிரசாதம் பெற்று கொண்டு கீழே திரும்பியபொழுது கிட்டதட்ட இருட்டி விட்டது.ஆனால் அந்த நேரத்திலும் பக்தர்கள் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர்.சிலர் படியேறாமல் அங்கு இருந்த மின்விசை இழுவண்டியில் ஐந்தே நிமிடத்தில் மலையை ஏறி கொண்டிருந்தனர். அதை பார்த்த சுந்தரி அத்தை,

‘ஏண்டா சீனு, நாமளும் இதுலேயே போய் இருக்கலாம்.இன்னும் சீக்கிரமா சிரமப்படாம தரிசனம் முடிஞ்சிருக்கும் ‘ என்றாள்

மாமா மீண்டும் ஒரு முறை திரும்பி மலை உச்சியை பார்த்தார்,

‘உம்ம் போய் இருக்கலாம்தான்.கொஞ்சமும் சிரமம் தெரிந்திருக்காது.ஆனா இப்போ மனசுக்கு கிடைச்ச ஒரு ஆத்ம திருப்தி அப்ப இருந்திருக்காது.நம்மால இவ்வளவு துரெம் கால் கடுக்க ஏற முடிஞ்சுதே,அதுக்கு அந்த கடவுள் நமக்கு பலம்

கொடுத்திருக்கானே அப்படாங்கற அந்த நன்றி.நடுவில் நம்மால கொஞ்சம் முடியாது தடுமாறிய பொழுதும் ,நின்னு நிதானமா மேலே ஏறி,தரிசனம் முடிச்சுட்டு திரும்பி வந்தோமே,அதுல ஏற்பட்ட ஒரு பரவசம்,சந்தோஷம் இதெல்லாம் அப்ப இருந்திருக்காது இல்லையா ? போராட்டத்துகு பின் கிடைக்கறதுதானே உண்மையான வெற்றி ! ‘

அவர் சொன்னதை அமோதிப்பது போல் அனைவரும் பேசாது நடக்க,மாமா என் தலையை மெல்ல தடவியபடி,

‘என்னடா லாவண்யா,நான் சொல்றது சரியா ? உனக்கு இப்படி படி ஏறி போறதுதானே பிடிக்கும் ? ‘ சிரித்து கொண்டே கேட்டார்.

சட்டென நிறைத்த சந்தோஷக் கண்ணீரில் நெஞ்சம் அடைக்க என்னால் பேச முடியவில்லை.மெல்ல மாமாவின் தோள் மீது சாய்ந்து கொண்டேன்.

காற்று என்றும் போல நில்லாமல் முழு வேகத்தில் வீசிக் கொண்டிருந்தது!

**

சுஜல்

26/ஜுலை/2002

sujal14@yahoo.com

Series Navigation

சுஜல்

சுஜல்