சுப்பையா
கட்டுக்கயிறை அறுத்துக்கொண்டு ஓடித்திரிகிறது கன்றுக்குட்டி. “மது..மது” என்ற என் குரலே அவளுக்கு உற்சாகமூட்டுவதாக, வரவேற்பறையின் ஒரு மூலையிலிருந்து மறுமூலைக்கு எறிந்த பந்துபோல ஓடுவதும், சாடுவதும் இடைக்கிடை என்னருகே வந்து இளைப்பாறுவதுமாக மான் பாய்ந்து கொண்டிருந்தாள் என் மகள் மீரா.
இவள் இந்த பனிப்பூமியில் ஜனிப்பதற்கு முன்னர், பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட காலைவணக்கம், சுகவிசாரிப்புகளையெல்லாம் நிறுத்திவிட்டு, பரமவைரியைப் போல முகம்தூக்கித் திரிகிறார் எங்களுக்கு நேர்கீழே குடியிருக்கும் போலந்துக்காரரான பீற்றர் வரவரச்சி. பகல்பூராவும் நித்திரை கொண்டுவிட்டு மாலையில் அவள் துயிலெழும்பி -பலகைத்தரையில்- தொம்தொம்மென ஓடிவிளையாடத் துவங்க வேலை அலுப்புடன் தன் வீடு திரும்புவார் பீற்றர் வரவரச்சி.
இவளுக்கு ஒரு கதைசொல்லி அருகே இழுத்து அமைதிப்படுத்த என் மனக்கிடங்கிலிருந்து ஒவ்வொன்றாக மீட்டிப்பார்த்தேன். “ஒரேயொரு ஊரிலே” என்று துப்பிக் கொண்டிருந்தது மூளை. எல்லாக் கதைகளுமே அன்று கிளைத்து விருட்ஷமாகிய தொடர்ச்சியேதான். தாத்தாவிலிருந்து தெறித்து விழுந்த பொறியொன்று, தகப்பனில் ஐூவாலையாகி மகனில் நிலைத்து மகனே தாத்தாவாக அவனிலிருந்து வம்சத்திற்கு உருண்டு போகும் போலும்.
இவளுக்கு என்ன கதை சொல்லி நான் துாங்கவைப்பது ? என்னைக் கவனிக்கச் சொல்லிவிட்டு சுமதி சமையலறையில் வேலையாக இருந்தாள். காகமும் நரியையும் அந்தக் குட்டிமூளைக்குள் திணிக்கவும் எனக்கு விருப்பமில்லை. கதைசொல்லி உறங்கவைத்த காலம் என் மண்ணோடு போய்விட்டதோ என்ற ஏக்கம் கவ்வ ரெலிவிஷனைப் போட்டேன். அதில் வனவிலங்குகளின் உணவுச்சங்கிலி போய்க் கொண்டிருந்தது. “மது..! புலியை வந்து பாரடி” என்றேன் ஓடி வந்து என்னருகே ஒட்டிக் கொண்டாள் மகள்.
~~~~~~~~~~~~~~~~
தாக்குதலுக்கான ஒவ்வொரு துரித அசைவையும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். அங்கங்களின் அசைவு மொழியில் தயாரானது தாக்குதல் திட்டம். அது ஆபிரிக்க வனாந்தரத் தொலைவில் ஒரு கிளையாற்றங்கரை. வண்டல் வெடித்து வாய்பிளந்த நிலத்திலிருந்து கானல் எழும்பித் தெறித்தோட சிற்றாறு தன்னிரு கரையிலும் புற்படுக்கை விரித்து சோம்பலாய் உறங்கியது.
அடர்காட்டின் வயிற்றிலிருந்து தண்ணீர் தேடி நீள்பயணம் நடந்து அணியணியாக சிற்றாரருகே வந்த வரிக்குதிரைகள் அபாயங்கள் ஏதும் உள்ளதாவென நாற்திசையும் பார்த்தபின் நீரருந்தத் தொடங்கின. அவை வரும் என்ற நம்பிக்கையும் அதைவிடப் பசியும் கூடி ஆற்றின் படுகை தோறும் வளர்ந்திருந்த புல்மறைவில் பதியமிட்டிருந்தன ஓநாய்க்கூட்டங்கள். தலைவன் அல்லது தலைவியாக இருக்கவேண்டும் முன்னணியில் பதுங்கியிருந்த ஒரு ஓநாய் வரிக்குதிரைகளில் பருமன் குறைந்ததும் ஆற்றுநீருக்குள்ளே முன்னிரு கால்களும் நனைய நின்று நீரருந்திக் கொண்டிருந்த வரிக்குதிரையை நோக்கிப் பாய்ந்து தாக்குதலை ஆரம்பித்து வைத்தது.
சடுதியில் புழுதி கிளம்பி எல்லாவற்றையும் மறைத்ததால் எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. என் மடியில் சாய்ந்து பார்த்துக் கொண்டிருந்த மகள் தன் சுவாரஸ்யம் குலைந்த அதிருப்தியால் “சை” என்று முனகினாள்.
புழுதிப்படலம் மெல்லமெல்ல அடங்க கமராவின் கண்களுக்கு காட்சி புலப்படத் தொடங்கியது. தலைமை ஓநாய் வரிக்குதிரையின் குரல்வளையிலும், மூன்று ஓநாய்கள் பின்னிரு கால்களிலும், வாலிலும் கடித்து, ஓடமுயன்ற அம்மிருகத்தை இழுத்தடக்கிக் கொண்டிருக்க, மீதி ஓநாய்கள் அதைச் சுற்றிப் பாய்ந்து குதறிப் பலவீனப்படுத்த, அது மெல்ல நிலத்தில் சாய்ந்து கொண்டிருந்தது. அதன் இறுதிக்கணத்தின் அவலம் என்னில் கவிந்தது.
மண்ணும் நீரும் அம்மிருகத்தின் சுடுஇரத்தத்தால் நிறம் மாற, உறுமலும் பல்லிளிப்புமாக உடலைக்கிழித்து தின்றன ஓநாய்கள்.
“ஆ…அய்யா பிடிச்சிட்டினம்… பிடிச்சிட்டினம்..” என்று ஆர்ப்பரித்தாள் மகள்.
சமையலறையில் மாவரித்துக் கொண்டிருந்த மனைவி, மகளது சத்தத்தைக் கேட்டு “என்னத்தையடி பிடிச்சிட்டாய்.. ? கவனம் உடைச்சுப் போடாதை..!” என்று சொல்லிக் கொண்டு வெளியே வந்தாள். வந்தவள் மேற்படி கொலையைப் பார்த்ததும் என்மீது சீறி விழுந்தாள்.
“குழந்தையை வைச்சிருங்கோ எண்டுவிட அதுக்கு இப்பவே இரணியக்குணத்தை வளக்கிறிங்களே.. ?”
“இதில என்ன பிழையப்பா.. ? பிள்ளைக்கு எல்லாம் தெரியத்தானே வேணும்”
“தெரியிற வயசில அவள் தெரிஞ்சு கொள்ளுவாள் இப்ப உந்த அறுந்ததை நிப்பாட்டுங்கோ”
“சுமதி.. நீங்க போய் புட்டு அவியுங்கோ” என்று எனக்கு உதவிக்கு வந்தாள் மகள்.
”அம்மாவின்ர முகத்திலை எல்லாம் மா..” என்று சொல்லி கலகலவெனச் சிரித்தாள். தான் எங்களிடம் தோற்றுவிட்டதை உணர்ந்து ஏதோ புறுபுறுத்துக் கொண்டு திரும்பவும் சமையலறைக்குள் சென்றாள் சுமதி. நாங்கள் மீண்டும் ரெலிவிஷனுக்குள் தலையைக் கொடுத்தோம்.
தரையெங்கும் குடல்கள் சிதறியிருக்க, வரிக்குதிரையின் உடல் தெரியாதபடிக்கு சுற்றி மூடியிருந்தன ஓநாய்கள். வயிறு நிறைந்தது இடம்விட்டு ஒதுங்க, மற்றது அதன் இடத்தைப் பிடிக்க ஒழுங்குமுறையில் தீர்ந்துகொண்டிருந்தன தசைகள்.
காற்றில் சேதி அறிந்து செந்நரியும், கழுகுகளும் வந்து பாதுகாப்பான துாரத்தில் நின்றபடி தங்கள் முறைக்காக தவமிருந்தன.
ரெலிவிஷனை நோக்கி கையை நீட்டியபடி “அப்பா.. ஏன் அந்த நாயை மட்டும் சாப்பிட விடுகினமில்லை.. ?” என்று கேட்டாள் மகள்.
“அவை நாயில்லை மகள். ஓநாய்..! நாயைவிடப் பெரிசு.. பொல்லாதது.” என்று அவளைத்திருத்திக் கொண்டு திரையைக் கவனித்தேன்.
கழுகுகளுக்கும் அப்பால் ஒட்டிய வயிறுடன் நின்று பரிதவித்துக் கொண்டிருந்தது ஒரு ஓநாய். ஒரு வித நடனம்போல முன்காலைத் துாக்கி ஓரடி வைப்பதும் பின் வாங்குவதுமாக அது தவித்துக் கொண்டிருந்தது. அதன் பார்வை மட்டும் தீர்ந்து கொண்டிருக்கும் இரையில் அப்பியிருந்தது. எனக்குக் காரணம் விளங்கவில்லை. வேறு குழுவாக இருக்குமோ எனவும் யோசித்துப் பார்த்தேன். வேற்றுக்குழுவின் காலடிகள்கூட இன்னொரு குழுவின் எல்லைக்குள் பட அநுமதிக்கப்படாது. அப்படியான அத்துமீறல்கள் பெரும்பாலும் கொலையில் முடிந்திருக்கும். பின் எப்படி இது.. ?
சிறிது துணிவு வந்ததோ பசியின் கொடூரமோ தெரியவில்லை சற்று நெருங்கி வந்தது அந்த ஓநாய். இன்னும் நாலு எட்டு வைத்தால் உணவில் பங்கு கிடைக்கும் என நானும் ஊக்கம் கொண்டேன். ஆனால் அது இடையில் அப்படியே நின்றது. நின்று அந்த நடனத்தைத் தொடர்ந்தது. முன்காலைத் துாக்கி அந்தரத்தில் வைத்துக்கொள்வதும் பின்னர் தரையில் வைப்பதுமாக பலதடவை பயின்றுவிட்டு மெல்ல முன்னேறியது. மறுகணம் இரையிலிருந்து தலையைத் திருப்பி உறுமின மற்றவை. சடாரென இரண்டு ஓநாய்கள் எழும்பிப்பாய பின்வாங்கி ஓடியது அந்த ஓநாய். அப்போதுதான் பார்த்தேன் அதற்கு வாலே இருக்கவில்லை. வெற்றுப் புட்டத்தை வளைத்தபடி பாய்ந்து ஓடியது பாவம்.
அது தன் வாலை இழந்துவிட்டது. இனச் சண்டையிலோ, இரைக்கான தாக்குதல் நேரமோ, களத்தில் அங்கவீனப்பட்டு இப்போது தீண்டத்தகாததாக குழுவால் பகிஷ்காரம் செய்யப்பட்டு விட்டது.
என் நினைவின் விளிம்பிலிருந்து திடாரென தலையைத் துாக்கினாள் திலகா.
~~~~~~~~~~~~~~~~
தன் திருமணத்திற்கு அழைப்பு தந்திருந்தான் எனது ஊர்க்காரன், அத்துடன் கூடப்படித்தவன். போயிருந்தேன். கோட்சூட் போடாததற்கு சுமதியிடமிருந்து பொழிந்த வழமையான திட்டுக்களை மிகச் சுவாரசியத்துடன் கேட்டுக்கொண்டிருந்ததில் நேரம் போய்விட்டது. வீட்டைவிட்டு ஓடி மெட்ரோ பிடித்து, முகூர்த்தத்திற்கு பிந்திவிட்டேன் என்ற அவசரத்துடன் பெருநடையில் மண்டபத்தை அடைந்தபோது உடம்பு வேர்த்துக் கசகசத்தது. என் நீட்டுமூக்கில் குந்தியிருந்த வேர்வைமுத்துக்களைத் துடைத்து சந்தணம் நெற்றியில் குத்தி நிமிர்ந்தநேரம் தாலித்தட்டு ஆசீர்வாதத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.
இணக்கமான முகங்களைத் தேடியலைந்துவிட்டு காலியாக இருந்த கதிரையில் அமர்ந்தேன். காலநிலை ஒத்துவந்ததால் கணிசமான சனம். எல்லோருடைய பார்வையும் மணவறையை மேய்ந்துகொண்டிருந்தன. மேய்ந்து கொண்டிருந்தவர்களில் திரும்பவும் சிநேகிதர்களைத் தேடினேன். பொதுவாக எனக்கு ஒதுக்கப்பட்ட ஓரிரு சினேகிதர்களும் இப்படியான கொண்டாட்டங்களில் விஸ்கிப்போத்தல் வைத்திருக்கும் இடத்தில் மொய்த்திருப்பார்கள். அந்தப்பகுதி மண்டபத்தை விட்டு ஒதுங்கிய அறையாகவோ, சாப்பாடுகள் வைத்திருக்கும் அறையாகவோ இருக்கும். வந்தவுடன் எழும்பி அந்தப்பகுதிக்குப் போகும் அநாகரிகம் கருதி தனியனாக குந்தியிருந்தேன். அப்படியிருப்பதில் எனக்கு விருப்பம்கூட. மனிதர்களை அவர்கள் அறியாதபடிக்குக் கவனிக்கும் கீழ்மையான செயலுக்கு நான் லபிக்கப்பட்டவன் என்பதால் சங்கடமற்று கண்களால் சுற்றியலைந்தேன்.
ஒரு விஷேசத்திற்கான அழைப்புக் கிடைத்த அன்றிலிருந்து அலங்காரத்திற்கான ஆயத்தம் பெண்களின் மனதில் கூடிவிடுகிறது. நாள் நெருங்க நெருங்க மனதிற்குள் அடிக்கும் உடுக்குச் சத்தத்தில் அது உருவேறிக் கொண்டேபோகும். பின்னர்இ விஷேசம் முடிந்து வீடு திரும்ப மண்டபத்தின் வெளிவாசலில் கால்வைக்கவும் உருவிறங்கி சாமி சாந்தமாகிவிடும். ஆட்டத்தின் உச்சம் பெரும்பாலும் மண்டபத்தில் நிகழ்வதுண்டு. உணர்வுகள் குவிந்து தன்னில் மையங்கொள்ள, கைகள் தாளலயத்துடன் அபிநயத்தைத் தொடங்கும். கூறைச்சேலையின் தொங்கலை இழுத்துவிட்டு, கொண்டையின் அமைப்பை சீர் செய்து, தாமரைப் பதக்கத்தை நேர் செய்து, சரமாய் தொங்கும் தோட்டிலிருந்து காதின் மேல்மடலுக்குச் செல்லும் சங்கிலிவளையத்தை தடவி விட்டு என்று ஓயாமல் கை வேலைசெய்து கொண்டிருக்க, கண்கள் மற்றவளின் அலங்கார குறைவுநிறைவை உள்ளெடுக்க, சும்மா பேச்சுக்கு வாய் பக்கத்து சீட் பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்க, அங்கு ஒரு சதாவதான உருவாட்டம் நிகழும்.
இந்த ஆட்டத்தின் ஒரு பக்க ஜதியாக, இடைக்கிடை துாரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையைக் கூப்பிட்டு அதன் சங்கிலி மோதிரத்தை உறுதி செய்துகொள்ள, மணவறையில் ஜயரும் மாப்பிள்ளை பெண்ணும் மட்டும் வீடியோக்காரனின் ஃபோகஸ்லைட் சூட்டில் வெதும்பிப் போவார்கள். ஜயருக்கெண்டாலும் போகும்போது ஆயிரம் டொலர் கிடைக்கும். ஆயிரம் டொலருக்கு, ஐம்பதுடொலர் வட்டிக்கு என எடுத்து கலியாணச்செலவு செய்த மாப்பிள்ளைபொம்பிளைக்கு என்ன கிடைக்கும்… ? வட்டி கட்டி முடியுமுன்னே குழந்தை கிடைத்து விடும்..!
மணவறையிலிருந்து தொடங்கிய என் கவனம் இடதுபக்கமாக ஒரு சுற்று வருவதற்குள்ளேயே கண்ணில் திலகா தட்டுப்பட்டாள். என்னைப்போல தனியனாக. கண்ணுக்கு இதமான ஆகாசநீலத்தில் பட்டுப்புடவை உடுத்திருந்தாள். மைதீற்றல்கூட கனகச்சிதமாக இருந்தது. அடித்தல் திருத்தல் அற்ற மைதீற்றல்கள் அழகாக இருந்துவிடுவதுண்டு. புருவத்தை மழித்து மான்விழி என்று மருளவைக்கும் புதுப்புருவம் கீறுவது இப்போது நாகரீகமாகத் தெரிகிறது பெண்களுக்கு. திலகாவிடம் அப்படியான தன்நிலை மறந்த அலங்காரம் தெரியவில்லை. எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து விட்டாளா அல்லது எப்போதுமே அவளிடம் யோசனையற்று பின்தொடர்ந்து ஓடுவது இல்லையோ தெரியவில்லை. குறைவில் நிறைவாகத் தெரிந்தாள். ஆனாலும் எந்த கற்புக்கரசிகளும் கூடஇருந்து கதைபேச இலாயக்கில்லாதவளாக ஒதுக்கப்பட்டு, தனியனாக இருந்தாள்.
யாருடைய கைகள் அவளைச் சமுத்திரத் தனிமைக்கு துாக்கி வீசியது… ? அன்பு வைப்பது பிழையா.. அதன் விளைவாக இதயத்தைக் கட்டிப்போடும் உறவுதான் பொய்யா. எதுவுமே பொய்யாகத் தெரியவில்லை. அவள் சேர்ந்து நடந்த கால்களின் பின்னடைவை ஒரு ஆயுட்காலத்தின் எல்லைவரை பொறுத்து ஆசைகள் நிறைவேறாமலேயே இறந்துவிடும் பண்பாடுதான் கற்பு என்றால் அதைக் கும்பிடட்டும், போற்றட்டும் ஆனால் போற்றும் எவரும் அதைக் கைக்கொள்ள விரும்பாத வெளிவேஷக்காரர்தான். இந்த வேசக்கட்டிலிருந்து வெளியேறி ஓரடிகூட வைக்குமுன்னே மடக்கப் பட்டுவிட்டாள் திலகா.
“கொல்லடா அவனை” என்று சூழ்ந்து நின்று ஊக்கம் கொடுத்த உறவுக்காரப் பெண்கள் இருவரும் தத்தமது குழந்தைச் செல்வங்களுடன் இந்த மண்டபத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களும் தாலியைத் தொட்டு ஆசீர்வாதம் செய்திருப்பார்கள். இன்னொரு உறவின் முடிச்சை இறுக்குவதற்கு இவர்களது ஆசீர்வாதம் பலம் சேர்த்திருக்குமாயின் திலகாவின் முடிச்சை அறுத்தது ஏனோ.. ? தான் செய்ய விழைவதை தன்னால் செய்யமுடியாததை மற்றவன் செய்யும்போது தடைக்கற்கள் போடுவது மனிதஇயல்பு போலும்.
பல நுாற்றாண்டுகளுக்கு முன்னர் பிரிட்டனில் மரணதண்டனைக் கைதிகளை கில்லட் மூலம் சிரச்சேதம் செய்வார்களாம். இதற்காகவே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட தண்டனைச் சதுக்கங்களில் பார்வைக்குத் தெரியக்கூடிய மேடைகளில் கில்லட் கத்தி தாங்கிய கம்பம் உயர்ந்து நிற்க, அடிப்பீடத்தில் பின்கைக்கட்டுக் கட்டப்பட்ட தண்டனைக்கைதியின் தலை சாய்ந்திருக்க, பல்லாயிரம் பார்வையாளர்கள் சூழ்ந்து நின்று ஆரவாரம் செய்ய, கத்தி இறங்கி கணப்பொழுதில் தலைவேறு உடல்வேறாக பிரித்துப் போடும். இந்த துன்பநிகழ்வைக் காணவென்று கர்ப்பிணிப் பெண்கள்கூட வருவார்களாம். பிறக்கப்போகும் குழந்தைக்கு சின்னத் தொப்பியோ காலுறையோ பின்னிக் கொண்டு ஒரு மனித உயிர் துடித்தடங்குவதை பார்த்து ஆரவாரித்துக் கொள்வார்களாம். ஆரவாரங்களுக்கிடையிலும் கைகளில் இருக்கும் றேந்தை நுாற்களால் பட்டுப்பாதங்களுக்கேற்ப காலுறைகள் பின்னிக் கொண்டிருப்பார்களாம். ( இதை மேலிருந்து இன்னொருவான் தன் கைவிரல் நகஅழுக்கை எடுத்தபடி சுவாரஸ்யமாக கவனித்திருப்பான். அந்த இன்னொருவன் வேறுயாருமல்ல கடவுள்தான். ) பல மனிதத் தலைகளில் ஏறிமிதித்து காலம் முன்னேறி ஓடிவந்திருக்கிறதே தவிர மானிடர் மாறவில்லை. ஆண்பெண் பேதமற்று எல்லோருடைய இதயங்களுக்குள்ளும் விசம் கக்க நெளியும் கொடிய பாம்புகள் படுத்திருக்கின்றன. சின்ன அதிர்வு போதும் அவை தலையைத் துாக்கி விசப்பல்லைப் பதித்துவிடும்.
~~~~~~~~
அட்லசின் தோள்களிலிருந்து தனது தோளுக்கு பாரத்தை மாற்றி இந்த உலகத்தையே தாங்கப் போவதாக கனவு காணும் ஒரு வலிய தோளிலிருந்து இடம்வலமாக வளர்ந்த கைகள்தான் திலகாவின் காதலனை வலிப்பு வந்து நுரை தள்ளும் வரைக்கும் அடித்துப் போட்டது என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். இந்த முரணிலிருந்து என்னால் மீளமுடியவில்லை. நேற்று முளைத்த பிஞ்சுப் பல்லால் தாயின் முலையை வலிவரக் கடிப்பதிலிருந்து தொடங்குகிறதோ வன்முறையின் ஆரம்பப்புள்ளி. சாம பேதங்கள் இருக்கும்போது தண்டத்தைக் கருவியாக இயக்கும் மனிதரை நம்பி இந்த உலகம் ஓடும்போது சருகுகளான ஆத்மாக்களின் காதலும் நேசமும் எப்படி நிறைவேற முடியும்.
திலகா எடுத்த முடிவுகள் தவறாக இருக்கலாம். கணவனை விட்டு வேறொருவனைத் தெரிவு செய்ததும் அவர்களது தராசுக்கு பிழையாக இருக்கலாம். ஆனால் அடித்து உதைத்து உறவையும் பிரித்துவிட்டு ஆயுள்வரைக்கும் அவளை ஒதுக்கி வைப்பது சிறுகச் சிறுகச் செய்யும் சித்திரவதை அல்லவா. ?
மனிதன் ஒரு சமூகப்பிராணி என்று சொன்னவன் சரியாகச் சொல்லியிருக்கிறான். இந்த ஓநாய்கள் கூட சமூகமாய்த்தான் வசிக்கின்றன. அவற்றுக்குள்ளும் ஒரு திலகா இருக்கிறாள்.
“அப்பா..! அப்பா..!! .. அது இப்ப கழுகுகளைச் சாப்பிட விடுகுது இல்லை.” என்று திரும்பவும் குறைப்பட்டுக் கொண்டாள் மகள்.
மகளின் சிணுக்கம் என் நினைவுகளைக் கலைத்துவிட்டது. எலும்பும் தோலுமாக மிஞ்சியிருக்கும் வரிக்குதிரையின் உடலில் தசையைத் தேடிக்கொண்டிருந்த வாலில்லாத ஓநாய், தனக்குப் போட்டியாக வந்த கழுகுகளைக் கலைத்துக் கொண்டிருந்தது. பறப்பது போல போக்குக் காட்டுவதும் திரும்ப வந்து சூழ்ந்து கொள்வதுமாக கழுகுகள் அந்த ஓநாயை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.
24-july-99.
- வழியோரம் நதியூறும்…
- குளிர் காலம்
- ரமேஷ் சுப்பிரமணியன் கவிதைகள்
- புவி யீர்ப்பு விசை.
- பின் தங்கிய சுவடுகள்
- டிராபிக் லைட்டுகள் பற்றிய முக்கியமான அறிவுகள்
- டாக்டரும் கத்திாிக்கோலும்.[டாக்டர் ஒருவர் பேஷண்ட் வயிற்றில் கத்தாிக்கோலை வைத்துத் தைத்துவிட்டார் என்ற செய்தி வாசித்தபின் உருவான
- குஞ்சன்வயலிலிருந்து தமிழீழத்தை நோக்கி…….சோபாசக்தியின் கொாில்லா — ஒரு விமர்சனம்
- மாட்ரிக்ஸ் (Matrix) என்ற திரைப்படத்தின் கேள்விகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 8 -ஆ.மாதவனின் ‘பறிமுதல் ‘ – தர்மமும் சட்டமும்
- கேரட் சாதம்
- தேங்காய்பால் போண்டா
- ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி
- அறிவியலாளர்கள் அரிசியின் மரபணு குறிப்பேட்டை விவரிக்கிறார்கள்
- மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிர் செய்ய இந்தியா அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.
- நம்மைப் பற்றி நாம்.
- மதுரையும் மல்லிகைபூவும்
- சின்ன கவிதைகள்
- இளமானே…!
- ஒரு தாயின் அழுகை
- பெரியாழ்வார்
- நகர் வெண்பா – 5
- தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
- பேரூந்து இலக்கம் 86
- இஸ்ரேலும் இந்தியாவின் இடதுசாரிகளும் : கோஷங்கள் யாருக்காக ?
- பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் – இஸ்ரேல் பற்றி ஜனவரி 31, 1970இல் எழுதியது
- அனுபவ மொழிகள்
- தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பு
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி
- முஷாரஃபின் வாக்கெடுப்பு
- ஓநாய்க்கூட்டம்
- அண்ணாச்சி