பாமா
‘ரொம்பாக் கிசும்புக்காரனா இருப்பாம் பொறுக்கோ இந்தப்பெய. அவுகய்யனும் அம்மையும் அப்பிராணிக கெணக்கா இருக்கைல அவுகளுக்குப் பெறந்த இந்தக் கழுத இப்பிடித் தறுதலையா வந்து வாச்சிருக்கே, ‘ கோவமும் சலிப்புமாச் சொல்லிக்கிட்டு இருந்த மாடத்தியத் தடுத்துட்டு முத்து ரத்துனம் மேல சொன்னா. ‘அதானடி… அந்த வீட்டுப் பிள்ளைக பூராம் இப்பிடித்தான் இருக்குதுக மித்ததுகளையாவது ஒரு வழில சேத்துரலாம். ஆனா இவெ இருக்கானே.. அதான் இந்த அம்மாசிப் பெய, இவன எட்டுலயுஞ் சேக்க முடியாது. எழவுலயுஞ் சேக்க முடியாது. ரொம்பா ரப்புக்காரன். ‘
‘யாரு–அந்தத்த இருளாயி பேரனத்தான சொல்றீக ? எம்மா.. அவெ வெலாவுல வெடுச்ச பெயல்ல, ‘ பக்கத்துல ஒக்காந்து பாசி நெத்து அடுச்சுக்கிட்டுருந்த தாயம்மா சொன்னா.
அம்மாசிக்கு இருவது வயசு இருக்கும். தெருவுல பொம்பளைக சொன்னது கெணக்கா இவெ ஒரு சைசான பெயதான், ஊர்ப் பெரியவுகளுக்கு இவன வள்ளுசாப் புடிக்காது. ஆனா எளவட்ட பெயல்களுக்கு இவம்னா உசுரு.
வயசுக்குத் தக்கன வளத்தியும், கருத்த மீசையும் அதுவுமா பாக்குதுக்கு அம்மாசி நல்லா இருப்பான். நல்ல தேகக்கட்டு. அவெஞ் சிருச்சாம்னா வெயிலுக்குள்ள துள்ளுற கெண்ட மீனுக கெணக்கா பளீர் பளீர்னு பல்லு ஒளியடிக்கும். பெய என்னத்தத்தாம் போட்டு பல்லு தேப்பானோ தெரியல. எப்பயும் நையாண்டியாப் பேசுனாலும் ஒரு நாயத்தோட பேசுவான். என்னமோ விட்டேத்தியாத் திரிரவங் கெணக்காத்தான் தெரிவான். ஆனா ரொம்ப வெவரமான பெய.
பொழுதெனிக்கும் அவனப்பத்தி ஆவலாதிதான் வரும். அந்தப் பெயலச் சரியாப் புருஞ்சுக்கிராமத்தாஞ் சனங்க இப்பிடி அவனப் பத்திக் கூடக்கொறயாப் பேசுதுன்னு நெனப்பேன். இப்பக்கூட அவெஞ் செஞ்சது எனக்கு நாயமாத்தான் தெரிது, அவன நேராப் பாத்து பூராத்தையும் கேட்டுட்டேனே நானு.
வெள்ளங்காட்டி, கம்மாப்பக்கம் வெளிக்குப் போகையில அவனப் பாத்தேன். அப்பத்தான் அவனும் நானும் பேசிக்கிட்டோம், என்னடா வெசயமுன்னு கேட்டதுக்கு, எடுத்த எடுப்புல பூஞ்சிரிப்பா ஒரு சிரிப்புச் சிருச்சான். சிருச்சுக்கிட்டே நடந்த வெவரத்தச் சொன்னான்.
‘ஏ மச்சான், இதுல என்ன தப்புஇருக்குன்னு சொல்லு. நேத்து அவரு பரசுராமரு வயக்காட்ல வரப்பு வெட்டிட்டு வெள்ளனத்துல வீட்டுக்கு வந்துட்டேன். வந்து கூழக் குடுச்சுப் போட்டு அப்படியே நெட்டியக்கல்லு வரைக்கும் ஒரு நடபோயிட்டு வருவமின்னு வண்டி ஏறுவேன் ‘.
‘நெட்டியக்கல்லுக்கு என்ன சோலியாப் போன ? ‘ நாங்கேட்டேன்.
‘சொல்றதக் கேளு மச்சான். அங்க கெணத்துவேல கெடைக்குமுன்னு இந்தக் கடக்காரப் பொண்டுகப் பெய சொன்னாமுன்னு வேல வெசாரிக்கப் போனேன். நம்மூரு பஸ்டாண்டுல வண்டி ஏறமின்னப் பெரும்பாடாப் போச்சு அம்புட்டுக் கூட்டம். ‘
‘வண்டில ஏறயில யாரோடயும் சண்ட போட்டிட்டியா ? ‘
‘நீ ஒரு திக்கம் மச்சான். முழுசுங் கேக்காமெ, ஒம் பாட்டுக்கு என்னத்தயாவது சொல்வ. ஊடால பேசாமக் கேளு. ‘
அவெங் கொணந் தெருஞ்சதுனால நானும் அவசரப் படாமெ, ‘சரி சொல்லு; நானு குறுக்கே பேசல, ‘ சொல்லிட்டு அவெ என்ன சொல்லப் போறாமுன்னு அவனையே பாத்தேன்.
‘அம்புட்டுக் கூட்டத்துல அடுச்சுப்புடுச்சு ஏறி எடம்பாத்து ஒக்காந்துட்டேன். அதே வண்டில அவரு சந்துர சேகரும் ஏறுனாரு. சந்துரசேகர்னா யாருங்ர ? அதான் எங்கய்யம் பண்ண வேல செய்ராம்ல. அந்த மேச்சாதி மொதலாளிதான். வந்தவரு எனியப்பாத்ததும் என்ன சொன்னாருங்க ? இப்பப்பாரு. எங்க ரெண்டு பேத்துக்கும் எடைல உழுந்த டயலாக்க அப்பிடியே பாத்துக்கோ. ‘
‘ஏலேய்.. நீ அந்த மாடசாமியோட மகந்தானடா ? ‘
‘நானு மாடசாமியோட மகனேதான். ‘
‘ஏலேய்… எனிய யாருன்னு தெரியலயாடா ? ‘
‘ஏந் தெரியல. நல்லாத் தெரிமே. நீரு சந்திரசேகருதான ? ‘
சொல்லிக்கிட்டே இருந்தவன் வேட்டியத் தூக்கிட்டு டவுசரு பையில இருந்து ஒரு பீடிய எடுத்து பத்த வச்சுக்கிட்டான்.
‘இந்தப் பீடி எதுக்குங்க மச்சான். அந்நியாரம் பீடிய எடுத்துப் பத்த வச்சிக்கிட்டு பொகய உட்டுக்கிட்டே பேசுனம் பாத்துக்கோ. அதான் அது கெணக்காவே இருக்கனும்னு தான் இப்பப் பத்த வச்சேன். ‘
‘சரி சொல்லுடா. பெரிய ஆக்டிங்காரந்தான். பொறுமய சோதுச்சுப் போடுவ, ‘ நானும் கொஞ்சம் எருச்சலா கேட்டேன்.
‘சர்த்தான், இப்பப் பாரு மச்சான். ‘
‘தெருஞ்சுக்கிட்டுமாடா ஒக்காந்துருக்க ? எந்திரிடா நா ஒக்காந்துக்குரேன். ‘
‘நானு இம்புட்டுக் கூட்டத்துல நசுங்கி பிதுங்கி இந்த எடத்தப் புடுச்சு ஒக்காந்துருக்கேன். இங்ன நெட்டியக்கல்லுல எறங்குவேன் அதுவரைக்கும் நா ஒக்காந்துக்கிட்டு வாரேன். அதுக்குப் பெறகு நீங்க ஒக்காந்துக்கொங்க. ‘
‘ஏலேய்… இந்தாருக்க நெட்டியக்கல்லுதானல.. எந்திரிடா. தள்ளிக்கோ ஐயா நின்னுக்கிட்டு வரைல நீயி மருவாத இல்லாமெ ஒக்காரலாமாடா ? ‘
‘ஐயாவா ?.. எங்கய்யா உம்ம பிஞ்சைலதான இப்ப உழுதுக்கிட்டுக்கிருக்காரு நீரு எப்ப எனக்கு ஐயாவானீரு ? நீரு தலைகீழா நின்னாலும் நானு எந்திரிக்க மாட்டேன். ‘
இதுக்குள்ள பீடியுங் கட்டப் பீடியாப் போக தூக்கிக் கெடாசிட்டு கெக்கருச்சுக்கிட்டு சிருச்சான். அவெ மொகத்துல இருந்த குசும்பையும், சிரிப்பையும் பாத்துட்டு எனக்குஞ் சிரிப்பு வந்துச்சு.
‘கடேசி வரைக்கும் நீயி எந்திரிக்கவே இல்லியாக்கும் ? ‘ நானு ஆத்தாமெக் கேட்டேன்.
‘அடி சக்கே, நானாவது எந்திரிக்கிரதாவது. இத்தோடய நின்னுச்சுன்னு நெனைக்க ? இன்னியும் பாரு, ‘ சொல்லிக்கிட்டே கொரல மாத்திப் பேச ஆரம்புச்சான்.
‘ஏலேய்.. ஒனக்குப் படி அளக்குர சம்சாரிக்கிட்டப் போயி வம்பு பண்றியேடா. ஒங்கய்யனுக்கு இருக்குர நன்றி விசுவாசம் ஒனக்குக் கடுகளவு கூட இல்லியே. மொதலாளி வாராருன்னா பள்ளு பறச்சாதி பூராம் அம்புட்டுப் பணிவா எந்துருச்சு நிக்கும். இவெம் பொடிப்பெயலுக்கு எங்க அதெல்லாந் தெரியப் போகுது ‘
‘யோவ்… எந்திரிக்க முடியாதுன்னா முடியாது. இதுக்கு மேல பேசுனீர்னா மரியாத கெட்டுப் போகும். ‘
‘நெட்டியக்கல்லு வரவும் எறங்கிட்டேன். அவரு தரப்புரத்தரப்புரன்னு மொணங்கிக்கிட்டே இருந்தாரு. நா மேல ஒன்னும் பேசல. இதுதான் நடந்தது மச்சான். இங்க நம்ம தெருப்பெயமக்க எனிய மென்னு துப்புராளுக. ‘
‘அதுக்குள்ள எப்பிடி ஊருக்குள்ள தெருஞ்சுச்சு ? ‘ நாங் கேட்டேன்.
‘அந்தக் கண்ராவிய ஏங் கேக்குர ? சாயந்தரமே சந்துரசேகரு எங்கய்யங்கிட்ட வெசயத்தச் சொல்லி எனிய கண்டுச்சு வைக்கச் சொன்னாராம். எங்கய்யா எங்க வீட்ல போட்ட கூப்பாட்டுலதான் இப்ப தெருப்பூராம் இதே பேச்சா இருக்கு. ‘
‘நம்மூருப் பொட்டச்சிக சும்மான்னு இருக்க மாட்டேங்காளுக. அவா ஊமச்சிறுக்கி, என்ன இருந்தாலும் ஒரு சம்சாரி நிக்கைல ஒரு பறப்பெய ஒக்காத்துக்கிட்டு வரலாமா ? அம்புட்டுச் சவுடாலு என்ன கேக்குது இவனுக்கு ? ரொம்பா மணியம் புடுச்ச பெய. இவனுக்குப் போங்காலம் நெருங்கிருச்சுங்கா, ‘ நாஞ் சொல்லவும் அம்மாசி சிருச்சான்.
‘இது தேவல மச்சான். அந்தக் கெழவபணியாரமுத்து என்ன சொல்ராம்ங்ற ? ‘ சம்சாரி நம்மளுக்குத் தெய்வங்க மாதிரி. அவுக இல்லினா நம்ம பொழைக்க முடிமா ? சுத்த வெவரங் கெட்ட நீசப் பெயல்களாவுல இருக்கானுக. நக்குன நாய்க்கு நா எழும்பாதும்பாங்க. இந்த நாயி மேல உழுந்தே புடுங்கப் பாக்குது. சம்சாரிக மனசு வச்சா அம்புட்டுப் பல்லையும் பேத்துருவாக பேத்து. ‘
‘கெழவஞ் சொல்லச் சொல்ல எனக்குச் சிரிப்புத்தான் வந்துச்சு. சிரிக்கதப் பாத்துட்டு கெழவ இன்ன ரெண்டு வசவு வஞ்சான். ‘ அம்மாசி சொல்லிக்கிட்டே சிரிச்சான். நானும் சிருச்சுக்கிட்டே வந்துட்டேன். ‘
அம்மாசியப் பத்தி பேச்சு அடங்குன ஒரு வாரத்துக்குள்ள திரும்பியும் அவனோட நட்னத்தனத்தப் பத்தி தெருவுலப் பேசுனாக. ஆனா அவெம் மட்டும் ஒன்னுமே நடக்காதது மாதிரி செவனேன்னு போறதும் வாரதுமா இருந்தான். நாந்தான் அவனக் கூப்டு.
‘ஏப்பா, இப்ப என்ன செஞ்ச ? ‘ ன்னு வெசாருச்சேன். நானு வெசாரிக்கவும் அவெ ரொம்பா எடக்காச் சொன்னான், ‘மச்சா, இன்னைக்கு ரவைக்கு ஊர்க்கூட்டம் இருக்கு. வந்துரு பெரிய கொலயாளிய வெசாரிச்சுத் தூக்குல போடப் போறாக. ‘
‘ஊர்க்கூட்டம் இருக்கட்டுமப்பா, நீயி என்ன செஞ்சன்னு சொல்லு. ‘
‘எனியத்தான் மச்சான் வெசாரிக்கப் போறாக. கட்டாயம் வந்துரு என்ன, ‘ அம்மாசி சொன்னான்.
‘இப்ப என்ன ஆவலாதி ஓம்மேல ? சொல்லுப்பா–கேப்போம், ‘ நானு திரும்பியும் கேட்டேன்.
‘அதாவது மச்சான், ரெண்டு நாளைக்கு முன்னால அந்தச் சின்னையா முத்துக் கருப்பன் எனியக் கூப்டு, அந்த ஜெயசங்கரு மொதலாளியோட பிஞ்சைல தண்ணிபாச்சப் போனாரு. ‘
‘ஆமா.. ஒனியப் பாத்தேனே வெள்ளையுஞ் சொள்ளையுமா மம்பிட்டியத் தூக்கிட்டு போனீயே. நீ போன சோக்கப் பாத்து, நீ மம்பிட்டிக்கு கணகின போடப் போறீயாக்கும்னு நெனச்சேன், ‘ நாஞ் சொன்னேன்.
‘இந்த லக்கலுதான வேண்டா மச்சான். ஏ, வெள்ளையுஞ் சொள்ளையுமா வேலவெட்டிக்குப் போக்கூடாதா ? நானு அன்னைக்குன்னு பாத்து இந்த முத்திருளங்கிட்ட ஒரு ரூவா குடுத்து சட்டைக்குப் பெட்டி போட்டுல போட்டுட்டுப் போனேன். ‘
‘ஆமாமா…, மடிப்புக்கலையாத சட்டையாத்தான் இருந்துச்சு. சரி என்ன வெசயமுன்னு சொல்லு, ‘
‘ஜெயசங்கரு பிஞ்சைக்குப் போனனா. அங்க அவரு பம்பு செட்டுக்கிட்ட நின்னுக்கிட்டு இருந்தாரு. நானு மம்பிட்டியோட போயி நிக்கவும் அவரே பேச்சே எடுத்து உட்டாரு. ‘ சொல்லிக்கிட்டுருந்தவெ அவரு பேசுன தோரணைல பேச ஆரம்புச்சான்.
‘ஏலேய் ஒங்க தெரு முத்துக்கருப்பங்கிட்ட தண்ணி பாச்சரதுக்கு ஒரு ஆளப்பாத்து அனுப்பச் சொன்னேன். நேரமாச்சு. இன்னும் ஒரு பெயலயுங் காணோம். ‘
‘முத்துக்கருப்பஞ் சின்னையா எனியத்தான் அமத்திப் போச் சொன்னாரு. அதான் வந்துருக்கேன். ‘
‘ஒனியப் பாத்தா வேலைக்கு வந்துருக்காப்லயா தெரியுது. எங்கயே ஆபிசுக்குப் போறவங் கெணக்கா வந்து நிக்க. நீயி ரொம்பாச் சள்ள புடுச்ச பெயல்ல. வேற ஆளே கெடைக்கலன்னா அந்தப் பெய ஒனியப் போச் சொன்னான் ? ‘
‘இப்ப என்னங்றீரு ? ஒமக்குத் தண்ணிதான பாச்சனும். நானு எப்பிடி வந்தா ஒமக்கு என்ன ? ‘
‘ஏலேய், இப்ப மணி என்னன்னு தெரியுமாலே ? வந்துருக்காம்பாரு, எங்கயோ ஊரு தேசம் போறவ மாதிரி. ‘
‘அண்ணாச்சி ஒங்ககிட்டதான் ரெஸ்ட் வாச்சி. இருக்குது. ஏங்கிட்ட இல்லியே அண்ணாச்சி. நீங்கதான் மணி என்னன்னு சொல்லனும் அண்ணாச்சி. கூடிய சீக்கிரம் வாச்சு ஒன்னு வாங்கனும் அண்ணாச்சி வாங்கிக் கெட்னாப் பெறகு மணி பாத்து சொல்றேன் அண்ணாச்சி. ‘
அம்மாசி இப்பிடிச் சொல்லிக்கிட்டிருக்கைல அவெம் மொகத்தப் பாத்து எனக்குச் சிரிப்ப அடக்க முடியல. நானு சத்தமாச் சிரிக்கவும், ‘பொறு மச்சான், கொறையவுங் கேளு. நானு அண்ணாச்சின்னு கூப்டவும் அவரு மொகம் போன போக்கப் பாக்கனுமே. ரொம்பாக் கடுப்பாயிட்டாரு. கடுப்போடயே திலும்பியும் பேசுராரு.
‘என்னலே சொன்ன ? அண்ணாச்சியா ? வாய்க்கு வாயி அண்ணாச்சின்னா சொல்ற ? யாருடா அண்ணாச்சி ? யாருக்குடா அண்ணாச்சி. ஒருப் பறத் தாயளியாடா எனிய அண்ணாச்சின்னு சொல்றது ? ‘
‘கண்டமாணிக்கப் பேசாதீரும். பெறகு நானும் பேசுனா ஒமக்கு மரியாத கெட்டுப் போகும். வேண்டாம்னா போச்சொல்லுரத உட்டுட்டு.. மயிரு பேசுரதப்பாரு. ‘ சொல்லிக்கிட்டே விருட்டுன்னு வீட்டுக்கு வந்துட்டேன். ஊருக்குள்ள வந்து என்னத்தப் புளுகிட்டுப் போனானோ இவனுக கூட்டம் போட்டுருக்கானுக. ‘
‘அப்ப ஒனக்கு தெண்டந்தான் இன்னைக்கு. சம்சாரியப் பாத்து மயிருதயிருன்னு பேசிட்டு வந்துருக்கில. ‘
‘அட நீ ஒன்னு மச்சான், எனிய அதுக்கா வெசாரிக்கப்போறாகன்னு பாத்த ? நானு அந்த ஆள அண்ணாச்சின்னு கூப்டதுதான் பெருங் குத்தமாப் போச்சு இப்ப. அதுக்குத்தான் கூட்டம். ‘
அம்மாசி சொன்னது கெணக்கா ராத்திரி கூட்டங் கூடிட்டாக நாட்டமெ அம்மாசிட்ட கேட்டாரு. ‘ஏலேய் அம்மாசி, நம்ம சாதி என்ன, மொதலாளியோட சாதி என்ன ? யாரு போயி யாரப் பாத்து அண்ணாச்சிங்றது ? சுத்த வெவரங்கெட்ட பெயலா இருக்கியே. ‘
அம்மாசியும் பதுலுக்கு, ‘நம்ம பறையரு அவரு நாய்க்கரு நாந்தான் போயி அவரப் பாத்து அண்ணாச்சின்னேன். இதக் கேக்குதுக்கு ஒரு கூட்டம், ‘ சொல்லிக்கிட்டுத் தலயச் சொருஞ்சிக்கிட்டான்.
அம்மாசியோட பதுலக் கேட்டு எளவட்ட பெயல்கள்ளாம் கொல்லுன்னு சிருச்சானுக.
நாட்டாமெ வந்த வெளத்த அடக்கிக்கிட்டுச் சொன்னாரு, ‘சரி ஓங்கிட்டப் போயி எனக்கு அது இதுன்னு பேசிக்கிட்டு சட்டுன்னு சொல்லுலே. எதுக்கு மொதலாளிய அண்ணாச்சின்னு சொன்ன. ‘
அம்மாசியும் பட்டுன்னு சொன்னான், ‘அவரு எனிய விட வயசுல மூத்தவரு. அதான் அண்ணாச்சினே. எளையவரா இருந்துருந்தா தம்பின்ருப்பேன். ‘
இந்தப் பதுலக் கேட்டுட்டு இன்னுஞ் சத்தமாப் பெயல்க சிரிச்சானுக.
‘இந்தப்பெய லேசுக்குள்ள மசியமாட்டான். பதுலப்பாரு ரொம்ப வில்லங்கம் புடுச்ச பெய, ‘ சின்ன நாட்டாமெ சொன்னாரு.
ஒடனே நாட்டாமெ சீரியஸா பேச ஆரம்புச்சாரு ‘ஏலேய் ஒனிய யாரும் டமாசு பண்றதுக்கு இங்க கூப்டல. இம்புட்டுக் காலமா யாராச்சும் பள்ளுபறையனுக, நாய்க்கமார ஒறமொற சொல்லிக் கூப்டுருப்பமா ? நீ நேத்துப் பெறந்த பெய இப்பிடி வெதண்டா வாதஞ் செய்றீயே. அண்ணாச்சின்னு சொன்னது தப்புத்தானலே. ‘
ஒடனே அம்மாசியும் சீரியசா பேச ஆரம்புச்சான். ‘நாஞ்சொன்னதுல ஒன்னும் தப்பில்ல. நானென்ன மாமெமச்சாமின்னு ஒறவு வச்சு பொண்ணு பிள்ளயா கேட்டுட்டேன் ? சாதாரணமாக அண்ணாச்சின்னு மருவாதையாக் கூப்டதுக்கே இம்புட்டு ரகள செய்றீக. போன வாரத்துல சாக்கட அள்ளுற இருளப்பன அண்ணாச்சினு கூப்டதுக்கு அம்புட்டுப் பேரும் சேய்.. கொறப்பெயலப் போயி அண்ணாச்சிங்கான்னு எளக்காரமாப் பேசுனீக. இப்ப என்னடா எப்படிடா நாய்க்கரப் போயி அண்ணாச்சிங்கலாம்னு எடங்கலுக்கு மொடங்கலா கேக்குறீக. அந்த பூவதிக் கெழவி சொல்றது கெணக்கா ‘கழுத விட்டைல முன் விட்ட வேற பின்விட்ட வேறயா ? விட்டன்னா எல்லாம் விட்டதான். மனுசம்னா எல்லாம் மனுசந்தான் ‘ சொல்லிட்டு விருட்டுன்னு வீட்டுக்குப் போயிட்டான் அம்மாசி.
அம்புட்டுப் பேரும் அவனயே அருவசமா பாத்தாக.
- வழியோரம் நதியூறும்…
- குளிர் காலம்
- ரமேஷ் சுப்பிரமணியன் கவிதைகள்
- புவி யீர்ப்பு விசை.
- பின் தங்கிய சுவடுகள்
- டிராபிக் லைட்டுகள் பற்றிய முக்கியமான அறிவுகள்
- டாக்டரும் கத்திாிக்கோலும்.[டாக்டர் ஒருவர் பேஷண்ட் வயிற்றில் கத்தாிக்கோலை வைத்துத் தைத்துவிட்டார் என்ற செய்தி வாசித்தபின் உருவான
- குஞ்சன்வயலிலிருந்து தமிழீழத்தை நோக்கி…….சோபாசக்தியின் கொாில்லா — ஒரு விமர்சனம்
- மாட்ரிக்ஸ் (Matrix) என்ற திரைப்படத்தின் கேள்விகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 8 -ஆ.மாதவனின் ‘பறிமுதல் ‘ – தர்மமும் சட்டமும்
- கேரட் சாதம்
- தேங்காய்பால் போண்டா
- ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி
- அறிவியலாளர்கள் அரிசியின் மரபணு குறிப்பேட்டை விவரிக்கிறார்கள்
- மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிர் செய்ய இந்தியா அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.
- நம்மைப் பற்றி நாம்.
- மதுரையும் மல்லிகைபூவும்
- சின்ன கவிதைகள்
- இளமானே…!
- ஒரு தாயின் அழுகை
- பெரியாழ்வார்
- நகர் வெண்பா – 5
- தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
- பேரூந்து இலக்கம் 86
- இஸ்ரேலும் இந்தியாவின் இடதுசாரிகளும் : கோஷங்கள் யாருக்காக ?
- பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் – இஸ்ரேல் பற்றி ஜனவரி 31, 1970இல் எழுதியது
- அனுபவ மொழிகள்
- தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பு
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி
- முஷாரஃபின் வாக்கெடுப்பு
- ஓநாய்க்கூட்டம்
- அண்ணாச்சி