அஞ்சு ரூபா

This entry is part [part not set] of 15 in the series 20010311_Issue

அருண் வில்ஃபிரட் ஜஸ்டின்


திருச்சியிலிருந்து திண்டுக்கல் வழியாக மதுரை செல்லும் NH45-இல்,என் புது காாில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.பக்கவாட்டு கண்ணாடி வழியாக ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்த மாடுகளையும், பச்சையும் மஞ்சளும் கலந்து காட்சியளித்த வயல் வெளிகளையும்,அவ்வப்போது வந்து மறைந்த பம்பு செட்டு தண்ணீரையும் ரசித்துக் கொண்டிருந்தேன்.டிரைவர் ரமேஷ் மிகவும் சிரத்தையாக கார் ஓட்டிக்கொண்டிருந்தான். என் வீட்டில் சில ஆண்டுகளாக வேலை செய்கிறான்.

இருபது கி.மீ கடந்திருப்போம், கார் சற்று வேகம் பிடித்தது.கார் மதுரையை நோக்கிச் செல்ல,என் எண்ணங்கள் பின் நோக்கிச் சென்றன.வளர்ந்த வாழ்க்கையை அசை போடத் தொடங்கினேன்.

நல்ல பள்ளியில் படிப்பு.பின்பு B.E, M.E Computer Science.கேம்பஸ் இன்டெர்வ்யூவில் தேர்வாகி பெங்களூாில், பன்னாட்டு கம்பெனியில் வேலை.கை நிறைய சம்பளம்.இரண்டு ஆண்டுகள் ஓடியபின்,அமொிக்காவில் வேலை. கார் 80 கி.மீ வேகத்தைத் தொட,

‘ரமேஷ்,கொஞ்சம் மெதுவா போப்பா ‘ என்றேன்.

‘சாி சார் ‘.ஸ்பீடா மீட்டாின் முள் மீண்டும்,75-ஐ தொட்டது.

மனதுக்குள் மெல்ல சிாித்துக் கொண்டேன்.வெர்ஜினியாவில்,ஹைவே 95-இல் 130 கி.மீ வேகத்தில் பறந்த நாட்கள் நினைவில் வந்தன.சாஃப்ட்வேர் என்ஜினியராக வேலையில் சேர்ந்து,டிவெலப்மென்ட் மானேஜராக உயர்ந்த நாட்களும்,சுற்றித் திாிந்த இடங்களும்,சம்பாதித்த தொகையும்,என்னை மகிழ்வித்தன.வெர்ஜினியாவில் வாங்கிய Single Family Home-ம்,சொந்த ஊரான திருச்சியில் கட்டி முடித்த வீடும்,என் கண் முன் தோன்றின.என் உழைப்பும்,உழைப்பால் ஈட்டிய செல்வமும்,என்னை பெருமை கொள்ளச் செய்தன.எனக்கு நானே பல முறை சபாஷ் போட்டுக் கொண்டேன்.

‘சாப்பிடலாமா சார் ?திண்டுக்கல் வந்திருச்சு ‘-என்றான் ரமேஷ்.

‘சாி.நல்ல நான்வெஜ் ஓட்டலாப் பார்த்து நிறுத்து ‘ என்றேன்.நிறுத்தினான்.

சாப்பாடு நல்ல ருசி.அதிலும், பெப்பர் மட்டன் fry,மிக நன்றாக இருந்தது.சாப்பிட்டபின்,காாில் ஏறினோம்.ஐந்து நிமிடத்திற்குப்பின்,ஏதேச்சையாக பர்ஸை எடுக்கையில்,பில் கண்ணில் பட்டது.பெப்பர் மட்டன் fry பில்லில் இல்லை.ஒரு வினாடி காரை ஓட்டலுக்கு விடலாமா என்று சிந்தித்தேன்.மறு வினாடி, ‘What the heck! It ‘s not my mistake ‘ என்று எண்ண, பயணம் தொடர்ந்தது.மனதுக்குள் சின்ன சஞ்சலம். அது அற்ப சந்தோஷமா,இல்லை குற்ற உணர்வா என்று புாியவில்லை.என்னையறியாமல்,தூங்கிப் போனேன்.

மாமனாருக்கு ஃபோன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர,சட்டென்று விழித்தேன்.

‘ரமேஷ்,கொடைரோடு வந்திருச்சா ? ‘

‘இல்ல சார். இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துரும் ‘

‘கொடைரோட்ல ஒரு போன் பூத்ல வண்டிய நிறுத்துப்பா ‘

‘பஸ் ஸ்டாண்டுக்குள்ள நிறுத்தவா சார் ? ‘. சாி என்றேன்.

கடைக்காரர் ஃபோன் பூத்துடன்,கூல் ட்ாிங்ஸ்,மற்றும் ஐஸ் க்ாீம் வியாபாரமும் செய்து கொண்டிருந்தார். ஃபோன் பேசி முடித்து,பில் பணத்தை கொடுக்கும் போது,ஒரு சிறுவன் ஓடி வந்தான்.தலையில் இருந்த முறுக்குக் கூடையை இறக்கிவிட்டு,

‘அண்ணே ரெண்டு அஞ்சு தாங்கண்ணே ‘ என்று பத்து ரூபாய் நோட்டை கடைக்காராிடம் நீட்டினான்.

‘ஒரு நிமிஷம் இருடா மாணிக்கம்,உள்ள போய்ட்டார்ந்தரேன் ‘.

பையனை நோட்டமிட்டேன்.பன்னிரெண்டு,பதின்மூன்று வயதிருக்கலாம்.கிழிந்து போன சட்டை.பசியால் வாடிய முகம்.செம்பட்டை முடி.ஏழ்மையின் கொடுமை,அவன் உடம்பில் தென்பட்டது.பையன் என் காருக்கு முன்னால் நின்றிருந்த பஸ்ஸை திரும்பத்திரும்பார்த்துக்கொண்டிருந்தான்.கண்களில் அவசரம்.

சில்லரையை வாங்கிவிட்டு,காருக்குள் அமர்ந்தேன்.ரமேஷ் காரை எடுக்க,முன்னின்ற பஸ்ஸும் புறப்பட்டது. மாணிக்கம் பஸ்ஸை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான்.பஸ்ஸ்டாண்டை விட்டு வெளிவந்த பஸ்,மெயின் ரோடை தொட்டு,வேகம் பிடித்தது.எங்கள் காரும் தொடர,மாணிக்கத்தின் வேகம் அதிகாித்தது.காரை கடந்து,பஸ்ஸைப் பார்த்து கத்திக் கொண்டே,ஓடினான்.எனக்கு ஒன்றும் புாியவில்லை.

பார்த்துக் கொண்டிருக்கையிலே,கால் தடுக்கி மாணிக்கம் கீழே விழ,ஒரு வினாடியில்,பின் சக்கரம் ஏறி கூழாகியிருப்பான்.டிரைவர் சடன் பிரேக் போட,பஸ் நின்றது.நானும்,பதட்டத்தில் காாிலிருந்து இறங்கி, மாணிக்கத்தை நோக்கி ஓடினேன்.அதற்குள் டிரைவர்,கண்டக்டர் மற்றும் சிலர் அவனை சூழ்ந்திருந்தனர். மாணிக்கம் மெல்ல எழுந்து நின்றான்.கை கால்களில் சிராய்ப்பு.நெற்றியில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

டிரைவர் கோபத்தின் உச்சியில் இருந்தார். ‘ஏண்டா இப்படி வந்து வுழுந்து,எங்க உயிரை வாங்குறீங்க ? ‘

ஆளுக்கொரு கேள்வியாய் கேட்டுக்கொண்டும் வசை பாடிக்கொண்டும் இருந்தனர்.

கண்டக்டர் நல்லவராய்த் தொிந்தார். ‘ஏம்பா,என்னாச்சு ?, ஏன் இப்படி ஓடியாந்தே ? ‘என்று அக்கரையுடன் கேட்க,

‘இல்லண்ணே,அந்த மூணாவது சீட்ல உட்கார்ந்திருக்காாில்ல,அவர்ட்ட ரெண்டு பாக்கெட்டு முறுக்கு அஞ்சு ரூபாக்கு வித்தேன்.பத்து ரூபா தந்தாரு.அதான் மீதிய அவர்ட்ட எப்படியாது தந்திரணுன்னு ஒரு வேகத்தில…. ‘ மாணிக்கம் பேசிக்கொண்டிருந்தான்.

சற்று முன் எனக்கு நானே போட்டுக் கொண்ட சபாஷுக்கள்,இதோ இந்த சிறுவன் முன்னால்….வெட்கினேன்.நெஞ்சில் சுளீர் என்றது.காாில் ஏறினேன்.

‘உழைப்பால் பிழைப்போர், தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவராவார் குணத்தாலே …தம்பிக்கு ஒரு பாட்டு,அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு………………. ‘எம்.ஜி.ஆர் பாடலை ரமேஷ் ரசித்து கொண்டிருந்தான்.நெஞ்சில் மீண்டும் ஒரு சுளீர்.

‘ரமேஷ்,திண்டுக்கலுக்கு காரை உடுப்பா ‘என்றேன்.ஒன்றும் புாியாமல் காரைத் திருப்பினான்.

‘மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர் ‘

என்றோ படித்த குறளுக்கு, மெல்ல மெல்ல அர்த்தம் புாியத் தொடங்கியது.

Series Navigation

அருண் வில்ஃபிரட் ஜஸ்டின்

அருண் வில்ஃபிரட் ஜஸ்டின்