பிரம்மாண்டம்

This entry is part [part not set] of 10 in the series 20001104_Issue

சுரேஷ்குமார இந்திரஜித்


எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தது. மன எழுச்சியில் பிரம்மாண்டத்தை உள்ளடக்கி இரண்டு நாட்களாக கலை நிகழ்ச்சிக் கொண்டிருக்கிறார்கள் அரங்கில். நான், வெண்புரவியாய் மாறி சைக்கிளில் வந்திரங்கினேன். கட்டிடத்தின் பிரம்மாண்டம் என்னை ஈர்த்தது. வாசலில் பளிங்குத்தரையில் நின்றிருந்த வேளை, காற்று உற்சாகத்தைத் தூண்டும்படியாக , பிரம்மாண்ட கட்டிடத்தை எதிர்கொள்ளும் முறையில் வீசியது. காற்றில் குதூகலித்த, புல்லாங்குழல் இசையில் என் சிந்தை சென்றது. புல்லாங்குழல் இசை தன் இடத்தை நோக்கி என்னை இழுத்துச் சென்றது. மாடிப்படிகளின் வழியே நான் ஓடினேன். இசையின் இடத்தை நெருங்கி விட்டேன். அறை வாசலில் நிதானித்து உள்ளே பார்த்தேன். இருள்வெளியை தன் இயற்கையகக் கொண்டிருந்தவன், ஆற்றலை இசையாக்கிக் கொண்டிருந்தான். இருள்வெளி குதூகலித்துக் கொண்டிருக்கவேண்டும். எதிரே ஒரு பெண். ஆனந்த பைரவி. நான் ஏற்படுத்திய சலனத்தில், திரும்பி என்னைப் பார்த்தாள். ராகமே அவளென வடிவெடுத்திருந்தாள்; உற்சாக வெளியில் நான். வாசிப்பவனின் வலப்பக்கத்தில் அவன் பின்னே சென்று அமர்ந்தேன். அவளைப் பார்க்க என்னால் இயலாது என்று தோன்றியது. என் நலன் கருதிய விசித்திர சக்தியொன்று பெரிய நிலைக்கண்ணாடியொன்றை வாசிப்பவனின் இடப்பக்கச் சுவரையொட்டி வைத்திருந்தது. கண்ணாடியில் அவள். இரண்டு டியூப் லைட்டுகளின் வெளிச்சத்தில் கண்ணாடி மின்னியது. மின்னும் கண்ணாடிக்குள் ராகமென அவள்.

இருளில் வாசிப்பவன், இசையை முடித்து, புல்லாங்குழலை வைத்துவிட்டுக் கைகளினால் தரையைத் தடவி அதைக்காட்டிலும் பெரிய புல்லாங்குழலை எடுத்து வைத்துக்கொண்டான். ராகமென நின்றிருந்தவள் ஒரு பாடலை வாசிக்கச் சொன்னாள். இருள்வெளி மீண்டும் குதூகலித்தது. கானடா. மின்னும் கண்ணாடியில் அவள். கண்ணாடிக்குள் நான் நுழைந்தேன். எங்கும் அவள் பிம்பமெனக் கண்ணாடி ஜொலித்தது. இசை அவளின் முழங்கையாக, பின் விரல்களுமாக மாறியது. பாறைகளில் வெண்மையாய் சிதறிக்கொண்டு நதி பாய்ந்து வருகிறது. பசும்புல்வெளி எங்கும் படர்ந்தது. அவள் கைகள் கண்ணாடியுள். திரும்பும் திசையங்கும் அவளின் மின்னும் கண்ணாடி பிம்பங்கள்.

கண்ணாடியுள்ளே, அவள் என்னைப் பார்த்துவிட்டால், நான் அதைத் தாங்க இயலாது நொய்ந்து விடுவேன் என்றும் தோன்றியது. கண்ணாடியின் ஜொலிப்பில் கண்கள் கூசின. அவளின் மின்னும் கண்ணாடி பிம்பங்கள் என்னைச் சுற்றிச் சுழன்றன. இசையின் ஒரு கட்டத்தில் அவள் கண்களை மூடினாள். அவள் சிந்தையெங்கும் இசையே ஆனதான பிரகாசத்தை முகம் கொண்டது. மேக மண்டலம், பனிமலை, எங்கு நோக்கினும் பனி படர்ந்த குன்றுகள். சந்நதியின் முன்னே தோன்றுவது, அந்தப் பாவம். ஆஹா ஆஹா என்று கோஷமிட்டு தேவராட்டம் ஆடினர், மனிதர்கள். திரைவிலக சூத்ரதாரி கூத்தனாய் ஆடினான். அரங்கில் கேட்ட பாகேஸ்வரி இப்பாட்டிற்குள் ஊடுருவியது. கண்களைத் திறந்தாள். கண்கள் ஒளிர்ந்தன. பரவசத்தில் முகம் வசீகரம் கூடி பிரகாசித்தது. பாறைகள் முழங்கின.

மனிதர்கள் வினோத ஆடைகளுடன் ஒரு சேர ஒழுங்காக ஆடிக்கொண்டே பாடினர். மீண்டும் கண்ணாடிக்குள் நான். அவள் முகம். அவள் வடிவம். அவள் முழங்கை. அவள் விரல்கள். கண்ணாடியின் ஜொலிப்பு. ஆனந்த பைரவியும் அவளேல்; பாகேஸ்வரியும் அவளே; கானடாவும் அவளே. புலம்பாதே மனமே. அதீத கற்பனை வயப்படாதே. நான் கற்பனை வயப்படுவேன். குதூகலிப்பேன். இதுபோன்ற சந்தர்ப்பங்கள் எனக்கு அரிது. சிறு குருவியெனக் காற்றைக் கிழிப்பேன். கிளைகளில் அமருவேன். மரம் விட்டு மரம் பறப்பேன். ஸாக்ஸ்போனின் கல்யாண வசந்தமாக காற்றில் படர்வேன். இருளில் வாசிப்பவன், அந்த வாசிப்பை நிறுத்தினான்.

அவள் கூட வந்திருந்த மனிதர், கிளம்புவதற்கு சமிக்ஞை காட்டினார். இருளில் வாசிப்பவனையும் சாப்பிட கூப்பிட ஆட்கள் வந்தனர். இக்குழப்பத்தில் அவள் அவனிடம் சொல்லிக்கொண்டு விடை பெற்றாள். மாயம் போல மறைந்தாள். கண்ணாடி வெறுமையாய் மின்னியது. சாப்பிடக் கூப்பிட வந்தவர்களை பொருட்படுத்தாது அவன் தேக்ஷை வாசிக்க ஆரம்பித்தான். நிர்ப்பந்ததால் நிறுத்திவிட்டுப் புல்லாங்குழலை உறையில் வைத்துவிட்டு, கழியைத் தேடினான். நான் அறையை விட்டு வெளியே வந்தேன். பிரம்மாண்டமான கட்டிடம். அதற்கேற்ற காற்று. ஒன்றிரண்டு நண்பர்களே நின்றிருந்தனர். விடைபெற்று என் வெண்புரவியில் ஏறி, முன்னால் சாக்கடை ஓடும் என் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது பிரம்மாண்டங்களை விழுங்கி இருள்வெளி விகசிக்க ஆரம்பித்தது.

***

கனவு எண் 11

***

Series Navigation

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித்