சூசன்
அவனுக்கு ஏதேச்சையாகத்தான் தெரிந்தது நாளை அப்பாவின் பிறந்த நாள் என்று.
இரவு படுக்கச் செல்கையில் தினமும் அடுத்த நாள் தேதியை மாற்றி வைப்பது அவன் பழக்கம். அப்படி இன்றும் மாற்றி வைக்கப் போனபோது தான் தெரிந்தது நாளை மே1ம் தேதி என்று. அது அப்பாவின் பிறந்தநாள்.
வீதி முழுக்க மே தினத் தோரணங்கள் தொங்கும். கமபங்களெங்கும் ஒலிபெருக்கிகளில் உழைப்பாளிகள் பாட்டுகள் ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால் அப்பா இத்தனை களேபரங்களுக்கிடையில் தன் பிறந்த நாளை அமைதியாகக் கொண்டாடுவார்.
அன்று வழக்கத்தை விடவும் அவர் நேரத்தில் எழுந்து கொள்வார். அவன் வீட்டில் ஒரு வெள்ளிப் பாத்திரம் இருக்கிறது. வட்ட வடிவப் பாத்திரம். நுனி ஒரு ஓரத்தில் விழுந்ததில் நெருங்கப் போயிருக்கும். அந்தப் பாத்திரம் எடுத்துக் கொண்டு அப்பா பல் விளக்கப் போவார். வீட்டின் பின்புறம் படலை ஒட்டின மாதிரி ஒரு கருவேல மரம் இருக்கும். அருகில் ஒரு சிறிய ஏணி… அப்பா அதில் ஏறி மரத்திலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு கிளையின் உதிரிக்கிளையை ஒடித்துக் கொள்வார். வழக்கமாய் பல்பொடியை உபயோகப்படுத்தின போதும் பிறந்த நாளன்று கருவேலங்குச்சி கொண்டு பல் துலக்குவது அவருக்குப் பிடித்தமான ஒன்று.
வெறுமனே குச்சியை வாயில் கடித்து அதன் தலைப்பாகத்தைக் கிறுக்குப் பிடித்தவன் தலை போல மாற்றி பல் துலக்குவதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. பறித்த குச்சியின் வடிவத்தை ஒருமுறை நன்றாக ஊன்றி கவனிப்பார். கணுத்திரட்டோ வளைந்து மேலேறின பாகமோ அல்லாத ஒரு விரல்கட்டை நீள நேர்குச்சியை அதிலிருந்து தனியாக ஒடித்துக் கொள்வார். ஒடித்த குச்சியை அந்த வெள்ளிப் பாத்திரத்தில் உள்ள சுடுநீரில் ஊறப்போடுவார். அது ஊறி மெத்தென்று ஆவதற்கு பத்து நிமிடமாவது பிடிக்கும். அதற்குள் காலைக் கடனைக் கழித்துவிட்டு வந்துவிடுவார்.
அவர் வருவதற்கும் குச்சி ஊறி நெகிழ்ந்திருப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். தண்ணீரில் ஊறின குச்சியை வெளியே எடுத்து மரத்தின் வேரின் மேல் வைத்து ஒரு கல் கொண்டு குச்சியின் தலைப்பாகத்தை மெள்ள சிதைப்பார். குச்சியின் வெளித்தோல் உரிந்து உள்ளிருக்கும் வெண்மையான பாகம் நெகிழ்ந்து நெகிழ்ந்து தேர்ந்த ஓவியனின் தூரிகை போல முனை நீண்டு அடிப்பாகம் தடித்து மாறிப்போகும். அப்படி மாறின குச்சியை எடுத்து முகத்துக்கு முன் ஓரடித் தொலைவில் நிறுத்தி கம்பீரம் கலந்த சிரிப்போடு ஒரு பார்வை பார்ப்பார்.
அன்று அதுதான் அவருக்கு பிரஷ். முன் பல்லில் ஆரம்பித்து மேல் கீழ் கடவாய் என அந்தத் தூரிகை பல் துணியில் ஓவியக் கோடுகளைத் தீட்டிக்கொண்டே போகும். அவருக்கே திருப்தியாகும் வரை துலக்கிவிட்டு அதை பெருமையோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு சாக்கடையில் வீசி விடுவார். இனி இதுமாதிரி துலக்குவது அடுத்த பிறந்த நாளின்போதுதான்.
அப்பா பல் துலக்கி முடிக்கையில் அம்மா அடுப்பில் வெந்நீர் போட்டு விளாவி வைத்திருப்பாள். சாதாரண நாளில் ஒரு குடம் தண்ணீரென்றால் அன்று இரண்டு பக்கெட் நீர் இருக்கும்.
வெள்ளையில் லேசாக சந்தனம் கலந்த மாதிரியான ஒரு துண்டை மட்டும் இடுப்பில் உடுத்திக் கொண்டு அப்பா குளியலறைக்குள் போவார். அன்று அவருக்கு குளித்து விடுவது அம்மாதான். தண்ணீர் ஊற்றி தலைக்கு சீயக்காய் தேய்த்து முழுகச் செய்வதிலிருந்து முதுகு தேய்த்துத் திரும்புவது வரை அம்மாதான் எல்லாம். அவன் பார்த்திருக்கிறான்; அம்மா அப்பாவுக்கு முதுகு தேய்த்து விடுவதற்கு சகுரி உபயோகிக்க மாட்டாள் விரல்கள் தான். அப்பா குளித்துத் திரும்பும்போது அவர் முதுகில் தெரியும் நீள நீள சிவப்புக் கோடுகள் வாசல் கோளங்கள் போல அழகாகவே இருக்கும்.
அப்பாவுக்கு துடைக்க ஒரு துண்டு. இடுப்பில் கட்டிக் கொள்ள ஒரு துண்டு. கட்டும் துண்டு வெளிர் சிகப்பில் இருக்கும். துடைக்கும் துண்டு வெண்மையில் இருக்கும். வெய்யிலில் பிடித்துப் பார்த்தால் எதிரில் இருப்பவையெல்லாம் கம்ப்யூட்டர் வரையும் கட்டங்கள் போல வினோதமாகத் தெரியும்.
தனியாக ஒரு துண்டால் உடலைத் துடைத்துக் கொண்டுபோதும் அப்பாவின் முதுகின் நடுப்பகுதியிலும் கழுத்தின் பின்புறத்திலும் நீர்த் துளிகள் முத்து முத்தாய் நின்றிருப்பதை அவன் பார்த்திருக்கிறான். அப்படித் தண்ணீரோடு வீட்டுக்குள் நுழைகிற அப்பாவைப் பார்த்து சரியாவே துடைக்கலப்பா என்பான். அப்பா அவனை ஓரக் கண்ணால் பார்த்து மெல்லச் சிரிப்பார். அதற்கு என்ன பொருள்….ஒடம்பு முழுசும் ஒரு மனுஷனாலே துடைக்க முடியுமா என்கிற கேள்வியோ, இருந்துட்டுப் போகட்டுமே தண்ணீர் தானே என்கிற பதிலா…அவனுக்கு என்னவென்று விளங்கியதே இல்லை.
அப்பா குளித்து சுற்றிய அந்த ஈரத்துண்டோடு நேராக சாமியறைக்குள் நுழைவார். சாமியறை என்றால் அங்கே பல கடவுள்களின் விக்ரகங்களோ படங்களோ இருக்காது. சுவரோடு சுவராக சரிந்த மாதிரி வீட்டில் ஒரு திட்டு இருக்கும். அதன் மையத்தில் ஒரு பெட்டி இருக்கும். அதற்குள் ஒரு படம் இருக்கும். பழைய பிரேம் போட்ட படம். கறுப்பு பிரேம் ஓரமெல்லாம் வெளுத்துப் போயிருக்கும். அதில் முருகன் சித்திரம் இருக்கும். முருகன் நிர்வாணமாக இருப்பார். பெண் உருவத்தில்….
அவன் கோயில்களில் பார்த்திருக்கிறான். நண்பர்களின் வீடுகளில் பார்த்திருக்கிறான். எங்கும் முருகன் ஆண் வடிவத்தில் தான் இருப்பதுண்டு. அப்பாவிடம் தான் இப்படியொரு அபூர்வ பெண் முருகர். தலைமுடி நடுமுதுகுவரை தொங்க மயிலோடு நிர்வாணமாக நின்றிருப்பதைப் பார்த்திருக்கிறான். இது எங்கிருந்து கிடைத்தது என்று பலமுறை கேட்டபோதும் அப்பா சொன்னதேயில்லை. அம்மாவும் கூட எனக்குத் தெரியாது என்று கை விரித்து விட்டாள்.
இருப்பினும் அவனுக்கு சந்தேகமெல்லாம் அப்பாவின் வழிபாட்டில்தான். பெட்டியிலிருந்து எடுத்த முருகர் படத்தை அப்பா சுவர்த் திட்டில் வைப்பார். அந்த உருவத்தை ஒருமுறை ஊன்றி கவனிப்பார். கண்ணும் மனசும் ஒன்றாக அந்த உருவத்தினுள் வெகு நேரம் ஆழ்ந்து போவார். கண் திறந்திருக்கும். மனசுக்குள் தூங்குவார். நிம்மதியான மூச்சு சீராக வந்து போகும். திருப்தியான தூக்கத்திலிருந்து விடுபட்டவர் போல அப்பா வெகுநேரம் கழித்து கண் விழிப்பார். இதுதான் அப்பாவின் வழிபாடு. இத்தனைக்கும் அப்பா ஒரு நாத்திகர். கோயிலுக்குப் போகாதவர். எந்தவித புற வழிபாடுகளிலும் கலந்து கொள்ளாதவர். நாத்திகர்கள் எங்கேயாவது இப்படி வழிபாட்டில் ஈடுபடுவதுண்டா ? கொள்கைக்கு முரண்பாடான செயல் செய்வதுண்டா ? அப்பா மட்டும் ஏன் செய்கிறார் ?
மனக்குழப்பம் தாளாமல் ஒரு நாள் கேட்டபோது அப்பா சிரித்தார்.
‘வாழ்க்கைக்கு பிடிப்பு தேவை. அது ஏதாவதொரு வடிவத்திலே இருக்கிறது தப்பு இல்லே. பிடிப்பும் வழிபாடும் அறியாமை வளர்க்கக் கூடாது. மூட நம்பிக்கைக்குத் துணை போகக் கூடாது.
‘ஆயுதம் செய்வோம்னு பாடினான் பாரதி. அதுக்கு என்ன அர்த்தம் ? துப்பாக்கியும் வெடிகுண்டும் செய்யறதா. இல்லே. தொழிற்சாலைகளை புதுசா உருவாக்கனும்னு அர்த்தம். பெரியார் கடவுள் இல்லேன்று சொன்னார்னா அதுக்கு காரணம் கடவுள் வடிவத்திலே மூட நம்பிக்கைகளும் அறியாமையும் மலிஞ்சு கிடக்கிறதாலத் தான். நம்பிக்கைக்கு அவர் எப்பவும் எதிரியா இருக்கலே… ‘
அப்பா எப்போதாவதுதான் இப்படி அபூர்வமாகப் பேசுவார். கொஞ்சம் தான் என்றாலும் நிறைய யோசிக்க வைக்கும் அவர் வார்த்தைகள். கடவுள் பற்றிச் சொன்னதுகூட அவனுக்கு வெகுகாலம் கழித்து தான் புரிந்தது.
தன் பிறந்த நாளின்போது அப்பா புதுத்துணி உடுத்தியதை அவன் ஒரு முறைகூடப் பார்த்ததேயில்லை. அன்று உடுத்துவது பழைய துணிதான். பழையது என்றாலும் எப்போதும் உடுத்தும் துணி அல்ல. தன் பீரோவின் துணிக் குவியல்களுக்கு அடியில் கல்யாண பட்டுவேட்டி, சர்ட்டை பத்திரமாக மடித்து வைத்திருப்பார். அப்பா அதை எடுக்கும் போது கும்மென்று பூச்சி உருண்டை கலந்த பட்டுத்துணி வாசமடிக்கும். அதை அவன் வயது வித்தியாசம் பாராமல் பெரிய வயதானபோதுகூட ரசித்து நுகர்ந்திருக்கிறான். அப்பா அந்தத் துணிகளை எடுத்து முன்னறைக்குக் கொண்டு வருவதே அலாதியாக இருக்கும். முன்புறம் ஒரு கையும் பின்புறம் ஒரு கையுமாக நீட்டி அதன் மேல் வேட்டி சட்டையைத் தாங்கியபடி மெள்ள மெள்ள நடந்து வருவார். வருகிற போது எதிரே யார் வந்தாலும் அன்று தான் ஒரு குடும்பத் தலைவன் என்பதையும் மறந்து அவரே விலகிச் சென்று விடுவார்.
துணிகளைத் தாங்கியபடி அப்பா முன்னறைக்கு வந்து பழங்கால மரமேஜையின் மேல் வைப்பார். சட்டையும் வேட்டியையும் ஒவ்வொன்றாகத் தூக்கி ஜன்னல் வெளிச்சத்தினூடே மேலும் கீழும் பார்ப்பார். சூரிய ஒளி பட்டு அந்தப் பட்டுத்துணி பளீரென்று மின்னும். அந்த வெளிச்சம் அப்பாவின் முகத்திலடிப்பதை அவன் பலதடவை பார்த்திருக்கிறான். அப்போது அப்பாவின் முகம் பிரகாசமாயிருக்கும். ஆனால் அந்தப் பிரகாசத்திற்குக் காரணம் பட்டுத் துணியும் வெளிச்சமும் மட்டுமல்ல என்பது கூட அவனுடைய வெகுநாளைய யோசிப்பின் முடிவாகவே இருந்தது.
அன்று மட்டுமே அப்பா தான் உடுத்தும் எல்லாத் துணிகளையும் தேய்த்துத்தான் உடுத்துவார். வேட்டியைத் தவிர மற்ற எல்லாவற்றையும் கரிப்பெட்டி கொண்டு தேய்ப்பார். வீட்டில் மின்சார இஸ்திரிப் பெட்டி இருந்தபோதும் அன்று உபயோகிப்பது கரிப்பெட்டிதான். பரண் மேலிருந்து முதல்நாளே எடுத்து தூசி தட்டி வைத்து விடுவார். அம்மா அன்று மட்டும் ஸ்டவ்வில் சமைப்பதற்கு பதில் கரியடுப்பில் விறகு மூட்டி சமைப்பாள். விழும் தணற் துண்டுகளை சாம்பிராணிக் கரண்டியில் அள்ளி வந்து அம்மா கரிப்பெட்டியில் கொட்டுவாள். அப்பா அவற்றையெல்லாம் ஒரு குச்சியால் பெட்டிக்குள் சீராக அடுக்குவார். சட்டென்று பார்ப்பதற்கு கேரளாவிலிருந்து லாரியில் விறகு ஏற்றிக் கொண்டு வரும் காட்சி போலிருக்கும்.
பெட்டியை மூடி எடுத்துக் கொண்டு போய் வெளிச் சாக்கடையோரம் நின்றபடி மேலும் கீழும் ஆட்டி உள்ளிருக்கும் சாம்பலையெல்லாம் கொட்டிவிட்டுத் திரும்பி வருவார். முதலில் சட்டைக்கு இஸ்திரி போடுவார். கழுத்துப் பட்டை, கைப்பட்டை என பெட்டி நகர்கையில் ஸ்ஸ்… என்ற சப்தத்தோடு வெளிர்புகை கிளம்பி வெளியேறுவதை அவன் ரசித்தபடி தூணோரம் நின்று கொண்டிருப்பான்.சட்டையிலிருந்த பூச்சியுருண்டை மணம் விலகி இப்போது பட்டின் மணம் மெள்ள மெள்ள எழுந்து அந்த அறையெங்கும்வியாபித்து நிற்கும். அந்த மணத்திற்கெல்லாம் நான்தான் அதிபதி என்பதுபோல அப்பா புகை மூட்டத்தினூடே தரையில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு தேய்த்தபடி இருப்பார். தேய்த்து முடித்ததும் எடுத்து ஆணியில் தொங்க விடுவார். சட்டென்று பார்க்கையில் அப்பா சுவரோடு சேர்ந்து நிற்பது போலிருக்கும். அதே மாதிரிதான் பனியனையும், அண்டர்வேரையும் தேய்த்து மாட்டி விடுவார். ஆனால் வேட்டியை மட்டும் ஒருபோதும் அவர் தேய்த்ததில்லை. மடிப்பதுதான் வழக்கம்.
அப்பா தன் வேட்டியை மடிப்பதே அலாதியாக இருக்கும். எங்கே அப்படி மடிக்கக் கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால் வேட்டியை எதிர்ப்புறம் நின்று மடிக்க அவனைத்தான் அழைப்பார். அண்ணனுக்கு கல்யாணமான பிறகு அந்தப் பதவி அவனுக்குத்தான் கிடைத்தது.
முதலில் வேட்டியைப் பிரித்து நன்றாக உதறி விடுவார். ஒரு பக்கத்தின் இரண்டு முனைகளையும் அவனை இறுகப் பற்றிக் கொள்ளச் சொல்லுவார். பற்றிக் கொண்டதும் எதிர்ப்பக்கமிருந்து வேட்டியை மேலும் கீழும் ஆட்டுவார். லேசாகத்தான் அசைப்பார். அதுவரை அமைதியாக இருந்த வேட்டிக் கடலின் மேற்பரப்பில் அலையடிக்கத் தொடங்கி விடும். சின்ன அலை எழும்பி நடுப்பாகத்தில் சட்டென உயர்ந்து எதிர்ப்புறத்தில் சிறுத்து மோதி அவன் விரல்களில் அதிர்வுகளாய் இறங்கும். அது குறுகுறுப்பாய் இருக்கும். அந்த சந்தோஷம் வேண்டுமென்பதற்காகவே அவன் இன்னொரு முறை அப்பாவை வேட்டியை அசைக்கச் சொல்லுவான்.
உதறின வேட்டியின் ஓரங்களை அப்பா சுருட்டின மாதிரி மடிப்பார். மடித்த பகுதி கைக்குள் அடங்கி டர்பனின் விசிறி மடிப்பு போல இருக்கும். அதை ஒரு தட்டு தட்டுவார். ஓரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் நூல் திரட்டை ஒரு கத்திரி எடுத்து வந்து வெட்டுவார். பின் உதறி வேட்டியின் கரை பார்ப்பார். உட்புறம் எது எனப் பிரித்து மடிப்பார். மடித்ததை இரண்டு கைகளாலும் பற்றியபடி ஓரங்களை விசை கொண்டு இழுப்பார். அப்போது கவனமாக இருக்க வேண்டும். இழுக்கிற விசையில் ஒன்று வேட்டி எதிர்ப்புறத்திலிருந்து நழுவி விடும், அல்லது ஆளே விழ வேண்டிய நிலை ஏற்பட்டு போகும். அந்த மாதிரியான சமயங்களில் அப்பா அவனைத் தரையில் காலை இறுக ஊன்றிக் கொள்ளச் சொல்லுவார். அவனும் விசை கொண்டு ஊன்றி நிற்பான். மடிப்பு இழுத்து முடித்த பிறகு கால் கெண்டையில் சதை இறுகி பலம் ஏறின மாதிரி இருக்கும்.
வேட்டியை நான்காய், எட்டாய், பதினாறாய் மடித்து ஒரு அரையடி நீளத்துக்கு கொண்டு வந்துவிடுவார். அதை அப்படியே எடுத்து வந்து தரையில் புதுத்துண்டு விரித்து அதன்மேல் வைப்பார். மேலே இன்னொரு துண்டு விரித்து அதன் மீது உட்கார்ந்து கொள்ளுவார். அன்றைய காலை செய்தித்தாள் படித்து முடிகிற வரைக்கும் அவர் உடல் பாரம் அந்த வேட்டியில் இறங்கி நிற்கும். பேப்பர் படித்து முடித்த பிறகு வேட்டியைப் பார்த்தால் கடையிலிருந்து இப்போதுதான் வாங்கி வந்தது போல செடுக்கென்றிருக்கும். அவன் ஆர்வம் தாளாமல் தன் நண்பர்களிடமெல்லாம் விசாரித்து விட்டான். ஒருவர் வீட்டில் கூட எந்த அப்பாக்களும் இப்படி வேட்டியை மடிப்பதேயில்லை என்பது மட்டும் தெரிந்தது.
தன் பிறந்த நாளன்று அப்பா தனக்குப் பிடித்தது என்று எதையுமே அம்மாவிடம் தின்பதற்காக செய்யச் சொன்னது கிடையாது.
ஆனாலும் அம்மா அப்பாவுக்காக ஏதேனும் ஒரு இனிப்பு கடையிலிருந்தாவது வாங்கி வைப்பாள். அவருக்கு சர்க்கரை வியாதி உண்டு. அதனால் இனிப்பு தின்னமாட்டார். இருப்பினும் அம்மா அவர் இலையில் ஒரு இனிப்பை வைப்பாள். அப்பா அதைத் தின்ன மாட்டார். இனிப்பை லேசாக விண்டு கீழே வைத்துவிட்டு போவார். அவருக்குப் பின் அம்மா சாப்பிட உட்காருகையில் அந்த விண்டு வைத்த பாதியை முதலில் சாப்பிடுவதை அவன் பார்த்திருக்கிறான். அது ஏன் என்கிற கேள்விக்கு விடை அவனுக்கு கல்யாணமான பிறகுதான் தெரிந்தது.
பிறந்தநாளன்று எல்லோரும் கோயிலுக்குச் செல்வதை அவன் பார்த்திருக்கிறான். அம்மாகூட அவன் பிறந்த நாளுக்கு கோயிலுக்கு அழைத்துச் செல்வாள். ஆனால் அப்பா கோயிலுக்குப் போக மாட்டார். பட்டு சட்டை வேட்டி உடுத்திக் கொண்டு அஞ்சு மைல் தள்ளியிருக்கும் அனாதை ஆசிரமத்துக்குப் போவார். அவனைக்கூட ஒரு முறை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அவனைப்போல நிறைய சிறுவர்கள் இருப்பார்கள். அப்பா அவர்களுக்கெல்லாம் பரிசு ஏதும் தர மாட்டார். காலையிலிருந்து மதியம் வரைக்கும் அவர்களுடனேயே இருப்பார். அவர்களுக்குத் தட்டில் உணவு போடுவார். விளையாடுகையில் நடுவராய் இருப்பார். படிக்கையில் ஆசிரியராக நின்றிருப்பார். அன்று அவர் குழந்தைத்தனம் கொண்டவராக மாறிவிடுவது அவனுக்கு ஆச்சரியமாகவே இருக்கும். ஒருநாள் கேட்டபோது அப்பா அமைதியாகச் சொன்னார்.
‘எனக்கு அப்பா இல்லே. அம்மா மட்டுந்தான். இருந்தாலும் நான் அனாதை மாதிரிதான் வளர்ந்தேன். கவனிப்பு இல்லே. எத்தனை நாள் பசிக்காக ஏங்கியிருக்கேன். செவுத்து மூலையிலே நின்று அம்மா அம்மான்னு அழுதிருக்கேன் தெரியுமா ?…. ‘
அப்பா கண் கலங்கியதை அன்றுதான் அவன் பார்த்தான்.
ஆசிரமத்திலிருந்து திரும்பியதும் பட்டுவேட்டி சட்டை அவிழ்த்து பழையபடி பீரோவுக்குள் வைத்துவிட்டு பழையது உடுத்திக் கொண்டு அப்பா வேலைக்குப் போய்விடுவார். அவரின் பிறந்த நாள் அதோடு முடிந்துவிடும்.
அப்பா வேலையில் இருக்கும்போதே இறந்து போனார். அதற்கு பதிலாக அவனுக்கு அதே ஆபீஸில் வேலை கிடைத்தது. அவர் அவனுக்கென்று சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை. இந்த வேலை ஒன்றுதான் அவர் வழங்கியது.
‘பொழைக்க தெரியாதவன்பா உங்கப்பன். காசு சேர்த்திருந்தா இந்நேரம் எத்தனை லட்சம் இருந்திருக்கும் தெரியுமா ? அவன் கருதிப் பொழைக்கலே…. ‘
இப்படி எத்தனையோ பேர் வசைபாடியபோதும் அவனுக்கு அதெல்லாம் தவறான கூற்றாகவே தோன்றும். காசு சேர்ப்பது மட்டும்தான் வாழ்க்கையா ? தன் மனசுக்குப் பிடித்தது போல வாழ்வது வாழ்க்கையில்லையா. இவ்வுலகில் பணத்தைத் தேடித் தேடி வாழ்க்கையை தொலைத்து விட்டவர்கள் எத்தனை பேர்….பணத்தின் அடிப்படையில் பார்த்தால் அவர் பிச்சைக்காரர். வாழ்க்கையின் அடிப்படையில் அவர் கோடாஸ்வரர். வாழ்க்கையை அனுபவித்து வாழத் தெரிந்தவர். வாழ்ந்தவர்.