67 வயதில் சிறுவனான மாயம்

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

சித்ரா செல்வகுமார்


மின்னஞ்சல் முலம் எனக்கு ‘பா’ திரைப்படம் ஹாங்காங் திரையரங்கில் திரையிடப்படுவது தெரிய வந்தது. மற்ற ஹிந்தி திரைப்படங்களைப் போன்று, டிசம்பர் 4-ஆம் தேதி வெளியான இந்தப் படமும் சாதாரண பொழுதுபோக்குச் சித்திரமாகவே இருக்கும் என்று அதைக் கண்டு கொள்ளவில்லை.
மற்றோரு மின்னஞ்சல் அமிதாப்பச்சன் இந்தப் படத்தில் பிரஜோரிய நோயால் பீடிக்கப்பட்ட ஒரு பள்ளி மாணவனைப் போன்று எப்படி ஒப்பனை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை விளக்கும் படங்கள் வந்தன. அப்போது தான் அந்தப் படம் ஒரு வித்தியாசமான படம் என்று தெரிய வந்தது.
உடன் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மனத்தில் எழுந்தது. ஓரிரு நாட்களிலேயே படத்தைப் பார்க்கும் நேரமும் வாய்த்தது. கதை, இயக்கம் கே. பால்கி என்றிருந்தது. படம் பார்த்த பின்னால் திரை விமர்சனத்தைப் படித்த போது தான் அது கே பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இளையராஜாவின் இன்னிசையில் நனைந்திருந்தது படம். பி.சி. ஸ்ரீராமின் கைவண்ணம் எல்லா இடங்களிலும் தன் முத்திரையைப் பதித்திருந்தது.
67 வயதில், உயரமான மனிதரான அமிதாப் பச்சனை ஒரு பன்னிரண்டு வயது பள்ளி மாணவனாக மாற்றிய இயக்குநரின் தன்னம்பிக்கை போற்றப்பட வேண்டிய ஒன்று. பிரஜோரிய என்பது இயல்பிற்கு மாறாக நான்கு மடக்கு வயோதிகத் தன்மையைக் கொடுக்கும் நோய். பன்னிரண்டு வயதில் அறுபது வயதான தோற்றம். உயரமாக இருந்த போதும் பள்ளி மாணவர்களுடன் இணைந்து சிறுவன் செய்யும் சேஷ்டைகள் இயல்பாகக் காட்டப்பட்டிருக்கிறது.
தனியாக நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்க்காமல், கதையோடு ஒட்டி வரும் வசனங்களிடையே வரும் நகைச்சுவை ரசிக்கத்தக்கதாக இருந்தது. இந்தப் படம் அனைத்து வயதினரையும் வயப்படுத்தும் வகையில் வெற்றி நடை போடுகிறது. சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் மிக மெல்லிய நுண்ணுணர்வினைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்ட கதை.
அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சன், தன் தந்தை மகனாக நடிக்க, அவருக்குத் தந்தையாக நடித்திருத்தது வித்தியாசமாக இருந்தது. நடிப்பும் சிறப்பாக இருந்தது. இத்தனைக்கு மத்தியில் இன்றைய அரசியல்வாதிகளின் சூட்சுமங்களை நன்கு விளக்கிக் கூறியிருப்பதும் சிறப்பாக இருந்தது.
படத்தின் விசேடத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தவே இந்த என் கருத்துக்களை முன் வைத்துள்ளேன்.
படத்தைக் கண்டு மகிழுங்கள்.

chitra.sivakumar@gmail.com

Series Navigation

சித்ரா செல்வகுமார்

சித்ரா செல்வகுமார்