49வது அகலக்கோடு

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

அ.முத்துலிங்கம்


எல்லாப் பக்கத்திலும் வேகம் குறைந்துகொண்டு வந்தாலும் சிவமூர்த்திக்கு வாசிப்பு வேகம் மட்டும் குறையவில்லை. நேற்றிரவு முழுக்க தேனீயைப் பற்றிப் படித்தார். அதற்கு முதல்நாள் வரலாறு படித்தார். அதற்கும் முதல் நாள் விஞ்ஞானம். ஒவ்வொன்றிலும் வியப்படைவதற்கு ஏதாவது ஒரு விசயம் அவருக்கு அகப்படும். ராணித் தேனீ ஆண் வேண்டுமென்றால் ஆண் முட்டையிடும்; பெண் வேண்டுமென்றால் பெண் முட்டையிடும். ஆண் தேனீ வேலை செய்யவே தேவையில்லை. சம்போக சுகம் மட்டுமே அதற்கு. தேனீ என்றால் சுறுசுறுப்பு என்று புத்தகங்களில் எழுதி வைத்திருக்கிறார்களே. ஆண் தேனீயின் வாழ்க்கை என்ன சுகமான, சோம்பல் வாழ்க்கை. என்ன ஒன்று, ஆண் தேனீயால் கொட்டமுடியாது. அதற்கும் சேர்த்து பெண் தேனீ கொட்டுமாம். அதில் என்ன ஆச்சரியம். எல்லா உயிரினங்களிலும் இதுதானே நடக்கிறது. ஆண் தேனீபோல ஒரு சோம்பல் வாழ்க்கை கிடைத்தால் எப்படி இருக்கும்? இங்கே அவர்தானே எல்லா வேலையையும் செய்யவேண்டி இருக்கிறது.
கேத்தல் தண்ணீர் கொதித்து ஆவியாக மாறியது மட்டுமில்லாமல் கேத்தலின் அடிப்பாகம் தங்கம்போல ஜொலித்து எரிய ஆரம்பித்தது. உலோகம் எரியும் மணம் மூக்கை எட்டியபோதுதான் சிவமூர்த்தி கேத்தலைப் பார்த்தார். அவ்வளவு நேரமும் கேத்தலின் முன்தான் நின்றார் ஆனால் தண்ணீர் முடிந்து கனநேரமாகிவிட்டதை அவர் உணரவில்லை. அவர் மூளை வேறு இடத்தில் சஞ்சரித்தது.
மறுபடியும் கேத்தலை தண்ணீர் விட்டு நிரப்பி தேநீர் தயாரிக்க வேண்டியிருந்தது. இப்படி பலமுறை நடந்துவிட்டது. அவருடைய மூளை ஒன்றிலே ஈடுபடும்போது மற்ற எல்லாமே மறந்துவிடுகிறது. மறதியை வெல்ல அவர் பலவிதமான யுக்திகளைக் கையாண்டும் பயனில்லை. கண்ணாடியை கழற்றி எங்கே வைத்தார் என்பது மறந்துபோகிறது. ஆகவே எப்போது கண்ணாடியை கழற்றினாலும் அதை ஒரே இடத்தில் வைக்கப் பழகிக்கொண்டார். கறிக்கு உப்பு போட்டாரா என்பது மறந்து போகிறது. ஆகவே உப்பை போடுமுன்னர் உப்பு பாத்திரத்தை கரண்டியால் அடித்து பெரும் சப்தம் உண்டாக்கிய பிறகு போடுவார். அது ஞாபகத்தில் இருக்கும். இப்படி சில தந்திரங்கள் அவரிடம் இருந்தன.
சில நாட்கள் முன்பு பஸ்ஸில் இருந்து இறங்கிய பின்னர் எந்தத் திசையில் அவருடைய வீட்டுக்கு போகவேண்டும் என்பது மறந்துவிட்டது. ஒரு கணம் திகைத்து, நெஞ்சு அடிக்கத் தொடங்கியது. கனடாவுக்கு வந்த பிறகு கடந்த பதினைந்து வருடங்களாக அதே பஸ்ஸில் வந்து அதே இடத்தில் இறங்குகிறார். அப்படியும் சில வேளைகளில் அவருடைய மூளை அவரை ஏமாற்றிவிடுகிறது. அசையாமல் நின்றார். சிறிது நிதானம் வந்ததும் பழையபடி ஞாபகம் திரும்பியது. நெஞ்சு படபடக்க ஒருமாதிரி வீடு போய்ச் சேர்ந்தார்.
மனைவி இருந்தால் அவளிடம் சொல்லியிருப்பார். அவள் போய் நாலு வருடங்களாகிவிட்டன; சிவமூர்த்தியிலும் பார்க்க ஓர் அங்குலம் உயரம் கூடியவள். இவருடன் பக்கத்து பக்கத்தில் நடக்கும்போது கூனிக்குறுகி உயரத்தைக் குறைக்கப் பார்ப்பாள். அப்படிச் செய்து செய்து வளைந்துபோய் இருந்தாள். சிவமூர்த்தி கட்டில் வாங்கியபோது தன்னுடைய உயரத்தையே கணக்கில் எடுத்திருந்தார். படுக்கையில் படுத்திருக்கும்போது அவளுடைய கணுக்கால் வெளியே நீட்டும். ஒரு நீளமான கட்டிலை வாங்கலாம் என்று அவருக்கு தோன்றவே இல்லை. அவளும் சொல்லவில்லை. அவள் இறந்தபோது கூட அவளுடைய கால்கள் கட்டிலுக்கு வெளியே தொங்கிக்கொண்டுதான் இருந்தன.
எப்போதாவது வரும் தொலைபேசியை எதிர்பார்த்து யன்னலைப் பார்த்தபடி அவர் உட்கார்ந்திருப்பார். நேற்று பாதி நாள் Solitaire விளையாடினார். இந்த விளையாட்டில் அவர் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். தனக்குத்தானே ஆடும் இந்த சீட்டு விளையாட்டை சோர்ந்து போயிருக்கும் நேரங்களில் ஆடத் தொடங்கியிருந்தார். நெப்போலியன் கடைசி காலத்தில் சென்ற் ஹெலெனா சிறையில் இருந்தபோது இந்த விளையாட்டையே திரும்பத் திரும்ப விளையாடுவான். பல நாடுகளை மின்னல்போல வெற்றி கண்டவனுக்கு ஸொலிடேர் விளையாட்டில் தன்னைத் தானே தோற்கடிப்பது கடினமாக இருக்கவில்லையாம்.
பத்துப் பன்னிரெண்டு குழந்தைகளை நீளத்துக்கு நாடாவால் பிணைத்து இரண்டு குழந்தைகள் காப்பக தாதிகள் ரோட்டில் நடத்திச் சென்றனர். குழந்தைகளுக்கு மூன்று அல்லது நாலு வயதுதான் இருக்கும். ஒரு தாதி முன்னால் நடந்தார். மற்றவர் கடைசியில் வந்தார். ஒரு குழந்தையின் முகத்திலும் அதற்கு இயற்கையாக இருக்கும் பிரகாசம் இருக்கவில்லை.
இவருடைய எழுத்தாள நண்பர் இவரைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தார். ஆழ்ந்தபடிப்பும் அறிவும் அவருக்கு. அரசியல், வரலாறு, பூகோளம், விஞ்ஞானம், இலக்கியம் என்று எதுவும் அவரிடம் பேசலாம். மனிதர் தன்னுடைய புத்தகங்கள் பற்றி பேசத்தொடங்கினால் மட்டும் தாங்க முடியாது. ஒரு முறை ஐந்து வரி வெண்பா எழுதினார். வெண்பாவுக்கு நாலு வரிதானே என்று கேட்டபோது, அதுதான் உங்கள் பிரச்சினை. மரபை உடைக்கவேண்டும் என்றார். அவர் 45 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். (அதிலே ஒன்று கல்வெட்டு புத்தகம் என்பதை இவர் பிறகுதான் கண்டுபிடிப்பார்.) அந்தப் புத்தகங்களின் எண்ணிக்கையைவிட அதைப் படித்தவர்களின் கூட்டுத் தொகை குறைவாகவே இருக்கும் என்று சிவமூர்த்தி நினைத்தார். புத்தகம் வெளியானதும் தன்னுடைய கையொப்பத்தை முதல் பக்கத்தில் பெரிதாகப் போட்டு இவருக்கு கொடுப்பார். இவர் வாங்கி அதை புத்தகத்தட்டில் வைப்பார். அது பற்றி பேச்சை எடுத்துவிடுவாரோ என்று உள்ளுக்குள் நடுக்கத்துடன் காத்திருப்பார்.
முதியோர் காப்பகம் சுற்றுலா அறிவித்தபோது சிவமூர்த்தியும் தன் பெயரைக் கொடுத்தார். சுற்றுலா போவதில் இவருக்கு பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் ஒருநாள் பொழுதைக் கழித்துவிடலாம் என்ற நினைப்பு இருந்தது. அவர்கள் ஏற்பாடு செய்த சுற்றுலா வழிகாட்டி மூன்று மொழிகள் பேசுவான். பஸ் போகும்போதே காட்சிகளை வர்ணிப்பான். முதலில் சீன மொழியில் மூன்று நிமிடம் பேசுவான். பிரெஞ்சு மொழியில் ஒரு நிமிடம்; ஆங்கிலம் வந்ததும் அரைநிமிடத்தில் முடித்துவிடுவான். அதற்கிடையில் இன்னொரு புதிய இடம் வந்துவிடும். அவன் மறுபடியும் சீன மொழியில் விஸ்தாரமாக வர்ணிக்க ஆரம்பித்துவிடுவான். ஐஸ்வைன் தொழிற்சாலை, ஆயிரக்கணக்கான மீன்களை தொட்டிகளில் வளர்க்கும் இடம் என்று அனைத்தையும் காட்டினார்கள். அவ்வளவு பார்த்த பிறகும் ஒரு மீனும் நினைவில் இல்லை. அவருக்கு ஞாபகம் இருப்பதெல்லாம் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் கைதான். அவள் மீன்தொட்டிக்குள் கையை விட்டு ஏதோ செய்தாள். வெள்ளைவெளேரென்ற கை. காற்றும் தண்ணீரும் சந்திக்கும் இடத்தில் அவள் கைமுறிந்துபோய் காட்சியளித்ததை அவரால் மறக்க முடியவில்லை.
மதிய போசன இடைவேளையில் உணவகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். இவருக்கு கிடைத்தது பிறைவடிவ ரொட்டி. அதை வாய்க்குள் விட்டுக் கடித்தார். இப்பொழுது கையில் எஞ்சியிருப்பது பிறையல்ல. சதுரமல்ல. முக்கோணமுமல்ல. அது ஒரு ரொட்டிபோலவே இல்லை. அதைக் கையிலே வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பதுபோல பார்த்தார். உணவு முடிந்ததும் எல்லோரும் கழிவறைக்கு வரிசையாக நின்று போனார்கள். இவரும் போய் நின்றார். சுற்றுலாக்களில் கழிவறையை கண்டால் போகவேண்டும் என்பது விதி. உபாதை வந்துதான் போகவேண்டும் என்பதில்லை. கண்ணாடியில் பார்த்தபோது கண்கள் முந்தியிலும் பார்க்க ஒன்றுக்கொன்று கிட்டவாக தென்பட்டன. இவர் கன்னத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சன்னக் காயம் பிம்பத்தில் பிழையான பக்கம் தெரிந்தது. இவருடைய முகமே வேறு யாருடையதோ போல மாறிவிட்டது.
வழிகாட்டி அவர்களுக்கு இரண்டு மணி நேரம் விடுதலை கொடுத்து, அவர்கள் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்துவிட்டு பஸ் நிறுத்தத்திற்கு சரியாக ஐந்து மணிக்கு திரும்பி வந்துவிடச் சொன்னார். அவருடன் பிரயாணம் செய்தவர்கள் பல திசைகளில் பிரிந்தார்கள். பஸ்ஸிலே ‘லிங்க்ராங்’ என்று எழுதியிருந்தது. மூன்று நட்சத்திரங்களும் ஊதா மஞ்சள் கோடுகளும் போட்டிருந்த அந்த பஸ்ஸை மனத்தின் ஞாபக அடுக்கில் இருத்தினார். திரும்பி வரும்போது தவறான பஸ்ஸில் ஏறிவிடக்கூடாது என்பதற்காக அப்படிச் செய்தார்.
சுற்றுலாப் பயணிகள் அவசர அவசரமாக பலதரப்பட்ட அங்காடிகளுக்குள் நுழைந்தனர். ஏதோ கடைகளை மூடிவிடுவார்கள் என்பதுபோல அவசரமாக ஓடினார்கள். சிவமூர்த்திக்கு பார்க்க ஒன்றுமே இல்லை. ஒரு பாலம் இருந்தது. அதுதான் கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலம் என்று சொன்னார்கள். அதிலே போய் நின்று சிலர் சுற்றிவரப் பார்த்தார்கள். தூரத்திலே நயகாரா நீர்வீழ்ச்சி புகைரூபமாகக் காட்சியளித்தது. இன்னும் சிலர் அதை பின்னணியாக வைத்து படம் எடுத்தார்கள்.
திடீரென்று இளம் காதலர்கள் இருவர் பாலத்தின் நடுவில் காணப்பட்டனர். எப்படி அவர்கள் அங்கே தோன்றினார்கள் என்பது தெரியவில்லை. வானத்தில் இருந்து குதித்த தேவராசிகள் போல அழகாக, ஒருவருக்கொருவர் பொருத்தமானவராக, இருந்தார்கள். கட்டியணைத்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று முத்தமிடத் தொடங்கினர். அது முத்தமிடுவது போலவே இல்லை. ஒருவரை ஒருவர் கடித்துச் சாப்பிடப்போவதுபோல இருந்தது.
பொழுது மெதுவாகக் கீழே இறங்கியது. ஆகாயத்தில் ஓர் ஓட்டை மாத்திரம் நெருப்புப்போல எரிந்தது. அதுதான் சூரியனாக இருக்கவேண்டும். எண்ணெய் குறைந்த விளக்குப்போல அந்த ஒளியும் மங்கத் தொடங்கியது. பகற்காலம் ஒரு நாளைக்கு 108 வினாடி என்ற கணக்கில் குறைந்துகொண்டு வந்தது. எதிர்வரும் டிசெம்பர் 21ம் தேதி ஆகக்குறைந்த பகலும், ஆகக்கூடிய இரவுமாக அது மாறிவிடும்.
பாலத்தில் ஒருவரையும் காணவில்லை. திடீரென்று வெறிச்சென்று ஆகிவிட்டது. காதலர்கள் எங்கே, ஒருவரை ஒருவர் சாப்பிட்டு முடித்துவிட்டார்களா? பாலத்தின் நடுவுக்குப்போய் கனடா, அமெரிக்காவை கிழிக்கும் கோட்டை பார்க்கவேண்டும் என்று நினைத்தார். 49வது அகலக்கோடு அமெரிக்காவை மாத்திரம் பிரிக்கவில்லை. அது பூமியை சுற்றிவந்து இந்தப் பாலத்திலேயே முடிந்தது. உலகத்திலேயே இரண்டு நாடுகளைப் பிரிக்கும் ஆக நீளமான இந்த எல்லைக்கோடு ஜேர்மனியையும், பிரான்ஸையும், ரஸ்யாவையும், மொங்கோலியாவையும், சீனாவையும் குறுக்கறுத்தபின் மறுபடியும் இங்கே வந்து சந்தித்தது. இதை நினைத்தபோது இந்தக் கோட்டைக் கீறியது அவர்தான் என்பதுபோல அவருக்கு பெருமையாக வந்தது.
பாலத்தின் நடுவுக்கு வந்ததும் அந்தக் கோட்டைப் பார்த்தார். அது எதிர்பார்த்ததுபோல நேராக இல்லை. மெல்லிய சரிந்த கோணத்தில் இருந்தது. கோட்டைக் கடந்து மறுபக்கம் வந்தார். இப்பொழுது அமெரிக்காவில் அவர் நின்றார். சூரியன் அதே ஓட்டை வழியாக அமெரிக்காவிலும் காய்ந்தான். நயாகரா அங்கேயும் வெள்ளிக்கோடு போல தெரிந்தது. மறுபடியும் கனடாவுக்குள் வந்தார். திரும்பவும் ஒரு துள்ளுத் துள்ளி அமெரிக்காவில் போய் விழுந்தார்.
கறுப்பு எறும்பு ஒன்று தனியாக அவசரமாக எங்கோ போய்க்கொண்டிருந்தது. அதைக் கையினால் பிடித்து அமெரிக்காவுக்கு திருப்பிவிட்டார். அது நேரே கோட்டைத் தாண்டி அமெரிக்காவுக்குள் நுழைந்தது. வேறு ஒரு நாட்டுக்கு வந்துவிட்டது அதற்கு தெரியவில்லை. அப்படியே போய்க்கொண்டிருந்தது.
பழுத்த இலை ஒன்று நிலத்தில் கிடந்தது. ஐந்து முக்கோணம் கொண்ட மேப்பிள் இலை. கனடா தேசியக் கொடியின் நடுவில் இருக்கும் தேசிய இலை. அதைக் காலினால் எற்றிவிட்டார். அது காற்றில் மிதந்து சென்று அமெரிக்காவின் எல்லைக்குள் விழுந்தது. ஒருநாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு போவது எவ்வளவு சுலபம். அவருக்கு வியப்பாக இருந்தது.
இந்த நாடுகளின் எல்லைகளை யார் உண்டாக்கினார்கள் என்று நினைத்துப் பார்த்தார். மனிதன் அவற்றை உருவாக்கிய நாளிலிருந்து எத்தனை பிரச்சினைகள், எத்தனை போர்கள். அமெரிக்க ஜனாதிபதி மெடிஸன் காலத்தில் அமெரிக்கப் படைகள் கனடாவைப் பிடிக்க உள்ளே நுழைந்தன, ஆனால் அவர்கள் வெற்றி பெறவில்லை. தற்காலிகமாக 1818ல் இந்தக் கோடு உண்டாக்கப்பட்டது. 1844ல் ஜேம்ஸ் போல்க் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது இந்த பிரச்சினை மீண்டும் முளைத்தது. அமெரிக்க கனடிய எல்லையை விரிவாக்கவேண்டும் என்பதை அவர் தேர்தல் பிரகடனமாக அறிவித்தார். அவரது தேர்தல் கோஷம் ‘அகலக்கோடு 54.40 அல்லது போர்.’ அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் எப்படியோ மனது மாறி 49வது அகலக்கோடு எல்லை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். இவ்வளவு சரித்திர வரலாறு படைத்த கோட்டின் மேலே ஏறி நின்று நாலாபக்கமும் சுழன்று சுழன்று பார்த்த சிவமூர்த்தி அந்த ஒப்பற்ற காட்சியை உள்வாங்கினார்.
நேரத்தைப் பார்த்தார். அது 4.30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. இப்பொழுது புறப்பட்டால் 5.00 மணிக்கு பஸ் தரிப்பிடத்துக்கு போய்விடலாம். நடக்கத்தொடங்கினார். பஸ் நிறுத்தத்தில் அவருடைய பஸ்ஸைக் காணவில்லை. மற்ற பஸ்கள் வேறு வேறு நிறங்களில் நின்றன. அவருடையது மறைந்துவிட்டது. மூன்று நட்சத்திரங்களும், ஊதா மஞ்சள் கோடுகளும் போட்டிருந்த அந்த பஸ்ஸை காணவில்லை. லிங்ராங் என்று எழுதியிருக்கும். நேரத்தைப் பார்த்தார். அது 4.45 காட்டியது. எப்படி அவருடைய பஸ் சொன்ன நேரத்துக்கு முன்னரே புறப்படலாம். ஒரு சுற்று வந்து வேறு இடங்களிலும் தேடிப் பார்த்தார். காணவில்லை. அவருடைய இருதயம் நெஞ்சுக்கூட்டிலும் பார்க்க பெரிதாகி பக்கங்களில் இடிக்கத் தொடங்கியது.
கழுத்திலே சதை வட்டமாகத் தொங்கும் அந்தக் கறுப்பு மனிதரிடம் மீண்டும் சென்று மூன்று நட்சத்திரங்களும், ஊதா மஞ்சள் கோடுகளும் வரைந்திருந்த அந்த பஸ் எங்கே போனது என்று விசாரித்தார். அவன் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தான். சாப்பிடுவதை பாதியில் நிறுத்திவிட்டு, கழிவு விலையில் சாமான்கள் விற்கும் மலிவுக் கடையில் மேலும் தள்ளுபடி கிடைக்குமா என்று கேட்கும் ஒருவரைக் கடைக்காரன் பார்ப்பதுபோல பார்த்து ‘ இங்கே எங்கே எங்கே பஸ்கள் நிற்கின்றனவோ அவைதான் இங்கே நிற்கும் பஸ்கள். இங்கே இல்லாவிட்டால் அவை இல்லை. என்னை எத்தனை தரம் கேட்டாலும் இதுதான் பதில். நான் என்ன கால்சட்டைப் பையுக்குள் பஸ்ஸை ஒளித்து வைத்திருக்கிறேனா?’
ஒரு பத்துப் பேரை விசாரித்திருப்பார். எல்லோருமே இல்லை இல்லை என்று பதில் கூறினார்கள். அவர் ஒரேயொரு சின்னக் கேள்வியைக் கேட்டிருந்தால் இந்த அல்லல் அவருக்கு ஏற்பட்டிருக்காது. ‘நான் எந்த நாட்டில் நிற்கிறேன்?’ அவர்கள் அமெரிக்கா என்று சொல்லியிருப்பார்கள். அவர் கனடா என்று நினைத்து எதிர் திசையில் நடந்தது அவருக்கு தெரியாது. அவருடைய பஸ் புறப்பட்டு போய் சரியாக இரண்டு மணி நேரம் கழித்துத்தான் அவர் தான் இன்னொரு நாட்டில் நிற்பதைக் கண்டுபிடிப்பார்.
* * *
ஒரு மதிய நேரம், ஆண் தேனீபோல சோம்பலாக சுருண்டு படுத்திருந்த சிவமூர்த்தி, சில வாரங்கள் கழித்து இந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார். தொலைபேசியில் யாராவது அவரை அழைத்தால் தான் தொலைந்துபோன சம்பவத்தை விஸ்தாரமாக விவரிப்பதற்கு அவர் தயாராக இருந்தார். அவர் வர்ணிக்கும் விதம் பெருமைப்படும்படியான ஒரு காரியத்தை அவர் செய்து முடித்தது போலவே இருக்கும். தன்னுடைய பூகோள அறிவையும் சரித்திர அறிவையும் திரட்டி யோசித்துப் பார்த்தார். கனடாவின் பாராளுமன்றம் ஒட்டவாவில் இருந்தது. அது 49வது கோட்டுக்கு கீழே அமெரிக்காவின் எல்லைக்குள்தான் வந்தது. ஒரு நாட்டின் நாடாளுமன்றமே அப்படி இருக்கும்போது அவர் ஒரு சில அடிகள் தவறுதலாக வைத்து அமெரிக்க எல்லைக்குள் தொலைந்துபோனது அப்படி ஒன்றும் பெரிதுபடுத்தக் கூடிய காரியமே அல்ல.


amuttu@gmail.com

Series Navigation