2006 தேர்தல் / சில குறிப்புகள்

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

தாஜ்


தலைப்பின் சௌகரியத்திற்காக ‘2006 தேர்தல்/சில குறிப்புகள்’ என்றிருக்கிறேன். சரியாக தலைப்பிட்டிருக்க வேண்டுமென்றால், ‘2006 தமிழக பொதுத் தேர்தலை முன் வைத்து சில குறிப்புகள்’ என்றுதான் இருந்திருக்க வேண்டும். மிகமிகத் தாமதமாகவேறு இந்த கட்டுரை எழுதுகிறேன். அரசியல் மீது அறவே நல்லபிப்ராயம் இல்லாது போனதினால், இந்த தாமதம் என்னை இம்சிக்க வில்லை.

முதல்வர் பதவியை முள் கிரீடம் யென பொதுமேடைகளில் கலைஞர் கருணாநிதி சொல்வதுண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அப்படி சொல்லியிருக்கிறார். இந்த ‘டயலாக்கை’ கலைஞர் கூறியிருக்காதப் பட்சம், அதைச் சொல்ல ‘செல்வி’ ஜெயலலிதாவுக்கு எந்த ஒரு தயக்கமும் இருந்திருக்காது.

முள் கிரீடத்தைச் சுமக்க ஏன் இப்படி போட்டியாம்! என்கின்ற அர்த்தத்தில் சில விஷமக்காரப் பத்திரிகைகள் கேலிச்சித்திரம் போட்டு, கிண்டலோடு நழுவினாலும், கலைஞர் விடுவாரில்லை! ‘மக்களின் சேவைக்காகத்தான் இந்த வயதிலும் அப்படியோர் முனைப்பு’ யென அவர் பதில் சொல்ல, சூடம் கொளுத்தி அடித்தணைத்து அதனை சத்தியமென நம்பும் கூட்டம் நம்மில் உண்டு. கலைஞருக்குப் பதிலாக செல்வியை அந்த இடத்தில் வைத்துப் பார்போமேயானால் அவரும் அப்படியொரு பதிலைத்தான் சொல்லியிருப்பார். ‘சூடம் கொளுத்தி அடுத்தணைத்துக்…’ கூற்று அப்பொழுதும் உண்டு.

முரண்பாடு கொள்வோர் சிலர் முனங்கலாம். அது சபையேறாது.

இந்த 2006 பொது தேர்தல் முடிவை யொட்டி , ஐந்தாம் முறையாக அந்த முள் கிரீடத்தை கலைஞரே சுமக்கி றார்! பாவம்..! இந்த வயதிலும் திரும்பத் திரும்ப நமக்காக வேண்டி அவருக்குத்தான் எத்தனை வலி! எத்தனை சிரமம்!

மக்களுக்காக இத்தனை வலியும் சிரமமும் பொறுக்க முன்வந்தும், அவரையும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களை யும் நம் மக்கள் இந்த தேர்தல் முடிவின் வழியே, வரவேற்ற விதம் அத்தனைக்கு சுரத்தாக இல்லை. அவரது தொகுதியில்
அவரை அதிக எண்ணிக்கை வித்தியாசத்தில் ஓட்டுகள் போட்டு தேர்வு செய்யவில்லை தவிர, தனியொரு கட்சியாக ஆட்சிக் கட்டிலோறும் வலிமையைக் கூட கலைஞருக்கு அவர்கள் தந்தார்கள் இல்லை. கலைஞருக்கு மெல்லவும் முடியாத விழுங்க வும் முடியாத நிலை. இது குறித்து அவர் பேசுவதேயில்லை. அவரின் மறைமுக வயிற்றெறுச்சலை இந்த மக்கள் வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பார்கள் என்றாலும் வியப்பில்லை.
தனிமெஜாரிட்டி இல்லாதபோதும், அவரே முன் வந்து தனிச்சையாக அந்த முள் கிரீடத்தை சுமந்திருக்கிறார்!! தியாகத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.

***

இந்திய அரசியல் வானில், தமிழக அரசியலின் தனித்துவம் எப்பொழுதுமே பிரசித்தம். இந்த தேர்தலில் அது இன்னும் அமர்க்களப்பட்டுவிட்டது. முன் எப்பவும் இல்லாத அளவுக்கென்று அரசியல் நோக்கர்கள் இதன் விசேசத்தைக் கணிக்கின்றார்கள்.

இந்த தேர்தலில் தமிழக பிரதான அரசியல் கட்சிகள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் சாதாரணமானது
அல்ல. இந்திய தேர்தல் கால சரித்திரத்தில் பிரதான இடம் பிடிக்க இருப்பவை. தேர்தல் சீர்திருத்தங்களை நிறைவேற்ற இந்திய தேர்தல் கமிஷன் முனைப்புக் காட்டிய அதே நேரத்தில்….. ஐம்பது வருட தேர்தலில் அனுபவம் கொண்ட நம்
தமிழக அரசியல் கட்சிகள், அதை சந்தித்த விதம் வித்தியாசமானது.

தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளால் தவிர்க முடியாமல் போவது வாக்காளர்களுக்கு தரும் லஞ்சம்தான்.
தேர்தல் கமிஷனோ சமீபகாலமாக அதை கண்டு கலைவதில் கண்ணும் கருத்துமாக இருக்க, நம் அரசியல் வாதிகள் லஞ்சத்தை இனாமென்றாக்கி, அதை தேர்தல் வாக்குறிதியாகவே பிரகடணமும் படுத்தி விட்டார்கள். தேர்தல் கமிஷன் விழித்திருந்து என்னச் செய்ய?

‘கலர்’ டி.வி., கேஸ்ஸ்டவ், இரண்டு ஏக்கர் நிலம், மாதம் இருபது கிலோ அரிசி, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ‘கலர்’கம்பியூட்டர்(அதில் டி.வி. பார்த்துக் கொள்ளலாமாம்/சிடியில் படமும் பார்க்கலாமாம்!! சொன்னார்கள்)
தொடர்ந்து அது தள்ளுபடி இது தள்ளுபடி என்று தொடங்கி வீட்டுக்கொரு பசுவும் கன்றும், ரேஷன் பொருட்களை வீட்டில் கொண்டுவந்து சேர்க்கும் இனாம் சேவகம் என்கிற அளவுக்கு தேர்தல் நெறுங்க நெறுங்க ஒவ்வொன்றாக கூடிக்கொண்டே இருந்தது. அத்தனையும் தேர்தல் வாக்குறுதிகளென்றப் பெயரில்!!

பிற மாநில அரசியல் கட்சிகளின் தலைமைகள் தங்களது ரகசிய டைரியில், நாம் கட்சிகளின் தேர்தல் கால விசேசங்களைப் பற்றியும், அதன் உள்ளார்ந்த ஜாலங்கள் பற்றியும் அடிகோடிட்டு குறித்துக் கொண்டிருப்பார்கள் என்றால் … ஆச்சரியப் படுவதற்கில்லை.

1. ஓட்டுப் போடும் மக்களுக்கு கையூட்டு தருவதை கொஞ்சம் மாற்றி, தேர்தல் வாக்குறுதியாகவே அறிவித்து தேர்தல் சீர்திருத்தம் பேசும் தேர்தல் கமிஷனின் கண்களில் மண்ணைத்தூவுவது.

2. கையூட்டிற்கான நிதியை, அரசின் கஜானாவிலிருந்தே உபயோகித்துக் கொள்வது. அதாவது… மக்களின் வரிப்பணத்தை மக்களுக்கே கையூட்டாகத் தருவது.

3. கையூட்டிற்கான நிதியை கவர்ச்சிகரமான எலக்ட்ரானிக் பொருளாக தேர்வு சொய்வது.
4. கட்சியின் அடிப்படை கொள்கைகளை மறந்தும் பேசாது, சமத்தாய் இனாம்களைப் பற்றி மட்டுமே பேசி
தேர்தலை சந்திப்பது.

5. மாநிலத்தின் வருங்கால முன்னேற்றத்திற்கான திட்டங்களை, தேர்தல் அறிக்கையில் அலட்சியம் காட்டுவது.

6. பன்னாட்டு கம்பெனிகள் அவன் பிழைப்புக்காக நம் மானிலத்தில் தொழில் தொடங்குவதை, மக்களுக்காக திட்டமிட்டு தாங்கள் அரசு தொழில் தொடங்கியது மாதிரியான பாவனையில் முழங்குவது.

7. கட்சிக்கென்று தொலைக்காட்சி சேனல் ஒன்றை ஏற்படுத்தி வளர்த்தெடுப்பது. அதன் செய்தி பிரிவில்
சாதகமானச் செய்திகளையும், ஓட்டுகளை கொண்டுவந்து சேர்க்கும் பொய்களையும் ஓராயிரம் தடவைகள் சொல்வது.

8. காலையில் ஒரு ரூபாயிக்கும், மாலையில் இரண்டு ரூபாயிக்கும் பத்திரிகை நடத்தி, மக்களிடம் தங்கள்
கோணத்தில் மட்டுமே செய்திகளை கொண்டு சேர்ப்பது.

9. தன்னிடம் வந்து சேர்பவர்களை கொள்கையை நேசித்து வருபவர்களாகவும், எதிர் கட்சியில் போய் இணைபவர்களை கோடிகணக்கில் பணம் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள் என்றும் ஓயாது தூற்றுவது.

10. தேர்தல் நேரத்தில் சில நடிகர்களைக் கொண்டு புதிதாக கட்சிகளை தொடங்கவைத்து, தன் எதிர் அணியின்
ஓட்டை சிதைப்பது.

11. கோடிகளில் பேரம் பேசி, பொதுப் பத்திரிகளைக் கொண்டு தங்கள் தங்கள் அணிக்கு சாதகமாக கருத்து கணிப்புகளை வெளியிடச் செய்வது.

– ஜனநாயகத்திற்கு உட்பட்ட/ தேர்தல் கமிஷன் மறுக்க முடியாத/ எந்த சாணக்கியத்திற்கும் மேம்பட்ட/ வெற்றிக்குறிய இந்த வழி முறைகளை பிற மாநில அரசியல் கட்சிகள் நாளை அவர்கள் மாநிலத்தில் எதிரொலிப்பார்கள் என்றால்…. அந்த பெருமை நம் அரசியல் கட்சிகளையே சேரும்.

***

கலைஞரின் அரசு தேர்தல் வாக்குறிதிகளை அதாவது தேர்தல் காலத்தில், தனது கூட்டணிக்கு ஓட்டு போட வைக்க பொது மக்களின் ஆசைகளை தூண்டும் விதமாக அறிவிக்கப்பட்ட இனாம்களை இப்பொழுது வழங்கத் துவங்கி இருக்கிறது.இதற்கு சுமார் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் கோடி ரூபாய்வரை செலவுப் பிடிக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்த பொருளாதார வல்லுனர்கள். இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியில் தொடங்கி, விவசாய கடன்களை தள்ளுப்படி செய்து, மாணவர்களு க்கு இரண்டு முட்டைவரை போட்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் நாட்களில் ‘கலர்’ டி.வி., கேஸ் ஸ்டவ் வழங்கப்படலாம். பிற இனாம்களையும் தனது ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் அதாவது அடுத்த தேர்தல் வருவதற்குள் கட்டாயம் வழங்கிவிடுமென்றே நம்புவோம்.

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் தரிசு நிலம் வழங்குவது இயலாது என்கிறார்கள். அத்தனைக்கு தரிசு நிலம் தமிழகத்தில் இல்லை என்கிறார்கள் எதிர் கட்சியினர். ஐந்து முறை முதல்வர்பதவி வகித்தவர் கலைஞர்! அவரு க்கு தெரியாதா என்ன? அப்படியே தமிழக எல்லைக்குள் அந்த தரிசு நிலம் குறையும் பட்சம் அடுத்துள்ள ஆந்திரா, கேரளா, கர்னாடக மாநில எல்லைப் பகுதியில் அது கிட்டாமலா போய்விடும்?

கலைஞர் தனது ஆட்சி காலத்திற்குள் இனாம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் சரிவர மக்களுக்குத்தந்து பரிபால
னம் செய்வார். நம்புவோம். இதன் மூலம் செலவழியும் சுமார் பதினைந்தாயிரம் கோடியை அவர் சரிகட்ட வேண்டும்!! கொ
ஞ்சம் சிரமம்தான். என்றாலும் சரிகட்டவே செய்வார். லாட்டரி மீண்டும் தமிழகத்தில் தன் வெற்றியை பறைச்சாற்றப் போகி
றது. டாஸ்மார்க்கில் இன்னும் புதுமைகள் நிகழாம். கப்பம் கட்டும் தொழில் அதிபர்களை கூடுதல் சலுகைகள் காட்டி வளைக்
கலாம். கலைஞருக்கு இதெல்லாம் கைவந்தக்கலை. தவிர, அவரது நிர்வாகச் சமத்து வேறு பிரபல்யமானது.

***

1. எல்லா தொழிழுக்கும் ஆதாரமான மின்சாரத்தில் சுய தேவை பூர்த்தி காண முயலுதல்.

2. மாவட்டங்கள் தோறும் தொழிற்சாலைகள் அமைத்து, பெரிய தொழில் வளங்களை திட்டமிட்டு பெருக்குதல்.

3. சிறு நகரங்கள் மற்றும் சிறிய பஞ்சாயத்துகள் தோறும் சிறு தொழில்களின் வளம் காணுதல்.

4. தமிழகத்தின் உற்பத்திப் பொருட்களை பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதை ஊக்குவித்தல்.

5. படித்து வெளிவரும் மாணவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருதல். அல்லது, அவர்களுக்கு
அவர்களின் அடிப்படைக்கேர்ப்ப தொழில் தொடங்க, ‘கவுன்சிலிங்’ அமைத்து பயிற்சிகளுடன் அவர்களை முன்னெடுத்துச் செல்லுதல்.

6. தனியார் பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காண கட்டணச் சுமையினையும், வருடாந்திர
கட்டணச் சுமையினையும் குறைக்க அரசு நடவடிக்கைகள் எடுத்தல்.

7. விவசாய இடுபொருட்களின் விலையினை குறைத்தல்.

8. விவசாய சம்பந்தமான உபயோகப் பொருட்களுக்கு தொடர்ந்து மானியம் தருதல்.

9. விவசாயத்தின் ஆதாரமான நீர்பாசனத்திற்கு அரசு உறுதி செய்தல்.

10. முப்பது வருட காலத்திற்குமேல் நீடித்து வரும் காவிரிப் பிரச்சனைக்கு விரைவில் சுமுக முடிவு காணுதல்.
மற்றும் பெரியார் அணையின் நீர் பாசனப் பிரச்சனைகள் குறித்து கேரள அரசுடன் பேசி தீர்வு காணுதல்.
11. தலைநகர தண்ணீர் பிரச்சனைக்கு நிறந்தரத் தீர்வு காணுதல்.

12. இனி ஒருமுறை சுனாமியால் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகாமல் நிரந்தர பாதுகப்பு வலையங்கள் அமைத்தல்.

13. பெருமழைக் காலத்தில், நகரங்கள் மழை நீர் சூழச் சிக்கி அவதிக்குள்ளாகாத வண்ணம், முன் எச்சரிக்கை
நடவடிக்கைகளுக்கு திட்டமிடல்.

14. கடலோரத் தமிழகம் தழுவி, கடல் வழியே வியாபாரப் போக்குவரத்திற்கு கப்பல் சர்வீஸ்களை ஏற்படுத்தி
உள் நாட்டு வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய ஆவணம் செய்தல்.

15. தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த, மற்றும் பிரபல்யமான சுற்றுலாத் தளங்களை செம்மைப்படுத்தி, உலகத்
தரத்திலும், உலக அளவிலும் விளம்பரம் செய்து, சுற்றுலாப் பயணிகளைக் கவர்தல்.

16. மழை நீர் வீணாக கடலில் விரயமாவதைத் தடுக்க, தமிழகம் தழுவிய எல்லா இடங்களிலும் அதைச் சோமி
க்கும் பொருட்டு ஆவண திட்டங்கள் வகுத்து, ஏரிகளே இல்லாத கிராமங்கள் இல்லை என்கின்ற அளவுக்கு நீர் நிலைகளை
புதிதாக ஏற்படுத்துவதுதல், பழைய ஏரிகளையும், குளங்களையும் முழுமையாக தூர்வாரி செப்பனிடுதல்.

17. இன்னும் ஐம்பது வடத்திற்குப் பிறகு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் கிடைக்காத தட்
டுப்பாடு ஏற்படும் என்பது புவி ஆய்வாளர்களின் கணிப்பு கூறுகிறது. அதையேதான் யு.என்.எ. வின் அறிக்கையும் கூறுகிறது.
ஆக நாம் எதிர் கொள்ள இருக்கும் இந்த குடிநீர் வறட்சியை சவாலாக கொண்டு திட்டம் வகுத்தல்.

18. கிராமங்களை நகரங்களோடு இணைக்கும் ஏனைய சாலைகலையும் அகலப்படுத்தி போக்குவரத்திற்கு ஒத்த
தார்சாலைகளாக மாற்ற செயல்பாடுகளைத் துரிதப் படுத்துதல்.

19. நாட்டில் பருவ மழை தட்டாது பெய்யவும், அதையொட்டி நாட்டில் சுபீச்சம் தழைக்கவுமாக பல நோக்கு சிந்தனையின் அடிப்படையில், மலைகளிலும் மலைச்சார்ந்த பகுதிகளிலும் மர காடுகளை உற்பத்தி செய்தல்.

20. பெண்களின் அடிமைத்தனம் முற்றாக ஒழியவும், ஆண்களுக்கு நிகரான சம அந்தஸ்து அவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் கிட்டவும் காலம் தாமதிக்காமல் தீர்க்கமான சட்டங்களை இயற்றுதல்.

– அரசு தன் அதிகாரத்தின் மூலம் உடனடியாகவோ, படிப்படியாகவோ செய்து முடிக்க வேண்டிய மிக முக்கியப் பணிகள் இப்படி இன்னும் ஏராளம் உண்டு. இவைகளில் ஒரு சிலவற்றை நம் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பினும், அதனை மக்கள் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் விதமாக மேடையில் பேசுவது கிடையாது. தாங்கள் அறிவித்த இனாம்களுக்கு தருகிற முகியத்துவத்தை நாட்டின் உயிரோட்டமான சங்கதிகளுக்கு அளிப்பதே கிடையாது.

எது குறித்தும் மக்கள் கவலை கொள்ளாமல் பார்த்துக்கொள்ள, எந்த பழிப் பாவத்திலிருந்தும் தங்களை காத்துக் கொள்ள அவர்களிடம் சாதுர்த்தியம் கொண்டப் பேச்சும், உணர்ச்சிகளை உசுப்பி வாசிப்போரை தன் பக்கம் திரும்பச் செய்யும் எழுத்தும் இருக்கிறது. ‘அய்யன்’ வள்ளுவனே சொல்லிவிட்டார்… ‘வாய்மையே வெல்லும்’ என்று.

***

எந்த அரசு பதவிக்கு வந்தாலும் கவனம் செலுத்த மறுக்கிற, மிக தேவையான நிர்வாகச் சீர்திருத்தங்களின்
சங்கதிகள் வேறு கனமானத் தொகுப்பாக இருக்கிறது. இந்த சீர்திருத்தங்களில் இவர்கள் அசட்டையாக இருப்பதற்கு வலுவான காரணங்கள் என்ன என்பது விளங்கவில்லை. அரசின் பொருளாதார நெருக்கடித்தான் காரணமென்றால், இப்படி தேர்தல் கால இனாகளை வாரி வழங்குவதில் ஆகும் பெரிய செலவீணங்களுக்கு எல்லாம் இவர்கள் அஞ்சுவதில்லையே!! எது எப்படி எனினும் நாளையத் தமிழகத்தின் மலர்ச்சிக்கு நிவாகச் சீர்திருத்தங்களின் பங்கு இன்றியமையாதது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

நாட்டின் எல்லா துறைகளிலும் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்துதல்/ அரசு அலுவலகங்கள், அரசு கல்வி நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், அரசு பேரூந்துகள், அரசு பேரூந்து நிலயங்கள் போன்றவற்றை கொஞ்ச மேனும் உலகத்தரத்தையொட்டிய வகையில் நவீனப்படுத்துதல்/ அரசு உத்தியோகஸ்த்தர்கள் பொறுப்புடன் மக்கள் பணியா
ற்ற நடவடிக்கை எடுத்தல்/ போலீஸ்துறையின் மனோநிலையை லஞ்சவேட்கையிலிருந்து மனிதாபிமன நிலைக்கு மாற்ற முயற்சி எடுத்தல், இன்னும் மனித உரிமைகள் குறித்த உலக அளவிலான தாக்கத்தை அவர்களுக்கு அறிவுறுத்த ஆவணச் செய்தல்/ காலத்தையும் பணத்தையும் செலவழித்து கல்லூரிகளில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு எல்லா கல்லூரிகளி லும் தரமான கல்வி வழங்க கல்வித்துறையை முடுக்கி விடுதல்/ உயிர் காக்கும் மருந்துகளின் விலையை குறைத்து கட்டு க்குள் வைத்தல்/ நகரங்களின் சுத்தத்தைப் பேணவும், சுவாசிக்கும் காற்று இன்னும் இன்னும் மாசுப்பட்டுப் போகாமல் கடுமை யான நடவடிக்கை எடுத்தல்… என்பதாக இன்னும் ஆயிரம் சீர்திருத்தங்கள் கட்டாயம் கூடியதாகவும் துரிதமாகச் செய்ய வேண்டியதாகவும் இருக்கிறது. இருந்து என்னச் செய்ய?

தேர்தல் காலத்தில் அறிவித்த இனாம்களை மக்களுக்கு பங்கீடுப்பண்ணித் தந்து விட்டு, கொஞ்சக் காலம் அதி காரச் சுகத்தோடு, அதன் பின்புல சாதக ராஜப்பாட்டைகளில் உலாப்போய் முடித்து விட்டு அடுத்தத் தேர்தலுக்கு தயாராகி விடுவார்கள். அன்றைக்கும் அவர்கள் கையில் தேர்தல் அறிக்கை இருக்கும். அதில் மக்களுக்கான இனாம் அறிவிப்புகள் நிச்
சயம் இருக்கும்.’கலர்’ ஏ.சி, ‘கலர்’ ஃபிரிஜ், ‘கலர்’கார், ‘கலர்’ மிக்ஸி, ‘கலர்’ கிரைண்டர், சந்திர மண்டலதில் எல்லோருக் குமான ‘கலர்’ வீட்டுமனை என்று இன்னும் கூட நீளும். அவர்களின் ஸ்டைல் தப்பாது.

***

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், நிர்வாக சீர்திருத்தங்கள் செய்வதிலும்தான் தயக்கம் காட்டும் அவர்கள்தான், தங்களுக்கு சாதகமான விசயங்களை மிக துரிதமாகவும், படு நுட்பமாகவும், சட்டத்தின் துணையேடு சரிசெய்தும் கொள்கிறார்கள்.

இந்த அரசு ஆட்சிக்கு வந்த இந்த ஐம்பது நாட்களுக்குள், அரசுடைமை ஆக்கப்பட இருந்த, ‘சுமங்கலி கேபில் நெடொர்க்.’ குறித்த பழைய ஆட்சியின் மசோதா குப்பைக் கூடைக்குப் போய்விட்டது/ சின்னத்திரை, பெரியத்திரை தயாரிப்பா
ளர்களுக்கு அவர்கள் மகிழ்ச்சி கொள்ளத்தக்க சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறது/ விரைவில் தமிழகம் தழுவி, டி.வி இல்
லாத குடும்பங்களுக்கெல்லாம் கலர் டி.வி இனாமாக வழங்கப்படவும் இருக்கிறது/ அரசின் இந்த மூன்று செயல்பாடுகளுமே சன் டி.வி. ஒட்டிய மறைமுக நலன்பொருட்டே என்கிறார்கள் அரசியல் நேக்கர்கள்.

இந்த அரசின் செயல்பாடுகளை இன்னும் உன்னிப்பாக கவனித்து, நினைவுகளையும் நாம் துணைக்கு அழைத்துக் கொண்டோமெயானால் பல அறிய நடப்புகளை உணர்ந்து ரசிக்க முடியும். உதாரணமாக, தேர்தல் காலத்தில் ‘செல்வி’ஜெயல லிதாவின் பினாமியாக கருதப்படும் சசிகலா குடும்ப நபர்களுக்கு சொந்தமான, வெளிநாட்டு மதுபான தொழிற்சாலையை அர சுடமையாக்குவோம் என்று முழங்கிய கலைஞர் இனி வாய் திறக்கமாட்டார். வேறு வழியில்லாமல் திறக்கும் பட்சம் கூட,
அதை பிறகு மறப்பார். அது மாதிரியே சுமங்கலி கேபில் நெடொர்க் அரசுடைமை ஆகாது போனதுக் குறித்து ‘செல்வி’ ஜெய
லலிதாவும் எந்த ஒரு போராட்டமும் செய்யமாட்டார். அவர்கள் தேர்தல் நேரத்தில் பேசியப்படி அந்த ஒவ்வொன்றும் ஆண்டு க்கு சுமார் ஆயிரத்தி இரணூறு கோடி வருவாய் சம்பந்தப்பட்டது என அறிந்தும்தான் என்ன செய்ய?

காலத்தில் நாமும் இதனை மறந்து, அவர்களின் புதிய ஊழல்களில் ஆர்வம் காட்டியவர்களாகவும் ‘துப்புத்துல
க்குவதாக’ தமிழிழ் வரும் வாரம் இரு முறை இதழ்களை பின்தொடர்வோம். மக்களின் ஞாபகமறதியைப் போற்றித்தான் அரசியல்வாதிகள் ஒவ்வொரு நாளையும் தொடங்குகிறார்கள்.

இன்னும் கூட கவனித்தால், ஆழமான பல தெளிவுகள் நமக்கு கிடைக்கும். தமிழகத்து இரண்டு பெரிய கட்சிக
ளும் நம் காதுபட முழங்கும் ஊழல் குற்றசாட்டுகள் குறித்தோ, சொத்து குவிப்புகள் குறித்தோ என்றைக்கும் அவர்களில்
யாரும் தண்டணை அனுபவிக்கவே மாட்டார்கள். அவர்கள் பேசுகின்ற பிரமாண்டமானப் பேச்சும், கோர்ட் நடவடிக்கைகளும்
நாடகத்தனமானது. பத்திரிகைகளுக்கு தீணிப்போடுவது. இவர்கள் சுரண்டுவதை கவனித்து விடும் மக்களின் ஆத்திரம் தீரும்
வரை மெல்லுவதற்காக தரப்படும் நொறுக்குத் தீணி போன்றது. இதை நம்புவதற்கு கஷ்ட்டமாக இருக்கும். ஆனால் அதுதான்
(என்னளவில்) உண்மை. மாறி மாறி அவர்கள்தான் வருவார்கள். கலைஞர் ஆட்சிக்கு வந்தால் அம்மாவுக்கு ஐந்து வருடங் கள் ஓய்வு. அம்மா வந்தால் கலைஞருக்கு ஓய்வு. இன்னும் விளக்கமாகச் சொன்னால் கலைஞர்தான் அம்மா, அம்மாதான் கலைஞர்.

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் அளவில், திராவிட இயக்கமில்லாத வேறு இயக்கங்களுக்கு இங்கே வாய்ப்பென்பது இல்லை. அது கனகச்சிதமாக ஒடுக்கப்பட்டு விட்டது. மேற்குவங்கத்தில் கூட மார்க்சிட்டுகளை அடுத்தடுத்த தேர்தல்களில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, காங்கிரஸ் அங்கே பதவிக்கு வரலாம். தமிழகத்தில் அது நடக்காது. பொறுமையாக இதை வாசிப்பவர்களுக்கு எனது கணிப்பு குழப்பம் தரலாம்! அரசியல் என்பதற்கு சூழ்ச்சி என்ற அர்த்தமும் உண்டு என்று அறிபவர்களும், ஞாபகங்களை காலத்தின் பின்நோக்கிய திருப்பங்களில் எழுப்பிப் பார்க்க முடிகின்றவர்களும் என் கணிப்பை உரசிப் பார்க்க முற்படுவார்கள். ஓர் எல்லையில் ஒப்புக்கொள்ளவும் செய்வார்கள்.

***

இந்த தேர்தலில் ஓட்டு போட என்னால் இயலாமல் போய்விட்டது. தேர்தல் அன்றைக்கென்று பார்த்து பக்கத்து
டவுனில் உள்ள என் இலக்கிய நண்பர் ஒருவருக்கு வயிற்றுப் போக்கு உபாதை. தனியார் மருத்துவமனைக்குப்போய் தஞ்சம் அடைந்து விட்டார். தகவல் வந்ததும் சிரித்துக்கொண்டே விரைந்தேன். நண்பரை இருக்கையில் பார்க்க முடியவில்லை. பாத் ரூமிலிருந்து எப்பொழுது வெளியே வருகிறார், எப்பொழுது மீண்டும் உள்ளே போகிறார் என்றே கண்டுகொள்ள முடியவில் லை. பிறகு அவரை பார்த்தேன். நலம் விசாரித்தேன். வீட்டு பாத்ரூமைவிட இங்கே தேவலாம் என்றார். பஸ்ஸில் திரும்பி யபோது இடையில் பிரேக்டவுன் வேறு. ஊருக்கு வந்தபோது, ஓட்டுப் போடவேண்டிய நல்ல நேரம் நழுவி விட்டது. பெரிய திருப்தி. நண்பரின் வயிற்று உபாதைக்கும், பஸ்சின் பிரேக்டவுனுக்கும் நன்றி சொன்னேன்.

***

satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்