ஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

வஹ்ஹாபி


திண்ணையின் 12.01.2006 பதிப்பில் ஹெச். ஜி. ரஸூல் எழுதியிருந்த கட்டுரையின் மூன்றாவது பத்தியில், ‘அறிவுநிலைப்பட்ட விவாதங்கள் ‘ (அல்லது மீள்பார்வை அதாவது மறு பரிசீலனை) செய்யப்பட வேண்டிய நூற்றுக் கணக்கானவற்றில் ‘மைய இஸ்லாத்தில் நிகழ்த்தப் படும் ‘ (அல்லது ஹஜ் கடமையின்) போது முஸ்லிம்கள் (அல்லது வஹ்ஹாபிகள்) செய்யும் ‘சடங்குகள் ‘ (அல்லது கடமைச் செயற்பாடுகள்) சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார்:

(1) ஸஃபா-மர்வா குன்றுகளிடையே ஸஃயுச் செய்தல்

(2) மினாவில் ஜம்ராத்துக்குக் கல்லெறிதல்

(3) கால்நடைகளை பலியிடுதல்

(4) தலைமுடி மழித்தல்

‘தமிழ் சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக் கூறுகள் ‘ (வஹ்ஹாபிகளால்) விமர்சிக்கப் படுவதால்.மேற்கண்பவற்றையும் ‘அறிவுநிலைப்பட்ட விவாதங்கள் ‘ செய்ய வேண்டுமென்ற காரணத்தை முன் வைக்கிறார்.

அஃதென்ன ‘தமிழ் சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக் கூறுகள் ‘ ? என்று வாசகர்கள் அதிகம் குழம்ப வேண்டாம். வஹ்ஹாபிகளின் தலைவர் (அல்லது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் போதனைகளின்* அடிப்படையில் வஹ்ஹாபிகளால் கடுமையான விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகிக் களையிழந்து போன தர்ஹாக்கள் மற்றும்

-அதில் நடைபெறும் சமாதி வழிபாடுகள், சமாதிகளுக்காக நேர்ச்சை செய்தல், பலியிடுதல், மொட்டையடித்தல்

-இல்லாத பேயை உற்பத்தி செய்தல், பேய் விரட்டும் பித்தலாட்டம்

-கந்தூரி அனாச்சாரங்கள்

-சமாதிகளின் பெயரால் தட்சணைக் கொள்ளை மற்றும் உண்டியல் சுரண்டல்

-தர்ஹாக்களைச் சுற்றிலும் நடக்கும் பல்வகைக் கீழ்த்தொழில்கள்

ஆகியன ‘பண்பாட்டு உயிர்ப்புக் கூறுகள் ‘ என்ற மேல்பூச்சுக்கு உள்ளேயுள்ளவற்றுள் சில.

இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் அனாச்சாரங்களுக்குக் கட்டுரையாளர், ‘தர்கா கலாச்சாரம் சார்ந்த பெண்கள் திரளின் ஜாயாரத் வழிபாடுகள் ‘ என்றும் ‘சூபிகள், சமயஞானிகளின் உறவிடங்களான தர்காக்கள் சார்ந்த மரபுவழிபண்பாட்டியல் நடவடிக்கைகள் ‘ என்றெல்லாம் விளக்கம் சொல்லி உயிரூட்ட முயல்கிறார்.

ஹஜ்ஜில் நிறைவேற்றப் படும் கடமைச் சொயற்பாடுகளுக்கு இம்மடலின் இறுதியில் இஸ்லாமின் அடிப்படைகளான வஹ்ஹாபின் வார்த்தைகளையும் வஹ்ஹாபிகளின் தலைவருடைய வழிமுறையின் சான்றுகளையும் வரிசைப் படுத்தியிருக்கிறேன்.

என்னுடைய தெளிவான ஒரேயொரு கேள்வி என்னவெனில் ‘தர்ஹாவுக்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு ? ‘ இறைமறை மற்றும் நபிவழிமுறையின் சான்றுகளை ஹெச். ஜி. ரஸூல் சொல்ல வேண்டும்.

மேலும்,

இறைவாக்கில் (அல்லது வஹ்ஹாபுடைய அறவுரையில்) அவருடைய பார்வையில் ‘விசித்திரங்களாகத் தென்படுகின்ற ‘ நிகழ்வுகளான:

(அ) மூஸா நபியின் கைத்தடி பாம்பாக மாறியது [007:117]

(ஆ) கடல் பிளந்து வழிவிட்டது [026:063]

(இ) நெருப்புக் குண்டம் இபுராஹீம் நபிக்கு குளிர் பொய்கையாய் மாறியது [021:069]

(ஈ) அப்ரஹாவின் யானைப் படைகளை (வஹ்ஹாப் அனுப்பிய) பறவைகள் பின்வாங்கச் செய்தது [105:001-005]

ஆகியவற்றுக்கு ‘அறிவுநிலைப்பட்ட விவாதம் ‘ வேண்டும் என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை; இறைவாக்கின் உருவாக்கம் (அல்லது வஹ்ஹாப் அனுப்பிய வஹீ) குறித்தும் ‘வரலாறு சார்ந்த சமூகவியல் பார்வையும் மானுடவியல் அணுகுமுறைகளும் ‘ அவசரமாகத் தேவைப் படுவதாகக் கூறி, தம் மீள்பார்வை இலக்கு (அதாவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது) வஹ்ஹாபின் வார்த்தைகளான இறைவேதம்தான் என்று தெளிவாக்குகிறார்.

அவருடைய கட்டுரையை, ‘வஹ்ஹாபிஸம் துரோகம் செய்து கொண்டிருக்கிறது ‘ என்று முடித்திருந்தார்.

அவர் சொல்ல வரும் செய்தி என்னவெனில், ‘(அ),(ஆ),(இ),(ஈ) ஆகிய நான்கிலும் ‘விசித்திரங்கள் சார்ந்த நிகழ்வுகளை ‘ உண்மை என நம்ப வைத்து, வஹ்ஹாப் துரோகம் செய்து விட்டான் ‘ என்பதே!

புத்தக வடிவில் வரவேண்டிய கருத்து!

ஃஃஃ

____

சான்றுகள்:

(1)நிச்சயமாக ‘ஸஃபா ‘, ‘மர்வா ‘ (என்னும் குன்றுகள்) அல்லாஹ்வின் சின்னங்களைச் சார்ந்தவைதாம். எனவே (கஃபா என்னும்) இறையில்லத்தை ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள் அவ்விரண்டையும் சுற்றி வருவதில் தவறேதுமில்லை … அல்-குர் ஆன் 002:158.

வரலாற்றுக் குறிப்பு:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொள்வதற்கு முன்வரை ஸஃபாவில் “அஸாஃப்” மர்வாவில் “நாயிலா” ஆகிய சிலைகளை இணைவைப்பாளர்கள் வழிபட்டு வந்தனர். மக்கத்து வெற்றியின்போது அனைத்துச் சிலைகளும் அழிக்கப்பட்டன. என்றாலும், அவ்விரு சிலைகளும் அறியாமைக் கால அரபியரின் வழிபாட்டு அடையாளங்களாய்த் திகழ்ந்தமையால் அவை இருந்த இடமான ஸஃபா-மர்வாப் பள்ளத்தாக்கின் பக்கம் போவதையும் மக்கத்து வெற்றியின்போது உம்ராவை நிறைவேற்ற வந்த (மதீனத்து) முஸ்லிம்கள் வெறுத்தனர். மட்டுமன்றி, அங்குச் சென்றால் குற்றமாகிவிடுமோ என்றும் அஞ்சினார்கள். அப்போதுதான் மேற்காணும் இறைவசனம் இறக்கியருளப் பெற்றது -தப்ஸீர் இபுனு கஃதீர்.

(2)“கல் வீசப்படும் இடங்கள் ஒற்றைப் படையா(ன மூன்றா)கும்; வீசப்பட வேண்டிய கற்களும் ஒற்றைப் படையா(ன ஏழா)கும்…” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) – நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2622.

பலியிடும் (துல்ஹஜ் பத்தாம்) நாளின் முற்றிய காலைப் பொழுதில் தங்கள் ஒட்டகத்தில் அமர்ந்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜம்ர(த்துல் அகப)வில் ஏழு பொடிக் கற்களை வீசி விட்டு, “நீங்களனைவரும் உங்களுடைய ஹஜ்ஜுக் கடமையின் செயல்களைச் சரியாகச் செய்ய (என்னிடமிருந்து இப்போதே) கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனனில், இந்த ஹஜ்ஜுக்குப் பின்னர் நான் (மீண்டும்) ஹஜ்ஜுச் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்றார்கள். -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) – நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2618-2620.

(3)“…(நீங்கள் பலியிடும்) கால்நடைகளின் இறைச்சியோ இத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை. ஆனால், உங்களின் இறையச்சம்தான் அவனைச் சென்றடையும்” – அல்குர்ஆன் 022:037.

… (ஹஜ் மாதப் பத்தாம் நாளில்) கல் வீசிய பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 63 ஒட்டகங்களைத் தங்கள் கைப்பட அறுத்தார்கள். எஞ்சியதை அலீ (ரளி) இடம் கொடுத்து அறுக்கச் சொன்னார்கள் … -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) – நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2555.

“… அவரவர் வசதியைப் பொருத்து ஓர் ஒட்டகத்தையோ ஒரு மாட்டையோ ஓர் ஆட்டையோ (பலியிட) ஓட்டிச் செல்லட்டும். ஒன்றுக்கும் வழியில்லாதவர் மூன்று நாட்கள் நோன்பிருக்கட்டும்…” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரளி) – நூல்: புகாரீ, பாகம் 6 பக்கம் 35.

ஹுதைபிய்யா (உடன்படிக்கை) ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு நாங்களும் (கால்நடைகளைப்) பலியிட்டோம். எழுவருக்கு ஓர் ஒட்டகம் (அல்லது) எழுவருக்கு ஒரு மாடு(என்ற கணக்கில் பலியிடப் பட்டது). -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) – நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2636.

வரலாற்றுக் குறிப்பு

ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டில் அருளப் பெற்ற 002:196 இறை வசனக் கட்டளையின் படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் ஆயிரம் தோழர்களும் உம்ராச் செய்வதற்காக, பலியிட வேண்டிய தங்கள் கால்நடைகளோடு மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவை நோக்கி வந்தார்கள். குரைஷிகளின் பிரதிநிதியாக ஸுஹைலிப்னு அம்ரு, தமது குழுவினரோடு மக்காவிலிருந்து புறப்பட்டு வந்து ஹுதைபிய்யா என்ற இடத்தில் வழிமறித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும் “மக்காவிற்குள் நுழையக் கூடாது” எனத் தடுத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் ஸுஹைலுக்கும் இடையில் அங்கு ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும். -தஃப்ஸிர் இபுனு கஃதீர், புகாரீ, முஸ்லிம் மற்றும் மிஷ்காத் ஹதீஸ் எண் 4042.

(4) ‘…ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாகவோ தலைச்சிரங்கு உள்ளவராக இருந்து, தலைமுடியை மழிக்க முடியாமலாகி விட்டால் நோன்பு நோற்றோ, தருமம் செய்தோ (இன்னொரு) பலி கொடுத்தோ அதற்கு ஈடு செய்ய வேண்டும் … ‘ அல்-குர் ஆன் 002:196.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின்போது தலைமுடியை (முழுக்க) மழித்துக் கொண்டார்கள். நபித்தோழர்களில் பெரும்பாலரும் அவ்வாறே (முழுக்க மழித்துக் கொண்டனர்). சிலர் முடியைக் கத்தரித்துக் கொண்டனர். -அறிவிப்பவர் : இபுனு உமர் (ரளி) – நூல்: புகாரீ, முஸ்லிம்/ மிஷ்காத் ஹதீஸ் எண் 2646.

* ‘எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள் ‘ -அறிவிப்பாளர் அபூ ஹுரைரா: அஹ்மது 8449, அபூதாவூது 1746

* ‘இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே ‘ – அறிவிப்பவர் அபூ ஹுரைரா: அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376

* ‘சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளின் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள் ‘ – அறிவிப்பவர் இபுனு அப்பாஸ்: நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

* ‘நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான் ‘ என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். இல்லையெனில் அவர்களுடைய சமாதியையும் வணங்குமிடமாக்கிவிட வாய்த்து விடும் ‘ – அறிவிப்பவர் அன்னை ஆயிஷா: புகாரீ 3195,4087,4089,5368 மற்றும் அஹ்மது 23976, நஸயீ 696.2020, முஅத்தா மாலிக் 1387.

*சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் தடை செய்தார்கள் – அறிப்பவர் ஜாபிர்: திர்மிதீ 972, அஹ்மது 14748.

____

to.wahhabi@gmail.com

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி