ஹிரோஷிமா அணுகுண்டுவீச்சில் சிக்கிய ஒருவரின் சோகக் கதை

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

தாகேஹாரு தெராவோ (Takeharu Terao)


இந்த வெறுப்பூட்டும், கசக்கும் நினைவினை என் மூளையிலிருந்து துடைத்தெறியத்தான் நான் விரும்புகிறேன். ஆகஸ்ட் 6-ம் தேதி மீண்டும் வருகிறது. என் அனுபவத்தைப் பதிவு செய்ய இதுவே கடைசி சந்தர்ப்பம் என்று உணர்கிறேன்.

அந்த 1945-ன் ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமா ஆசிரியர் பள்ளியில் நான் மூன்றாமாண்டு மாணவன். என் படிப்பின் முதலாண்டு நடுவில் போர் தீவிரம் பெறுவதையும். யுத்தகளம் எல்லையின்றி விரிவு பெறுவதையும் பற்றிக் கேள்வியுற்றோம். எல்லா மாணவர்களும் படையில் சேர்ந்திருந்தார்கள். நாங்கள் எதிர்கால ஆசிரியர்கள் என்பதால் நாங்கள் இன்னமும் கல்லூரியில் இருந்தோம். ஆனால் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாய் மாறுதல் பெற்றவண்ணம் இருந்தது. கலைக் கல்லூரி மாணவர்கள் யுத்தத்திற்குப் போனபின்பும், அறிவியல் மாணவர்களான நாங்கள் கல்லூரியில் இருந்தோம்.

யுத்தநிலைமை மேலும் மோசமாயிற்று. ஏப்ரலில் கடைசியாக நாங்களும் ஹிரோஷிமா நகரின் ஏபா என்ற பகுதியில் மிட்சுபிஷி கப்பல் தளத்தில் வேலைக்குச் சேர்ந்தோம். துருப்புகளின் பயணத்திற்காக இங்கே பத்தாயிரம் டன் கனமுள்ள கப்பல்கள் கட்டப் பட்டன. என் முதல் வேலை இரும்புத் தகடுகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கிற வெல்டிங் வேலை. என் உடை கனமான ஈயம் தோய்ந்த உடை. சிறிது காலத்திற்குப் பிறகு நான் ஷ்உடோ நடுத்தரப் பள்ளி மாணவர்களையும், ஹிரோஷிமா வணிகப் பள்ளி மாணவர்களையும் பயிற்றுவிக்க அனுப்பப் பட்டேன். எங்கள் விடுதி கின்சுயிகான் என்றழைக்கப் பட்டது. மியாஜிமா என்ற புகழ் பெற்ற அழகிய பகுதியில் இருந்தது. கப்பல் தளத்திற்கு நாங்கள் படகில் செல்வது வழக்கம். ஒரு மணி நேரப் பயணம். அமெரிக்க போர் விமானங்கள் தாக்கக் கூடிய அச்சம் இருந்தது. கண்ணி வெடிகளும் பாதையில் வெடிக்கக் கூடும். மிதவைச் சட்டைகளுக்குப் பதில் கட்டைகளை நாங்கள் படகில் வைத்திருந்தோம். ஓய்வு எடுக்கவும், புத்தகங்கள் படிக்கவும் இந்த இரண்டு மணி நேரம் பெருமளவு உபயோகமாய் இருந்தது. எப்போதும் பசி தான். சோயாவிதைகள் அரைத்துக் கரைத்த அரிச்யும், கோதுமை மாவில் கீரையைக் கலந்த உணவும் எங்களுக்கு பெரிய விருந்து போல.

ஆகஸ்ட் 6ம் தேதி

மியாஜிமா துறைமுகத்திலிருந்து நாங்கள் புறப்பட்டு ஏபா கப்பல் கட்டுமிடத்திற்கு வந்தோம். வழக்கமாக வருகிற நேரம் தான் . எட்டு அடிக்கச் சில நிமிடங்கள். உஷ்ணமான நாள். மேகமற்ற வானம். எட்டு அடிக்குமுன்பே , விமானத்தாக்குதல் எச்சரிக்கைச் சங்கு ஊதியது. நாங்கள் சலித்துக் கொண்டே வழக்கம் போல ஒரு மறைவிடத்தில் ஒதுங்கினோம். சீக்கிரமே எச்சரிக்கை ரத்து செய்யப் பட்டது. காலையில் வழக்கமாய் நடக்கும் கூட்டம் நடந்தது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ஆஜர் அபட்டியல் வழக்கம் போலவே எடுக்கப் பட்டது. இரண்டாவது மாடியில் சில எழுத்து வேலைகளைப் பார்க்க நான் சென்றேன். என் முதுகுக்குப் பின்னால் தான், அணுகுண்டு தாக்குதலின் மையமான இடம் இருந்தது. திடாரென்று நீலம் கலந்த ஒரு வெள்ளை நிற வெளிச்சம் பிரகாசமாக எழுந்தது. பிரமாண்டமான ஒரு வெல்டிங் தகடிலிருந்து தெறிக்கும் பேரொளி போல. உலகமே வெண்மை நிறமாயிற்று.

எனக்கு உடனே தோன்றியது – கண்ணன் மாவட்டத்தில் மிசாசா மின்சாரத் தொழிற்சாலையின் டிரான்ஸ்ஃபார்மர் வெடித்திருக்க வேண்டும் என்று. ஜன்னலருகில் ஓடினே. திறந்த ஜன்னல் காற்றிற்காக நன்றாகத் திறந்தே வைக்கப் பட்டிருந்தது. விபத்து நடந்திருக்க கூடிய திசையைப் பார்த்தேன். மஞ்சள் நிறம்பாவிய பழுப்பு நிறத் தோகை போன்ற ஒரு உருவத்தில் பிரமாண்டமான ஒரு மெழுகுவர்த்தியின் சுடர் போல ஒன்று எழக்கண்டேன் அதை அணைத்தபடி கருமைநிறப்புகைமண்டலம் ஒன்றும் வான் நோக்கி எழுந்தவாறு இருந்தது. (அணுகுண்டு பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ஆகையால், காளான் புகை அது என எனக்குத் தெரியவில்லை. ) அதே கணம், தூரத்தில் வீடுகள் கொஞ்சம் மேலெழும்பித் தரையில் விழுந்து நொறுங்கின – ஒரு சீட்டுக்கட்டை அருகருகாய் அடுக்கி, கடைசிச் சீட்டை விழுத்தினால், எல்லாம் ஒன்றன் மீது ஒன்று சாய்ந்து விழுவது போல என்னை நோக்கி அழிவு வரக்கண்டேன். கடற்கரையில் கரையை நோக்கிவரும் பேரலை போன்றிருந்தது இது. (பிற்காலத்தில் வெடியைத் தொடர்ந்த அதிர்வலை என்று இது அழைக்கப் பட்டது.) முதல் முறையாய் எனக்குள் அதிர்ச்சி பதிவுற்றது. ஏதாவது செய்ய வேண்டும், நான் நின்றிருந்த இரண்டாவது மாடி விழக்கூடும் என்று எண்ணிய தருணத்தில், என்னருகில் இருந்த நண்பர் – சோமாவா, இல்லை யோஷிகாவாவா என்று தெரியவில்லை – கூக்குரலிட்டார்கள். மேஜைக்குக் கீழ் நான் பதுங்கி ஏதும் நடக்கக் காத்திருந்தேன். ஓரிரு கணங்களுக்குள் இதெல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

பிறகு திடாரென்று தரை பெரும் ஒலியெழுப்பிச் சரிந்தது. பெரும் புகை மண்டலம் எழுந்தது. நான் இந்த நிமிடம் உறைந்து போயிருந்தேன். என் கண் முன்பு குண்டு வெடிக்கக் கண்டேன். ஆனால் குண்டு இல்லை. குண்டு குருடாக்கும் என்று எண்ணி, மெதுவாக வெளியே ஊர்ந்தேன். தரைமட்டமாகியது.

என் நண்பர் ‘ உன் கண்ணில் காயம் ‘ என்று கத்தினார். என் கணைத் தொட்ட போது ஒரு ரத்த உறைவு தென்பட்டது. ஆனால் எனக்கு வலிக்கவில்லை. வெடியில் சிதறிய ஜன்னல் கண்ணாடித் துண்டம் என் கண்மீது விழுந்திருக்க வேண்டும். பெருகும் ரத்தம் என் கண்ணுக்குள் சென்றது. என் கண்பார்வை போய்விட்டது. என் நண்பரின் தோளில் சாய்ந்து வெளியேறி, அங்கு இருந்த மருத்துவ உதவி அறைக்குச் சென்றேன். எனக்கு முன்பே 200-300 பேர் அங்கு இருந்தார்கள். அங்கிருந்தவர்களில் பெரும்பாலோனோருக்கு உடல் எரிந்து போயிருந்தது. பிறகுதான் அந்த வரிசையில் இருந்தவர்களில் பெரும்பாலோனோர் ஏற்கெனவே இறந்து போயிருந்தார்கள் என்பதை. அந்த துரதிர்ஷ்டத்திலும் நான் அதிர்ஷ்டக்காரன். ஏனெனில் நான் அந்த குருடாக்கும் ஒளியை நேரடியாக சந்திக்கவில்லை. எல்லா காயங்களும் எனக்கு என் முகத்தில்தான் இருந்தனர்கள். ரத்தத்தை நிறுத்த நான் செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியுற்றன. ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது. என் ரத்தம் என் துணியெல்லாம் வழிந்ததால், நான் மிகக் காயமுற்றவனாய்த் தோன்றினே. வரிசைக்கு முன்னால் என்னை இழுத்துக் கொண்டு போய், நான்கு தையல் இட்டார்கள். என் காயம் சீழ் பிடிக்காமல் இருக்க மருந்து இட்டார்கள். நான் அதிர்ஷ்டக்காரன். என் கண்கள் சரியாய்த் தான் இருந்தன. என் கண் இமையில் பட்ட காயத்தால் வழிந்த ரத்தம் , கண்ணைப் பார்க்கவிடாமல் செய்திருந்தது.

வெள்ளை ஆயிண்ட்மெண்ட் என்ற ஒரு மருந்து மட்டும் தான் தீக்காயங்களுக்கு நல்லது . ஒரு மரப்பலகையின் மீது என்னைக் கிடத்தினார்கள் . அந்தக் கட்டடத்தின் தரையே சாய்ந்திருந்தது – குண்டு வீச்சின் அதிர்வினால். என் மார்பில் என் பெயர், பிறந்த இடம், வயது, ரத்த வகையை எழுதித் தொங்கவிட்டார்கள். என்னைச் சுற்றி தீக்காயம் பட்ட பலரும் வலியில் முனகிக் கொண்டிருந்தார்கள். தீக்காயம் பட்ட இடங்களில் துர் நாற்றம் வீசியது. பலரும் தண்ணீர் தண்ணீர் என்று கதறிக் கொண்டிருந்தனர். அவர்களிடையே நானும் கிடத்தப் பட்டேன். என்ன நேர்ம என்று தெரியவில்லை. நீல நிற வானம், கன்னங்கரேல் என்றிருந்த ஒரு பெரும் மேகத்தால் மறையக் கண்டேன். கோய்ட் என்ற பகுதியின் பக்கம் இருட்டிக் கிடந்ததைப் பார்த்தபோது பெருமழை பொழியப் போகிறதென எண்ணம் எழுந்தது. மூன்று மணியளவில் என்மிமாரு செல்லப் படகு எங்களைக் கொண்டு செல்ல வந்தது. மியாஜிமாவில் என் விடுதிக்குத் திரும்பினேன். அடுத்த நாள் ஆகஸ்ட் ஏழாம் தேதி. உடல் நிலை சற்று நன்றாக இருந்தவர்கள், ஹிரோஷிமா நகரைச் சுத்தம் செய்யச் சென்றார்கள். அடிபட்டவர்கள் விடுதியிலேயெ இருந்தோம்.

ஆகஸ்டு 8

ஏபா கப்பல் தளத்திற்கு என் நண்பர்களுடன் சென்றேன். என் இடது கண்ணைத் தவிர என் முகமே முழுக்க மருந்துப் பட்டியால் மூடப் பட்டிருந்தது. பிறெள ஹிரோஷிமா நகரின் மையத்திற்குச் சென்றோம். வண்டி ஏதும் இல்லையாதலால நடந்தே சென்றோம். மினாமி கண்ணன் பகுதியில் நான் தங்கியிருந்த , மாட்சுவோகா வின் இடத்திற்கு முதைலில் சென்றேன். எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. வெடித்துச் சிதறியதா, எரிந்து சாம்பலாகியதா என்று தெரியவில்லை. கட்டடங்கள் இருந்த சுவடே அங்கு இல்லை. என் உடமைகள் ஏது பாக்கியிருக்கவில்லை. என் மாமாவும், மாட்சுவோகா அத்தையும் உயிர் பிழைத்தார்களா என்று தெரியவில்லை. இன்றும் கூட அவர்கள் என்ன ஆனார்கள் என்று எனக்குத் தெரியாது.என் பள்ளியின் பகுதி வழியாகத்தான் போக வேண்டியிருந்தது. என் கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம், எரிந்து தரைமட்டமாய்க் கிடந்தது. கன்கிரீட் சுவர்கள் இடிந்து அங்கங்கே நின்றன. இன்னமும் எடுத்துச் செல்லப் படாத சடலங்கள் வழியெல்லாம் கிடந்தன. சிலர் சடலங்களிடயே அவர்களின் உறவினர்கள் யாரும் கிடக்கிறார்களா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர், எரிந்த மரத்துண்டங்களை ஒன்று சேர்த்து , சடலங்களைக் குவித்து எரிக்க ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். மரணத்தின் துர்நாற்றத்தினிடையே நான் நடந்து சென்று கொண்டிருந்தேன்.

பாலத்தருகில் வந்த போது, அகாட்சுகி துருப்புகள் , நதியில் அடித்துக் கொண்டு போயிருந்த சடலங்களை , அள்ளி வெளியே போடுக் கொண்டிருந்தார்கள். எல்லா சவங்களும் முழு நிர்வாணமாய் இருந்தன. சில சவங்களின் கைகள் உயர நீட்டியிருந்தன. சில சவங்களுக்கு கால்கள் வளைந்து கிடந்தன. சில சவங்கள் நீரேறி உப்பிக் கிடந்தன. இன்று நினைக்கக் கூட எனக்கு அந்தக் காட்சி அதிர்ச்சியளிக்கத் தவறுவதில்லை.

தகானோ பாலத்தருகில் கல்லூரி வழியாகக் கடைசியில் வந்து சேர்ந்தேன். மரத்தாலான கல்லூரிக் கட்டடங்கள் அனைத்தும் எரிந்து கிடந்தன. வலது புறம் இருந்த நூலகமும், விஞ்ஞானப் பரிசோதனைச் சாலையின் கட்டடத்தில் தூண் மற்றும் வெளிச்சுவர்களும் மிஞ்சியிருந்தன. முகப்பின் முன்னால ஒரு எரிந்த குதிரை சகிக்கமுடியாத நாற்றம் வீசிக் கிடந்தது.

எதுவும் மிஞ்சவில்லை என்ற உணர்வோடு, ஹஷிமோட்டோ பகுதிக்கு என் நண்பன் வீடு நோகிச் சென்றேன். என் நண்பன் போருக்குப் போய்விட்டதால், பெண்கள் மட்டுமே அங்கு இருந்தனர். அவர்களுக்கு நான் நிலத்தடி பதுங்குகுழி ஒன்றை, குண்டுக்குத் தப்பும் மார்க்கமாக அமைத்துத் தந்திருந்தேன். அவர்களுக்கு என்ன ஆயிற்றோ என்று கவலை கொண்டேன். அங்கு, புதைந்துபோன வீட்டை நோண்டியிருக்கக் கண்டு, அவர்கள் தப்பித்திருக்கலாம் என்று ஆறுதல் கொண்டேன். (பிறகு மீண்டும் ஹிரோஷிமா பல வருடங்கள் கழிந்து திரும்ப நேர்ந்தபோது, அவர்கள் இருக்கிறார்கள என்று அறிந்து கொள்ள முடியவில்லை.)

நகரசபைக்குச் சென்று நான் என் காயம்பட்டதன் சான்றிதழ் வாங்க வேண்டியிருந்தது. என் முகம் மூடப் பட்டிருந்தது பற்றி நான் கவலைப் படவில்லை. ஏனென்றால், என்னைச் சுற்றி இருந்தவர்கள் பலரும் என்னை விடவும் மோசமாக, ஏதோ கனவில் நடமாடுபவர்கள் போல் (zombie கள் போல) தான் காணப்பட்டார்கள். ட்ராம் வண்டி எரிந்து கம்பங்கள் தான் மிஞ்சியிருந்தன. மின்சாரக்கம்பங்கள் சாய்ந்து, மின் கம்பிகள் ஊசலாடிக் கொண்டிருந்தன. துணி மூடபட்ட சடலங்களை தவிர்த்து அவைகளைத் தாண்டி நான் நடந்தேன்.

இந்த சாவு நகரத்திலிருந்து நான் இபி ஸ்டேஷனுக்கு வந்தேன். ஓர் உயிர்ன் சலனம் கூட இல்லை. சவத்தின் நாற்றம் தான். மியாஜிமா ட்ராம் காரில் ஏறி நான் விடுதிக்குத் திரும்பினேன். எட்டு நாட்கள் நான் இந்தச் சாவு நகரத்தை பலமணி நேரங்கள் சுற்றிச்சுற்றி வந்தேன். இப்படி முட்டாள்தனமாய் ஊர் சுற்றியது பற்றி எனக்கு வருத்தமே மிஞ்சுகிறது.

இனிமேல் வேண்டால். இன்னொரு முறை இப்படியொரு நரகம் காண வேண்டாம் இந்த பூமியில். அதை நினைத்துப் பார்க்கக் கூட நான் விரும்பவில்லை. இதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை.

என் கடைசி வார்த்தையைச் சொல்கிறேன்: இப்போது பெருமளவு உலகம் அமைதியாய் இருக்கிறது. செல்வச் செழிப்பும், பேச்சு சுதந்திரமும் இருக்கிறது. நான் ஏன் இன்னமும் உயிரோடு இருக்கிறேன் என்று நான் நினைப்பதுண்டு. எனக்கு நன்றிப் பெருக்குத்தான் ஏற்படுகிறது. புகார்கள் இல்லை. அதிருப்தியும் இல்லை. சமூகத்தை நான் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். இந்தச் சமூகத்திற்கு என்னாலானது ஏதும் செய்ய முடியுமானால் நல்லது.

http://www.coara.or.jp/~ryoji/abomb/a-bomb1.html

Series Navigation