“ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது”

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

மு இராமனாதன்


ஒரு வருடம் இருக்கும். நண்பர் ஒருவர் கேட்டார்: “திண்ணையில் படைப்புகளுக்குக் கீழ் எழுதியவரின் மின்னஞ்சல் முகவரி வருகிறதே, உங்களுக்கு யாரேனும் எழுதியிருக்கிறார்களா?”. நல்ல காலமாக ‘ஆம்’ என்று சொல்ல முடிந்தது. அதற்குச் சில நாட்கள் முன்னர்தான் “ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி” என்ற கட்டுரை வந்திருந்தது. ‘இளம் இந்திய நண்பர்கள் குழு’ எனும் அமைப்பினர் மிகுந்த பிரயத்தனங்களுடன் முறையான தமிழ் வகுப்புகளை ஹாங்காங்கில் நடத்துவதும், பிள்ளைகள் ஆர்வத்தோடு கற்பதும் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தது.

கட்டுரையை வாசித்த பொள்ளாச்சி நசன், தமிழ் வகுப்புகள் மற்றும் தமிழ் சஞ்சிகைகளின் தகவல்களைக் கொண்ட தனது இணைய தளத்தில், ஹாங்காங் தமிழ் வகுப்பு குறித்த விவரங்களைச் சேர்க்க விரும்பினார். லண்டனில் ஊடகத் துறையில் இருக்கும் யோகரட்னம், வாய்ப்பு வரும்போது இந்த வகுப்புகளைக் குறித்து ஒரு விவரணப் படம் எடுக்கப் போவதாகச் சொன்னார். தைவான் தேசீய சுங் ஹ¥வா பல்கலைக் கழகத்தின் இயற்பியல் ஆய்வாளர் முனைவர் ஆர்.சந்திர மோகன், இந்தக் கட்டுரையைத் தைவான் தமிழ் நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வைத்ததாகவும், அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்ததாகவும் எழுதியிருந்தார். பாங்காங் வணிகர் அப்துல் பாரி, ஹாங்காங் எடுத்துக்காட்டை பாங்காங்கில் பின்பற்றப் போவதாகச் சொன்னார். ரிச்மண்டிலிருந்து சிரில் கிறிஸ்தோ·பர் வகுப்பறையில் பயன்படத்தக்க சில கணினித் தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டார். நியூ கேஸ்டல் செல்வன் பச்சமுத்து, அமைப்பாளர்களை அணுகி அவர்களின் பாடத் திட்டங்களையும் நூல்களையும் பெற்றார். இந்த வகுப்பு ஹாங்காங்கிலும் அதற்கு வெளியேயும் பல தமிழ் நெஞ்சங்களை நெகிழச் செய்ததை உணர முடிந்தது.

புலம் பெயர்ந்த குடும்பங்களின் சிறுவர்கள் அன்னியக் கலாச்சாரத்தைச் சுவாசிக்கிறார்கள்; ஆங்கிலம் வழி கற்கிறார்கள்; காலப்போக்கில் தாய்மொழியை ஒரு வீட்டு மொழியாகப் போலும் பயன்படுத்துவதைப் படிப்படியாகக் குறைத்துவிடுகிறார்கள். இந்தச் சூழலில் வாரந்தவறாமல் முறையாகத் தமிழ் படிப்பிக்கிற முயற்சி தமிழ் ஆர்வலர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. ஒரு விதத்தில் இது அமைப்பாளர்களின் பொறுப்பை அதிகரித்தது. இரண்டாம் ஆண்டில் வகுப்புகளை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல அவர்கள் விழைந்தனர். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

வகுப்புகள் முதன் முறையாக நடந்த 2004-05 கல்வியாண்டில் இளநிலை, இடைநிலை மற்றும் உயர்நிலை-என மூன்று வகுப்புகள் இருந்தன. இரண்டாமாண்டிலும்(2005-06) இவ்வகுப்புகள் அதே பெயர்களால் அழைக்கப் பட்டன. எனில் இளநிலை இரண்டாமாண்டிற்கு பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப் பட்டது, அதைப் போலவே இடைநிலை மற்றும் உயர்நிலை இரண்டாமாண்டிற்கும். இம்மூன்று வகுப்புகள் அன்னியில் புதிதாக துவக்கம் முதல் படிக்க வந்த பிள்ளைகளை உடனேயே இளநிலையில் பொருத்த முடியாததால் அவர்களுக்குத் தனியே சொல்லித்தர வேண்டியிருந்தது. முதலாண்டில் மூன்று வகுப்புகளுக்கும் பாடம் எடுத்தது வெங்கட் கிருஷ்ணன் மற்றும் காழி அலாவுதீன். இரண்டாமாண்டின் வகுப்புகள் தொடங்கும் முன்னரே, அலுவலக மாற்றல் காரணமாக வெங்கட் ஹாங்காங்கிலிருந்து விடை பெற நேர்ந்தது. எஞ்சியது அலாவுதீன் மட்டுமே. ஆனால் வேண்டியிருந்ததோ நான்கு ஆசிரியர்கள். அலாவுதீன் அசரவில்லை. ஏனெனில் அவரிடத்தில் ஓர் அற்புத விளக்கு இருந்தது. அந்த விளக்கை அவர் தமிழ் வகுப்பின் அமைப்பாளர் டி.உபைதுல்லாவிடத்தில் கொடுத்தார். அவரும் ‘இளம் இந்திய நண்பர்கள் குழு’வின் தலைவர் அப்துல் அஜீஸ¤ம் பெற்றோர் மற்றும் தமிழ் ஆர்வலர்களைக் கூட்டினர். கூட்டத்தில் அந்த விளக்கை உரசித் தேய்த்தனர். அதற்குப் பலன் இருந்தது. அடுத்த சில தினங்களுக்குள் நான்கு ஆசிரியர்கள் கிடைத்தனர். அந்த விளக்கின் பெயர்: தமிழ்.

கலை அருணும் சித்தி நைனாவும் இளநிலை ஆசிரியர்கள். ஆர்.அலமேலு இடைநிலைக்கும் மொய்னா ஷாமு உயர்நிலைக்கும் சொல்லித் தருகிறார்கள். ‘சார்மார்’களுக்குப் பதில் எல்லா வகுப்புகளுக்கும் ‘டீச்சர்’கள் வந்ததில் பிள்ளைகளுக்குச் சந்தோஷமே. உயர்நிலை வகுப்பில் படிக்கும் ஷேக் இம்தாத் சொல்கிறான்: “அலாவுதீன் சார் நல்லாச் சொல்லித் தருவாங்க, ஆனா ரொம்பக் கண்டிப்பு. மொய்னா டீச்சர் நல்லாவும் சொல்லித் தர்றாங்க, அன்பாவும் இருக்காங்க.” ஷேக் இம்தாத் யாவ் மாட்டை கைப·ங் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படிக்கிறான்.

5 முதல் 14 வயது வரையுள்ள 36 மாணவர்கள் இவ்வாண்டு படித்ததாகச் சொல்கிறார் அப்துல் அஜீஸ். கடந்த ஆண்டு படித்த சிலர் ஊரை விட்டுப் போனதால் உண்டான காலியிடங்களை புதிய மாணவர்களின் சேர்க்கை ஈடு செய்தது. ஹாங்காங்கில் கல்வியாண்டு செப்டம்பர் முதல் ஜூன் வரை. தமிழ் வகுப்பின் கல்வியாண்டு அதற்கு இசைவாக செப்டம்பர் முதல் மே வரை அமைத்துக் கொள்ளப்பட்டது. வகுப்புகள் சனிக்கிழமை தோறும் மதியப் பொழுதுகளில் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் ஒரு வகுப்பு போலும் ரத்து செய்யப்படவில்லை.

ஆசிரியர்கள் முறையாக அமைந்ததால் அலாவுதீனுக்கு பாடத்திட்டத்திலும் தேர்வுகளிலும் கவனம் செலுத்த முடிந்தது. சிங்கப்பூர்க் கல்வி அமைச்சகம், தொடக்கப் பள்ளிகளுக்காக வெளியிடும் ‘அரும்பு’ எனும் பாடநூல் வரிசையும், இதே தொகுப்பில் உள்ள பயிற்சி நூல்களும் அடிப்படை பயிற்றுகருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. இந்நூல்களில் பாடங்களும் பயிற்சிகளும் வகுப்பறையில் தமிழில் கலந்துரையாடும் விதமாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. இது மாணவர்களுக்குத் தமிழைக் கேட்டு, பேசி, படித்து, எழுத வகை செய்கிறது. மேலும் சிங்கப்பூர் எடுத்துக்காட்டுகள் ஹாங்காங்கின் பன்முகக் கலாச்சாரத்திற்கு ஏற்றதாகவும் இருக்கின்றன. இந்நூல்கள் தவிர, பல தமிழ்ப் பாட இணைய தளங்கள் மற்றும் தனியார் வெளியீடுகளான சிறுவர் இலக்கண நூல்களிலிருந்தும் பயிற்சிக் கையேடுகள் உருவாக்கப் பட்டன.

இளநிலை வகுப்பினர் எழுத்துக்களோடு சொற்களையும் படித்தனர். படம் பார்த்து உரிய சொல்லை இவர்களால் எழுத முடிகிறது; இது-இவை, நீ-நீங்கள் போன்ற மெலிதான ஒருமை-பன்மையையும் இவர்கள் படித்தனர். பாப்பா பாடல்கள் இவர்களைப் பரவசப் படுத்துகிறது. அடுத்த கட்டத்தில் உள்ள இடைநிலை வகுப்பினரால் வாக்கியங்களைப் படிக்க முடிகிறது. இவர்கள் கதைகளையும், சிறிய பத்திகளையும், பாடல்களையும் வாசிக்கவும் எழுதவும் கற்றனர்; காலம், உயர்திணை-அ·றிணை போன்ற இலக்கணக் கூறுகளையும் படித்தனர். இவர்களுக்கு அடுத்த கட்டத்தில் உள்ள உயர்நிலை வகுப்பினரால் சரளமாக வாசிக்க முடிகிறது. பெரிய பத்திகளுடன் கூடிய பாடங்கள் அவர்களுக்குக் கடினமாயில்லை. சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதும் புணர்ச்சி இலக்கணம் அவர்களைப் பயமுறுத்தவில்லை. உயர்நிலை வகுப்பினரால் பாடப்புத்தகத்தில் இல்லாத புதிய பத்திகளைப் படித்து, உள்வாங்கி, அவற்றுக்குக்கீழ் உள்ள வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறது. மொழியறிவோடு சிந்தனைத் திறனையும் வளர்க்கும் விதமாகப் பாடத்திட்டங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.

மாணவர்களின் ஆர்வம் கூடி வருகிறது. எண்ணற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளையும் வீடியோ விளையாட்டுக்களையும் ஒதுக்கி வைத்துவிட்டுத் தமிழை அவர்கள் நேசத்துடன் கற்கின்றனர். வீட்டுப்பாடம் எழுதாமல் வருபவர்கள் அரிது என்கிறார் ஆசிரியை கலை அருண். வகுப்புகள் தொடங்கும் முன் பதிவாய் நடக்கும் சொல்வது-எழுதுதல் (dictation) பயிற்சியில் எல்லாச் சொற்களையும் சரியாக எழுதுவதில் மாணவர்களுக்கிடையில் எப்போதும் போட்டிதான். இந்த ஆர்வத்தை 2006 மே 28 அன்று நடந்த ஆண்டு விழாவிலும் பார்க்க முடிந்தது. விழாவின் நிகழ்ச்சிகளில் தமிழ்க் கல்வியே ஊடுபாவாய் இருந்தது. தான் கற்ற தமிழ்க் கல்வி கையளவே என்பது தனக்குத் தெரியுமென்று பேசினான் ஜகீன் அஹ்மத். பாத்திமா ·பலீலாவின் விடுகதைகளுக்கு விடை சொன்னாள் ஆமினா ·பர்யால். தைக்கா தல்ஹா ஒரு பொருட் பன்மொழிக்கு எடுத்துக்காட்டுகள் சொன்னான். கதீஜா ஆசிரியையானாள்; சுல்தானா ருஸ்தா, செய்யது அஹ்மத், சாதிக் பிரபு மற்றும் கதீஜா ஹாரிஸா கெட்டிக்கார மாணவர்களாகி ஒரு வகுப்பறைக் காட்சியை அரங்கேற்றினர். செய்யது மீரான் திருக்குறளும் செய்யது அப்துல் ரகுமான் புதிய ஆத்திச்சூடியும் சொன்னார்கள். இன்னும் நாடகங்களும், உரைச்சித்திரங்களும் தொடர்ந்தன. மாணவர்கள் நிகழ்ச்சியின் போது சில பெற்றோர்களின் விழியோரம் நீர் திரண்டது. மாணவன் சாலிஹின் தந்தை நையீம் சொல்கிறார்: “இப்படி ஒரு வகுப்பு இல்லாவிட்டால் என் பிள்ளைக்கு தாய் மொழியின் வாயில்கள் அடைந்து போயிருக்கும்”.

பெற்றோர்களின் ஒத்துழைப்பைப் போலவே புரவலர்களின் ஆதரவும் தொடர்ந்தது. அவர்களுள் டாக்டர் ஜவகர் அலியைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் தனது இந்திய உணவகத்தின் கதவுகளை சனிக்கிழமை மதியப் பொழுதுகளில் வகுப்புகளுக்காக அகலத் திறந்து விட்டார் அவர். வரும் ஆண்டுகளிலும் மொழிக் கல்விக்குத் ‘தன்னால் முடிந்த இந்த எளிய உதவியை’த் தொடர்வதற்குத் தயாராகவே இருக்கிறார் டாக்டர் அலி. தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர் ஆர்.சுந்தர் குமாரும், இந்திய முஸ்லீம் கழகத் தலைவர் அப்துல் கரீமும் இந்த வகுப்புகளுக்கு தங்களது கழகங்களின் பின் துணை தொடரும் என்கின்றனர். தமிழ்ச் சமூகத்தின் மூத்த உறுப்பினர் எஸ்.முஹம்மது யூனூஸ், பல ஆண்டுகளுக்கு முன் தாங்கள் தொடங்கி, தோல்வி கண்ட தமிழ்க் கல்வியை இப்போது வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் இளைஞர்களைப் பாராட்டுகிறார். இந்த இளைஞர் படை பெரிது. சுஐபு, ஹபீப், அம்ஜத், முபாரக், ஷேக், ஹமீது, ஷிபு டேனியல் முதலியோர் இதில் அடக்கம். வகுப்பறை நிர்வாகம், வருகைப் பதிவு, நூல்களை வருத்துவது, சுற்றுலாக்கள், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள், பொங்கல்-ரம்ஜான்-புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், ஆண்டு விழா ஏற்பாடுகள்-என்று இவர்களுக்கு ஆண்டு முழுவதும் இடைவிடாத பணி இருக்கிறது. அலுவலகப் பணிகள் பத்துப்-பனிரெண்டு மணி நேரம் நீள்வது ஹாங்காங்கில் அசாதாரணமானதல்ல. ஆயின் இது இவர்களின் மொழியார்வத்திற்கு தடையாக இல்லை.

வரும் ஆண்டுகளில் இதை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டுமென்பது அமைப்பாளர்களின் விருப்பம். பாடத் திட்டங்களும், பயிற்றுவிக்கும் முறைகளும் மேம்பட்டு வருவது போலவே பள்ளியின் உள்கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும் என்பது இவர்களின் நீண்ட காலத்திட்டங்களுள் ஒன்று. இவ்வாண்டு பள்ளியில் சேர முன் வந்த எல்லோரையும் சேர்த்துக் கொள்ள முடியவில்லை என்று உபைதுல்லா வருத்ததத்துடன் குறிப்பிடுகிறார். அதற்கு வகுப்பறைகள் அதிகம் வேண்டும். உலகின் இட வாடகை அதிகமுள்ள நகரங்களுள் ஒன்றான ஹாங்காங்கில், வகுப்பறைகளை வாடகைக்கு எடுப்பது கட்டுபடியாகிற காரியமில்லை. தமிழ் ஆர்வலர் பி.குருநாதன், சிறுபான்மை தேசீய இனங்களை அரவணைத்துச் செல்ல விரும்பும் ஹாங்காங் அரசை அணுகலாம் என்கிறார். இதைத் தவிர, அமைப்பாளர்களுக்கு இன்னும் சில நீண்ட காலத்திட்டங்களும் உள்ளன. அவை: ஹாங்காங்கில் தமிழர்கள் 2000 பேர் இருக்கலாம்; இவர்களின் பிள்ளைகள் அனைவருக்கும் தமிழ்க் கல்வி தர வேண்டும். தமிழக அரசின் அங்கீகாரத்துடன் கூடிய தேர்வுகள் நடத்த வேண்டும். கணினித் தமிழ் பயிற்றுவிக்க வேண்டும். அன்னிய மண்ணில் படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் இலக்கியங்களையும் பண்பாட்டையும் பயிற்றுவிக்க வேண்டும். இந்த இளைஞர்களால் இதையெல்லாம் செய்ய முடியும். ஏனெனில் இவர்களிடத்தில் ஓர் அற்புத விளக்கு இருக்கிறது.

‘ஒரு காரியம் தொடங்கப் பட்டால் அது பாதி முடிந்ததற்குச் சமம்’ என்கிற ஆங்கிலக் கூற்று ஒரு வேளை ஆங்கிலேயர்களுக்குப் பொருந்தக் கூடும். வீச்சோடும் வீறாப்போடும் தொடங்கப்பட்டு நின்று போன காரியங்களே நம்மிடையே மிகுதி. ‘ஆரம்ப சூரத்தனம்’ என்கிற தமிழ்ச் சொற்றொடர் இப்போதும் மெருகு குலையாமல்ப் பயன்பாட்டில் இருக்கிறது. நல்ல நோக்கத்தோடு தொடங்கப்பட்டு, முனைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாததால் முடங்கிப்போன திட்டங்கள் ஏராளம். ஹாங்கங் தமிழ்க் கல்விக்கு அப்படி நேரவில்லை. அமைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் அயராத உழைப்பும், மாணவர்களின் ஆர்வமும் முக்கியக் காரணங்கள். பேராசிரியர் கா.சிவத்தம்பி இப்படிச் சொல்லியிருக்கிறார்: “தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை; அதன் தொடர்ச்சியில் இருக்கிறது”. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தனது சமீபத்தியக் கட்டுரையன்றில் இதை மேற்கோள் காட்டியிருக்கிறார். தமிழ் மொழியைப் போலவே ஹாங்காங் தமிழ்க் கல்வியும் அதன் தொடர்ச்சியினாலேயே மேன்மை பெறுகிறது.

தொடர்புக்கு- Mr. T. Ubaidullah, Co-ordinator- Tamil Class
Young Indian Friends Club, Post Box No.91221
Hong Kong.
Tel: 852-9670 7011, Email: tamil@yifchk.org
*************

mu.ramanathan@gmail.com

Series Navigation

மு இராமனாதன்

மு இராமனாதன்