ஹரப்பா ‘குதிரை முத்திரை ‘ : மோசடியாக ஒரு மோசடி

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

அரவிந்தன் நீலகண்டன்


இரண்டாண்டுகளுக்கு முன் ‘சிந்து சமவெளி எழுத்துக்கள் ‘ எனும் நூலை என்.ஜாவும் என்.எஸ்.ராஜாராமும் எழுதி வெளியிட்ட போது கனமான விவாதங்களையும் சர்ச்சைகளையும் எதிர்பார்த்தார்கள் ஆனால் நிச்சயமாக மோசடி வேலை செய்ததற்கான புகாரை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியரிடமிருந்து.

13 அக்டோபர், 2000 தேதியிட்ட ப்ரண்ட்லைன் இதழில் ஹார்வர்ட் இந்தியவியலாளரும் சமஸ்கிருத பேராசிரியருமான மிக்கேல் விட்ஸல், அவரது இந்தியவியலாளரல்லாத நண்பர் ஸ்டாவ் பார்மருடன் இணைந்து எழுதிய ‘ஹரப்பாவில் குதிரை விளையாட்டு ‘ எனும் கட்டுரை வெளியாகியது. ராஜாராம் & ஜாவின் மொழிபெயர்ப்பை மிகக் கடுமையாக அதன் அறிதலளவினை சாடிய அவர்களது இக்கட்டுரையில் முக்கியமாக விளங்கியது பரபரபானதோர் குற்றச்சாட்டு. இந்நூல் ஆசிரியர்கள் ஒரு சிதைந்த ஹரப்பா முத்திரையினை, மிக கணிசமாக கிடைக்கும் ஒற்றைக் கொம்பு மிருக முத்திரையை, குதிரையாக கணினி வரைகலை மூலம் காட்டிவிட்டனர் என்பதே அது. ப்ரண்ட்லைனைத் தொடர்ந்து அவுட்லுக்(நவம்பர் 6,2000) மற்றும் அண்மையில் தீராநதி (டிசம்பர் 2002) கட்டுரை வரை இக்குற்றச்சாட்டு பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது.

ப்ரண்ட்லைன்னில் ‘கணினி வரைகலையால் முத்திரை சீர்குலைக்கப்பட்டதாக ‘ வந்த தகவல் தீராநதி கட்டுரையிலோ இர்பான் கபீப் வார்த்தைகளில் ‘முன்பாதி சிதைந்த நிலையில் கிடைக்கப் பெற்ற முத்திரையில் கம்ப்பூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் காளைமாட்டின் பின்பாதியை குதிரையின் முன்பாதியுடன் இணைத்தது தெரிய வந்துள்ளது. ‘ என பெற்றிருக்கும் பரிணாம வளர்ச்சி நம்மூர் கிழவிகள் ஊர் வம்புக்கு கொம்பும் காதும் வாலும் வைத்து வளர்ப்பதுக்கு சவால் விடுகிறது.

இவ்வாறு விவாதத்துக்கு உள்ளாகும் சிதைந்த முத்திரை மெக்கே:453 எனும் எண்ணிட்ட முத்திரையின் பதிப்பாகும். ஜா & ராஜாராம் நூலில் காணப்படும் இம்முத்திரை பார்க்கின்ற எவராலும் மானாக அறியப்படலாமே அன்றி குதிரையாக அறியப்படமுடியாது. அதன் அருகிலேயே தெரியும் ‘ஓவியரின் ஊக வரைபடம் ‘ என நூலிலேயே கூறப்பட்டுள்ள ஓவியம் தீராநதியில் ‘கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ‘ என தவறாக (அல்லது பொய்யாக) தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் விட்ஸல்& பார்மரின் குற்றச்சாட்டுகள் என்ன ? ஆசிரியர்கள் வேண்டுமென்றே கணினி வரைகலை மூலம் முத்திரையின் புகைப்படத்தை கெடுத்து அதனை குதிரை போல தோற்றமளிக்க வைத்துள்ளனர். ஆனால் இதனை நிரூபிக்க இம்முத்திரையின் புகைப்படத்தை தேடிய விட்ஸல் & பார்மர் அது குறித்து பின்வருமாறு கூறுகின்றனர், ‘உலகின் சிறந்த நூலகங்கள் இரண்டில் நடத்திய தீவிர வேட்டையின் மூலம் அசல் முத்திரையின் சிறந்த புகைப்படம் எங்களுக்கு கிடைத்தது. ‘

இச்சர்ச்சையை தொடர்ந்து நவரத்தின ராஜாராம் தான் கணினி வரைகலை மூலம் தான் சீர்குலைத்ததாக வந்த செய்தியை மறுத்ததுடன், இம்முத்திரை உடைந்த ஒற்றைக்கொம்பு விலங்கு முத்திரையாக இருக்கலாம் என ஐராவதம் மகாதேவன் எழுப்பிய ஐயத்தையும் தான் பதிவு செய்திருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் தனக்கு இத்தகைய தரம் வாய்ந்த புகைப்படம் கிடைத்திருக்குமென்றால் இந்த பிரச்சனையே எழுந்திருக்காதென்றும் கூறினார் விட்ஸல் அளித்த புகைப்படம் தான் அது குதிரை என கூறுவதை உறுதி செய்வதாக அமைந்திருப்பதாக கூறிய அவர் இதற்கு எடுத்துக்காட்டாக ஒற்றைக்கொம்பு விலங்கு முத்திரைகளில் அவற்றின் ஆண்குறி தெரிவதையும் இம்முத்திரையில் அவ்வாறு தெரியாததையும் சுட்டிக்காட்டினார்.

ஒரு புகைப்படத்தின் ஒளி நகல் ‘லைன் டிராயிங் ‘ ஆக காட்டப்பட்டதே ‘சீர்குலைவுக்கு ‘ காரணம் என்பதையும், அச்சீர்குலைவு அசல் புகைப்படத்தைக் காட்டிலும் ராஜாராமின் ஹரப்பாவில் குதிரை எனும் நிலையை பலவீனப்படுத்துவதாக அமைவதும் தெளிவாயிற்று. அசல் புகைப்படம் நூலில் வெளியிடப்பட்ட புகைப்படத்தை காட்டிலும் குதிரையை ஒத்திருக்கிறது. ஆனால் கணினி சீர்குலைவாக குற்றம் சாட்டப்பட்ட படமோ மானை ஒத்திருக்கிறது. இது சுட்டிக் காட்டப்பட்ட போது விட்ஸல் ‘ப்ரண்ட்லைன் ‘ பத்திரிகையில் கூறினார், ‘ராஜாராம் கூறுவது தவறு. ஏனெனில் எந்த ஒற்றைக் கொம்பு விலங்கு முத்திரையும் சரியான இடத்தில் உடைக்கப்பட்டால் அதை குதிரை போல காண்பிக்க முடியும். ‘ ஆக எந்த ஒரு முத்திரையும் சரியான இடத்தில் உடைக்கப்பட்டால் அது M453 முத்திரை போல இருக்கும் எனும் விட்ஸலின் வாதத்தின் உண்மையை கீழே காணலாம்,

M453 இன் மேல் இருக்கும் நான்கு குறியீடுகளுக்கு ஏற்ப ஒற்றைக் கொம்பு விலங்கின் மேலிருக்கும் நான்கு குறியீடுகளும் ஒன்றாகும் அளவில் M453 இன் உடைவு M595 அ வின் மேல் பொருத்தப்படுகிறது

அடுத்த படத்தில் ஒப்பீடு M595 இன் குறியீடுகள்(ஒற்றைக் கொம்பு விலங்கு அ) M453 இன் குறியீடுகள் உடன் (ஆ) ஒப்பிடப்படுகின்றன. அவற்றிலும் வேறுபடுவதும் தெளிவாக தெரிகிறது.

இறுதியாக இம்மூன்று படங்களுமே ஒப்பிட படுகையில் மோசடி குறித்த விட்ஸலின் புகார் எவ்வளவு மோசடித்தனமானது என்பது விளங்கும்

இறுதியாக இம்மூன்று படங்களுமே ஒப்பிட படுகையில் மோசடி குறித்த விட்ஸலின் புகார் எவ்வளவு மோசடித்தனமானது என்பது விளங்கும். இந்நிலையில் குதிரை குறித்த சர்ச்சைகளுக்கு சுரகோடா அகழ்வாய்வுகள் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் சார்பும் பழம் கோட்பாடுகளை களைய முடியாத தன்மையுமாக இவ்விவாதத்தை ட்டுகின்றன.

ஆனால் குதிரை மூலம் ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டினை நிறுவ முயலுபவர்கள் ஒன்றினை மறந்துவிடுகின்றனர். கொலம்பிய பல்கலைகழக வரலாற்றாசிரியர் எட்வின் பிரயண்ட் சுட்டிக் காட்டுவதைப்போல , ‘ ஆரிய படையெடுப்பினை நிறுவ மேற்கிலிருந்து கிழக்காக ஒரு குதிரை கூட்ட நகர்வு (எலும்புகள் இத்யாதி) காட்டப் படவேண்டும். அத்தகையதோர் அகழ்வாய்வு சான்று கிட்டவில்லை என்பதுதான் உண்மை. ‘ கி.மு 4000 த்தில் மத்திய ஆசியாவில் மானுட பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட குதிரைகள் கடல் வாணிகம் மூலம் இந்தியாவை வந்தடைந்தன. மேலும் ஒற்றைக் கொம்பு விலங்கே கூட குதிரையும் காளையும் இணைந்ததொரு குறிப்பாடாக இருக்க கூடும். பல கொம்பில்லாத மிருகங்கள் கொம்புடன் காட்டப்படுவதை நாம் சிந்து சமவெளி முத்திரைகளில் காணலாம். உதாரணமாக புலி முத்திரைகள். குதிரைகள் மிக அருகிய எனவே விலை மதிக்க முடியாதவையாக கருதப்பட்டன. இந்நிலை பலகாலம் தொடர்ந்தது.

விவிலிய புனைகதைகளும் ஐரோப்பிய காலனியமும் உருவாக்கிய ஒரு கோட்பாடு ஆரிய இனவாத/படையெடுப்புக் கோட்பாடு. அது இன்று அறிவியலால் பொய்ப்பிக்கப்படுகிறது. (பின்நவீனத்துவவாதிகள் கவனிக்கவும் ‘கட்டுடைக்கப் படவில்லை ‘.) முக்கியமாக இந்திய அறிஞர்களால். ஸ்வாமி விவேகானந்தர் முதல் டாக்டர் அம்பேத்கர் வரை தொடர்ந்து மறுத்து வந்த இக்கோட்பாடு இன்று அகழ்வாய்வாலும் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது. கென்னத் மோயரும், ஜியார்ஜ் டேல்ஸும், பிஷ்ட்டும், எஸ்.ஆர்.ராவும், பி.பி.லாலும், ஜிம் ஷாப்பரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அல்ல. இந்திய தேசியவாதிகள் அல்ல. இந்நிலையில் ஐரோப்பிய மேன்மையாளர்களுக்கு இதனால் ஏற்படும் கோட்பாட்டுச் சிதைவுகள் தாங்கமுடியாதவை. அரசியல் காரணங்களுக்காக அறிவியல் ஆதாரமற்று எழுப்பப்படும் கோட்பாடுகள் திதையும் போது எழும் கூக்குரல் பதிவாக திகழும் இந்த மோசடியெனும் மோசடி. மோசடி குற்றச்சாட்டுகளை இர்பான் கபீப் கூறுவதுதான் இதில் வேடிக்கை.டாக்டர் பரமார்த்த சரண் எனும் காலஞ்சென்ற வரலாற்றாசிரியர் மொழிபெயர்த்த நூலை திருடி (ஐயமற திருடி) தன் ஆய்வாக சமர்ப்பித்த தன்ஸீம் அகமத் (இவர் இந்திய வரலாற்றுப் பேரவையின் துணை இயக்குநராக இருந்த போதுதான் இத்திருட்டை செய்தார்.) அவர்களது இந்த திருட்டு ஆய்வு நூலை ‘ஒவ்வொரு பகுதியிலும் வழி நடத்தியவர் ‘என்னும் பெருமையும் இந்த திருட்டு ஆய்வு நூலுக்கு புகந்து முகவுரை எழுதிய பெருமையும் இர்பான் கபீப்புக்கு உரியவை. மோசடி இல்லாத இடத்திலும் மோசடியை பார்க்கும் திறமை அவருக்கு வந்ததில் ஆச்சரியமில்லை.

***

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்