வெங்கடசாமிநாதன்
(14-2-1993 அன்று தில்லித் தமிழ்ச்சங்கம் நடத்திய பேராசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை – கருத்தரங்கில் ஆற்றிய உரை)
தன் சிறப்புரையில் நண்பர் மாரியப்பன், வையாபுரிப்பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி பற்றியும், அவரது உண்மைத் தேட்டம் எத்தகைய எதிர்ப்புகளைச் சம்பாதித்துக் கொடுத்தது என்பது பற்றியும் ஒரு முழுமையான பார்வையை சுருக்கமாக முன்வைத்தார். அந்த எதிர்ப்புகள் அறிவார்த்த தளத்தில் எழுந்தவை அல்ல. ஆகவே அவை வாதங்கள் அல்ல. தமிழ்த்துரோகி என்று அவரை வசைபாடி வாயடைக்கச் செய்த முயற்சிகள். உண்மைத் தேட்டம், அறிவார்த்தம், தமிழ்ப்பற்று, தமிழ்ப்பண்பாடு, இவை எவற்றுடனும் உறவு கொண்டவை அல்ல அந்த எதிர்ப்புகள் என்றும், அவை சாதி என்ற தளத்தில் எழுந்தவை என்ற பின்புலத்தையும், அந்த வரலாற்றின் முழுச்சித்திரத்தையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் முன்வைத்தார்.
மாரியப்பன் தன் சிறப்புரையின் தொடக்கத்திலேயே ஒரு கேள்வியை முன் வைத்தார். பின் அதைத் தொடரவில்லை. அந்த இழையை நான் பற்றிக் கொள்கிறேன். 50 வருடங்களுக்குமுன் வையாபுரிப்பிள்ளையின் உண்மைத்தேட்டத்தை தமிழ்த்துரோகி என்று வசைபாடியது, ரீடராக இருந்த அவரை ப்ரொபஸர் ஆகாது தடுக்கவும் முயன்றது என்று கேள்விப்படுகிறேன். அவர் ஒரு முறை செருப்பால் அடிக்கப்பட்டார் என்றும் தெரிகிறது. இவை நடக்கும் தமிழ்ச் சமூகத்தில்தான் உலகில் வேறு எங்கும் கேட்கப்படாத அளவுக்கு பகுத்தறிவு பண்பாடு என உரத்த குரல் கூச்சல்கள் எழுகின்றன. இத்தகைய சமூகத்தில் ஒரு தரப்பில் வாதங்களும் மறு தரப்பில் வசைகளும் செருப்புகளும் பரிமாறிக்கொள்ளப்படும் என்பதை என்ன சொல்வது ?
மாரியப்பனின் கேள்வி – இன்று நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோமே, இதன் பொருள் என்ன ? சென்னையிலும் விழாக்கொண்டாடியதாக தெரிகிறது. அவரது உண்மைத்தேட்ட முடிவுகள் ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டனவா ? கல்வித்துறையில் ? தமிழ்ச்சமூகத்தில் ? அப்படி எனக்குத் தோன்றவில்லை. இந்த நூற்றாண்டுதினம் வரை அவர் நினைவு நமக்கு இருந்ததில்லை. அவர் மறக்கடுக்கப்பட்டிருந்தார். ஓய்ந்து விட்ட குரல்களுக்கு, மறைந்து விட்ட மனிதர்களுக்கு சம்பிரதாய மரியாதைகளைச் செலுத்தி, நிம்மதியுடன் நம் காரியங்களைத் தொடர்வது நமக்கு கை வந்த கலை. பண்பாடு.
அன்று வையாபுரிப்பிள்ளையை எதிர்த்து வசை பாடிய சக்திகள் பெரும்பாலும் தமிழ்க்கல்வித் துறையிலிருந்து மட்டுமே வந்தன. இருப்பினும் அவை அரசியல் சக்திகள். உண்மையில் கல்வித்துறையைச் சார்ந்தவை அல்ல. அந்ஹ்த அரசியலும் ஜாதிப்பார்வை மட்டும் கொண்டது இப்பார்வையே அதன் எல்ல செயல்பாடுகளையும் நிர்ணயித்தது. அப்பார்வை தன் ஜாதி சுயாபிமானத்தில் பிறந்தது. அவர்கள் உயர்ஜாதி ஹிந்துக்கள், சமூகத்தில் பிராம்மணர்களுக்கு ஈடாக அந்தஸ்து பெற்றவர்களாக பெருமை கொள்பவர்கள். தனக்கு அருகில் இருப்பவன் தனக்கு மேல்படியில் இருப்பதைக் கண்டு பொறாமைப்படுவது மனித சுபாவம். அவர்கள் பொறாமை கொண்ட பிராம்மணர்கள் செல்வாக்கை தமதாக்கிக் கொள்வதுதான் முதலும் கடைசியுமாக அவர்கள் லக்ஷியம். இதில் ஒரு தவற்றையும் நான் காணவில்லை. இந்த பொறாமைச் செயல்பாட்டால் தமிழ்ச்சமூகத்துக்கு எந்த கேடும் விளைந்துவிடாது. ஆனால் இது பிராம்மணர்-உயர்சாதி ஹிந்துக்கள் சண்டையாக முன்வைக்கப்படவில்லை. மிகுந்த சாமர்த்தியசாலிகள் அவர்கள்.
அவர்களும், பிராம்மணர்களும் சேர்ந்து தாழ்த்தி வைத்த மிகுந்த தமிழ்சமூகம் முழுதுக்கும் தம்மை பிரதிநிதியாக்கிக்கொண்டனர். இது குரங்கு மத்தியஸ்தம் செய்யவந்த பஞ்சதந்திரக்கதை. தாழ்த்தப்பட்ட ஜன சமூகத்தின் தோளில் துப்பாக்கி வைத்து பிராம்மணர்களை குறிவைத்த கதை. அரசாங்கப்பதவிகளைப்பெற பிராம்மணர்களுடன் அவர்களுக்கு இருந்த போட்டி, தென்னிந்திய நல உரிமை என்று பெயர் பெற்றது. பின்னர் ஜாதி ஒழிப்பு என்று பெயர் பெற்றது. சுயமரியாதை என்றும் பெயர் பெற்றது. பிராம்மணர் தமிழரல்லாதாயினர். வடவர் ஆதிக்கமாயிற்று. அது மட்டுமல்ல. அந்த காலகட்டத்திலும் அதன் பின்னரும், இன்று வரை, பிராம்மணர் செயல்பட்ட எதுவும், அல்லது பிராம்மணர் உறவு கொண்டதாக கருதப்பட்ட எதுவும், தமிழர் கைதொட தகுதியற்றதாகிவிட்டது.
சரி, பிராம்மணர் கைபர் கணவாய் வழிவந்தவராகவே இருக்கட்டும். 3000 வருடம் முன்னதான நிகழ்ச்சியாக இருக்குமா ? கி. பி 2 ஆம் நூற்றாண்டு அளவிலேயேகூட தமிழ்ச்சமூகம் கலப்பற்ற திராவிட சமூகமாக இருக்கவில்லை. தமிழ்வாழ்க்கை தனித்தமிழ்வாழ்க்கையாக இருக்கவில்லை. இலக்கியம் தமிழர் மாத்திரம் படைத்தவையாக இருக்கவில்லை. கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தெற்கே வந்து, வந்து தமிழும் கற்றுவிட்ட சமணர் பெளத்தர்கள் தமிழ்ச்சமூகத்துடன் இரண்டறக் கலந்தாகிவிட்டனர். அவர்களோடு வந்த அல்லது அவர்களுக்கும் முன்வந்தவர்கள், தமிழரல்ல என்று சொல்லப்படுகிறது. சில நூறு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் குடியேறிய ஐரிஸ்காரரான கென்னடி, குடியரசுத்தலைவராக முடிகிறது. சில தலைமுறைகள் முன்வந்து குடியேறிய ஜப்பனியர் பெரு நாட்டின் குடியரசுத்தலைவராக முடிகிறது. ஏழுவருஷங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தால் போதும் குடியுரிமை தரப்படுகிறது. 3000 வருஷம் முன்வந்தவர்களாக சொல்லப்படுபவருக்கு மட்டும் ஏன் இந்த உரிமைகூட தர மறுக்கப்படுகிறது ?
பிராம்மணர் செல்வாக்குக்கு எதிராக ஒரு போராட்டம் எழுவதில் சமூக நியாயம் உண்டு. அது சரித்திர நிர்ப்பந்தம். ஆனால் தமிழ்நாட்டில் பெற்றுள்ள பூதாகாரமான, பயங்கர வடிவங்கள் அத்தனையும் பொய்மையில் ஊதிப் பெருக்கப்பட்டவை. உண்மையில் உயர் சாதிகளால் வஞ்சிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டமாக இருந்திருந்தால் அதில் உண்மையின் வலு இருந்திருக்கும். ஜாதிகள் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருந்திருக்கும். பொய்மையின் செயல்பாடுகளில் ஒன்றுதான் உண்மைத்தேட்டத்துக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, வையாபுரியை பொய்யாபுரி என்று வசைபாடியதும்.
தனக்குப் பிடிக்காத ஒரு சமூகத்தோடு உறவு கொண்ட அனைத்தையும் பகைமை பாராட்டுவது, தனக்கு மறுத்துக் கொள்வது ஹிட்லரின் சரித்திரத்தில்தான் நிகழ்ந்தது. ஜெர்மானிய கலாச்சாரம் முழுதையுமே ஹிட்லர் அழிக்கத்தயங்கவில்லை. பெரிய சங்கீத கலைஞர்கள், விஞ்ஞானிகள், இலக்கிய ஆசிரியர்கள் எல்லோருமே நாடு கடத்தப்பட்டனர். அவர்களது படைப்புகள் தீக்கிரையாகின. கம்யூனிஸ சமுதாயங்களிலும் இது நிகழ்ந்தது. ஸ்டாலினின் எதிர்ப்பு சமகாலத்தவரோடு அவர்கள் படைப்புகளோடு நின்றது. ரஷ்ய சங்கீதத்தையோ, கிராமீய கலைகளையோ, சாஸ்திரீய பாலே நடனத்தையோ இவையெல்லாம் பிரபுத்துவ சமூகத்தின் படைப்புகள் என்று ஸ்டாலின் அழிக்கவில்லை. ஆனால் சைனாவில் மாவோவின் எதிர்ப்பு கன்பூஸியஸிலிருந்து ஆரம்பித்தது. இந்த மாதிரியான ஒரு பகைமை இங்கு வளர்க்கப்படுகிறது.
தமிழக கலாச்சாரத்தின், தமிழ் இலக்கியத்தின், தமிழ் வாழ்வின் மகோன்னத செல்வங்கள் பெரும்பாலானவை மறக்கடிக்கப்படுகின்றன. பாராட்டப்படுபவை தவறான காரணங்களுக்காக பாராட்டப்படுகின்றன. இது திட்டமிட்ட செயல்பாடு. காரணம் ஹிந்து மதம், தெய்வ நம்பிக்கை, வட மொழிகள் எல்லாம் தனக்குப் பிடிக்காத ஒரு ஜாதியினரின் படைப்புகள் என்ற பார்வை. தமிழனுக்கு தனித்தமிழும் சங்க இலக்கியமும் போதும். இவற்றிற்கு அப்பால் எதையும் தொட மனமில்லை.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழரின் சமய வாழ்க்கையை ஆதரிக்க இயற்றப்படவில்லை. அவை சித்தரிக்கும் அற்புத நிகழ்ச்சிகள் பகுத்தறிவின் பாற்பட்டவையும் இல்லை. இகழ்ந்து பேசப்படும் புராணக் கற்பனைகளுக்கு இந்த அற்புத நிகழ்ச்சிகள் குறைந்தவை அல்ல. இருப்பினும் இவை சங்க இலக்கியங்கள் எனக் கருதப்படுவதாக போற்றப்படுகின்றன. இலக்கிய அனுபவத்திற்காக அல்ல. கண்ணகி என்ற பிரதிமை இன்றைய அத்தியாவசியத் தேவை. இந்த இடத்தில் ஒன்று சுட்டிக்காட்டலாம் என்று தோன்றுகிறது. சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் களவொழுக்கத்தின் சந்தர்ப்பத்தில் ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் வகுத்தனர் கரணம் ‘ என்று ஒரு தொல்காப்பிய சூத்திரம் சொல்வதாக ஆ. வேலுப்பிள்ளை தம் ‘காலமும் கருத்தும் ‘ என்ற புத்தகத்தில் எழுதுகிறார். கரணம் வகுத்த ஐயர் எப்படியாவது நாசமாகிப் போகட்டும். பெரும்பான்மையான அக்கால சமண ஆசிரியர்கள் அறவொழுக்கத்தையே வற்புறுத்தி வண்டி வண்டியாக நூல்கள் எழுதக் காரணம் என்ன ? திருக்குறளையும் சேர்த்து இவ்வளவு அற நூல்களும் வற்புறுத்தும் அறவொழுக்கம் தந்த புதிய வாழ்க்கைப் பதிப்புகளையும் இருப்பினும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் களவொழுக்கத்தையும் கண்ணகியும் மாதவியும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்களோ ? அத்தகைய தேவை இன்னும் நமக்கு உள்ளதோ ? இரண்டாவது, மாரியப்பன் குறிப்பிட்ட வஞ்சிகாண்டம் சொல்லும், செங்குட்டுவன் வடவர்களை கல்சுமக்க வைத்த கதை. இது நமக்கு கள்ளுண்ட மயக்கம் தருகிறது. இந்த இரண்டைத் தவிர வேறு எதிலும் நமக்கு அக்கறை இருந்ததில்லை. இளங்கோ அடிகளின் கவித்துவமும், நாடகம் பற்றிய செய்தியே இல்லாத தமிழில் நாடகப்பாங்கான திறனும், சமயக் காழ்ப்புணர்ச்சிகள் மிகுந்த காலகட்டத்தில் சமய வேறுபாடுகள் கடந்த மனித நேயமும் என்னைக் கவர்கின்றன. இவற்றுகெல்லாம் மேலாக இந்திய உபகண்டம் முழுவதிலும் இதற்கு ஈடு இல்லை என்ற ஒரு சிறப்பு இதற்கு உண்டு. கி. பி 4ஆம் நூற்றாண்டில் நாட்டிய சாஸ்திரம் இயற்ற்பட்டது. இதற்குப் பிறகு, இந்திய நாடகம், சங்கீதம், நாட்டியம் பற்றிய அறிய சிலப்பதிகாரம் ஒரு பொக்கிஷம். தெரிந்தவர்கள் சொல்லி எனக்குக் எட்டியவரை, சிலப்பதிகாரத்தை விட்டால், இந்திய உபகண்டம் முழுவதிலும், இவை பற்றி அறிய வேறு நூல் கிடையாது. அதற்கு 8ம் நூற்றாண்டில் மாதங்கர் இயற்றிய பிரஹத்தேஸி வரை காத்திருக்கவேண்டும். அத்தகைய பொக்கிஷம், இந்தியாவிலேயே இந்த காலகட்டத்தில் தமிழில்தான் கிடைக்கிறது. மேலும் அன்றைய தமிழ்நாட்டின் கிராமியக்கலைகள் பற்றியும் சொல்கிறது. சொல்லிச் சொல்லி மாளாத இச்சிறப்புகள் பற்றி தமிழ் பற்றினர் யாருக்கும் பெருமை கிடையாது. கவலையும் இல்லை. சிலப்பதிகாரத்தை 8ம் நூற்றாண்டுக்குப் பின் தள்ளிவிட்டார் வையாபுரிப்பிள்ளை. அதனால் என்ன ? இந்தப் பெருமைகள் அதனால் குறைந்து விடுவதில்லை. இவற்றை யாரும் மறுக்க முடியாது. நமது கனவுலகப்பிரமைகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருந்தால் என்ன ?
– இறுதிப் பகுதி அடுத்த வாரம்.
திண்ணை
|