வேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

நாகூர் ரூமி


கடந்த மூன்று நாட்களாக இரா.முருகனின் அரசூர் வம்சம் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். இன்று முடித்தேன். அந்த வாசிப்பு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. அந்த வித்தியாசம் முதலில் மொழி சார்ந்தது. ஒரே படைப்புக்குள் இரண்டு மூன்று விதமான — ஆனால் பொருத்தமான — மொழி நடை கொடுக்க முடிந்திருக்கிறது என்ற வியப்பு சார்ந்த வித்தியாசம் அது. இதை இரா. முருகனின் சாதனைகளில் ஒன்று என்று சொல்வேன்.

கதை என்று பெரிசாக ஒன்றுமில்லை. இது ஒரு வரலாற்று நாவலும் இல்லை. ஆனால் முற்றிலும் கற்பனையான ஒன்று என்றும் சொல்லிவிட முடியாது. நிகழ் காலத்தில் வாழும் ஒருவன் தனது வேர்களைக் காண முயலும் பாவனையாக நாவல் உருப்பெற்றுள்ளது. இதில் பல விஷேஷங்கள் உண்டு.

Back to the Future என்று ஒரு திரைப்படம் வந்தது. காலயந்திரம் ஒன்றில் ஏறிக்கொண்டு அதன் நாயக நாயகியர் அதில் பயணித்து கடந்த காலத்துக்குள்ளும் எதிர்காலத்துக்குள்ளும் நுழைந்து பார்ப்பதை விவரிக்கும் படம். அதே போன்ற ஒரு நாவல்தான் அரசூர் வம்சம்.

அரசூர் என்ற சொல்லே ஒரு குறியீடாக எனக்குப் படுகிறது. ராஜபரம்பரை வாழ்ந்த ஊர் என்பதாக எடுத்துக்கொள்ள முடியும். அரசர்கள் ஆண்ட ஊர் அரசூர். எனவே இதை ஒரு representative தலைப்பாக, அல்லது ஊராக எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு, கேரளா என்று இரண்டு மாநிலங்களிலும் மாறி மாறி நிகழ்ச்சிகளை நடத்திச் செல்கிறது நாவல்.

நமது முன்னோர்களை, அவர்களது வாழ்க்கையை மறுபடியும் ஒரு திரைப்படம்போல் பார்க்கவும் பதிவு செய்யவும் முடிந்தால் எப்படியிருக்கும் ? அதுதான் இந்த நாவல்.

மொழி

இந்த நாவலின் தனிச்சிறப்பு இதன் மொழிதான். தமிழின் பரிமாணங்களை அது சுட்டுகிறது. பார்க்க முடிகிறது. இந்த நாவல் முழுவது விரவியிருப்பது பிராமண பாஷை. அதிலும் கலப்பில்லாத சுத்த பிராமண பாஷை. இதற்கடுத்தபடியாக, நம்பூதிரிகள் பயன்படுத்தும் மலையாள பிராமண மொழி. மூன்றாவதாக ஜமீந்தார் அல்லது ராஜா பயன்படுத்தும் மொழி. இந்த பாத்திரங்கள் ஒவ்வொருவரும் பேசும் மொழி தனியானது. மற்றவர்கள் பேசும் மொழியிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டது. இந்த வேறுபாட்டை சரியாகக் கொடுப்பதென்பது சாதாரண காரியமல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. அதிலேயே ஊறித்திளைத்திருக்க வேண்டும்.

எனது பல கதைகளில் நான் நாகூர், நாகப்பட்டிணம், காரைக்கால் பக்கம் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் மொழியைப் பயன்படுத்தியிருப்பேன். காரணம் நான் அவர்களிலிருந்து வருபவன். என் ரத்தத்திலும் எலும்பு மஜ்ஜைகளிலும் இருக்கும் மொழி அதுதான். அதைக் கதையில் கொடுப்பதற்கு நான் எந்தவித முயற்சியும் எடுத்துக்கொள்வதில்லை. தொடங்கிவிட்டால் போதும். அது தானாகப் பிரவகிக்கும்.

அதைப் போன்ற அனுபவத்தில் தோய்ந்த மொழியைத்தான் இந்த நாவல் எனக்குக் காட்டுகிறது. இந்த மொழியில் உயிர் இருக்கிறது. உணர்ச்சிகள் இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை அடையாளப்படுத்துவதில் பிரதான பங்கு அவர்களின் மொழிக்கு உண்டு. ஒரு சமுதாயத்தினரின் கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கைகள் எல்லாவற்றையும் அவர்களுடைய மொழி பிரதிபலிக்கிறது. அதைப் புறக்கணித்துவிட்டு ஒரு சமுதாயத்தினரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது போதாது.

இந்த வகையில், தி.ஜானகிராமன், லா.ச.ரா. புதுமைப் பித்தன் போன்றவர்கள்கூட நாவலில் செய்யாத ஒரு சாதனை இந்த நாவலில் சாத்தியமாகியிருக்கிறது என்று நான் சொல்வேன். சமகாலத்தில் நம்மோடு வாழும் எழுத்தாளர்களின் பலத்தை அங்கீகரிக்க வேண்டியதும் மதிக்க வேண்டியதும் நமது கடமை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த வகையில் இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி மிகமிக சிலாகிக்கத்தக்கது. நம்முடைய கவனிப்புக்குரியது.

சில உதாரணங்கள்.

‘எல்லோரையும் போலக் கல்யாணத்துக்கும் காதுகுத்துக்கும் நவக்கிரஹ ஹோமத்துக்கும் போய் நாலு காசு பார்க்காமல் இப்படி சதா சர்வ காலமும் தகனம், கல் ஊன்றுதல், பிண்டப் பிரதானம், மாசியம், சோதகும்பம், தர்ப்பனம், வருஷாப்திகம், ஹிரண்ய திவசம் என்று அலைவானேன் ? ‘ — திவசப் பிராமணனாகவே காலம் கழிக்க நேர்ந்ததை எண்ணி வருந்தும் ஒருவரின் நினைப்பு இது.

‘அதோடுகூட, சின்ன வயசுப் பையன்களோடு இழைய வருகிற ஸ்திரிகளையும், ஒரு புஞ்சிரி பொழிந்த மாத்திரத்தில் புளகாங்கிதமடைந்து விசேஷத்துக்கு வந்த பெண்குட்டியை சதா ஸ்மரித்துக்கொண்டு அலைகிற குட்டன்மாரையும், போதும் நிறுத்தணும் என்று சமிஞ்கையாச் சொல்லி விலக்க வேண்டியிருக்கிறது. ‘ — இது மலையாள பிராமணத் தமிழ்.

மலஜலம் கழித்தல்கூட அந்த சமுதாயத்தினரின் பிரத்தியேக பாஷையிலேயே சொல்லப்படுகிறது:

‘காமாட்சி விசர்ஜனத்துக்காக கையில் செம்பொடு தோட்டத்தில் கழிப்பறைக்குப் போயிருக்கிறாள். ‘

‘புதர் மறைவில் பிரம்ம செளசம் முடித்துக் கால் கழுவிக்கொள்ள வந்தபோதே… ‘

‘விசர்ஜனம் ‘, ‘பிரம்ம செளசம் ‘ ஆகிய சொற்கள் மலஜலம் கழிப்பதற்கான வெறும் இடக்கரடக்கலாக (euphimism) எனக்குப் படவில்லை. இவற்றின் பின்னால் சில நம்பிக்கைகள் உள்ளன. அவை என்ன என்பதை அறிந்தவர்கள் எடுத்துரைத்தால் நல்லது.

முக்கியமான இடங்களிலேனும் இந்த பாஷைக்கு அருஞ்சொற்பொருள் மாதிரி ஏதாவது கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதுதான் இதில் எனக்குள்ள ஒரே வருத்தம்.

ஒரு ராஜா, அவருடைய ராணி, சேடிப்பெண், ராஜாவுக்கு நிகழ்காலத்தை அறிமுகப்படுத்தும் பனியன் சகோதரர்கள் — என்ன வித்தியாசமான பெயர்! — புகையிலை வியாபாரம் செய்து பணக்காரர்களாகிவிட்ட சுப்பிரமணிய அய்யர், சங்கரன், சாமிநாதன், சுப்பம்மாக் கிழவி போன்றோர் அடங்கிய பக்கத்து வீட்டு பிராமணக் குடும்பம், கேரளாவில் மூன்று தலைமுறையாகச் சமையல் செய்து பிழைக்கும் கிட்டாவய்யன், அவன் மனைவி சினேகாம்பாள், அவளுடைய பறக்கும் அப்பா வயசன், ஈமக் கிரியைகள் செய்து பிழைக்கும் சுந்தரகனபாடிகள் என சில குடும்பங்களைச் சுற்றிச் செல்கிறது நாவல்.

இந்த நாவலில் வரும் ராஜா உண்மையில் ஒரு ராஜாவே அல்ல. வெறும் ஜமீந்தார்தான். அதுவும் பிரிட்டிஷ்காரனிடம் — துரைத்தனம் — மானியம் பெற்று அதில் ஜீவனம் நடத்துபவர். அந்த மானியத்தில் அவருக்குக் கிடைக்கும் சாப்பாடு என்ன என்கிறீர்கள் ? கேப்பைக் களியும் புளிக்குழம்பும் ! ஆனாலும் ராஜா. இந்த பின்னணியில் அவருடைய சொல்லும் செயலும் பிரத்தியேக அங்கதச் சுவையை வழங்குகின்றன.

‘யானை மாதிரிப் பிளிறிக் கொண்டு வரும் ஒரு ராட்சச இரும்பு யந்திரம் ‘ என்று ஆஸ்டின் கார் வர்ணிக்கப்படுகிறது. யானை அம்பாரி, பல்லக்கு ஊர்வலம் என்று ராஜா போலவே வாழ்ந்துவிட்ட ஜமீந்தாரின் மனம் காரையும் மிருகமாகவே பார்க்க வைக்கிறது.

மாந்திரீக யதார்த்தம் (Magical Realism)

தமிழில் மாந்திரீக யதார்த்தத்தை சிறப்பாகச் செய்யக் கூடிய இரண்டு பேர்களில் இரா.முருகன் ஒருவர் என்பது என் கருத்து. (இன்னொருவர் ஜீ.முருகன்). கற்பனையும் யதார்த்தமும் கைகோத்துக் கொண்டு, ஏன், கட்டியணைத்துக் கொண்டு கட்டிலில் கிடப்பதுதான் மாந்திரீக யதார்த்தம்.

இந்த நாவலில் பல இடங்களில் இது பயன்படுத்தப் படுகிறது. சோழிகளில் இறந்த முன்னோர்கள் வந்து பேசுதல், வயசன் என்ற கிழவர் பறந்து செல்லுதல், இறந்த ஆவிகளோடு உயிரோடு இருக்கும் சாமிநாதன் கூடுதல், வெளவால் சுப்பம்மாக் கிழவியை புணர முயற்சித்தல் என.

திவசச் சோறு சாப்பிடவந்து, ‘நான் உனக்கு நூறு இரு நூறு வருஷம் முந்தினவடா கழுதே ‘ என்று சொல்லும் ஒரு முதிர்கன்னியின் ஆவியோடு மொட்டை மாடியில் கூடிக்கொண்டிருக்கும்போது நடக்கும் தீ விபத்தில் செத்துப் போகிறான் சாமிநாதன்.

சோழிகளை உருட்டிப் போடும்போது முன்னோர்கள் அதிலிருந்து பேசுகிறார்கள் என்ற கற்பனை ரொம்ப அழகானது. மஹாபாரதம், பகடை, சோழி, மங்காத்தா, டாரட் கார்டுகள் என சோழிக்கும் அதையொத்த விைளையாட்டுகளுக்கும் ஒரு புராதனம் உண்டு. அந்த புராதனத்தை நாவலாசிரியர் மிகச்சரியாகப் பயன்படுத்துகிறார். சோழிகளை உருட்டும்போது அதிலொன்று உருண்டு வாசல் பக்கம் ஓடி அதிலிருந்து நம் முன்னோர் பேசினால் இனி நமக்கு அது ஆச்சரியமாக இராது என்றே தோன்றுகிறது.

இந்த நாவலின் மாந்திரீக யதார்த்தக் கூறுகளில் முக்கியமானது முன்னோர்கள் சோழிகளில் பேசுவதும், சுப்பம்மாக் கிழவி வாயில் வந்து பாடுவதும். அவள் பாடுவது பூராவுமே அடுத்தவரின் அந்தரங்க வாழ்க்கையை அம்பலப்படுத்துவதாகவே இருக்கும்.

‘பட்டப் பகலில் கதவையெல்லாம் மட்ட மல்லாக்கத் திறந்து வைத்துக்கொண்டு கயிற்றுக் கட்டிலை இழுத்துப்போட்டுக் கவிழ்ந்து படுத்துக் கலவி செய்யும்போது கட்டில் கால் முறிவது பற்றி சுப்பம்மாக் கிழவி பாடிக்கொண்டிருப்பது உள்ளே இருந்து கேட்டது ‘. (இப்படிப் பாட்டாய்ப் பாடி, பாடாய்ப் படுத்தும் கிழவிகள் எங்கள் சமுதாயத்திலும் உண்டு)!

வக்கிர சமுதாயம்

மாந்திரீக யதார்த்தம் மூலமாகவும், அதற்கு வெளியிலும் இந்த நாவலில் காட்டப்படும் முன்னோர்களின் சமுதாயம் ஒரு வக்கிரம் பிடித்த சமுதாயமாக உள்ளது. எதைப்பார்த்தாலும் வக்கிரமாகவே அவர்கள் பார்க்கிறார்கள். இறப்புகூட அவர்களுக்கு பாலுணர்வுக் கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. நாவலில் தொடர்ந்து வரும் அடி நாதமாக, உள் இழையாக இது உள்ளது.

ஒரு வக்கிரத்தில்தான் நாவலே துவங்குகிறது.

‘குளிக்கும்போது எல்லோரும் பார்க்கிறார்கள். ராணி சொன்னாள் ‘.

இதுதான் முதல் அத்தியாயத்தின் துவக்கமே. ராணியின் ஆறுதலுக்காக வயசான ராஜ அவள் தலையை வருடுகிறார்.

‘சிகைக்காயும் வாசனைப்பொடியுமாக தொடுவதற்கு இதமாக இருந்தது அவளுடைய முடி. இப்படியே அவளை உள்ளே அழைத்துப்போய்க் கூடினால் வம்சம் விருத்தியாகக் கூடும். ‘ என்று நினைக்கிறார்.

கேரளாவில் பெண்கள் மேல்துண்டு அணிவதில்லை என்று கேள்விப்பட்டதை ராணியிடம் சொல்கிறார். அவள் அதை அநியாயம் என்று சொல்கிறாள். அவர் அதை ஆமோதித்தாலும், ‘மலையாளக் கரைக்கு ஒரு தடவையாவது போய்ப்பார்த்துவிட்டு வர உத்தேசித்திருந்தார் ‘.

தூண்களைப் பார்த்தால் அவருக்கு தனக்கு போகம் சொல்லிக்கொடுத்த செண்பகவல்லியின் தொடைகள் ஞாபகம் வருகின்றது.

ராஜாவின் மாமனார் புஸ்தி மீசைக்கிழவன் இறந்ததும் அவருக்கான ஈமச்சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. கிழவனை துடைத்துக் கொண்டிருக்கும்போது, ‘ஏ மருது, தாத்தனை இடுப்புக்குக் கீழே அழுத்தித் துடைக்காதே. பொங்கிப் பூரிச்சு எளுந்துடுவாரு. அப்புறம் குழிக்குள்ளே உடம்பு போகாது ‘ என்று ஒரு ‘கமண்ட் ‘ வர அனைவரும் சிரிக்கிறார்கள்.

ஒரு கிழவி வந்து பிணத்தை மடியில் போட்டுக்கொண்டு அழுகிறாள். அப்போது ஒருத்தன், ‘அப்பத்தா, போதும் எழுந்திரு. தாத்தன் மறுபடி எழுந்தா நீ மாங்கா கடிக்க வேண்டிப் போகும் ‘ என்கிறான். மறுபடியும் சிரிப்பலை.

சுப்புராம வாத்தியாரின் வசவும் திட்டும் சங்கரனுக்கு ஞாபகம் வருகிறது. ‘உங்கப்பன் கோமணத்தை அவுத்த நேரம் ராவு காலம்டா பிரம்மஹத்தி. எட்டு மாகாணி ரெண்டா ?எந்தத் தேவிடியாப் பட்டணத்துலே ? ‘ என்று அவர் கேட்பாராம்.

சங்கரனுக்கு அவர் கேள்விக்கான பதில் தெரிந்த காலத்தில் அவன் நினைத்துக்கொள்கிறான் : ‘எட்டு மாகாணி அரை என்று அரை என்று அவரிடம் சொல்லவேண்டும். கொட்டக்குடி தேவிடியாளின் அரைக்கட்டு மனதைப் போட்டு இம்சைப் படுத்துவதையும் சொல்லலாம். அவருக்குக் காது கேட்பதில்லை இப்போது ‘.

சுப்பம்மாக் கிழவியை விட்டுவிட்டுப் போன புருஷன் காசிக்குப் போய் கோசாயிகளின் கூட்டத்தில் சேர்ந்து கொள்கிறான். ‘நீண்டு தரையைத் தொடும் ஆண் குறியை ஊன்றியபடி ‘ அவன் நின்று கொண்டிருப்பதாகத் தகவல் வருகிறது.

இதை மாந்திரீக யதார்த்தத்திலும் சேர்க்கலாம். யார் யாரை விட்டுப் பிரிந்தாலும், எப்போதும் பிரியாமல் ‘நின்று கொண்டிருப்பது ‘ ‘அது ‘வாகத்தானிருக்கும் என்ற உட்குறிப்பு ரசிக்கத்தக்கது.

சுப்பம்மாக் கிழவியும் தனக்கு இளமை வந்துவிடுவதாகவும், ஓடிப்போன தன் கணவன் வெளவால் ரூபத்தில் வந்து தன்னைப் புணர்வதாகவும் கற்பனை செய்து கொண்டு கிடக்கிறாள். நடந்ததை மற்றவர்களிடம் அவள், ‘என்னை இங்கே தொட்டு இப்படி விரிச்சு ‘ என்று விளக்கத் தொடங்குகிறாள். கல்யாணி அம்மாள் சுப்பம்மா நெகிழ்த்திய உடைய அவசர அவசரமாகச் சரிசெய்கிறாள்.

‘அவர்களுக்கு யார் மேலும் மதிப்புக் கிடையாது. சாமுத்ரி மகராஜாவே வந்தாலும் நாலு அடி தாண்டி அந்தாண்டை நிற்க வைத்து, அம்பலத்தில் சந்தனத்தை விரலால் சுண்டிக் கையில் விழ எறிவார்கள். வெய்யில் தாழ அம்பலத்தில் இருந்து திரும்பும்போது வெடி வழிபாடு நடத்தும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி மூத்திரம் ஒழிக்க உட்கார்ந்துவிட்டு, லிங்கத்தைப் பிடித்த பிடி நழுவாமல் நாட்டுத் துப்பாக்கி போல் நீட்டிக்கொண்டு அப்படியே குளத்தில் இறங்கிச் சுத்தம் செய்து கொள்வார்கள். அங்கே குளிக்கிற ஸ்திரிகள் பார்த்துத் தலை கவிழ்ந்து கொள்ள, யாதொன்றையும் சட்டை செய்யாமல் கெளபீனத்தை முடிந்துக்கொண்டு மெல்லக் கரையேறுவார்கள் ‘ — இது நம்பூதிரிகள் பற்றிய தகவல். எவ்வளவு நுட்பமான தகவல்!

புகையிலை வியாபாரம் செய்யும் பிராமணக் குடும்பத்தின் சாமிநாதன் எப்போது பார்த்தாலும் கிராமஃபோனில் — ‘பழுக்காத்தட்டு ‘ என்று நாவலில் சொல்லப்படுகிறது. இந்த சொல்லை எங்கிருந்து ஆசிரியர் பிடித்தார் என்று தெரியவில்லை! — சங்கீதம் கேட்டுக்கொண்டே இருக்கிறான். அதை ஒப்பாரிப்பாடல் என்றே ராஜாவும் மற்றவர்களும் வர்ணிப்பதிலிருந்து அது அகார சாதகத்தில் துவங்கும் ஹிந்துஸ்தானி சங்கீதமாக இருக்கலாம் என்ற குறிப்பு கிடைக்கிறது. அதைக் கேட்கும்போது கேட்பவர்க்க்கு என்ன நிகழ்கிறது ?

‘பூணூலைக் காதில் இடுக்கிக்கொண்டு அவர் (சுப்பிரமணிய அய்யர்) விசர்ஜனம் செய்ய உட்காரும்போது கிளர்ச்சி ஏற்படுத்தி ஸ்கலிதத்தை உண்டாக்குகிறது அந்த சங்கீதம் ‘ என்கிறது நாவல்!

சாதாரணமாகப் பேசும்போதுகூட படுப்பது பற்றிய படிமத்தை ஒதுக்கிவிட்டு அவர்களால் பேசமுடியவில்லை. ‘என்னவாக்கும் எல்லோரும் ஆத்தை மட்ட மல்லாக்க திறந்து போட்டுட்டு எங்கே போய்ட்டேள் ? ‘

‘அவனுக்கு ஒவ்வொரு கையிலும் ஆறு விரல் இருக்கு தெரியுமா ? ‘

‘கீழே ஒன்னா ரெண்டாடா என்றான் மருதையன் ‘.

ஆசிரியரின் நுட்பமான கிண்டலுக்கு மூதாதையரின் நம்பிக்கைகளும் தப்பவில்லை. யந்திரம் செய்கிறார் ஜோசியர் அண்ணா. ஆனால் ‘மூலைக்கு ஒன்றாக தேவதைகளை நிறுத்தியதில் ஏகப்பட்ட இட நெருக்கடி உண்டாகி, அந்த சதுரத்தகடு ஒன்னரை அடி நீள அகலத்தில் முடிந்தது ‘.

ராஜா அமர்வதற்கு இருக்கை போட உத்தரவு கொடுக்கிறார். ‘காரியஸ்தன் உள்ளே போய் ஆசனம், ஆசனம் என்று ஆசனவாய் தெறிக்கக் ‘ கத்துகிறான்.

ஆனால் இதெல்லாம் ஒரு சமுதாயத்தவரின் மனநிலையைக் காட்டுகிறதேயல்லாமல் நகைச்சுவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இதில் படைப்பாளி வேண்டுமென்றே செய்ததாக எங்குமே படவில்லை.

ஒரு இடத்தில், ‘பாட்டுப் பெட்டியும் நூதன வாகனமும் உனக்குத் தேவையில்லை. மலையாளக் கரையில் போய் முலை தெரியக்காட்டி நடக்கிற சுந்தரிகளைப் பார்ப்பதும்தான். அவர்கள் எல்லோருக்கும் கண்ணுக்குள்ளும் மனதிலும் உறைந்து கிடக்கும் அவமானவும் ஆத்திரமும் உனக்குத் தெரியாது. அது உன்னைச் சுட்டுப் போடும். உடம்பு பஸ்பமாகிப் போவாய் ‘ என்று முன்னோர்கள் ராஜாவை எச்சரிக்கும்போது, இந்த சமுதாயத்தினரைப் பற்றிய சித்தரிப்பில் இருக்கும் யதார்த்தத்தின் நிச்சயத்தன்மை உறுதிப்படுகிறது.

உன்னிப்பான கவனிப்பு

ஒரு நல்ல எழுத்தாளனின் கவனம் அபாரமானது. அவன் பார்வையில் இருந்து வாழ்வின் நுணுக்கமான அசைவுகள் எதுவுமே தப்புவதில்லை. பாரசீகத்திலிருந்து வரும் இசைக்கலைஞர்களைப் பற்றிய ஒரு வர்ணனை இது :

‘வயிற்றில் நிறையத் தக்கவைத்துக் கொண்டு அபான வாயு வெளியேற்றும்போது அதில் நூதனமான இசையை உண்டாக்கிக் காட்டுகிற வித்துவான்கள் அவர்கள்.

யமகம், பின்முடுகு, முன்புடுகு, திரிபு என்றெல்லாம் எழுத்தெண்ணிக் கிண்ண முலைக் கிண்ண முலைக் கிண்ண முலைக் கிண்ண என்று நீட்டி முழக்கிப் பாடி சிருங்கார ரசம் துளும்பப் பதம் பிரித்துப் பொருள் சொல்லும் வித்துவான் ‘.

‘பணம் ? பணமிருந்தால் காலத்தில் முன்னாலும் பின்னாலும் போய் நினைத்ததை வாங்கி உபயோகித்து சுகித்து இருக்கலாம் ‘ என்ற வரிகளில் ஒரு கவிதைத் தன்மை இருக்கிறது.

‘கிழவி தொங்கத்தொங்க வளர்த்த காதில் ‘ என்று சொல்லும் இடமும், ‘ஒற்றை வேட்டியோடு நடக்கிறது ஆசாரஹீனம். கெளபீனத்தைச் சேர்த்தால் இரண்டு வஸ்திரம் ‘ என்ற இடமும் நல்ல உதாரணங்கள்.

ஒரு கட்டுக்கோப்பான சமுதாயம் சில காரணங்களினால் சிதைகிறது. அந்தக் காரணங்கள் எவை ? முக்கியமாக அது பொருளாதாரமாக இருக்கிறது. புனித தோமையன் செய்த அற்புதங்களினால் பிராமணர்கள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினார்கள் என்பது ஒரு விளிம்பு நிலை யதார்த்தமே. அப்படி மாறியவர்கள் விழுக்காடு மிகமிகக் குறைவு. கிட்டாவய்யன் ஜான் கிட்டாவய்யனாக கிறிஸ்தவக்கு மாறுவதற்கு பணம்தான் காரணம். இது ரொம்ப சூசகமாக நாவலில் இறுதியில் சொல்லப்படுகிறது.

மதமாற்றம், ஜாதிக்கு ஒவ்வாத வியாபாரம் செய்தல் இவற்றுக்கெல்லாம் ஒரு சமுதாயம் எப்படி உட்படுகிறது, இந்த மாற்றங்களினூடே மாறாததாக எது இருந்து வந்துள்ளது என்பதையெல்லாம் அப்படி மாறிய சமுதாயத்தினரின் மொழியிலேயே சொல்கிறது இந்த நாவல்.

சங்கரன் பகவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். ஊஞ்சலில் அவளோடு கூடுகிறான். ஆனால் அவனுக்கு அது சாமிநாதன் அதே ஊஞ்சலில் ஆவியோடு கூடியமாதிரி இருக்கிறது.

எல்லாம் பழுக்காத்தட்டு போல சுழன்று சுழன்று மறுபடி மறுபடி நிகழ்ந்தபடி இருக்கும்

என்று நாவலின் இறுதியில் வரும் வரிகள் நாவலின் மையத்தைச் சுட்டுவதாக நான் நினைக்கிறேன்.

இந்த சுழற்சியில் முதலே முடிவாய், முடிவே முதலாய் ஆகிறது. அதனால்தான் நாவலின் கடைசி அத்தியாயத்தில் அரசூர் பற்றி எழுதிவிட்டேன் என்று ஆசிரியர் சொல்லும்போது, ‘என்னத்தை எழுதினே போ, இப்பத்தானே ஆரம்பிச்சே ‘ என்று முன்னோர்கள் பதில் சொல்கிறார்கள்.

அரசூர் வம்சம். இரா.முருகன். கிழக்கு பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு, டிசம்பர் 2004. பக்கங்கள்464. விலை ரூ 175/-

2:53 AM 04 June ’05

ruminagore@gmail.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி