வேடிக்கை மனிதர்கள் செய்யும் அமெரிக்காவை திட்டும் விளையாட்டு

This entry is part [part not set] of 19 in the series 20011210_Issue

நீரா குக்ரெஜா சஹோனி – மொழிபெயர்ப்பு கல்பனா சோழன்


ஆகாத மருமகள் எது செய்தாலும் குற்றம் என்பதைப் போல அமெரிக்கா எப்போது எதை செய்தாலும் அதை குறை சொல்வதே பலருடைய பொழுதுபோக்காகி விட்டது. செப்டம்பர் 11ம் தேதி உலக வர்த்தக மையம் தரை மட்டமாக்கப்பட்ட பிறகு, ஆப்கானிஸ்தானில் போர் ஆரம்பித்த இந்த சில நாட்களில், `அமெரிக்க ஆதிக்கம் ‘ பற்றிய கூக்குரல் மீண்டும் இந்திய மீடியாவில் உரத்தும், மேற்குலக மீடியாவில் சன்னமாகவும் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. உலகில் நடக்கிற எல்லா தீய காரியங்களுக்கும் அமெரிக்காதான் பொறுப்பு என்கிற புத்திசாலித்தனம் நம்மில் பலருக்கு இருக்கிறது. குறைபாடுகள் நிறைந்த நம்முடைய சமூக, பொருளாதார அரசியல் சுரண்டல் வாழ்க்கைக்கும் அமெரிக்காதான் காரணம் என்று பழி போடுகிற குணம் நீண்ட காலமாகவே நமக்கு இருந்து வந்திருக்கிறது.

அமெரிக்க தாக்குதல் நடக்கும் வரை தாலிபான் பற்றியோ, வியட்நாம் பற்றியோ, சூடான் பற்றியோ, யாருக்கும் எதுவும் தெரியாது. அமெரிக்கா குண்டு வீசிய அடுத்த நிமிடம், `போச்சு, எல்லாம் பாழாய்ப் போச்சு ‘ என்று கூக்குரல் போட எங்கிருந்தோ சிலர் முளைத்து விடுவார்கள். உண்மை என்னவென்றால், செயிண்ட் ஜார்ஜ் என்று சமீபத்தில் கேலிச்சித்திரம் போடப்பட்டிருந்த, கெள பாய் என்று கிண்டலடிக்கப்படுகிற, புஷ்ஷின் ஏகாதிபத்திய செயல்களால் மனித உரிமைகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு, இவர்களுடய போலி கூக்குரல்கள் ஏற்படுத்துகிற பாதிப்புக்கு சற்றும் குறைந்ததல்ல.

அமெரிக்காவுக்கு எதிராக என்னவெல்லாம் சொல்கிறார்கள் தெரியுமா ? :

‘உலகில் உள்ள எல்லா பின் லேடன்களும் உருவாக இவங்கதான் (அமெரிக்கா) காரணம். ‘

‘இவங்க உருவாக்கின பூதம் எப்படிப்பட்டதுன்னு இவங்களுக்கு தெரிய வேண்டாமா ? ‘

‘சாவு, அழிவுன்னா எப்படி இருக்கும்னு இவங்களுக்கு இப்போ புரிஞ்சிருக்கும் ‘

அமெரிக்கா பயந்து போய் விட்டதாக சிலர் சொல்கிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியாவின் கட்டுரை ஒன்று, இந்த போர் ‘பயமின்மைக்கும் (தீவிரவாதம்) பயத்திற்கும் (அமெரிக்கா) ‘ இடையிலான மோதல் என்று குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா ஏதோ பயப்படவே கூடாது என்றோ, பயந்தாலும் நடந்த அநியாயத்திற்கு எதிர் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது போல அல்லவா பேசுகிறார்கள் ? பயப்படுவது இயல்பான விஷயம் இல்லையா ? ஏன் பயப்படக் கூடாது ? ரத்த வெறி பிடித்த, முகம் தெரியாத, உயிர் பலிக்கு சற்றும் தயங்காத எதிரியை நினைத்து, யார்தான் பயப்பட மாட்டார்கள் ? அந்த்ராக்ஸ் இருந்து தொலைக்குமோ என்ற சந்தேகத்தோடு, ஒவ்வொரு கடிதத்தையும் தினம் தினம் பயத்தோடு கவனமாகப் பிரிக்க வேண்டிய சூழ்நிலையில் யார்தான் பயப்பட மாட்டார்கள் ? பயப்படுவது என்பது அந்த பயத்தோடு வாழக் கற்றுக் கொள்ள ஆரம்பிப்பதன் அடையாளம். கடைசியில் அந்த பயத்தின் மூலத்தையும் பயத்தையும் வென்று வாழ்வதற்கான ஆரம்பம்.

அமெரிக்கா, நாகரீகம் அடைந்த நாடு என்பதையே சிலர் கேள்வி கேட்கிறார்கள். அமெரிக்காவால் ஜனநாயகம், நவநாகரீகம், நவீனத்துவம், முற்போக்கு பற்றிய வேறு பார்வைகளை ஏற்க முடியவில்லை என்று விமர்சிக்கிறார்கள். அமெரிக்காவைத் தவிர உலகில் வேறு எந்த பெரிய நாட்டில் ஜனநாயகம் சிறப்பாக இத்தனை நீண்ட காலமாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது என்று கேட்கத் தோன்றுகிறது. (இந்தியா ? நீண்ட காலமாக ஜன நாயக நாடாக இருந்து வருகிறது என்று சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளலாம். )

நாகரீகத்தைப் பற்றி சொல்லும் போது சமீபத்தில் – (அக்டோபர் 8ம் தேதி 2001, பக்கம் 12 ) தி இந்து பத்திரிகையில் வெளியான நீரஜா கோபால் ஜெயல் எழுதிய கட்டுரை நினைவுக்கு வருகிறது. அரசியல் பற்றி ஒரு புது அகராதி உருவாக்க வேண்டிய தேவையை வலியுறுத்தும் போது, அவர் இந்த வாதத்தை முன் வைக்கிறார்: ‘நாகரீகம் பற்றிய இந்த மோதலுக்கு கொள்கைரீதியான ஒரு பலம் இருக்கிறது. இது, நாகரீகம் குறித்த பல தரப்பாட்ட அரசியல் மதிப்பீடுகளை ஏற்றுக் கொள்கிற, வெற்றி கொள்கிற போராட்டம் ‘. அமெரிக்க அரசியல் அறிஞர் ஒருவர், ‘அடுத்த போர், நாகரீகங்களுக்கு இடையிலான போராக இருக்கும் ‘ என்று சொன்னதை அந்தக் கட்ட்டுரையில் நீரஜா சுட்டிக் காட்டுகிறார். அதாவது கிறித்துவ நாகரீகத்துக்கும், இஸ்லாமிய அல்லது சீன நாகரீகங்களுக்கும் அவற்றின் நம்பிக்கைகளுக்கும் இடையிலான போராக இருக்கும் என்று அந்த அறிஞர் சுட்டிக் காட்டியிருப்பதாக விளக்குகிறார்.

‘நாகரீகம் என்று இன்று நம்பப்படும் கருத்துகள் உண்மையிலேயே மேற்குலக கலாசார மதிப்பிடுகளையே குறிப்பதாக சொல்லலாம். மேற்குலகின் ஜன நாயகம், சுதந்திரம், மற்றும் அதன் நவீன வாழ்வோடு தொடர்புடைய மற்ற கூறுகளையே குறிக்கிறது. நாகரீகமான வாழ்க்கை என்றால் அது மேற்குலக நாகரீக வாழ்வையே குறிப்பதாக கருதப்படுகிறது. ‘ என்று கூறும் நீரஜா கோபால் ஜெயல், அந்த எண்ணத்தையே கடுமையாக எதிர்க்கிறார்.

‘மனித குலம், வரலாற்றில் இது வரை எத்தனையயோ பிரமாதமான நாகரீகங்களைக் கண்டு விட்டது. மெசபடோமிய நாகரீகம், சீன நாகரீகம், எகிப்திய நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்று அடுக்க முடியும். ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் அறிவுச் செல்வத்தில் இருந்து கட்டிடக் கலை, சமையல் என்று பல துறைகளில் இஸ்லாமிய கலாசாரத்தின் பங்கும் சாதனையும் கணிசமானது. ‘

அணுகுண்டு கலாசாரத்தில் வழ்ந்து வரும் வேளையில், மற்ற கலாசாரங்களின் அருமை பெருமைகளை பட்டியலிடுவதுகூட அர்த்தமற்றதாகத் தெரிகிறது. இந்த வாதங்களெல்லாம் எந்த அளவு பொருத்தமானவை ? சித்தாந்த ரீதியான வாதங்களும், கருத்துகளும் நடைமுறையில் எந்த அளவு சாத்தியமானவை ? அந்த பழம் நாகரீகங்களுக்கு ஒரு பெரிய சிறப்பு உண்டு என்பது உண்மை. ஆனால் இன்று நாம் வாழும் உலகத்தில் அவற்றின் பயன் என்ன ? என்றெல்லாம் கேள்வி எழுகிறது.

அதோடு, பழம் சிறப்பு வாய்ந்த கிரேக்க சீன, இந்திய ( இஸ்லாமிய, கிறிஸ்துவ ஆட்சிக் காலங்கள் உட்பட) நாகரீகங்கள் இருந்த காலத்தில், சராசரி மனிதர்களுக்கு எந்த கொடுமையும் இழைக்கப்படவில்லை என்று யாரால் சொல்ல முடியும் ? அந்த அரும் பெரும் நாகரீகங்களின் எச்ச சொச்சங்கள் இன்று எவ்வளவு ? அவை இன்றைய வாழ்க்கைக்கு எந்த அளவு பயனுள்ளவை ? இப்படியெல்லாம் சொல்வதால், நாமெல்லாம் அந்த பழம் சிறப்பு வாய்ந்த நாகரீகங்கள் வழி வந்தவர்கள் என்பதை மறுப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. மனித குலம் உருவான காலம் தொட்டு இருந்து வந்த நாகரிகங்களின் திரட்சிதான் இன்று நாம் வாழும் உலகம் என்பதும் உண்மைதான். இருந்தும் மேற்குலக நாகரீகமும் அமெரிக்க வாழ்க்கையும் நாகரீக வாழ்க்கையோடு சற்றும் தொடர்பில்லாதது என்பது போல மறைமுகமாகவும், ஏன் நேரடியாகவும் சில அறிவு ஜீவிகள் தொடர்ந்து நிலை நாட்ட முயற்சிப்பதைப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது.

அமெரிக்காவையும் மேற்குலகையும் எதிர்க்கும் அறிவு ஜீவிகளின் நதிமூலத்தைப் பார்த்தால் அது இந்த மண்ணுக்கு சொந்தமற்றதாக இருக்கிறது. இடது சாரிகள் இன்னும் அதே மார்க்சிஸ பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முன்வைக்கும் வர்க்க அரசியல் வாதம், தேசிய அளவிலும் உலக அளவிலும் வலுப் பெற்றுள்ள சக்திகளைப் பற்றி தொடவோ, விளக்கவோ இல்லை. அந்த வாதம் தோற்று விட்டது அல்லது போதுமான அளவு கவனம் பெறவில்லை. சோவியத் யூனியன் சிதறுண்ட பின் அவர்கள் திக்கு தெரியாமல் இருக்கிறார்கள். சர்வதேச போராட்டத்தில் ஒன்றிணைவோ, கூட்டுசேரவோ முடியாமல், பின் தங்கவும் முடியாமல் தத்தளிக்கிறார்கள்.

இந்தியாவில், மேற்கு வங்காளத்தில் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தும், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி, அந்த மாநில மக்களுக்கு வளர்ச்சியை, வளத்தை கொண்டு வருவதில் தோற்று விட்டார்கள். அந்நாள் சோவியத் யூனியனுடனான தீராத காதலால், சீனாவோடும் சேர முடியாமல் இஸ்லாமியர்களின் கசப்புக்கும் ஆளாகி சித்தாந்த ரீதியிலும், நடைமுறையிலும் ஒரு பெரிய தத்தளிப்பில் மாட்டிக் கொண்டுள்ளார்கள்.

அமெரிக்காவை கண்டபடி ஏசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் மேற்குலகின் பயிற்சியையும், ஆதரவையும் அவர்கள் தொடர்ந்து பெற்று வருவதில் வியப்பில்லை. அமெரிக்காவின் பயிற்சியும், ஆராய்ச்சி வழிமுறைகளும்தான் அவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த மனநிலையின் அறிகுறிதான், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா தன்னை இன்னும் பாதுகாத்துக் கொள்வதற்காக விசாக்களையும், கல்வி உதவிகளையும் வழங்குவதை நிறுத்திக் கொள்ளும் என்று இந்திய இளைஞர்கள் கவலைப்படுவது. நாகரீகம் பற்றி வாய் கிழிய பேசுகிற ஜெயல் போன்ற எழுத்தாளர்கள் சொந்தக் கருத்தை பிரதிபலிப்பதில்லை. அவர்களுடைய குருக்கள் மேற்குலகில் வாழ்பவர்கள். பெரும்பாலும் அமெரிக்க எழுத்தாளர்களையும் சில நேரங்களில் பிரெஞ்சு அல்லது ஜெர்மானிய எழுத்தாளர்களையும் ஒட்டி பின் பாட்டு பாடுபவர்கள்தான்.

இப்படி வரும் மேதமை, உண்மைகளை மாற்றிச் சொல்லத் தயங்குவதில்லை. இப்போது இந்த அறிவு ஜீவி காற்று இஸ்லாம் பக்கம் வீச ஆரம்பித்துள்ளது. ருஷ்ய துதிபாடிகள் இப்போது இஸ்லாமின் வால் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள். `ஜிஹாத் ‘ என்ப்து ஒருவிதமான பாதுகாப்பு அரண் என்று பலர் சொல்லி வருகிறார்கள். அடுத்து அதை அமைதிப் போராட்டம் என்றும் அவர்கள் சொல்லக் கூடும். விட்டால், ஒரு விதத்தில் உலக அளவில் காந்தியின் சத்தியாக்கிரகத்தை மறு அவதாரம் எடுக்க வைக்கும் வழி என்றும் சொல்லக் கூடும்.

***

`The America Bashing Game ‘ என்ற தலைப்பில் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் 2001 அக்டோபர் 27ம் தேதி வெளியான நீரா குக்ரெஜா சஹோனியின் Neera Kuckreja Sohoni கட்டுரை.

**

Series Navigation

அமிதாப் பால் (தமிழில் : கல்பனா சோழன்)

அமிதாப் பால் (தமிழில் : கல்பனா சோழன்)