Pari
அது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. கிட்டே நெருங்கிப் பார்த்தால், அதன் உருக்குலைவும், தழும்பாய்த் தோன்றும் சிதறல்களும் அது ஒரு மீட்டக்கூடிய வீணையாய்த் தெரியப் படுத்தவில்லை. எனவே, அந்த ஏல வியாபாரி அந்த பழைய வீணையின் மீது நீண்ட நேரம் செலுத்த விரும்பவில்லை. ஆனாலும் ஒரு சிறிய புன்னகையுடன் அதனை இரு கைகளிலும் எடுத்தவாறு ஆரம்பித்தான்.
‘ஏலம்! ஏலம்! இந்த வீணை ஏலம்! ‘ சத்தமிட்டுக் கூறினான்.
‘யார் ஆரம்பிக்கிறார்கள் ? வீணை ஒரு ரூபாய்! வீணை ஒரு ரூபாய்! ‘ கூவினான் மறுபடியும்.
‘இரண்டு ரூபாய்! ‘ எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.
‘இரண்டு ரூபாய்! இரண்டு ரூபாய்! வீணை இரண்டு ரூபாய்! ‘
‘மூன்று ரூபாய்! ‘ எங்கிருந்தோ மற்றொரு குரல் கேட்டது.
‘மூன்று ரூபாய்! மூன்று ரூபாய்! வீணை மூன்று ரூபாய்! ‘
…
‘வீணை மூன்று ரூபாய் ஒருதரம்! மூன்று ரூபாய் இரண்டாம்தரம்! … ‘ விரைவாய்க் கூறி வீணை ஏலத்தை முடித்து விட எத்தணித்தான் ஏலக்காரன்.
ஆனால் அதற்குள் பின்னிலிருந்து ஒரு வயதான மனிதர் கையசைத்தபடி எழுந்து வந்தார்.
அந்த மனிதர் வீணையருகே வந்து, அதன் மேல் படர்ந்திருந்த தூசிகளை துடைத்துவிட்டு, துவண்டு கிடந்த நாண்களை முறுக்கிக் கட்டினார். முறுக்கிக் கட்டியபின், ஏல மேடையில் அமர்ந்து மெதுவாய் மீட்ட ஆரம்பித்தார். மிக அற்புதமாய் ஒரு மென்மையான ஹம்சத்வனி ராகம் அந்த வீணையிலிருந்து பிறந்து அந்த அறையை நிரப்பியது.
அந்த மனிதர் வீணை வாசித்து முடிந்தவுடன், ஏல வியாபாரி மகிழ்ச்சியும் கம்பீரமுமாய் திரும்பவும் ஆரம்பித்தான்.
‘ஏலம்! ஏலம்! இந்த வீணை ஏலம்! ‘ மறுபடியும் சத்தமிட்டான்.
‘ஆயிரம் ரூபாய்! ‘ எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.
‘ஆயிரம் ரூபாய்! ஆயிரம் ரூபாய்! வீணை ஆயிரம் ரூபாய்! ‘
‘இரண்டாயிரம் ரூபாய்! ‘ எங்கிருந்தோ மற்றொரு குரல் கேட்டது.
‘இரண்டாயிரம் ரூபாய்! இரண்டாயிரம் ரூபாய்! வீணை இரண்டாயிரம் ரூபாய்! ‘
2500, 3000 என்று ஏலம் எடுப்பவர்கள் மிக ஆவலாய் ஏலம் கேட்டபடி பங்கேற்க, ஏலம் 5000 ரூபாயில் வந்து நிற்க, ‘வீணை ஐயாயிரம் ரூபாய் ஒருதரம்! ஐயாயிரம் ரூபாய் இரண்டாம்தரம்! ஐயாயிரம் ரூபாய் மூன்றாம்தரம் ‘ எனக்கூறி வீணை ஏலத்தை முடித்தான் ஏலக்காரன்.
ஏலம் எடுத்தவன் மிக சந்தோஷத்துடனும் பெருமையுடனும் பணத்தைக் கொடுத்துவிட்டு, வீணையை எடுத்துச் சென்றான். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டனர். சிலர் சந்தேகமாய்க் கேட்டனர், ‘என்னாயிற்று திடாரென ? வீணையின் மதிப்பு எப்படி மாறியது ? ‘
‘வீணை மீட்டிய கைகளால் மாறியது வீணையின் மதிப்பு. ‘ தெரிந்தவர்கள் பதிலளித்தனர்.
அந்த உருக்குலைந்த வீணையைப் போல, மதிப்பு தெரியாத மக்களிடம் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என ஏலம் போகும் அந்த வீணையைப் போல, ஒராயிரம் மக்களின் வாழ்க்கையும் உருக்குலைந்து, சிக்கலும் சிதறலுமாய் சுரமிழந்து எண்ணமில்லா கும்பலிடம் ஏலம் போய்க் கொண்டுதான் இருக்கிறது.
உல்லாசமாயும், குறிக்கோளில்லாமலும், உல்லாசமாக இருக்க வழியில்லாமலும், குறிக்கோள் என்றால் என்னதென்று தெரியாமலும் ஏகப்பட்ட மனிதர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள். இவர்களது வாழ்க்கை, இதோ ஒரு தரம், அதோ இரண்டாம் தரம் என ஏலத்தில் செல்வதுபோல் மதிப்பில்லாமல் போய்க் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாய், இவர்களின் வாழ்க்கையெனும் வீணையை முறுக்கி மீட்டுவதற்கு ஆசானாய் சிலர் வந்தமைவது பலருக்குப் புரிவதில்லை. நம் கண்ணெதிரே, உருக்குலைந்த வீணையாய் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் சுரமேற்றி, முறுக்கேற்றி சுக ராகம் கொடுக்க, நாமே ஆசானாய் மாறாலாமே!
திண்ணை
|