வீணாகப் போகாத மாலை

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

அ.முத்துலிங்கம்


வார இறுதி வரும்போது எனக்கு மெல்லிய நடுக்கம் பிடிக்கத் தொடங்கிவிடும். ஏனெனில் சனி, ஞாயிறு மாலைகளில்தான் நடன அரங்கேற்றம், பாடல் கச்சேரி, இலக்கிய விழா, நாடகம், புத்தக வெளியீடு என்று வழக்கமாக நடைபெறும். ஏதாவது ஒன்றுக்கு போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். போதிய சமாதானம் கைவசம் இல்லாவிட்டால் போயே தீரவேண்டும்.

இப்படித்தான் போனவாரம் ஒரு நிகழ்ச்சியில் மாட்டிவிட்டேன். ஆரம்பத்தில் இரண்டு பெண்மணிகள் இணைந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார்கள், தங்கள் தங்களுக்கு பிடித்த சுருதிகளில். எதற்கு இரண்டு பேர் என்று தெரியவில்லை. பாடலின் இறுதிவரை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வீரமாகப் பாடினார்கள். பாட்டு முடியும் வரையில் இருவருக்குள்ளும் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை.

அன்று எலக்ரோனிக் தேவதைகள் வேறு ஒத்துழைக்காத நாள். இரண்டு காதுகளாலும்கூட தாங்கமுடியாத அதிர்ச்சி. இவ்வளவு ஒலி வெள்ளத்துக்குள்ளும் அவர்கள் இசை அமுங்கிவிடாதது அதிசயம். பாடல் முடிய இரண்டு நிமிடம் இருக்கும்போதே தமிழ்த் தாய் பின்பக்கம் வழியாக ஓடிவிட்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவர் திரும்பவில்லை.

இந்த அனுபவங்களால் நான் மிகவும் ஆடிப்போய் இருந்தேன். ஆகவே நவம்பர் 8ம் தேதி சனிக்கிழமை ரொறொன்ரோ எஃகுத் தொழிலாளர் அரங்கத்தில் உலகமயமாக்கலை எதிர்கொள்ளும் முகமாக ஒரு கருத்தரங்கமும், கலை நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது என்ற அறிவித்தலை நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் ஒரு புதுவகையான கூத்து ஏற்பாடாகியிருக்கிறதாகச் சொன்னார்கள். உலகமயமாக்கலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய நாட்டுக்கூத்து என்றதும் என்னுடைய எதிர்பார்ப்புகளை இன்னும் சுருக்கி, மனதை தைரியமாக வைத்துக்கொண்டேன்.

ஆனால் நிகழ்ச்சியிலே நடந்தது வேறு. பாரம்பரிய நாட்டுக்கூத்து அல்ல. கூத்துக் கூறுகளை அடக்கிய ஒரு புதுவிதமான musical கலவை; இசை நாடகம் என்றும் சொல்லலாம். இதில் பாட்டும், நடனமும், கூத்தும், கவிதையும், வசனமும், நடிப்புமாக சகல அம்சங்களும் அடக்கியிருந்தன.

அரச சபையில் நடனத்தோடு நாடகம் ஆரம்பமாகியது. மன்னன் வழமைபோல மந்திரியிடம் நாட்டு வளம் எப்படி என்று கேட்கிறான். மந்திரி அதற்கு உலமயமாக்கலால் விளையும் அனர்த்தங்கள் பற்றி எடுத்துரைக்கிறான். அந்த விவரம் ஒவ்வொரு காட்சியாக விரிகிறது.

எழுநூறு ஆண்டுகளுக்கு முன் மார்க்கோ போலோ ஆறுவயது சிறுவனாக ஒரு பயணம் மேற்கொண்டான். வடக்கு தெற்காக அமைந்த இந்த முதல் பயணம் அவனை சீனாவுக்கு கொண்டுபோய் சேர்த்தது. இரு நூறு வருடங்களுக்கு பிறகு மேற்கு நோக்கிய பயணத்தில் அமெரிக்காவை கண்டுபிடித்தார்கள். அந்தப் பயணங்களில்தான் உலகமயமாக்கல் ஆரம்பமாகியது. மெள்ள மெள்ள இதன் விளைவுகளை மக்கள் புரிய தொடங்கியபோது வல்லரசு முதலீட்டு நிறுவனங்கள் உலகமுழுவதையும் தம்வலையில் வளைத்துவிட்டன.

மக்கள் அரசனிடம் முறையிடுகிறார்கள். புல்வெளிப் பசுக்களின் மடியில் அமிலம் சுரக்கிறது. காற்றில் நச்சுப் புகை கலந்துவிடுகிறது. ஆற்று நீர் அணு உலைக் கழிவுகளை அள்ளிவருகிறது.

அரசனுக்கு கோபம் மூள்கிறது. கம்பனி முகவர்களை உதைத்து விடுவதுபோல மேடையிலே பாய்கிறான்.

‘படுபாதக மூடனே

தப்பிதக் குணங்கள் போமோடா

படுபாதக மூடனே

இப்படிப்போய் செய்யலாமோடா ‘

என்று செங்கோலைச் சுழற்றியபடி இப்படியும் அப்படியும் மேடையில் மிதித்து நடந்தபோதே சபையோர் நிமிர்ந்து உட்காரத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் மெக்ஸிக்கோ, கொலம்பியா, கனடா என்று உலகத்து நாடுகள் எதிர்நோக்கும் அழிவுகளைச் சொல்லியபடி நாடகம் நகர்கிறது.

பரம்பொருளான கடவுளை காவடியாட்டத்துடன் பக்தர்கள் அணுகுகிறார்கள். நிசமாகவே மேடையில் ஒரு தவிலும், நாயனமும். அந்த இசைக்கேற்ப மிகத் தேர்ந்த ஒரு கலைஞனின் காவடியாட்டம். இந்த ஆட்டம் ஓய்ந்ததும் தங்களை அறியாமலே பார்வையாளர்கள் கரவொலி எழும்புகிறது.

ஆனால் பிரார்த்தனைகள் மக்களைக் காப்பாற்றவில்லை. அவர்கள் வேறு வழி தெரியாது அந்நிய முதலீட்டுக் கம்பனிகளின் அதிகாரத்திற்கு பணிகிறார்கள். இறுதியில் பாரதியாரின் பாடலுடன் நாடகம் நிறைவு பெறுகிறது.

ஒரு கலை நிகழ்ச்சி என்றால் அதில் மூன்று அம்சம் முக்கியம். பார்க்கும்போது கிடைக்கும் இன்ப அனுபவம்; கலை வெளிப்பாடு; சிந்தனை தூண்டல். இந்த நாடகத்தில் இந்த மூன்றும் இருக்கிறது. அத்துடன் தமிழ் நாடகத்துக்கே புதுமையான பல அம்சங்களும் சேர்ந்திருந்தன.

மிக எளிமையான உடை அலங்காரம். மேடையிலேயே நடிகர்கள் வேடம் மாற்றிக்கொள்கிறார்கள். கிரீடத்தை வைத்தால் மன்னன்; சூலத்தை எடுத்தால் கடவுள்; இடுப்புச் சால்வையை அவிழ்த்து மேலே போர்த்தினால் குருக்கள்; தொப்பியை அணிந்தால் அந்நிய முகவர்.

ஏழே ஏழு நடிகர்கள்தான். ஆனால் அதில் நடித்த பாத்திரங்களோ பதினாறு. ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் அதே நடிகர்கள் வேறு வேறு பாத்திரங்களில் மாறி மாறி வருகிறார்கள். நடிப்பவர்களைத்தவிர மற்றவர்கள் பின்புலத்தில் கோரஸ் போல பாடிக்கொண்டே ஆட்டத்திலும் பங்கேற்றார்கள். நாடகத்தின் உச்சக்கட்டம் அரசன் பிரசன்னமானபோதும், காவடி ஆட்டத்தின்போதும் கிடைத்தது.

கண்ணுக்கு விருந்தாக அமைந்த இந்த அருமையான நாடகத்தில் சில குறைகளும் இருக்கத்தான் செய்தன.

பாரம்பரிய கூத்து அம்சத்தை நிலை நாட்டுவதற்காக நடிகர்கள் ஒலிவாங்கியை உபயோகிக்காமல் தம் சொந்தக் குரலின் கனத்தையே நம்பிப் பாடினார்கள். இந்தப் பிடிவாதத்தால் செழியனுடைய அருமையான காற்றிலும் கனம் குறைந்த கவிதை வரிகள் காற்றிலேயே கரைந்து கடைசி வரிசை பார்வையாளர்களிடம் போய்ச் சேரவே இல்லை. போதிய பயிற்சி இல்லாததால் சில சமயங்களில் கூத்து அசைவுகளுக்கும், இசைக்கும் சம்பந்தம் இருக்கவில்லை. இன்னும் முழங்காலில் இருந்து கடவுளை வேண்டும் இடம் நீண்டுகொண்டே போகிறது. கொஞ்சம் குறைத்திருந்தால் பார்வையாளர்களுக்கும், முழங்கால்களுக்கும் ஆறுதலாக இருந்திருக்கும்.

செல்வம் அருளானந்தம் நெறியாள்கையில் இந்த புதுமையான முயற்சி மேடை கண்டிருக்கிறது. ஓர் உலக பிரச்சனையின் சிக்கலான கூறுகளை எளிமைப்படுத்தி புரியவைக்க முயன்றிருக்கிறார்கள். வழக்கமாக கூத்துக்களில் ஒரே மாதிரியான பாட்டும், ஆட்டமுமாக சீக்கிரத்திலேயே அலுத்துப் போகும். இங்கே அப்படியல்ல. வகை வகையான மெட்டுக்களில் பாடல்களும், அதற்கேற்றமாதிரி அசைவுகளுமாக மாற்றி மாற்றி அடுக்கியிருந்தது ரசிக்கும்படி இருந்தது. இவ்வளவு குறைவான நேரத்தில், கச்சிதமாகவும், கலையம்சத்துடனும், நேர்த்தியாகவும் ஒரு விஷயத்தை சொல்ல முடிந்ததே பெரிய வெற்றிதான்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு – தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?

என்ற பாரதியின் வரிகளோடு நாடகம் முடியும்போது அந்த தீ எம்மையும் பற்றிவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நாடகம் நிறைய கவித்துவமான வாக்கியங்கள். காட்சிக்கு காட்சி இன்ப வியப்பு கூடிக்கொண்டே போகிறது. இன்னும் பல இடங்களில் மேடை ஏறவேண்டிய நாடகம் இது. இதைப் பார்ப்பவர்களுக்கு புதுமையான அனுபவம் காத்திருக்கிறது. நிச்சயமாக அவர்கள் மாலைப்பொழுது வீணாகப் போகாது.

Appadurai Muttulingam

51, Alexmuir Blvd

Scarborough, Ont

M1V1H3

Canada

Tel/Fax 416 299 1431

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்