கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா
விடியற்காலை ! பல் தேய்த்து விட்டு மூஞ்சியைக் கழுவினேன்.
அப்பா ! மனுஷன் எப்படி படுத்தறான் பாரு ! என்று கணவனை அன்போடு உரிமையோடு மனதில் நினைத்துக் கொண்டே பாத்திரங்களைத் தேய்க்கக் குழாயினைத் திறந்தேன் . . .
கீழே நேற்று சாப்பிட்ட மிச்சம் கொண்ட பாத்திரங்கள் . . .
காய்ந்த ரசம் சொம்புகள் …
காலியாகிப் போன தயிர் பாத்திரங்கள் . . . அடியே பால் காய்ந்திருந்தச் சின்னங்கள் . . .
ஊசிப் போனப் பருப்பு பாத்திரங்கள் . . .
நீர் ஒவ்வொன்றிலும் நிறைந்து வழிந்தோடியது . . .
உள்ளமும் அதில் லயித்து போனது.
கையில் சாம்பலும் தேங்காய் நாரையும் சேர்த்துக் கொண்டு ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு காலருகே வைத்துத் தேய்க்க ஆரம்பித்தேன் . . .
“சருக் சருக் சருக்” ஓசை லயம் வந்து போனது.
கொஞ்சம் நீர். பாத்திரத்தின் மீது தெளித்தேன் . . .
பிறகு மீண்டும் கலங்கிப் போன சிறிது நீருடன் பாத்திரத்தை இப்படியும் அப்படியும் வைத்து தேய்த்தேன் . .
வெயிலில் சற்று பார்த்தேன். நிறம் மங்கிப் போன பித்தளை பாத்திரத்திற்கு கொஞ்சம் பாலீஷ் போடலாம் என்றிருந்தேன்.
வாளியில் தண்ணீர் குறைந்திருந்தது. போரிங்கில் மீண்டும் லொட்டென்று அடிக்காமல், அழுக்கு வெங்கலக் குழாயினைத் திருக, சற்றே சூடான தண்ணீர் கொட்டியது . . .
பாத்திரங்களை அலும்பினேன் . . .
“அக்கடாவென்று உட்கார்ந்து கொண்டு இருக்கலாம் போலிருக்குது” பரபரவென்று வாழ்வில் இயங்கும் வேளையில் நமக்கு அடிக்கடி தோன்றும் எண்ணம் எனக்கும் வந்து போனது.
மதியம் வீட்டு வேலைகள் முடிந்து சற்று சன் டிவி சீரியல் பார்க்கலாமென்று ஆசையில் போட்டால் அழுகைச் சத்தம் அதிகமாக இரைச்சலாக இருக்கவே, சிலோன் ரேடியோ கேக்கலாமென்று போட்டேன். ரேடியோ கேட்பது இப்போது பேஷன் இல்லையாமே ?.
கேட்டு, கேட்டு போரடிக்கவே தலை வலிக்கலாயிற்று. சற்று காபி போட்டுக் குடிக்கலாம் என்று எழுந்தேன்.
காபியைப் போட்டுக் குடித்தபின், அக்கடாவென்றூ காலைத் திண்ணையில் போட்டுவிட்டு வீட்டிற்குப் பள்ளி சென்ற குழந்தைகள் வரும் வரை மனதில் அசை போட்டேன். இந்த மனிதர் (வீட்டுக்காரர் தான்) வந்தால் அவர் பண விஷயத்தைப் பார்த்துக் கொள்வார் என் நம்பிக்கையுடன் இருந்தேன்.
பக்கத்து வீட்டுப் பறவை பத்மா வந்து உட்கார்ந்தது.
பிறகு இருவரும் உலக விஷயங்களை காலுக்கடியில் கிடைக்கும் பட்டாணிகளை வாயில் மென்னியவாறு, கையில் உலை அரிசி முறத்தில் வீசியவாறு கல் பொறுக்கிக் கொண்டே “செல்வி இன்னும் சன் டிவியில் வருதாமே , ஜெயாவில் வரவில்லை போலிருக்கிறது” போன்ற முக்கிய விஷயங்களை அலசினோம். கொஞ்சம் மனது லேசாகும் தருணமிது.
காதும் காதும் வைத்தவாறு பக்கத்து வீட்டு கமலா பெண் கலப்புத் திருமணம் புரிவதை விஷமமானப் புன்னகையுடன் அக்கம் பக்கம் எட்டிப் பார்த்தவாறே எங்களுக்குள் ஆவலுடன் பறிமாறிக் கொண்டோம். எங்கள் குழந்தைகளும் பிற்காலத்தில் அவ்வாறே ஆகக் கூடும் சாத்தியங்கள் பலவாறு இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ள வில்லை.
பாட்டி போன்று காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து மெகா சீரியலை அசை போட்டு, வீட்டுப் பெண்களிடம், குழந்தைகளிடம் கதை பேசி மெதுவாக எழுந்து, நடந்து, டயாபடீஸ் வந்து, கால்கள் தோய நடந்து இதயக் கோளாறினால் மெதுவாகக் கண்ணை மூடி . . . அது எதுக்கு இப்போ ?
கல்யாணம் கார்த்திகை என்றால், தெரிந்த உறவுகளுடன் சாப்பிட்டுவிட்டு ஜமுக்காளத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு இரண்டு மணி நேரம் வெற்றிலையோடு அனைத்துக் குடும்பங்களின் கதைகளை அரைத்துக் குடித்து, மதியம் காபி வரும் வரை குதப்பினால் சுகம் தான் . . .
மனதை லயித்து வெறுமனே இருப்பது சுகமா ? நிலையுடன் மெதுவே உலக அலுவல்களை கவனிப்பது சுகமா ? தன் நிலை மாறாமல் இருப்பது சுகமா ?.
மயக்கமா, கலக்கமா ? மனதிலே உறக்கமா ? போன்ற தத்துவங்களெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. வாழ்வதே பெரும் பாடு. அப்பப்போ கொஞ்சம் மகிழ்ச்சிக்கு காசு செலவில்லாத பொழுதுபோக்கு கிடைக்கும். அனுபவிக்க வேண்டியது தான்.
ஆயிற்று ! பள்ளி விட்டு, குழந்தைகள் வந்தாயிற்று. ஓட்டமும் நடையுமாய் வந்த வாண்டுகள் சரேலென்று வீசிய புத்தகங்கள் சிதற, அவசர அவசரமாய் வாயில் டிபனை அள்ளித் திணித்தவாறு, வெளியே புழுதியில் விளையாடப் புகுந்தன.
மீண்டும் சற்று அமைதி.!
வெளியே வெயிலில் மொறு மொறுவென்றுக் காய்ந்த புடவைகள், குளித்த துண்டுகள், தன்னை இரவில் கணவன் சம்போகித்து மகிழ்ந்த உள்ளாடைகள், குழந்தைகள் துணிகள், மற்றும் சில கந்தைத் துணிகள் போன்றவற்றை மழை தூறுவதற்குள் பாய்ந்து எடுத்து வீட்டிற்கு வந்து மடிக்கலானேன்.
ஒவ்வொன்றாய் துணி மடிக்க, அத்துடன் சீரியன் எஃப்.எம் கேட்டால் நன்றாக இருக்குமென்று டிரான்ஸிஸ்டரைப் போட்டு விட்டு சற்று முறுக்கு, சீடை போன்ற வகையிறாக்களை வாயில் போட்டுக் கொண்டு, கீழே சப்பணமிட்டுக் கொண்டு உட்கர்ந்து ஒவ்வொன்றாய் செவ்வகமாய், சதுரமாய், வட்டமாய் மடிக்கலானேன்.
தன்னை இகழ்ந்த, புகழ்ந்த, மறைத்த, பின்னுக்குத் தள்ளிவிட்ட, தோளில் தாங்கிய, தன்னை ஏறி மிதித்த, தன்னை முத்தமிட்ட, தன்னை முத்தமிட நினைத்த ஆண் மற்றூம் பெண்களை உவகையுடன் எண்ணிப் பார்க்கிறேன். ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்த்து என் கூரிய புத்தியுடன் அவர்களின் பேச்சுக்களை மூளையில் பதிவு செய்து மீண்டும் ஒருமுறை கேட்டு மற்றொரு தடவை ஞாபகம் வைத்துக் கொள்கிறேன். என் வீட்டுக்காரர் கூட சொல்வார் “ பத்து வருடங்கள் முன்னால் பேசியது வைத்து என்னைக் கவுக்கிறியே !” என்று. அது தான் என் ஆயுதம் என்று அந்தப் “பேக்கி”ற்கு எப்படித் தெரியப் போகிறது ?. எவ்வளவு தடவை சொன்னாலும் எப்படியும் கேட்காத ஜென்மம் மனதில் சற்றே அழுத்தமேறக் கவலையை மறக்க இரவுச் சாப்பாட்டிற்குப் ரசம் வைப்பதற்குப் புளியைக் கண்ணீரில் தண்ணீரில் கரைத்தேன்.
கடினமாக உழைத்து, தொழிற்சாலைக்கு இரண்டு மைல் சைக்கிளில் மிதித்து போய் விட்டு, உழைத்து, மாலை திரும்பும் கணவர் பறவை வரும் வரை காக்க வேண்டியது தான்.
ஏது இந்த மனிதர் வந்து நிற்பாரே ? காபி என்று ஆளாய் பறப்பாரே ! என்று வாசலில் வந்து எட்டிப் பார்க்கிறேன் !
மாலை 6 மணியாயிற்று.
விளக்கு வைக்க வேண்டிய நேரத்தில் “வெளியே என்ன போக வேண்டியிருக்கிறது ?“ என்று அம்மா அங்கலாய்க்கும் காலம் போய் இப்படி குடும்ப பாரத்தைச் சுமப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. விளையாடிய குழந்தைகள் வந்தாயிற்று. காலில் புழுதியுடன் வந்தவற்றை விரட்டி தாழ்வாரத்தில் காலைக் கழுவ வைத்து, நெற்றியில் திருநீறு வைத்து முருகனை கும்பிட வைத்தேன். எனக்குப் பிள்ளையாரும், முருகனும் பிடித்த கடவுள்கள். என்னமோ , அவர்களை வேண்டிக் கொண்டால் எல்லாம் நடக்குமென்று நம்பிக்கை. பேய் இல்லை என்பது ஒரு நம்பிக்கை மாதிரி இதுவும் ஒரு நல்லதிற்குத்தான் என்று நம்பி காலத்தை ஓட்டிக் கொள்கிறேன். நாளைக்கு ஏதாவது ஒன்று நமக்கு நடந்தால் அக்கம் பக்கம் இருக்கும் நாலு மனிதர்கள் போதுமென்று இருந்து வந்தேன்.
குழந்தைகளை படிக்க வைத்தேன். இப்போது, தமிழ் “கம்பல்சரி” யாமே ?. (கட்டாயம் என்று தமிழிலேயே சொல்லிவிட்டார்கள்!). சொல்லி கொடுக்க வேண்டும்.
இரவுச் சாப்பாட்டிற்கு அனைவரும் அலை பாய்ந்தனர். சிறிசுகளுக்கு, தயிர் சாதம் பிசையணும். அப்புறம் வீட்டுப் பெரியவருக்கு அப்பளம் பொரிகணும். அப்பலம் சுட்டுப் போட்டதில் கலியாணம் ஆன புதிதில் மாமா குதித்தது ஞாபகம் வந்தது. அத்தைக்கு காரம் ஆகாது. கண்வருக்கு ஒரு கறி, ஒரு கூட்டு வைக்கணும். துவையல் வவத்தாகணும் வேறே ! சிறிசுகளுக்கு உருளைக் கறி என்றால் உயிர். அதையும் செய்தாகணும்.
வீட்டில் சாப்பிட்டால் குடிக்கச் சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. மாலை ஏழு மணிக்குத் தண்ணீர் வந்து வீட்டு போரிங்கில் சொட்ட ஆரம்பிக்கும். “லொட்” “லொட்” என்று அடித்தால் இரண்டு குடம் பிடிக்கலாம். வேலையிலிருந்து திரும்பி வரும் கணவரைக் கேட்டால் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவர் சண்டை போட்டால் இரவு நிம்மதி போய்விடும். அப்புறம் முந்தானை வைத்து கொஞ்சம் முடிந்தால் தான் போன நிம்மதி வரும். அந்தக் கஷ்டம் வேறே.
பட்டியல் நீள்கிறது . . .
எனவே மனதில் எல்லாவற்றையும் ஞாபகப் படுத்திக் கொண்டு சிவனே! என்று பகல் கனவு கண்டு மகிழ வேண்டியது தான் !
கடலில் காலை நீட்டி உட்கார காலில் நுரை ததும்பும் அலைகள் வந்து எனைத் தொட்டு விட்டுப் போக . . .
வாசலில் ஒய்யாரமாக அமர்ந்திருக்க, எங்கிருந்தோ இருந்து ஒரு சிவந்த அலகுடைய குருவி மரத்தில் வந்து உட்கார அதைக் கண் இமை சிட்டாமல் பார்க்க . . .
அமைதியான பள்ளத்தாக்கில் “ஹோவென்றிருக்கும்” மலைகளில் பசுமையான தூரக் காடுகளை பார்த்துக் கொண்டேயிருக்க . . .
கோவில் நடை சாத்தப்படும் நண்பகலில் காற்றின் அரசல் புரசலோடு இழைந்தாடும் அரச மரத்தின் இலைகள் . . . கோவில் நடை முற்றத்தில் ஆள் அரவம் இல்லாமல் சுட்டெரிக்க … மதிலின் நிழல் வெயிலை மறைக்க . . . அந்த நிழல் தந்த சுகத்தில் குதித்தாடும் அணில்கள் . . .
சலனமில்லாத குளத்தினில் ஒரே ஒரு சின்ன மீன் “சரேலென்று” சுற்றி மெல்லிய சலனக் கோடுகளைத் தண்ணீரில் கிழிக்க . . .
தூரத்தே தெரிந்த சிறிய பம்ப் செட்டும் அதிலிருந்து கொட்டும் அருவியெனப் பெய்யும் பாசன நீர் நிதானமடைந்து மெதுவாக கழனிகளின் மடைகளில் ஊர்ந்து பூமியினை நனைத்துப் போகும் பாங்கும் . . .
படிக்க நன்றாக இருக்கின்றது.
இங்கெல்லாம் போக முடியுமா. ? ஆகும் செலவிற்குச் சேர்த்து வைத்தால் குழந்தைகளுக்குப் பிரயோசனம்.
“ஒத்தையடிப் பாதையிலே அத்தை மகப் போகையிலே ” பாட்டு பாடிக்கொண்டு போவது சுகமாக இருந்தாலும் அந்த மாதிரி யாரும் என்னை அத்தை மகளாய் சீராட்டியதில்லை. ஒத்தையடிப் பாதையில் போனதுமில்லை.
சன் டிவியில் காண்பித்தால் மகிழ வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டு டிவியின் குமிழைத் திருக . . .
என்னைப் போல் கஷ்டப்படும் மற்றொரு வீட்டுப் பறவையைப் பற்றி, அவளைச் சுற்றி நடக்கும் தர்ம, அதர்ம நியாய, அநியாய யுத்தங்கள் என்னை வசீகரிக்க அவளுக்காக கண்ணீர் விடலாயினேன் !
என்னைச் சுற்றி என் பேத்தி எம் மடி மீது தவழ்ந்து கொண்டிருந்தாள்.
என்னருகே மடிக்க நிறைய துணி மணிகள் இருந்தன. அவற்றை முடித்து விட்டு மலர்கள், கோலங்கள், செல்வி, பெண், பாட்டி, பேத்தி போன்றவற்றை முடித்து விட்டு “அக்கடா” வென்று “கட்டையைச்” (என் உடம்பைத் தான் !) சாய்க்க வேண்டும்.
நாளைக்கு “அம்மா ! பால் !” என்று பால்காரன் விடியற்காலை நான்கு மணிக்கு எழுப்புவான். ஒரு நாள் கூட “அய்யா ! பால்” என்று கூறுவதில்லை.
கணவரும் பேக்டரிக்குப் போக ஐந்து மணிக்கு எழ வேண்டும். நான் தொட்டு எழுப்பவில்லையென்றால் மனுஷன் எழுந்திருக்கமாட்டான் !
புத்திசாலி !
வீட்டுப் பறவை கூட்டுக்குள் கண்ணயர்ந்தது.
பின் குறிப்பு :
மங்கையர் மலரின் குடும்பக் கதைகளின் முடிவு மாதிரி இருக்கிறதா ? என்னருகே கூட நிறைய மங்கையர் மலர், சினேகிதி, அவள் விகடன் உண்டு. மதியம் படிக்கச் சுவையாக இருக்கும். அதனால் ஏற்பட்ட பின்விளைவு தான் இது.
kkvshyam@yahoo.com
- கண்ணகி எதன் அடையாளம்?
- கற்சிலைகள் காலிடறும்!
- ஒரு சிலையும் என் சிலம்புதலும்
- தேரா மன்னா! செப்புவது உடையேன்!
- எச்.முஜீப் ரஹ்மானின் கட்டுரைகள் குறித்து
- தற்கால இலக்கியம்..வாழ்விடம் கலையாகும் தருணம்
- சூபி இசை – இதயத்திலிருந்து ஒரு செய்தி
- மொழியின் கைதிகள்
- விமர்சனங்களும் எதிர் வினைகளும்
- ஞான. ராஜசேகரனின் பாரதி – சில திரைப்படத் திரிபுகள்
- கடித இலக்கியம் – 9
- ஸீஸன் கச்சேரியும் தொய்வு அளவையும்
- வீட்டுப் பறவைகள்
- 33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு
- மாப்பிள்ளைமார் கலகமும், இந்துத்துவத்தின் இடியாப்பச் சிக்கலும்
- செர்நோபில் அணுமின் உலையை மூடக் கட்டிய புதைப்புக் கோட்டை-8
- சர் சி வி ராமன் குறும்படம் வெளியீட்டு விழா
- கடிதம் – எஸ். இராமச்சந்திரன் ” இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… “
- பாரதி பஜனையில் மயங்கும் மக்கள்
- கண்ணகி சிலை விவகாரம்: மறக்கப்பட்ட சில உண்மைகள்
- 25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த ஒன்றுகூடல் தள்ளி வைப்பு
- கடிதம்
- ஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் கருத்து பற்றி
- எடின்பரோ குறிப்புகள் – 18
- சேர்ந்து வாழலாம், வா! – 7
- உறவின் சுவடுகள் ( தெலுங்கு கதை )
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-5) [முன்வாரத் தொடர்ச்சி]
- எ ட் டி ய து
- அரசு ஊழியர்களுக்கு மணி கட்டுவது யார்?
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 4. திருமண உறவுகள்
- கண்ணகியின் கற்பு சாஸ்திரம்..?
- மன்னரும் மல்லரும்
- தனி மனிதப் பார்வையில் சமூகம், இலக்கியம் பற்றிய குறிப்புகள்
- ஒரு காடழிப்பு
- தீய்ந்த பாற்கடல்
- கோமாளிக் காக்கைகள்
- தூங்க மறுக்கின்ற வெய்யில் இரவுகள்
- பெரியபுராணம் – 92 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கீதாஞ்சலி (77) என் சொத்தனைத்தும் உனக்கு!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 25
- பேரா.நா.வா.நினைவு கலைஇலக்கிய முகாம்,கன்னியாகுமரி