ஜீவ ஆனந்தம்
விஷ்ணுபுரம் நாவல் குறித்து எழுதப்பட்ட கோ ராஜராமின் குறிப்பில் நுட்பமான விஷமத்தனம் காணப்பட்டது. கருத்துக்களை சொல்லும்போதிங்கு யாருமே அதன் முக்கியத்துவத்தை பார்ப்பதில்லை .மாறாக அதை சொல்வது யார் என்பதே எல்லாருக்கும் கவனமாக உள்ளது .ஆயினும் சும்மாயிருப்பது கஷ்டமாகவுமுள்ளது. ஒரு விஷயம் ஆறுதலளிப்பது, மேடையிலானாலும் எழுத்திலானாலும் விஷ்ணுப்புரம் நாவல் குறித்து யார் கவனமில்லாமல் பேசினாலும் உள்நோக்கத்துடன் பேசினாலும் யாராவது ஒருவர் உடனடியாக அப்போதே பதில் சொல்லிவிடுகிறார். சமீபத்திலே மதுரையில் மதுக்க்கூர் ராமலிங்கம் என்பவர் அஇப்படி பேசியபோது உடனே மறுப்பு வந்ததனைக் கண்டேன்.
விஷ்ணுபுரம் நாவல் வந்தது முதலே அதனைப்பற்றி பலவகையான கருத்துக்கள் வந்தபடியே உள்ளன.அந்நாவலைப்பற்றி கேள்விப்படும் வரை நான் ஜெயமோகனைப்பற்றி அறியேன் .முதலில் ஒரு அறிவுஜீவி நாவல் என்றும் பத்து பக்கம் கூட படிக்கமுடியாது என்றும் சொன்னார்கள் .பிறகு அது ஒரு வகுப்புவாத வெறி பிடித்த நாவல் என்று சொன்னார்கள் .பிறகு அதை மாதிரி நாவல்கள் மலையாளத்திலே சகஜமானவை என்றும் அதை எதையோ ஜெயமோகன் சுட்டிருக்கிறார் என்றார்கள். பிறகு அது வாசக அங்கீகாரம் பெற்ற பிறகு அது ஒரு வணிக நாவல் , இலக்கியமேயில்லை என்கிறார்கள் .அது புராண நாவல் ஆனதனால்தான் ஆங்கில நாவலின் தழுவல் என்று சொல்லவில்லை.
தற்போது வணிக நாவல் என்று சொல்லபடுவதற்கு காரணம் அதன் விற்பனைதான். சென்னை புத்தகக் கண்காட்சியிலே புதுமைப்பித்தன் கதைகளுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்கப்பட்ட நூல் அதுதான் என்றார்கள்.கோராஜாராம் அவர்களின் கருத்தும் அதை ஒட்டி அந்நாவலை மட்டம்தட்ட செய்யப்பட்ட முயற்சியாகும்.தமிழ் வணிக எழுத்தாளர்கள் அதை எழுதியிருப்பார்கள் என்று சொல்வது அபத்தமான பேச்சு. யார் எழுதும் தகுதியுள்ளவர்கள் ?தமிழின் சோதனை நாவலாசிரியர்களை விட பெரும்பாலான வணிக எழுத்தாளர்களுக்கு தமிழ் தெரியும் ,கதையை ஒழுங்கான முறையிலே சொல்லத் தெரியும் என்று சொல்லுங்கள் அது சரி.பாதிப்பேர் ஒழுங்காக எழுதத்தெரியாத காரணத்தால்தான் சோதனை செய்கிறார்கள் என்றாலும் அதில் தவறில்லை .
தமிழிலே எந்த நாவலாசிரியன் விஷ்ணுபுரத்துக்கு சமானமான நுட்பமாக ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த பெரிய வடிவத்தை ஓரளவுக்கேனும் உருவாக்கியுள்ளான் ?விஷ்ணுபுரத்திலே நேரடியான கதை சொல்லும் உத்தி உள்ளது என்பதனால் கோ. ராஜாராம் அவர்களாலிது சொல்லப் படுகிறதா என்ன ? உலகிலே முக்கால் வீசம் நாவல்கள் நேரடியான கதை சொல்லும் உத்தி உடையவைதானே ?[சரி நேம் ஆப் த ரோஸ் எப்படிப்பட்ட நடையில் சொல்லபட்டது ?] விஷ்ணுபுரத்திலே நேரடிக் கதைக்குள்ளே நனவோடை ஓட்டங்கள் உண்டு. நீண்ட தனிக்கூற்றுகளுண்டு .அருவமான சித்தரிப்புகள் குறியீடுகள் முதலியனவுமுண்டு. கவித்துவம் நிரம்பின கட்டங்கள் உண்டு கூடவே அங்கத்ச்சுவை மேலோங்கிய கட்டங்களுமுண்டு .
கோ ராஜாராம் அவர்களின் கூற்று அந்நாவலின் நுண்ணிய தளங்களை கவனத்தில் கொள்ளாமல் சொல்லப்பட்ட ஒரு மேலோட்டமான கூற்றாகும். உதாரணமாக தாந்திரீக முறையிலே ஆர்வம் உடைய ஒரு கதாபாத்திரம் மலைமீது ஏறி ஒரு குகைக் கோவிலை பார்க்குமிடம் நாவலிலே மூன்றாம் பகுதியிலே வருகின்றது. அங்கு காரிருளிலே ஒரு நிர்வாண அழகியின் ஓவியமும் பசித்த புலியுமுள்ளது. அவற்றை ஓர் அரிய குறியீடாக காட்டுகின்றது நாவல்.மிகுந்த கவித்துவமுள்ள அந்த தருணத்தை ஒரு சாதாரண வாசகன் வெறும் மர்மக் கதைபோல படித்துச் சென்றுவிடலாம் .அவன் அவ்வாறு மொத்த விஷ்ணுபுரத்தையே ஒரு கல்கிக் கதையாக வாசிக்க முடியும் .
புராண பாரம்பரியத்திலும், ஃ போக் பாரம்பரியத்திலுமுள்ள நுட்பமான குறியீடுகளால் உருவாக்கப்பட்ட கவித்துவம் தான் விஷ்ணுபுரத்தின் சிறப்பு.அதை தமிழில் எவரும் அதற்கு முன்னர் அடைந்ததோ முயன்று பார்த்ததோ கிடையாது. அதற்கு ஆழமான படிப்பும் கற்பனை சக்தியும் மட்டுமல்ல நவீன மரபு குறித்த பார்வையும் தேவை.
தெரியாமல் கேட்கிறேன்.நம்மில் ஒருவர் நல்ல ஒரு நாவலை எழுதிவிடவே கூடாதா ? அதை படிக்கலாம்,விமரிசிக்கலாம்.அதற்கு நமக்கு உரிமை உண்டு.ஆனால் ஏன் நாம் அதை மட்டம் தட்டவும் அவரது சாதனைகளை குறைத்துக் காட்டவும் மட்டும் முயன்ற படியேயிஇருக்கிறோம்.நம்முடைய மன அமைபில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்ன ? விஷ்ணுபுரத்தை குறித்து எனக்கும் ஏராளமான விமரிசனங்கள் உண்டு .சில பிழைகளும் கண்டதுண்டு.ஆனால் எங்குமே அந்நாவலை மட்டப் படுத்தும் முயற்சிகளை மட்டுமே காணும்போது வெறு வழியில்லாமல் சிறப்புகளை மட்டுமே சொல்ல வேண்டியுள்ளது.
***
- இவள் யாரோ ?
- பனி பொழுதில்…
- வழித்துணை
- சொன்னார்கள்
- இந்திய நரகம்
- திரைப்பட விமர்சனம் – பம்மல் கே சம்பந்தம்
- விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்.
- விஷ்ணுபுரம் பற்றி கோ ராஜாராமின் கருத்துக்கள் பற்றி…
- ஆப்பிள் சாஸ்
- வானலைத் தொடர்பு வல்லுநர் மார்க்கோனி
- ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம்
- ‘புது மரபு ‘
- காண்பமோ வன்னி மண்ணில் வசந்தமே.
- ஒத்திகைகள்
- நண்பா…..
- வெற்றிடம்
- காத்திருக்க வேண்டுமன்றோ
- குட்டாஸ்
- மன்னிப்பே தண்டனை…
- முடிக்கக் கூடாத கவிதை
- மலேசிய தமிழ் பள்ளிக்கூடங்களின் மோசமான நிலைமை
- சூத்திர பார்ப்பனர்களும், பார்ப்பன சூத்திரர்களும்
- இந்த வாரம் இப்படி – பிப்ரவரி 3- 2002
- இந்தியாவின் மெதுவான நிலையான பொருளாதார முன்னேற்றம்.
- ரத்தமும் சோகமும் பெருகிய இந்தோனேஷியாவின் வருடம் 2001
- நிறையக் கடவுள்கள் கொண்ட ஓர் அமைதித் தீவு – பாலி
- என் தமிழ் திரைப்பட ரசனையும் தங்கர் பச்சானின் அழகியும்
- வழித்துணைவன்
- ஒரு நாள் கழிந்தது