விழித்திருப்பவனின் இரவு

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

ரஸஞானி


பாபா, பீமா, சண்டக்கோழி, உன்னாலே உன்னாலே முதலான திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர், சில நாவல்கள், பல சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள் எழுதியவர் மேலைத்தேய இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் அறிமுகப்படுத்தியவர், யாத்ரீகனாக மாநகரம்- நகரம்- கிராமம்- காடு- மலை- சோலை- கடல்- நதிக்கரையோரம் என அலைந்து உள்ளமும் உணர்வும் உள்வாங்கியவற்றை இலக்கிய நயமுடன் இதழ்களில் பதிவு செய்து வருபவர் இன்றைய தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனத்தைப்பெற்ற எஸ். ராமகிருஷ்ணன்.
இலக்கியவாதிகள் விழித்திருக்கவேண்டும். விழித்திருந்தால்தான் விருப்பு- வெறுப்பற்று மாற்றுக்கருத்துக்கொண்டவர்களின் படைப்புகளையும் ரஸிக்கும் நயக்கும் மனோபாவம் வளரும் என்பதை போதனையாகக் கூறாமல், எழுத்துப்பணியூடாகவே உணர்த்திவருபவர் ராமகிருஷ்ணன்.
உயிர்மை இதழில் தொடர்ச்சியாக – சுமார் ஒன்றரை வருடம்- அவர் எழுதிய உலகில் சிறந்த எழுத்தாளர்களைப்பற்றிய அறிமுகம்- அவர்களின் படைப்பாளுமை குறித்த மதிப்பீடுகளின் தொகுப்பு நூல்தான் விழித்திருப்பவனின் இரவு.
இந்த ஆண்டின் (2008) தொடக்கத்தில் சென்னையில் நடந்த புத்தகச்சந்தையில் நான் வாங்கிய பல புத்தகங்களில் ஒன்று ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு.
ஊயிர்மை பதிப்பக வெளியீடு.
விளாதிமிர் நபகோவ், ஜோர்ஜ் லூயி போர்ஹே, கார்லோஸ் புயண்டஸ், ஹென்றி டேவிட் தோரோ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், அன்னா அக்மதோவா, ஆன் சேக்ஸ்டன், பிடெரிகோ கார்சியா லோர்கா. வர்ஜீனியா வுல்ப், ஜோசப் கான்ராட், கோபோ அபே, பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, மிலோராட் பாவிக், ராபர்டோ கலாசோ, எர்னெஸ்ட் ஹெமிங்வே, பாப்லோ நெருதா, ஆக்டோவியா பாஸ், யுகியோ மிஷிமா, லூயி கரோல்,
சில்வியா பிலாத், மிலான் குந்தேரா, சர். ரிச்சர்ட் பர்ட்டன், ஹெர்மன் மெல்வில், பிராம் ஸ்டாகர், ஜே.ஆர்.ஆர். டோல்கின், ஜோஸ் சரமாகோ, ஜே.எம். கூட்ஸி, ஓரான் பாமுக்.
இத்தனைபேரினதும் படைப்புகளையும் வாழ்க்கைச்சரிதத்தையும் நூலகங்களிலிருந்தும் இணையத்தளங்களிலும் தேடிப்பெற்று தான் உள்வாங்கிக்கொண்டவற்றை நயமுடன் பகிர்ந்தளித்திருக்கிறார் ராமகிருஷ்ணன்.
தீவிரவாசகனாக இருந்தால் மாத்திரம் இந்த அரிய பணி சாத்தியமல்ல. தொடர்ச்சியான தேர்ந்த வாசிப்புடன், பெற்றுக்கொண்டதை தகுந்தமுறையில் வாசகர்களுக்கு எளிய நடையில் அறிமுகப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட உழைப்பு மகத்தானது.
தமிழ் வாசகர்களில் – எழுத்தாளர்களில் எத்தனைபேர் மேலே குறிப்பிடப்பட்டவர்களைப்பற்றி அறிந்திருக்கின்றோம் என்பது கசப்பான கேள்விதான்.
இந்தத்தொடரை ராமகிருஷ்ணன் எழுதியதற்கான நோக்கம் என்ன? என்பதைப்பார்ப்போம். அவரே சொல்கிறார்:-
வாழ்வு தரும் நெருக்கடிகளைத் தாண்டி சாகசத்தை தன் வாழ்வுமுறையாகக் கொள்வதும், கதை, கவிதை போன்ற தனது படைப்பிலக்கிய முயற்சிகளுக்கு வெளியில் அரசியல், சமூக, கலாச்சாரத்தளங்களில் தீவிர செயல்பாடு புரிவதும், இயற்கையின் நெடும்பாதையில் அலைந்து திரிவதும் என உலகம் முழுவதும் எழுத்தாளர்கள் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்துவருகிறார்கள்.
தமிழில் எழுத்தாளன் பெரும்பாலும் தன்னைச்சுற்றிய உலகை அறிந்துகொள்ளவும் அதன் சமூகக் கலாச்சாரச் செயல்பாடுகளில் பங்குகொள்ளவும் விருப்பமற்ற மத்தியதர மனப்பாங்கு கொண்டவனாகவே இருக்கிறான். அவனது வாழ்வு அலுவலகம், வீடு என்ற இரண்டு கரைகளுக்குள் ஒடுங்கிக்கிடக்கிறது. அதன் வெளிப்பாடு படைப்பிலக்கியத்தில் ஒரு சவலைத்தனத்தை ஏற்படுத்துகிறது.
சமகால உலக இலக்கியத்தின் இயங்குதளம் குறித்தும், இலக்கியம் தவிர்த்து பிற துறைகளில் எழுத்தாளர்களின் ஈடுபாடும் பங்களிப்பும் எப்படியுள்ளது என்பதை முதன்மைப்படுத்தி அதன் வழியே எழுத்தாளனின் ஆளுமையை அறிந்துகொள்ள முயற்சித்ததின் விளைவே இக்கட்டுரைகள். காலம் காலமாக எழுத்தாளனின் வாழ்வு எத்தனை தீவிரமும் சவாலும் நிரம்பியது என்பதை இக்கட்டுரைகள் விரிவாக விளக்குகின்றன.
அதியுர்விருதான நோபல் பரிசு பெற்றவர்களும்- மனச்சிதைவினாலும் வீர சாகசத்தினாலும் தற்கொலை செய்துகொண்டவர்களுமான ஆண்-பெண் இருபாலரும் இத்தொடரில் இடம்பெறுகின்றனர்.
அவர்களின் எழுத்தூழியத்துக்கும் அப்பால் அவர்களிடமிருந்த விந்தையான இயல்புகளும் வாசகர்களுக்குத் தெரியவருகின்றது.
எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்வைப்பார்க்காதீர்கள், அவர்களின் படைப்புகளை மாத்திரம் வாசியுங்கள்.- என்ற குரலும் அவ்வப்போது ஒலிக்கத்தான்செய்கிறது. இந்த வாதத்திற்கு, மரத்தைப்பாருங்கள் அதில் பூக்கும் மலர்களையும் காய்க்கும் கனிகளையும் பாருங்கள், வேரை மாத்திரம் பார்க்கத்துணியாதீர்கள். அப்படித்துணிந்தால் மரம்தான் பட்டுப்போகும். என்று வாதிடுபவர்களும் இலங்கை-தமிழக இலக்கியச்சூழலில் நடமாடுகிறார்கள்.
சில கட்டுரைகளைப்படிக்கும்போது நெகிழ்ச்சியும் சிலிர்ப்பும் அதிர்ச்சியும் வருகிறது.
எழுத்தாளர்கள் தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டுகிறது.
அந்த ஆளுமைகளிடமிருந்து முன்னுதாரணங்களை நாடச்செய்கிறது.
ஆக்கஇலக்கியவாதிகள் மட்டுமன்றி பத்திரிகையாளர்களும் வானொலி- தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்களும் இக்கட்டுரைகளில் விரவியிருக்கின்றன.
பத்திரிகையாளரும் நாவலாசிரியரும் பிடல் காஸ்ரோவின் நண்பரும் நோபல் பரிசு பெற்றவருமான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய ஒரு நூற்றாண்டு காலத் தனிமை
என்ற நாவல் இதுவரையில் 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நான்கு கோடிகளுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது என்ற தகவல் வியப்பளிக்கிறது.
பத்திரிகையாளருக்கான ஒரு பயிலரங்கில் மார்க்வெஸ் உரையாற்றுகையில்,-
“ டேப்ரிகார்டர்தான் ஒரு பத்திரிகையாளனின் முதல் எதிரி. அது ஒரு சாத்தான். சொன்னதைத் திரும்பச்சொல்லும் இயந்திரக்கிளி.”- என்றும் “பத்திரிகையாளனுக்குத்தேவை
யானவை குறிப்பு எழுதுவதற்கான சிறிய நோட்டும், எதையும் கூர்மையாகக் கேட்டு உள்வாங்கிக்கொள்ளும் காதுகளும் செய்திகளின் பின் உள்ள உண்மையை அறிந்துகொள்வதற்கான விடாப்பிடியான ஆர்வமும்தான்”- என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
காளைச்சண்டையை ஆர்வமுடன் பார்த்து அனுபவத்தை இலக்கியமாக்கிய நோபல் பரிசுபெற்ற எழுத்தாளரான எர்னெஸ்ட் ஹெமிங்வே தமது தந்தையைப்போலவே துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுத்தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
இத்தனைக்கும் போர்முனைகளில் சாவோடு போராடிய ஒரு இராணுவவீரர் அவர்.
தகவல் களஞ்சியமாக மட்டுமன்றி இலக்கியநயம் மிக்க கட்டுரைகளாகவும்
விழித்திருப்பவனின் இரவு நூல் மிளிர்கிறது.
நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப்பற்றி இந்த நூல் பேசுகிறது என்ற உயிர்மைப் பதிப்பகத்தின் கூற்று அழுத்தமான பதிவுதான்.
உதயம்
—0—

Series Navigation

ரஸஞானி

ரஸஞானி