நக்கீரர்
வாழ்க நீ, என் தோழி
நிறைய வரும் என் கனவுகளும் இனியவை
சித்திரங்கள் வரைந்த என் வீட்டிலே, நனவிலே எனக்கு வரும் சகுனங்களும் இனியவை
என் மனத்தில் தோன்றும் எண்ணங்களும் இனியவை
மழை பெய்யும் மேகங்கள் போய்விட்ட ஆகாயத்தில்
சிறுமுயலை தன் மார்பிலே கொண்ட சந்திரன்.
***
ரோகிணி நட்சத்திரம் அவனுடன் இணைந்து நிற்கிறது இந்த இரவில்.
***
ஆம் இன்று திருக்கார்த்திகைத் திருநாள்.
***
பழமையே பெருமையாகக் கொண்ட நம் மூதூர் ஊரிலே,
***
வீதிகளில் விளக்குகள் வைத்து,
வீடுகளில் மாலைகள் போட்டு
எல்லோரும் கொண்டாடும் விழாவில்,
என்னுடன் இருப்பானோ என்னவன் ?
***
நன்றாய்த் துவட்டி நறுமலர் புனைந்து
சாந்து மணக்கும் குளிர்ந்த கூந்தலுடைய
புதுமணப்பெண் உணவு மிகுந்த திருமணவீட்டில்
பலபக்கமுள்ள அடுப்பில் பால் உலை வைக்கிறாள்
***
பெரும் கூந்தலும் சிறு இடையுமுள்ள பெண்கள்
பெரும் வயல் நெல்லின் வளைகதிர் முறித்து
நொறுங்க அவல் இடிக்கும் இருண்ட வைரம் பாய்ந்த உலக்கையின்
கடிய இடிக்கு முதிர்ந்த வெண் குருத்து
கூரிய குலை கொண்ட வாழையின் ஓங்கிய இலை தவறி
நெடிய மாமரத்தின் கீழே சின்னதாக பறந்து சென்று தங்கும்
இடையாற்று மங்களத்தில் கெட்ட குடியை தூக்கி நிறுத்த
பெரும்பேர் கரிகால் பெருவளத்தான் கடும் போர் புரிந்து பெற்ற
நல்ல செல்வத்தை போல் தாமும் கொண்டுவருவதற்காக
மலைப்புலிபோல் வண்ணமும் புள்ளிகளும் கொண்ட பூக்கள் இடையே
பெரிய கொம்பு இருக்கும் நாரத்தை மரத்தின் அன்று பூத்த மணமுள்ள மலர்கள் உதிரும்படி
ஆண்குரங்குகள் பாய்ந்து துள்ளும் வேங்கை மரங்கள் நிறைந்த
தேன் கமழும் நெடிய மலைகள் இருக்கும் வேங்கடக் கோட்டத்தின் பக்கமுள்ள
ஊர்களுக்கு சென்றிருக்கிறான் என்னவன்.
அகநானூறு 141.
கவிஞர் : நக்கீரர்.
திணை : பாலை
துறை : ‘பிரிவிடை ஆற்றாள் ‘ என்று சொன்ன தோழிக்குக் கிழத்தி உரைத்தது
சிறப்பு : செல்வச் செழுமை மிக்க கரிகால் வளவனது இடையாறு என்ற இடமும், வேங்கடச்சிறப்பும், கார்த்திகை விழாவும்
20ஆம் நூற்றாண்டு தமிழ் மொழிபெயர்ப்பு : துக்காராம் கோபால்ராவ்