விளக்கி, விளக்கித் தேய்ந்தன விரல்கள்

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

மலர் மன்னன்


சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்வதில் எனக்கே சலிப்பாயிருக்கிறது. படிக்கிறவர்களுக்கு எரிச்சலாகவே இருக்குந்தான். என்ன செய்ய, திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான குறை கூறப்படுகிறதே!

திண்ணையில் நான் எழுதத் தொடங்கியபோதே என்னுடைய நிலைப்பாடுபற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஒரு யூகம்போல் வெளிப்பட்டு, பூசிமெழுகாமல் அதனை வெளிப்படையாகத் தெரிவித்துக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயம் எனக்கு ஏற்பட்டமைக்குத் திண்ணையோ, நானோவா பொறுப்பு ? அதைத் தொடர்ந்து வந்த எதிர்வினைகள் மேலும் மேலும் எனது நிலைப்பாட்டைச் சார்ந்து எழுதிச் செல்ல வேண்டிய கட்டாயத்தை எனக்கு ஏற்படுத்தினவேயண்றி, நானாகவேயா அவ்வாறாக எழுத முற்பட்டேன் ?

எனக்குச் சரியென்றுபடும் கருத்துகளைச் சொல்ல வாய்ப்பளிக்குமாறு எதிர்வினைகள் ஒன்றுக்குள்ளேயிருந்து ஒன்றாக வெளிப்பட்டதில் எனக்கு மெத்த மகிழ்ச்சியே எனினும் சமகாலப் பதிவுகளுக்கான எனது திட்டங்களை இது எவ்வளவு தூரம் இடைமறிக்கும் என்பது, திட்டமிட்டு விவரங்களை வகைப்படுத்திக்கொண்டு எழுதும் வேலைமுறையும், கட்டாயமும் உள்ள பயிற்சிபெற்ற பத்திரிகையாளருக்குத்தான் புரியும். எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்ததும் வேறாகிப்போயிருப்பதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டத் தவறவில்லையே! அதன்பின்னும் என்மேல் ஏன் கோபம் ?

காந்தியையும் கோட்ஸேயையும் புருஷோத்தமர் குருஜியையும் பற்றி எழுத இடந் தேடி நானா காத்திருந்தேன் ? ஏதோ என்னை மடக்கி விட்டதாக நினைத்துக் கொண்டு எதிர்வினை செய்யத் தொடங்கியவர்களை யல்லவா குறுக்கு விசாரணை செய்ய வேண்டும், ஏனப்பா அவர் வாயைக் கிளறி எங்களையெல்லாம் வாங்கிக் கட்டிக் கொள்ளச் செய்கிறாய் என்று!

என் இளமைக் காலந்தொட்டே நான் பல சச்சரவுகளில் சம்பந்தப்பட்டுப் போனவன்தான். விரைவில் உணர்ச்சிவசப்பட்டுவிடும் இயல்பினரான வங்காளிகளுடன் கலந்துறவாடி, அவர்களின் சொந்த மாநிலத்திலேயே வாழ நேரிட்டதன் பலன்! இந்தச் சச்சரவுகள் போலீஸ் வரை போய்விடும், பெரும்பாலும். ‘நீங்கள் உடம்பைக் காயப்படுத்திக் கொண்டு வாருங்கள், வழக்குப் பதிவு செய்கிறோம் ‘ என்பார்கள் காவல் நிலையத்தில். அதாவது அவர்கள் வழக்குப் பதிவு செய்வதற்காக நான் அடிபட வேண்டும்! சரியாகச் சொன்னார், சிவக்குமார், எதிர்வினையாளரின் தரத்தை எடைபோட வேண்டும் என்பதற்காக நாங்கள் ஏன் வசைமாரியில் நனைய வேண்டும் என்று! ஒரு விதத்தில் இது அய்யம்பேட்டை பாய்கள் வாய்க்கால் கரையில் சாதுவாக சந்தியாவந்தனம் செய்யும் அய்யர்மாரை வம்புக்கிழுக்கிற சமாசாரமாகவும் அல்லவா இருக்கிறது ?

குழாயடிச் சண்டையில் இறங்கி, ஒரு கண்ணியமான களத்தைச் சேதப்படுத்தவேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டால் அதற்கும் ஒரு கேலி, கிண்டல்! நானா பொய் சொல்கிறேன், கற்றுக்குட்டியே, கதையா அளக்கிறேன் அரை வேக்காடே என்றெல்லாம் பதிலுக்கு பதில் நானும் இறங்கவேண்டும், அந்தக் கோழிச் சண்டையைச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், மன்னிக்க வேண்டும், நான் அதற்கு ஆளில்லை. நான் ஈடுபடும் சச்சரவுகள் அடிப்படையிலேயே வித்தியாசமானவை. திண்ணையின் கண்ணியம் குறைய நானும் காரணமாயிருக்க விரும்பவில்லை என வெளிப்படையாகக் கூறி ஒதுங்கினேனாகில் அதுவும் தலைக்கனம் என வர்ணிக்கப்படும் என்றுதான் வருத்தம் தெரிவித்து விலகிக் கொண்டால் அதற்கும் ஒரு பரிகாசம்! கடந்த பல தலைமுறைகளாக அரசியல், கலை, இலக்கியம், சமூகம் எனப் பொருள் எதுவாக இருப்பினும் அரட்டைக் கச்சேரியாகவும் பட்டிமன்றமாகவுமே நடத்த்ி, நடத்தி எமது தமிழ்ச் சாதி விவஸ்தை கெட்டுப் போயிற்று போலும்.

மேலும் வெட்டிப் பொழுது போக்கிற்காக எழுதி அறியேன். வாதம் செய்வதற்காக எதிர் வாதம் செய்தும் பழகியதில்லை. திடாரென இப்படியானதொரு சூழலில் வந்து நின்றதில் கொஞ்சம் திகைத்துத்தான் போனேன். ‘இப்போதெல்லாம் இங்கே இதுதான் வழக்கம். முகத்தில் விழுந்த எச்சிலைத் துடைத்துக் கொண்டு தொடருங்கள் ‘ என்று சிலர் புத்திமதி சொன்னார்கள். சரியாகத்தான் சொன்னார் சிவக்குமார், உங்கள் பொழுது போக்கிற்காக என் முகத்தில் எதற்கு எச்சில் என்று! எனக்குக் கூட அப்படிக் கேட்கத் தோன்றவில்லை, ஆடு மாதிரி வந்து நிற்கிறேன்!

நான் ஏதோ தலித்துகளின் கொடும் பகைவன் என்கிற மாதிரி என்னை மிகவும் ஆக்ரோஷத்தோடு விமர்சித்த எதிர்வினையாளர் பற்றி உள்ளூர எனக்கு மிகவும் மகிழ்ச்சி, பரவாயில்லையே, இந்த அளவுக்கு விசுவாசத்துடன் தலித்துகளின் நலனில் அக்கரை காட்டுபவரும் இருக்கிறாரே என்று. ஏனெனில் தமிழ் நாட்டிற்கே தலைக் குனிவைத் தந்து கொண்டிருக்கிற பாப்பாபட்டி, கீரிப்பட்டி விவகாரத்தில் ஏதாவது உருப்படியாகச் செய்யவேண்டும் என்கிற ஆதங்கம் எனக்கு இருந்து வருகிறது. சரி, நமக்கு வழி காட்ட உறுதி வாய்ந்த ஒருவர் வந்துள்ளார் என மகிழ்ந்தேன். நாம் அங்கு போய் உண்ணாவிரதம் இருப்போம் வருகிறீர்களா என்று கேட்டேன். சட்டை அழுக்குப் பட விரும்பாதவன்தான் உண்ணாவிரதம் இருப்பான். செத்தால் சிலை வேண்டுமானால் வைப்பார்கள், வேறென்ன லாபம் என்றார். இதற்கெல்லாம் வீறு கொண்டு எழப்பண்ணி, புரட்சிகரமான பாதையில் போனால்தான் சரிப்படும் என்றார். சகோதரரேயாயினும் அவரிடத்தும் ஹிம்சையே வழியென்றிருப்போர்கூட வெகு ஜன அப்ிப்பிராயத்தைத் தோற்றுவிப்பதற்காகத் தம்மில் ஒரு சகாவை உண்ணாவிரதமிருக்கச் செய்ததால் நாமும் அம்மாதிரியான அபிப்பிராயத்தைத் தோற்றுவிக்கலாமென்றுதான் உண்ணாவிரத யோசனையைச் சொன்னேன். அவரோ இளமைக்கே உரித்தான வெகு துடிப்புடன் அதனிலும் தீவிரமான கருத்தைச் சொன்னார். எனக்கும் நாற்சந்தியில் காகங்களின் வசதியான கழிப்பறையாக இருப்பதில் அப்படியொன்றும் விருப்பம் இல்லை என்பதாலும், அவர் காலத்திற்கேற்பச் சிந்திக்க வல்ல இளைய தலைமுறையினராதலால் அவர் சொல்வது சரியாகவே இருக்கும் என்ற நம்பிக்கையிலும், என்னை வழிநடத்திச் செல்லுமாறு கேட்டுக் கொண்டேன். வருகிற மே மாதத்திற்குள் இப்போது ஈடுபட்டுள்ள வேலைகளை முடித்துக்கொண்டு தயாராக இருப்பேன் என்றும் அவர் வசதிப்படி புறப்படலாம் என்றும் சொன்னேன். ஆனால் அதன்பின் அவரிடமிருந்து ஏனோ தகவல் ஏதுமில்லை. ஒருவேளை நன்கு திட்டமிட்டு வெற்றி தரக்கூடிய போராட்டக் களம் அமைப்பது பற்றி யோசிக்கிறாராயிருக்கும்; நியாயந்தானே. பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வருமாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் யோசிப்பதற்கு நிறைய அவகாசம் தேவைதான். எப்படியும் மே மாதத்திற்குள் சரியான போராட்டத் திட்டத்தை வகுத்துத் தந்து என்னை பாப்பாபட்டி-கீரிப்பட்டிக்கு அழைத்துச் செல்வார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

இதற்கிடையில் இப்போது இங்கெல்லாம் பொய் சொல்கிறான், கதை அளாக்கிறான் என்றெல்லாம் எதிர் வாதம் செய்வதுதான் வழக்கம், இதற்கே சோர்ந்துவிட்டால் எப்படி, போகப் போக இன்னும் என்னவெல்லாமோ வரும், அதனால் என்ன, தோலை கெட்டிப் படுத்திக்கொள், எழுதுவதுதான் உன் வேலை, எழுது, எழுது, நிறுத்தாதே என்று ஒரு பக்கம், ஏன் வந்தாய் திரும்பவும் திண்ணைக்கு ராப்பிச்சைக்காரா, வேறு வீடு பார், மற்ற வீடுகளில் கதவைச் சாத்திக் கொண்டார்கள் என்பதால் இது திறந்தே இருக்கிற வீடு என இங்கு வந்து நின்றாயா, போய்ச் சேர், என்று ஒரு பக்கம்! நல்ல கூத்துதான் அய்யா, நமது தமிழ்ச் சிந்தனைக் களத்தின் இன்றைய போக்கு!

நடுவே இ. பா. மாதிரியான மார்க்சீய சிந்தனைப் போக்காளர்கள் வேறு, அவர் தங்க விரும்பிய விடுதியும், அவர் எழுத வேண்டியிருந்த ஆய்வும் ஏதோ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் மாதிரியும் அதில் நான் தவறான தகவல் தந்துவிட்ட மாதிரி பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று நிகழ்வுகளிலும் தவறான தகவல்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக் காட்ட!

நான் இப்போது இல்லாதவர்கள் பற்றியே சொல்கிறேன், அவர்கள் வந்து மறுக்க மாட்டார்கள் என்கிற தைரியத்தில் என்கிறார் ஒருவர்! மேலும், இப்படி என்னால் சொல்லப்படுகிறவர்கள் எல்லாம் முக்கியஸ்தர்களாம்: பெருமையடித்துக் கொள்வதற்காக அவர்கள் பெயர்களையெல்லாம் சொல்கிறேனாம். சரி, அப்படியே எண்ணம் எவருக்கேனும் வந்தாலும் அதை வெளியிடுவதற்கு பாஷையா இல்லை ? பொய்யன், கதை அளப்பவன் என்றெல்லாம் முத்திரை குத்துவதுதான் சந்தேகத்தைத் தெரிவிக்கும் முறையா ?

அரவிந்தனைத் தவிர வேறு யாரும் சாட்சிக்கு வரவில்லையாம், நான் உதிர்த்த பெயர்களிலிருந்து (அரவிந்தன் பெயரை நான் சொல்லவே இல்லை என்பது வேறு விஷயம்). அரவிந்தன் இப்போது என் செல்லக் குழந்தை, அறிமுகம் என்னவோ திண்ணையின் மூலமாகத்தான் என்றாலும். அப்பாவின் மீது அபாண்டமா என்று அந்தக் குழந்தை துடித்துக் கொண்டு வந்துவிட்டது, மற்றவர்களுக்கு என்ன அக்கரை என் மீது சகதி எறியப்பட்டால் ? அவர்கள் ஏன் வரவேண்டும் சாட்சி சொல்ல ? சந்தேகம் உள்ளவர்கள் போய்க் கேட்டுக் கொள்ளட்டுமே முடிந்தால் என்று தான் பெயர்களைச் சொன்னேன்.

சா.கந்தசாமியிடம் போய்க் கேட்கட்டுமே, மலர்மன்னனா, ஆர். எம். வீரப்பனையே நிற்கவைத்து, தான் உட்கார்ந்துகொண்டு பேசிய கொழுப்புப் பிடித்தவன் என்று கூடச் சொன்னாலும் சொல்லுவான், தான் பார்த்த ஒரு சந்தர்ப்பத்தின் நினைவாக! (கந்தசாமியை அவர் என்று சொல்ல இயலாத அளவுக்கு நெருக்கமாகப் பழகிவிட்டிருக்கிறேன்; கந்தசாமிக்கும் என்னை அவ்வாறு குறிப்பிட அவசியமில்லாத அளவுக்கு உரிமை உண்டு!)

நட்பு என்பது இருவருக்கிடையிலான ஒரு நுட்பமான விஷயந்தான், மற்றவர்களுக்கு அதன் ஆழம் தெரிய வேண்டிய அவசியமே இல்லைதான். ஆனால் என்ன செய்ய, இந்த இங்கிதம் எல்லாம் வேண்டாதன ஆகிவிட்டிருகின்றனவே நம் தமிழ்ச் சூழலில்! நண்பர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் இயன்ற உதவிகளைச் செய்து கொள்வதற்கு கொள்கை வேறுபாடு தடையாக இருப்பதில்லலை என்பதை உணர்த்துவதற்காகத்தான் இ.பா. விஷயத்தைக் குறிப்பிட்டேன். அவர்தான் இருக்கிறாரே, ஆமாம், என்று சொல்லக் கூடுமே என்று (அவருக்கு வேண்டியிருந்தது ஒரு கவுரவமான தங்குமிடம்; அது யாருக்கான விடுதி என்பதெல்லாமா என் கவனத்தில் இருக்கும் ? இப்பொழுது அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் மிக மிக கவுரவமான இடந்தான் போலிருக்கிறது, தாமோதரனிடம் கேட்டுப் பெற்றது! அதேபோல் முனைவர் பட்டம் அவசியப்படுகிறது, ராமானுஜர், வைணவம் என்றெல்லாம் விவரித்தார்; வைணவம் என்று ஒரு பிரிவு தனிப்பட்ட சாதிபோல் உருவானதே ராமானுஜரால்தானே! அவருடைய தகப்பனர் பெயரே சாட்சி சொல்லுமே! ஆகவே எந்தத் தலைப்பில் ஆய்வு என்பதை வெகு ஸ்பஷ்டமாகச் சொல்லத் தவறியது அப்படியென்ன ஒரு பெரும் பிழையான தகவலா ? ராமானுஜர் என்றால் அது வைணவத்திற்கான ஆய்வுதானே, ராமானுஜரின் அந்தரங்கச் சொந்த விஷயங்களையா முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்வார்கள் ?).

இ.பா. தம்மை இடதுசாரிப் போக்குள்ளவர் என்று தெரிவித்துக் கொள்பவர் என்றாலும் எமக்குள் நட்பு என்கிற பிணைப்பில் ஒருவருக்கொருவர் இயன்ற உதவிகளைச் செய்வது இயல்புதான்(இன்றைய தமிழக இளந் தலைமுறையினர் தி.மு.க., அ.தி.மு.க நடைமுறைகளைப் பார்த்துவிட்டு எதிர் அணியெனில் ஒருவரையொருவர் கண்ணால் பார்த்துக் கொள்வதும் தீது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்களா என்ன ?)

இதே அடிப்படையில்தான் சு.ரா வும் எனக்கு இடமளித்தார், நான் தடையின்றி எனக்குச் சரியென்று பட்ட குற்றவியல் சம்பந்தப்படாத பணிகளைச் செய்ய என்பதைச் சுட்டுவதற்காகத்தான் இ.பா. வைக் குறிப்பிட நேர்ந்தது, அதுவுங்கூட, அவர் நான் எழுதிய ஒரு விஷயம் அனாவசியமானது என்கிற தொனியில் எழுதியதைப் படித்தவுடன் உடனடியாக அவர் சம்பந்தப்பட்ட விஷயம் நினைவுக்கு வந்ததால்தான்.

நாகர்கோவிலில் எனக்கு என்ன தங்குவதற்கு இடமா இல்லை ? சந்தேகம் வராத இடத்தில் தங்க வேண்டும் என்பதால் அல்லவா நண்பர் சு.ரா. வீட்டைத் தேர்ந்தேன் ? மேலும் கிடைக்கிற அவகாசம் அவருடனான மட்டற்ற மகிழ்ச்சி தரும் பயன் மிக்க வார்த்தையாடல்களில் கழியும் என்பதாலுந்தான். தவிரவும், நான் மறைந்திருந்து வேலை செய்ய வேண்டியுள்ளது என்பதைப் புரிந்துகொண்டு நட்பு ரீதியில் எனக்கு இடமளித்தாரேயன்றி வேறு காரணம் ஏதுமில்லை. இதனை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் என்றாலும் மீண்டும் உறுதிப் படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் அவர் மீது புழுதி வாரி வீச நிறையப் பேர் காத்துக் கொண்டிருப்பதை அறிவேன்.

சிறைக்குச் செல்வதைவிடத் தலைமறைவாகத் திரிவதுதான் சிரமமான விஷயம். சிறை என்றால் தியாகிப் பட்டமும் கிடைக்கும், வேளா வேளைக்குச் சாப்பிட்டுக் கொண்டும், உறங்கிக் கொண்டும் படித்துக் கொண்டும் நிம்மதியாகக் காலங் கழிக்கலாம். உடம்புக்கு ஏதாவது என்றாலே சிறைக்குப் போக முகாந்திரம் தேடுபவர்களும் உண்டு, அரசாங்கச் செலவில் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம் என்பதால்!

அதிலும் அரசியல் காரணங்களுக்காகச் சிறை செல்வதெனில் எடுபிடி வேலைக்கு ‘சி ‘ வகுப்பிலிருந்து ஒரு ஆர்டர்லியைக் கூடச் சிறை நிர்வாகம் நியமித்துக் கொடுக்கும்! மேலும் எம்ஜிஆர் காலத்தில் நான் சிறை செல்ல வாய்ப்புப் பெற்றிருந்தால் அது ஒரு சுக வாசமாகத்தான் இருந்திருக்கும்! ஒருவேளை அவரே சிறைக்கு வந்து பார்த்து மறைமுகமாக நான் நன்கு பராமரிக்கப் பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உணர்த்தியிருக்கவுங் கூடும்! ஒருமுறை அப்படித்தான் செய்தார், நான் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதை அவராகவே கேள்விப்பட்டு! முதல்வர் மட்டுமா, ஒரு தேவமகனுமாயிற்றே அவர், பெரும்பாலானவர் கண்களுக்கு! அவர் வந்து சென்ற பின் என் அறை வாசலிலேயே இரு நர்ஸ்களூம் ஒரு டாக்டரும் இருபத்து நான்கு மணி நேரமும் தவமிருக்கலானார்கள்!

இந்திரா காந்தி பிறப்பித்த நெருக்கடி நிலையின்போது பலரும் தலைமறைவாக நடமாடியது, பணிகள் தொய்ந்துவிடாமல் தொடர வேண்டுமே என்பதால்தான். அப்பொழுது மார்க்சிஸ்டுகள் உள்ளிட்ட பலரும் என் வீட்டில் தங்கியதுண்டு பல நாட்கள், சந்தேகம் எழாத பொதுவான பத்திரிகையாளனின் வீடு என்பதால் (மேலும் நான் ப. சிதம்பரம் போன்ற இந்திரா காங் கிரசாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சமயம் அது)! தங்கியவர்களின் பெயர்களைச் சொல்லலாம் என்றால் அதுவும் name dropping ஆகிவிடும் என்பதால் சொல்லாமல் விடுகிறேன்.

பணி செய்யத் தடை வரும்போது தலைமறைவாகப் போவதுதான் வேலை செய்வதைக் கடமையாய்க் கருதுவோர் செய்யும் காரியம். கிடைத்தது சந்தர்ப்பம் பெயர் பெறவும் நிம்மதியாகப் பொழுது கழிக்கவும் என்று நினைப்பவர்கள்தான் பெட்டி படுக்கையுடன் சிறைசெல்லக் காத்திருப்பார்கள். முன் எச்சரிக்கை இன்றியும் திடாரெனவும் கைதாகிவிடுபவர்கள் இதற்கு விதிவிலக்கு. ஏர்கண்டிஷன் ஹாலில் சொஸ்தமாக உட்கார்ந்து ஸ்காட்ச் பருகிக் கொண்டு மார்க்சிசம் பேசுபவர்களுக்கு இந்தப் பிரத்தியட்ச விவகாரமெல்லாம் புரியாதுதான்.

நானும் பல சிறுகதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறேன்தான். அவற்றில் மிகப் பெரும்பாலானவை வெறும் குப்பை என்பதை வெளிப்படையாகத் தெரிவிப்பதில் எனக்குத் தயக்கம் இல்லை. தேறுமா, தேறாதா என்றெல்லாம் யோசிக்க அவகாசமின்றிப் பத்திரிகைகளின் தேவையைக் கருதி அவசர அவசரமாக எழுத நேர்ந்ததன் விளைவு என்று சமாதானம் சொல்ல மாட்டேன். எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். தெரிந்ததைத் தெரிந்த விதமாக எழுதிவைத்ததால்தான் அவற்றைத் தொகுப்பதில் ஆர்வமற்று இருக்கிறேன். சரியாகத்தான் சொன்னார் ஒரு வாசகர், எனக்கு அப்படியொன்றும் இலக்கிய அங்கீகாரம் இல்லை என்று. என்னைக் காட்டிலும் மிக அபாரமாக எழுதத் தெரிந்த பலர் இருப்பதைக் கண்டுதான் கதை எழுதுவதை நிறுத்திக் கொள்வதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு என்னாலான உபகாரத்தைச் செய்ய முற்பட்டுள்ளேன். அப்படியும் யாரேனும் சிலர் மிகவும் வற்புறுத்தினால் மட்டுமே கதை என்பதாக எனக்குத் தெரிந்ததை எழுதிக் கொடுக்கிறேன். ஆனால் இ.பா. மாதிரியான அனுபவமும் அங்கீகாரமும் பெற்ற ஒரு தேர்ந்த படைப்பாளி காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிற கட்டத்தை இன்னும் கடக்காமல் இருப்பார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

எங்களிடையே எழுத்து சம்பந்தமான பேச்சு வரும்போது அவரிடம் சொல்லியிருக்கிறேன், நீங்கள் உடனே சம்பாஷணைக்குத் தாவிவிடுவது ஒரு தப்பித்தல்தான் என்று. எனக்கு அது மிகவும் சவுகரியமாக இருக்கிறது என்று சிரிப்பாரேயன்றி அது சரியென வாதித்ததில்லை. படைப்பாற்றல் வெளிப்படுவது விவரணையில்தான் (narration) என்பேன். மறுக்க மாட்டார். இவையெல்லாம் திருவல்லிக்கேணி மெஸ்ஸைத் தாண்டி அவருக்கு நினைவு இருக்கும் என்றுதான் நம்புகிறேன்.

இவற்றையெல்லாம் பார்க்கிறபோது எனக்குச் சந்தேகமாயிருக்கிறது; தமிழில் விவாதம் என்பது இப்படியெல்லந்தான் இருக்குமென்றால் அதில் என்னால் எப்படித் தாக்குப் பிடிக்க முடியும் என்று!

பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்று தூண்டிவிடுவதற்காகத்தான் பாட புத்தகத்தில் மறைக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களை வெளிப்படுத்துகிறேன் என்ற குற்றச்சாட்டு வேறு இதற்கிடையில்! வரலாற்றிலிருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளக் கூடாது என்கிற கங்கணத்தைத்தான் வெகு காலமாகவே கட்டிக்கொண்டிருக்கிறோமே நாம்தான், என்னால் அதை லேசில் மாற்ற இயலுமா என்ன ? என்றோ நடந்தவை யாவும் இன்றும் நடப்பதைச் சுட்டிக் காட்டத்தான் பழையனவற்றை நினைவூட்ட முனைகிறேன், இனியாகிலும் சிறிது விழிப்புடன் இருப்போம் என்பதற்காக; மற்றபடி பழியாவது வாங்கத் தூண்டுவதாவது! சற்குண விக்ருதி ஒவ்வொரு செல்லிலும் உறைந்து போயிருக்கிற ஹிந்துக்களை அதற்கெல்லாம் அவ்வளவு எளிதில் தயார் படுத்திவிட முடியுமா என்ன! இதற்காகக் கேள்விகள் கேட்டு வெங்கட் சாமிநாதனையும், கோபால் ராஜாராமையும் எதற்குத் தொந்தரவு செய்ய வேண்டும் ?

அரசியல்வாதிகள் வாக்கு வங்கி உத்தரவாதத்திற்காக மெத்தனமாக இருப்பதோடு, ஒரு படி மேலே போய் எல்லா தேசத் துரோகங்களுக்கும் இசைவாகவும் இருக்கலாம்; நாமும் அவ்வாறு இருக்கலாகாது என்றுதான் என் சங்கை எடுத்து ஊதுகிறேன், காது உள்ளவர்கள் கேட்டுக் கொள்ளட்டும் என்று! எமது எதிர்கால சந்ததியினர் தம் முன்னோர் தூங்கிக் கிடந்த சொரணை கெட்டோர் என்று மனம் குமுற இடம் அளித்துவிடலாகாது என்பதாலும்தான். ஏனெனில் என் மகளே ஒருமுறை என்னிடம் கேட்டாள், தேசப் பிரிவினக்கு காங்கிரஸ் சம்மதித்தால் என்ன, நீங்கள் எல்லோரும் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் அப்போது, இன்று வளர்ச்சிப் பாதையில் நிம்மதியாக முன்னேற முடியாதவாறு நிரந்தரமாக ஒரு உபத்திரவத்தைத் தலைமாட்டிலும் பக்கவாட்டிலும் வைத்துவிட்டார்களே எங்களுக்கு: உங்களுக்கு என்ன, நிம்மதியாகப் போய்ச் சேர்ந்துவிடுவீர்கள், அவஸ்தை எங்களுக்கு அல்லவா என்று! வேறு சில புத்திசாலிப் பிள்ளைகளுங் கூட என்னிடம் கேட்கின்றனவே இதே மாதிரியாக. நாம் மட்டும் எதற்காக வருடக் கணக்கில் பயங்கரவாதிகளிடம் மென்மையாக நடந்து உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று! எதிர் காலத்தில் இந்த தேசத்தை நிர்வாகம் செய்ய வேண்டியவர்கள் இவ்வாறு கேட்கிற போது என்ன சமாதானம் சொல்வது ? எங்கள் தலையில் வில்லங்கம் மிகுந்த பொறுப்புகளைக் கட்டிவிட்டுப் போவது என்ன நியாயம் என்று கேட்கிறவர்களுக்கு என்ன பதில் சொல்வது ?

கண்ணுக்கு எதிரில் புலப்படும் பேராபத்தை எடுத்துச் சொன்னால் அது குறுகிய பாதை என்றா சொல்வது ? மிகவும் விரிவான பாதையில் நடந்துதான் ஏராளமான வழிப்பறிகளுக்கு ஆளாகிவிட்டிருக்கிறோமே, போதாதா ? பத்திரமான குறுகிய பாதை

யில்தான் சிறிது நடந்து பார்ப்போமே, ஆறலை கள்வர் வசம் அகப்படாமலிருக்க! எப்படியும் அந்தக் குறுகலான பாதை நாம் தாராளமாகவும் தடங்கலின்றியும் நடந்து செல்லத் தக்கதுதான். யோசிக்க வேண்டாம்!

—-

malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்